(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சுங்காம்பட்டி போக்குவரத்து வசதியோ, மருத்துவ வசதியோ இல்லாத சின்னஞ்சிறு கிராமம். ஊரைவிட்டு வெளிக்கிளம்பணும்னா, முதல்ல வண்டித் தடத்துல நாலு பர்லாங் தூரம் நடக்கணும். அதுக்குப் பிறகுதான் ஓந்தாம்பட்டிக்குப் போற கல்ரோட்டை கண்ணால் பார்க்க முடியும். கல் ரோட்லயும், ஒரு மைல் தூரத்துக்கு மேல போனாத்தான் திருநெல்வேலிக்குப் போற தார் ரோடு வரும், அதுக்குப் பிறகுதான் பஸ்ஸை கண்ணால் பார்க்க முடியும்.
ஒரு ஆத்தர அவசரத்துக்கு சுங்காம் பட்டியிலிருந்து உடனே கிளம்பிற முடியாது. அதுலயும் பொண்ணு பிள்ளைங்க பாடு பெரும்பாடு.
சுல்த்தாள் ரெண்டாம் வகுப்பு பாஸானதும், தன் உம்மாவிவிடம் “நான் மூணாப்பு படிக்கப் போறேன்”னுதான் சொன்னாள். ஆனா, அவ தாய்காரிதான், “பொட்டப்புள்ள இம்புட்டுப் படிச்சது போதும், நான் காடு கரைக்கி, கொத்து வேலை பார்க்கப் போயிருவேன், இல்லன்னா வேலி வேலியா அலஞ்சி கத்தாழை ஒடிக்கப் போயிருவேன். கைப்பிள்ளையான தம்பிப் பையனை யார் பார்த்துக்குவா? அதனால இனிமே பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்”னு சொல்லிவிட்டாள்.
சுல்த்தாள் சின்னப்பிள்ளையாக இருக்கும் போதே எதையும் ஒரு ரசனையோடு செய்வாள். தம்பி கமீதுக்கு, அவள் விளையாட்டுக் காட்டுவதே பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
எந்தவிதக் காரணத்தைக்கொண்டும், சுல்த்தாள் கமீதை அழவிட மாட்டாள். அவன் முன் நின்று ஆட்டமாடி, பாட்டுப்பாடி, தலைமுடியை விரித்துப் போட்டுக் கண்களை உருட்டித் தலையை ஆட்டிப் பிள்ளைக்கு சிக்கிக்கிச்சு மூட்டி – என்று எதையாவது செய்து, தம்பியைச் சிரிக்க வைத்துவிடுவாள்.
சுல்த்தாள் அவள் அம்மாவோ, பிற பெண்களோ பாடும் தாலாட்டுக்களை மிகக் கவனமாகக் கேட்டு, அவற்றை மனதில் நிறுத்தி இருந்தாள்.
சுல்த்தாள் பெரிய மனுஷி மாதிரி கதை தொட்டிலில் போட்டு, அவள் தாய் காட்டுக்குப் போன பின்பு தாலாட்டுவாள் உடையாத கீச்சுக் குரலும், தாளக்கட்டும், நீலாம்பரியும் காற்றில் மிதந்து பக்கத்து வீட்டுப் பெண்களை மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்யும்.
சுல்த்தாள் வளர வளர, அவள் தாய் மசூது பீவிக்கு, வீட்டு வேலையின் சுமை கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்தது. சுல்தாள் பொறுப்புடன் வீடு, வாசல் தூக்குறது, தண்ணீர் எடுக்கிறது. அரிக்கேன் விளக்கைத் துடைத்து மண்ணெண்ணை ஊற்றி வைக்கிறது. அடுப்பில் கிடக்கும் சாம்பலை அள்ளிக் குப்பைக் குழியில் போடுவது, முட்டைக் கோழியை உரிய நேரத்தில் பிடித்து அடைக்கிறது, கோழி முட்டை இட்டபின் அதைத் திறந்து விட்டு இரைபோடுவது, தம்பிப் பையனுக்கு வேளா வேளைக்கு பாலைக் கலந்து கொடுக்கிறது என்று எல்லாவிதமான சின்னஞ்சிறு வேலைகளையும் பார்த்துவிடுவாள்.
அக்கம்பக்கத்து வீட்டுக்காரப் பெண்கள் ஏவுன வேலை செய்யாமல், விளையாட ஓடிவிடும் தன் பிள்ளைகளைப் பார்த்து, “உனக்கு எட்டுக்குத்துக்கு இளைய சுல்த்தாளைப் பாரு, என்னமா விட்டு வேலைகளைச் செய்யுதா, நீயும், பிறந்திருக்கியே.. உப்பு கல்லுக்கு துப்பில்லாம..”என்று அவர்கள் சுல்த்தாளை இணை வைத்தே திட்டுவார்கள்.
சுல்த்தாள் எந்த வீட்டுக்கும் போய், வாய் பரிக்கவும் மாட்டாள். “பாடு பேசவும்” மாட்டாள். ஆனால் அவளைச் சுற்றி எப்பவும் நாலைந்து பிள்ளைகள் இருப்பார்கள்.
சுல்த்தாள் சொல்லுகிற கதைகளும், பாடுகிற பாட்டுகளும், அவ சோட்டுப்பிள்ளைகள் விளையாடும் கிளியாந்தட்டு விளையாட்டிலும் சுல்த்தாள் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வாள்.
சுல்த்தாள் வளர வளர, தன் தகுதிக்குத்தக்கதான வேலைகளையும் மாற்றிக்கொண்டு, நாலு காசு சம்பாதிக்க ஆரம்பித்தாள். கத்தாழை மரல் இழைக்கிறது , பாய்விளிம்பு கட்டுகிறது, நூல் நூக்கிறது என்று ஒவ்வொரு வேலையாகச் செய்தாள்.
தனக்கு மூத்த பெண்பிள்ளைகள் செய்கிற வேலையைப் பார்த்து, கருக்கடையுடன், தானே கைவேலைகளை கற்றுக் கொண்டு, பிசிறில்லாமல் அவ்வேலைகளைச் செய்தாள்.
தகப்பன் இல்லாமல் வளரும் பிள்ளை இம்புட்டாவது கருக்கடையாகத் தலை எடுக்கிறதே என்று மனசுக்குள் சந்தோசப்பட்டுக் கொள்வாள்.
மலர் மொட்டாய்க் கூம்பி நிற்கும் ஒரு அழகு கட்டவிழ்ந்த மலர் மீது இயற்கையெனவனத்தை அள்ளிப் பூசிவிட்டுச் சென்றது.
பதின்மூன்று வயதிலேயே, சுல்த்தாள் ஆளாகிவிட்டாள். சேலை உடுத்தி முந்தானையால், தலையில் சீலையும் போட்டுக் கொண்டு சுல்த்தாள் பீவி, நிறைய செம்புத் தண்ணீருடன் ஒலுச்செய்கிறபோது, பார்த்த தாயின் மனம் நிறைந்தது.
சுல்த்தாள் சுடர் விளக்கின் ஜூவாலையைப் போன்று அமைதியும், சாந்தமும் கலந்து ஜொலித்தாள். தலைக்குத் தண்ணீர் ஊற்றிய கையோடு, தன் மகளுக்கென்று ஒரு பாய்த்தறியை ஏற்பாடு செய்து கொடுத்தாள், அவள் தாய்
சுல்த்தாளும் தினசரி ரெண்டோ மூணோ பாய்களை நெய்து முடித்தாள் : வீட்டில் சோறு பொங்குவது, பண்டபாத்திரம் தேய்த்துக் கழுவுவது என்று மற்ற வேலைகளையும் செய்தாள்.
சுல்த்தாளுக்குக் கடிகாரத்தில் மணி பார்க்கத் தெரியாது. அவள் வீட்டுல கடிகாரமும் கிடையாது. பாங்கோசையும், சுவர் கூரையின் நிழலும்தான் அவளுக்குக் காலநேரத்தை அறிவிக்கும் கருவிகள்.
சுல்த்தாள் பாய்த்தறியில் இருந்துகொண்டு, பாய் நெய்யும்போது, எப்படியும் சேலையை முட்டுவரை திரைத்து வைத்துக்கொள்ளத்தான் வேண்டியதிருந்தது. இந்தத் தொழிலில் இது ஒரு சங்கடம்.
பாங்கோசை கேட்க ஆரம்பித்ததும் அவசர அவசரமாக, மேல்முந்தானை சேலையைத் தலைக்கு இழுத்து முக்காடு போட்டுக்கொண்டு, காலில் முட்டுவரை உயர்ந்து கிடக்கும் சேலையையும் கீழே தழையவிட்டுச் சரி செய்து கொள்வாள்.
ஒருநாள், நடுச்சாமம்போல எந்திரிச்சி சுல்த்தாள் தன் தாயை எழுப்பினாள். பகலெல்லாம் அந்தக் கொத்து வேலைக்குப் போய், வெயிலில் நின்று கடுமையாக உழைத்துவிட்டு அலுத்துப் போய் உறங்கி, மசூது பீவி கண் விழிக்க மனமில்லாமல், “என்னளா, இந்த அகால வேலையில் எழுப்புத, ஒண்ணுக்குப் போவணும்னா, போய்விட்டு வந்து படு. நிரசல்ல பானையில் தண்ணி இருக்கு…”என்று உரக்கச் சொல்லிவிட்டு, புரண்டு படுத்தாள். தாயின் குரலில் எரிச்சலும் அலுப்பும் கலந்திருப்பதை சுல்த்தாள் புரிந்து கொண்டாள். எனவே, அதன்பின் அவள் உம்மாவை எழுப்பவில்லை,
சுபுஹூ தொழுகைக்கான பாங்கோசை கேட்டதும், வழக்கம்போல எந்திரிச்ச மசூதுபீவி மகள் ஒரு மூலையில் நனைந்த சீலைத்துணிபோல சுருண்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாள்.
மாதம்தோறும் சுல்த்தாளுக்கு “அந்த நேரத்தில்”கடுமையான வயிற்றுவலி இருந்தது.
ஆரம்பகாலத்தில் ஒருதரம், சுல்த்தாள் தன் தாயிடம் தயங்கித் தயங்கித் தன் வேதனையைச் சொல்லி அழுதாள். மகள் சொன்னதைக் கேட்ட தாய்க்காரி, மகளின் உச்சந்தலையைத் தன் நெஞ்சோடு நெஞ்சாகச் சேர்த்து அணைத்துக் கொண்டு, தலைமுடியை வருடிக்கொடுத்தபடி, “பெண்ணாப் பிறந்தவ இதைக்கூட தாங்கலைன்னா எப்படிம்மா….? இன்னும் என்னென்னவெல்லாமோ இருக்கே எல்லாத்தையும் அந்த ரப்பில் ஆலமின்தான் லேசாக்கணும்”என்றாள்.
தன்னையும் அறியாமல் தன் கண்களில் கண்ணீர் மணிகள் கோர்த்திருப்பதை உணர்ந்த மசூதுபீவி, மகளுக்குத் தெரியாமல் இருக்கவேண்டி, அவசர அவசரமாகத் தன் முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். தாயின் சில கண்ணீர்த் துளிகள் சுல்த்தாளின் தங்கப்பாளம் போன்ற கன்னக் கதுப்பில் வெதுவெதுப்பாக விழுந்து தடம் பதித்து, நடந்து மறைந்தது.
இந்த மாதம் நேற்றே விலக்கு வந்துவிட்ட விவரத்தை ஏற்கனவே, உம்மாவிடம் மகள் சொல்லி இருந்தாள்.
நிரசலின் ஓலை இடுக்கில், பழைய துணியைக் காயவைத்து, மடித்துச் சொருகி வைத்திருந்தாள். அதைத்தான் எடுத்து இன்று பயன்படுத்தியிருந்தாள்.
கிழக்கில் செம்பாளமாக முகம் காட்டிய காலைக்கதிரவன், மேலே கிளம்பக் கிளம்ப சுல்த்தாளின் வயிற்றுவலி உக்கிரமாகிக் கொண்டே வந்தது. வலி தாங்க முடியாமல் துடியாய்த் துடித்தாள். சத்தம் போட்டு “ஓ..”என்று ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்துவிட்டாள்
சுல்த்தாளின் அழுகைச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். ஆளாளுக்கு ஒரு கைப்பக்குவம் சொன்னார்கள்,
ரெசவுப்பெத்தாள் மட்டும், சரசரவென்று காரியத்தில் இறங்கினாள். சுக்கு, மிளகோடு இன்னும் என்னென்னமோ சில பச்சிலைகளையும் சேர்த்து அரைத்துச் சாறெடுத்துக் கொடுத்தாள்.
வலி குறைந்தபாடில்லை. நேரமாக ஆக சுல்த்தாளின் அடிவயிறு லேசாக உப்ப ஆரம்பித்தது, அவள் மாமன் மகன் மைதீன் அவசரமாக சைக்கிளில் போய்ப் பக்கத்தூர் வைத்தியரைக் கூட்டிக்கிட்டு வந்தான்.
வைத்தியர் வந்து கைபிடித்து நாடி பார்த்துவிட்டு, கொஞ்சம் சூரணத்தைக் கொடுத்து, “இதை தேனில் குழைத்து மூணு வேளை கொடுங்கள். வலி குறைஞ்சிடும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
உள்ளுர் அஸ்ரத் மசூத் லெப்பை வந்து ஓதிப்பார்த்துவிட்டு, முகத்தில் தண்ணீர் தெளித்துவிட்டுச் சென்றார்.
உச்சியில் இருந்து சூரியன் மேற்கில் சரியத் தொடங்கி இருந்தது. சுல்த்தாள் நேரமாக ஆக, பலவீனமாகிக்கொண்டே வந்தாள். வயிறு மேலும் உப்பிக்கொண்டே இருந்தது.
முகமூடி அணிந்த நிழல் முகங்களும் ரெட்டை நாக்குகளும், திரை மறைவில் சுல்த்தாளின் கன்னிமையைச் சந்தேகித்து, சில யூகங்களை முன்வைத்துக் கிசுகிசுத்தன.
சுல்த்தாளை அவள் மாமன் மகன் மைதீனுடன் சில மனசுகள் முடிச்சுப் போட்டுப் பார்த்தன.
மேற்கு வெயிலின் சூடு தணியும் முன்னே, சுல்த்தாளின் “ரூகு’அடங்கிவிட்டது.
சுல்த்தாளின் தாயார் மசூதுபீவி, தன் பொறுப்புள்ள பிள்ளையின் பிரிவைத் தாங்கமுடியாமல் சுவரில் முட்டி முட்டி அழுதாள்.
“வெளியூர் ஆட்கள் சொந்த பந்தங்கள் வந்து எடுக்கும்வரை மையம் தாங்காது. வயிறு ஊதிவிட்டது. உடனே மையத்தை அடக்க வேண்டியதுதான். அதனால ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்கள்” என்று ஒரு பெரியவர் அவசரப்படுத்தினார்.
எப்போதும் ஜமாத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த கபன் துணி சுல்த்தாளின் மையத்திற்கு உதவியது. அவசர, அவசரமாக நாலைந்து இளைஞர்கள் சேர்ந்து குழிவெட்டி முடித்தார்கள். அஸர் தொழுகைக்கு முன்பே மையத்தை அடக்கம் செய்ய ஜமாத்தார்கள் தீர்மானித்தார்கள்.
ரெசவு பெத்தாள் தான் மையத்தைக் குளிப்பாட்டினாள். அடிக்கழுவும்போது சுல்த்தாள் ஒதுக்கியிருந்த துணியை அப்புறப்படுத்திய பெத்தாள், ‘அதைக்’ கவனித்துவிட்டு ‘யா அல்லாஹ்’ என்று அலறினாள்.
ரெசவுப் பெத்தாள் போட்ட சப்தத்தைக் கேட்டு, சுற்றியிருந்த பெண்கள் பதற்றத்துடன் விலகினார்கள், என்றாலும் குளிப்பாட்டும் மையத்தை மறைத்துப் பிடித்திருந்த சேலைத் துணியை யாரும் விட்டுவிடவில்லை.
வெளியே நின்ற ஆண்களில் சிலர் “என்ன விசயம்? ஏன் சத்தம் போடுறீங்க” என்று கலவரத்துடன் கேட்டனர்.
ரெசவுப் பெத்தாள்தான் தைரியமாக, ஒரு குச்சை எடுத்து அதை வெளியே தள்ளினாள். விழுந்த இடத்தில் உதிரம் குடித்துக் கொளுத்த அட்டை புரண்டு படுத்தது.
“அட பாவமே, அட்டை எப்படி அங்கே போச்சி?” என்று ஒரு பெண் ஆச்சரியத்துடன் மூக்கின் மேல் விரலை வைத்தாள்.
நிரசலில் ஓலைகளுக்கு இடையில் மடித்து வைத்திருந்த பழைய சீலையை எடுத்து, நன்றாக உதறாமல் பிள்ளை ஒதுக்கி இருக்கா, அதுக்குள்ள சுருண்டு மடங்கி ஒட்டிக்கொண்டு இருந்த அட்டை ரெத்தத்தை உறிஞ்சிருக்கு, அதனாலதான் புள்ளைக்கு வயிறு இந்த மாதிரி உப்பியிருக்கு, அந்தப் பிள்ளைக்கும் அட்டை ரெத்தம் குடிக்கிற விவரம் தெரியலை! ‘அதைப் பற்றி யோசிக்கவும் செய்யல, கடைசியில் பிள்ளை உயிர் போயிட்டு…’ என்று ஒரு பெண் நடந்த விசயத்தை ஒருமாதிரி யூகித்துச் சொன்னாள்.
அந்தப் பெண்ணின் அனுமானம் சரிதான் என்று மற்றவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.
அறியாமை என்னும் இருட்டு ஒரு பிஞ்சு மலரை விழுங்கி விட்டது! மேற்கில் ஆதவன் மறைந்துவிட்டான். பூமியின் மேல் இருள் மெல்லக் கவிழத் துவங்கியது.
ரத்தம் குடித்த அந்த அட்டையைச் சிறுவர்கள் அடித்துக் கொன்று, ஒரு மரத்தடியில் தூக்கிப் போட்டார்கள். அதன் மேல் நூற்றுக்கணக்கான எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன.
– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002
– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com