கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 7,800 
 

கை பேசியில் பேசி முடித்த கமலாம்மாள் முகத்தில் கலவரம்.

” என்ன..? ” கேட்டேன்.

‘’ போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன். ‘’

‘’ஏன்…? ‘’

‘’ ஜவுளி கடைக்குப் போன சின்னப்ப பொண்ணும் மாப்பிள்ளையும் அங்கே இருக்காங்களாம். வரச் சொல்லி அழைப்பு.’’

‘’ என்ன விஷயம்..? ‘’

‘’ தெரியல…’’

‘’ சரி வாங்க போகலாம்..’’ எழுந்தேன்.

சம்பந்தி வேறு எந்த பேச்சும் பேசாமல் கிளம்பி இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்தாள்.

வண்டி காவல் நிலையம் நோக்கி விரைந்தது.

நான் கமலாம்மாள் சம்பந்தி. மூத்தவள் மாமனார். பெயர் தனக்கோடி.

என் முதல் மகனுக்கு ஏழு வருடங்களாகப் பிள்ளை இல்லை.

நாட்டு வைத்தியம், நகர வைத்தியம், இயற்கை வைத்தியம், செயற்கை வைத்தியம், கோயில் குளம், வேண்டுதல் பக்தி பூசை பரிகாரம் என்று என்ன முயற்சித்தும் பலன் இல்லை.

உள்ளுக்குள்….. முடியவில்லை, கிடைக்க வில்லை என்று வருத்தம் இருந்தாலும் எல்லாவற்றிலும் புகுந்து பார்த்த அலுப்பு கிடைக்கிற போது கிடைக்கட்டும் இல்லை கிடைக்காமலே போகட்டும்..! என்று விட்டோம்.

சென்ற வருடம் திருமணம் முடித்த தம்பிக்கு குழந்தை பிறந்ததும் தான்….

இதற்கு மேல் சும்மா இருப்பதுசரி இல்லை என்று அலசி ஆராய்ந்து தாய் வீடு கோவை சென்று அங்குள்ள கருத்தரிப்பு மையம் மூலம் மருமகள் நான்கு மாதம்.

புகுந்த வீடு காரைக்கால் 450 கிலோ மீட்டர் நெடுந்தொலைவு பயணம் கூடாது என்பதால் அம்மா வீட்டிலே தங்கல். குழந்தை பெற்றுத்தான் கணவன் வீடு திரும்ப வேண்டும் என்கிற முடிவு மற்றும் கட்டாயம்.

காரணம்….மாதாமாதம் மருத்துவ கண்காணிப்பு சோதனை எல்லாவற்றிக்குமே இதுதான் சரி என்பதால் இந்த முடிவு. மேலும்… கொடுக்காத இறைவனிடமிருந்து வலிந்து பிடுங்கி பெற்றிருப்பதால் அதற்கு எந்தவித வில்லங்கமும் வந்துவிடக்கூடாது என்பது எங்கள் எண்ணம்.

இதனால்…தாலி கட்டிய என் முதல் மகன் மனைவியைப் பார்க்க…. மாதம் இரண்டு முறை வந்து செல்வான். நான் மாதம் ஒரு முறை வருவேன். வீட்டிலுள்ள மற்ற என் இரண்டாவது மகன், மருமகள், பேத்தி, மனைவியெல்லாம் வசதி ஏற்படும்போது வந்து செல்வார்கள்.

சென்ற வருடம் உள்ளூரிலேயே திருமணமாகி தனிக்குடித்தனம் சென்ற சம்பந்தியின் இரண்டாவது மகள் நிரஜா… பிள்ளை பேறை சாக்காக வைத்து கணவனோடு வந்து தாய் வீட்டில் ஐக்கியமாகி விட்டாள்.

ஆனால்…..அதற்கு அடிப்படையான உண்மை காரணம் வேறு..!

பெற்றவர்களுக்கு….. மூத்த பெண் மீது அதீத அன்பு, பாசம். அதே அன்பு பாசம் அவளைக் கைப்பிடித்த கணவன் மீதும் அவர்களுக்கு உண்டு.

தான் தனிக்குடித்தனம் போய் தாய் தந்தையர்களைத் தனியே விட்டால்…. இருக்கும் வீட்டை மூத்தவளுக்குத் தானமாக கொடுத்து விடுவார்கள் என்ற பயம்…. தடுப்பணையாக வந்து சேர்ந்து விட்டாள்.

ஆயிரம்தான் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இருந்தாலும் பெற்றவர்கள் எப்படி பெண்ணை வெளியேற்ற முடியும்…?! சுமக்க வேண்டிய கட்டாயம்.

நான் இரண்டு மாதங்களுக்கு முன்… சின்ன மகன், மருமகள், பேரக் குழந்தையுடன் வந்து இரண்டு நாட்கள் சம்பந்தி வீட்டில் தங்கியபோது…

அறையில் கழட்டி மாட்டி இருந்த என் பேண்ட் பாக்கெட்டில் இருந்த இரண்டாயிரத்தில் ஒரு ஆயிரத்தைக் காணோம்.!

சின்னவன் எடுத்திருப்பான் என்கிற நினைப்பில் அவனிடம் கேட்டேன் , ‘இல்லை’ சொன்னான்.

மருமகள் தொடமாட்டாள் ! இருந்தாலும் கேட்டேன்…’ இல்லை ‘ சொன்னாள்.

மூத்த மருமகள் தொட வாய்ப்பே இல்லை. அப்பழுக்கில்லாத பெண்.

இந்த வீட்டில் வேறு யார் எடுத்திருப்பார்கள் ..? யோசித்தேன்.

சம்பந்திகள் எடுக்க வாய்ப்பில்லை. மகள் மாமனார் பாக்கெட்டில் கை வைக்க எந்த சம்பந்திக்கு மனம் வரும்…? !

வேறு எவர்..? சிந்தனையை ஓட்டினேன்.

சிக்கினாள் சம்பந்தியின் சின்னப் பெண் நிரஜா.

கணவனுக்கு சரியான வேலை இல்லை.இவளும் வேலைக்குச் செல்ல வழி இல்லை. கல்லூரி படிக்கும்போதே கண்டவுடன் காதல் சமாச்சாரத்தில் தேர்வு சரி இல்லாமல் அவன் கூலி டிரைவர்.

வகை வகையான கார்களில் வந்து இறங்கியதால் இவளும் மயங்கி விட்டாள் அவனும் மயக்கி விட்டான்.

திருமணத்திற்குப் பிறகு அவன் வண்டவாளம் புரிய…புகுந்த வீட்டு வந்து விட்டாள்.

இங்கு அவளுக்கு ஏகப்பட்ட சவுகரியங்கள். அப்பாவிற்கு கிரானைட் கல் வியாபாரம். அதன் காரணமாக அவர் ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா என்று அலைச்சல். நிறைய பணப் புழக்கம். கணக்கு வழக்கில்லாமல் சட்டை பேண்ட் பாக்கட்டில் வைத்திருப்பார்.

நிரஜா அதில் கணிசமாக உறுவுவாள்.

அவருக்கு என்றாவது குறைவது போல் தோன்றினால்… மனைவியை ‘எடுத்தியா..?’ கேட்பார்.

‘அதை ஏன் நான் எடுக்கிறேன். நீ குடிச்சிப்புட்டு எங்காவது விட்டு வந்திருப்பே..! ‘ அவள் திருப்பி தாக்குவாள் , காய்வாள்.

மனைவியிடம் ஏன் வம்பு வழக்கு அவரும் வாய் திறக்காமல் செல்வார்.

மனைவி எடுத்திருப்பாள் என்கிற கணக்கில் கணவனும், கணவன் தொலைத்திருப்பான் கணிப்பில் மனைவியும் இருந்ததால் நிரஜா இந்த திருட்டில் வராமலே போனாள்.

இந்த பண த் திருட்டு, வீட்டைக் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் இவளை இங்கு வரவழைத்தது. என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ??!!

அப்பா பாக்கெட்டில் கை வைத்த பெண் அடுத்து என் பாக்கெட்டில் கை வைத்து விட்டாள் புரிந்தது.

இருந்தும் எப்படி அவளை குற்றம் சாட்ட முடியும்..?

தாய் பொறுப்பாளா. தகப்பன் பொறுப்பானா..இல்லை கூடப்பிறந்த அக்கா நம்புவாளா ..? ! எப்படி ஒப்புவார்கள்…….??!

திருடனுக்குத் தேள் கொட்டியது போல் இரண்டு நாட்கள் இருந்து வந்தேன்.

சென்ற மாதம் இரண்டாவது முறையாக பயணம்.

இவள் எடுப்பாள் என்கிற எதிர்பார்ப்பிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் இரண்டு இருநூறு ரூபாய் நோட்டுகளை மட்டும் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தேவைக்கான நான்கு ஐநூறு நோட்டுகளான இரண்டாயிரத்தை மாற்றுடையாக எடுத்துச் செல்லும் பாண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து பயணப்பையில் மடித்து வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

சம்பந்தி வீட்டிற்கு சென்று வழக்கம் போல் போட்டு சென்ற பாண்ட் சட்டைகளை கழட்டி முதல் அறை சுவற்றின் ஆணியில் மாட்டி விட்டு வேட்டி பனியனுடன் வெளி வந்தேன்.

மறுநாள்…பாண்டில் வைத்திருந்த பணத்திலும் பாதி இல்லை. ஒரு இருநூறு இல்லை. பயணப்பையில் பதுக்கி வைத்திருந்த பணத்திலும் பாதி…இரண்டு ஐநூறு இல்லை.

ஆக மொத்தம் ஆயிரத்து இருநூறு களவாடல்.!

எனக்குப் பகீரென்றது. மனசு பொறுக்கவில்லை.

ஆளைப் பிடித்து அப்போதே கலாட்டா செய்ய மனசு துடிப்பு. அடக்கிக்கொண்டு மகனை கைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் சொன்னேன்.

அவனுக்கும் அதிர்ச்சி.

‘கலாட்டா வேண்டாம்ப்பா.அக்கா தாங்க மாட்டாள். அதிர்ச்சியில் வயித்துல உள்ள குழந்தைக்கு ஏதாவது ஆகப் போகுது’ சொன்னான்.

மெளனமாக வருவதைத் தவிர வேறு வழி இல்லை.

இனி எப்போது நான் சென்றாலும் எடுப்பாள். தடுக்க வழி..? யோசித்தேன்.

காவல் நிலைய வாசலில் வண்டியை நிறுத்தி இறங்கினோம்.

போலீஸ், கமலாம்மாள் கணவருக்கும் தகவல் சொல்லி இருப்பார்கள் போல

எங்களுக்குப் பின்னாலேயே அவரும் வந்து விட்டார்.

மூவரும் காவல் நிலையத்திற்குள் நுழைந்தோம்.

நிரஜா…கணவன் கைக்குழந்தையுடன் சுவர் ஓரம் குற்றவாளிகளாக தரையில் அமர்ந்திருந்தார்கள்.

காவல் கண்காணிப்பாளர் முன் நின்றோம்.

நாற்காலியில் அமர்ந்திருந்த அவர்…

‘’ நீங்கதான் அந்த பொண்ணோட அம்மா அப்பாவா..? ‘’ கேட்டார்.

‘’ ஆமாம் சார் ! ‘’ கணவன் மனைவி கோரஸாக சொன்னார்கள்.

‘’ நீங்க…? ‘’ என்னைப் பார்த்தார்.

‘’ நான் இவுங்க சம்பந்தி !’’

‘’ உட்காருங்க ..’’

எதிர் நார்காலிகளில் அமர்ந்தோம்.

‘’ இங்கே வாங்க’’ அவர்களை அழைத்தார்.

தம்பதிகள் கைக்குழந்தையுடன் வந்து மசைமுன் நின்றார்கள்.

‘’ ஜவுளி கடையில இந்த பொண்ணு இரண்டாயிரம் ரூபாய் ஜெராக்ஸ் கொடுத்திருக்காள்..’’ காவல் கண்காணிப்பாளர் சொன்னார்.

பெற்றவர்களுக்கு அதிர்ச்சி.

‘’ இப்படி இவள் எத்தினி பேரை ஏமாத்தி இருக்காள் தெரியல. ஜவுளிக்கடைக்காரர் புகார் கொடுத்தார். அழைச்சி வந்திருக்கோம் ! ‘’ சொன்னார்.

அவர்கள் முகங்களில் இறுக்கம்.

‘’ விசாரிச்சா …சத்தியமா இந்த நோட்டுக்கு நான் சொந்தக்காரி இல்லே. இது என் கைக்கு எப்படி வந்ததுன்னு தெரியாதுன்னு பொண்ணு சொல்றாள். ஆனா நோட்டு அடுத்தவர் கைபட்டு கசங்காம இருக்கு. பையனைக் கேட்டால் இந்த நோட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லே சொல்றான். ரெண்டு பேருமே உண்மையைச் சொல்ல மாட்டேங்கிறாங்க . அதான் அம்மா அப்பாவான உங்களை அழைச்சேன். ‘’ சொன்னார்.

எவர் முகத்திலும் ஈயாடவில்லை.

‘’ நீங்களாவது விசாரிச்சு உண்மையைச் சொன்னா மன்னிச்சி விடுவோம். இல்லேன்னா…புருஷன் பெண்சாதி ரெண்டுபேரையும் முறைப்படி விசாரிச்சு… ஏமாற்றல் முறையில் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்புவோம் ! ‘’ சொன்னார்.

‘’ என்னடி..? ‘’ அப்பா உறுமி நாற்காலியை விட்டு எழுந்தார்.

அம்மா பத்ரகாளி பார்வை பார்த்தாள்.

‘’ பொறுங்க சம்பந்தி…! ‘’ நான் அவர் கையைப் பிடித்து இழுத்து அமர்த்தினேன்.

‘’ சார் ! இந்த நாட்டுக்கு சொந்தக்காரன் நான் !’’ சொன்னேன்.

எல்லோரும் என்னை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள்.

காவல் கண்காணிப்பாளரும் நிமிர்ந்து அமர்ந்தார்.

‘’ சார்.! இந்த பொண்ணுக்கு சின்ன வயசுலேர்ந்து அப்பா பாக்கெட்டுல எடுத்து எடுத்து பழக்கம். அந்த வகையில கொஞ்ச காலமா என் பாக்கெட்டில் கை வச்சுது. இதை கையும் மெய்யுமாய் பிடிக்க இந்த தடவை இந்த வீட்டுக்கு விருந்தாளியாய் வரும்போது இரண்டாயிரம் நோட்டுகள் இரண்டை செராக்ஸ் எடுத்து வந்தேன். வழக்கம் போல என் பையை த் தொட்டு அதுல ஒன்னை எடுத்துக் போய் மாட்டி இப்படி வந்தது நிக்கிது. நான் சொல்றது உண்மை. அசல் பணம் என்னிடம் இருக்கு. இந்த அவமானம் விசாரிப்பே இந்த பொண்ணுக்கு பெரிய தண்டனை. இனி அப்பா அம்மா பிறத்தியார் யார் பணத்திலும் கை வைக்காது. நீங்க பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விடணும்ன்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேன். இந்தாங்க…அதன் உண்மையான நோட்டு. ‘’ பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தேன்.

வாங்கி பார்த்த காவல் கண்காணிப்பாளர் அவளை நிமிர்ந்து பார்த்தார்.

நிரஜா தலை குனிந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *