கல் குதிரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 7,276 
 
 

ராத்திரி பக்கத்தில் படுத்திருந்த அப்பாவைக் காணவில்லை. காலையில் அருகில் இல்லாமல், பின்னர் தேடி கோவில் மண்டபத்திலோ, ஆற்றங்கரையிலோ, தேர்முட்டியிலோ கண்டுபிடித்துக் கூட்டி வருவது உண்டுதான். அவர் இல்லாதது கவலைப் படுத்தவில்லை.

அவனும் மாமாவும் அம்மாவுமாய் ராத்திரி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த ஓரம் அப்பா படுத்துக் கிடந்தார். பேசுவதை அவர் நிறுத்தி வருடங்கள் ஆகின்றன. கேள்வி எதுவும் கேட்டால் கூடவும் ஆம் – இல்லை என்று எதுவும் சொல்ல மாட்டார். சாப்பாடோ காப்பியோ உள்ளே அழைத்துக் கொண்டுவந்து கையில் கொடுக்க வேண்டும். சாப்பிட்ட பின் வாயைத் துடைத்துவிட வேண்டும். கொஞ்ச நேரம் படுங்க, என்று சொன்னால் படுத்துக் கிடக்கிற மாதிரி யிருக்கும். யாரும் கவனிக்கவில்லை என்றால் சட்டென்று வெளியே கிளம்பிப் போய்விடுவார். கட்டின வேட்டி. மேல் சட்டை கிடையாது. எங்கே போகிறார் தெரியாது. எதற்குப் போகிறார் தெரியாது. அவருக்கே தெரியாது. சில சமயம் இடம் புரிபடாமல் திகைத்து நின்றிருப்பதும் உண்டு. கையைப் பிடித்து யாராவது வீட்டுக்கு அழைத்து வருவார்கள். கூட வருவார். பேச மாட்டார் என்றாலும் தப்பு பண்ணிவிட்ட தோரணை அதில் தெரியும்.

தனக்குள் தன்னுலகம் எனச் சுருங்கிப் போன அப்பா. துவைத்தாலும் இஸ்திரி போடாத கசங்கிய சட்டை போன்ற அப்பா … தெருவில் எல்லாருக்கும் அவரைத் தெரியும். ”அப்பாவைப் பார்த்தீங்களா?” என்று கேட்டுக்கொண்டே போனான் சரவணன். ”இல்லையே, தெர்லயே…” என்றார்கள் கரிசனத்துடன். ”இந்தப் பக்கம் பாக்கலியே” என்றாள் சிவகாமி அத்தை. மடவார்விளாகம், குளத்துப் பிள்ளையார், படித்துறைப் பக்கம், கிருஷ்ணன் மாமா வீடு… எங்கேயும் போகவில்லை அப்பா. சட்டென புகைமாதிரி கவலை உள்ளே எழும்பியது.

அம்மா வேறு திசையில் தேடிப் போயிருந்தாள். ஒரு நம்பிக்கையுடன் விறுவிறுவென்று வீடு வந்து சேர்ந்தான். ”என்னடா?” என்கிறாள் அம்மா. வாசலிலேயே அவன்வரக் காத்திருந்தாள் அவள். அம்மாவின் கவன எல்லைகளிலும் அப்பாவைக் காணவில்லை. பருத்தி திரண்டாப்போல உள்ளே மழைமேகம். ”பார்க்கலாம்” என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு நேரே ராசாத்தி ஊர்வரை கிளம்பினான். ராசாத்தி நாள் கிழமை என்று வீட்டுக்கு வருவாள். அப்பாவின் செல்லப்பெண் அவள். வந்து நாலைந்து நாள் இருந்துவிட்டுப் புறப்படும்போது அப்பா கையைப் பிடித்துக்கொண்டு அழுவாள். அப்பா பேசமாட்டார். அவளையே பார்த்துக் கொண்டிருப்பார். அவள் அத்தானுடன் சைக்கிளில் எறி உட்கார்வாள். அப்புறம் அப்பா மொட்டைமாடிக்குப் போய்த் தனியே படுத்துக் கொள்வார்.

இவன் வந்த வேகம் பார்த்து ”என்ன சரவணா?” என்று கடையில் இருந்து இறங்கி வந்தார் அத்தான். வீட்டின் முன்பகுதியைப் பிரித்து சின்னதாய்ப் பெட்டிக்கடை. வாசல்கூரைக் கம்பத்தில் கட்டியிருந்த ஆடு மண்டையைத் தேய்த்தது. ”ஒண்ணில்ல மாமா” என்றான். மூச்சிறைத்தது. ”அப்…பா” என்றான். மூச்சிறைத்தது. ”இங்க ஏண்டா வராரு இவ்வளவு து¡ரம். ஊர்ல சரியாத் தேடிப் பாருங்க” என்றார் அத்தான்.

அவன் அத்தானைப் பார்த்தான். ”எல்லா இடமும் பார்த்துட்டோம் அத்தான். காலைலேர்ந்து வேற வேலை செய்யல – ஒரு இடம் பாக்கியில்லாமத் தேடிட்டோம்…” அழுகை முட்டியது உள்ளே. வாசல்கம்ப ஆடாட்டம்.

”ராசாத்தி…” என்று கத்தியவர், ”வா ஒரு டீத்தண்ணி குடிப்பே”

”அப்புறமா வரேன்த்தான்… நான் ஆபிசுக்கே இன்னம் லீவு சொல்லல…” என்று கிளம்பினான்.

அத்தான் ஒருகலர் உடைத்துக் கொடுத்தார். கெட்டிக்கருப்பாய்ச் சாயம்போன தண்ணி போல் இருந்தது. சாகரின் கலந்து கொஞ்சம் சோடாவாயுவும் அடைத்த தண்ணீர். குடித்த ஜோரில் ஏப்… என்றான். ”வேற எங்கயும் போகச் சான்ஸ் இல்லியே மாப்ளே…” என்று அத்தான் மீசையைத் தடவியபடியே யோசித்தார். ”ஏ நீயி தைரியமா இருக்கணும்ப்பு. கலங்கப்டாது. எப்பிடியும் நமக்குத் துப்பு கிடைக்கும். கண்டுபிடிச்சிர்லாம். ஆரு கண்டா… ராத்திரிக்குள்ளாற அவரே வீட்டுக்கு வந்திட்டாலும் ஆச்சர்யம் இல்லை…”

”அது சரிங்க அத்தான்…” என்றான்.

”கிருஷ்ணன் வந்திருந்தாப்லியா?”

”ம். நேத்து வந்திருந்தாரு. காலைல வேலை யிருக்குன்னு கிளம்பிப் போய்ட்டாப்ல…”

”எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?”

”எல்லாரும் சேந்துக்கிட்டீங்களாக்கும்…”

”டேய் நல்ல காரியம்… காலாகாலத்ல அதது நடந்தா அழகாத்தானே இருக்கும்… உனக்கும் வயசாவலியா சொல்லு.”

”வயசு – கழுதை நாள் ஏற ஏற அது ஏறிட்டுதாம் போவும். அதை நிறத்த முடியுமா? நம்ம குடும்பம் இருக்கற இருப்புல, என் கல்யாணம் சரியா வராது அத்தான்.”

”எல்லாந் தெரிஞ்சாப்ல பேசறே?” என்று புன்னகைத்தார் அத்தான்.

”இல்லிங்கத்தான்… பாவம் அப்பா. அவரு கால்திசைல எங்காவது வெளிய இறங்கி, தினப்படி அவரைத் திரும்பக் கூட்டி வாரதே ஒரு ராமாயணம். நம்ப அப்பா, நம்ப குடும்பம்னு நாம செய்யிறோம். வேறு¡ட்டுப் பொண்ணுன்னு வந்து, அது அப்பாவை மதிக்காமக் கொள்ளாம வேத்துமுகம் காட்டிட்டதுன்னா என்னால தாள முடியாது அத்தான்…”

”அதெல்லாம் நாங்க யோசிக்க மாட்டமா சரவணா… அப்டியாளுங்களை நாங்க சொல்லுவமா. அதையேன் நினைக்க மாட்டேங்க?” என்று அத்தான் அவன் தோளைத் தொட்டார்.

”என்னமோ மாமா. எனக்கு நல்லது பண்றதா நினைச்சி எல்லார்த்துக்கும் சங்கடம் பண்ணி விட்றாதீங்க” என்றான். யானை தன் தலைலியே மண்ணை அள்ளிப் போட்டுக்கிருமாமே – என்று நினைத்துக் கொண்டான். நாவை அடக்கிக் கொண்டான். நேரமாகி விட்டது. அப்பா எங்கே இருக்கிறாரோ? மணி இப்பவே எட்டு பத்து. காலையில் காபி கூட சாப்பிட்டிருக்க மாட்டார். கடும் பனியான காலை. சைக்கிளில் வருகையில் எதிர் பஸ்சில் புழுதி கிளம்பி பனியில் அப்படியே நிற்கிறது. ஊடே கடக்கையில் தும்மல் வந்தது. எப்படி அப்பா இந்தப் பனியில் வெளியிறங்கினார். என்ன நினைத்திருந்தாரோ.

கிருஷ்ணன் ஊள்ளூர். தினப்படியாய் வந்து போகிற வாடிக்கை. பாதிநாள் அப்பாவைக் கூட்டிவந்து வீட்டில் விடுகிறவன் அவன்தான். சரவணன் அலுவலகம் போயிருப்பான். வழிகள் அப்பாவின் நினைவில் தங்குவதே இல்லை. நேரா நிதான நடை… நாற்சந்தி என்று வந்தால் திகைத்து விடுகிறார். எந்த வழி போக என்கிற தீர்மானங்கள் அற்று அப்படியே நின்றார். யாராவது பிறகு யோசனை சொல்லி அவரை வழிநடத்த வேண்டியிருக்கிறது. அவர் கட்டளைகளுக்குக் காத்திருக்கிறார். அதை மீற முயற்சித்து, மீறுவதற்கும் கட்டளை என யாராவது இடக் காத்திருக்கிற மாதிரி ஆகிப் போகிறது… கட்டளை என்றால், ஒருவேளை சமிக்ஞைகள்… நாற்சந்தியில நிற்பார். மேலப் பக்க ஆலமரத்தில் இருந்து ஒரு பறவையின் ட்விட் ட்விட். அப்பா மேலத் தெருவில் நடக்க ஆரம்பிப்பார்.

சேகர் அத்தான், கிருஷ்ணன் மாமா என்று அருகில் உறவு மக்கள் துணை என்று இருப்பது நன்றாய்த்தான் இருந்தது. சித்தப்பா மேலக்கரிசல். அங்கேயிருந்து சீஸனுக்குத் தக்கபடி விளைச்சல் தானியம், வத்தல். புளி, துவரம் பருப்பு, பலாப்பழம் என்று கொடுத்தனுப்புகிறான். தங்கச்சி கல்யாணத்தில் நாலு பவுன் கிருஷ்ணன் மாமா போட்டது. ஊருக்கு வெளியே போய்வந்தால் தன் வீட்டுக்கு வாங்கும்போதே லட்டோ ஜாங்கிரியோ இங்கேயுமாக வாங்குகிறான் கிருஷ்ணன் மாமா. அப்பாவுக்கு இப்படி ஆனதுக்கும் அதுக்கும் இவர்கள் மட்டும் இல்லாவிட்டால் குடும்பம் நடுத்தெருவில் திகைத்து நின்றிருக்கும் – அப்பா மாதிரி.

சித்தப்பா ஊரில் கொஞ்சம் செல்வாக்குக்காரன். இவன் வேலைக்காக அரசியல்வாதிகள் பின்னால் நாய்ப்பாடாய் அலைந்து கடைசியில் லஞ்சம் அது இது ஏற்பாடு பண்ணி வாங்கிக் கொடுத்தான். தங்கச்சி கல்யாணத்தை முன்நின்று நடத்திக் கொடுத்தான். கல்யாணம் பற்றி பெரியதாய் நு¡று நோட்டிஸ் அடித்து ஊரெங்கும் ஒட்டினான். பெருமையாய்த்தான் இருந்தது.

தெருவை அடைத்து மறியல் செய்த கல்யாணப் பந்தல். நல்ல பாட்டும் கெட்ட பாட்டுமாய் கவனமே இல்லாமல் ஒலிபெருக்கி அலறியது. பாசமலர் பாட்டு – வாராயோ தோழி வாராயோ – அரை மணிக்கொருதரம் திரும்பத் திரும்ப வைத்தார்கள். மொய்ப்பணத்தை உரக்கச் சொல்ல மைக் வேறு. பெயர் வாசித்தது சித்தப்பா என்று சொல்ல வேண்டியதில்லை.

அத்தனை சத்தத்துக்கும் அப்பா பேசாமல் புதுச்சட்டை போட்டு ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். சற்று கால் ஊனமான நாற்காலி. அதுவாவது சற்று அசங்கியது. அப்பா அசையவே இல்லை. அட்சதை எடுத்துவந்து அப்பா கையில் கொடுத்தார்கள். வாங்கிய கை அப்படியே இருந்தது. செத்தவங் கையில் வெத்தலை பாக்கு என்பார்கள்… ச்சீ அப்பா பற்றி அப்படி நினைக்கக் கூடாது – பாவம். சீக்கிரம் போடுங்கோ. முகூர்த்தத்துக்கு நாழியாறது… அம்மாதான் அப்பா கையைத் து¡க்கி அந்த அட்சதையை வீசினாள். கெட்டிமேளம் கெட்டிமேளம். மேளம் அடி வாங்கி அழுது அலறியது. ஒலிபெருக்கியில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி திருமணம் கண்டாள் இனிதாக… என எம்ஜியார் பாட்டு போட்டார்கள்.

நம்ம கல்யாணத்துக்கு…

மல்லிகை முல்லை பூப்பந்தல் – வாணி ஜெயராம் பாட்டு.

யார்ரா இவன் மூதேவி. அப்பா கிடைக்காமல் அல்லாடித் தவிக்கறாப்ல. கல்யாணத்தை இப்ப நினைக்கிறான்…

அப்பா அவன்மேல் உயிரையே வைத்திருந்தார். நன்றாய் இருந்த காலம்வரை அவர் அவனைக் கூட்டிக் கொண்டு சுற்றாத இடம் இல்லை. தோளில் து¡க்கி உட்கார்த்திக் கொண்டு திரிவார். சூரசம்கார பொம்மைபோல. சேரனு¡ர்வரை இரவில் நடந்து போவார்கள். நையாண்டி மேளம் வெகு ஜோர். வியர்த்து வழிய வழிய அடிப்பான். கரகாட்டப் பொம்பளை முகத்தில் பச்சைப் பவுடர் அழிய அழிய ஆடுவாள். ஆட்டுவாள். திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்… பாட்டுக்கு எதுக்கு இடைத்தாளம். எதுக்கு இந்தச் சந்தி-ஆட்டம். து¡க்கமே போயிரும். அதிகாலை தேர் நிலைக்கு வர, எங்காவது திண்ணையில் உருண்டுவிட்டு வெயிலேற வீடு திரும்புவார்கள்.

உறியடித் திருவிழா. வழுக்குமரம். சர்ர்ரக் சர்ர்ரக் என ஏற ஏற சுயமுயற்சி இல்லாமலே இறங்குவதைக் காண வேடிக்கை. ஒரே விசில்ச் சத்தம். அப்பா எனக்கு விசில் அடிக்கச் சொல்லித் தாங்கப்பா. டேய் ரெளடிப்பய, அப்பாட்ட கேட்கிற கேள்வியாடா இது – என்று அம்மா கோபித்துக் கொண்டாள். வேதநாராயணன் கோவில் பிராகாரத்தில் அப்பாடி என்ன குளிர். தன் வேட்டியைக் கழற்றி அவனுக்குப் போர்த்தி விட்டு, அண்டர்வருடன் பீடி குடித்தபடி உட்கார்ந்திருந்தார். வீட்டில் ஆடு வெட்டினால் மூளை… அவன் பங்கைத் தனியாக எடுத்து வைத்துப் பிரியமாய்த் தருவார்.

விஷஜுரம் வந்து கண் திறக்காமல் கிடந்தார். ஐஸ் வைத்தும் கூட ஜுரம் குறையவே இல்லை. உதடுமட்டும் துடிதுடிக்கிறதைப் பார்த்து கிட்டபோய்க் காதுவைத்துக் கேட்டான். சரவணா…. சரவணா, என்கிறாப் போலத்தான் இருந்தது. அழுகை வந்து விட்டது. ”நான் இங்கியேதான், உன்கூடவேதான்யா இருப்பேன்” என்றான் காதில். அவர் கண்கள் அழுதன. துடைத்து விட்டான்.

தன் கல்யாணப் பேச்சை அம்மா எடுக்கும் போதெல்லாம் சரவணன் பிடி கொடுத்துப் பேசவில்லை. அப்பாவுக்கு வைத்தியம் என்ற இந்த ஐந்து வருடத்தில் பார்க்காத வைத்தியர் இல்லை. என்னென்னவோ மூலிகைப் பத்தியம், ஊசி மருந்து மாத்திரை, சித்த வைத்தியம், எல்லாம் ஓடித் திரிந்தார்கள். வாங்கற சம்பளம் வைத்தியச் செலவுக்கே சங்கிலி நாயாய் இழுத்துக் கொண்டு போனது. ஒன்றிலும் குணம் தெரியவில்லை. ஏடாகூடமான ஆட்களிடம் காட்டி மேலும் முற்றிப் போனாப் போல ஆனது நிலைமை. ஆளே மாறிப்போனார். உடம்பு வஜ்ரம் பாய்ஞ்சாப்ல கெட்டித்து விட்டது. வெதுவெதுப்பே இல்லை. சிறு வியர்வை துளிர்த்த உடம்பு. அடிக்கடி சளி புகுந்து கொண்டு உள்ளிருந்து மிருக உருமலாய் மூச்சு சீறும். பேசவே பேசாத ஆள் திடீரெனத் தும்மி பக்கத்து ஆளைக் கலவரப் படுத்துவார். உள்ளிருந்து பீரங்கிப் பாய்ச்சலாய்ச் சளி பீய்ச்சும். அந்த அதிர்வில் வேட்டி விழுந்து விடும்.

தன் காரியம் கூட தானே பார்த்துக் கொள்ளத் தெரியாத அப்பாவை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இந்த அழகில் கல்யாணம் ஒண்ணுதான் குறையாக்கும்… வீட்டில் கல்யாணப் பேச்சு என்று வந்தாலே மெல்ல தலையசைத்து நழுவினான். கொஞ்ச காலம் புழுதியாய் அந்த விஷயம் வீட்டில் நெடியடித்து தும்மலைக் கிளப்பிவிட்டு பிறகு தன்னைப்போல அடங்கிப் போகும்.

பேச்சுப் போன ஆரம்ப நாட்களில் அப்பா தனியே உட்கார்ந்து மெளமாய் அழுது கொண்டிருப்பார். ஒலியில்லாத அழுகை. உதடு மாத்திரம் துடிதுடிக்கும். என்னவோ பேச முயற்சிக்கிறார் என்று தோன்றும். பேசமுயன்று திண்டாடித் திணறுகிறாப்போல, பாவமாய் இருக்கும். நாளடைவில் அவர் பேச முயற்சிப்பதையே விட்டு விட்டார். போராடித் தளர்ந்து விட்டதாக உணர்ந்திருக்கலாம். தனக்குள் என்னென்ன முடிவுகள் வைத்திருக்கிறாரோ என்றிருந்தது. இறுகிப் பாறைபோல் ஆகிப்போனர் அப்பா. அடியில் நீரூற்று இருக்கக் கூடும். பாறையை எப்படிப் புரட்ட? என்னால் ஆகுமா?

யார் கிட்ட வந்து என்ன பேசினாலும் காதில் வாங்கிக் கொண்டு பேசாமல் இருப்பார். கேட்கிறாரா என்றே சந்தேகமாய் இருக்கும். உடம்பைத் தொட்டுப்பார்த்தால் கூட அந்த உயிர் வெதுவெதுப்பு இராமல் போனதே. சிரிக்கக் கூட மாட்டார். முக தசைகள் இறுகித் தென்னை மட்டையின் பளபளப்பு காட்டியது. யந்திரத்தின் உறுதி கொண்ட உடம்பு அது. மானுட இரும்பு.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்டாலும் கவனியாத அப்பா, கண்டுகொள்ளாத பாராட்டாத அப்பா சரவணனிடம் காட்டிய கனிவு அபாரமானது. இராத்திரிகளில் அவன் அப்பா பக்கத்தில் படுத்துக் கொண்டான். அவருக்கு அந்தப் பக்கம் ரேடியோவைப் பாட்டுபோட்டு விட்டு இந்தப் பக்கம் படுத்துக் கொண்டான். அவரையிட்டு தான் இயல்பாய் இருப்பதாகக் காட்டிக் கொண்டான். அவரை ஒட்டி அவர்மேல் கால் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டான். அம்மாவாவது சில நேரம் கோபத்தில் அப்பாவைத் திட்டுவது உண்டு. சரவணன் சொன்னால், அல்லது அவனது ஒரு பார்வைப் புன்னகைக்குக் கட்டுப்பட்டார் அவர். அவரது கட்டளை-ஆசான் அவன். அவரே அவனது குழந்தை ஆனாப்போல…

வெளியே இறங்கிப் போன அப்பா சில சமயம் கால்போக்கில் அவன் அலுவலகம் வந்து வாசலில் நிற்பார். கூட வேலைபார்க்கிறவர்கள் யாராவது பார்த்து விட்டு உள்ளே கூப்பிடுவார்கள். அப்படியே அசையாமல் வாசலில் நிற்கிறார் அப்பா. அவனிடம் வந்து சொல்வார்கள். சரவணன் வாசலுக்கு வந்து அப்பா கையைப் பிடித்துக் கொண்டான். ”என்னய்யா?” என்றால் பதில் சொல்ல மாட்டார். அப்படியே அலுவலகத்தில் சொல்லி விட்டு, சைக்கிளை அலுவலகத்திலேயே விட்டு விட்டு கூட நடந்து அவரை வீட்டுவரை கூட்டி வந்தான். அப்பாவை டபுள்ஸ் அடிக்க முடியாது. சரியாய்ப் பிடித்துக் கொண்டு உட்கார வேண்டுமே.

ஒருநாள் கிருஷ்ணன் மாமா ஜாதகம் ஒன்று கொண்டு வந்தான். பெண் வேலைக்கு எங்கயும் போகவில்லை. சுமாரான இடம்தான். ஆனால் தங்கமான மனிதர்கள். (சுமாரான தங்கம். பதினேழு காரட்டா தெரியவில்லை.) – அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். கூட பெண்வீட்டு மனிதர்கள் போலிருக்கிறது… பழகாத முகங்கள். அவர்கள் ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்து விட்டார்கள். என்றாலும் நம்ம திருப்திக்குன்னு நாமளும் ஒருதரம் செக்அப் பண்ணிக்கறதுன்னாலும்…

அப்போதுதான் இவன் உள்ளே வந்தான். ”என்ன மாமா?” என்று சட்டையைக் கழற்றிக் கொண்டே சரவணன் கேட்டான். ”எல்லாம் நல்ல விஷயந்தாண்டா. வா இப்டி உக்காரு” என்றாள் அம்மா புன்னகையுடன். அந்தப் பீடிகை. அந்தப் புன்னகை… யானைக்குக் குழிடா அது… பார்த்து… என உஷார்ப்படுத்தியது மனசு. தனியே இவனை மாட்ட முடியாது. கூட தம்பி இருந்தது அம்மாவுக்கு ஒரு தெம்பு போலப் பட்டது. ”கல்யாணப் பேச்சைத் தவிர வேறெதாவது இருந்தாப் பேசுங்க…” என்றபடி விறுவிறுவென்று உள்ளே போய்விட்டான். அவன் நெஞ்சு ஏறியேறி இறங்கியது.

மாமா இவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தான். பய இப்டி எடுத்தெறிஞ்சி பேசிட்டாப்லியே… என வருத்தப் பட்டிருப்பான். பாவம்! இவனுக்கும் வருத்தமாய்த்தான் இருந்தது. ஏல இது வாழ்க்கைப் பிரச்னைடா. ஓடற ஓணானை மடில கட்டி விட்டுட்டாகன்னா அவஸ்தைப் படறது ஆரு? இவகளா?… கல்யாணம் எனக்கு வேணாம்னா வேணாம். இத்தோட இதுக்குக் கருமாதி. இனியும் இப்பிடி வந்து வந்து என்னியத் தொந்தரவு பண்ணப்டாது. ஆமாம்…னு அவனில் ஒரு இது.

விறுவிறுவென்று உள்ளே போனால் அங்கே அப்பா உட்கார்ந்திருந்தார். பரவாயில்லை, என்று அவரை சட்டைசெய்யாமல் பேச ஆரம்பித்தான். ”பெரியவங்க நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கணும். எனக்கு இப்ப கல்யாண யோசனை எதுவுங் கிடையாது. உங்களை வரச்சொல்லி கில்லி தொந்தரவு குடுத்திட்டம். ஆனா அதுக்குக் காரணம் நான் இல்லைங்கய்யா.”

வந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ”தம்பி கொஞ்ச்சம் அவச்ரப் படறாப்ல படுது. உங்களைப் பத்தியும் உங்க குடும்பத்தைப் பத்தியும் நல்லா விசாரிச்சுதாம் வந்திருக்கம். நம்ம கிருஷ்ணனும் எல்லாம் சொன்னாங்க. இந்தக் காலத்துல இப்பிடிப் பொறுப்பான பசங்களை எங்க தம்பி பார்க்க முடியுது? அதான் கேள்விப்பட்டு எங்களுக்குப் பிடிச்சிப் போய்த்தான் வந்தம்…” என்று பேசியவர் பெண்ணின் தந்தையாக இருக்க வேண்டும். அவர் பேசும்போது அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தபடியே பேசினார்.

”நீங்க சொல்றது ரொம்ப சந்தோஷம் ஐயா. இவங் கெடக்கான். ஏல எதையெடுத்தாலும் எடுத்தேன் கவுத்தேன்னு பேசப்டாதுடா. பெரியவங்க கிட்ட பேசற மொறையாடா இது?” என்றான் மாமா. சரவணன் எதுவும் பேசாமல் மாமாவை முறைத்தான்.

வந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு ”நாங்க வரோம்” என்று கிளம்பினார்கள். அவன் பிடிகொடாத ஒரு மையமான புன்னகையுடன் வழியனுப்பி வைத்தான். அவர்கள் போகட்டும்… மாமாவுக்கு இருக்கு… என நினைத்துக் கொண்டான். அவர்களிடம் மாமா தனியே ஏதோ பேசிக் கொண்டிருந்தது எரிச்சல் தந்தது. அப்பா பக்கத்தில் உட்கார்ந்து காபியை ஆற்றிக் கொடுத்தான். ”பாத்து சட்டையில கொட்டிக்கிறாதீங்க…” புது வெளுப்புச் சட்டை எடுத்துக் கொடுத்திருந்தார்கள் அவருக்கு.

அவர்கள் போனபின்பு ராத்திரி வாக்கில் மாமா வந்தான் திரும்ப. அங்கேயே அவர்கள் கூடவே படுத்துக் கொண்டான். ரேடியோவை சட்டென அணைத்தான் சரவணன். அப்பா, அடுத்து அவன், மாமா, அந்தக் கோடியில் அம்மா. படுத்தபடி இரா முழுக்க பேசிக் கொண்டிருந்தார்கள். ஏல ஜாதகப் பொருத்தம் அப்பிடி அம்சமா இருக்குதாம்டா… அவனைப் பேசவே விடவில்லை. யார் து¡ங்கினார்கள்? அப்பாகூடப் புரண்டு படுத்தாப்ல இருந்தது. ”இந்தக் கல்யாணப் பேச்சை இத்தோட விடுங்க – சொல்லிட்டேன்” என்றபடி சரவணன் அப்பா பக்கம் திரும்பி அப்பாவைக் கட்டிக் கொண்டான்.

காலையில் அப்பாவைக் காணவில்லை. ஊரெங்கிலும், தெரிந்த இடமெங்கிலும், நேரிலும் ஆளனுப்பியும் தந்தி கொடுத்தும் தேடியாயிற்று. அப்பா எங்குமே இல்லை. சரி, எப்பிடியும் ராத்திரி தன்னைப்போலத் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்தார்கள். வேறு வழியில்லை. ஆனால் ராத்திரியாயும் ஆள் வரவில்லை. அவரைப் பறிய துப்பும் எதுவும் கிடைக்கவில்லை. மறுநாளும் அதற்கு மறுநாளும் எனக் கடந்தன. அவன் பயம் அதிகரித்தது.

பக்கத்து போலிஸ் நிலையத்துக்குப் போய் சரவணன் ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுத்தான். இன்ஸ்பெக்டர் கையைப் பிடித்துக் கொண்டு, ”எப்பிடியாவது அப்பாவைக் கண்டுபிடிச்சித் தாங்க இன்ஸ்பெக்டர்” என்றான். பேச முடியவில்லை.

”ம் ம். பார்க்கலாம். வீட்ல எதாவது சண்டையா?” என்றார் இன்ஸ்பெக்டர்.

”ஐய அதெல்லாம் ஒண்ணில்லங்க சார்” என்றான் சரவணன்.

”இல்ல – மனசொடிஞ்சி போயி எங்காவது ஆத்லயோ குளத்லியோ விழுந்து…” – ”ஐயோ சொல்லாதீங்க” என்றான் பதறி. ”அப்பிடியெல்லாம் எங்க வீட்ல யாரும் அவர் மனங்கோண்றாப்ல நடந்துக்க மாட்டாங்க சார்.”

என்றாலும் வெளியே வரும்போது பயமாய் இருந்தது. அடாடா ஒருவேளை நாம இருக்கிற வரைக்கும் இவன் கல்யாணம் முடிக்க மாட்டான்…னு அவரா முடிவு பண்ணிக்கிட்டு… சரவணன் ஒரு பதட்டத்துடன் காடுகரை, குளங் குட்டை, பாழுங்கிணறுகள் என்று எட்டிப் பார்த்தான். அப்பா கிடைக்கவில்லை.

அப்புறம் திடீரென்று ஒருநாள் துப்பு வந்தது. வாழைக்குளத்தில் அவன் அப்பா செளக்கியமாய் இருக்கிறார் என்றும், வந்து அழைத்துப் போகும்படியும் கடிதம் வந்தது. அம்மா கடிதத்தை வாங்கிப் பார்த்தாள். ”அங்க எப்பிடி போனார்டா இந்த மனுசன்?” என்று புன்னகைத்தாள்.

”அந்த ஊரு உனக்குத் தெரியுமாம்மா?” என்று கேட்டான் சரவணன்.

”எல்லாந் தெரிஞ்ச ஊர்தான். போ. போயிக் கூட்டிட்டு வா…” என்றாள் அம்மா.

அதுவரை அவன் அறிந்திராத ஊர் அது. அம்மாவுக்கு எப்பிடித் தெரிந்தது தெரியவில்லை. கையில் முகவரி வைத்துக் கொண்டு விசாரித்துக் கொண்டே போனான். வாசலில் ஒரு பதினாலு வயசுப்பெண் கன்னுக்குட்டிக்குப் பாய்ச்சல் காட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. அவனைப் பார்த்ததும் அதுக்கு ஒரே வெட்கம்! விலுக்கென்று உள்ளே ஓடியது. ”அப்பா அத்தான் வந்திருக்காக…”

ஆச்சர்யத்துடன் உள்ளே போனான்.

அப்பா உள்ளே படுத்திருந்தார். அவரைப் பார்த்ததும் குப்பென்று உள்ளே பொங்கியது. ”அப்பா!” என அவர் அருகில் போய் உட்கார்ந்து கொண்டான்.

”வாங்க தம்பி” என்று பெண்ணின் அப்பா உள்ளேயிருந்து வந்தார். ”பாருங்க தம்பி. கையில நம்ப சாந்தியோட ஜாதகம் எடுத்துக்கிட்டு ஆளாளாக் காட்டிக்கிட்டே எப்பிடியோ கோளாறா வந்து சேந்திட்டாரே. ஊர்லேர்ந்து நடந்தே எப்பிடித்தான் வந்தாரோ…”

”ஐயோ அப்பா. இவ்ளோ தூரம் கிளம்பி வர்ற அளவு நாங்க என்னப்பா தப்பு செஞ்சோம்” என்று அழுதான் சரவணன். அப்பா எதுவும் பேசவில்லை.

”சாந்தியைப் பார்க்கணும்னு தோணிச்சோ என்னமோ அவருக்கு…” என்றார் பெண்ணின் தந்தை.

”நம்ம வீட்ல அவருக்குச் சோறு வைக்கிறது, குளிப்பாட்டறது எல்லாம் நம்ப சாந்திதான் தம்பி. நாங்க என்ன பேசினாலும் அவ வந்து ஒருவார்த்தை சொன்னாதான் கேக்குறாருன்னா பாத்துக்கங்க…”

”சாந்தி தம்பிக்குக் காபித்தண்ணி கொண்டாம்மா” என்று உள்ளுக்குக் குரல் கொடுத்தார்.

”இதோ வரேம்ப்பா” என்று வந்த குரல் கேட்டு அவனுக்கு சிலிர்த்தது. படபடக்கும் நெஞ்சுடன் சரவணன் காத்திருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *