கல்யாணமாம் கல்யாணம்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 11,180 
 
 

தலைகளை எண்ணிப் பார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு தென்பட்டன. இதில் எனது குடும்ப ஆட்களே ஏழு பேர். அப்படியென்றால் ஐந்து பேர் மட்டுமே படம் பார்க்க வந்திருக்கிறார்கள்.

அந்த ஏழில் ஐந்து, மனைவி பக்கம். புது மனைவி. இசையமைப்பாளர் கணவனின் முதல் படத்தைப் பார்க்க வந்திருக்கிறாள். என் பக்கம் திரும்பியவள், ”என்னங்க… கூட்டம் இவ்வளவுதானா?” என்றாள்.

”ச்சீச்சீ… படம் ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா வருவாங்க.”

வர மாட்டார்கள். மேட்னி ஷோ எட்டு பேர் மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.

ஐந்து வருட முயற்சிக்குப் பிறகு கிடைத்த முதல் படம். இயக்குநருக்கும் இதுவே முதல் படம். கடுமையான உழைப்பு. புதுமையான கதைக்குப் பார்த்துப் பார்த்து ட்யூன் போட்டு, கிட்டத்தட்ட ஐம்பது ட்யூன்களுக்குப் பிறகு, நான்கு ட்யூன்கள் பாடல்களாயின. அதில் ஒரு பாடல், புது முயற்சி. பிரபல கானா பாடகரின் சொந்த வரிகள். பட்டையைக் கிளப்பப்போகிறது என்று நினைத்திருந்தோம். ஆனால்?

நேற்றே புது மனைவி கேட்டுவிட்டாள், ”ஏங்க, படம் சரியாப் போகலைன்னா… நான் வந்த நேரம்னு வீட்ல சொல்ல மாட்டாங்களே?”

அவள் கவலை. ஆனால், அதுதான் நடக்கும் போலிருக்கிறதே. திருமணத்துக்கு அவசரப்பட்டு விட்டோமோ? ஜெயித்த பிறகு பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாமோ?

பன்னிரண்டு பேர்தான் படம் பார்த்தோம்மனைவிக் கும் அவளது உறவினர்களுக்கும் படம் பிடித்திருந்தது. ”ஏங்க, அந்த வாழை மீன் பாட்டு அமர்க்களமா இருக்குங்க. இன்னொரு தடவ பார்க்கணும் போல் இருக்கு.”

”நைட் ஷோவுக்கு கவுன்ட்டர்ல யாருமே இல்ல… அப்படியே உட்கார்ந்திடுவோமா?” – உலர்ந்துபோன குரலில் கேட்டேன். மனைவியிடம் பதில் இல்லை.

படம் வெளியாகி பத்து நாட்களாயிற்று.

வீட்டைவிட்டு வெளியே போக மனமில்லை. அவ்வப்போது டைரக்டரோடு மட்டும் பேசினேன். ”பிக்கப் ஆயிடும் பாரு” – குரலில் உற்சாகம் காட்டினார்.

தெரிந்தவர், அறிந்தவர்களிடமிருந்து துக்க விசாரிப்பு, ”என்னப்பா… உங்கப்பா சொன்ன மாதிரி இன்ஜினீயர் ஆகியிருக்கலாம்ல.”

டென்ஷனில் செல்போனை ஆஃப் செய்து தூக்கி எறிந்தேன்.

ஒரே ஓர் ஆறுதல், மனைவி. ”படத்துக்குக் கூட்டம் ஜாஸ்தியாயிட்டே வருதுங்க, என் வேண்டுதல் பலிக்குங்க.”

”என்ன வேண்டினே?”

”எல்லா கோயில்லயும், எல்லா சாமிகிட்டயும். நீங்க செல்போனைத் தூக்கி எறிஞ்சது மனசுக்குக் கஷ்டமாயிடுச்சுங்க. நிச்சயதார்த்தப்ப அந்த போன்லதான் படத்தோட பாட்டு எல்லாத்தையும் ரிக்கார்ட் பண்ணிட்டு வந்து போட்டுக் காமிச்சீங்க. அந்த செல் போனைப் போயி” – கண் கலங்கினாள்.

அடுத்த நாள் காலை உற்சாகமாக என்னிடம் வந்தாள். ”உட்லண்ட்ஸ்ல விசாரிச்சுட்டேன்… மார்னிங் ஷோ கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல்.”

நான் நம்பவே இல்லை.

”நிசமாத்தாங்க. இப்பதான் மேனேஜர்கிட்ட பேசினேன்” என்று என்னை ஆறுதல்படுத்துகிறாள்.

சரியாக மாலை நான்கரை மணிக்கு லேண்ட்லைன் போன் ஒலித்தது. மறுமுனையில் காயத்ரி…

”முதல்ல உங்க செல்போன ஆன் பண்ணுங்க. எடுத்துட்டு வாசலுக்கு வாங்க… உள்ள சிக்னல் சரியா வராது.”

எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தேன்.

”தியேட்டர்ல இருக்கேன். சவுண்ட் கேட்குதா” – வாழ மீன் பாடல். பாட்டுச் சத்தத்தையும் தாண்டி விசில் சத்தமும் ஆடியன்ஸின் ஆரவாரக் குரலும் கேட்டது.

ஆனந்தத்தில் எனக்குக் கண்களில் நீர் முட்டியது.

– சிறுகதை ஆக்கம் திருவாரூர் பாபு – 24th செப்டம்பர் 2008

Print Friendly, PDF & Email

1 thought on “கல்யாணமாம் கல்யாணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *