கலாசாரப் புயல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 3,196 
 
 

(2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பொன்னைப் பாதுகாக்கலாம் பாருங்கோ. ஆனால் பெண்ணைப் பாதுகாப்பது தான் பெரிய பொறுப்பு”

புருஷன்காரன் இல்லாமலே தனது ஒரே மகளின் பூப்புனித நீராட்டு விழாவை மிக மிக ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் ஒப்பேற்றிவிட்ட பெருமிதத்தில் தலைகால் புரியாமல் இருந்த ரஞ்சிதாவின் மீது, இளம் வயதினளும் பக்கத்து வீட்டில் புதிதாகக் குடும்பம் நடத்துபவளுமான ‘மிஸிஸ்’ ஆரோக்கியநாதன் சொல் எறிகணை ஒன்றை நாசூக்காக ஏவி வைத்தாள்.

இதனைக் கேட்ட ரஞ்சிதாவின் மனம் திடீர் என்று சிதறி உற்சாகம் இழந்து துணுக்குற்றது…

ரஞ்சிதாவின் கணவர் மனோகர் தனக்கொரு பெண் குழந்தை பிறந்தது குறித்து மிகவும் மனம் மகிழ்ந்ததுடன் நின்று விடாது… அவளை நல்லதொரு நிலைக்கு கொணர்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆர்வ மேலீட்டால்….. பெரும் பணம் சம்பாதிக்க வெளிநாடு போய் இப்போ மூன்று வருடங்கள் ஆகிவிட்டது…..

தனது மகள் ருதுவான செய்தி அறிந்ததும் தான் சார்ந்த மத கலாசாரத்துக்கு…. அமைவாக பூப்புனித நீராட்டு விழா சிறப்பாக நடாத்தப்பட வேண்டும் என்று ரஞ்சிதாவுக்கு அவன் அறிவுறுத்தியிருந்தான்.

அதுவரையில் வெற்றிகரமாகக் காரியங்களைப் பூர்த்தி செய்து விட்ட திருப்தியில் திளைத்திருந்த ரஞ்சிதாவின் முன் இப்போ புதியதொரு பொறுப்பு பூதாகரமாக உருவெடுத்து வந்தது!

என்றாலும் தன்னை சுதாகரித்துக் கொண்ட ரஞ்சிதா… “என்னுடைய மகள் மீனா சின்னப்பிள்ளை பாருங்கோ…. எவருக்கும் கண்ணுக்குள் குத்துகின்ற மாதிரி தோற்றம் பெறவில்லை. அவள் உருப்பட்டு வருவதற்கு முன்னர் வெளிநாட்டில் இருக்கின்ற எனது கணவர் எங்களுடன் வந்து இணைந்து விடுவார்!”

இந்த நியாயம் மிஸிஸ் ஆரோக்கியநாதனுக்கு ஓரளவு சரி என்றுதான் பட்டது. அவளுக்கு அவளுடைய குடும்ப வாழ்வில் கணவன் நிமித்தமாக அனுபவிக்க நேர்ந்த சில துரோகங்கள் நம்பிக்கையீனங்களாக மாறி அவளது பேச்சிலும் நடத்தையிலும் அவை பிரதிபலிக்கச்செய்தன.

“என்றாலும் மிஸிஸ் மனோகர்….நான் சொல்வதை உங்களுடைய மனதிற்குள் வைத்துக் கொள்ளுங்கோ….. அப்படியும் நடக்குமா என்று கேளாதேயுங்கோ… என்னுடைய சினேகிதி ஒருத்தி புதிதாக மணமாகி தனிக்குடித்தனம் போனவள். குமராகிற பராயத்தை நெருங்கிவிட்ட பக்கத்து வீட்டு பெடிச்சி ஒரு நாள் அவளிடம் கூறினாளாம்…. “உங்களுடைய அவர் அன்ரி மிகவும் நல்லவர். நீங்கள் இல்லாத நேரம் என்னையும் கொஞ்சுறவா” என்று. இது எப்படி ‘மோட்டார் ஷெல்’ என்று கேட்கிற மாதிரியான சொற்பிரயோகத்தை வீசிய திருப்தியுடன் மிஸிஸ் ஆரோக்கியநாதன் விடைபெற்று செல்லவும்… ரஞ்சிதா எவருமே நம்ப மறுக்கும் பேயையோ பிசாசையோ நேரில் காண நேர்ந்தது போல திடுக்குற்றுச் செயலிழந்தாள்.!

“அன்னை மேரியே… அநாதரவான எனக்கு நீர்தான் அருள் பாலிக்க வேண்டும்….! என்று பிரார்த்தித்த படியே தனது நாளாந்த வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள் ரஞ்சிதா.

அவளது கணவன் வெளிநாடு போனமை காரணமாகவே அக்குடும்பத்தின் வாழ்க்கைத்தரம் ஒரு நடுத்தர அளவுக்காயினும் உயர்ந்தது.

பெற்றோருடன் தனது கிராமத்தில் தான் வாழ்ந்த காலம் இன்னமும் அவள் மனதில் பசுமையாக இருந்தது. குமரான அவளை பெற்றோரின் மதிப்பும் கௌரவமும் உயர் சமூக மட்டத்திலான தொடர்புகளும் தான் பாதுகாத்து வந்தன. எவருமே அவளை நெருங்க முடியாது! அந்த மனத்தைரியமும் வாழ்க்கை முறையும் தந்த மேலான அனுபவம் தான் இன்றும் அவளை ஒரு பதிவிரதை என்று ஊரார் குறிப்பிட்டு கதைக்குமளவிற்கு உயர்த்தி வைத்திருக்கின்றது.

பாடசாலை சென்று விட்ட மகள் மீனா பற்றியே இன்று அவளது நினைவுகள் சுற்றிச்சுற்றி வட்டமிட்டன…

மிஸிஸ் ஆரோக்கியநாதன் கூறுவதை எந்த அளவில் அசட்டை செய்யமுடியும்?… பாடசாலை போகிற வழியில் பெண் பிள்ளைகளுக்கு இருக்கிற இடையூறுகள் பற்றியும் மற்றவர்கள் பேசத்தான் செய்தார்கள்

நாளைக்கு ஒரு அவமானம் நேர்ந்து விட்டால் துரதேசம் சென்று தனது மகளுக்காகவே கஷ்டப்படும் தந்தைக்கு கூறக்கூடிய சமாதானம் தான் என்ன?

எதற்கும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும் என்று சிந்தித்து தீர்மானித்தவளாக துாரத்து வழியில் அவளுக்கு அக்கா முறையானவளும் அயல்வாசியுமான அபிராமி அம்மா வீட்டிற்குச் சென்றாள்.

பல பேச்சுக்களுக்கும் மத்தியில் மெதுவாக கதையைத் தொடக்கினாள்…. “அக்கா, மீனா இப்ப பெரிசாகி விட்ட பிறகு எனக்கு அவளை பாடசாலைக்கு அனுப்புவது விருப்பமில்லாமல் இருக்குது. என்னுடைய கணவனுக்கு இவ்விட நிலைமைகள் விளங்காது. நீங்கள் என்ன அக்கா சொல்லுறியள்?’

அபிராமி அம்மாள் ஞானப்பழம்! அவளையும் அவளது அனுபவத்தையும் உச்சிவிட்டு எதுவும் நடந்து விட முடியாது. எனவேதான் கணவனுக்கு கடிதம் எழுதிக் கேட்டு எடுக்கிற முடிவை அபிராமி அம்மாவைக் கேட்டு தெரிந்து கொண்டால் சரி என்கிற எண்ணத்துடன் ரஞ்சிதா அங்கு வந்திருந்தாள்.

“நீ ஏன் ரஞ்சிதா விசர் கதை கதைக்கிறாய். இந்த நாளையிலை பெண்பிள்ளை படிக்காவிட்டால் அது எவ்வளவு அவமானம் தெரியுமா? அவள் கெட்டிக்காரி. படிப்பை விடக்கூடாது. என்னுடைய மகன் குமாரும் பக்கத்து பாடசாலையில் தான் படிக்கிறான். மீனாவைப் பார்த்துக் கொள்ளுமாறு நான் அவனிடம் சொல்லி வைப்பேன். பாடசாலைக்கு இரண்டு பேருமே சைக்கிளில் போவதால் மீனாவை முன்னுக்குப் போகவிட்டு தம்பி பின்னால் போவான். நீ ஏன் பயப்படுகிறாய்!?”

‘அபிராமி அக்கா எப்படியான மனத்தைரியசாலி!’ என்று வியப்புற்ற ரஞ்சிதாவுக்கு பெரிய மனப்பாரம் இறங்கியதாய் போய்விட்டது.

அவள் வீடு வந்து சேரவும் மீனாவும் பாடசாலையால் வந்து விட்டிருந்தாள். இப்போ மகளைப் பார்க்க தாய்க்கே கண்பட்டு விடும் போல இருந்தது. ஏதோ ஒரு வித்தியாசம்…. பருவக் கவர்ச்சி மீனாவில் பளிச்சிட்டது.

தலையை தாழ்த்திக் கொண்ட ரஞ்சிதா…”பிள்ளை உடுப்பை மாற்றி விட்டு சாப்பிட வா” என அன்புடன் அழைத்ததுடன் உணவையும் ஊட்டத் தொடங்கினாள்.

‘பிள்ளை இனிமேல் நீ மாலையில் தேவாலயத்துக்கு போக வேண்டாம். நீ வீடு வந்து சேர இருட்டிவிடுவதால் எனக்கு பயமாக இருக்கின்றது.”

ஒரு கவளம் சோற்றை மென்று விழுங்கிய மீனா……”அம்மா …..’பிரேயர்’ முடிந்து வருவதற்கு எனக்கு காலதாமதமாகாது. ஆனால் அங்கு ‘மியூசிக் பிரக்ரிஸ்’ இருக்கிற நாட்களில் தான் இருட்டி விடுகின்றது. நீங்கள் ஒருக்கால் ‘பார்தருடன்’ கதையுங்கோ ….”

தனது மகள் தேவாலயத்தில் அனைவர் முன்னிலையிலும் ‘ஸ்ரேஜில்’ பாடுவது ரஞ்சிதத்துக்கு பெரும் மனமகிழ்ச்சியை தருவதுண்டு.

மறுநாளே தேவாலயம் சென்று ‘பார்தருடன்’ கதைத்தபோது அவரும் மீனாவின் பிரச்சனையை பெரிது படுத்தவில்லை. அவளைச் சின்னப் பிள்ளையாகவே பார்த்தார்.

“நீங்கள் பயப்பட வேண்டாம் மிஸிஸ் மனோகரன்…… பிள்ளை புறப்படுவதற்கு காலதாமதமானால் நான் தகுந்த துணையுடன் அவளை அனுப்பி வைப்பேன்….” என்று உறுதி கூறினார்.

அவளது பெற்றமனம் இப்போது பெரிதும் ஆறுதல் அடைந்தது. கணவன் நல்ல நிலையில் இருக்கும் போதே ‘ஒரு குமரை வைத்துக் கொண்டு இத்தனை பாடு என்றால் புருசனை ஏதோ ஒரு வகையில் இழந்த பெண்கள் நிலை எப்படி இருகக்கூடும்? என்று எண்ணிக் கலங்கினாள்.

புருசனை எதேத்துக் கொண்டு கால இருக்கும் –

இப்பதான் எல்லாம் சரியாகி போய்விட்டதே என்று நினைத்த போது ரஞ்சிதா பூரண சந்தோஷம் அடைந்தாள். நீண்ட நாட்களாக மிஸிஸ் ஆரோக்கியநாதனும் வீட்டுப்பக்கம் வரவோ எதிர்ப்படவோ இல்லை.

அன்று மீனா பாடசாலை சென்று விட்டாள். பல நாட்கள் பார்த்திருந்து ஏமாந்தது போல் அல்லாமல் அன்று மனோகரின் ‘எயர் மெயில் வந்தது.

மகளின் பூப்புனித நீராட்டு விழா படங்கள் கிடைக்கப் பெற்ற கையுடன் எழுதப்பட்ட கடிதம் அது. ஆவலுடன் படித்தாள்.

…என்றாலும் எனதருமை ரஞ்சிதா…. வெளிநாட்டுக் கலாசாரங்கள் அச்சமூட்டுவனவாக இருக்கின்றன. இளைய சமுதாயம் கெட்டு விடக்கூடிய வகையில் பல வாய்ப்புகள் வாயைப் பிளந்து கொண்டு இருக்கின்றன. பிள்ளைகளைப் பெற்றோர் கட்டுப்படுத்த முடியவில்லை . மிக மிக இளவயது பெண்கள் சுயாதீனமாக சுற்றித் திரிகின்றார்கள். இலகுவில் தவறியும் விடுகின்றார்கள். வைத்தியர்களும் பழியை பெற்றோர் மேலேயே போடுகின்றார்கள். ‘நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை போதிக்காதது தான் அவர்கள் தவறியமைக்கான காரணம்’ என்று கூறுகின்றார்கள். மீனாவைக் கவனமாகப் பார்த்துக்கொள். எனது மகளுக்கு ஒரு பழிச் சொல் வருமாயின் என்னை நீ உயிருடன் பார்க்க முடியாது…

ரஞ்சிதா தான் அடியுண்டு வீழ்ந்து விடுவதைத் தவிர்ப்பதற்காக அருகிலிருந்த ரீ போயில்’ கையூன்றி நிலத்தில் சரிந்து கொண்டாள்.

பல கணவன்மார் வெளிநாட்டில் இருந்து கொண்டு தமது இளவயது மனைவியைப் பற்றிதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். மறுபக்கம் தாங்கள் செய்யக்கூடாத திருகுதாளங்களையெல்லாம் ஒழுங்காக நிறைவேற்றவும் தவறமாட்டார்கள்!

மீனாவின் தந்தை நேர் எதிர் மாறானவர். புனிதன்! ஒரு வார்த்தை சொன்னால் அதிலிருந்து மாறமாட்டார்!

ரஞ்சிதா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழும்பவும் மீனாவும் பாடசாலையால் வந்தாள். உடுப்பு மாற்றுவதிலிருந்து கைகால் அலம்புவது உணவு ஊட்டுவது வரை அனைத்து கடமைகளையும் முடித்து விட்ட ரஞ்சிதா மகளைத் தனது மடியில் சாய்த்துக் கொண்டாள்.

பெற்ற மனம்…… கணவனை ஒரு கரையாகவும் மகளை மறுகரையாகவும் இணைத்து தொங்கு பாலம் போல் ஆடியது….

“பிள்ளை ….நான் எப்போதாவது உன்னை இருக்கின்றேனா?”

“இல்லை ”

எப்போதாவது அடித்திருக்கின்றேனா.?

“இல்லை ”

“அப்ப நான் கேட்கிற கேள்விகளுக்கு பிள்ளை பயப்படாமல் உண்மை சொல்ல வேண்டும்.

“நான் அம்மாவுக்கு பொய் சொல்வதில்லையே…”

ரஞ்சிதாவுக்கு விசாரணை செய்யத் தெரியாது. அவளையும் எவரும் விசாரணை செய்ததில்லை ….. எனவே மகளிடமாயினும் விசாரணை செய்யும் தோரணையில் ஒரு கேள்வியை கேட்க அவள் மனம் கூசியது…

“பிள்ளையோடு யாராவது பகிடி…கைச்சேட்டை விடுகிறவர்களா…?

மீனா தாயை வினோதமாகப் பார்த்தாள். அவளது பால் வடியும் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

தனது இடது கைவிரல்களை மீனா முகத்தின் முன்னர் விரித்துப் பிடித்துக் கொண்டாள். இப்போ வலது கையால் ஒவ்வொரு விரலாக மடித்துக் கொண்டே கூறத் தொடங்கினாள்…

“எனக்கு ஆங்கிலம் புகட்டும் ஆரோக்கியநாதன் அங்கிள்…பாடசாலைக்கு எனக்கு துணையாக வரும் குமார்…இருட்டி விட்டால் எனக்கு துணையாக ‘பார்தர்’ அனுப்பும் தேவாலய பணியாள்… அவ்வளவுதான்” என்று மீனா கூறி முடிக்கவும் ரஞ்சிதாவுக்கு ஆத்திரமும் அழுகையும் பொத்துக் கொண்டு வந்தது.

எவர் எவரை நம்பி அவள் மகளுக்கு காவல் வைத்தாளோ அவர்களே வேலி பயிரை மேய்ந்த கதையாக துரோகம் செய்து விட்டமையை நினைக்க அவள் உடல் பதறியது.

“அப்ப ஏன் பிள்ளை இதையெல்லாம் எனக்கு சொல்லவில்லை?”

ரஞ்சிதா மகள் மீது குமுறி விழுந்ததுடன் தனது மடியிலிருந்து அவளது தலையையும் விலக்கி விட்டாள்.

தாய் ஏன் தன்மீது சினந்து விழுகின்றாள் என்பது மீனாவுக்குப் புரியவில்லை. என்றுமே கோபிக்காத அம்மா ஏன் அதட்டுகிறாள் என்பதும் விளங்கவில்லை . ஆனால் அவளில் நிதானம் இருந்தது. எழுந்து நின்று தனது அடர்த்தியான தலை மயிரை இறுகப் பின்னியவாறே…..” “அம்மாவுக்கு முறைப்படவேண்டிய தேவை ஏற்படாத தால்தான் நான் சொல்லவில்லை” என்று பணிவுடன் கூறினாள்.

ரஞ்சிதாவின் கோபம் எல்லை மீறியது. கைகள் பதறின… மீனாவின் தலைமயிரை பிடித்து இழுத்து…நிலத்தில் தள்ளி…அவளுடைய பிஞ்சு முதுகில் ‘கும் கும்’ என்று குத்தி…. “நல்ல நடத்தையுள்ள தாய் தகப்பனுக்கு பிறந்த உனக்கு எது சரி எதுபிழை என்று கூட தெரியாமல் போய் விட்டதே?’ என்று கேட்டு இன்னும் இரண்டு கன்னத்திலும் சாத்தி….

இப்படியெல்லாம் அவளது எண்ண அலைகள் விரிந்தாலும் எல்லை மீறிய கோபம் காரணமான பதற்றத்திலிருந்து இன்னமும் அவளால் விடுபட

முடியவில்லை! செயலிழந்தே இருந்தாள்…

“மீனா தொடர்ந்து விளக்கினாள்.” நீங்கள் ஏனம்மா பயப்படுகிறியள். ஆரோக்கியநாதன் அங்கிளும் சரி, குமாரும் சரி, ‘பார்தரின்’ பணியாளும் சரி என்னுடன் பழகும் போது எந்தெந்த சந்தர்ப்பத்தில் எல்லை மீறினார்களோ அவ்வப்போதே நான் அவர்களை எச்சரித்து விட்டேன். அவர்களும் பயந்துபோய் எனக்கு மரியாதை தந்து பழகி கொண்டு தான் இருக்கின்றார்கள்”

ரஞ்சிதாவுக்கு காதில் தேவகானம் பாய்ந்தது போல இருந்தது. அப்படியே மகளை வாரி அணைத்து முத்தமாரி பொழிந்தாள்.

“ஏன் பிள்ளை…அம்மாவிடம் சொல்லுவன் என்றோ , அப்பாவுக்கு கடிதம், எழுதுவன் என்றோ அந்தக் கெட்டவங்களை நீ பயப்டுத்தினாயா?”…ரஞ்சிதா இப்போ குழந்தையாக மாறி புத்தி சாதுர்யத்தில் உயர்ந்து நிற்கும் மகளிடம் வினவினாள்.

“இல்லையம்மா…நான் அப்படிச் சொன்னால் தனித்து நிற்கின்ற உங்களுக்கோ துரதேசத்தில் இருக்கும் அப்பாவுக்கோ அவர்கள் பயப்படமாட்டார்கள். ஆரோக்கியநாதன் அங்கிள் அவருடைய மனைவிக்கும், குமார் தனது தாய்க்கும், பணியாளர் ‘பார்தருக்கும்’ தான் பயப்படுவார்கள்.”

தனது மகளுக்கு இவ்வளவு புத்திசாலித்தனம் எப்படி வந்ததென்பது ரஞ்சிதாவிற்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அதேசமயம் வெளிநாட்டுக் கலாச்சாரச் சீர்கேடுகளை எண்ணி கலங்கி…அப்படி தனது மகளுக்கும் நேரின் தனது உயிரையும் மாய்க்க துணிந்து கடிதம் எழுதிய கணவனுக்காக பச்சதாபப்பட்டாள்.

“என்னுடைய செல்வம்…இப்படியெல்லாம் நடப்பதற்கு பாடசாலையில் சொல்லித் தந்தவையே?’ – ரஞ்சிதா அப்பாவித்தனமாக வினவினாள்.

“இல்லையம்மா…என்னுடைய சாமத்திய வீட்டின் போது நான் ‘மேக் அப் முடிந்து அறையில் தனியே இருந்தேன். அப்போ அங்கு வந்த அபிராமி அம்மா…நான் பருவமடைந்ததைப் பற்றிய விளக்கத்தையும்…ஆண்களோடு இனி எவ்வளவு தூரம் பழகலாம் என்பது பற்றியும்…எல்லை மீறும் ஆண்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும்…தவறும் பட்சத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சீரழிவுகள் பற்றியும் இன்னும் பல புத்திமதிகளையும் கூறினா. என்னை ஆலாத்தி மாலையிட்டு எல்லோரும் கௌரவிக்கின்ற அந்த நேரத்தில் கூறப்பட்டதால் அந்த அறிவுரைகள் எல்லாம் எனது மனதில் நன்கு பதிந்து விட்டன.

‘எங்களுடைய கலாசாரத்ததை நீ இந்தத் தினத்திலிருந்து முன்னெடுத்துச் செல்’ என்று அவர் மந்திரம் போல கூறிய வார்த்தைகள் எனக்கு ஆபத்தான நேரங்களில் மன உறுதியையும் தைரியத்தையும் அளிக்கின்றது. மீனா பெரிய விரிவுரையே செய்தாள்.

ரஞ்சிதாவுக்கு இப்போ அனைத்துமே தெளிவானது…

சிறுமி ஒருத்தி ஏமாற்றப்படுவதனைத் தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து…முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தவறான வழிகாட்டும் வெளிநாட்டு கலாசாரத்திற்கு அப்பால்…

ஏமாற்றப்பட்டு விட்ட பின்னர் தற்கொலையை தெரிவு செய்யும் எமது நாட்டு பெண்கள் சிலரின் ஏமாளித்தனம் ஒரு விதிவிலக்காக…

தெளிவும் உறுதியுமானதொரு கலாசாரப் புயல் எங்கு மையம் கொள்கின்ற தென்பதை ரஞ்சிதா இப்போ மானசீகமாகக் காண்கின்றாள்!

– ஞானம். மார்ச் 2001, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.

ந.பார்த்திபன் விரிவுரையாளர் தேசிய கல்வியியற் கல்லூரி வவுனியா இலங்கை நீண்டகால வாசிப்பு முதிர்ச்சியும் நிதானமான எழுத்து முயற்சியும் சேர்ந்து இவரது கதைகளினூடு பிரதிபலிப்பதைப் பார்க்கிறோம். இலக்கியம் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும். இவரது சிறுகதைகள் அதனை செய்கின்றன. சமூகத்தில் காணப்படும் புரையோடிப்போன பல விடயங்களை படிப்பினையூட்டும் வண்ணம் எழுதியிருக்கிறார். கற்பனை உலகில் சஞ்சரிக்காது நிஜவாழ்வில் கண்டவற்றை மனதை தொடும் படியும் மனதில் படியுமாறும் சொல்லியிருக்கிறா ரென்றே கூறவேண்டும். பெரும் பாலான கதைகளில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *