கற்றாழை முள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 1,461 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சித்னா, நீ ஏன் இப்படிக் கொஞ்சங்கூட புரிஞ்சுக்காம இருக்கே? நான் என்ன உன் கெட்டதுக்காகவா சொல்லப்போறேன்?.. போக வேண்டாம்னா நீ போக வேண்டாம்!” ஆணியடித்தாற்போல் கூறிவிட்டு, அழகாகப் புதுப்பிக்கப்பட்ட அடுக்களைக்குள் நுழைந்தாள், ராதா.

“ம்…எத்தனை முறைதான் சொல்றது? ஏன் எனக்கு இப்படி ஓர் அம்மா? என் தோழிக்கெல்லாம் இப்படியா? ச்சே….” மனம் வெதும்பி வெறுப்பில் வெந்து போனாள், சித்னா.

சித்னாவுக்கு இது முதன் முறையோ இரண்டாம் முறையோ அல்ல. சிறுவயதிலிருந்து கேட்டுக் கேட்டுப் பழகிப்போனதுதான். எனினும் மனித முயற்சி எப்போதுமே பின்வாங்காது என்பதற்கேற்ப மீண்டும் மீண்டும் அம்மாவை மாற்ற முயல்வாள்; தான் பத்தரை மாற்றுத் தங்கம் என்பதைப் புரியவைக்க முயல்வாள்; முயன்று கொண்டே இருக்கிறாள். அப்படி என்னதான் கேட்டாள், அவள்? கூறப்போனால் உப்புப் பெறாத விஷயம்தான்.

வரும் செப்டம்பர் விடுமுறையில் உயர்நிலை நான்கு விரைவு வகுப்பில் படிக்கும் அவளது வகுப்புத் தோழர்கள் அனைவரும் ஆறுநாள் பயணமாக ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறார்கள். அதில் தானும் சேர விரும்புகிறாள், சித்னா. ஆனால், ஏனோ இந்த அம்மா முட்டுக்கட்டையாக நிற்கிறார்.

“அம்மா, நான் வளர்ந்த பெண். அது மட்டும் இல்ல; நீங்க எப்படி இருக்கணும்னு நினைச்சு வளர்த்தீங்களோ அப்படியேதான் நான் இருக்கேன். பாருங்க…நீங்க வீட்டில் ‘ஷார்ட்ஸோ” டீ-ஷர்ட்’டோ போடக்கூடாதுன்னு சொன்னீங்க… அதேபோல் கழுத்துலருந்து கால் வரைக்கும் மூடின ‘டிரெஸ’தான் போட்டிருக்கேன். முன்னுக்கும் வெட்டக்கூடாது, பின்னுக்கும் தலையை ரொம்பக் கட்டையா வெட்டக்கூடாதுன்னீங்க. அதேபோல ஒரு ‘குட்டி’க்குடுமி போடுற மாதிரி வெட்டி, மத்தப் பிள்ளைங்க, ‘பூலி’ பண்ணாதபடி வெட்டி, கட்டி இருக்கேன். ‘ஃபேஷியல்’, புருவத்தை அழகுபடுத்துற ‘த்ரெடிங்- அதுமாதிரி எதுக்கும் போகவேண்டாம்னீங்க. ஆம்பிளைங்களோடு கண்டபடி பேசிச் சுத்தக்கூடாதுன்னு நீங்க இலை மறை காயா சொன்னதை இந்த நிமிஷம் வரை நான் மீறாம் இருக்கேன். இனிமேலும் அப்படித்தான். படிப்புல, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என எல்லாத்துலயும் நான் பள்ளியில முதல் ஆளா வர்றேன்’ என்று மனத்துக்குள் தெரிந்த அம்மாவிடம் கூறியவள், “எம்மேல இன்னும் நம்பிக்கையில்லையா? அம்மா நான் உங்கள ஏமாத்தமாட்டேல்மா! மாதம் பத்து சுமந்தவங்கங்கிறதை மறக்கமாட்டேம்மா!” என்று நேரில் தெரிந்த அம்மாவிடம் சத்தமாகக் கூறினாள்.

அதைச் சற்றும் எதிர்பாராத ராதா, கையிலிருந்த கத்தரிக்காயை மேசை மீது வைத்துவிட்டு, ஒருகணம் வானமே உச்சி மீது விழுந்துவிட்டதோ என நினைத்து, மறுகணம் சுதாரித்தாள். பதிலுக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல், “அல்லாமா! சோறு பொங்கிடுச்சே!” என்று அடுப்பிலிருந்த சோற்றின் மீது கவனத்தைத் திருப்பியவள், “ப்பாடா! அடுப்புல ரொம்பப் படல!” என்று ஆயாச மூச்சு வாங்கியபடி மகளைப் பார்த்தாள். அப்படியே மகளின் கருத்துக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளியானாள்.

அன்று பிற்பகலில், வேலை முடிந்து வந்த கணவனுடன் பேசும்போது, “ஏங்க…நம்ம மக என்னை நம்பிக்கையில்லாதவன்னுட்டாங்க….நான் என்ன அப்படிப்பட்டவளா? இதுவரைக்கும் எத்தனை முறை எம்மனசுல அந்தக்கேள்வி வந்திருக்கும்னு எனக்கே தெரியல… அதே நினைப்பாதான் இருக்கு…” என்று கூற,

“ஆமா…நீயும் ஏன் இப்படி அந்தப் பிள்ளைங்க மேல எரிஞ்சு விழறே? நீ இந்தியாவிலிருந்து வந்தவன்னாலும் இன்னிக்கு நாம இருக்கிறது சிங்கப்பூர்ங்கிறதை மறந்திடாதே. நமக்கு இங்க ஒட்டு உறவுன்னு ஏதும் இல்லைன்னாலும் நல்ல பிள்ளைகள், அன்பான ஆபத்தில் உதவும் நண்பர்கள் எல்லாம் இருக்காங்க. நம்ம மகளும் மகனும் என்ன தப்பு பண்றாங்க? பாசத்தைக் கொட்டிச் சந்தோசமா இருக்காம…” என்று இழுத்தார், ராமு.

“நான் என்ன அவங்கமேல பாசமில்லாமயா இருக்கேன். தவமா தவமிருந்து பெத்தெடுத்த புத்திர செல்வங்களாச்சே! இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற, அவங்களை வயித்துல சொமந்த ஒம்பது மாசமும் படிச்ச சுலோகம் என்ன? கந்த சஷ்டிக் கவசம் என்ன? புத்தகங்கள் என்ன? பாத்த தெய்வப்படங்கள்தான் என்ன? இப்படியிருக்க நான் என்ன அவங்கள் வெறுத்திட்டா இருக்கேன்? ஏனோ என் மகள் ஒருநாள் இன்னொரு வீட்டுக்கனுப்பயில விட்டுப் பிரியப் போறோமேங்கிற கவலையில் இப்ப அவளக் கீழே கடைக்குக்கூட அனுப்பவோ, அஞ்சு நிமிசம் பிரியவோ மனசு எடந்தரல; மகனும் அப்படித்தான்! இப்ப நல்லா வளத்தா நாளைக்கு அவனுக்கு வரப்போறவ நம்மள வாழ்த்துவா! நாமளும் அவங்கள் வாழ வச்சுப் பார்த்து சந்தோசப்படலாம்! இன்னிக்கு அவன் இஷ்டத்துக்கு விட்டுட்டா, பிற்காலத்துல அவன் குடும்பம்தானே அல்லாடப்போவுது…” என்று தன் பங்குக்குத் தானும் இழுத்தாள்.

‘அதுசரி! அதைக் கொஞ்சம் அன்பா சொல்லு பிள்ள!” என்றவரிடம், “அன்பா சொன்னா கேப்பாங்களோன்ற பயத்தால தான் கொஞ்சம் அதிகாரமாகப் பேசுறேன்” என்றவள், திடீரென, “ஏங்….க… தலை…யைச் சுத்து….துங்க!” என்று ஈனக்குரலில் கூற சுத்தியால் மண்டையில் அடிபட்டவர்போல ராமு, உடனே உடனே எழுந்து மனைவியைத் தாங்கிப் பிடித்து தலையணைகளை முதுகுக்கு அணை கொடுத்து உட்கார வைத்தார். பக்கதிலிருந்த கோப்பை நீரை அவளுக்குத் தந்தார். மூலையில் நின்று கொண்டிருந்த மின்விசிறியை, சற்றுப் பக்கத்தில் அழைத்து வந்து மனைவிக்கு நேரே காற்றை வீசச் செய்தார். எல்லாம் முடிந்து இரத்தக் கொதிப்புக்கு இலக்கான மனைவியின் உடலுக்குத் திடீர் ‘ஆபத்து’ ஏதும் இல்லை என்று உறுதியாய் அறிந்தவர், மீண்டும் படுக்கையில் விழுமுன்பு, ஓரத்தில் இருந்த இண்டர்காம், மெதுவாக “ட்ரிங்…ட்ரிங்” என குருவி கத்துவதுபோல் கத்தியது.

எடுத்தவர், “என்ன தீபன்! இன்னைக்கா?” என்றார். தன் சுருதியைக் குறைத்தபடி, ‘உனக்குத்தான் தெரியுமே!” என்றபடி அறைக்கு வெளியே வந்து, “ஏழே முக்காலுக்குள்ள?… முடியுமா…கேனா?” என்று ஆங்கிலத்திலும் கேட்டவர், அதற்கான பதிலைப் பெறுமுன், “என்ன…லேட்டாகுமா? இன்னிக்கு அவனுக்குப் பிடிச்ச கலந்த சோறு செஞ்சிருக்கேன். சீக்கிரம் வரச்சொல்லுங்க; எல்லாரும் சேந்து சாப்பிடுவோம்” என்ற குரல் கேட்டு, மனைவியைப் பார்த்தவர் மகனுக்காகவும் சேர்த்து வருத்தப்பட்டார். இதற்கிடையில் அம்மாவின் குரலையும் கேட்ட மகன், “சரிப்பா!” என்று மறுமுனையிலிருந்து பதில் தர, “ஓகே!” என ரிசீவரை வைத்தார், ராமு.

“உனக்கென்ன கடவுள் உடம்பெல்லாம் காதுகளைக் குடுத்துருக்காரா?” என்று மனைவியைப் பார்த்து மனத்துக்குள் எண்ணியவர்க்கு ஏதும் பதில்தராது பெருமழை பெய்து ஓய்ந்த வானம்போலச் சலனமின்றிக் கண்மூடி மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள். ‘மெட்டர்னல் இன்ஸ்டிங்க்ட்ஸ்’ என்னு சொல்லப்படுவது சற்றுமுன் பேசிய அவளது கூரான அன்னை மனத்தின் தாய்மை உணர்வுகள்தாமோ?” என்று தனக்குள் கேட்டபடி ஓய்வெடுக்க முனைந்தார்.

சித்னாவும் தீபனும் ராமு தம்பதியரின் நெடுநாள் உழைப்புக்குப் பலனாய், இறைவனால் சோதனைக்குழாய் மூலம் அனுப்பப்பட்ட செல்வக்குழந்தைகள். அதனாலோ என்னவோ அவர்களை அவள் ஒரு வினாடிகூடத் தன் மனத்திரையில் இருந்து விலக்காமல் இருந்தாள்.

தான் பட்ட பாட்டுக்குத் தெய்வம் நற்குணத்துடன் கூடிய பிள்ளைகளைப் பரிசாகத் தந்ததை எண்ணிப் பெரிதும் பெருமைப்பட்டாள். ஆனால், ஏனோ தன் பாசத்தையும் நேசத்தையும் பிள்ளைகள் முன் தேனாய் வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கிறாள். மற்றவர்களிடம் அவள் அப்படியில்லை.

அன்றைக்குக் கூடச் சந்தையில் தன் தோழி மீனாவிடம், “ஹேய்! எனக்கு எம்பிள்ளைங்க மேல ரொம்பப் பாசமும் பெருமையும் அதிகம். தங்களால முடிஞ்ச வரைக்கும் குணத்துல தங்கமாவும் படிப்புல வைரமாவும் இருக்காங்க. நல்லபடி வாழ்க்கையில், ‘செட்டில்’ ஆயிட்டாங்கன்னா நான் அதுக்கப்புறம் ரொம்பரொம்ப சந்தோஷமா இருப்பேன்!” என்றவள், ‘என் அருமைச் செல்வங்கள்’ என்ற தலைப்பில் தமிழ் நாளிதழ் ஒன்று, குழந்தைகள் தினத்துக்காக நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசாக இரு விமானப் பயணச் சீட்டுகளைப் பிள்ளைகளுக்கு வாங்கித் தந்ததையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.

இப்படிப்பட்டவளா கோபப்படுகிறாள்? இது அவளது வீட்டிலுள்ள மற்ற மூவருக்கும் புரியாத புதிராக இருந்தது.

மாலை நேரம் வந்ததும் தம்பதியர் எழுந்து தத்தம் இறைப்பணிகளைச் செய்தனர். இரவு ஏழானதும், மகனுக்கெனச் சமைத்த புளி, தயிர், தேங்காய், பொங்கல் சோற்றுவகைகளுடன், ‘ஃப்ரைட் ரைஸை’யும் சூடுசெய்து அழகழகான ‘போர்ஸ்லெய்ன்’ பாத்திரங்களில் வைத்துவிட்டுத் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்தவள், பிள்ளைகளின் சிறுவயது வீடியோப் பதிவுப் படங்களைப் போட்டுப் பார்த்தாள். அவர்களது குறும்புகளில், அழகில் தன்னைப் பறிகொடுத்தவள், ‘தாய் கண்தான் பொல்லாத கண்” என்பதை எண்ணி, ‘டச்வுட்’ என்றாள். அத்துடன் அடுத்தமாதம் இந்தோனீசியாவின் பாலியில் உள்ள தன் அக்கா மகனின் திருமணத்துக்குச் செல்வதைப் பற்றியும் சிந்தித்தாள்.

“இந்தப் புள்ளைங்கள் எப்டி வுட்டுட்டுப் போகப்போறேனோ? இதுவரை இப்புடி விட்டுட்டுப் போனதேயில்லையே! கூட்டிட்டுப் போகலாம்னா ‘ஓ’ லெவல் படிக்கும் சித்னாவுக்கும் பரீட்சை! ஜூனியர் காலேஸ் படிக்கும் தீபனுக்கும் கடைசிப் பரீட்சை! என்ன செய்ய? அதுக்காக அக்காமகன் கல்யாணத்தையா ஒத்திப்போட முடியும்?” யோசித்துப் பார்த்தவள், கணவனை வீட்டிலிருக்கச் சொல்லலாம் என நினைத்தாள்.

மகனுக்கும் மகளுக்கும் அம்மாவின் பயண விஷயம் தெரிந்தது முதல் குதூகலம்தான் என்றாலும் அந்தத் திருநாளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏனெனில் பாசத்தை ஊற்றாய் வெளிப்படுத்தும் அப்பாவின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டு, தினமும் ஓர் இரண்டு மணிநேரம் ‘விண்டோ ஷாப்பிங்’கைத் தோழர் தோழிகளுடன் செய்துவிட்டு வரலாமே என்பதால்தான்.

ராமுவுக்கும் அந்தச் செய்தியைக் கேட்டதும், அன்றொரு நாள் முழுதும் வியப்பாகத்தான் இருந்தது. “என்ன…நீயா? அதுவும் எங்களவிட்டுட்டு….. எப்படி மனசுவந்தது? உங்கம்மா இறந்ததுக்குக்கூட போகமாட்டேன்னியே!ம்…. இன்னைக்குப் பொத்துகிட்டு மழைவரப் போவுது….. எப்படித்தான் பெரியம்மாவுக்கு மனசு வந்ததோ தெரியல…” என்றவர், கண்ணாடியை முன்மூக்கில் இறக்கிவிட்டுவிட்டுப் பார்த்தார். அவருக்கு அவளும் அவளுக்கு அவரும் பத்துப்பதினைந்து வயது குறைந்தவர்களாத் தோற்றமளித்தனர். புன்னகையை வெளிக்காட்டியபடி, “ஏன்….நம்ப முடியவில்லையா?” என்றபடி ஓடிவிட்டாள் ராதா, தன் அழகிய அடுக்களைக்குள்.

சித்னா அம்மா செல்லும் நாள் மிக அருகில் வந்ததை எண்ணிப் பூரித்துப் போனாள். கவிஞர் ஷெல்லியின் புரட்சிநாயகியான சித்னாவின் பெயரைக் கொண்ட இவளும் அம்மாவுக்கு வாங்கித்தர அழகிய கைப்பையை மெட்ரோவில் தேடி, முடிவில் வாங்கிவிட்டாள். பைக்குத் துணையாக, ஒரு ‘லேன்கோம்’ வாசனைத்திரவிய பாட்டிலையும் வாங்கினாள்.

அம்மா செல்லும் சனிக்கிழமையும் வந்தது. விமான நிலையத்தில் அம்மாவிடம் தன் பரிசுப்பொருள்களை அன்பு முத்தத்துடன் தந்த சித்னாவையும் மஞ்சள் மைசூர்ப்பட்டில் மணமகளாய் நின்ற தாயையும் தீபன் பேசி வைத்தபடி படமெடுக்க மகிழ்ச்சியை மொத்தமாய்க் காட்டாது அளவோடு தவணையில் வெளிக்காட்டினார் அம்மா!

எல்லாம் முடிந்து வீடு வந்தாயிற்று. உறங்கி விழித்து வேகவேகமாக மறுநாளும் ஆயிற்று. சித்னாவும் தீபனும் வீட்டைக்கூட்டிவிட்டு, காலை காலை நேரத்தில் பசியாற இட்லி, சட்னி செய்துவிட்டு, மதியச்சமையலுக்கு சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல் செய்துவிட்டுக் கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தபோது, மணி பத்தரை. அம்மாவின் வீட்டுவேலைப் பயிற்சிகளில் தேர்ச்சிபெற்ற இருவரும் பாதாம் பாயசம் செய்ய முடிவெடுத்தனர்.

“ஏய், ஜவ்வரிசியை நிறைய போடு; பாதாமை விழுதாய் அரைச்சு விடு! என்ன?” என்ற தீபனிடம், “நான் என்ன கஞ்சமா? நீயுந்தானே செய்யுற! இன்னிக்கு நீயே செய் பாக்கலாம்!” என்ற சித்னாவின் பதில் நன்றாகவே வேலை செய்தது.

இத்தனையையும் கூடத்தில் அமர்ந்து அமர்ந்து செய்தித்தாள் வாசித்தபடி தன் தூரத்துப்பார்வையால் தெரிந்து கொண்டிருந்தார், அப்பா. ஒரு பக்கம் அவருக்கும் பெருமைதான்.

பாதாமை அரைத்துச் சேமியாவை வறுத்து வேகவைத்த ஜவ்வரிசியில் போட்டு, முன்பே பொரித்து வைத்த முந்திரி, திராட்சையுடன் பொடித்து வைத்த ஏலத்தைப் போட்டாள். அங்கிருந்த டவுண்பாண்டானையும் போட்டுவிட்டு, “ம்….ஜம்முனு இருக்கு!” என்று பாராட்டிய தீபனும் சித்னாவும் வாசத்தை நன்கு முகர்ந்து பெருமூச்சு விட்டப்படி, பாலை ஊற்றினர். அடுப்பின் நெருப்பு மிகக் குறைந்த வேகத்தில்தானே உள்ளது என்ற அதீத நம்பிக்கையுடன் பக்கத்திலிருந்த ‘காபினெட்’ மேற்பகுதிகளைச் சுத்தம் செய்வதில் முனைப்புக் காட்டினர்.

ஒரு நிமிடம் போனதுதான் மிச்சம். சுறுசுறுவென்ற சத்தத்துடன் பால் பொங்கிட, ஏலம், பாண்டான் இலையின் வாசம் பாதாமை மிஞ்சியபடி அடுப்பெங்கும் வெளிக்கொட்டிப் பரவிட, ‘ச்சுச்சூ’ என்று இருவரும் கவலையில் கத்த, “கொஞ்சமாவது அறிவிருக்கா? ரொம்பத் தெம்மாங்கு! அதுதான் எவ்வளவு காசை வீணடிக்கிறீங்க? எதையும் யோசித்துச் செய்யுங்க!” என்ற கர்ஜனைக் குரலைக் கேட்டுக் கூடத்தைப் பார்க்காமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் ஆழமாய் நோக்கினர். அப்பா தன் அறைக்குள் போனார். “இது நம் அன்பான அப்பாவா? அம்மா போனதும் மற்றோர் அதிகாரக் குரலா? புரிந்துகொள்ள முடியாத பயம், வியப்பு, சந்தேகம் ஆகியவற்றுடன், ‘இது உண்மையா பொய்யா?’ என இரண்டு ஜோடிக் கண்களும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டன.

தன் உள்ளிருக்கும் ஈரச்சோற்றைக் கவனமாய்ப் பாதுகாக்கக் கற்றாழையின் மற்றொரு முள் நிமிர்ந்து நின்றது அவர்களுக்குப் புரிய நியாயமில்லை!

– தமிழ் முரசு, 8.3.1998, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *