அந்த அரங்கத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி உட்கார இடமில்லாமல் கதவோரங்களிலும் இரசிகர்கள் நின்று கொண்டிருந்தனர், கயல்விழியின் நாட்டியத்தை காண. கயல்விழியின் நாட்டியம் சற்று நேரத்தில் தொடங்கப்படும் என்று தற்பொழுதுதான் அறிவித்து சென்றார் மேடையில் ஒருவர்.
மேடையின் உள்புறம் கயல்விழி நாட்டிய உடையில் தயாராய் இருந்தாலும் மனம் மட்டும் அவள் வசம் இல்லை. அது அவள் முகத்திலும் தெரிந்தது. கோபத்தில் சிவந்து கன்னிப்போய் சிடு சிடுவென இருந்தது. பக்கத்தில் இருந்த அலங்காரம் செய்யும் பெண்மனி என்ன “கயல்” நெர்வசா இருக்கியா? சட்டென தன்னை சமாளித்துக்கொண்டாள் சே..அதெல்லாம் ஒண்ணுமில்லை..
மனம் மட்டும் அவள் கணவனை திட்டிக்கொண்டிருந்தது. சே..என்ன சொல்லிவிட்டான் இனிமேல் ஆடக் கூடாதாம். இந்த ஆட்டத்தை இரசிக்க வந்துதானே என்னை வளைத்துக் கொண்டான், இப்பொழுது என் ஆட்டம் கசக்கிறதா?
மேடையில் கயல்விழி தற்பொழுது நாட்டியமாட தங்கள் முன் தோன்றுவார்..அறிவிப்பு அவளை தயார்ப்படுத்தியது கணவன் நினைவை உதறி நாட்டியத்துக்கு தயாரானாள்.
பாடல் : பாரதியார் ராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி..
அறிப்புடன் பாடல் அறிமுகப்படுத்தப்பட
பச்சைக் குழந்தை யடி- கண்ணிற்
பாவை யடி சந்திரமதி !
நாட்டியத்தின் மூலம் வரிக்கு வர்ணனை செய்து இரசிகர்களுக்கு விருந்து படைக்க ஆரம்பித்தாள்..ஆனால் பாட்டை விட அவள் மனம் .. சே என்னை போய் என்ன சொல்லி விட்டான், நீ இனிமேல் ஆட போக்க்கூடாதென்று சொல்லி விட்டானே நினைவுகள் !…..
இச்சைக் கினிய மது –எனறன்
இரு விழிக்குத் தேநிலவு ;
நச்சுதலை பாம்புக் குள்ளே –நல்ல
நாகமணி யுள்ள தென்பார் ;
ஆம் குமார் நச்சு தலைப்பாம்பாகிவிட்டான், இதற்கும் இவன் கர்நாடக பாடகன் வேறு. யாரோ அவன் மனதை களைத்து போட்டிருக்கிறார்கள், இல்லை என் மீது இரசிகர்கள் கொள்ளும் பாசம் அவனுக்கு பொறாமையாக கூட மாறியிருக்கலாம், முதன் முதல் அவன் காதலை சொன்ன நாள் அவன் மறந்திருக்கலாம், நான் மறக்க முடியுமா?
துச்சப்படு நெஞ்சினிலே-நின்றன்
சோதி வளருதடீ !
ஆம் நான் அவன் சொன்னதை பற்றி கவலைப்பட போவதில்லை. அவனுக்கு வாரிசு வேண்டுமாம், கல்யாணமாகி இரண்டு வருடங்கள்தானே ஆகிறது. இன்னும் ஒரு வருடமாவது என் நாட்டியத்தில் இன்னும் புகழ் பெற வேண்டாமா? அதற்குள் என்ன அவசரம்? முதலில் அவன் காதலை சொன்ன அன்று என்ன சொன்னான்?
அன்று நாட்டியம் முடிந்து இவன் மட்டுமே அந்த அரங்கத்தில் கடைசி ஆளாய் உட்கார்ந்திருந்தானே. மிகப்பெரிய கர்நாடக பாடகர் தனியாக அதுவும் நான் ஆடிய அரங்கத்தில் தனியாக உட்கார்ந்திருப்பதா? ஓடோடி சென்றார்களே அரங்க நிர்வாகிகள், அதற்கு அவன் என்ன சொன்னான்? கயல்விழியிடம் பேச முடியுமா? அதற்கென்ன அவரை கூட்டி வந்து என் அறைக்குள் விட்டு விட்டனரே? எனக்கோ வெட்கம், கூச்சம் மிகப்பெரிய பாடகர், அழகன் வேறு? இரண்டு நிமிடங்கள் பேசாமல் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன், நான் அவன் முன்னால் தலை குனிந்து நின்றாலும் அவ்வப்பொழுது தலை நிமிர்ந்து அவனை இரசித்துக் கொண்டுதான் இருந்தேன்.
கயல் விழி ! ஆ..என்ன குரல்..அப்படியே காற்றில் மிதந்து தவழ்ந்து என் காதில் உரச மயக்கத்தில் இருந்த நான் நிமிர முடியாமல் அவனை பார்த்தேன். கயல்விழி கொஞ்சம் நிமிர்ந்து பார், உன் நாட்டியம் என்னை பிரமிப்பு அடைய செய்து விட்டது. இது வரை திருமணத்தை பற்றிய எண்ணமில்லாமல் இருந்த எனக்கு உன்னை மணந்து கொண்டால் கட்டாயம் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. உன் விருப்பம் என்னவென்று சொல், அதன் பின்னர் உனது தாய் தந்தையரிடம் பெற்றோர்களை விட்டு பேச சொல்லுகிறேன்/
பேச்சுக்கிட மேதடி – நீ
பெண்குலத்தின் வெற்றி யடி !
ஆச்சர்ய மாயை யடி-என்றன்
ஆசைக் குமரியடி !
நான்… எனக்கு…… திக்கு திணறிய என்னை உற்றுப்பார்த்தவன் சொல் உனக்கு ? இன்னும் இரண்டு மூணு வருசமாவது நாட்டியம் ஆடணும், அதுவரைக்கும் கல்யாணம்…இழுத்த என்னை அருகில் வந்து அன்புடன் தோளை தொட்டவன்.தாராளமாய் கல்யாணத்துக்கு அப்புறம் நீ நாட்டியம் ஆடலாம், இது என்னோட உறுதி மொழி போதுமா? இது போதும் இதற்குமேல் இந்த அழகனிடம் என்ன எதிர்பார்க்கப்போகிறேன்?
நீச்சு நிலை கடந்த- வெள்ள
நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
தேவி, நினைவு இழந் தேனடி !
இதுதான் காதல் வாழ்க்கையா? என்னை தரையில் நடக்க விடாமல் தாங்கினானே, நேற்று வரை என் நாட்டியத்தில் முதலாய் வந்து உட்கார்ந்து பத்திர்மாய் வீடு சேர்த்து, ஒரு தோழனாய் இருந்தவன் இன்று காலையில் மாலை நாட்டியம் இருக்கிறது சொன்னவுடன் திடீரென எதற்கு நாட்டியம் எல்லாம்? கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடு என்று கத்தினான்? நான் அவன் முகத்தை முறைத்து பார்க்க அருகில் வந்து கண்ணம்மா..புரிஞ்சுக்கடா, நமக்குன்னு வாரிசு ஒண்ணு வேணும்டா, அதுக்கு உனக்கு நாட்டியமெல்லாம் ஒத்துக்காது, சொன்னவன் கையை உதறி கோபித்துக்கொண்டு வந்து விட்டேனே. இனி அவன் முகத்தை எப்படி பார்ப்பேன்?
நீலக்கடலினிலே-நின்றன்
நீண்ட குழல் தோன்றுதடி !
கோல மதியினிலே நின்றன்
குளிர்ந்த முகங் காணுதடி !
எனக்கு மட்டும் குழந்தை பெற்று வளர்த்த ஆசையில்லையா என்ன? அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும் என்றுதானே சொல்கிறேன். எனக்கு அவ்வப்பொழுது உடல் தளர்ச்சியாகி மயக்கமாய் விழுந்து விடுவதாக சாக்காடு சொல்கிறான். இரண்டு முறையோ மூணு முறையோ இது நடந்துச்சு, ஏன் இவனை கல்யாணம் பண்ணறதுக்கு முன்னாடியே இரண்டு முறை இப்படி மயக்கம் வந்திருக்கே, அதுக்கப்புறம் நல்லாத்தான் எந்திரிச்சு ஆடிக்கிட்டு இருக்கேன்
ஞால வெளியினி லே –நின்றன்
ஞான வொளி வீசுதடி !
கால நடையினிலே – நின்றன்
காதல் விளங்குதடி !
பச்சைக் குழந்தை யடி-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி !
ஐயோ ! இதென்ன தலை சுற்றுகிறதே? குமார், குமார்? எங்கிருக்கறே? யாரோ முன் வரிசையில் இருந்து எழுந்தோடி வருவது போல தெரிகிறதே? குமார்தானா? ஆமா குமார்தான் இது போதும்..ஓடி வந்து தாங்கிய குமாரின் மேல் விழுகிறாள்..
சாரி குமார் நீங்க கயல்விழிக்கிட்டே முதல்லயே சொல்லியிருக்கணும், அவளோட இருதயம் ரொம்ப வீக்கா இருக்குன்னு.
எப்படி சொல்ல முடியும் டாக்டர், அப்புறம் தன்னை நோயாளியாவே “பீல்” பண்ன ஆரம்பிச்சிடுவா.. இரண்டு மூணு வருசம் ஓய்வு எடுத்தான்னா கூட போதும், தேத்திடலாம்.. ஆனா அதை எப்படி இவளுக்கு புரிய வைக்கிறது. குழந்தை வேணுமின்னு கூட சொல்லி பார்த்தேன், ஒத்துக்க மாட்டேங்கறா…
இனி அவங்க விட்டே மறைக்க வேண்டாம், கொஞ்சம் அமைதியா சொல்லி புரிய வைக்கலாம்.
அதற்குள் குமாரின் அம்மா ஓடி வந்து சாரி டாக்டர்…அங்க அவ “குமார்” உன் பேச்சை கேட்காம போயிட்டேன் அப்படீன்னு புலம்பிகிட்டு இருக்கா…கொஞ்சம் வந்து சமாதானப்படுத்து…குமார் டாக்டர் முகத்தை பார்க்க..”போ” என்று தலையசைப்பின் மூலம் அவனை அனுப்பினார்.