இரகசியங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 1,839 
 

(2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பெரிய ஆட்கள் கதைக்கின்ற இடத்திலை சின்னப் பிள்ளைகள் இருக்கக் கூடாது என்று எத்தனை தரம் சொல்லியிருக்கிறன்.!”

அம்மா அடிக்கடி கூறி என்னை எச்சரிக்கிற வார்த்தை தான் அது. நல்ல சுவாரசியமான கதை போய்க் கொண்டிருக்கையிலை, அம்மா என்னை இடைமறித்து துரத்தி விட்டால் எனக்கு கோபம் ஏற்படாதா?.

அப்பாவென்றால் ஒரு நாளும் அப்படிச் செய்யமாட்டார். அப்பா நல்லவர்.

மற்றது… எனக்கும் இப்ப லேசுப்பட்ட வயதில்லை . பதினாறு முடிஞ்சது மட்டுமன்றி ‘ஓ எல்’ எழுதி விட்டேன்.

சில வருடங்களுக்கு முன்னர் அம்மாவே. “கௌதமி பெரிதாகி விட்டா!” என்று ஊர் பூரா சொல்லி எனக்கு பூப்புனித நீராட்டு விழாவும் எடுத்தா. நான் நினைத்தேன்….இனி நானும் பெரிய ஆள்தான் என்று!

ஆனால் அதற்கு பிறகுதான் ஆட்களுக்கு மத்தியில் என்னை இருக்க விடாமல் துரத்தும் அம்மாவின் செய்கை உச்சக் கட்டத்தை அடைந்தது.

பாடசாலையிலும் சில அம்மாமார் இருக்கினம். அவை ஏ.எல்.ல் தான் அதிகம். “சின்னப்பிள்ளைகள் நீங்கள் எங்கட கதைகளைக் கேட்டு படிப்பைக் கோட்டை விடாமல் அங்காலை போங்கோ பார்ப்பம்.”

எனக்கு பத்திக் கொண்டு வரும். அம்மாவின் வாயிலிருந்து அடிக்கடி ஒரு வார்த்தை வரும். நான் மனதுக்கை அதைச் சொல்லித் தான் அவையளை ஏசுகிறனான்.

‘பிஞ்சிலை பழுத்ததுகள்!’

வனஜா அன்ரி மாலையானதும் எங்களுடைய வீட்டுக்கு வந்து விடுவா, அந்த அன்ரி தன்னுடைய கஷ்டங்களை அழுதழுது அம்மாவுக்குச் சொல்லுவா. நானும் நல்ல வடிவாக கேட்டுக் கொண்டிருப்பன். ஒரு கட்டத்திலை அம்மா நான் எங்கிருக்கிறன் எண்டு பார்வையாலை ஒரு துளாவு துளாவுவா! எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போகும்.

“பெரிய ஆட்கள் கதைக்கிற இடத்திலை….” என்று தொடங்கி இழுத்துக் கொண்டே வலது கையைத் தூக்கி ஆட்காட்டி விரலை ஆட்டிக் காட்டுவா….

நான் மெல்ல நழுவி எனது அறைக்குப் போய் நிலைக் கண்ணாடியின் முன் நின்று முகத்தைச் சுழித்து அம்மாவுக்கு நையாண்டி காட்டுவேன். அப்போ எனது கோபம் கொஞ்சம் குறையும். நான் வடிவு என்ற எண்ணம் வரும். எனது பெரிய கண்களை கண்ணாடியில் உருட்டி முழித்துப் பார்ப்பேன். நாக்குச் சிவப்பை நீட்டிப் பார்ப்பேன். இரு கைகளையும் தோளுக்கு சமாந்தரமாக நீட்டி தோள்கள் ஆடாமல் கழுத்துடன் சிரசை ஆட்டிப் பார்ப்பேன்.

வனஜா அன்ரியுடைய கதையைக் கேட்டால் எனக்கு ‘ரீ. வீ” நாடகம் பார்ப்பது போல இருக்கும். என்னதான் அம்மா எனக்கு ஓட்டம் காட்டினாலும் நான் வனஜா அன்ரியின் கதைகளைக் கேட்காமல் இருக்க மாட்டேன்.

வனஜா அன்ரிக்கு அண்மையில் தான் விவாகமாகியிருந்தது. அங்கிள் வெளிநாடு போயிட்டதுடன். அன்ரியையும் அங்கு அழைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். அன்ரிக்கு அங்கிளிடம் போய்விட வேண்டும் என்ற அவசரம். ஆனால் தனியாக பிரயாணம் போக வேண்டியிருப்பது அவாவுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.

அன்ரி அழகாக இருப்பா. எலுமிச்சை பழநிறம். அம்மாவைப் போல அல்லாமல் சதைப்பிடிப்புடன் இருப்பா!

கொஞ்ச நாளைக்கு முன்னர் தான் வெளிநாடு போய் விடுவதற்காக அவா புறப்பட்டிருந்தா: இடையில் ஒரு நாட்டில் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து ஒரு ஹோட்டலில்’ மேலும் சில பெண்களுடன் தங்கியிருந்தா. எல்லா ஒழுங்குகளும் இங்கு தலைநகரில் ஒரு ஏஜன்சி’ மூலமாக நிறைவேற்றப் பட்டிருந்தது. அவன் மற்றொரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்து அவர்களை அந்தந்த நாட்டுக்கு களவாக அனுப்பும் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான். அவனுடைய உதவியாள் அடிக்கடி வந்து

அவர்களுடைய தேவைகளைக் கவனிப்பான். இடையில் அவர்களில் ஒருத்திக்கு பயண ஒழுங்கு சரிவந்து விட்டதாக கூறி ‘ஏஜன்சியிடம்’ அழைத்துச் செல்வான். அவளை சில தினங்கள் காணக் கிடைக்காது.! திடீரென்று வருவாள். தனக்கு எல்லாம் ‘ஓகே’ என்று கூறி பயண பெட்டிகளை எடுத்துச் சென்று விடுவாள். பெண்களுள் ஒரு ‘கசமுச’ பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் எவரும் தமது பயணத்தை தடங்கல் படுத்திக் கொள்ளவில்லை!

வனஜா அன்ரியும் இன்னுமொரு பெண்ணும் மட்டும் தங்களை அழைக்க வந்த உதவியாளிடம் “நாங்கள் ‘ஏஜென்சியிடம் வருவதென்றால் இருவருமாக சேர்ந்தே வருவோம். தனியே வரமாட்டோம்.” என்று அடித்துக் கூறி விட்டார்கள்.

இதனால் அன்ரி எமது நாட்டுக்கே திரும்பி வர நேரிட்டது. அங்கிளுக்கு கடிதம் எழுதினா…

‘நான் கற்புடன் உங்களிடம் வந்து சேரவேண்டுமாயின் நீங்களே என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள்.’

அங்கிள் அந்தக் கடிதத்தை தொப்பென்று போட்டு விட்டு இருந்த மாதிரி மௌனம் சாதித்தார்…

அன்ரிக்கு அங்கிளுடன் போய்ச்சேர அவசரம்! அம்மாவிடம் கதை கதையாக சொல்லி அழுவா. அம்மா அன்ரியை தனது தங்கையைப் போலவே ஆதரித்து அனுதாபம் காட்டினா.

தானுண்டு தனது வேலையுண்டு என இருந்த அப்பாவுக்கு தொந்தரவு கொடுத்து அன்ரியை தலைநகர் அழைத்துச் சென்று புதிதாக பயண ஏற்பாட்டைச் செய்யத் துாண்டினாள்.

தொடக்கத்தில் அப்பாவும் அன்ரியும் ஓரிரு நாட்கள் தலைநகரில் தங்கியிருந்து பயண முயற்சிகளை மேற்கொண்டனர். அடுத்தடுத்த தடவைகளில் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. பயணம் மட்டும் சரிவரவில்லை .

அம்மாவுக்கு கவலையு டன் சலிப்பும் ஏற்படத் தொடங்கியது. ஆனால் வனஜா அன்ரிமேல் வைத்த அன்பு மட்டும் அவாவுக்கு குறையவில்லை.

அப்பாவும் அன்ரியும் பயணத்தால் திரும்பும் நாட்களில் அன்ரி களைத்திருப்பாள் அவள் குளிப்பதற்கு அம்மா சுடுநீர் வைத்துக் கொடுப்பாள்.

தனது கற்பு நெறியிலிருந்து பிறழக் கூடாது என்பதற்காகவே வெளிநாடு போய் கணவனுடன் இணையும் சந்தர்ப்பத்தை வனஜா அன்ரி தூக்கி எறிந்து விட்டு நாடு திரும்பி விட்டமை அம்மாவுக்கு அவள் மேல் உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

அம்மா என்னதான் என்னை “பெரிய ஆட்கள் கதைக்கிற இடத்திலை நில்லாதை நில்லாதை” என்று எச்சரித்தாலும் நான் ஊடுருவக்கூடிய இடங்களை முற்றாக தடை செய்ய மட்டும் அவாவால் முடியாமல் இருந்தது.

எனக்கு எனனென்ன கதைகள் எட்டக் கூடாது என்று அம்மா கருதி வந்தாளோ அப்படியான கதைக ளெல்லாம் பாடசாலையில் சரளமாக காதில் அடிப்பட்டன.

அன்று அப்பாவும் அன்ரியும் பயணத்தால் திரும்பியிருந்தார்கள். நன்கு மாலையாகி விட்டிருந்தது. நான் ‘ஹோல்’ மூலையில் எனது மேசையில் படித்துக் கொண்டிருந்தேன்.

வனஜா அன்ரி வந்த வேகத்தில் அம்மாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

“எல்லாம் சரி வந்து விட்டது!” அம்மாவுக்கு சந்தோஷம். அப்பா சாதிக்க முடியாத காரியத்தை சாதித்து விட்ட திருப்தியில் ஓய்வது போன்று ‘சோபாவில்’ சாய்ந்திருந்தார். அம்மா அன்ரிக்கு குளியலறையில் சுடுநீர் கலக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

வனஜா அன்ரி அப்பாவுக்கு கிசு கிசுவென்று ஏதோ இரகசிய தொனியில் கூறிக் கொண்டிருந்தா. அதே ‘ஏஜென்சி’ மூலமாகத் தான் இப்போதும் பயண ஏற்பாடு சரிவந்திருக்கிறதென்பதை அம்மாவுக்கு காட்டிக் கொள்ளக் கூடாது என்பது பேச்சின் மூலப் பொருளாக இருப்பதை நான் அவதானித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று அப்பா நான் இருப்பதை அவதானித்து விட்டார்.

“கௌதமி… அம்மா சொல்லுகிறவா அல்லவா பெரிய ஆட்கள் கதைக்கிற இடத்திலை இருக்கக் கூடாது என்று. உங்களுடைய அறைக்கு போங்கோ!”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பாவின் வாயால் மட்டும் தான் நான் இந்த வார்த்தையைக் கேட்காமல் இருந்தேன். இன்று புதினமாக அப்பா ஏன் இப்படி சொல்கிறார்?

வனஜா அன்ரிக்கு அன்று பிழைகாரனாக தெரிந்த ‘ஏஜென்சிக்காரன்’ அப்பாவின் தொடர்பு ஏற்பட்ட பிறகு எப்படி சரிகாரனாக தெரிகின்றான்.?

வெளிநாட்டு மோகம் அவளைப் படிப்படியாக மாத்திவிட்டதா?

அம்மா குளியலறையிலிருந்து குரல் கொடுக்கின்றாள்.

“வனஜா வா…நானே வார்த்து விடுகிறேன்.”

அம்மாவுக்குத்தான் அன்ரிமேல் எவ்வளவு அன்பு…பாசம்.. நம்பிக்கை! எப்படி நிர்ச்சலனமாக அவள் இருக்கின்றாள்.!

தனக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் துரோகம் பற்றித் தெரிந்து கொள்ள சிறு துப்புக் கூடவா அவளுக்குக் கிடைக்க வில்லை?

அப்படிக் கிடைக்குமாயின் ஏற்படக் கூடிய பாதகங்களை எண்ணிப் பார்க்கின்றேன்…பெரிய ஆட்களின் விடயங்களில் சின்னப் பிள்ளைகள் தலையிடக் கூடாது. எனக்கு நானே அறிவுறுத்திக் கொள்கின்றேன்!

– தினமுரசு ஜுன் 24-30-2001, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *