கனவுக் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,946 
 

(1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை ஐந்தரை மணி.

மிகவும் சோர்ந்து போன நடை தளர்ந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த ஈஸ்வரன் ஆபீஸ் பையை மேசையில் எறிந்துவிட்டுக் கட்டிலில் தொப்பென்று விழுந்து கிடந்தான். “உடுப்பு மாற்ற இவருக்கு இன்று என்ன இவ்வளவு நேரம்.'” என்று யோசித்தபடி கையில் தேநீர்க் கோப்பையுடன் படுக்கை அறைக்குள் நுழைந்த இந்திரா, “என்ன இண்டைக்கு வந்தவுடன் படுத்திட்டியள்? ஏன் சுகமில்லையே?” என வினவியபடி தலையில் கைவைத்துப் பார்த்தாள். தலையிடிக்கான தடயங்கள் காணப்படாத போதிலும், ஈஸ்வரனின் முகம் சவம்போல் செத்து வெளிறிப்போய்க் கிடந்தது. “இந்தாங்கோ, தேத்தண்ணியைக் குடியுங்கோ, களைப்பு மாறும்,” எனக் கூறிக் கோப்பையை நீட்டினாள். பதிலேதும் கூறாமல் தேநீரைக் குடித்துவிட்டுக் கோப்பையை அருகிலிருந்த டீபோயில் வைத்துவிட்டு, தன் காற்சட்டை பொக்கெட்டிலிருந்து ஒரு துண்டை எடுத்து இந்திராவிடம் கொடுத்துவிட்டு, ஏந்தானத்திலிருந்த துவாயை உருவிய படியே குளியலறையினுள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டான்.

இந்திராவின் கண்கள் தன் கையிலிருந்த கடிதத்தாளின் மீது படர்ந்தன.

வைத்திய நிபுணர் ரிப்போர்ட். ஈஸ்வரனின் ஆண்மைப் பரிசோதனை அறிக்கை .

அறிக்கையைப் படித்ததும் ஈஸ்வரனின் முகத்தில் காணப்பட்ட சோர்வுக்கான காரணம் இந்திராவுக்கு புரிய வெகு நேரம் எடுக்கவில்லை. இத்தகவல் அவளையும் வெகுவாகப் பாதித்துவிட்டது என்பதை, அரைமணி நேரம் கழித்து அவ்வறைக்குள் நுழைந்த ஈஸ்வரனால் புரிந்து கொள்ள முடிந்தது. எதுவுமே பேசத் தோன்றாமல் விபூதி பூசுவதற்காகச் சாமிபடத்தின் முன் போய் நின்று விபூதியை அள்ளிப் பூசியது தான் தாமதம், ஈஸ்வரனின் கண்களில் பொல பொலவென இரு துளிகள் பளபத்து விழுந்தன.

“அப்பு சுவாமி, நான் செல்லாக் காசாகி விட்டேனே? என்னால் அவளுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை கடவுளே, நான் என்ன பாவம் செய்தேன்” என ஈஸ்வரனின் மனம் அலறியது. அங்கே அறையினுள் இந்திராவின் மனதில் அல்லோல கல்லோலமாய்க் கடந்தகால நினைவலைகள் ஆர்ப்பரித்தன. இப்படியே இருவரும் தத்தம் தனித்தனி மனச் சிறைகளில் அடைபட்டுக் குமுறிக் கொந்தளித்துத் தவிக்கிறார்களே என்பதற்காகக் காலக் கடிகாரம் ஓடாமல் நின்று விடவா போகிறது? ஒருவரையொருவர் நேர்முகமாய்ச் சந்திக்கத் திராணியற்றுத் தவித்த போதிலும், மணி பத்தரை அடித்தும் அயலட்டையில் விளக்குகள் அணைக்கப்பட்டுச் சந்தடிகள் ஒய்ந்து, தாமும் தம் சாப்பாட்டுக் கருமங்களை முடித்து விட்டு ஓயவேண்டிய நேரம் வந்துவிட்டதை ஈஸ்வரன் தம்பதிக்கு உணர்த்தின.

சுய நினைவுக்குத் திரும்பிய இந்திரா பரபரவென ‘ஹொட் பிளேட்டைப் போட்டுக் கறிகளைக் சூடாக்கிக் கொண்டு. நேர காலத்தோடு தான் அவித்து வைத்திருந்த இடியப்பத்தையும் எடுத்து மேசைமீது வைத்துவிட்டு” “வாருங்கோ சாப்பிட”. எனக் கணவனை அழைத்தாள். அவளை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் அற்ற நிலையில் எழுந்து வந்து மேசையில் அமர்ந்தான் ஈஸ்வரன். இயந்திரம் போல அவனுக்கும் உணவைப் பரிமாறிக் கொண்டு தானும் சாப்பிட அமர்ந்தாள் இந்திரா. இருவருக்குமிடையில் பெரும் கனமாய்த் தொங்கிற்று சில கணங்கள். ஈஸ்வரனுக்கோ உணவு தொண்டையில் இறங்கவே சிரமப்பட்டது. அவனுக்கு மிகவும் பிடித்தமான வெந்தயக் குழம்பு, நிறைய வெள்ளைப்பூடு போட்டு வைத்திருந்தாள்.

என்றால், ஈஸ்வரன் சப்புக் கொட்டி இரசித்து உருசித்துச் சாப்பிட்டிருப்பான். இன்று? ஒருவாறு சாப்பாடு முடிந்து படுக்கையில் சாய்ந்த சில நிமிடங்களில் இந்திரா, ‘கிளினிக்குக்குப் போனனீங்களோ?’ என மெல்லக் கேட்டாள், “ஓ”- என்ற உயிரற்ற பதிலைத் தொடர்ந்து சில நிமிடங்கள் கழிந்தன. அடுத்து “டொக்டர் என்ன சொன்னவர்?” என்ற கேள்வி வரவேண்டும் என்பது ஈஸ்வரனுக்குத் தெரியும். இந்திராவுக்கு அதை எப்படிக் கேட்பது என்ற தயக்கம்.

மணி பன்னிரண்டு அடித்து ஓய்ந்தது. எங்கோ ஒரு தெரு நாய் ஊளையிட, அதைத் தொடர்ந்து பலநாய்கள் கூட்டு வாத்தியம் இசைத்தன. மீண்டும் அமைதி. “இந்திரா” ஈஸ்வரன் ஈனஸ்வரத்தில் அழைத்தான். ‘ம்’ – என மூக்கைச் சீறியவாறே பதில் குரல் கொடுத்த இந்திரா அழுகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. எதுவும் சொல்லத் தோன்றாமல் அவளின் கூந்தலை ஆதுரமாக வருடியபடியே, “இந்திரா.” நீர் விரும்பினால், எங்களுக்கும் பிள்ளை கிடைக்கும் இந்திரா.” “எப்படி?” அவ்வளவு நேரம் முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொண்டு கண்ணீரில் கரைந்து கொண்டு கிடந்த இந்திரா புதிய ஒரு நம்பிக்கை குரலில் சுடர்விட, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கேட்டாள்.

“ரிப்போட்டின்படி, எனக்கு ஒன்றுமே செய்ய முடியாதாம். ஆனால் ஒரு குழந்தை கட்டாயம் எங்களுக்கு வேண்டுமென்றால், உன்னைச் செயற்கையாய்க் கருத்தரிக்கச் செய்ய முடியும் என்று டாக்டர் சொன்னார். இப்படிக் கூறிவிட்டு அவள் பதிலுக்காக அவன் காத்திருந்தான். கும்மிருட்டு ஆகையால் அவள் முகபாவத்தையும் புரிய வழியில்லை .

‘அதெப்பிடி?’ – சில நிமிடங்கள் கழித்து அவன் கேட்ட கேள்வி.

“நாங்கள் விரும்பும் பட்சத்தில், நமக்குத் தெரியாத ஒருவரின் சக்தி ஊசிமூலம் உன் கர்ப்பக் குடலினுள் செலுத்தப்படுமாம்.”

“சீ, என்ன அரிகண்டம்” – அவள் அருவருத்தாள்.

“இல்லை இந்திரா, என்னைப் பொறுத்தவரையில், எங்கையோ, ஆருக்கோ பிறந்த ஒரு பிள்ளையை எடுத்து வளர்க்கிறதைவிட, உன் வயிற்றிலை உன் இரத்தத்தில் ஊறி உருவாகும் ஒரு பிள்ளையைப் பெறுகிறது மேல் என்று நினைக்கிறேன்.”

“ஐயோ ஈசன் நீங்கள் என்ன சொல்லுறியள். ஆரோ ஒருத்தருக்காக என்னைப் பிள்ளைபெறச் சொல்லுறியளே? உங்கடை நல் மனதுக்குக் கடவுள் ஏன் இப்பிடி உங்களை சோதிக்கிறாரோ,”- தன் கணவரின் பெருந்தன்மையை நினைத்து உருகினாள்.

“இல்லை இந்திரா, யாருடையது எவருடையது என்றெல்லாம் எங்களுக்குத் தெரியவராது. மற்ற ஊசி மருந்துகள் போடுகிறது மாதிரித்தான் இதுவும். உன் கர்ப்பப் பைக்குள் விடப்படுமாம். டாக்டர் விரிவாகச் சொன்னார். இந்த இரகசியம் எவருக்குமே தெரியவராதாம்.”

இதைத் தொடர்ந்து இருவரிடையேயும் பேச்சில்லை. விடிந்தது. சனிக்கிழமையாதலால் கட்டிலை விட்டு அவசரமாக எழுந்து ஓட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை . அத்துடன் இரவு அதிக நேரம் விழித்திருந்த சோர்வும், அவர்கள் உணர்ந்த ஒரு புதிய உண்மையின் தாக்கமும் இந்திரா, ஈஸ்வரன் இருவரையுமே வெகுவாக அலட்டிவிட்டிருந்தன.

அடுத்த இரண்டு மூன்று தினங்கள் அந்த விஷயத்தைப் பற்றி இருவருமே வெளிப்படையாக எதுவுமே பேசவில்லை. எனினும் அவரவர் அந்தரங்கங்களில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலைமோதின. புதன்கிழமை பகல் இந்திராணி கிளினிக்கிற்குப் போனாள். வழக்கம் போல அங்கே லேடி டாக்டர் (திருமதி) பவன் இருந்தார். டாக்டர் பவன் என்று அழைக்கப்படும் நிர்மலா சரவணபவன், இந்திராவோடு ஒரே கொன்வென்டில் படித்தவர். ஆகவே நட்பு அடிப்படையில் அளாவளாவிச் சில விஷயங்களை இந்திரா செயற்கைக் கருத்தரித்தல் சம்பந்தமாக அறிந்துகொள்ள விரும்பினாள். பிறக்கப்போகும் பிள்ளையின் குணம், நடை, பாவனைகள், அறிவு அழகு ஆகியவற்றை கணவன் – மனைவி இருவரினதும் சங்கமிப்புகளில் உருவாகும் ஜீன்ஸ்க ள் (சந்ததிச் சுவடுகள்) நிர்ணயிக்கும் என்பதை

அறிந்த போது இந்திராவின் மனதில் ஒரு சலனம் எழுந்தது.

“நிர்மலா, உமக்கு ஜோர்ஜை தெரியும் தானே? உம் மடை பாச்மேட் அல்லவா?” – இப்படி இந்திரா கேட்டாள்.

“எந்த ஜோர்ஜ். ஓ… அந்த ஹாண்ட்சம் ஜோர்ஜைக் கேட்கிறாயோ? வை நொட்? அவரைத் தெரியாமல் என்ன? இங்கே உள்ள ஆஸ்பத்திரியில தான் இப்போது வேலை செய்கிறார். ஆ. யேஸ்… இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. ஜோர்ஜின் தங்கச்சி ஸ்டெல்லா, உம்முடைய கூட்டாளி அல்லவா? ஸ்டெல்லா கலியாணம் கட்டி லண்டனில் என்று கொஞ்ச நாளைக்குமுன் ஜோர்ஜ் சொன்னார்.” டாக்டர் நிர்மலா தகவல்களை அள்ளிச் சொரிந்துவிட்டு சிரித்தபடியே இந்திராவின் முகத்தைப் பார்த்தாள். அங்கே ஆழமான ஒரு யோசனை தென்பட்டது.

“என்ன இந்திரா, கடுமையான யோசனை. ஸ்கூல்டேய்ஸ் ஞாபகம் வந்து விட்டதோ?” எனக் கேலி செய்யவும், வெளியே நிறைய நோயாளர்கள் காத்து நிற்பதாகத் தாதிவந்து டாக்டர் நிர்மலா பவனிடம் சொல்லவும் சரியாக இருந்தது. இந்திரா விடைபெற்றுச் சென்றாள்.

புல்லர்ஸ் றோட் சந்தியில் 154 பஸ்ஸில் ஏறியமர்ந்த இந்திராவின் நினைவுகள் காலத் திரைகளைக் கிழித்து,. பின்னோக்கிப் பாய்ந்தன.

ஸ்டெல்லாவும் இந்திராவும் ஒட்டென்றால் ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு அத்தியந்த பள்ளித் தோழிகள். இருவர் வீடுகளும் அருகருகே இருந்தபடியால், பள்ளி நேரத்திற்குப் பின்பும், அவர்களின் சிநேகிதம் பின்னிப் பிணையச் சந்தர்ப்பங்கள் பல கிட்டின. ‘டீன் ஏஜின் புரியாத பல விசித்திரக் கனவுகளை கண்களில் தேக்கியபடி, குறு குறு விழிகள் மருள, கொத்துக் கொத்தாய்ச் சருளும் கூந்தல் தோளில் படாது துள்ளித் திரிந்த இந்திரா மீது, ஸ்டெல்லாவின் அண்ணன் சந்திரன் ஜோர்ஜ் காட்டிய அக்கறையை, ஆர்வத்தைக் காதலென்று கூற முடியுமோ என்னவோ? ஆனால் இளமை உணர்வுகள் மெல்லென மலரும் இந்த முட்டுக் காய்ப் பருவத்தில் காவடியெடுத்து வைத்துக் கொண்டிருந்த இந்திராவுக்கு அதுதான் அமர காதலின் ஆரம்பமென்ற கருத்து எப்படியோ மனதில் படர்ந்து விட்டது. அவனை ஒரு நாள் கூட காணாவிட்டால், அவளுக்குப் பைத்தியமே பிடித்துவிடும். இந்த களங்கமற்ற சிறுபிள்ளைத் தனமான உணர்வுகளுக்கு, அதே பருவக் கிளர்ச்சி பேதலிப்புகளால் உந்தப் பட்ட சந்திரனும் அவ்வப்போது, தன் காந்தப் பார்வைகளால் இரை போடத் தவறவில்லை.

படிப்பில் படு சுட்டியான ஜோர்ஜ் வைத்தியக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டு பேராதனைக்குப் போன அன்று இரகசியமாக இந்திரா அழுதது. அவள் தோழியும் ஜோர்ஜின் தங்கையுமான ஸ்டெல்லாவுக்குக் கூடத் தெரியாது.

அதற்கு பின் எத்தனையோ மாறுதல்கள். இந்திராவின் பெற்றோர் ஊரோடு போய்ச் சேர்ந்துவிட்டது தொடக்கம். எஸ். எஸ். ஸியோடு படிப்பை முடித்துக்கொண்ட இந்திரா ஆசிரியையாக வேலை பார்த்து, பின் அப்பாவின் கிளார்க் பென்சன் தொகைப் பணத்தின் உதவியால் ஒரு கூட்டுத்தாபனத்தில் தொழில் நுட்ப அதிகாரியாக வேலை செய்யும் ஈஸ்வரனைக் கலியாணம் செய்தது எல்லாமே பத்து வருடங்களில் நடந்தேறிய சம்பவங்கள்.

பஸ் தெகிவளையில் நின்றது. அதனுள் திணித்துக் கொண்டு நின்ற சனத்திரளிலிருந்து விடுபட்டு வெளியேறிய இந்திரா, வீதியை கடந்து தன்னுடைய அனெக்ஸ்’ வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள். எதிரே கடல் தெரிகிறது. நாளை போயா (பௌர்ணமி) என்பதைக் கடலலைகள் இன்றே காட்டுகின்றன. அலைகளின் ஓவென்ற ஆர்ப்பரிப்பை இந்திரா கவனிக்கவேயில்லை. அவள் மனதில் எழும் அலைகள் என்ன சொல்லுகின்றன?

“யாரோ ஊர் பெயர் தெரியாத ஒருவருடைய பிள்ளையைக் கருவில் வளர்ப்பதைவிட, என்றோ ஒரு நாள் என்றாலும், என் மனதில் சலனத்தை ஏற்படுத்திய ஒருவரின் வாரிசைப் பெற்றுவளர்த்தால் என்ன? ஜோர்ஜின் குழந்தை எவ்வளவு அழகாக இருக்கும்? அந்த கம்பீரமான மூக்கு, எடுப்பான உயரம், இந்தி நடிகர்கள் மாதிரி நல்ல நிறம், அழகான பெண்களினது போன்ற கண்கள், அடேயப்பா, அந்த ஸ்டைலான நடை. அழகு மட்டுமா, ஒரே ஷொட்டில் எஸ். எஸ் ஸியில் ஐந்து டிஸ்டிங்சன்ஸ், பின் மெடிக்கல் கொலேஜில் டிரெக்கட் என்டிரன்ஸ், பாவம் ஜோர்ஜ், பணத்துக்காக யாரோ ஒரு நீர்கொழும்பு கருவாட்டு வியாபாரியின் படிக்காத மகளைக் கலியாணம் செய்து கொண்டதாகக் கேள்வி. தன்னுடைய இரண்டு தங்கச்சிமாரைக் கலியாணம் செய்து கொடுக்க, தன்னை தானே பலியிட்ட அந்த நல்ல குணம்?

அப்படி ஒரு ஐடியல் மனிதனுக்கும் என்னைப் போல அழகான, படித்த, நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கும் பிள்ளையுண்டானால்?

நினைப்பே இனித்தது – மறுகணம் அவள் மனம் – “பாவம் ஈஸ்வரன். அவரின் நல்ல மனதுக்கு நான் துரோகம் பண்ண நினைக்வேயில்லை. அவர்தானே இந்தப் புதிய விஷயத்தை எனக்கே அறிமுகப்படுத்தினார். அவருக்குக் குழந்தை என்றால் கொள்ளை ஆசை. அடுத்த வீட்டுப் பிள்ளைகளுக்காக அவர் வாங்கி வரும் இனிப்புகளும், அவர்களைக்கட்டிக் கொண்டு பொழியும் முத்தங்களும்? வீதியில் போகும் தம் பதிகள் தத்தி நடக்கும் குழந்தைகளை நடத்திக் கொண்டு செல்லும் போது, ஈஸ்வரனின் பார்வை பரிதாபமாக இருக்கும். அவரே, துணிந்து நான் செயற்கை முறையில் கருத்தரித்து, என் வயிற்றிலேயே ஒரு பிள்ளை பிறக்க வேண்டுமென்று விரும்புகிறபோது. நான் நினைப்பது மட்டும் எப்படி பாவமோ, துரோகமோ ஆகும்” – இச்சிந்தனைச் சங்கிலி அவர்களின் வீட்டு வாசலில் நின்ற ஒரு புத்தம் புது மிட்சுபிலாண்சர் காரைக் கண்டதும் அறுந்தது. யாரோ வீட்டுச் சொந்தக்காரர் திரு. ஹென்றி பெர்ணாண்டோ வீட்டுக்கு வந்திருக்கிறார் போலிருக்கிறது என்று நினைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் இந்திரா – அதே சமயம் வீட்டுக்காரியின் மாடியிலிருந்து ஒரு தம்பதிகள் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வாசற்படிக்கு வந்தபோது இந்திரா அந்த மனிதனின் முகத்தை கண்டான்.

“அது…. அது ஓ ஜோர்ஜ்” இந்திராவின் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சிக்குரல் டாக்டர் ஜோர்ஜ்ஜை திரும்பிப் பார்க்க வைத்தது.

‘ஹாய்…! யூ யூ ஆர் இந்திரா தம்பித்துரை நோ? என்ற படி திரும்பி அனெக்ஸ் வாசலுக்கு வந்தார் டாக்டர் ஜோர்ஜ்,

“ஆம் என்றபடி அவருக்கு அருகில் நின்ற மிகச் சுமாரான, கறுத்த ஒல்லியான பெண்ணைக் கவனித்தாள் இந்திரா

“இலங்கையா இருக்கிறீர்”? என்றபடி ஜோர்ஜ் “மீட் மை வைப் ரீட்டா” எனத் தன் மனைவியை அறிமுகம் செய்தார்.

“சந்தோஷம்: என் கணவர் மிஸ்டர் ஈஸ்வரன் இங்கு கோர்ப்போரேசனில் வேலை பார்க்கிறார் நீங்கள் இங்கே எப்படி’?

இந்திராவின் கேள்விக்கு, “நாங்கள் நீர்கொழும்பில் இருக்கிறோம். மிஸ்டர் பெர்னாண்டோ, என் மனைவியின் சொந்தக்காரர். கொழும்பு வந்தாப்போல இவையைப் பாக்கவேணும் என்று இவ விரும்பினா” என்று விஷயத்தை விளக்கினார் டாக்டர் சந்திரன் ஜோர்ஜ். அதே சூட்டோடு ஸோ, ஸோ இந்திரா. ஹைௗவ் மெனி சில்ரன் போர் யூ? எத்தனை பிள்ளைகள் உமக்கு என்றாலும் உமது டடா மாதிரி ஒரு டசின் பெறமாட்டீர் என்று நினைக்கிறேன்.” எனக் கூறியபடியே தன் ஜோக்கைத் தானே இரசித்து ஹோ ஹோ வென சிரித்தார்.

“நோ ஜோர்ஜ் எனக்கு இன்னும் பிள்ளைகளில்லை” எனக் கூறும் போதே இந்திராவின் மனதில் ஒரு படபடப்பு, ஒரு சிலிர்ப்பு,

“அதற்கென்ன அவசரம் இந்திரா, வாழ்க்கையை நல்லா ரசியும் இன்னும் உமக்கு வயதாகவில்லை தானே, உமக்கென்ன ஒரு, ஷ்டெல்லாவின் வயது தானே?” என்று கூறிக்கண் சிமிட்டிவிட்டுக் கலகலவெனச் சிரித்தார் ஜோர்ஜ். அந்தக் கலீர்ச் சிரிப்பு மட்டும் இன்னும் மாறாமலே அதே கல்லூரி நாட்களைப் போலவே இருக்கிறதே என அதிசயித்த படியே இந்திரா, “அது சரி; உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று ஆவல் கொப்பளிக்கக் கேட்டாள்.

ஜோர்ஜ் முகம் சடாரென ஓடிக் கறுத்தது. கணநேர சங்கடத்தின் பின், “ஜஸ்ட் வன், ஒரு மகன் வயது நாலரை” என முனகினார்.

“நர்ச்சரிக்கு அனுப்பிறீர்களோ?” ஆவலோடு கேட்டாள் இந்திரா.

“இல்லை கொஞ்சம் மென்டலி ரிடார்டட், வலது குறைந்த, அதாவது மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளை’? – கூறி முடிப்பதற்குள் ஜோர்ஜின் மனம் பட்ட பாட்டை

அவனது இறுகிய முகம் பொட்டெனக் காட்டியது.

“ஓ… ஐ ஆம் ஸொரி” என இந்திராவின் வாய் அனுங்கியது.

“ஓகே! வரட்டா இந்திரா, சீ…. யூ” – என்றபடியே ஜோர்ஜ் மனைவியோடு காரில் ஏறிச் சென்றுவிட்டான்.

கார் சென்ற திக்கை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்ற இந்திராவின் சிந்தனையில் ஜோர்ஜின் உதவியில் ஜனித்து அவளது கருவில் மலர்ந்த அழகான கற்பனைக் குழந்தை கன்னங்குழிவிழ, பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தது.

“என்ன? கடுமையான பகற்கனவோ?” என்று அப்போது தான் அங்கு வந்த ஈஸ்வரன் அவள் தோளைத் தட்டிக் கேட்டபோது, அவளது கனவுக் குழந்தையின்

முகம் பொட்டெனக் கலைந்தது.

– தினகரன் (1982), சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *