கத்தரி, வெண்டை, காலிப்பூ வேய்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 15,522 
 

காலை எழுந்தது முதலே என்ன சமையல் செய்வது? என்ற கேள்விதான் மனசுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் எந்தக் காய்கறியும் இல்லை. காலையில் சட்னி அரைக்கக் கூட தேங்காயும், பச்சை மிளகாயும் வாங்கி வந்தால்தான் உண்டு. ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த என் கணவரிடம் சென்று,

“”என்னங்க… வீட்ல எந்தக் காய்கறியும் இல்ல… வாங்கிட்டு வர்றீங்களா?’ என்று கேட்டதுதான் தாமதம்…

“”போம்மா.. எனக்கு காய்கறியெல்லாம் பாத்து வாங்கத் தெரியாது… நீயும் வர்றதானா சொல்லு… போகலாம்” என்றார்.

“” சரி நான் சேலை மாத்திட்டு வரதுக்குள்ளே நீங்களும் ரெடியாகுங்க” என்று சொல்லிவிட்டு உடை மாற்றி வரச் சென்றேன்.

ஒரு வாரத்திற்கு முன்பு வரை… காய்கறி வாங்கக் கடைக்குச் சென்றதே இல்லை. எனக்குத் திருமணமாகி வந்து 20 வருடங்களாக.. காலை 6 1/2 மணிக்கெல்லாம்… “”கத்திரி, வெண்டை, கீரை, காலிப்பூவேய்…” என்று குரல் முன்னால் வர, தலையில் வைத்த கூடையோடு ராஜம்மா பின்னால் வந்துவிடுவாள். “”காலிஃபிளவர்’ என்று சொல்ல வராததால் ஃபிளவரைப் பூவாக்கி, “” காலிப் பூவேய்” என்று ராகத்தோடு காய்கறி விற்கும் ராஜம்மாவை எங்கள் பகுதியில் “”காலிப் பூ ராஜம்மா! என்றுதான் கூப்பிடுவார்கள். அருகாமையில் உள்ள ரயில்வே குவார்ட்டர்ஸிலும் ராஜம்மாவின் காலிப் பூ பிரபலமாகிவிட்டது. தேர்முட்டிக்கருகில் உள்ள பெரிய மார்க்கெட்டில் இருந்து காய்கறி வாங்கி வந்து பத்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் எங்கள் பகுதிக்குப் பச்சை பசேலென்று காய்கறி, கீரைகளைக் கொண்டு வருவதால், எங்களுக்கு சற்றுத் தள்ளியிருக்கும் உழவர் சந்தைக்குப் போகக் கூட சோம்பேறித்தனமாகிவிட்டது. முதல் நாளே சொல்லி அனுப்பி விட்டால், அடுத்த நாளுக்குத் தேவையான காய்கறிகளைக் கொண்டு வருவாள் ராஜம்மா.

எங்கள் வீட்டுக்கு வந்து எனக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு, நான் கொடுக்கும் சூடான தேநீரைக் குடித்துவிட்டு வியாபாரத்திற்குப் போவாள். திரும்பி வரும்போது எங்கள் வீட்டில் என்ன டிபனோ அதை சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி, பக்கத்தில் உள்ள ரயில்வே குவார்ட்டர்ஸýக்குப் போய் விடுவாள்.

அப்படித்தான் போன வாரம் ஞாயிறன்று டிபன் சாப்பிடும் போது…

“”தாயி, நாளைல இருந்து எனக்கு டீ போட்டு வைக்காதே. இனிமேல் நான் காய்கறி விக்க வரமாட்டேன்” என்றாள்.

“”ஏன் ராஜம்மா? என்னாச்சு”? என்று நான் கேட்கவும். கண்கள் கலங்க,”” எம் மவன் சென்னையில வேலைல இருக்கான். கூட வேல செய்ற பெண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான். எங்களை வந்து பாக்கறது கூட இல்லன்னு முன்னமே உங்கிட்ட சொல்லி இருக்கேன். போன வாரம் திடீர்னு எம்மகன் வந்து, என்னையும் அவங்க அப்பனையும் சென்னைக்கே வரச் சொல்லி கூப்பிட்டான் தாயி, அவருக்கு அதுல இஷ்டமில்ல. ஒரு கையும், காலும் வராம கிடக்கிற இவருக்குப் பட்டணத்துக்குப் போனா ஏதாச்சும் நல்ல வைத்தியமா செய்யலாமேன்னு எனக்கு ஒரு ஆசை. அதாந் தாயி நாளைக்கு ராத்திரி வண்டிக்கு போகலாம்னு இருக்கேன். உனக்கு வேணுங்கிற காய்கறி எல்லாம் எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு கூடையில் இருந்த மிச்சக் காய்கறிகளை எடுத்து வைத்துவிட்டு கண்ணீருடன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டாள். நேற்று வரை அந்தக் காய்கறிகளை வைத்தே பொழுதை ஓட்டியாயிற்று.

உடை மாற்றிக் கொண்டு கையில் பையும், பணமும் எடுத்துக் கொண்டு நான் வராந்தாவுக்கு வரவும், “”கத்திரி, வெண்டை, காலிப் பூவேய்” என்ற ராஜம்மாவின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது. காலையில் இருந்தே ராஜம்மாவை நினைத்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட பிரமையோ என்று நான் சந்தேகிக்க, இல்லையில்லை, உண்மைதான் என்பது போலத் தலையில் காய்கறிக் கூடையுடன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ராஜம்மா.

“” தாயி ஒரு கை கொடுத்து கூடையை இருக்கு. இன்னிக்கு காலிப்பூ விலை மலிவா கிடைக்கவும், நிறைய வாங்கிட்டேன், கூடை கனக்குது” என்றாள். கூடையை இறக்கி வைத்துவிட்டு ராஜம்மாவுக்குத் தேநீர் தயாரிக்க உள்ளே சென்றேன்.

மனசுக்குள் அவளுடைய ரீ-என்ட்ரி பற்றிய நினைப்பே ஓடிக் கொண்டிருந்தது. “” சரி… அவளாகவே சொல்லட்டும்” என்று தேநீர் கொடுத்துவிட்டு கூடையருகே நான் அமர, “” யாவாரத்தை முடிச்சுட்டு வந்து பேசறேன் தாயி” என்று சொல்லி, என் ஆர்வத்தை மேலும் கிளப்பிவிட்டுக் கிளம்பினாள், சொன்னது போலவே திரும்பி வந்து தன் பட்டணப் பிரவேசக் கதையை சொன்னாள்…

“”உங்கிட்ட சொல்லிட்டுப் போன அன்னிக்கு ராவே நானும், என் ஊட்டுக்காரரும் எம் மகனோட கிளம்பினோம் தாயி. ரயிலு கிளம்பற வரைக்கும் எதுவும் போசாம இருந்த பய, அதுக்கப்புறம் எங்ககிட்ட ஏகப்பட்ட கண்டிசனா பேசறான் பாத்துக்கோ. அவங்க அப்பன்கிட்ட எதுவும் பேசல. எங்கிட்ட, “”இதப்பாரு அம்மா, எம் பொண்டாட்டி இப்ப முழுகாம இருக்கா. டாக்டருங்க அவளுக்கு மூணு மாசம் முடியுற வரைக்கும் பெட்ல இருந்து இறங்கவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்க வீட்ல இருந்து யாரும் உதவிக்கு வரமாட்டாங்களாம். அதனாலதான் உன்னை கூட்டிட்டுப் போறேன்னு சொன்னதக் கேட்டு, எங்க வூட்டுக்காரருக்கு வந்துச்சு பாரு ஆத்திரம். “” ஏன்டா? அவங்க பெத்த புள்ளைக்குக் கூட வந்து உதவ மாட்டங்களா?ன்னு கேட்டார். அதுக்கு அவன் சொல்றான், “”அவங்க வேற சாதிக்காரங்க. அவங்க மக என்னைத் கல்யாணம் பண்ணிக்கிட்டது அவங்களுக்குப் புடிக்கல” அதான் இன்னும் மக மேல கோபத்துல இருக்காங்க, அதுவுமில்லாம அவங்க பணக்காரங்க’ அப்படின்னு சொல்லவும் எங்க ஆளுக்கு இன்னும் கொஞ்சம் ஆத்திரம் அதிகமாயிடுச்சு.

“”ஏன்? காதலிக்கும்போது இந்த ஜாதி, மதம், ஏழை, பணக்கார வித்தியாசமெல்லாம் உங்க அறிவுக்கும், கண்ணுக்கும் எட்டலையான்னு” சத்தம் போட, பதிலுக்கு இவனும் எகிறுறான்.

“”இதப் பாரும்மா… எங்கப்பா கரண்ட் ஆபிஸ்ல வேலைக்கு இருந்தாரு. கம்பத்துல ஏறி வேலை செய்யும் போது ஷாக் அடிச்சுக் கீழே விழுந்ததுலே மண்டைல அடிபட்டு, நரம்பு பாதிச்சு ஒரு கையும் காலும் வரல. அதனால வேற வேலைக்குப் போகாம, ஊர்ல பெரிய மளிகைக் கடை வச்சு, எங்கம்மா, அப்பா ரெண்டு பேரும் பாத்துக்கிறாங்க அப்படீன்னு சொல்லி வெச்சிருக்கேன். நீங்க பாட்டுக்கு அரிச்சந்திரன் வாரிசு கணக்கா, நான் தெருத்தெருவா கூவி காய்கறி விக்கிறவ, எம் புருசன் பஜார்ல கூலி வேலக்காரன், குடி போதையில கீழே விழுந்து இப்படி ஆயிடுச்சுன்னு சொல்லி வெக்காத. அப்புறம் அவ என்னைக் கால் தூசிக்கு மதிக்க மாட்டா. அத்தோட இவருக்கு வைத்தியமும் அம்பேல்தான்”ன்னு மிரட்டலா சொல்றான். அப்புறம் அவங்கிட்ட நான் ஏதும் பேசாம, தூங்கற மாதிரி கண்ணை மூடிக்கிட்டேன்.

விடிகாலைல ரயிலை விட்டு இறங்கி, வாடகைக் கார்ல வீட்டுக்குப் போற வழியிலயும் சொன்னதையே சொல்லி எச்சரிக்கை பண்ணிக்கிட்டே வர்றான்.

“”சரிடா. உம் பொண்டாட்டி கிட்ட நாங்க வாயே திறக்கல போதுமான்னு சொல்லிட்டு நான் அமைதியாயிட்டேன். இவரு என்னைப் பார்த்து முறைச்சுக் கிட்ட வர்றாரு. நான் வேடிக்கை பாக்ற மாதிரி சன்னலுக்குப் பக்கம் மூஞ்சியத் திருப்பி உக்காந்துட்டேன். ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தோம். எம் மருமவ மகராசி வந்து கதவைத் திறந்தா. ஆசையா எங்க கூட ரெண்டு வார்த்தை பேசுவான்னு பார்த்தா, “வாங்க’ன்னு கூட சொல்லலை. எம் மூஞ்சியவே ரெண்டு நிமிசம் உத்துப் பாத்தவ, ஏதோ யோசனையா உள்ள போனவதான், வெளியே வரல. எனக்கும் அந்தப் புள்ளைய எங்கயோ பார்த்த மாதிரி தோணுது. ஆனா எங்கேன்னு நினைப்பு வரல. எம்மவனே அடுப்படிக்குப் போய் காப்பியக் கலந்து எங்களுக்கும் கொடுத்து, பொண்டாட்டிக்கும் கொண்டு போயிக் குடுத்தான். காபியக் குடிச்ச பொறவு, “”என்னடா தம்பி சமைக்கட்டும். கொஞ்சம் சாமான், அடுப்பு இருக்குமிடமெல்லாம் காமிச்சுக் குடுன்னு கேட்டேன். அதுக்கு அவன், “”அம்மா, மளிகைச் சாமான், அரிசி, பருப்பு எல்லாம் இருக்கு. காய்கறி வாங்கிட்டு வந்தப்புறம் சமையலை ஆரம்பி. என்ன காய்கறி வாங்கறது”ன்னு கேட்டுக்கிட்டே வந்தான்.

நானும் குளிக்கத் துணி எடுத்து வச்சுகிட்டே, “”தம்பி, இப்ப காலிப் பூ சீஸன். நல்ல பூவா பார்த்து வாங்கிட்டு வா. உனக்குச் சப்பாத்தியும், காலிப்பூ குருமான்னா பிடிக்கும். வாய்க்கு ருசியா செஞ்சு தர்றேன்”ன்னு சொல்லிக்கிட்ட திரும்புறேன்… இடுப்புல கைய வச்சுக்கிட்டு ஆவேசம் வந்த பத்ரகாளி மாதிரி நிக்கிறா எம்மருமவ. இவ எப்ப பெட்ரூம்ல இருந்து இங்க வந்தான்னு யோசிக்கறதுக்குள்ளே. “”நீ காய்கறி விக்கிற காலிப்பூ ராஜம்மாதானே?” அப்படீன்னு கேட்டா பாரு ஒரு கேள்வி. எனக்கு ஒடம்பெல்லாம் நடுங்கிப் போச்சு. என் பதிலை எதிர்பார்க்காம… “”காலைல பார்த்த உடனே நினைச்சேன், எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். இப்ப நீ காலிப்பூவுன்னு சொன்னதைக் கேட்டதும் என் சந்தேகம் உறுதியாயிடுச்சுன்னு” சொல்லிட்டு, எம் பையனைப் பார்த்து, “”என்னவோ பெரிய மளிகைக்கடை ஓனருன்னு பெருமையடிச்சுக்கிட்ட. இன்னும் கொஞ்சம் நாள்ல சூப்பர் மார்க்கெட் லெவலுக்கு எங்க கடையை டெவலப் பண்ணிடுவாங்கன்னு பீத்திக்கிட்டே… கேவலம், தெருத்தெருவா கூவி காய்கறி விக்கிறவ மகனா நீ? எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து எங்க வீட்டுக்கு காய்கறி கொண்டு வர்றதுங்கிற விஷயம் உனக்கு வேண்ணா தெரியாம இருக்கலாம். ஆனா… ரயில்வே குவார்ட்டர்ஸ் ராமசாமி வீட்டுக்கு ரெகுலரா காய்கறி கொண்டு வர்ற உங்கம்மாவுக்கு இதுக்கு மேல விவரம் சொல்லத் தேவையில்லன்னு அவ சொன்னப்புறம்தாம்மா எம் புத்திக்கு உறைச்சது. எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேன்னு எனக்கும் தோணிச்சில்ல. ஸ்கூல் பொண்ணா யூனி பாரத்துல பாத்ததுக்கும், இப்ப முடிய வெட்டி விட்டுக்கிட்டு நைட் கவுன்ல பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கில்ல. அதுவுமில்லாம அந்தப் பொண்ணு காலேஜ் படிக்க வெளியூருக்குப் போயிடுச்சு. படிச்சு, முடிச்சு சென்னைக்கு வேலைக்கு வந்தப்புறம்தான் இவனைப் பார்த்து பழகி இருக்கா. எம் மவன் ஆளு கொஞ்சம் செவப்பா, உசரமா, பார்க்க அழகா இருக்கவும் காதலிக்க ஆரம்பிச்சிருக்கா. இவன் ஆரம்பத்துல தயங்கினாலும், ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்றதுல தப்பே இல்லேங்கும்போது, நாம ரெண்டே ரெண்டு பொய்தானே சொல்லப் போறோம்ன்னு நெனைச்சிருப்பான் போல. சரியான சுயநலக்காரன். வேற சாதிங்கிறதால வீட்டுக்குச் சொல்லாம பதிவுத் திருமணம் செஞ்சுக்கிட்டு, அதுக்கப்புறம் அவங்க வீட்டுக்குச் சொல்ல, அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே கோவமான கோவமாம். எங்களுக்கு இப்படி ஒரு பொண்ணே பொறக்கலைன்னு நாங்க நினைச்சுக்குறோம், இனிமே எங்க மூஞ்சியில கூட முழிக்காதேன்னுட்டாங்களாம். அவங்க யாரு தெரியுமா தாயி? நாங்கூட உங்கிட்ட சொல்லல… ரயில்வே குவார்ட்டர்ஸல ஒரு அம்மா உன்ன மாதிரியே தங்கமானவங்கன்னு. அவங்க வீட்டுக்காரருக்கு க் கூட போன மாசம் வேலை மாறுதலாக திருச்சிக்குப் போயிட்டாங்க. எனக்குக் கூட புதுப் புடவை குடுத்தாங்கன்னு உங்கிட்ட காமிச்சேனே? ” என்று ஞாபகப்படுத்தவும்…

“”அட… ஆமா ராஜம்மா! அவங்க கூட இப்பல்லாம் ரொம்ப சோகமா இருக்காங்க. முன்ன மாதிரி சிரிச்சுப் பேசறதில்லன்னு சொன்னியே” என்று என் பங்குக்கு நானும் நினைவுபடுத்திக் கொள்ள,

“”அவங்களேதாம்மா.. அவங்களுக்கு அவங்க சாதியும் மகளும் உசத்தி. அதனால ரொம்ப வேதனைப்பட்டிருக்காங்க. அதுக்கு எம் மவனும் ஒரு காரணம்ன்னு தெரியாம அந்தம்மாவுக்கு நானே எத்தனை தபா ஆறுதல் சொல்லி இருப்பேன். எல்லாம் விதிதான்” என்றாள்.

“”சரி..அப்புறம் என்னாச்சு” என்று நான் கேட்க, “”அப்புறம் என்ன தாயி.. கையில சூலம் இல்லாத குறையா காளியாத்தா மாதிரி ஆவேசம் புடிச்சு ஆடினா… குழந்தை பிறந்ததும் அவங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்க் காட்டினா அவங்க அப்பா, அம்மா மனசு மாறும்ன்னு நினைச்சாளாம். ஆனா இப்படி அந்தஸ்தே இல்லாத, போயும்.. போயும் தெருத் தெருவா கூவிக் கூவி காய்கறி விக்கிற குடும்பத்தோட எங்கப்பா சம்பந்திங்கிறதை என்னால சகிச்சுக்க முடியல. எனக்கு இப்படியா வந்து புகுந்த வீடு வாய்க்கணும்னு எங்க தொழிலை ரொம்ப கேவலமாப் பேசறதைக் கேட்டதும் எங்க வீட்டுக்காரருக்கு வந்துச்சு பாரு கோவம்.

கத்தரி, வெண்டை, காலிப்பூ வேய்...

“”நாங்க யாரையும் ஏமாத்தல… பொய் சொல்லல… எங்க மனசுக்கு நேர்மையா காய்கறி வியாபாரம் செஞ்சு, எங்க வாழ்க்கையை நடத்துறோம். நாங்க ஒண்ணும் உங்க கையை எதிர்பார்க்கல. நீங்கதான் எங்க கிட்டே உதவி கேட்டு வந்தீங்கங்கிறதை மனசுல வச்சுக்க. உங்கப்பா பெரிய ஆபிசரா இருந்தா, நீயும் அதே மாதிரி ஆபிஸர் வூட்டுப் பையனைப் பார்த்து காதலிச்சிருக்கணும். இப்ப கல்யாணம் முடிஞ்சு முழுகாம வேற இருக்கே. இப்படிக் கோபப்படறது வயித்துப் புள்ளைக்கு ஆகாது. பேரக் குழந்தை முகத்தைப் பார்த்தா உன்னைப் பெத்தவங்க மனசு மாறி உன்னை ஏத்துக்குவாங்க. தப்பு உங்க ரெண்டு பேர் மேலயும்தான்” என்று இவர் சொல்ல,

“”பொய்யும், புரட்டும் பண்ணி என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்ட உங்க மகனையே நான் வெறுக்கிறேன். அப்படி இருக்கும்போது உங்க மகனோட வாரிசை மட்டும் பெத்துத் தருவேன்னு நெனைக்கிறீங்களா? உங்கப்பாவப் பெத்த தாத்தா, பாட்டி இவங்கதான்னு உங்களைப் போய் என் குழந்தைகிட்ட நான் எப்படி அறிமுகப்படுத்த முடியும்? என்னைச் சேர்ந்தவங்க.. என் உறவுக்காரங்க… என்னை எப்படி மதிப்பாங்க? எனக்கு இப்படி ஒரு மன உளைச்சலைத் தந்த உங்க மகனுக்கு நான் கொடுக்கப் போற தண்டனை என்ன தெரியுமா? சீக்கிரமா விவாகரத்துக்குத் தயாராக இருக்கச் சொல்லுங்க”ன்னு சொல்லிட்டு ரூமுக்குப் போய் கதவைச் சாத்திக்கிட்டாள்.

நானும், என் மகனும் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவ கதவைத் திறக்கவே இல்லை. நாங்க அங்கே இருந்தா அவ கோபம் அதிகமாகும்ன்னு கிளம்பி நம்ம ஊருக்கே வந்துட்டோம். அங்க என்னாச்சோ, ஏதாச்சோன்னு மனசு அடிச்சுக்குது. அவனும் பேசல… நாங்க போன் பண்ணாலும் எடுக்கலை. சரி நம்ம பொழப்ப நாம பார்போம்ன்னு இன்னைக்கு யாவாரத்துக்கு வந்துட்டேன். உண்மை எப்படியும் ஒரு நாளைக்கு வெளிச்சத்துக்கு வந்துதான ஆகணும். ஆண்டவன் போட்ட கணக்கு என்னைக்கும் தப்பாகாது. எம் மகனாவே இருந்தாலும், சுய நலத்துக்காக அந்தப் பொண்ணைப் பெத்தவங்க மனசை நோகடிச்சுதுக்கு தண்டனை அனுபவிச்சு தான ஆகணும். சரி தாயி, ரொம்ப நாழியாயிடுச்சு. நான் வரட்டுமா?” என்று கூறி கூடையைத் தலையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள் ராஜம்மா.

“”கத்திரி, வெண்டை, காலிப் பூவேய்” என்ற அவள் குரல் கொஞ்சம் கொஞ்சமாக என் காதுகளில் இருந்து தேய்ந்து மறைந்தது.

– எஸ்.கே.விஜி (ஏப்ரல் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *