கண் கண்ணாடி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 2,652 
 

திருமணமாகி பத்து வருடங்கள் குழந்தை கிடைக்காமல் போக மாரனும், காரியும் இருக்காத விரதமில்லை, குகைக்குள் இருந்த குல தெய்வ கோவிலிலேயே தவமாய் தவமிருந்தனர்.

நாக தோசம், பிதுர் தோசம், புத்திர தோசம் என சொன்ன தோசங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்ததோடு பூர்வீக வீடு இருந்த காட்டை விட்டும் வேறு காட்டு வீட்டில் குடியேறினர். அப்படியாவது குழந்தை கிடைக்கும் எனும் நம்பிக்கையில். 

யாரிடமும் சாபம் வாங்காமலிருக்க தங்களை ஏமாற்றியவர்களையும் சபிக்காமல் சிறந்த தம்பதி என பிறர் பொறாமைப்படுமளவுக்கு ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.

இப்படியிருக்க காரிக்கு நாள் தள்ளிப்போக ஊரும், உறவும் மகிழ, வாழ்த்த பெற்றோர்களால் வளைகாப்பு எனும் கட்டுத்சோறு விருந்து காரி வீட்டினரால் நடத்தப்பட்டது.

மாரனும் தனது காட்டு வேலையைக் குறைத்துக்கொண்டு மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பாமல் தான் குடியிருக்கும் வீட்டிலிருந்து ஒரு தாயைப்போல பார்த்துக்கொண்டது தங்களுக்கு இப்படி ஒரு கணவன் அமையவேண்டும் என திருமணமாகாத பெண்களும், தங்களுக்கு இப்படி வாழ்வு அமையவில்லையே என திருமணமான பெண்களும், தங்களுக்கு இவர் போன்ற மருமகன் அமைய வேண்டுமென பெண்ணைப்பெற்றவர்களும் எண்ணுமளவுக்கு தன் மனைவியைத்தாங்கினான்.

ஒரு நாள் காரிக்கு வலி அதிகரிக்க மருத்துவச்சியை அழைத்து வந்து காட்டினான் மாரன். அழகான ஆண் குழந்தையை மருத்துவச்சியிடமிருந்து வாழ்த்தோடு வாங்கிய போது அளவில்லாத ஆனந்தமடைந்தான். பின் மனைவியைப்பார்த்த போது அவர்களுக்குள் இனம்புரியாத அன்பு இமயம் போல் வளர்ந்தது.

பூரிப்புடன் தாமரை போல மலர்ந்த வெட்கத்தால் கருத்த முகம் சிவந்த நிலையில் முகத்தைக் காட்டிய மனைவியை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டான்.

காட்டு வேலைக்குச்செல்லாமல் காரி தன் கைக்குழந்தையை கண்களை விழி காப்பது போல் கவனமாக காத்து வளர்த்தாள்.

தாங்கள் எவ்வாறு வாழ வேண்டுமென ஆசைப்பட்டார்களே அக்குழந்தையை அவ்வாறு வாழ வைக்க வேண்டுமென எண்ணி தாங்கள் படிக்கா விட்டாலும் தங்களது மகன் படித்து அரசாங்க வேலைக்கு போகவேண்டுமென எண்ணியவர்கள் ஊரில் பத்துக்குழந்தைகளுடன் ஐந்தாம் வகுப்புவரை ஒரே ஆசிரியரைக்கொண்ட அரசு பள்ளியில் சேர்த்தனர்.

மாரன் வாழும் ஊர் காட்டு வாசிகள் அதிகமாக வசிக்குமிடம். மிருகங்கள் நிறைந்த, வாகனங்கள் செல்லாமல் நடந்தே செல்ல வேண்டிய கரடுமுரடான பாதைகளைக்கொண்ட மலை கிராமம். இதனாலேயே மருத்துவமனையில் மருத்துவரோ, பள்ளியில் ஆசிரியரோ இல்லாத நிலையே அதிகம். 

இந்த நிலையில் ஒரே ஆசிரியர் மட்டும் தன் மனைவியுடன் வந்து தங்கி குழந்தைகளுக்கு பாடம் நடத்துவார்.

அவரிடம் பள்ளியில் குழந்தையை விடும் காரி பள்ளிக்கு வெளியிலேயே அமர்ந்து கொள்வதும், ஆசிரியரின் மனைவிக்கு வீட்டு வேலை செய்து கொடுப்பதுமாக மகனை கண் பார்வையிலேயே வைத்துக்கொள்வாள்.

காலையில் எழுந்ததும் கூலி வேலைக்காக காட்டுக்குள் சென்று விடும் பெற்றோரின் குழந்தைகள் கூட வீட்டிலிருக்கும் பழைய சோற்றைக் கரைத்துக் குடித்துவிட்டு பள்ளிக்குச்சென்று தேர்ச்சி மதிப்பெண் பெறும் நிலையில், காரியின் மகன் ஓரி மட்டும் ஒவ்வொரு வேளைக்கும் சூடாக சமைத்துக்கொடுப்பதோடு ஊட்டியும் விட்டு, தினமும் இரண்டு வேளை குளிக்கவும் வைத்து கண்பார்வையிலேயே வைத்துக்கவனித்தும் குறைந்த மதிப்பெண் பெறுவதும், அறிவான, சுட்டியான குழந்தையாக இருந்தும் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆடு மேய்க்கச்செல்பவர்களுடன் செல்ல விரும்புவதும் ஓரியின் பெற்றோருக்கு வருத்தமாக இருந்தது.

குழந்தை வீட்டிலேயே உள்ளூர் மருத்துவச்சி எனப்படும் பிரசவக்காரி பிரசவம் பார்த்துப்பிறந்ததால் மருத்துவமனை வாசமே அவனுக்கு கிடைக்கவில்லை. மாறாக தடுப்பூசி போட கீழிருந்து மலைக்கு யாராவது வந்தாலும் வீட்டிற்குள் வைத்துக்கொண்டே பையன் ஊருக்கு சென்று விட்டான் எனக்கூறி அனுப்பிவிடுவாள் . தன்னுடன் பிறந்த தம்பி இறந்ததற்கு ஊசி போட்டதுதான் காரணம் என நம்பியதால் தன் மகனுக்கு ஊசி போடாமல் பார்த்துக்கொண்டாள் படிக்காத வெகுளிப்பெண் காரி.

ஒரு நாள் கீழிருந்து மலைக்கு வந்த கல்வி அதிகாரி மாணவர்களிடம் புத்தகத்தைப்பார்த்து படிக்கச்சொல்லி விட்டு கேட்கும் கேள்விக்கு பதில் கூறச்சொல்ல, மற்ற மாணவர்கள் கூறி பாராட்டு வாங்கிய போது, ஓரி மட்டும் படித்துக்காட்ட மறுத்து அழுதான். இதை உற்றுக்கவனித்த கல்வி அதிகாரி படு சுட்டியாக நடந்து கொள்ளும் ஒரு மாணவன் ஏன் படிக்க மறுக்கிறான்? என யோசித்தவர் அவனை மட்டும் தனியாக அழைத்து சில வார்த்தைகளைத்தானே சொல்லிக்கொடுத்து விட்டு திருப்பிக்கேட்ட போது, சொல்லிக்கொடுத்த அத்தனை வார்த்தைகளையும் பிசகாமல் சொன்ன ஓரியைப்பார்த்து அவருக்குப்பொறி தட்டியது.

அவனது பெற்றோரை அழைத்துப்பேசிய அதிகாரி ஊசி போடமாட்டார்கள் என உத்திரவாதம் கொடுத்து தனது செலவிலேயே அவனை கீழுள்ள ஒரு மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்று முழு உடல் பரிசோதனை செய்து பார்த்த போது அவனுக்கு பார்வை சரியாகத்தெரியாதது தெரிய வந்தது.

“அவனுக்கு பிறவியிலேயே பார்வை குறைபாடு உள்ளதால் அனைவருக்கும் இப்படித்தான் இருக்குமென நினைத்துக்கொண்டான். பெரிய உருவங்கள் தெரிவதால் மற்ற குழந்தைகளைப்போல் விளையாடினாலும், வெளியில் சுற்றினாலும் புத்தகத்தில் எழுத்துக்களைப்பார்த்துப்படிக்க முடியாது. மருத்துவ வசதி இல்லாத ஊரிலிருந்து தங்கள் படித்த குழந்தைகளால் அழைத்து வரப்படும் பெரியவர்கள் கண்ணாடி போட்ட பின் ‘இப்படி எனக்கு கண்ணுத்தெரியும்னு தெரியலையே… தெரிஞ்சிருந்தா நல்லா படிச்சிருப்பனே… வாழ்க்கையே வீணாப்போச்சே….’ எனச்சொல்லி அழுவாங்க. நல்ல வேளை இந்தச்சிறுவனை இப்பவே நீங்க கூட்டீட்டு வந்தது நல்லதாப்போச்சு” என கல்வி அதிகாரியை பாராட்டிய கண் மருத்துவர், வாரம் ஒருமுறை மலை வாசிகளுக்காக தான் இலவச கண் பரிசோதனை முகாம் மலைக்கே சென்று நடத்தப் போவதாகச் சொன்னபோது அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்சியாக இருந்தது.

ஓரிக்கு பார்வை தெரியுமாறு கண் கண்ணாடி அணிவித்து பள்ளிக்கு அனுப்ப, அடுத்த தேர்வில் முதல் மாணவனாகத்தேர்ச்சி பெற்றதும் மாரனும், காரியும் தன் மகனுக்கு கண்களைத்திறந்த கல்வி அதிகாரியைச்சந்தித்து காலில் விழுந்து வணங்கியதோடு அந்த அதிகாரியிடம் அவரது புகைப்படத்தைக்கேட்டு வாங்கிச்சென்று தங்கள் வீட்டில் வைத்து தெய்வமாக எண்ணி வணங்கினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *