கட்டாயமில்லாத காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2024
பார்வையிட்டோர்: 268 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகளை, துள்ளியோட வைக்காமல், அந்தக் கார் நிற்பது தெரியாமலே நின்றது. வழக்கமாக ‘பல்லவன்கள்’ நிற்பதுபோல் வழிமறித்து நிற்காமல், பின்னால் வரும் வாகனங்கள் தாராளமாகப் போகும் அளவிற்கு கௌரவமான இடைவெளி கொடுத்து நின்றது. பயணிக்கப் போகிறவர்கள் ஒரு சிலரின் கவனத்தையும் அந்தக் கார் ஈர்த்தது. புத்தம் புதிய கார். மாலை நேர மஞ்சள் வெயில், அதன் மரகத நிறத்தில் படிந்து, அவனையும் அந்தக் காரையும் மின்ன வைத்தது. இடி வாகனங்களுக்குப் பயந்தோ அல்லது அவற்றை எதிர்கொள்ளவோ கர்ணனின் கவச குண்டலம் மாதிரி, முன்னால் பொருத்தப்பட்ட இரும்பு வளையம்… ரதிக்கு மட்டுமே மன்மதன் தெரிவதுபோல், வெளியே இருப்பவர்கள் உள்ளே பார்க்க முடியாமல், கார்வாசிகளை மட்டுமே பார்க்க வைக்கும் பச்சைக் கண்ணாடி.

டிரைவர் இருக்கையில் இருந்த, ராமச்சந்திரன், இடது பக்கமாக உடம்பை சாய்வுக்கோடாய் நிறுத்தி, அதே பக்கத்து பச்சைக் கண்ணாடியை கீழே இறக்கி, ஓரடித் தூக்கலில் விட்டான். அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக நின்ற பழனியம்மாவை குறி வைத்தபடியே , பார்த்தான். அவளோ, கூட்டத்தோடு கூட்டமாய் தொலைவில் வரும் பேருந்து எண்களை அடையாளப்படுத்த, காமிராக்காரர்கள் போல் முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும் நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்த பழைய பல்லவனுக்குப் பதிலாக, வந்தது மகாபலிப்புரத்துக்காரன் என்பதால், சோர்வாகத் திரும்பி தற்செயலாகத்தான் அந்தக் காரைப் பார்த்தாள். ராமச்சந்திரன், எதிர்பக்கப் பின் கதவை திறந்தபடியே, அவளை நோக்கி, ‘வா… வா…’ என்பதுபோல் முகத்தை கையாக்கி முன்னாலும் பின்னாலுமாய் சமிக்ஞை செய்தான்.

பழனியம்மா, ஒருகணம், அக்கம் பக்கத்தை அலறியடிக்காதக் குறையாகப் பார்த்தபடியே, கைகளை உதறினாள். மறுகணம், நான் வரல…’ என்பதுபோல், முகத்தை பக்கவாட்டில் ஆட்டி, அதற்கு முன்னால் நிறுத்திய கைகளையும், எதிர்மறையில் ஆட்டினாள். இதைக் கவனிக்காத ராமச்சந்திரன், வெளிப்படையாகவே உரக்க அழைப்பிட்டான்.

“ஏறுங்கம்மா.”

பேருந்து நிலைய இளவட்டங்களில் ஒருசிலர், அழைத்தவனை சந்தேகமாகவும், அழைக்கப்பட்டவளை சபலமாகவும் பார்த்தனர். இன்னும் சிலர், பழனியம்மாவின் மீதும், ராமச்சந்திரன் மீதும், கண்களை மாறி மாறி மொய்க்க விட்டனர். ஆனாலும், பெரும் பான்மையோர், எதிர்வரும் பேருந்துகளையே கவனித்தனர். எதிர்பார்த்த பேருந்து நிற்காமல் ஓடியபோது, ராஸ்கல். இவங்கள் நிற்க வச்சு சுடணும் ‘ என்று ஒரு பெரியவர் முணுமுணுத்தார். இந்த கடுசொல், தனக்கும் அந்த ராமச்சந்திரனுக்கும் சேர்த்துக் கூறப் பட்டதாக அவள் அனுமானித்தாள், இதனால், பழனியம்மாள், நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்டு, காருக்குள் ஏறினாள். இப்போது, நின்றால் தான் தப்பு.

பழனியம்மா , அவசர அவசரமாய் தன்னைத்தானே தள்ளிக்கொண்டு, அந்தக் காரின் பின்னிருக்கையில் ஓடி விழுந்தாள். ராமச்சந்திரன், தனது வலதுபக்க வளைவுக் கம்பியை அழுத்த, இடதுப்பக்க பின்கதவு தானாக மூடிக்கொண்டது. பழனியம்மா, கூண்டுக்குள் போன கிளிபோல் தவித்தாள். பரீட்சைக்கு போகும் மாணவன் போல் கொதித்தாள். பிறகு, ராமச்சந்திரனைப் பார்த்து, எரிச்சலோடு கேட்டாள். வார்த்தைகளுக்கு உருவம் இருந்தால், அவை இந்நேரம் ஆவியாகி இருக்கும். அவ்வளவு கொதிப்பு…

“நான் தான் வரமாட்டேன்னு சொல்லாமச் சொன்னேனே…. போகவேண்டியதுதானே…. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க…”

இதற்குள், எந்தக் காரையும் இரையாகக் கருதுவதுபோல், ஒரு கிழட்டு நாயின் ஓலத்தோடு, ஒரு பழைய பேருந்து, காரை மோதாமல் இருக்க, ராமச்சந்திரன், தனது காரை வலது பக்கமாக ஒடித்து, கார்களின் வில்லன்களாய் குறுக்குச்சால் பாய்க்கும் ஆட்டோக்களின் ஒன்றின் பக்கவாட்டை லேசாய் உரசி, இந்த இரண்டுக்கும் பொது எதிரிகளான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மூன்று சக்கர கமை வண்டி, முன்னாலும் பின்னாலும், கிட்டே வந்து பார்.’ என்று சவாலி டுவதுபோல், கூர்மையான இரும்புக் கம்பிகள் துருத்திக் கொண்டிருக்க, நத்தைபோல் நகர்ந்த மாட்டுவண்டி, மனித இரை தின்னிகளான சென்னை குடிநீர் லாரி ஆகியவற்றை முட்டக் கொடுக்காமலும், முட்டாமலும், ஒரு சமயம் லாகவமாகவும், மறுசமயம் முரட்டுத்தனமாகவும், காரில் இயங்கினான். ஆகையால், பழனியம்மா சொன்னது அவன் காதுகளுக்கு, ஒலிகளாக விழுந்ததே தவிர, மூளையில் வார்த்தைகளாகப் பதிவாகவில்லை. இதை, ஆணவம் கொண்ட அலட்சியமாக கருதிய பழனியம்மா , “வண்டியை நிறுத்துங்க. எனக்குப் போகத்தெரியும்.” என்று கத்தியதும், அவனுள் பதிவாகவில்லை .

எப்படியோ, காரை வரிசை வரிசையான வாகன ஓட்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்த திருப்தியோடு, அவளை நோக்கி, பின்பக்கமாய் ஒரு திரும்பு திரும்பி, பிறகு முன்பக்கமாக முகம் திருப்பி, அப்புறம் சாலையில் ஒரு கண்ணும், அவளிடம் ஒரு கண்ணுமாய் சாவகாசமாகக் கேட்டான்.

“ஏதோ பேசினாப்போல கேட்டுது. எப்பவுமே டிரைவர் சிக்னல் நெரிசலில் அல்லாடும்போது, பேசப்படாது; எங்க வக்கீலய்யா மாதிரி, அப்படி இப்படின்னு தொணதொணப்பும் செய்யப்படாது. இது விபத்துல போய் விடும். சரி போகட்டும். என்ன சொன்னீங்க….?”

“நான் வரமாட்டேன்னு சைகை செய்தேனே… நீங்க பாட்டுக்குப் போக வேண்டியதுதானே … கூட்டம் பார்த்த பார்வையில் எனக்கு அவமானமாய் போச்சு.”

ராமச்சந்திரனுக்கு, ரோஷம் வந்தது. அவளை இறக்கி விடலாமா என்பதுபோல், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வரப்போனான். ‘இறங்குங்க’ என்று சொல்வதற்காக, பின்பக்கமாய் திரும்பினான். அவளோ, அந்தக் காரின் உள்ளழகில் சொக்கிப் போனதுபோல், கண்களை சுற்றவிட்டது, அவனைப் பரம சாதுவாகப் பேச வைத்தது.

“ஒரே தெருவுல… அதுவும் பக்கத்து பக்கத்து வீட்ல வேலை பார்க்கோம். எங்கய்யா வீட்ல, தண்ணீர் தட்டுப்பாடுன்னா… அவர், ஒங்கய்யாகிட்ட சொல்ல, நீங்க தண்ணீரை டியூப் வழியா கொடுக்கீங்க. நான் காரைக் கழுவுறேன். ஒங்கய்யா வீட்ல தண்ணி இல்லாதபோது, எங்கய்யாவீட்டு பைப்புல குடிதண்ணீர் எடுத்துட்டு போறீங்க. நானே சிலசமயம், பைப்புல அடிச்சு கொடுக்கேன். இந்தப் பழக்கத்துல , அய்யோ பாவமுன்னு ஏத்துனா… இந்தப்போடு போடுறீங்க…”

“நான் எந்தப்போடும் போடல . பிறத்தியார் தப்பா நினைக்கப்படாது பாருங்க. இதே பஸ் ஸ்டாண்டுலதான், இதே நேரத்துலதான், நான் நிற்கிறது. தினமும், உங்கக் காரு, இந்த வழியிலதான் வரும். நீங்க என்னைப் பார்த்தாலும், பார்க்காதது மாதிரி போவீங்க…. இன்னைக்கு மட்டும் என்ன கரிசனம்?”

“எங்கய்யாவ ஏத்திக்கிட்டுப் போவேன். அந்தச் சமயத்துல, உங்களை ஏத்துனால், என் சீட்டை கிழிச்சிட மாட்டாரா…. இப்போதான், அவர சுப்ரீம் கோர்ட்போறதுக்கு, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு வாறேன். தனியா போறோமேன்னுதான், கூப்பிட்டேன்.”

“அய்யய்யோ .”

“தப்பா நினைத்தா, இப்பவே இறங்கிக்கலாம்.”

“தெரியாத்தனமா உளறிக்கொட்டிட்டேன். நீங்க நல்லவருன்னு எனக்குத் தெரியும். நீங்க படுற பாட்டை சொல்லக் கேட்டிருக்கேன். ஒங்க கல்யாணக் கதையும் எனக்குத் தெரியும்.”

ராமச்சந்திரன், பின்னால் திரும்பி, பழனியம்மாவை திடுக்கிட்டுப் பார்த்தான். காரும், திடுக்கிட்டபடியே, தாறுமாறானது. இதற்குள், பின்னால் வந்த கார்களின் கத்தல்கள், கதறல்கள்… டே… சாவுக்கிராக்கி’ என்ற வசவுகள்..

ராமச்சந்திரன், காரை நெறிப்படுத்தி ஓட்டியபடியே, அவளைத் திரும்பிப் பார்க்காமல், பாதிப்பில்லாமல் பேசுவதுபோல், பாவனை செய்துகொண்டு, கேட்டான்.

“சொல்லுங்க பார்க்கலாம். என் கதையில் எனக்குத் தெரியாம எதுவும் இருக்குதான்னு பார்க்கலாம்.”

“அய்ந்து வருடத்திற்கு முன்னாலேயே, கிராமத்துல, அக்கா மகளை கல்யாணம் செய்தீங்க. அவளோ ஒங்களோட வாழ மறுக்காள். நீங்க, கெஞ்சிப் பார்த்தீங்க…. மிஞ்சிப் பார்த்தீங்க….அவள் மசியல… சரியா?”

ராமச்சந்திரன், தலையை குனித்துக் கொண்டான். இருக்கையின் பின்புறம் லேசாய் தலை சாய்ந்தான். அந்தக் கார், திரைப்படங்களில் – குறிப்பாய்டூயட் பாடல்களில், அரைத்த மாவாய் வருமே, வண்டிச் சக்கரம் மாதிரியான பாலம். அதுதான் அண்ணா சமாதிக்கு அருகே – அந்தப் பாலத்தின் முனையில், சிவப்பு சிக்னலால் நிறுத்தப்பட்டது. அவன், தலை குனிந்தபடியே, கேட்டான்.

“ஒங்களுக்கு அவளைப் பற்றி இவ்வளவுதான் தெரியுமா?”

“நான் கேள்விப்பட்ட அந்த அசிங்கத்தை, சொல்லிக் காட்டுறது நாகரீகம் இல்ல பாருங்க.”

“அவளைச் சொல்லியும் குற்றமில்லை. தோளுல குழந்தையாய் தூக்கி வைத்த மாமன், புருஷனாய் வந்துட்டானே என்கிற ஆத்திரம். அக்காக்காரி அழுதாலும், தம்பிக்காரனுக்கு மூளை எங்க போயிட்டுது என்கிற கோபம். இந்த எதிர்ப்பைக் காட்டத்தான், இன்னொருத்தனோட திரியுறாள்.”

பழனியம்மா, பேச்சை மாற்றப் போனபோது, போக்குவரத்து சிக்னலில் ஒரு மாற்றம். அதைப் பாராமல் தன்பாட்டுக்கு கிடந்தவனை, அவள் உசுப்பிவிட்டாள்.

“அதோ பாருங்க. பச்சை விளக்கு வந்துட்டுது.”

அந்தக் கார் மட்டுமே, ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. பழனியம்மா, தன்னை அறியாமலே, ராமச்சந்திரனின் இருக்கை முனையில், இரு கைகளையும் மடித்துப் போட்டபடியே, அவனுக்குப் பூடகமாக ஆறுதல் சொன்னாள்.

“விட்டுத் தள்ளுங்க. வீட்டுக்கு வீடு வாசல்படிதான். நாம் என்னமோ… நாம் மட்டுமே அதிகமாய் கஷ்டப்படுறோமுன்னு நினைக்கோம். அதுலயும் ஒரு சுகம் தேடுறோம். ஆனால், உலகத்து மனிதர்களோட கஷ்ட நஷ்டங்களை ஒன்று திரட்டி, அதை எல்லோருக்கும் சமமாய் பங்காக்கி கொடுத்தால், பழைய கமையே தேவலைபோலத் தோணுமாம். எங்க பங்களாம்மா, இப்படிச் சொல்வாங்க.”

“வீட்டுக்கு வீடு வாசல்படின்னு சொன்னீங்களே, எந்த அர்த்த த்துல…”

“என் கதை வேற மாதிரின்னாலும், மனநோவுன்னு வரும்போது, ஒங்க கதை மாதிரிதான். ஒருவனுக்கு கட்டிக் கொடுத்தாங்க. குடிகாரனாச்சேன்னு நான் அழுதேன். அரசாங்க உத்தியோகம்…. கழுதப்பயல்தான்… ஆனால், சர்க்கார் கழுதையை மேய்க்கிறானேன்னு , அப்பா சொன்னார். அவர் சொன்னா சொன்னதுதான். இல்லாட்டால், பபளிக்கா அடிப்பார். எவன் கூட்டி திரியுறேன்னும் கேட்பார். எங்க அக்காளை இப்படிக் கேட்டவர்தான். அப்பாவின் வசவும் அடியும், அவனைக் கட்டிக்கிறதை விட பெரிய அவமானம். அதோட, எனக்குப்பின்னாலயும் வயசுக்கு வந்த இரண்டு தங்கச்சிங்க. கூடவே, இந்த மனசு இருக்கே, அதையும் சொல்லணும். நிலைமைக்கு ஏற்ப, அது நம்மையும் ஏமாற்றி, ஏமாந்து போகும். அவரைத் திருத்திடலாமுன்னு ஒரு நப்பாசை. ஆனாலும், கல்யாண மேடையில் குவார்ட்டார்… மறுவீட்டுக்கு போனால் ஆம்… முதல் நாள் ராத்திரியில் புல். இதுதான் ஒவ்வொரு நாளும். அவர்கிட்ட நான் கண்டது. எந்தவித சுகமும் அதிகமாய் கிடைக்கல. ‘அது’ குடிச்சால், ‘இது அதிகமாய் இருக்காதாம்.”

பழனியம்மா, அவரசத்தில் அப்படிச் சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்தாள். அவனும், அதைக் கண்டுக்காததுபோல், பாவனை செய்துகொண்டே, ஆறுதல் சொல்வதாக நினைத்துப் பேசினான்.

“நன்மையிலும் தீமையிருக்கு… தீமையிலும் நன்மையிருக்கு… பத்து பாத்திரம் தேய்க்கிற உங்களுக்கு, இப்போ, சர்க்கார் வேலை கிடைக்கிறதுக்கு காரணமாய் இருந்திருக்காரே.”

“நான் பாத்திரம் தேய்த்தாலும், பத்தாவது வரைக்கும் படித்தவள்.”

“நானும்தான் பிளஸ் டூ.”

“ஏரோபிளேன்ல போற வேலை கிடைத்தாலும், ஒரு தாலிக்கயிறுக்கு ஈடாகுமா? அதாவது – பிறத்தியார் பார்வையில் ..”

“என் பெண்டாட்டி , தப்புத் தப்பு. அக்கா பொண்ணு கழுத்திலயும்தான், நான், கட்டுன தாலி இன்னும் கிடக்குது.”

மீண்டும் மௌனம்.

ராமச்சந்திரன், கார் ஓட்டுவதில் மட்டுமே கவனமானான். பழனியம்மாவும் முன்னிருக்கை உச்சியில் போட்ட கைகளை, பிடரிப்

கட்டாயமில்லாத காதல்

பக்கமாக வளைத்துப்போட்டு, பின்னிருக்கையில் சாய்ந்தாள். அவன் மேற்கொண்டு ஏதும் கேட்டால் பேசலாம் என்ற எண்ணம்… பேசவில்லையே என்ற ஆதங்கம்… தானே பேசலாமா என்ற சபலம்… மனதில் இருப்பதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டுமென்ற

ஆவேசம்.

அந்தக் கார், சாந்தோம் கடற்கரை தேவாலயத்திற்கு, துவார பாலகர்போல் தோன்றும் சிக்னல் கம்பத்தில், மஞ்சளை மறைத்த சிவப்பால் , நிறுத்தப்பட்டது. ராமச்சந்திரன், சலித்தபடியே

பேசினான்.

“ஒரு இடத்துல சிவப்பு விளக்கு விழுந்துட்டால்…. கடைசி வரைக்கும் சிவப்புதான்.”

“இதுக்குப் பெயர்தான், பட்ட காலிலே படும்… கெட்ட குடியே கெடும்’ என்கிறது.”

“அப்படி ஏன் நினைக்கிறீங்க? பட்ட மரமும் துளிர்க்குமுன்னு நினையுங்களேன். எப்படியோ உங்களுக்கு அரசாங்கத்துல பியூன் வேலை கிடைச்சுட்டுது. இதை நினைச்சு ஆறுதல் படுங்க…”

“அய்யோ! இந்த வேலைக்கு நான் பட்டபாடு, வேலை கிடைச்ச சந்தோஷத்தையே விழுங்கிட்டுது. ‘இருசப்பன், குடிச்சு குடிச்சு செத்தது, தற்கொலைக்குச் சமம். மனைவி பழனியம்மாவது திருத்தி இருக்கலாம். திருத்தல்…. அதனால், மனிதாபிமான அடிப்படையில் அந்த அம்மாவுக்கு வேலை போட்டு கொடுக்க முடியாதுன்’னு , ஆபீஸுல , எவனோ ஒருத்தன் கிறுக்கி வச்சதுல, எல்லா கிறுக்கன்களும் கையெழுத்துப் போட்டுட்டாங்க. இதுவும் போதாதுன்னு, நான் கம்பெனி வேலை பார்க்கிறதாயும்… சொந்த வீட்ல குடியிருக்கிறதாயும்… அதனால், மனிதாபிமான அடிப் படையில், தனக்குத்தான், அண்ணன் இருசப்பன் வேலையை கொடுக்கணுமுன்னு பெத்தவங்க தூண்டுதலுல, அவரோட தம்பிக்காரன் எழுதிப் போட்டுட்டான். எங்க அம்மாவோட, சர்வண்ட் குவார்ட்டர், என்னோட வீடாம். பத்து பாத்திரம் தேய்க்கிறது கம்பெனி வேலையாம். இப்படிச் சொல்லிக் கொடுக்கவும் ஒரு வக்கீலு…”

ராமச்சந்திரன், தனது பிடரி பேசுவதுபோல் பேசினான். “அடக்கடவுளே. அப்புறம்…”

“எங்கம்மா தூண்டுதலுல, எங்க பங்களாய்யா தலையிட்டு, அவருக்கு இருக்கிற செல்வாக்குல , வரவேண்டிய வேலையை வாங்கிக் கொடுத்தாரு… அப்படியும் மனகல நிம்மதியில்ல…”

“ஏன்?”

“எனக்கு ஆபீஸுல் வேலை வாங்கிக் கொடுக்க, அங்கேயும் சிலர் முயற்சி செய்தாங்க…. அந்த முயற்சிக்குப் பலனா, பணம் கேட்டாக்கூட பரவாயில்ல… ஆனால் கொடுக்க கூடாததை கேட்கிறாங்க….. சில பிரம்மச்சாரிப் பயல்கள், கல்யாணம் செய்துக்கலாமான்னும் கேட்டாங்க…. இவங்கெல்லாம் செத்துப் போன, என் புருஷனையே நல்லவனாக்குகிற அளவுக்கு குடிகாரங்க… இந்தப் பழக்கம் இல்லாதவங்களுலயும் சிலரு, எனக்காக இல்லை… என் சம்பளத்துக்காக கட்டிக்கச் சொல்றாங்க…”

“அப்போ… எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருக்கப் போறீங்க? இப்போ நல்லாத்தான் இருக்கது மாதிரித் தெரியும். நாற்பது வயசுக்குமேல் அனாதையாய் ஆயிட்டோம் என்கிற உணர்வு ஏற்படும்.”

“என்ன செய்யுறது…. என்னதான் செய்ய முடியும்?”

“கல்யாணம் செய்தால் பழைய புருஷனால் கிடைத்த வேலை போயிடுமேன்னு யோசிக்கிறீங்களா…”

“மனிதாபிமான அடிப்படையில், ஒரு விதவைக்கு புருஷனோடு வேலை கிடைத்து, அவள் மறுமணம் செய்தால்,

வேலையிலிருந்து அவளை நீக்கலாமுன்னு , முன்னால சட்டம்

சொல்லிச்சாம். ஆனால், இதை எதிர்த்து, பல பெண் இயக்கங்கள், போராடுதுனால, ஒரு விதவை, மறுமணம் செய்தாலும், அவளோட வேலை பாதிக்காதுன்னு சர்க்குலர் வந்துட்டாம்.”

“அப்போ ….. உலகத்துல ஆண்களுல நல்லவனே இல்லியா….? ஒருத்தனை கட்டிக்க வேண்டியதுதானே…”

“சரி. ஒங்க அக்கா பெண்ணை என்ன செய்யப் போறீங்க?”

“நான் கழிச்சு கட்டுறதுக்கு முன்னாலலேயே , அவளே கழிஞ்சுட்டாள். ஆனாலும், மனைவி என்கிற முறையில், அவள் மேல் கோபம் வந்தாலும், அக்கா மகள் என்கிற முறையில், இன்னும் பாசம் இருக்கத்தான் செய்யுது.”

ராமச்சந்திரன், கலகலப்பான சிரிப்பை, சோகத்தோடு முடித்தான். அந்தக் காரும், புதிதாய் உருவாகும் அடையாறு மேம்பாலத்தின், கிழக்கே, ஒற்றையடி பாதை போன்ற ஒருவழிச் சாலையில், வாகன நெரிசலுக்குள், முக்கி முனங்கி, ஆவின் பூங்காவைத் தாண்டி, பெசன்ட் நகருக்கு கிளை பிரிந்த சந்தடி இல்லா சாலையில், ஓடுவது தெரியாமல் ஓடியது. இப்போது பழனியம்மா, தன்னை அறியாமலே, வார்த்தைகளை சிந்திவிட்டு, பின்னர், அவற்றை அள்ள முடியாமல், அல்லாடினாள்.

“எனக்கு மட்டும், எந்தவித கெட்டப் பழக்கமோ… நோய் நொடியோ இல்லாத, கம்பீரமான, பாசமான, மொத்தத்தில் உங்களை மாதிரி ஒரு நல்லவர் கிடைச்சால்….”

ராமச்சந்திரன், திடுக்கிட்டானோ… இல்லையோ, அவன் கார் திடுக்கிட்டு நின்றது. அவளை, அவன் ஒரேயடியாய்த் திரும்பிப் பார்த்தான். அதுவரை வெறும் மனுஷியாக தெரிந்தவளை, ஒரு இளம் பெண்ணாக, புதிய பார்வையில் பார்த்தான். அவனுக்கு, கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை, காரும் ஓடவில்லை.

ராமச்சந்திரன் நடுரோட்டில் காரை நிறுத்தி இருப்பதை புரிந்து கொண்டு, மீண்டும் அதை, இயக்கி, பத்து பதினைந்து கிலோமீட்டர் வேகத்தில் நடக்க விட்டான். இதை வேறுவிதமாக எடுத்துக் கொண்டாளோ…. என்னவோ, பழனியம்மா சோகமாக சமாளித்தாள். துள்ளி விழுந்த வார்த்தைகளில் சிலவற்றை எடுக்கப் பார்த்தாள்.

“ஒங்களை மாதிரின்னு சொன்னேனே தவிர, ஒங்களைன்னு சொல்லல.. அடுத்தவன் தொட்ட பெண்ணாச்சேன்னு , நீங்க நினைக்கிறது எனக்குத் தெரியும்.”

அந்தக் கார், அவசர அவசரமாக ஒரு ஆலமரத்தின் குடைக் கிளைகளுக்கு இடையே, ஓரங்கட்டி நின்றது. அவன், அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

“என்ன வார்த்தை பேசிட்டீங்க? நீங்க கிடைத்தால், நான் கொடுத்து வைத்தவன்.”

“ரொம்ப ரொம்ப சந்தோஷம். அப்போ, ஒங்க அக்கா மகள்கிட்ட, நீங்க ரெண்டாவது கல்யாணம் செய்ய சம்மதமுன்னு ஒரு கடுதாசி வாங்கிட்டு வந்துடுங்க…”

“அப்படி வாங்கினாலும், அது சட்டப்படி செல்லாது.”

“என்ன சொல்றீங்க….”

“நான் பெரியவக்கீலோட்டிரைவர் என்கிறத மறந்துட்டிங்க. பலர், அவர்கிட்ட கார்லயோ, ஆபீஸ்லயோ பேசுறதையும், அவர் பதிலளிக்கிறதையும் கேட்டு, நானே, பாதி வக்கீலாயிட்டேன். ஒரு மனைவியோ அல்லது கணவனோ நினைத்தால், விவாகரத்து வழக்கையும், வாய்தா வாய்தாவாய் வருடக்கணக்குல இழுக்கலாம்.”

“அடக்கடவுளே…. என் ராசியே அப்படித்தான். பரவாயில்ல… பட்ட காலுதானே…”

“ஆனாலும், சட்ட விரோதமில்லாத ஒரு வழி இருக்கு. கல்யாணமான ஒருவன், இன்னொருத்திக்கு தாலி கட்டினால் ஜெயிலுக்கு போகணும். அதேசமயத்தில், ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டுல , கூடியும் கொஞ்சியும் வாழலாம். குழந்தைகளும் பெத்துக்கலாம். இந்த ஏற்பாட்டுல, ஆணுக்கு, தன்னோட வாழுற பெண் சொத்துலயோ, பெண்ணுக்கு அவனோட சொத்துலயோ உரிமை கிடையாது. ஆனால், ரெண்டு பேருக்கும் பிறக்கிற குழந்தைகளுக்கு, ரெண்டு பேர் சொத்துலயும் உரிமை உண்டு. சட்ட விரோத்தம்பதிங்கன்னு உண்டு. ஆனால், சட்டவிரோதமாய் பிறந்த குழந்தைன்னு கிடையாதாம். இப்படித்தான் சட்டம் சொல்லுதாம்.”

பழனியம்மா, களிக்கூத்து ஆடினாள்.

“எங்கம்மாவும், ‘இப்போ நீ நாலாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற. அரசாங்கத்துல வேலை பார்க்கிறே… இனிமேல், நீ என் வீட்டு வேலைக்காரி இல்ல . புதுசா ஒரு வீடு பார்த்து, குடிபோயிடுன்னு’ சொல்லிட்டாங்க…. நீங்க சொல்ற ஏற்பாட்டுல எனக்கு சம்மதம்.”

“ஆனாலும்….”

“என்ன ஆனாலும்…”

“ஒங்களுக்கு நாலாயிரம் ரூபாய் சம்பளம். ஓட்டி கீட்டின்னு வேற. இந்த நாட்டுல ஒரே வேலைக்கு பலவிதமான சம்பளம். அரசாங்க டிரைவருக்கு ஆறாயிரம் சம்பளம். சனி, ஞாயிறு லீவு. போதாதற்கு போனஸ். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் மட்டும் லீவு எடுக்கிற டிரைவரான எனக்கு இரண்டாயிரத்து ஐநூறு. என்ன நியாயம் இது?”

“போகட்டும். நம்ம நியாத்த பேசுவோம்.”

“நாலாயிரத்துக்கும், ரெண்டாயிரத்து ஐநூறுக்கும் ஒத்து வருமான்னு யோசிக்கிறேன்.”

“இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். தன்னோட வீட்டுக்காரி, தன்னைவிட எல்லா வகையிலும், மட்டமாய் இருக்கணும் என்கிற நெனப்பு. தெரியாமத்தான் கேட்கிறேன்… வீட்டுக்காரி புருஷனைவிட அதிகமாய் சம்பளம் வாங்கினால், உலகம் அழிஞ்சுடுமா…? குழந்தை குட்டி பிறக்காதா….? உங்களை எப்படியோ நெனச்சேன். கடைசில நீங்களும் சராசரிதான். தெளிவாய் இருந்த என் மனசை ஒரு கலக்கு கலக்கி, சேரும் சகதியுமாய் ஆக்கிட்டிங்க…”

“சரி… சரி. புலம்பாம… முன்னால வந்து உட்காரு…” “பேச்சு ஏக வசனமாய் போகுது.”

“வீட்டுக்காரியை எப்படிக் கூப்பிடுவாங்களாம்?”

“யோவ்! முன் கதவைத் திறக்காமல், எப்படிய்யா உட்காருறது? இந்த சீட்டை தாண்டி குதிக்கச் சொல்றீயா….”

முன்கதவு திறந்தது. ராமச்சந்திரன், அவளைப் பரவசமாய் பார்த்தபோது, அவள் பரபரப்பாய் கேட்டாள்.

“என்னால் நம்ப முடியலய்யா… இப்படியும் அரைமணி நேரத்துக்குள்ளே, காதல் வருமா? இந்தக் காதல் எதுலய்யா சேர்த்தி?”

“இந்தக் காதல் எந்தெந்த வகை இல்லன்னு மட்டும் என்னால சொல்ல முடியும். எதுல சேர்த்தியின்னு சொல்ல முடியாது. இது, உருவக் கவர்ச்சியில் ஏற்படுகிற அவசரக் காதல் இல்ல. தற்கொலை செய்கிற புனிதக் காதலும் இல்ல. ஆடல் பாடல்ல அசந்து, ஏற்படுகிற சினிமாக் காதலும் இல்ல. பெரிசுகள் போல் நினைச்சுக்கிட்டு, பள்ளிக்கூடத்து சிறுசுகள் செய்கிற பால்ய காதலும் இல்ல. பெரியவங்க பேச்சால் ஏற்படுகிற, பாரம்பரியக் காதலும் இல்லை . ஆனால், எந்த வகைக் காதலுன்னுதான் சொல்ல முடியல…”

“நான் சொல்றேன். வாழ்ந்துதான் ஆகணும் எங்கிறதுக்காக ஏற்பட்ட கட்டாய காதல். சரியா?”

“சரியில்ல பழனிம்மா… இது கட்டாயம் இல்லாத காதல் தான். நாம ரெண்டு வருஷமா, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறோம். லேசாய் பேசிக்கிறோம். இது உனக்கும் எனக்கும் தெரியாமலே, நம்ம மனகல, ஒரு ஈடுபாடாய் – ஒரு விதையாய் விழுந்துட்டுது. பயம், கூச்சம் மாதிரியான வறட்டுத் தனங்களையும் மீறி, இதயத்தில் விழுந்த விதை, இப்போ , வாய் வழியாய், காதல் செடியாய் வளர்ந்திருக்கு. நம்ம காதல், கட்டாயமில்லாத காதலுன்னாலும், நெசமான காதல் தான். ஒரு ஆணும் பெண்ணும், ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறது தெரியாமல், ஒரு கட்டத்துல, காதலை வெளிப்படுத்துறதான், நெசமானக் காதல். புரியுதா…?”

“புரியுது… புரியுது… அதோட, இருட்டுனுதும் புரியுது. காரை எடு.”

அந்தக் கார், இப்போது வெளிச்சத்தோடு ஓடியது – அதுவும் இரட்டை வெளிச்சமாய்…..

– வாசுகி – 1991

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *