கடைசி வரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 11,587 
 
 

மகாதேவன் மேல வாங்க.. என அழைத்த குரலைக் கேட்டு தலையை உயர்த்தினான் மகாதேவன். நான்கு பேர் நின்றிருந்தார்கள்.

நம்ம க்ளாஸ் ரூம் இதுதான் என்றான் ஒருவன் அருகிலிருந்த வகுப்பறையை சுட்டிக்காட்டியபடி

மகாதேவன் படிகளில் ஏறி வகுப்பறையை அடைந்தான். அங்கிருந்த நீளமான பெஞ்ச்களை பார்த்தபடியே “எங்க எக்ஸாம் நம்பரையே டேபிள்ல காணோம்.

அதெல்லாம் அப்படித்தான்.. சிரித்தபடி சொன்னான் ஒருவன்

யார் வேணா எங்க வேணா உட்காரலாம் என்றான் இன்னொருவன்

அந்த அறை முழுவதும் மாணவர்களின் பேச்சுக்களால் இரைச்சலாய் இருந்தது.

மகாதேவனுக்கும் உடனிருந்த நண்பர்களுக்கும் வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கும். டி.எம்.இ எனப்படும் இளநிலை பொறியாளர் படிப்பில் மூன்றாம் செமஸ்டர் தேர்வுக்காக வந்திருந்தனர். பி.டெக் தேர்வு எழுதுபர்களும் அங்கு இருந்தனர். எல்லோரும் சம்பந்தப்பட்ட பாடபுத்தகம் வைத்திருந்தனர். எல்லோரும் பகுதி நேர படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள்.

ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார். மாணவமாணவிகள் ஒரு பெஞ்சுக்கு மூன்று பேர் வீதம் அமர்ந்தார்கள். ஆசிரியர் முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்களிடம் விடைதாள்களை கொடுத்து “உங்களுக்கு ஒன்னு எடுத்துக்கிட்டு அப்படியே மத்தவங்களுக்கு பாஸ் பண்ணுங்க” என்றார். தொடர்ந்து, உங்க நம்பர், சப்ஜக்ட் கோட் நம்பர் எல்லாம் சரியா எழுதுங்க. என்றார்.

சரியாக 9.55க்கு ஒரு நபர் வந்து வினாத்தாள் கட்டுகளை கொடுத்து விட்டு போனார். 10.00 மணிக்கு மின்சார மணி சத்தம் கேட்டது. ஆசிரியர் முதலில் பி.டெக் ஸ்டூடண்ட்ஸ் மட்டும் வாங்கிக்கோங்க.. என வினாத்தாள்களை கொடுத்தார். அடுத்து டிப்ளமோ ஸ்டூடண்ட்ஸ் வாங்கிக்கோங்க… என கொடுத்தார்.

மகாதேவன் கேள்வித்தாளை ஒருமுறை முழுமையாக படித்தான். அவன் எதிர்பார்த்தது போல் எளிதாயில்லை. படித்தது எல்லாம் மறந்து போனது போல் ஒரு பதைப்பு. புத்தகத்தின் பக்கங்களை திருப்பும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். அங்கிருந்த பலரும் புத்தகத்தை பார்த்து எழுத துவங்கியிருந்தார்கள். சிலர் விடைக்கான பக்கத்தை தேடிக்கொண்டிருந்தார்கள். மகாதேவன் தெரிந்த விடைகளை எழுதினான். மனதுக்குள் புத்தகத்தை எடுக்கலாமா வேண்டாமா என யோசனை.

அப்போது கையில் துண்டு சீட்டுடன் ஒருவன் வகுப்பறைக்குள் வந்தான். எல்லாம் கவனிங்க…இந்த கொஸ்ட்டின்ங்களுக்கு ஆன்சர் உங்க புக்லயே இருக்கு. டி.எம்.இ க்கு சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. கொஸ்ட்டின் ஒன்.. பேஜ் நம்பர் ட்வெண்ட்டி டூ. கொஸ்ட்டின் டூ பேஜ் நம்பர் சிக்ஸ்டி சிக்ஸ், கொஸ்ட்டின் த்ரீ பேஜ் நம்பர் நைண்ட்டி ஒன்.. என கேள்வித்தாளில் இருந்த பத்து கேள்விகளுக்கும் விடைக்கான பக்கங்களை சொன்னார். அது போலவே பி.டெக் கேள்விகளுக்கான விடைகளையும் சொன்னார். கடைசியில் “செக்கிங் வர்றப்ப யாரும் மாட்டிக்கிட்டா நாங்க பொறுப்பில்ல” என்றார்.

புத்தகத்தை பார்த்து எல்லோரும் விடைகளை எழுதினார்கள். நேரம் ஆக ஆக சிலர் “கை வலிக்குது..பாஸ் ஆக இது போதும்” என கமெண்ட் அடித்து சிரித்தவாறு விடைத்தாள்களை கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு போனார்கள். எல்லோருடைய முகமும் மகிழ்ச்சியாயிருந்தது. இந்த படிப்பை முடித்தால் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என பேசிக்கொண்டார்கள். அவர்களில் மத்திய, மாநில, மற்றும் தனியார் கம்பெனிகளில் பணிபுரிவோர்கள் இருந்தனர்.

மறுநாள் அடுத்த பரிட்சையிலும் இதே மாதிரி எழுத துவங்கும் நேரத்தில் அந்த நபர் வந்து விடைகளை சொல்லி விட்டு போனார். அன்று பரிட்சை முடித்து மகாதேவன் தன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். ஆனால் மனதில் குழப்பம். இப்படியும் பாஸாகனுமா? இப்படியும் சர்ட்டிபிகேட் வாங்கனுமா? என துளைத்தது. ஆனா சர்ட்டிபிகேட்டுக்கு தனி மதிப்பு உண்டே.
பெயருக்கு பின்னால் பெருமையாக போட்டுக்கொள்ளலாமே.

அகத்தின் அழகு முகத்தில் தெரிய, இரவு சாப்பிடும் போது மனைவி கேட்டாள் “என்னங்க எக்ஸாம் கஷ்டமாயிருந்துச்சா”?
“ப்..ச்” என்றவாறு இல்லையென தலையசைத்தான்.

அன்று இரவு அவனுக்கு சரியான தூக்கம் வரவில்லை. கடந்த சிலமாதங்களாகவே தேர்வுக்காக படிப்பதால் தூக்கம் குறைந்து போனது. தெருவில் ஜன நடமாட்டம் இல்லை. தெருவிலே இரு புறமும் நடந்தான்.

மகாதேவன் பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் விடுமுறையில் மெயின் ரோட்டிலிருந்த லேத் (LATHE) பட்டறையில் உதவியாளராக சேர்ந்தான். அங்கேயே வெல்டிங் வேலையும் கற்றுக்கொண்டான். லேத்-தின் முன்பு நிற்க ஆரம்பித்தால் அவனிடம் கொடுக்கப்பட்ட வரைபடத்துக்கேற்ப லேத்தில் பொருத்தப்பட்ட இரும்பு உருளையை மாற்றாமல் அங்கிருந்து நகரமாட்டான். சில நேரம் ஆறு ஏழு
மணி நேரம் கூட ஓய்வில்லாமல் நின்றபடியே இருப்பான். இரும்பின் வெளிப்புறம் கண்ணாடி போல மாறிப்போகும் அவனிடம்.

வெல்டிங் செய்யும் போது புகைப்பட்டு அன்று இரவெல்லாம் கண்களில் நீராக வழியும். இரவு தைலத்தை லேசாக விரலில் தடவி இமைக்கு மேல் போட்டு படுத்துவிடுவான். அரைமணி நேரத்துக்கு கண்களில் எரிச்சல் ஏற்படும். பிறகு சரியாகிவிடும். மறுநாள் காலை வேலைக்கு செல்ல தவறியதில்லை. இரும்பு ஜன்னல்கள் கதவுகள் செய்யும்போது பனையின் மீது கிடத்தியிருக்கும் இரும்பு சட்டத்தின் மேல் வைத்திருக்கும் கட்ரு (உளி) மேல் சம்மட்டியை இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி ஓங்கி அடிக்கும் போது ஒரே அடியில் என்ன விட்டுடு என துண்டுகளாகி போகும். அவற்றை லிவர் ப்ளேட் மேல் வைத்து லிவரால் வளைக்கும் போது அவை அவன் கைக்கேற்ப்ப வளைந்து விரும்பும் வடிவமாக மாறும்.

சில சமயம் ஆஸ்பெஸ்டாஸ் ஓடு பதிக்கும் நேரங்களில் உயரமான இடங்களிலும் முக்கால் அடி அகல சுவரில் தரையில் நடப்பது போல் தயக்கமில்லாமல் நடப்பான். இரண்டு வருட தொழில் அனுபவத்துக்கு பிறகு அரசு ஐ.டி.ஐ யில் சேர்ந்து “டர்னர்” படிப்பு முடித்து சான்றிதழும் பெற்றான்.

தெருவில் நடந்து கொண்டிருந்த மகாதேவன் கையில் அதிர்ந்த அலைபேசியை பார்த்தான். புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

ஹலோ..? என்றான்

ஹலோ மஹா… நான் நம்பி..நம்பி ராஜன் பேசுறேன்.

பத்து வருஷத்துக்கு முன்பு கேட்ட குரல். ஹே நம்பி.. எப்டிடா இருக்கெ..? ஆமா என் நம்பர் எப்டி கெடச்சது” கேட்டான் மகா

கிருபா குடுத்தான்….. ஒனக்கு ஒரு பையன் ஒரு பொன்னு இல்ல… பசங்க எப்டி இருக்காங்க. என்றான் நம்பி

எல்லாம் நல்லா யிருக்காங்க.. ஆமா ஒன்னோட ரெண்டு பொன்னுங்களும் சவுக்கியமா?

எல்லாம் நல்லாயிருக்காங்க… பரவாயில்ல ஞாபகம் வச்சிருக்கியே.

அப்புறம் நம்பி, வேலையெல்லாம் எப்டி போயிட்டிருக்கு..?

நா இங்க கோயம்பத்தூர்ல ஒரு கம்பெனில சைட் சூபர்வைசரா இருக்கேன். நீ எப்டி இருக்கே. பார்ட் டைம்ல டிப்ளமோ படிச்சியே..முடிச்சிட்ட இல்ல..?

இல்லடா பார்ட் டைம்ல படிக்கிறதெல்லாம் பெரிய டார்ச்சர்டா. அத அப்ப டிஸ்கண்ட்டினியூ பண்ணிட்டேன்.

ஏண்டா?

கம்பெனில வேலய முடிச்சிட்டு அங்க க்ளாஸ்க்கு போனா சில சமயம் மாஸ்டர் வரமாட்டாங்க. நாம கொஞ்சம் லேட்டா போயிட்டாலும் வெளியில்யே கொஞ்ச நேரம் நிக்க வச்சுதான் உள்ள வரச்சொல்லி கையசைப்பாங்க. பர்ஸ்ட் செமஸ்ட்டர்ல ஒரு சப்ஜட்டுக்கு ஒரே ஒரு நாள் தான் மாஸ்டர் வந்தாரு. மேக்ஸ் சொல்லவே வேண்டாம். அவ்ரு பாட்டுக்கு நடத்திக்கிட்டே போவாரு.
ப்ளஸ்டூ முடிச்சவங்களுக்கு மட்டும் கொஞ்சம் புரியும். நம்மல மாறி ஆளுங்களுக்கு புரியாது. டியூஷன் சேர்ற அளவுக்கு அப்ப வசதியுமில்ல. நேரமுமில்ல. ஒருமுறை செகண்ட் செமஸ்டர் அப்ப ஒரு சப்ஜக்ட்டுக்கு மாஸ்டரே வரல. ஹெச்.ஓ.டி க்கிட்டபோய் கேட்டோம். அவரு “மாஸ்டர் வரலன்னா நீங்க தாம்பா படிக்கனும். நீங்க கட்டுற பீஸ வச்சு ஒரு மயிரும் புடுங்க முடியாதுன்னாரு”.
பார்ட் டைம் டீச்சர்ஸ்க்கெல்லாம் அப்ப அந்தளவுக்கு சேலரி இல்லையோ என்னமோ..?

“ஆமா..மா பார்ட் டைம்ல படிக்கிறதெல்லாம் அவ்ளோ ஈசியில்ல. நா ஐ.டி.ஐ முடிச்சிட்டு அடுத்த வருஷமே புல் டைம்ல டி.சி.இ சேர்ந்துட்டேன்…” என்றான் நம்பி

படிக்கனும்னு ஆசப்பட்டா மேரேஜ்ஜுக்கு முன்னாடியே படிச்சிடனும். மேரேஜ்ஜுக்கு அப்புறம் படிக்கிறதா இருந்தா வேற வேலைக்கு போகாம எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம இருந்தா தான் முடியும். என்றான் மகாதேவன்

நம்மல மாறி மிடில் க்ளாஸ்க்கு பிக்கலும் பிடுங்கலும் தான லைஃப் எனக்கூறி சிரித்தான் நம்பிராஜன். மகாதேவனும் சிரித்தான்.

சரி விடு மஹா.. பசங்கள நல்லபடியா படிக்க வை.

எங்க விட முடியுது..? ஒர்க் பண்ற எடத்தில எல்லாம் வேல தெரிஞ்சாலும் தெரியாட்டியும் படிச்சவங்களுக்கு ஒரு மரியாத, எங்களமாதிரி ஆளுங்களுக்கு ஒரு மரியாததான். படிச்சிருந்தா ஈஸியா ப்ரமோஷன் வாங்கலாம். இல்லன்னா கஷ்டம் தான்.

ஆமா..மா இங்க கன்ஸ்ட்ரக்சன் சைட்ல காலம்பூரா ஒழச்சு குடும்பத்த, பிள்ளைங்கல காப்பாத்துற சித்தாளு பெரியாளுங்கள வா போன்னு பேசுவோம். அவுங்க வயசானவங்களா இருப்பாங்க. அதே புதுசா அப்பதான் டி.சி.இ முடிச்சிட்டு வருவாங்க அவுங்கள சார்..ம்பாங்க..மேடம்..பாங்க” என்ற நம்பியின் குரலில் வருத்தம் தொனித்தது.

இங்க நம்ம நாட்டில உழைக்கிறவனுக்கு மரியாத யில்ல. சட்டையில அழுக்குப் படாம வேல செய்றவனுக்கு தான் மதிப்பு. ஒடம்பு வலிக்க உழைக்கிறவன கீழ்சாதிக்காரனா பாக்கிறவங்க நம்ம ஆளுங்க. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால நம்ம ஐ.டி.ஐக்கு போயிருந்தேன். கொஞ்சம் கூட ஒரு டெவலப்மெண்ட் இல்ல. அந்த காம்பவுண்ட் வேலியெல்லாம் விழுந்து கெடக்கு.
என்றான் மகாதேவன்.

இங்க நம்மூர்ல ஐ.டி.ஐ படிப்புக்கெல்லாம் மதிப்பு இல்ல. பீ.ஏ…பீ.காம்னு ஏதாவது டிகிரி கோர்ஸ் படிச்சிட்டு, கெடச்ச வேலய செய்துக்கிட்டு, இல்லாட்டி வேலயா கெடைக்காம இருக்கிறவன் கூட கல்யாண பத்திரிக்கையில பேருக்கு பின்னாடி பீ.ஏ.. பீ.காம்னு போட்டுக்குவான். ஆனா ஐ.டி.ஐ படிச்சவன் எத்தன பேரு வெல்டர், டர்னர், ஃபிட்டர்னு போட்டுக்கிறான்..? நீயே கூட போட்டிருக்க
மாட்ட..” என்றான் நம்பி

ம்.. அதத்தான் நானும் சொல்றேன். அந்த படிப்புக்கு மரியாத இருந்தா தான போட்டுக்கு முடியும். ஒருமுறை டிப்ளமோ ஸ்டூடண்ட்டு ஒருத்தன இண்டர்வியூ பண்ணோம். எங்க மேனேஜர் நாலஞ்சு கேள்வி கேட்டார். ஒன்னுத்துக்கும் பதில் சொல்லல. கடைசியா சர்க்கிளுக்கும் பை ஆர் ஸ்கொயருக்கும் என்ன ரிலேசன்னு கேட்டார். அதுக்கும் பதில் சொல்லல. சரி நாங்க லட்டர்
அனுப்புறோம்னு சொல்லி அவன அனுப்பி வச்சார் மேனேஜர்.” என்றான் மகா.

இப்பல்லாம் எங்க ஒழுங்கா படிச்சிட்டு வந்து எக்ஸாம் எழுதுறாங்க. ரொம்ப பேர் பிட் அடிச்சுதான் எழுதுறாங்க. என் சிஸ்டர் டீச்சரா இருக்காங்க. அவுங்க வந்து சொல்வாங்க. பொண்ணுங்க கூட சூப்பரா பிட் அடிக்கிறாங்களாம். அதும் சுடிதார் டிரஸ் கால்கிட்ட ரொம்ப லூஸா இருக்கிறதால தொடைக்கு அடியில வச்சு மறச்சுக்குவாங்களாம். எழுதுறப்ப தொடைக்கு மேல வச்சு துப்பட்டாவில
மறச்சுக்கிதுங்களாம். அவ்வளவு ஏன் போலிஸ் டிபார்ட்மெண்ட்டில இருந்து எக்ஸாம் எழுத வர்றவங்க கூட பிட் அடிக்கிறாங்களாம். என்றான் நம்பி.

நம்பி, நா இப்ப இங்க ஒரு காலேஜ்ல டி.எம்.இ சேந்திருக்கேன். எக்ஸாம் ஹால்ல அப்டியே புக்க டேபிள் மேல வச்சு தான் எல்லாரும் எக்ஸாம் எழுதுறாங்க. நா ஹால் டிக்கட் வாங்க போனப்ப தான் ஒருத்தன் பி.டெக் சேந்தான். அவங்கிட்ட காலேஜ் ஆள் சொன்னாங்க “நீங்க ஃபீஸ கட்டிட்டு எக்ஸாம் அட்டண்ட் பண்ணுங்க. கட்டாயம் நீங்க பாஸ் ஆயிடுவீங்க அவ்ளவுதான் நாங்க
சொல்ல முடியும்னாங்க. அந்த படிக்க வந்த ஆளு “எப்டீங்க க்ளாஸே அட்டண்ட் பண்லயென்னு” கேட்டான். அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம்னாரு அந்த காலேஜ் ஆளு. எனக்கு அப்ப ஒன்னும் புரியல. எக்ஸாம் ஹால்ல தான் புரிஞ்சுது……. என் தலையெழுத்து நானும் அப்படித்தான் எழுதினேன். என பெருமூச்சு விட்டான் மகா.

சரி விடு. ரொம்பல்லாம் ஃபீல் பண்ணாத, இப்பல்லாம் நியாயத்துக்கு மதிப்பில்ல. தைரியமா தப்பு பண்றது கூட இப்ப ஒரு க்வாலிஃபிகேஷன்” என்றான் நம்பி

மகாதேவன் விரக்தியாய் சிரித்தான்.

மறுநாள் காலை வழக்கமாக வேலைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தான் மகாதேவன். “என்னய்யா பரிச்சைக்கு போகலயா?” என்றார் அவனுடைய அப்பா.

அந்த பரிச்சய எழுதி பாஸ் ஆனா அது எனக்கு அசிங்கம்ப்பா. அங்க எல்லாரும் புக்க பாத்து எழுதுறாங்கப்பா. அப்படி புக்க பாத்து எழுதி நானும் படிச்சிருக்கேன்னு பட்டம் வாங்குறத விட நான் படிக்காதவனாவே இருந்துட்டு போறேன். இப்படி பொய் சர்ட்டிஃபிகேட் வாங்கி தான் எனக்கு எங்க கம்பெனியில ப்ரமோஷன் கெடைக்கும்னா எனக்கு அந்த ப்ரமோஷனே வேண்டாம்”
என்ற போது மகாதேவன் கண்கள் கலங்கி குரல் தடுமாறியது. மூக்கை உறிஞ்சி கொண்டு பெரு மூச்சு விட்டான்.

எவன்னா எப்படின்னா எழுதிட்டு போறான், நீ படிச்சு எழுத வேண்டியது தானய்யா. என்றார் அப்பா

எனக்கு அந்த எக்ஸாம் ஹால பாக்கவே அருவருப்பா இருக்குப்பா என்ற போது அவன் கண்ணிலிருந்து நீர்த்துளி விழுந்தது.

அந்த காலேஜ்ல கட்ட பன்னெண்டாயிரம் கடன் வாங்கியிருந்தியே அத அடச்சிட்டியா..? என்றார் அப்பா வருத்தத்துடன்.

போன மாசமே அடச்சிட்டேன்ப்பா. என்றான் மகா.

கடந்த சில மாதங்களாய் படிப்புக்காக நேரம் செலவிட்டதால் வேளையில் சற்று கவனம் குறைந்திருந்தான். இப்போது அந்த சுமை இல்லை. வழக்கம் போல் வேலையில் கவனம் செலுத்தினான். சார்ஜண்ட்டாக இருந்தவன் அடுத்த மூன்று மாதங்களுக்கு பிறகு அலுவலகத்தில் சூபர்வைஸராக பதவி உயர்வு பெற்றான். பொதுவாக டிப்ளமோ முடித்தவர்களுக்கு மட்டுமே அந்த பதவி கிடைக்கும்.
அவனே கூட எதிர்பாரதது. கிடைத்து விட்டது. நேர்மைக்கும் உழைப்புக்கும் அனுபவத்துக்கும் என்றைக்கும் மதிப்பிருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. ஆனால்…!

ஆனால் அலுவலக கலந்தாய்வு கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேச வேண்டிய எழுத வேண்டிய அவசியம் இருந்தது. பலவிதமான பொறியியல் கணக்குகள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆங்கிலத்தில் வருகிற கடிதங்களை புரிந்து அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் எழுத வேண்டியிருந்தது. அவையெல்லாம் பெரிய சவாலாய் இருந்தது அவனுக்கு.

ஒருநாள் இதையெல்லாம் நினைத்தவாறே மேற்கொண்டு படிக்கலாமா..? வேண்டாமா? என யோசித்துக்கொண்டே தன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான். சாலையில் வாகன நெருக்கம் அதிகமாய் இருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் பின் பக்கம் எழுதப்பட்டிருந்த வரிகளை படிக்க நேர்ந்தது. அதில் எழுதப்பட்டிருந்த வரிகள்…

“வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை கல்வி”

அந்த நீளமான சாலையின் முனை வரை அந்த ஆட்டோ அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது.
மகாதேவன் தன் வண்டியை கல்லூரி இருக்கும் பாதையை நோக்கி செலுத்தினான்.

-தமிழ்மன்றம் இணையத்தில் பதிக்கப்பட்டது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *