கடைசி வரை கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 9,960 
 
 

இரவு மணி ஒன்று… விழிகளில் சொட்டுத் தூக்கமின்றி ஈஸிச்சேரில் சாய்ந்திருந்தார், நாதன்.

மனசு மொத்தமும் கனமாயிருந்தது. மாடியறையில்…தொடர் இருமல், கடுமையான அனத்தல், கொஞ்சமும் முடியாமையின் வெளிப்பாடு…

“அய்யோ ஏதாவது கொடேன்…” ஈசானமான கெஞ்சல்

டானிக், தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் சத்தம்னாலும் குறையாத இருமல். எதுவுமே நாதனை அசைத்துப் பார்க்கவில்லை. காலை தினசரியில் படித்த அந்த செய்திக்குள்ளேயே இருந்தார்.

முப்பத்தாறு வருடங்களாகச் செயலற்று படுத்த படுக்கையாக கிடக்கும் பெண்ணுக்குத் தன் கணவனே கட்டாய மரணம் கொடுக்க நினைப்பதா..! அதற்கு ஒரு வழக்கா..? முதல் கட்டமாக வற்புறுத்தி உணவு ஊட்டக் கூடாது என ஒரு கோரிக்கை வேறு… இது எப்படி சாத்தியம்.

மனித உயிர் பொருட்டில்லாமல் போனதா? இல்லை அவஸ்தையில் துடிக்கும் ஜீவனை அமைதிப்படுத்தி விடலாமென்ற “காந்தியம்” வெற்றுப் பொருளாகிப் போனதா?

“சார்…” குரல் கேட்டு நிமிர்ந்தார்.பதட்டத்துடன், மாலா.

“என்னம்மா” என்பதாக ஏறிட்டார், நாதன்.

“அம்மாவ வந்து பாருங்களேன் ரொம்ப சிரமப்படுறாங்க எனக்கே ஒரு மாதிரியா இருக்கு சார்”.

ம்…நோயாளிகளைக் கவனித்துக் கவனித்து அந்த வலி. துடிப்பு எல்லாம் மறத்துப் போன உனக்கே இப்படின்னா…முப்பது வருஷமா மனைவியோட ஈடில்லா இணையாக வாழ்ந்த எனக்கு எப்படியிருக்கும்? ஒருநீண்ட பெருமூச்சை வெளியிட்டு எழுந்தார்.

நர்சு பின்னால் எந்திரத்தனமாக படியேறினார்.

உண்மைதான் அவஸ்தையில்தான் கிடந்தாள் சுந்தரி. பார்த்த மாத்திரத்தில் தீப்பட்ட சூடு கொண்டார் நாதன்.

சட்டென கண்ணீர் கசிய ஆரம்பித்தது. “தூக்க மாத்திரை கொடுத்தியாமா ” கேட்டார்.

“வழக்கத்தை விட ஒன்னு அதிகமா தந்துட்டேன் சார்” இதை நர்சு சொல்லும் போதே கணவனின் கரத்தை இறுக்கிப் பற்றிய சுந்தரி “கூட நாலு மாத்திரைய சேர்த்துக் கொடுக்கச் சொல்லுங்களேன்…நிம்மதியாப் போய்ச் சேந்துடுறேன்”.என்றாள் முணங்கியபடியே.

மனைவியின் தலையை ஆதரவோடு நீவிக்கொடுத்த நாதன் சிரமப்பட்டு அழுகை அடக்கியதும் “மாலா இன்னொன்னு கொடும்மா “நர்சு கொஞ்சம் தயங்க “டாக்டர்ட்ட நான் சொல்லிக்கிறேன்” என்றார்.

நாதன்,சுந்தரியை தன்னவளாக்கிக் கொண்ட போது ஆதரவாய் நின்றவர்கள், தத்தமது அலுவலக நன்பர்கள்தான். காதல் திருமணம்…இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி இது நடந்தது. உள்ளூரிலேயே இருந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வருமென நிறைய யோசித்து, உடனே வெளியூர் கிளைக்கு மாற்றல் வாங்கிப் போய் சந்தோஷமாகத்தான் வாழத் தொடங்கினார்கள்… நாட்களின் நகர்வு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு வருத்தத்தைத் தர ஆரம்பித்தது!

குழந்தையின் வரவு இல்லாது போனதுதான் காரணம். அவர்களும் மருத்துவத்தை தவிர்த்து ஊர் ஊராகப்போய்க் குளம் மூழ்கினார்கள், கோயில் சுற்றினார்கள்… எந்தப் பயனுமில்லை.

நண்பர்களோ “மருத்துவத்துல எவ்வளவோ இருக்கு ரெண்டு பேரும் செக்கப்புக்கு போங்க” என்றனர் .

நாதனுக்கும் சரி சுந்தரிக்கும் சரி அதிலே கடுகளவும் உடன்பாடில்லை. குறையென்பது யாரிடமிருந்தாலும் அது மனசுகளை கீரிப் போட்டுவிடும் என பயந்தார்கள்.

அந்நியோன்யத்தில் சொட்டுச்சொட்டாய் இனம் புரியாத அமிலம் விழும் முகம் கொடுத்து பேசுவதைக் கூட மாயத்திரை மறைத்து விடும். சாதாரண வார்த்தையிலும் இடைவெளியிருப்பதாக தெரியும்.கலந்து பேசினார்கள்.

நமக்கான பாத்திரம் இது, இதிலே இப்படித்தான் நடிக்க வேண்டுமென்பது விதியென நாளடைவில் “உனக்கு நான் பிள்ளை எனக்கு நீ பிள்ளை” யென சராசரியாகிப் போனார்கள் .

நிறைய ஒட்டுதலாக இருப்பார்கள் இருவரும். அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்துப் பார்த்து ‘உச்’ கொட்டுவார்கள். யார் கண்பட்டதோ… சின்னதாக வந்த இருமல், படிப்படியாக மூச்சுத் திணறலாக மாறியது! வைத்தியம் எதுவுக்கும் கட்டுப்படவில்லை. நோயின் மொத்தமும் சுந்தரியை சூழ்ந்தது. உணவுக்கு ஈடாக மருந்து,மாத்திரையும் தொடர்ந்தது.

முதல் முறையாக உறவுகளற்ற தனிமையை நினைத்து இருவரும் கட்டிக்கொண்டு அழுதனர். தேம்பித்தேம்பி அழுதனர். திருமணத்தின் போது துணையாக இருந்த அத்தனை நண்பர்களும் வந்து ஏதேதோ ஆறுதல் கூறிப் பார்த்தார்கள்… ஆனாலும் அழுதனர்.

வேலையை ராஜினாமா செய்தாள்…வந்த பணத்தை மாதம் வருமானம் வரும்படியாக வங்கியில் டெபாஷிட் செய்தனர். டாக்டரின் ஆலோசனைப்படி ஒருநர்சு வந்து வீட்டிலேயே கவனித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்து கொண்டனர்.

நாட்கள் உருண்டன… மனைவியை நினைத்து நிறைய வருந்தினார். சுந்தரியோ தன்னால் கணவனுக்கு முழுமை கொடுக்க முடியவில்லையே என உக்கினாள்.

கழுத்தில் தாலி ஏறிய நாளிலிருந்து ஒரு பதுமையாக வைத்து அழகு வார்த்தாரே…அவர் இன்று…

கணவனின் அரவணைப்பில் அப்படியே மெல்லமாய் அசந்தாள்.

போர்வையைக் கழுத்து வரை போர்த்தி விட்டு “உஸ் அப்பாடா” என்பது போல் திரும்பி மொத்தமாய் மாலாவைப் பார்த்தார் நாதன்.

“என்ன சார் மாடிக்கு கூட்டியாந்து ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனோ. என்னிக்குமில்லாம அதிகமா துடிச்சாங்க அதான் மனசு கேட்கல கீழ வந்தேன். தப்புனா மன்னிச்சுருங்க ”

“காலையிலயிருந்தே இருமறதுக்கும், மூச்சுவிடவும் சுந்தரி சிரமப்பட்டா அதனாலதான் ராத்திரி இங்கேயே தங்கும்மானு சொன்னேன்.”

“சார் கேட்கறேனு தப்பா நினைக்கவேண்டாம்… இருக்கமாவே இருக்கிங்கலே ஏன்னு தெரிஞ்சுக்கலாம?”

டாக்டர் கூறியிருக்கார் மாலா வெளிப்படையானவள் என்று. அதான் கேட்க வேண்டும் என நினைத்ததை துணிந்து கேட்டு விட்டாள்.

மனைவி நன்றாக தூங்குகிறாளா என்று குனிந்துப் பார்த்து உறுதிபடுத்தியதும் “அப்படியெல்லாம் இல்லம்மா…” என்றார்.

அவர் சமாளிக்கிறார் என்பதை புரிந்துகொண்டு “நீங்க பொய் சொல்றீங்க சார். காலையில பேப்பருல வந்த செய்திய நானும் படிச்சேன் ”

கேள்வியாக, நாதன். மறுபடியும் மாலாவே “கொடுமையான வேதனை கூட ஒரு வகையில் சித்ரவதைதான். அதை அமைதிப்படுத்தி விடலாமுனு நினைக்கிறது எந்த வகையிலும் தப்பு கிடையாது.”

“என்னம்மா சொல்ல வர்ற…” சின்னதாக அதிர்ந்துதான் போனார். எதனாலோ உள்ளுக்குள் படபடப்பு…

“இன்னைக்கிருக்கற துரிதத்துல…” அவளை மேலும் தொடர விடாது சைகைகாட்டி நிறுத்தியவர், “நீ என்ன சொல்லவாறேன்னு தெளிவாத் தெரியுது அந்தளவு இரக்கமில்லாதவனா நான்…” என்றார் கடுமையாக.

“சார் நான் சொல்லவந்ததை தப்பாப் புரிஞ்சுட்டீங்க ” பதறினாள்.

“நீ கல்யாணமாகாத சின்னப்பொண்ணு பக்குவம் போதாது. உண்மையான கணவன் மனைவி உறவுங்கறது எந்த சந்தர்ப்பத்துலேயும் விட்டுக் கொடுக்காம இணையா இருக்கறதுதான். அதுவுமில்லாம என்னையே முழுமையா நம்பி வந்தவ இந்த சுந்தரி அவளோட அவஸ்தை பார்க்க சகிக்கலதான். இருந்தாலும் அவளுக்குக் கடைசி வரைக்கும் பணிவிடை செய்வது என்னோட கடமை.”

நாதனின் வார்த்தைகளில் மனைவியின் மேல் தான் கொண்டிருக்கும் அழுத்தமான அன்பைக் காட்டியது.

உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் அந்தச் செய்தியையும், இந்த அம்மாவையும் சேர்த்து சராசரியாக யூகித்தது தவறுதான். மனிதர்களிடம் ஈவு, இரக்கம் குறைந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் நாதனைப் போன்றவர்கள் இருக்கப் போய்தான் மனிதாபிமானமென்பது மிச்சமுள்ளது.

தன்னைத்தானே நொந்து கொண்ட மாலா. “சார்…மன்னிக்கனும் ஏதோ தெரியாத்தனமா… உங்களோட உயர்ந்த எண்ணத்த சராசரியா நெனச்சுட்டேன். உங்களோட இந்த பற்றுதலுக்காகவாது அம்மா சீக்கிரமா குணமாகட்டும். “அதுக்காக…”அவள் தயங்கினாள், எங்கே தன் வேலைக்கு பங்கம் வந்து விடுமோ என்று.

அதைப் புரிந்து கொண்டு, “நீ எப்பவும் போல வந்து போகலாம்” நாதனின் வார்த்தையில் கடுகளவும் கோபமில்லையெனத் தெரியவும் சுந்தரியை உற்றுப்பார்த்தாள் அவளோ நல்ல தூக்கத்திலிருந்தாள்.

“சார் நீங்க போய்ப் படுங்க நான் பார்த்துக்கிறேன் ” மாலா இதைக் கூறவும் சின்னதான பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியபடி தன் அறையை நோக்கிப் படிகளில் இறங்கினார் நாதன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *