கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 9,248 
 
 

எனக்கு வயது இருபத்தி எட்டு.

குடும்ப ஏழ்மை நிலையால், கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியின்றி, தபால் மூலம் மதுரை யுனிவர்சிட்டியில் எம்.ஏ படித்தேன். தற்போது சென்னையில் ஒரு பெரிய கொரியர் கம்பெனியில் வேலை செய்துகொண்டு, வாயைக் கட்டி, வயித்தைக்கட்டி மாதம் இரண்டாயிரம் ரூபாய் திம்மராஜபுரத்தில் இருக்கும் என் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அப்பா கள்ளச்சாராயம் குடித்து குடித்தே மூன்று வருடங்களுக்கு முன்பு குடல் வெந்து இறந்து போனார்.

எனக்கு இருபத்திநான்கு வயதில் ஒரு தங்கை. அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணமாக வேண்டும். அதுதான் என்னுடைய தற்போதைய சவால்.

அதற்கு நான் நிறைய பணம் சேர்க்க வேண்டும். பணம் இல்லாமல் இந்தக் காலத்தில் காலம் தள்ளுவது மிகவும் கடினம். பணம் இல்லாத மனிதர்கள், சமூகத்தில் அங்கீகரிக்கப் படுவதில்லை. ஒரே ஒரு வேலையில் இருந்துகொண்டு அதன் சம்பளத்தில் காலம் தள்ளுவது என்பது புத்திசாலித்தனமல்ல. நிறைய யோசித்து நேர்மையான வழியில் ஏதாவது செய்து உபரியாக பணம் பண்ணுவதுதான் கெட்டிக்காரத்தனம்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளைக்கூட படிப்பைத் தவிர, அபாக்கஸ், ஹிந்தி, ஸ்பெஷல் கிளாஸ் அது இதுவென்று, விளையாட வேண்டிய வயதில் விளையாட விடாமல், நாம் அவர்களை படுத்தி எடுக்கிறோம். அனால் நாம் மட்டும் நிறைய சம்பாதிக்காமல் ஒரே வேலையில் சோம்பேறித்தனமாக உட்கார்ந்துகொண்டு செக்கிழுக்கிறோம். இது என்ன நியாயம்? எனவே நிறைய யோசித்து ஏராளமாக சம்பாதிக்க வேண்டும்.

கையில் பணம் இருந்தால்தான் என் தங்கைக்கு வரன் தேட முடியும். அதற்கு ஏதாவது செய்தேயாக வேண்டும். என்ன செய்யலாம்?

நான் வசிப்பது பாலவாக்கத்தில், கடற்கரையை ஒட்டிய ஒரு வீட்டின் ஒண்டுக் குடித்தனத்தில். எனவே ஒருநாள்கூட நான் கடலையும், கடற்கரையையும் பார்க்காமல் இருந்ததில்லை. எப்போதாவது வெளியூர் போய்விட்டு வந்தாலும், முதல் வேலையாக கடலைப் போய் பார்த்து வந்து விடுவேன். அப்படிப் போய்பார்க்கும்போது, நான் இல்லாததால் கடல் சற்று இளைத்ததுபோல் எனக்குத் தோன்றும். உடனே கடல்நீரை வாஞ்சையுடன் என் உள்ளங் கைகளில் அள்ளி எடுத்துக் கொஞ்சுவேன்.

கடற்கரைக்குப் போகவோ அல்லது அங்கிருந்து திரும்பி வரவோ, குறிப்பிட்ட நேரம் காலம் என்று எதுவும் எனக்குக் கிடையாது. விடியற்காலை நான்கு மணிக்குகூட தனியாகப் போய் இருளில் ஆர்த்தெழும் கடலைப் பார்த்தவாறு நீண்டநேரம் நின்று கொண்டேயிருப்பேன். அவ்விதம் இருளின் அமானுஷ்யமான சூழலில் அலையின் மீது போய் நின்றால், எனக்கு கடலின் மேலேயே நிற்பதாகத் தோன்றும். இயற்கையின் சப்தம் தவிர வேறு ஒலிகள் இல்லாத அந்த அதிகாலை நேரம் எனக்கு ஒரு ஏகாந்தமான சூழல்.

என்னுடைய ஒரே நிரந்தர பொழுதுபோக்கு பாலவாக்கம் கடற்கரை. அங்குதான் மெரினாவைப்போல் கூட்டமிருக்காது.

எனக்கு ரொம்ப பிடித்த இடமே கடற்கரைகள்தான். சில நேரங்களில் மெரீனா, சாந்தோம் அல்லது எலியட்ஸ் கடற்கரைகளுக்கும் சென்று நேரம் போவது தெரியாமல் அமர்ந்து விடுவேன். கடற்கரைக்குப் போய் அமர்ந்துவிட்டால் எவ்வளவு நேரம் ஆனாலும் வீடு திரும்ப மனசே வருவதில்லை. அப்போது அடிக்கடி எனக்கு நானே பேசிக் கொள்வேன். கடற்கரைக்கு நுழைவுச்சீட்டு கிடையாது. அதனால் அங்கு எனக்கு எந்தச் செலவும் கிடையாது.

நான் மெரீனா கடற்கரை செல்லும் தருணங்களில், இதுவரை கடலையே பார்த்திராத பல கிராமத்து சுற்றுலாப்பயணிகள், வாடகை பஸ்களில் சென்னை வந்து, எம்ஜியார், ஜெயலலிதா சமாதிகளை தரிசனம் செய்துவிட்டு, மெரீனா கடற்கரை நோக்கி ஓடிவருகிற பரவசங்களைக் கண்டு நான் பல சமயங்களில் மனம் கனிந்தது உண்டு. பாதுகாப்பு கருதி, பெரியவர்கள் மணற்பரப்பில் அமர்ந்துகொள்ள, குழந்தைகள் கடல் அலைகளில் உடைகள் நனைவதுகூட தெரியாமல் விளையாடுவதை ரசிக்க காணக் கண் கோடி வேண்டும்.

அவைகள் செலவில்லாத சந்தோஷங்கள்.

எனக்கும், என் வறுமை நிலைக்கும் கடற்கரைதான் செலவில்லாத பொழுதுபோக்கு. அதன் அகண்ட மணற்பரப்பில் காலை நீட்டி, கைகளை முதுகுக்குப் பின்னால் மணலில் பதித்து சாய்ந்து அமர்ந்தால் நேரம் போவதே தெரியாது.

கடற்கரை ஏழைகளின் பொழுதுபோக்கு ஸ்தலம். நான் சென்னை வந்ததும் பிரமித்து மயங்கியது கடலைப் பார்த்துதான். அதன் பிரம்மாண்டம் என்னை வசீகரித்தது.

நீர்ப் பிரவாகம் அனைத்திலும் கடல்தான் ஆச்சர்யம் மிகுந்தது, பிரமிக்கக் கூடியது. விரிந்த மணற்பரப்பில், கடல் அலையின் வீச்சின் பரவல் ஒரு நிரந்தர ஆனந்தச் சித்திரம். அதன் ஓயாத அலைகளிலும், பரப்பிலும் மனிதர்களுக்கு ஏதோவொரு செய்தி தளும்பிக் கொண்டிருப்பதாக நான் மயங்கியதுண்டு.

உயிர் பிரியும் தருணத்தில், என் உடல் கடலுக்குள் வீசி எறியப்பட்டு அதன் உப்புச் சுவையை ருசித்துக்கொண்டே நான் மரித்துப் போக வேண்டுமென்ற உருக்கத்துக்கு ஆளாகிப் போயிருக்கிற அளவுக்கு கடல் என்னை ஆக்கிரமித்து என்னுள் குடியேறிவிட்டது.

அன்று ஒரு சனிக்கிழமை. வெயில் தாழ்ந்தவுடன், பாலவாக்கம் கடற்கரைக்குச் சென்று காலை நீட்டி அமர்ந்தேன். எப்பவும்போல எனக்குள் பேசிக் கொண்டிருந்தேன். பணம் சேர்ப்பது பற்றிய, என் ஒரே தங்கையின் திருமணத்தைப் பற்றிய புலம்பல்கள்தான் எனக்குள் அதிகம்.

மணி ஏழரை. நன்றாக இருட்டிவிட்டது. சுற்றியிருந்த கூட்டம் முற்றிலுமாக கரைந்துவிட்டது.

அப்போது சற்று தூரத்தில் தீற்றலாக ஒரு உருவம் கடலை நோக்கி மெல்ல நடப்பது தெரிந்தது. பின்பு சற்று நேரம் அங்கேயே நின்றது. என் புலன்கள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தன கைகளின் மணலைத் தட்டியபடி, எழுந்து நின்று இருட்டில் உற்றுப் பார்த்தேன்.

அந்த உருவம் விறு விறுவென கடலுக்குள் செல்ல ஆரம்பித்ததும் அது ஒரு தற்கொலை முயற்சி என்பது புரிய, நான் ஓடிப்போய் இடுப்பளவு கடல்நீரில் நின்றிருந்தவனை கட்டிப் பிடித்து என் பலம் கொண்டமட்டும் கரையை நோக்கி இழுத்தேன்…

ஓ காட்…மார்பின் மென்மையான ஸ்பரிசங்களில் அது ஒரு பெண் என்பதை உடனே உணர்ந்துகொண்டேன். அவளை கரைக்கு கொண்டுவந்து பிறகு பாலவாக்கம் கடற்கரை ரோடின் வெளிச்சத்தில் பார்த்தபோது, வெள்ளை யூனிபார்மில் அவளுடைய டிரைவர் அங்கு ஓடி வந்து பதட்டத்துடன், “மேடம் என்ன ஆச்சு, புடவையெல்லாம் ஈரமாக இருக்கிறதே?” என்றான்.

அவள் அதட்டலாக “ஒன்றும் இல்லை பெரிய அலை அடித்தது அவ்வளவுதான். நீ போய் வண்டியில் இரு, நான் வரேன்” என்றாள்.

அவன் தயக்கத்துடன் என்னைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்து அகன்றான்.

அவன் சென்றபிறகு அவள் என்னிடம், “என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? என்னை நிம்மதியாக சாக விடுங்கள் ப்ளீஸ்” என்றாள்.

அவள் குரலில் ஏகத்துக்கும் விரக்தி இருந்தது.

“மேடம், தற்கொலை செய்து கொள்வது சுலபம். அது கோழைத்தனம். போராடி வாழ்க்கையில் வெற்றி காண்பதுதான் நமக்கு சவால். உங்கள் வீடு எங்கிருக்கிறது? உங்கள் கணவரிடம் உங்களை பத்திரமாக கொண்டு சேர்ப்பது என் கடமை.”

“என் கணவர் இறந்து மூன்று மாதங்களாகிவிட்டன. அதனால்தான் என் தற்கொலை முயற்சியே.”

அதன் பிறகு, அவளிடம் நல்லவிதமாகவும், அன்பாகவும் பேசி மனதை மாற்றி, அடையாறில் இருக்கும் அவள் வீட்டில் கொண்டுவிட்டேன். அவளுடைய அம்மாவும் அப்பாவும் எனக்கு ஏராளமாக நன்றி தெரிவித்தனர். அவளின் அப்பா ஒரு பெரிய தொழிலதிபராம். இன்னொரு காரை அவரே ஓட்டிக்கொண்டு வந்து என்னை பாலவாக்கத்தில் இறக்கிவிட்டார்.

-௦-

அவளின் அப்பாவின் கருணையால், அடுத்த மூன்று மாதங்களில் நான் அவருடைய கார்கோ கம்பெனியில் ஜி.எம் ஆகிவிட்டேன்.

அதற்கடுத்த ஆறே மாதங்களில், ஒரு நல்ல வரன் பார்த்து என் ஒரே தங்கையின் திருமணத்தை அவர்தான் முன்னின்று நடத்தி வைத்தார்.

அடுத்த ஒரு வருடத்தில் எனக்கும், என்னால் காப்பாற்றப் பட்டவளுக்கும் சிறப்பாக கல்யாணம் நடந்தது. அவள் ஒரு விதவை. என்னைவிட ஒரு வயது பெரியவள். ஸோ வாட்? நான் தற்போது அந்தக் கார்கோ கம்பெனிக்கு மானேஜிங் டைரக்டர்.

என் வாழ்க்கையை பணத்துடன் வளமாக்கிய கடல்மாதாவை நான் மறக்கவில்லை. அவளுக்கு நன்றிசொல்ல நான் கடமைப் பட்டவன். அதற்காக காத்திருந்தேன்.

அன்று ஞாயிறுக் கிழமை. காலை நான்குமணி. வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அடையாறில் இருந்து பாலவாக்கம் கடற்கரைக்கு என்காரை ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தினேன். காரை விட்டிறங்கி, விறு விறுவென மணல்பரப்பில் நடந்து சென்று, கடல் அலைகளின் மீது சிறிது நேரம் நின்றேன். கடல் என்னைப் பார்த்து சந்தோஷத்துடன் ஆர்ப்பரித்து குதூகலித்தது.

பின்பு குனிந்து பக்தியுடன் என் உள்ளங் கைககளில் கடல் நீரை அள்ளிப் பருகினேன்.

கடல்நீர் இனித்தது.

திரும்பி காரை நோக்கி நடந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *