கடல் அலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 4,496 
 
 

இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை நேரமாகிவிட்டது என்று குழந்தைகளையும், ஒருசிலர் தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டு சென்றார்கள். ஒருசிலர் பாவம் என்ற தோரணையில் கூட பார்த்து சென்றிருக்கலாம்.

மனிதக் கூட்டங்கள் தன்னை அதிசயமாய் பார்த்து செல்வதையோ இல்லை பாவமாய் பார்த்து செலவதையோ கண்டு கொள்ளும் மனோநிலையில் பெரியவர் இல்லை.

இப்பொழுது பெரியவர் இன்னும் வரக் காணோம் என்று பதட்டப்பட்டு தேடுவோர் யாருமில்லை. காணாமல் போய்விட்டார் என்று கதவை இழுத்து மூடிக் கொள்ள தயாராய் இருக்கும் கூட்டத்தில் தான் போய்த்தான் சாதிக்க என்ன இருக்கிறது? இதை முன்னரே தெரிந்தே தன்னைவிட்டு போய்விட்ட கமலாவை சபித்தார். உன்கூட ஐம்பது வருடம் குப்பை கொட்டியும் உன்குணம் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டதற்காக தன்னை சபித்துக்கொண்டார்.

தனக்காக ஒரு உயிர் காத்திருப்பு என்பது ஒரு மனிதனுக்கு பலம் என்பது அவள் தன்னை விட்டு போய்விட்ட ஒருவருடத்துக்குள் புரிந்துவிட்ட ஆயாசம் .பொங்கி வரும் கடலலைகள் ஆக்ரோசமாய் வந்து கரையில் மோதி செல்வதை பார்ப்பதால் குறைவது போல் தோன்றிக் கொண்டே இருக்கிறது. தான் மாதம் தவறாமல் பெற்றுக் கொண்டிருக்கும் ஓய்வுத் தொகையும், ஒரு சில சொத்துக்கள் மட்டுமே தன்னிடம் உறவுகளுக்கு இன்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

எத்தனை முறை பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காத இந்த அலைகளின் ஆக்ரோசத்தை தனக்கு முன்னால் எத்தனையோ கோடி ஆண்டுகளாக ஜீவராசிகள் பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். அத்தனை கோடி ஆண்டுகளில் தானும் கூட ஒருவனாய் முற்பிறவியில் பார்த்து இரசித்தோ பயந்தோ போயிருக்ககூடும். இல்லை இதிலே விழுந்து மாய்ந்து போயிருக்கவும் கூடும். ஏன் இப்பொழுதுகூட இவைகளை பார்க்க பார்க்க மனம் இதனுள்ளே போய்பார்த்தால் என்ன ? என்றுதானே தோன்றிக் கொண்டிருக்கிறது.

நன்கு இருட்டிவிட்ட அந்த இருளில் சட்டென தீக்குச்சி உரசும் சத்தமும், ஒரு தீபஓளி தோன்றி புள்ளியான “கங்காக” மாறுவதை பார்த்தும் எந்த அசைவும் இல்லாமல் கடலலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது அந்ததீ “கங்கு” அருகில நெருங்கி வருவதை பார்த்துக் கொண்டு இருந்தாலும் எந்த அசைவையும் காட்டாமல் இருந்தார்.

யாரு அது இந்த நேரத்துல?

கேள்வி கேட்டவனின் குரல் கடூரமாய் இல்லாவிட்டாலும் முதிர்ந்து இருப்பதை உணர்ந்து இருந்தார். மீண்டும் அந்த குரல் அவரை உசுப்பியது யார் இந்த நேரத்துல?

பெரியவர் இப்பொழுது யார் வேணும் உனக்கு? கேள்வி திரும்பியதில் சற்று தடுமாறியவன்

மீண்டும் ஒரு தீக்குச்சியை உரசி அந்த வெளிச்சத்தில் உற்றுபார்த்தான். அந்த வெளிச்சத்திலேயே வந்தவனை இவரும் உற்றுப்பார்க்க திடீரென்று வெடிசிரிப்பு அவனிடமிருந்து வெளிப்பட்டது.

என்ன பெரிசு, வீட்டுல கண்டுக்க மாட்டேங்கறாங்களா? அதான் கோச்சுக்கினு உக்காந்திருக்கறயா?

சாவதானமாய் வந்த கேள்வி இவருக்கு சற்று சலனத்தை தர, மீண்டும் அவனே தொடர்ந்தான் விடு பெரிசு, ஒவ்வொருத்தனுக்கும் ஒரு கவலை, ம்…ம் பெருமூச்சுவிட்டவன் இந்த மனுசங்களே இப்படித்தான். இதுல கட்டுனவளும் ஒண்ணூதான் பிறந்தவங்களும் ஒண்ணுதான்.

அப்படி என்ன இந்த வயசுக்குள்ள வேதாந்த்த்தை கண்டுட்ட?

கேள்வி கேட்ட பெரியவரை ஆச்சர்யத்துடன் பார்த்தவன் என்ன பெரிசு இப்படி கேட்டுட்டே? இங்க ஒருத்தனுக்காச்சும் மனசாட்சி இருக்கான்னு சொல்லு பார்ப்போம். என் வீட்டுலயே எடுத்துக்க, உழைச்சு கொட்டுனேன் ஆத்தாளுக்கும், அப்பனுக்கும், அதுகளாச்சும் நன்றியோட இருந்துச்சா, நான் உழைச்சு கொட்டுனகாசுல மத்தவனுங்களைத்தான் தாங்குதாங்குன்னு தாங்குச்சுங்க. அதைவுடு, சம்சாரம் வந்துச்சு, அதுக பெத்த குழந்தைகளுக்கு உழைச்சு கொட்டுனேன், அதுக மட்டும் தாங்குச்சுங்களா?

இப்பபாரு வேலை செய்ய முடியலை, உடம்பு ஒத்துக்கமாட்டேங்குது, எனக்கு ஒருத்தனுக்கு சோறு போட இதுகளுக்கு முடியமாட்டேங்குது. சும்மா தண்டத்துக்கு ஒக்காந்துக்கினிக்கிறான், அப்படீன்னு சொல்லி சொல்லி காட்டுதுங்க புள்ளைங்க. இதுக்கு அவ அம்மாளும் ஒத்து ஊதுது. நீயே சொல்லு பெரிசு, நான் உழைச்சு இதுகளுக்குத்தான கொட்டுனேன், அப்ப அப்ப கொஞ்சம் சாராயம் ஊத்துக்கினேன், ஒருநாளைக்கு ஒருகட்டுபீடி இழுத்துக்குவேன், இவ்வளவுதான், இதுல ஏதோ கொள்ளையே போனாப்பல சும்மா சும்மா சொல்லி காட்டிகிட்டு இருக்காளுங்க.

பெரியவரின் கவனம் கடலைகளையும் மீறி இவன் எச்சில் தெறிக்க புலம்புவதை காது கொடுத்து கேட்க ஆரம்பித்தது. தன்னையும் மீறி சிரித்துவிட்டார். அவ்வளவுதான் அவனிடமிருந்து பெரும் சீற்றமாய் கேள்விகள் வந்தன.

என்னாத்துக்கு சிரிக்கற? என்னைய பார்த்தா எங்க ஊட்டாளுங்களுக்கு கேனப்பயைனா தெரியறன்னா உனக்கும் நான் அப்படித்தான் தெரியறனா? இந்தாபாரு இந்த ராக்கி தள்ளுவண்டி இழுத்தானா மூணு டன் சாமானைகூட இழுப்பான், இப்ப மூச்சு இழைக்குதேன்னு தான் வண்டி இழுக்க போறதில்லை.

பெரியவர் அவனின் கோபத்துக்கெல்லாம் அசராமல் மீண்டும் சிரித்து நான் எண்பதுல புலம்பறதை நீ அம்பதுல புலம்பறே அவ்வளவுதான், சொல்லி மீண்டும் சிரித்தார்.

ஓ உனக்கும் அதான் பிரச்சினையா? அதுதானே பார்த்தேன், பெரிசு இந்த உலகத்துல நல்லதுக்கெல்லாம் காலமில்லை, வயசு இருந்துச்சுன்னா எங்கியாவது ஓடிப்போயி புழைச்சுக்கலாம், கருமம் வயசும் போய் தொலைஞ்சு இந்த பாடாவதிக கிட்ட சீரழியோணுமின்னு நமக்கு தலைஎழுத்து. புலம்பியவன் அப்படியே அந்த மணலில் படுத்து ஆகாயத்தை வெறித்தான்.

பெரிசு ஆகாசத்தை பாத்துக்கினியா ஒவ்வொரு நட்சத்திரமும் தனித்தனியாத்தான் இருக்கு, எங்கியாவது ஒட்டிக்கினு இருக்குதா? மனுசனுங்க மட்டும் தான் ஒட்டிக்கிணு இருக்கோம் ஒட்டிக்கிணு இருக்கோமுன்னு சொல்லி ஒருத்தனை ஒருத்தன் புறவாண்டி தெரியாம குத்திக்கிறானுங்க., நாமகூட செத்தா அங்க போயி இருந்துக்கணும்.

திடீரென்று நான்கைந்து பேர் நடந்து வரும் சத்தம் கேட்டது, உங்கப்பன் இங்கதாண்டா எங்கியாவது படுத்திருப்பான்,

இந்த குரலை கேட்டவுடன் விறுக்கென்று எழுந்தவன் என் வீட்டுக்காரி தேடி வந்துட்டான்னு நினைக்கிறேன், மெல்ல எழுந்து உட்கார்ந்தான்.

ஏய் மூதி சாராயம் குடிக்க காசு கொடுக்க முடியாதுன்னா இங்க வந்து படுத்திக்குவியா? அவனை எழுப்பி தரதரவென இழுத்து சென்றனர்.

பெரியவர் கடலை மீண்டும் பார்க்க கடலைகள் தன்னுடைய வெண்மை நிறத்தை காண்பித்து சிரிப்பது போல தோன்றியது. நானும் இப்படித்தான் கரையில் வந்து தேடி மீண்டும் கடலுக்குள் போகிறேன். இப்படி சொல்வது போல தோன்றியது.

பெரியவர் மெல்ல எழுந்தார். மணி ஒன்பது இருக்கலாம், வீட்டுக்கு மெல்ல போய்விடலாம், தடுமாறி ரோட்டுக்கு வந்தவர் அருகில் கார் வந்து நின்றது. தாத்தா எங்க போயிட்டீங்க? உங்களை எல்லாரும் தேடிக் கிட்டே இருக்காங்க, கதவை திறந்து கூவி கொண்டே ஒரு இளைஞன்.

தன்னையும் அறியாமல் திரும்பி கடலை பார்த்தார் பெரியவர். கடல் அலை மீண்டும் கடலுக்குள் சென்று கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *