(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சுவாமிநாதன் தஞ்சாவூரில் இருக்கும் மனோகர் வீட்டுக்குப் போனார்.
“வா சுவாமிநாதா…!”- மனோகரன் வாய் நிறைய வரவேற்றார். ஆனால், வழக்கமாக சுவாமிநாதனைத் தேடிச் செல்லும் மனோகரின் மனசோ, ‘இவன் ஏன் என்னைத் தேடி வந்திருக்கான் இப்போ?’ என்று எண்ணியது.
“மாமா?”
“சொல்லு சாமி… என்னா சேதி?”
“பூர்வீக வீடு வித்ததுல, உங்க பங்குக்கு சில லட்சங்கள் வந்திருக்குல்ல. எனக்கு ஒரு லட்சம் கடனாக் கொடுத்து உதவுங்க மாமா…”
“ஏகப்பட்ட செலவு இருக்கு சாமி. கொடுக்கற சூழ்நிலை இல்லே சாமி. ஸாரி…!”
“அப்படி என்னதான் செலவு மாமா?”- உரிமையோடு கேட்டான் சாமிநாதன்.
“தாயா புள்ளயா இருந்தாலும், மாமன் மச்சானா இருந்தாலும் இதையெல்லாம் பர்ஸனலாத்தான் வெச்சிக்கணும். வெளிய சொல்ல முடியுமா… நீயே சொல்லு? வருத்தப்படாதே சாமிநாதா… கடன் கொடுக்கற நிலைல நான் இல்லை. சரியா?”
“சரி மாமா வரேன்…! எனக்கு ஏதும் வருத்தமில்லை…”-என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் சாமிநாதன்.
‘நம்மகிட்டே இவ்வளவு கறாராப் பேசி அனுப்பிட்ட மனோகர் என்கிட்டே கடன் கேட்டு நிச்சயமாக வரமாட்டார்..! அப்படியே வந்தாலும் அவர் சொன்ன பதிலையே அவருக்குச் சொல்லிவிடலாம்…!’ என்ற எண்ணத்தோடு வீட்டுக்குச் சென்றார், பல லட்சங்களை ஒரு சில நாட்களில் பணப்பயனாகப் பெறப்போகும் சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற சுவாமிநாதன்.
– ஆகஸ்ட், 2023, கதிர்’ஸ்
மிக நன்று
மிக அற்புதமான கதை