கடன் என்ன பெரிய கடன்?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 3,875 
 

ரங்கசாமி ரங்கசாமி தோளை பிடித்து உலுக்கிய உலுக்கலில் சட்டென தன் நினைவுக்கு வந்தான் ரங்கசாமி ! என்ன என்ன விழித்து கேட்டான் உலுக்கிய சக தொழிலாளியிடம்.

ஆமா போ வர வர உனக்கு வேலை செய்யும்போதே தூங்கற பழக்கம் வந்துடுச்சு, “ராக்கப்பன் கடையில இருக்கற “எச்சலை கூடைய” எடுத்துட்டு வந்து வண்டியில போடு, அலுத்துக்கொண்டே சொன்னான் அந்த சக தொழிலாளி

ரங்கசாமி இப்பொழுதெல்லாம் யோசனை செய்த மன நிலையிலேயே இருக்கிறான். இல்லையென்றல் பித்து பிடித்தாற் போல் இருக்கிறான், என்று கூட வைத்து கொள்ளலாம். கூட வேலை செய்தவர்கள் அவன் மீது பரிதாபம் கொள்வது போல் காட்டிக்கொண்டாலும் அவனை பற்றி மனதுக்குள் ஒரு ஆசூயையே கொண்டிருக்கிறார்கள். இது ரங்கசாமிக்கு தெரிய வாய்ப்பில்லை. அவனை பொறுத்தவரை தான் மிகவும் இக்கட்டான நிலைமையில் இருப்பதாகவும் அதிலிருந்து எப்படி மீள முடியும் என்கிற யோசனையிலேயே இருக்கிறான்.

இவனுடன் பணி புரிபவர்கள் அசூயையை கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது, கை நீட்டி யாரிடமும் காசு கேட்காதவன் டூட்டிதான் முதல் என்று வேலைக்கு வந்து கொண்டிருப்பவன் “(முக்கால் செண்ட்டில் (230 சதுர அடியில்)” ஒரு சிறிய வீட்டை கட்டி விட்டான், அதுதான் மற்றவர்கள் அவன் மீது கொண்டிருந்த அசூயைக்கு காரணம்.

ரங்கசாமி நான் முதல்லயே சொன்னேன் நீ கேக்கலை,, அங்க இங்க கடன் வாங்கி ஒரு வீட்டை கட்டுனே. இப்ப நாம வாங்க ஆறாயிரம் ரூபாய் சம்பளத்துல கடனை கட்டுவியா ? உன் பொண்டாட்டி குழந்தைக்கு சோறு போடுவியா? அவனுடன் குப்பை அள்ளும் கந்தசாமி கேட்டான்.

ரங்கசாமி ஒன்றும் பதில் சொல்லாவிட்டாலும் அவசரப்பட்டு அந்த வீட்டை கட்டியிருக்க கூடாதோ, அதுவும் கடன் வாங்கி கட்டுனது தப்போ, இப்படியான யோசனை அவன் மனதுக்குள் ஓடிக்கொண்டுதான் இருந்தது

இவன் ஒன்றும் கார்ப்பரேசனின் நிரந்தர பணியாளர் இல்லை. இவனுடன் பத்திருபது பேர் தற்காலிக ஊழியர்களாக நகரில் சேர்த்து வைத்து இருக்கும் குப்பைகளை லாரியில் ஏற்றி கொண்டு போய் குப்பை கிடங்கில் கொண்டு சேர்க்கும் வேலையில் இருக்கிறான்.

அந்த குப்பைகளின் நாற்றமும், அதனோடு நாள் முழுக்க இருப்பதும் தாங்க முடியாமல் அவனுடன் இருந்தவர்கள் வாங்கும் சம்பளத்தில் முக்கால்வாசியை குடித்தே முடித்து விடுவார்கள். போதாதற்கு அங்கங்கு டீ கடைகளில் உணவு விடுதிகளில் அவர்கள் சேமித்து வைத்திருக்கும் குப்பைகளை அள்ள போகும்போது அவர்கள் கொடுக்கும் தொகைகளோ அல்லது உணவுகளையோ ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.

ரங்கசாமி இதில் எதுவும் கவனம் கொள்ளமாட்டான். அவனுண்டு அவன் வேலையுண்டு என்று வேலை செய்வான். இவனது வேலை சுத்தத்தை பார்த்து ஒரு சிலர் இவனுக்கு ஏதாவது கொடுக்க வந்தாலும் மறுத்து விடுவான். இருந்தாலும் உண்மையில் கொடுக்க நினைப்பவர்கள் வற்புறுத்தி அவனிடம் திணித்து விட்டு போவார்கள். அதை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்வான். ஆனால் அதை கூட பணமாக கொண்டு போகாமல் வீட்டுக்கு திண்பண்டங்களோ, பொருட்களோ வாங்கி கொண்டு போய் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவான்.

ரங்கசாமி தன் மனைவியுடன் மாமியார் வீட்டில் ஒற்றை அறையில் அந்த மாநகரில் வசித்து வந்தான். குழந்தைகள் இரண்டு ஆகியும் அவனால் அந்த இடத்தை விட்டு பெயர விருப்பமில்லாமல்தான் இருந்தான். காரணம் வாடகை இல்லை, மாமியார் மட்டும் இருந்தாள், இதனால் இவன் மனைவிக்கும் குழந்தைக்கும் தக்க துணையாகவும் இருந்தது. அது மட்டுமல்ல மாமியாரும் கார்ப்பரேசனில் வேலை செய்து ஓய்வு பெற்றிருந்ததால் அவளுக்கு வந்து கொண்டிருந்த வரும்படியும் இவர்கள் குடும்பத்துக்கு போதுமாக இருந்தது.

அதற்கெல்லாம் வேட்டு வைத்தது போல் மச்சினன் திடீரென்று மாமியார் வீட்டுக்கே தன்னுடைய மனைவி குழந்தைகளை கூட்டி வந்து விட்டான்.

ஆரம்பித்து விட்டது உள் நாட்டு குழப்பம், தம்பி சம்சாரத்துக்கும் இவன் மனைவிக்கும் ஒத்து போகாததால் தினம் தினம் ஏதொவொரு புகைச்சல் வந்து கொண்டே இருந்தது.

மச்சினனும் முன்னர் கொடுத்த மரியாதையை இவனுக்கு அளிக்க மறுப்பதாக தெரிந்தது. வேறொரு வீடு வாடகைக்கு போவதற்கும் இவனுக்கு மனமில்லை, பணமுமில்லை. என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்தான்.

அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு யோசனை உதித்தது, இவன் அப்பா அம்மாவுக்கு அவர்கள் பணி செய்து கொண்டிருந்த பொழுது அரசாங்கம் கொடுத்த முக்கால் செண்ட் நிலம் சும்மா போட்டு வைத்திருந்தது. அவர்கள் இருவரும் மேலோகம் போய் சேர்ந்து நான்கைந்து வருடங்கள் ஆகியும் விட்டது.

சரி அந்த இடத்தில் நாம் ஒரு வீட்டை கட்டி குடி போனாலென்ன ? இந்த யோசனை உதித்த உடன் அவன் அவனுடன் வேலை செய்து கொண்டிருந்த எல்லோரிடமும் யோசனை கேட்டு விட்டான். ஒருத்தர் கூட வீட்டை கட்டு என்று சொல்லவில்லை, நாம வாங்கற சம்பளத்துக்கு இது எல்லாம் சரிபட்டு வருமா? இப்ப என்ன குறை? பேசாம மாமியார் வீட்டுலயே இரு, உன் பொஞ்சாதிய அட்ஜஸ்ட் பண்ணி போவ சொல்லு. நமக்கே வேலை நிரந்தரமில்லை, எப்ப வேணா நிறுத்திடுவாங்க,

அவன் மனைவி கேட்கவில்லை, அவள் அம்மாவிடம் அழுது புலம்பி கொஞ்சம் பணம் கடனாக பெற்றாள், இவனும் அங்கு இங்கு வட்டிக்கு வாங்கி தெரிந்த கொத்தனாரை பிடித்து எப்படியோ இரண்டு மாததிற்குள் ஒரு புறாக்கூடு போல ஒரு வீட்டை கட்டி அதற்குள் குடியும் போய் விட்டான்.

அவனுக்கு என்று சொந்தமான வீடு, இது ஒன்றுதான் மனதுக்கு நிறைவு, ஆனால் சம்பளம் வரும்போதுதான் தெரிந்தது வீடும் வேணாம் ஒண்ணும் வேணாம் என்று.

சுற்றி சுற்றி கடன், வாங்கும் பணத்தை சிறிது சிறிதாக கொடுத்தாலும் கூட கையில் சம்பளம் இரண்டாயிரம் கூட நிற்கவில்லை. நான்கு மாதம் ஓடுவதற்குள் நாக்கு தள்ளி விட்டது, போதுமடா சாமி வீடாவது மண்ணாவது, பேசாமல் வரும் தொகைக்கு விற்று விட்டு “அக்கடா” வென்று உட்கார்ந்து கொள்ளலாம்.

ரங்கசாமி ரங்கசாமி தோளை பிடித்து உலுக்கியதில் மீண்டும் நினைவுக்கு வந்தவன் உலுக்கியவனை பார்த்தான்.

கூட வேலை செய்யும் பாலுசாமி நின்று கொண்டிருந்தான், என்ன மறுபடி கனவா? கிண்டலாய் கேட்டாலும் அவன் முகத்தில் ஒரு வருத்தம் தெரிந்தது.

ரங்கசாமி எனக்கு உதவி பண்ணறியா?

என்ன பாலு?

எங்காவது நமக்கு ஏத்த மாதிரி ஒரு வீடு ஒத்திக்கு கிடைக்குமா பாரு

ஏன் இப்ப இருக்கற வீடு என்னவாச்சு?

அதை ஏன் கேட்கறே, வீட்டு ஓனரு கண்டபடி பேசறான், காது கொடுத்து கேட்கமுடியலை, வூட்டுக்காரி கண்ணை கசக்கிட்டு நிக்கறா, அவ கையில கழுத்துல இருக்கற நகை எல்லாம் கழட்டி கொடுத்து அடகு வச்சு இருபதாயிரம் கையில வச்சிருக்கேன், நமக்கு வாடகை வீடே வேணாம், சின்ன வீடா உன் வீடு இருக்கற மாதிரி சின்ன வீடா இருந்தா போதும் ஒத்திக்கு கிடைக்குமா பாறேன்.

இருபதாயிரத்துக்கு ஒத்திக்கு எவன் தருவான், ஏன் என் வீட்டை கேட்டியின்னா நானே தரமாட்டேன்.

தெரியுது ரங்கசாமி, இப்ப நீ கஷ்டத்துல இருக்கே, நான் உனக்கு இந்த இருபதாயிரம் கொடுத்தா உனக்கு கடன் பிரச்சினை தீரும்தானே, எனக்கு உன் வீட்டை கொடுத்துட்டு உன் மாமியார் வீட்டுல போய் உட்கார்ந்துக்கலாம்.

சுர்ரென்று கோபம் வந்தது ரங்கசாமிக்கு, பாத்தியா கடைசியில என் வூட்டையே ஒத்திக்கு கேட்கறே. உனக்கு வீட்டை கொடுத்துட்டு உன்னைய மாதிரி என்னைய நடுத்தெருவுக்கு வந்து வீடு தேட சொல்றியா, அதுக்கு வேற ஆளை பாரு.

சொல்லிவிட்டு விறு விறுவென அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

இப்பொழுது அவனுக்கு தான் இந்த மாநகரத்தில் ஒரு வீட்டுக்கு சொந்தக்காரன், என்பது மட்டுமே நினைவில் இருந்தது. கடன் என்ன பெரிய கடன்? வீடுன்னு கட்டுனவனுக்கு கடன் இல்லாம கட்ட முடியுமா?

அவனவன் வசிக்கறதுக்கு ஒரு வீடு இல்லாம இருக்கறப்ப எனக்கு என்ன குறைச்சல்…!

Print Friendly, PDF & Email

1 thought on “கடன் என்ன பெரிய கடன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *