பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி வைத்து நீர் ஊற்றி கோலங்கள் போட்டு விளக்கேற்றி தோத்திரம் படித்து பிரதக்ஷினம் நமஸ்காரம் என்று பெரியவர்கள் போல சிரத்தையுடன் செய்வாள்.
திருமணமாயிற்று. புருஷன் நல்லவர். தெய்வ நம்பிக்கை என்று இல்லாவிட்டாலும் பிருந்தா செளிணிவதை தடுக்க மாட்டார். அவர் வேலையுண்டு அவருண்டு என்ற சுபாவம். நேர்மையுள்ளவர் பிள்ளை ஒருபடி மேலே – பெரியார்தாசன். மூட நம்பிக்கைகள், குருட்டு பிடிவாதங்கள் என்று லெக்சரே அடிப்பான். மருமகள் வெஸ்ட்ரன் மியூசிக், டான்ஸ் என்று கலாசாரமே மாறுபட்டது.
பிருந்தா யாரைப் பற்றியும் குறையே சொல்ல மாட்டாள். அவள் வீட்டு வேலை, துளசி, பூஜை என்று நாட்கள் போகும். ஒருநாள் ஒரு உறவினரின் சஷ்டி அப்த பூர்த்திக்குப் போயிருந்தார்கள். அந்த தம்பதி களுக்கு கவசபூஜை செய்து ஜலத்தை அபிஷேகம் செய்தபோது கங்கைச் சொம்பை உடைத்து அபிஷேகம் செய்தார்கள். அப்போது தன்
வீட்டிலும் யாரோ காசி போய் வந்தவர்கள் கொடுத்த கங்கைச் சொம்பு பூஜையில் வைத்திருப்பது நினைவு வந்தது.
அவள் கணவருக்கும் அறுபது வயது முடியப்போகிறது என்று எண்ணிக்கொண்டாள்.
அன்று அபிஷேகம் செய்துகொள்ளப்பயன்படுத்திய சொம்பு அழகாயிருந்தது. தினமும் துளசிக்கு ஜலம்விட நன்றாயிருக்கும். சொம்பு தங்கத்திற்கு சமம். தங்கச் சொம்பால் துளசிக்கு ஆராதனை செய்வதற்கு சமம் என்று எண்ணியதே பெருமையாயிருந்தது பிருந்தாவுக்கு. அவள் கனவில்கூட கங்கைச் சொம்பும் துளசிபூஜையும் வர ஆரம்பித்தது.
பிருந்தா தன் கணவரிடம் அறுபதாவது பிறந்தநாள் பற்றி சொன்னாள். அவர் ஏதோ செய்யக்கூடாத விஷயத்தைப் பேசுவது போல சிரித்தார்.
பிறகு, “முதல் பிறந்த நாளையே கொண்டாட முடியாத கோடானு கோடி குழந்தைகள் உள்ள தேசமிது. ”என்னிடம் வந்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே, எப்படிப்பட்ட பேதைமையுள்ளவள் நீ? இத்தனை வருடங்களாக என்னுடன் வாழும் உனக்கு என்னை புரிந்து கொள்ளவே முடியவில்லையே. அதுதான் கொடுமை” என்று அங்கலாய்த்தார்.
இந்த மனிதனிடம் இப்படி வகையாக மாட்டிக் கொண்டோமே என்று வருந்தினாள் பிருந்தா. ’தங்கச் சொம்பு கேட்டேனா? எனக்கு துளசி பூஜைக்கு ஒரு செப்பு சொம்பு இருந்தால் நன்றாயிருக்கும். அந்த கங்கையை உடைத்து ஸ்நானம் செய்தால் நல்லது. சொம்பும் பூஜைக்கு உதவும் என்றுதானே சொன்னேன்? என் ஆற்றாமையைக் கேட்கக்கூட
யாரும் என்னைப் புரிந்தவர்கள் இல்லையே’ என்று ஏங்கினாள் பிருந்தா.
இரவெல்லாம் சரியாக தூங்காமல் காலையில் நேரம் கழித்து எழுந்தாள். துளசி கல்யாண நாள் பிருந்தாவன துவாதசி, காலையில் ஸ்நானம் செய்தாள். துளசிக்கு கோலமிட்டு காவியிட்டு விளக்கேற்றி தோத்திரம் செய்யும்போது மகன் என்னவோ கேட்ட குரல் கேட்டது. “என்னடா?”, என்று விருட்டென ஓடிவரும்போது (சலவைக்கல் முற்றம்) வழுக்கி விழுந்தாள். துளசி மாடத்தின் ஒரு மூலை தலையில் பட்டு காயம்.
மகன் “என்னம்மா?” என்று ஓடி வர ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக கிளம்பினார்கள். யாரோ “தண்ணீர் கேட்கிறார் அம்மா’’ என்றபோது துளஸி ஜலம் என்று ஜாடைகாட்டினாள் பிருந்தா. பக்கத்து வீட்டுப் பெரியவர் ”கங்கை ஜலமிருந்தால் கொடுங்கள்” என்றார். யாரோ பூஜையிலிருக்கும் கங்கைச்சொம்பை உடைத்து கங்கை ஜலத்தை வாயில் மகன் விடும்போது பிருந்தா சோகமாக சொம்பை கவனித்தாள். ’நான் எனக்கு கேட்கவில்லையே. துளசிக்கு செப்புச் சொம்பு வேண்டுமென்றுதானே கேட்டேன்’ என்று மனதில் முனகினாள். தலை சாய்ந்து விட்டது.
அன்றுதான் அவள் கணவருக்கு அறுபது வயது முடியும் நாள். அழகான கூடையில் அறுபது ரோஜாப்பூக்கள் காம்புகளும் இலைகளுமாக இருப்பதுபோன்ற வடிவமைப்பில் ’கேக்’ ஆர்டர் செய்து, வந்திருந்ததை வீட்டின் முன்கூடத்தில் வைத்திருந்தார்கள். மாலையில் பார்ட்டிக்கு ஏற்பாடு செளிணிதிருந்தார்கள். வேண்டியவர்கள் சினேகிதர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
– 19 ஆகஸ்ட், 2012