கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 8,962 
 

அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படலாமா? ஆனால் நான் என்ன செய்வேன் ஜி? அவள் ஏன் அழகாக இருக்க வேண்டும்? அழகாக இருந்தால் கூட பரவாயில்லை, கவர்ச்சியாக ஏன் இருக்க வேண்டும்? அட, அதுகூட பரவாயில்லை ஜி, கண்ணாலே ஏன் என்னை விழுங்க வேண்டும்? அப்புறம் நான் ஆசைப் படுவது தப்பு என்று சொன்னால், ஐ யாம் ஸோ சாரி ஜி! ஐ கான்ட் ஹெல்ப் இட்.

இதுக்கு எல்லாம் யார் காரணம்னு நினைக்கறீங்க? எல்லாம் என் பாஸ் சோமசேகரன் தான். ‘ என்கிட்டே இருக்கறவங்கள்லேயே ராஜ் தான் ஸ்மார்ட்டஸ்ட் லாயர். அவனையே அனுப்புகிறேன்’ என்று தன் நண்பர் காரைக்குடி அருகே வசித்துவந்த ஜமீன்தார் ஜகந்நாத பூபதிக்கு ஏன் என்னை ரிகமன்ட் செய்தாது தான் அவன் செய்த தவறு.

அவர் நண்பருக்கு உயில் தயாரிக்க வேண்டுமாம். “ஏன் ஸார், பெரிய ஜமீன்தார்னு சொல்றீங்களே, அவங்க குடும்ப வக்கீல் யாரும் இருக்க மாட்டாங்களா?” என்று நான் கேட்டதுக்கு, “இருக்காங்க. ஆனால் ஜகந்நாத்துக்கு நம்ம கம்பெனியிலிருந்து தான் வேணுமாம். நீ போயிட்டு வா. ஒரு நாலு நாள் வேலை கூட இல்லை. அப்புறம் அவங்கள் ஜமீன் பங்களா, அதச் சுத்தியிருக்கற இடம் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கும். உனக்கும் ஒரு மாற்றம். சரியா? உடனே கிளம்பற வழியப் பாரு” என்று பதில் வந்தது.

சரி, ஒரு ப்ரேக் மாதிரி இருக்கும் என்று நானும் காரில் கிளம்பி,, இதோ ஜமீனுக்கும் வந்து விட்டேன். ராத்திரி மணி எட்டாகியிருந்தது.
ஒரு வேலையாள் வந்து என்னை வரவேற்று என் பொருள்களையும் எடுத்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.

ஜமீன் பங்களா மூன்று தளங்களைக் கொண்டதாக இருந்தது. கீழ் தளத்தில் இருந்த ஒரு அறையின் கதவைத் திறந்து என்னை அழைத்துச் சென்றான்.

“ஜமீன் ஐயா உங்களை இங்க தங்கிக்கச் சொன்னார்” என்று அறிவித்து விட்டு, “ நீங்க கொஞ்சம் ரெடியாகிக்குங்க. ஒரு இருவது நிமிஷத்துல டின்னர் எடுத்துக்கிட்டு வர்றேன்” என்று சொல்லி வெளியேறினான்.

நான் நிதானமாக அறையைச் சுற்றிப் பார்த்தேன். அறை என்று சொன்னால் தப்பு. என் வீட்டை விட பெரியதாக இருந்தது. தொங்கு விளக்கும், ஜன்னல் சீலைகளும் என்று ஏதோ ஜகன்மோகினி செட்டுக்குள் நுழைந்த மாதிரி ஒரு ஜில் feeling.

சரி, டின்னர் வருவதற்கு முன் ஒரு சின்ன குளியல் போட்டு விடலாம் என்று அங்கிருந்த ஒரு குடும்பம் வசிக்கும் அளவு பெரிய பாத்ரூமில் அடைக்கலம் புகுந்து குளித்து விட்டு வந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்பது சிறிது நேரத்தில் டின்னர் கொண்டு வந்த வேலையாளுடன் வந்த யசோதராவைப் பார்த்ததும் தோன்றியது.

எனக்குச் சாதாரணமாக அழகானப் பெண்களைப் பார்த்ததும் காதலில் விழ எப்படியும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். ஆனால் யசொதராவைக் கண்டதும் காதல்! “ தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து’ என்று எம்ஜியார் பாடுவாரே அந்த மாதிரி பெண்.

“ஹாய்! ஐ யாம் யசோதரா. மிஸஸ் ஜகந்நாத பூபதி” என்று அவள் நீட்டிய கையைப் பிடிக்க நான் அட்லீஸ்ட் ரெண்டு ஜன்மத்திலாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

“ ஹாய்! ஐயாம் ….” என்று தடுமாறினேன்.

“ராஜ்! சேகர் டோல்ட் அஸ். டின்னர் சாப்பிட்டிவிட்டு ரெஸ்ட் எடுங்க. நாளைக்குக் காலைல பார்க்கலாம்.”

மீண்டும் ஒரு முறை கையை நீட்டினாள். (இன்னும் இரண்டு ஜன்ம புண்ணியம்!) இந்த முறை கையைப் பிடித்ததில் ஒரு சின்ன வித்தியாசம் உணர்ந்தேன். அவள் ஒரு விரல் சட்டென்று உள் மடங்கி என் உள்ளங்கையை லேசாக செல்லமாகத் தடவியது. நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் தெரிந்தது என்ன? எனக்குத் தெரியவில்லை. ஆனால் அன்று இரவு ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக, கலர் கனவுகளுடன் கழிந்தது என்பது மட்டும் உண்மை.

டின்னர் சாப்பிடும் போதுதான் கவனித்தேன். அந்த மிகப்பெரிய அறையின் சுவர்களில் நிறைய ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தன. எல்லாம் ஆண்களின் ஓவியங்கள். எல்லாருமே மீசை வைத்து கம்பீரமாகச் சிரித்தார்கள். அதில் ஒரு ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது.

அதுவும் ஒரு ஆண்தான். ஆனால் மற்ற எல்லா ஓவியங்களை விடவும் மிகவும் உயிரோட்டத்துடன் இருந்தது. மற்றவர்களை விடவும் அவர் அதிக கம்பீரத்துடன் இருந்தார். கண்களில் ஆணவத்துடன் சேர்ந்து ஒரு சந்தேகமும் இருந்தது. என்னையே பார்ப்பது போல இருந்தது. சங்கடத்துடன் கண்களைக் கீழே தாழ்த்திக் கொண்டேன். அப்பொழுதும் அவர் என்னையே பார்ப்பது போல இருந்தது.

டின்னர் முடிந்து சிறிது நேரத்தில் தூக்கம் கண்களைத் தழுவ, நான் உறங்கிப்போனேன். மறுநாள் காலை ஒரு பணியாள் தேநீருடன் வந்து கதவைத் தட்டியதும் தான் எழுந்தேன். மணி ஏழு.

“நீங்கள் குளிச்சு ரெடியாகி எட்டு மணிக்கெல்லாம் மெயின் ஹால்ல சிற்றுண்டிக்கு வந்திரலாம்னு ஜமீன் ஐயா சொல்லச் சொன்னார்”

“சரி நீ போ”

எட்டு மணிக்கு மெயின் ஹாலை அடைந்த நான் விக்கித்து நின்றேன். அவ்வளவு பெரிய ஹால். இதுவரை நான் சினிமாவில் கூடப் பார்த்ததில்லை. சுமார் ஐம்பது பேர்கள் அமரக்கூடிய டைனிங் டேபிள். ஆனால் அதில் மொத்தம் நான்கு இருக்கைகள் எதிரே மட்டும் தட்டுகள் நேர்த்தியாக வைக்கப் பட்டிருந்தன. டேபிள் தலைமாட்டில் இரண்டு தட்டுகளும் அவற்றுக்கு வலமும் இடமுமாக இரண்டு தட்டுகளும் வைக்கப் பட்டிருந்தன. மிக்க மரியாதையுடன் ஒரு பணியாள் நின்றிருந்தான். இடப்புறத்தில் தட்டு வைக்கப் பட்டிருந்த இருக்கையில் என்னை அமருமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டான். நான் அதில் சென்று அமரவும், மாடியில் இருந்து ஜமீன்தாரும் யசோதராவும் கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது.

ஜகந்நாத பூபதி, உண்மையில் ஒரு ராஜா போலிருந்தார். நல்ல அழகான களையான முகம். மீசை, அவர்களது முன்னோர்களைப் போலில்லாது நேர்த்தியாக நறுக்கி விடப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும் போலத் தோன்றியது. ஒரு வேளை யசோதரா அவரது இரண்டாம் அல்லது மூன்றாம் மனைவியோ? விலையுயர்ந்த ஷேர்வானி அணிந்திருந்தார்.

யசோதரா, மேற்கத்திய உடையில் இருந்தாள். மிக நேர்த்தியான பெண்கள் அணியும் பேன்ட். சாட்டின் போலிருந்த, பூக்கள் டிசைன் போட்ட ஒரு ஷர்ட் அணிந்திருந்தாள். துணியின் தன்மை காரணமாக ஷர்ட் அவள் உடலுடன் ஒட்டியிருந்தது அவளை இன்னும் கவர்ச்சியாகக் காட்டியது.

என் கண்கள் அவளது உடலில் ஊர்ந்து மேலேறிச் செல்கையில் தான் அந்த அதிசயத்தைக் கண்டது. அந்த ஷர்ட்டின் மேல் இரண்டு பட்டன்கள் போடப் படவில்லை. தெரிந்தும் தெரியாமலும் பளீரிட்ட அவள் இளமைகளில் என் கண்கள் குத்திட்டு நின்றன. என்னை நான் மறந்து கொண்டிருந்த வேளையில் தான் ஒரு கம்பீரமான கனைப்பு கேட்டது. சட்டென்று போதை கலைந்து நான் பார்த்தேன்.

ஜகந்நாத பூபதிதான். ஒரு apolegetic பார்வையுடன் “ஹல்லோ சர்! குட் மார்னிங். ஐயாம் ராஜ். சோமசேகர் அசோஸியேட்ஸ்ல வர்க் பண்றேன்” என்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

“ஐ நோ! ப்ளீஸ் டேக் யவர் சீட். லெட்ஸ் ஹாவ் breakfast” என்றார்.

சேரில் அமர்கையில் யசோதராவைப் பார்த்தேன். இதழ்களில் ஒரு குறும்புப் புன்னகையுடன் இருந்தாள். முதலில் பார்த்ததற்கு அந்த சாட்டின் ஷர்ட் இன்னும் கீழே இழுக்கப் பட்டிருந்தது போல தெரிந்தது. அவள் எனக்குப் பக்கத்தில் இருந்த சேரில் தான் அமர்ந்திருந்தாள்.எனக்கு உடம்பில் ஜில்லென்று ஒரு நெருப்பு பரவியது. தலை கவிழ்ந்து அமர்ந்தேன்.

அப்பொழுதுதான் “ என்னை மன்னிக்கவேண்டும் ஜமீந்தார்வாள்” என்று சொல்லியபடியே சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் உள்ளே நுழைந்தார்.

“ வாங்க, சுந்தரம்பிள்ளை. உட்காருங்க. ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம். அப்புறம் மேற்கொண்டு விஷயங்கள் பேசலாம். மீட் மிஸ்டர் ராஜ். சோம சேகர் அனுப்பிய ஆள். ராஜ்! மீட் மிஸ்டர் சுந்தரம் பிள்ளை. எங்க ஜமீன் வக்கீல்” என்று பரஸ்பர அறிமுகம் செய்து வைத்தார்.

அப்பொழுது என் கண்கள் என் எதிரில் இருந்த சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த அந்த ஓவியத்தின் மீது விழுந்தது. என் அறையில் மாட்டியிருந்த அதே கோபக்கார மனிதரின் படம். நான் அதைப் பார்ப்பதைப் பார்த்த ஜமீந்தார் ” அது என்னோட சித்தப்பா. சின்ன வயசுல என் அப்பா அம்மா ஒரு விபத்துல காலமாகிட்டாங்க. அதற்கப்புறம் என்னை வளர்த்து ஆளாக்கினது இவர்தான். என் மேல அதீதமான பாசம். அந்தப் பாசம் குறையக்கூடாதுன்னு கடைசி வரைல கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டார். போன வருஷம் தான் காலமானார். எங்க குடும்பத்துக்கே காவல் தெய்வம் மாதிரி” ன்னு ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்திவிட்டார்.

அதற்கப்புறம் யாரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டோம். சாப்பிட்டு முடிக்கையில் திடீரென்று என் கால்களை ஒரு மெல்லிய கால் அழுத்தியது. யசோதராதான். என்னைப் பார்த்து கண்ணடித்தாள். நான் திடுக்கிட்டேன்.

ப்ரேக்ஃபாஸ்ட் முடிந்த பின்னர் எல்லாரும் ஒரு பெரிய லைப்ரரி போலிருந்த அறைக்குச் சென்றோம். அங்கும் ஒரு ஏராளமான மேஜை. நிறைய upholstered சேர்கள்.

ஜமீன்தார் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தோல் பையில் இருந்து சில காகிதங்களை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

“ஹேவ் எ லுக். திஸ் இஸ் ஹௌ ஐ வான்ட் மி வில்”

யார் யாருக்கு என்ன என்ன விகிதத்தில் கொடுக்க வேண்டும் என்று ஒரு சின்ன லிஸ்ட் போல எழுதியிருந்தது. அதனுடன் அந்த ஜமீனைச் சேர்ந்த சொத்து விவரங்களுக்கான ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பிகள் இணைக்கப் பட்டிருந்தன. அவசரமாக ஒரு பார்வையை ஓட்டியதில் எனக்குச் சுரீர் என்றது. யசோதரா பெயர் அதில் இல்லை! நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அவள் இதழ்களில் அதே செக்ஸி புன்னகை. ஆனால் கண்களில் ஒரு இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு குரோதம்.

நான் ஏதோ சொல்ல முற்பட்டபோது, “ஒரு rough draft இன்னிக்குள்ள ரெடி பண்ணிடுங்க. சாயந்திரம் அதைப் பார்க்கிறேன். ஓகேன்னா நாளைக்கு final செஞ்சு நாளை மறுநாள் ரெஜிஸ்டர் செஞ்சுடலாம்” என்று உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜமீன்தார்.

எதுவும் பேசாமல் நான் அந்த லிஸ்டை எடுத்துக்கொண்டு என்னுடைய அறைக்குச் சென்றேன். லேப்டாப்பை எடுத்து ஆன் செய்தேன். என் கம்பெனியின் patented software applicationல் வேலையை ஆரம்பித்தேன்.

நேரம் போனதே தெரியவில்லை. நடுவில் ஒரு பணியாள் வந்து ‘லஞ்ச் ரெடி” என்றான். ஜமீன்தார் இருக்கிறாரா என்று கேட்டேன். வெளியே போயிருப்பதாகச் சொன்னான். சரி எனக்கு முடிந்தால் அறையிலேயே கொண்டு வந்து கொடுக்கும் படிச் சொன்னேன். சரி என்று சொல்லிப் போனான்.

சிறிது நேரத்தில் உணவு வந்தது. உணவுடன் யசோதராவும் வந்தாள். இப்பொழுது ஒரு ஜீன்ஸ் அண்ட் டீ ஷர்டில் இருந்தாள். டீஷர்ட் சற்றே இறுக்கமாக அவளை அடக்கமுடியாமல் தவித்தது. எனக்குப் பசி மறந்தது. உடல் சூடேறியது. என் கண்களின் காமத்தைப் புரிந்து கொண்ட அவள், பணியாளை செல்லுமாறு பணித்தாள். பின்னர் கதவைச் சாத்தித் தாளிட்டாள். என்னருகில் வந்து உதட்டில் உதடு பதித்து முத்தமிட்டாள். பின்னர் என் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள். ஒரு காமப் புன்னகையுடன் “சாப்பிடுங்க” என்றாள்.

ஒரு அரை மணி நேரம் கழித்து, வந்த உணவு அப்படியே இருந்தது. என் பசி தீர்ந்திருந்தது. என் கையில் ஒரு முயல் குட்டியைப் போல ஒடுங்கிப் படுத்திருந்த யசோதராவின் நெற்றியில் முத்தமிட்டேன்.

பதிலுக்கு “ உயில் ரெடியா?” என்றாள்.

“உன் பெயர் இல்லை” என்றேன் சங்கடத்துடன்.

“தெரியும். அதனால final copy தயார் செய்யுறப்போ இந்த விஷயத்தயும் சேர்த்திருங்க” என்று சொல்லி லஞ்ச் வைத்திருந்த ட்ரே கீழே இருந்த ஒரு காகிதத்தை எடுத்துத் தந்தாள்.

ஏற்கனவே எழுதப்பட்ட உயிலில் சிறிய மாற்றம். இதன் படி யசோதராவுக்கு சுமார் பத்து கோடி மதிப்புள்ள சொத்துகள் சேரும் போல மாற்றி எழுதப்பட்டிருந்தது. அவளைப் பார்த்தேன்.

“உங்களுக்கு ஒன்றும் ஆகாது. அதில் ரொக்கமாக ஒரு கோடி உங்களுக்கு. விரும்பினால் நானும் உங்களுக்கு”

நான் அந்த நொடியில் ஜமீன்தரை ஏமாற்றத் துணிந்தேன். யசோதரா மீது மீண்டும் படர்ந்தேன். அப்போது தான் கவனித்தேன். நேற்று என்னைக் கவர்ந்த அந்த ஓவியம் அங்கு இல்லை. அதற்கு பதிலாக ஒரு ஜன்னலும் அதன் பின்னே தெரிந்த இயற்கையும் வரைந்த ஒரு ஓவியம் இருந்தது. எனக்குக் குழப்பமாக இருந்தது. எதுவும் கேட்கும் முன்னால் யசோதரா என்னை தன்னுடன் சேர்த்து அணைத்தாள். நான் என்னை மறந்தேன்.

அன்று மாலை ஜமீன் வேலையாள் வந்து என்னை எழுப்பினான். நான் திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது யசோதரா அங்கில்லை. போய்விட்டிருந்தாள். “ஜமீன் ஐயா வந்துட்டாருங்க. உங்களை லைப்ரரிக்கு வரச் சொன்னாருங்க”

அவசர அவசரமாக முகம் கழுவி ஆடை மாற்றி ஒரு பத்து நிமிடத்தில் லேப்டாப்புடன் லைப்ரரி சென்றேன். அங்கே ஜமீன்தார் மட்டும். தன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் இறுகிய முகத்துடன் அந்த மொபைலை என் கையில் தந்தார்.

அதில் ஒரு வீடியோ. நானும் யசோதராவும் இணக்கமாக இருந்த வீடியோ. “சுந்தரம் பிள்ளை விழுந்துட்டார்னு தான் உன்னைக் கூப்பிட்டேன். நீயுமா?” என்றார்.

பயத்திலா, இல்லை செய்தது தவறு என்ற உணர்விலா என்று தெரியாமல் நான் ஜமீன்தார் கால்களில் விழுந்தேன்.

“ என் லிஸ்டல அவ பேரு இல்லை. பார்த்தாய் அல்லவா? அதிலிருந்தே தெரிந்திருக்கும் நான் அவளை விலக்கிவைக்கப் போகிறேன் என்று. அதற்கு இந்த ஆதாரம் போதும். ஆனால் நான் உன்னை அந்தச் சங்கடத்தில் சிக்க வைக்க விரும்பவில்லை.

“நான் சொன்னபடியே உயில் எழுது. நாளை ரெஜிஸ்டர் செய்து விடலாம். அந்தப் பரத்தையை நாளையே விரட்டி விடுகிறேன். என்ன?”

“சரிங்க ஐயா”

“ நாளைக்கு காலைல நாம ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ் போகறோம். அதுக்குள்ள ரெடி பண்ணிடு உயில”

“சரிங்க ஐயா” என்று சொல்லி தப்பித்தோம் பிழைத்தோம் என்று என் அறைக்கு ஓடினேன். லேப்டாப்பில் மீண்டும் உயில் தயாரிக்க ஆரம்பித்தேன். ஜமீன்தார் சொல்லியபடியே. அப்போது அந்த அறையில் வைக்கப் பட்டிருந்த டெலிபோன் ஒலித்தது. எடுத்து “ஹல்லோ” என்று சொன்னேன்.

“டார்லிங்! நான் சொன்ன மாதிரி உயில் மாத்தி எழுதிட்டீங்களா? சீக்கிரம் முடியுங்க. பாவம் மதியமே நீங்க சரியாச் சாப்பிடல. ராத்திரி நல்லா சாப்பிடுவீங்களாம்” என்று இரட்டை அர்த்தத்தில் கவர்ச்சியாகக் குழைந்தாள் யசோதரா.

ஜமீன்தார் முகம் மறந்தது. யசோதராவின் இளமையாக தேகமும், அவள் தரப்போகும் காம விருந்தும், ஒரு கோடி ரூபாயும் என் மனதை நிறைத்தது. மடமடவென்று யசோதரா சொல்லியபடி உயிலை மாற்றி எழுதினேன். ஒரு அரைமணி நேரத்தில் முடிந்தது. மணி எட்டாகி விட்டிருந்தது. கதவு தட்டப்பட்டது. வேலையாள்.

“ஜமீன் ஐயா இன்னைக்கு அவங்க அவங்க ரூமிலேயே டின்னர் கொடுக்கச் சொல்லிட்டாரு. நாளை காலைல சீக்கிரம் எழுந்து ரெடியா இருக்கச் சொன்னாரு” என்று அறிவித்து விட்டுச் சென்றான்.

நான் சாப்பிடும் போதுதான் கவனித்தேன். மீண்டும் அந்த ஓவியம். அதே ஆண். சந்தேகப் பார்வையுடன். ஆனால் அந்தக் கம்பீரச் சிரிப்பு இல்லை. அதற்கு பதிலாக உதடுகளில் ஒரு கோவக் கோணல். என்னுள் ஒரு ஜிலீர்!

பாதிச் சாப்பாட்டில் எழுந்து அந்த ஓவியத்தின் பக்கம் சென்றேன். அருகில் சென்றதும் சில்லென்று ஒரு காற்று என்னைத் தழுவியது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ரோஜாவின் மணம் வேறு நாசியைத் துளைத்தது. கண்களை ஒருமித்துப் பார்த்த போதுதான் அந்து ஓவியம் இல்லை ஒரு ஜன்னல் என்று புரிந்தது. என்னுள் ஓடிக்கொண்டிருந்த அந்த ஜிலீர் அதிகமாகி என் மூளையின் செல்கள் என்னைப் பின்னால் செல்லுமாறு பணித்தது. அந்தக் கட்டளை செயல்படுத்தப் படுவதற்குமுன் ஜன்னலுக்குப் பின்னால் நின்றிருந்த அந்த கம்பீர ஆள் தன் பலமான கையை உள்ளே விட்டு என் கழுத்தைப் பிடித்தார். பிடித்து ஒரு புறாவை வெளியே இழுப்பது போல என்னை அந்த ஜன்னலுக்கு வெளியே இழுத்துப் போட்டார்.

கீழே நான் அவரது இல்லாத கால்களுக்குப் பக்கத்தில் விழுந்தேன். எனக்குப் புரிவதற்குள் ஒரு இருட்டு என்னைச் சூழ்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *