ஒளி நீக்கும் இருள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 8,767 
 
 

எங்கள் தெருவில் தன்னந்தனியாக ஒற்றையாக நின்று கொண்டிருந்த சௌந்திரராஜன் மாமாவின் தனி வீடும் இடிபட்டு விட்டது. ஆமாம்; தனி வீடு என்பதே அருகி விட்ட இந்நாளில் ஒருவரும் இல்லாமல் வெறுமே பூட்டிக் கிடந்த மாமாவின் வீடு இதுநாள் வரை கடப்பாரைக்கு இரையாகாமல் இருந்ததே பெரிய அற்புதம்.

மாமா இருந்தவரை வீட்டை அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட விற்க சம்மதிக்கவில்லை; அதனால், அவருக்கும் அவர் பையன் பெண்களுக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் கூட ஏற்பட்டது. ‘வெளிநாட்டில் போய் குடியேறி விட்ட உங்களுக்கு இந்த வீட்டைப் பற்றி என்ன அக்கறை?’ என்று ஒரே வார்த்தையில் அடக்கிவிட்டு, ‘நான் செத்த பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று முடிவாகச் சொல்லி விட்டார்.

தனியாக இருந்த அந்தக் கிழவர் தனியாகவே ஒருநாள் அந்த வீட்டில் உயிரை விட்டார்.

இறுதிச்சடங்குக்கு வந்த ஒரு மகனும், மகளும் காரியம் முடிந்த கையுடன் வெளிநாடு பறந்தனர். சில நாட்கள் வீடு பூட்டிக் கிடந்தது. பின்னர், மாமாவின் நண்பர் ஒருவர் ‘ட்யூஷன்’ வகுப்பு எடுப்பதற்கு அந்த வீடு தரப்பட்டது. அது வீட்டைத் துடைத்துப் பெருக்கி, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தந்ததால், வாடகை என்று எதுவும் பெரிதாக வசூல் ஆகவில்லை.

ஒரு ஆண்டில், அந்த நண்பரும் தன் மகனின் இருப்பிடமான மும்பை குடிபெயர்ந்ததால், அவரது உபயோகமும் நின்றது. பக்கத்தில் இருந்த அவர் வீடும் குடியிருப்புக்காக இடிபட்டது. ‘கையில் பணம், இலவசமாக இரண்டு ‘ப்ளாட்’ என்ற தூண்டிலில் சிக்காத வயதான, தனி வீடு ஆசாமிகளே எங்கள் பகுதியில் இல்லை என்று அடித்துக் கூறலாம்.

விலையும் கொஞ்ச நஞ்சமல்ல; லட்சங்களிலிருந்து விலை கோடிக்குத் தாவி விட்டது. ஆனாலும், வாங்குபவர்கள் இருந்தனர்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள், லண்டனில் வாழ்பவர்கள், அரபு நாடுகளில் வேலை செய்பவர்கள் என்றும், தாராளமாகக் கிடைத்த வங்கிக் கடன்களிலும் வீடுகள் விலை போயின.

அமெரிக்கக் குடிமகனான மாமாவின் மகன் ஸ்ரீதரும், மகள்கள் லட்சுமி, சரஸ்வதியும் ஒருவழியாக இந்தியா வந்து வீட்டை விலை பேசி, ஆளுக்கு ஒரு ஃப்ளாட், கையில் கொஞ்சம் என்று முடித்தனர்.

சரி… இத்தனை விலாவரியாக சௌந்திரராஜன் மாமா வீட்டுச் சரித்திரத்தைக் கூறும் நான் யார் என்று உங்களுக்குத் தெரிய வேண்டாமா?

என் பெயர் சங்கரன். சௌந்திரராஜன் மாமா வீட்டுக்கு எதிரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நானும், என் மனைவி பவானியும் தனியாக வாழ்கிறோம்.

குழந்தைகள் எங்கே? அமெரிக்காவா, ஆஸ்திரேலியாவா, என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்கிறீர்களா?

இல்லை; எங்களுக்குக் குழந்தைகளே இல்லை; இனி பிறக்கவும் வாய்ப்பில்லை. எனக்கு வயது அறுபது; பவானிக்கு ஐம்பத்தி ஐந்து. மாமா எனக்கு நண்பர். நானே கிழவன், அவரைப் போய் ‘மாமா’ என்கிறேனே என்று நினைக்கிறீர்களா?

அவர் என்னைவிட இருபது வயது பெரியவர். ஆக, அவரை நானும் பவானியும் மாமா என்று அழைத்ததில் தவறில்லை, சரிதானே?

ஸ்ரீதரும், லட்சுமியும் விலைபேசி முடித்தபின்னர் எங்கள் வீட்டிற்கு வந்தனர். ‘வீடு ஒருவரும் உபயோகப்படுத்தாமல் பாழாகிக் கிடக்கிறது. பணத்திற்காக இல்லை; நாலு மனிதர்கள் நடமாட்டம் இருந்தால்தானே வீடு லட்சுமிகரமாக இருக்கும்?’ என்று பசப்பினாள் லட்சுமி.

நான் ஏதோ சொல்ல வந்தவன் சட்டென்று நிறுத்திக்கொண்டு, ‘அது சரி… ‘பிளாட் ப்ரமோடர்’ உங்கள் வீட்டில் சுற்றியிருந்த மரங்களை வெட்ட மாட்டானில்லை…?’ என்று கேட்டேன். மாமா வீட்டு வாசலின் முன்பக்கம் ஒரு பெரிய வேப்ப மரம் கப்பும், கிளையுமாக இருக்கும். பக்கத்திலேயே ஒரு கொன்றை மரம். மஞ்சள் மஞ்சளாக அவை பூத்துக் குலுங்கும் அழகு அற்புதமாக இருக்கும். பின்னால் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன. அவரைக்காய் கொடி, பவழமல்லி மரம், எலுமிச்சை மரம் என்று பல மரங்கள் மாமாவால் காலம் காலமாக வளர்க்கப்பட்டவை. அவைகளின் கதி?

லட்சுமியும் ஸ்ரீதரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். லட்சுமி சட்டென சுதாரித்துக் கொண்டாள்.

‘அதெல்லாமில்லை மாமா… வேப்ப மரம், பவழமல்லி, தென்னை மரம் இவைகளைக் கட்டாயம் வெட்ட மாட்டோம் என்று சொல்லி இருக்கிறான்…’ என்றாள் பதட்டமாக.

‘அப்ப மற்றதையெல்லாம் வெட்டுவானாக்கும்?’ என்றேன் நான்.

‘தெரியாது. பிளான் போடறவன்கிட்ட கண்டிப்பாக சொல்லிட்டான் ஸ்ரீதர்… என்ன!’ என்றாள் லட்சுமி ஸ்ரீதரைப் பார்த்து.

ஸ்ரீதரும், ‘ஆமாம்… அவர்கள் மிகப்பெரிய ‘ஆர்க்கிடெக்’ட்கள். அதெல்லாம் ரொம்பத் திறமையாகச் செய்வார்கள்…’ என்றார்.

சற்று நேரம் மௌனம் நிலவியது.

பவானி கேட்டாள். ‘அப்ப வீடு கட்டியதும் அதை வாடகைக்கு விடப்போறயா? இல்ல… நீங்க வந்து எங்க… இருக்கிறது?’ என்றாள் பட்டும், படாமலும்.

ஸ்ரீதர், ‘இல்ல மாமி… நாங்க இனிமே வருஷா வருஷம் இந்தியா வருவோம். அப்ப தங்கறதுக்கு இதுதான் இடம். ஏறத்தாழ ஒரு மாசம், நாங்க எங்க ஃப்ளாட்டில் வந்து இருந்துவிட்டுப் போகப் போகிறோம்,’ என்றான்.

‘வீடுகளில் மனுஷா இருந்து, பளிச்சென்று விளக்கு ஏற்றி நடமாடிக் கொண்டிருந்தால்தானே நன்றாக இருக்கும்? அப்பத்தானே நாம லட்சுமிகரம்னு சொல்லுவோம். என்ன மாமி நான் சொல்றது?’ என்றாள் லட்சுமி சிரித்தபடி.

பவானியும் ‘வாஸ்தவம்தான். ஆனால், இப்ப எங்க கட்டிடத்திலேயே நாலு ஃப்ளாட்டில் ஆளும் இல்லை, லைட்டும் இல்லை… உங்க வீட்டில இருந்தா நல்லதுதான்,’ என்றாள்.

‘உங்க அப்பா இருந்தவரை, வாசல்ல ராத்திரி வளக்கு எரியாம இருக்காது. அந்த வெளிச்சம் தெருவின் நடுவரை அடிக்குமே?’ என்றேன் நான் நிஜமான உணர்ச்சிவசத்துடன்.

‘அப்படிச் சொல்லுங்கோ… அதுக்காகத்தான் நாங்க இந்த ப்ளாட் கட்டவே முன் வந்தோம். ‘காம்பௌண்ட்’டிலேயே இரண்டு பெரிய லைட் அழகாக வைக்கச் சொல்லியிருக்கேன்’ என்றாள் லட்சுமி.

நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

பேச்சு வார்த்தை, கொடுக்கல் வாங்கல் முடிந்த பின்னர், ஸ்ரீதரும் லட்சுமியும் அமெரிக்கா சென்று விட்டனர்.

பெரிய தகரத் தடுப்புகளுடன் மாமாவின் வீடு இடிக்கப்பட்டது.

இவையெல்லாம் நடந்தது கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்னால், அந்த பிரமோடரின் வேலை மிகவும் மெதுவாகவே சென்றது. பத்து ஃப்ளாட் என்றார்கள்; பதினாறு என்றார்கள்; பனிரெண்டு என்று பேசிக் கொண்டார்கள். ஃப்ளாட் ஒவ்வொன்றின் விலையும் ஒன்றிலிருந்து ஒன்றரை கோடி என்றனர்.

பதினாறோ, பத்தோ இவை எல்லாவற்றிற்கும் முன்னால் வீட்டின் உள்ளிருந்த அத்தனை மரங்களும் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டன. ஒரு சின்னச் செடி கூட விட்டு வைக்கப்படவில்லை.

இந்த ஒரு வருடத்தில் லட்சுமியோ, சரஸ்வதியோ, ஸ்ரீதரோ ஒருமுறை கூட இந்தியா வந்ததாகத் தெரியவில்லை.

பவானி கூட ஒருநாள் வெறும் பொட்டலாக தகரத் தடுப்புகளுக்குப் பின்னாலிருந்த இடத்தைப் பார்த்து தனக்குத்தானே பேசிக்கொள்பவள் போல் சொன்னாள்.

‘முன்னையாவது வீடா லட்சணமா இருந்தது… இப்ப என்ன இது வெத்து நிலமா… விளக்குமில்லாமல், வெளிச்சமுமில்லாமல்…? லட்சுமி என்னமோ பெரிசா பேசினாளே…?’

ஏதோ பதில் சொல்ல வந்த நான் ஏனோ தயக்கத்துடன் நிறுத்திக் கொண்டேன்.

அடுத்த ஒரு மாசத்தில் திடீரென வேலை சூடு பிடித்தது.

மளமளவென்று மணலும், செங்கல்லும், இரும்புக்கம்பிகளும், வேலையாட்களும் வந்திறங்கினர்.

அடுத்த ஆறு மாசத்தில் வேலை ஜரூராக நடந்து கட்டிடம் எழும்பி உயிர் பெற்றது.

பத்துமில்லை; பனிரண்டுமில்லை.

மொத்தம் ஆறு ஃப்ளாட்டுகள். மூன்று அடுக்குகள். ஒரு தளத்தில் இரண்டு என்று. கீழே கார் நிறுத்தும் இடமாக்கப்பட்டு தூண்கள் கட்டிடத்தைத் தாங்கி நின்றன.

பெரிய ஹால்; மூன்று படுக்கையறைகள், பெரிய சமையலறை, பால்கனி… முழுக்க பளிங்கு போன்ற கற்கள் தரையில் பாவப்பட்டு… வண்ணங்களான அறைகள்… மின்னும் ஒளி விளக்குகள்… விலை ஒவ்வொன்றும் ஓரோர் கோடிக்கு மேல்தான்….

முதல் தளத்தில் இரு ஃப்ளாட்டுகளும், இரண்டாவது தளத்தில் ஒரு ஃப்ளாட்டும் ஸ்ரீதர், லட்சுமி, சரசுவதிக்கென்று கொடுக்கப்பட்டிருந்தது.

மூவரும் ஒரே சமயத்தில் வந்து, கிரகப்பிரவேசத்தை அமர்க்களமாகச் செய்து முடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் அமெரிக்கா திரும்பினர்.

அவர்களில் ஸ்ரீதருடன் வந்திருந்த அவன் மகன் மகேஷ் மட்டும் ஒருநாள் என்னும் பேசும்போது சொன்னான்.

‘ஐ திங் மை டாட் அண்ட ஆன்டிஸ் ஆர் கிரேஸி… திஸ் ஃப்ளாட்ஸ் ஆர் நத்திங் பட் ஷிட்… யு.எஸ்.ஸில் நாங்க இருக்கற வீடு ரொம்பப் பெரிசு… பெரிய லான். ஸ்விம்மிங் பூல்… பத்து படுக்கையறைகள்… ஹோம் தியேட்டர், ஜிம்… டென்னிஸ் கோர்ட்… எல்லாம் எங்க வீட்டிலேயே… ஐ கேன் நெவர் கம் அண்ட் ஸ்டே இன் திஸ் ஹோல்…’

அவன் பேச்சில் ஐயமின்றி வெறுப்பு வெளிப்படையாகத் தெரிந்தது.

மற்ற மூன்று ஃப்ளாட்டுகளை வாங்கியவர்களும் வெளிநாட்டு ஆசாமிகளே… ஒருவர் துபாய்; மற்றவர் குவைத்; மூன்றாமவர் ஆஸ்திரேலியா.

வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேசங்கள் முடிந்த ஒரு வாரத்தில் எல்லா வீடுகளின் வாசல்களிலும் பூட்டுக்கள் தொங்கின. அடுத்த ஆண்டு அவர்களின் வரவை எதிர்நோக்கி.

இரண்டு பேர் கொஞ்ச நாட்கள் தங்கள் ஃப்ளாட்டுகளை வாடகைக்கு விடப்போவது போல் தோன்றியது. ஆனால், வாடகை அதிகமோ அல்லது இடம் பிடிக்கவில்லையோ எதுவும் நிகழவில்லை.

வாசல் வரை கட்டிடம் நீண்டிருந்தது. பக்கவாட்டிலும் இடம் இல்லை. பின்னாலும் சுற்றுச்சுவரை ஒட்டியே கட்டிடம் எழும்பியிருந்தது. மரங்கள், செடிகள் இருந்த சுவடே இல்லை.

காம்பவுண்ட் சுவரில் கேட்டின் அருகே மட்டும் இரண்டு அலங்கார விளக்குகள் இரண்டு மாதங்களுக்கு எரிந்துகொண்டு ஒளி பரப்பியது. ஒரு காவல்காரன் தூங்கி வழிந்துகொண்டு உட்கார்ந்திருந்தான்.

முதலில் காவல்காரன் வேலைக்கு வருவது நின்றது. அப்புறம் விளக்குகளும் ஒளியிழந்தன.

கடந்த ஓராண்டில் ஒரு வீட்டிலும் தொடர்ந்து விளக்குகள் எரிவதில்லை; கதவுகள் திறந்திருக்கவில்லை; மனித நடமாட்டம் இல்லை.

ராத்திரி கேட்கவே வேண்டாம்… இருள் மயம்.

ஒருநாள் தாங்க முடியாமல் பவானி என்னிடம் கேட்டாள்.

‘இவர்களுக்கெல்லாம் எதற்கு இங்கே இத்தனை பெரிய வீடும் வாசலும்… இவர்களே அந்த நாட்டை விட்டு வராதபோது, அங்கேயே பிறந்து வளர்ந்த இவங்க பிள்ளைகளா இங்க வந்து தங்கப் போகிறது? அந்தப் பழைய மாமா வீட்டையே புதுப்பிச்சு யாரையாவது வாடகைக்கு வச்சிருக்கலாமே…? இப்ப இந்தக் கட்டிடத்தை இருட்டில் பார்த்தா பூதம் மாதிரி இருக்கு. விளக்குமில்லை, வெளிச்சமுமில்லை… மனுஷாளும் இல்லை… என்ன வீடுகள்…?’

நான் சிரித்தேன்.

‘முன்னாடியாவது மரங்கள் இருந்தது. இப்ப அதுவுமில்லை பார்.. பறவை, அணில் இவைகளாவது வரும். அவைகூட இந்தக் கூடுகளுக்கு வருவதில்லை,’ என்றேன்.

‘வாஸ்தவம்தான்… வெளிச்சமே இல்லாமல் ஒரே இருட்டான்னா இருக்கு…’ என்றாள் பவானி.

எப்போதும் போல் ஏதோ சொல்ல வந்தவன், வழக்கம் போல் சொல்லாமல் மௌனமாக அந்த ஒளி நீக்கிய இருளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *