ஒளிந்து கண்டுபிடிக்கும் விளையாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 11,162 
 

அவர்கள் இறுதிப் பரீட்சை எழுதிய மையமான பெரிய பள்ளியின் தாழ்வாரம் காலியாயிருந்தது. அதில் கோபியும் கலைவாணியும் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவள் அகப்படாமல் முன்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அவன் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான். அவளைத் தொட வேண்டுமென்ற ஆசையில் வேகமாகப் பாய்ந்து கடைசியில் அவளுடைய கையைப் பிடித்தான். அது இளங்குருத்தைப் போல் சில்லென்றும் சிறுத்துமிருந்ததை முதன்முறை முழுமையாக உணர்ந்தான். அவள் கையை உருவிக்கொண்டு மீண்டும் தப்பிக்க முயற் சித்தாள். கண்ணாடி வளையல்கள் உடைந்து சிதறிவிடுபவை போல் குலுங்கின. அவளை வென்ற பெருமிதத்தில் கையை கெட்டியாகப் பற்றிக்கொண்டிருந்தான். இருவரும் இணைந்து சிரித்தது உயர்ந்த கூரையில் மோதி எதிரொலித்து பள்ளிக் கட்டிடம் இறுக்கம் கலைந்து சிரித்ததைப் போலிருந்தது. அவன் அடக்க முடியாத மகிழ்ச்சியில் தொடர்ந்து சிரித்தான். அந்தச் சிரிப்பு சத்தத்தைக் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்து தான் சிரித்துக் கொண்டிருந்ததை அறிந்தான். கொஞ்சம் முன்பு கலைவாணியின் கையைப் பிடித்தவாறு சிரித்தது கனவில்தான் என்பது நினைவுக்கு வந்தது. அதை அவனால் நம்ப முடியவில்லை. பள்ளியிறுதி வகுப்புகளில் கலைவாணியுடன் ஒன்றாகப் படித்திருந்தாலும் அவள் நெருங்கிய பழக்கமில்லாதவளாயிருந்தாள். இப்போது சேர்ந்து விளையாடி அவளைத் தொட்டும்விட்ட பரவசத்துடன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். அந்தக் கனவு உண்மையாக ஏற்பட்ட அனுபவமாகத் தோன்றியது. அது திடீரென முடிந்துவிட்டது அவனுக்கு ஏமாற்றமளித்தது.

பாதி திறந்த கதவின் சந்திலும் சன்னலிலும் பொழுது விடிந்து வெளிச்சம் வீசிக்கொண்டிருந்தது. மேலே பரணும் சுவரோரம் வரிசையாகப் பானை அடுக்குகளும் இன்னும் இருட்டியிருந்தன. கோபி வழக்கம்போல் வீட்டின் மூலையறையில்தான் படுத்திருந்தான். அம்மா அக்காவினுடைய பாய்கள் தலையணை போர்வைகளுடன் பொதிகளாக ஓரத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. வெளிப்புறமிருந்து அப்பாவின் கனத்த அடித்தொண்டைக் குரல் எங்கும் கேட்கவில்லை. அவர் எப்போதும் போல் காலையில் கொல்லை வேலைக்குப் போயிருப்பார். தொலைவில் விலகியிருந்த போர்வையை இழுத்து தலையிறங்கப் போர்த்திக்கொண்டு கண்களை இறுக மூடினான். சுற்றிலும் இருள் மங்கலாக சூழ்ந்தும் பழைய கனவு தொடரவில்லை. மறுபடியும் கலைவாணியின் வெள்ளையாக சிரிக்கும் முகம் தோன்றவில்லை. அவளுடைய மென்மையான கையை மீண்டும் தொடும் ஏக்கமெழுந்தது. அந்தக் கனவை வாழ்க்கையில் இனி காண முடியாது என்றுபட்டது. கொஞ்சம் நேரம் காத்திருக்கலாம் என்று எழும் மனமில்லாமல் படுத்திருந்தான். படுக்கை அந்தரங்கமானதாக உயிர்த்துடிப்புள்ளதைப் போல் குளிரும் சூடும் கலந்ததாயிருந்தது. இதுவரை அவன் கண்ட கனவுகளில் அடிக்கடி பாம்புதான் தோன்றி துரத்திக்கொண்டிருந்தது. அது ஒவ்வொருமுறையும் கால் நோக்கி நெருங்குகையில் ‘அம்மா . . .’ என்று அலறினான். அந்தக் குரல் வெளியில் வராத தவிப்புடன் விழித்தெழுகையில் உடனே கனவு மறையும். ஒரு தடவைகூட பாம்பு கடித்ததில்லை என்பது மட்டும் நினைவு வரும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மத்தியான சாப்பாட்டு வேளையில் வகுப்புக்குள் தனியாக நுழைந்தான் கோபி. வீட்டிலிருந்து சேர்ந்து வரும் வகுப்புத் தோழனைக் காணவில்லை. புத்தகப் பையை போட்டுவிட்டு வெளியே பையன்களுடன் விளையாட்டில் இணைய வேண்டுமென்ற ஆவல் உந்தியது. அப்போது வகுப்புக்குள்ளிருந்து கலைவாணி சிரித்தபடி ஓடி வந்து கொண்டிருந்தாள். அவளுடைய உயிர்த்தோழி பின்னால் துரத்தி வந்தாள். வாசப்படியில் அவனைக் கடைசி கணத்தில் கண்டு முழுவதுமாக விலக முடியாமல் கலைவாணி மோதிக் கொண்டாள். அவன் மார்பின் மேல் மெத்தென்று துணிச் சுருள் இடித்ததைப் போலிருந்தது. அவளுடைய முழங்கைபட்டு அவன் முழங்கை பனிக்கட்டியை வைத்தது போல் சிலீரென்றது. வெட்கம் கலந்த சிரிப்புடன் கொஞ்ச நேரம் தயங்கி நின்றாள் கலைவாணி. அவளுடைய கையில் அரும்பியிருந்த செம்பட்டை ரோமங்கள் மினுமினுத்தன. நெற்றியில் வேர்வையில் நனைந்த முடிக் கற்றைகள் சிறிய கோடுகளாகப் படிந்திருந்தன. மரப்பாச்சிப் பொம்மைக்குச் சுற்றியதைப் போல் பள்ளிச் சீருடையான வெள்ளைத் தாவணியை இறுக்கமாக இழுத்துச் சொருகியிருந்தாள். அவளுடைய தோழி திகைப்புடன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். அவன் பேச்சற்று அங்கேயே நகராமல் நின்றிருந்தான். கலைவாணியும் தோழியும் சொல்லிவைத்துக் கொண்டாற் போல் மீண்டும் புறப்பட்டுப் பச்சைப் பாவாடைகள் பறக்க ஓடினார்கள். அவர்களுடன் சிரிப்பொலியும் சுழன்று சென்றது. வகுப்புக்குள் வரிசையாயிருந்த காலி பெஞ்சுகளின் மேல் கனத்த புத்தக மூட்டைகள் உட்கார்ந்திருந்தன. தன்னுடைய இடத்தில் பையை வைத்துவிட்டு அவன் விளையாட்டில் கலந்தான். கலைவாணி வேண்டுமென்றே அவன் மேல் இடித்தாள் என்று கொஞ்சம் பெரியவனான அந்த வகுப்புத் தோழன் பிறகு சொன்னான். மேலும் அதற்கு அர்த்தம் அவள் விரும்புவதுதான் என்றான். இப்போது கனவிலும் முன்பு உண்மையிலும் கலைவாணியை தீண்டியதை நினைத்தவாறு கோபி தொடர்ந்து படுத்திருந்தான். தன்னையறியாமல் தன் முழங் கையைத் தடவிக் கொண்டான். உடலெங்கும் தொடுவுணர்வின் வெம்மை பரவியது. கால் சட்டைக்குள் குறி புடைத்து சிறுநீர் முட்டியது. அவன் வலிந்து கண்களைத் திறந்து போர்வையை உதறிவிட்டு எழுந்தான்.

நேராகச் சமையலறைக்குச் சென்றான் கோபி. அடுப்பங்கரையில் முழங்கால்களைக் கட்டி உட்கார்ந்து அடுப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. செந்தழல் ஒளிபட்டு அவள் அடுப்புடன் சேர்ந்து எரிவதைப் போல் காணப்பட்டாள். அவனைத் திரும்பியும் பார்க்காமல் வேறு உலகில் உலவுவதை போலிருந்தாள். ஒன்றாக ஒட்டிக்கொண்டிருந்தாலும் அவள் மனதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவன் சமையலறைக்குப் பின்புறத்திலுள்ள புழக்கடைக்கு வந்தான். வெளியே வானமெங்கும் நிறைந்திருந்த வெளிச் சத்தில் கண் கூசியது. முருங்கை மரத்தின் இளம் பச்சையிலைகள் வெயிலில் கண்ணாடிச் சில்லுகளைப் போல் ஒளிவிட்டன. மரத்தடியில் கண்களை மூடி கால்சட்டையைத் திறந்தான். சிறுநீர் பெய்த சீரான ஒலி அவனுக்கு தொலைவிலிருந்து கேட்டதாகத் தோன்றியது. அதில் கொஞ்ச நேரம் மயங்கி நின்று குனிந்து பார்த்தான். மண்ணில் சிறிய குழி பறித்து பாம்பை போல் நீர்த்தாரை வளைந்தோடிக் கொண்டிருந்தது. அதில் படாமலிருக்க கால்களை விரித்து கடைசியாக சொட்டும் வரைக் காத்திருந்தான். ஒரு கணம் உடல் சிலிர்த்து எடையில்லாததை போலாகியது. அருகிலிருந்த துணி துவைக்கும் கல்லின் மேல் உட்கார்ந்தான். அதில் அடங்கியிருந்த வெப்பம் கால் சட்டையைத் தாண்டி ஊடுருவியது. பக்கத்திலிருந்த கனகாம்பரப் புதர் தலையை அசைத்தது. மூலை சிறு பந்தலில் படர்ந்திருந்த மல்லிகைக் கொடியின் அடியில் மண் நனைந்திருந்தது. அதிசயமாக எல்லாவற்றுக்கும் அக்கா தண்ணீர் ஊற்றியிருந்தாள். தனியாக வண்ணத்துப்பூச்சி ஒன்று பொன்னிற இறக்கைகளை வீசியபடி சென்றது. ஊரையடுத்த ஆற்றங்கரையில் புதர்களின் மேடு பள்ளங்களின் மேல் வண்ணத்துப் பூச்சிகள் இரண்டாக ஒட்டி உறவுகொண்டவாறு தாழ்வாகப் பறக்கும். குளித்துச் சாப்பிட்டதும் அங்கு போக வேண்டும் என்று நினைத்தான். சாக்கடையில் வெண்மையான நுரைக் குமிழ்கள் பூக்களை போல் மிதந்து வந்தன. குளியலறையில் பல தடவை அக்கா சோப்பு போட்டுத் தேய்த்துக் கொண்டிருப்பாள். தென்னை மரத்தடியில் கறுத்துத் தேங்கிய சாக்கடையை பக்கத்து வீட்டுக் கோழிகள் கொத்திக் கிளறிக்கொண்டிருந்தன. அவற்றைக் கண்டால் அம்மா ஆங்காரம் பொங்கத் திட்டுவாள். அவன் ஒரு சிறிய கல்லைப் பொறுக்கி எறிந்தான். கோழிகள் வெருண்டு கத்தியவாறு வேலிப் படலினிடுக்குகளில் புகுந்து தங்களுடைய இடத்துக்கு தப்பியோடின. திடீரென்று தென்னை மரத்தின் உச்சியில் குருத்தோலைகள் மட்டும் அசாதாரணமாக படபடவென்று அடித்தன. அது மரத்தில் குடியிருக்கும் பேயின் ஆட்டம் என்று அம்மா சொல்லியிருந்ததால் உள்ளூர பயம் மூண்டது. “டே வந்து காப்பி குடி…” என்று தவத்திலிருந்த அம்மாவின் குரல் ஆறுதலாகக் கேட்டது. கோபி எழுந்து பக்கத்திலிருந்த பானையில் நீரையள்ளி முகம் கழுவினான். அதிலிருந்த அவனுடைய தலை கலைந்த சாம்பல் பூசியது போன்ற மீசையரும்பிய முகத்தின் பிம்பம் கலங்கியது. இரண்டு மூன்று தரம் வாயைக் கொப்பளித்து செடியில் துப்பிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

அடுப்பிலிருந்து புகை மெதுவாக சுருண்டு மேலெழுந்து கொண்டிருந்தது. தீயின் சிவந்த நாக்குகள் அம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பதைப் போல் வெளியில் துடித்தன. அவளுடைய மங்கிய ஒற்றை மூக்குத்தி ஒளிபட்டு சுடர்ந்தது. கண்களுக்குள் சிறு தழல்கள் பிரதிபலித்து வெகு தொலைவிலுள்ளவை போல் மின்னின. கோபி ஆசையுடன் அவளை நெருங்கி உட்கார்ந்தான். அவளிடம் நெருப்பு உருவாக்கியிருந்த வெம்மை அவனுக்குள்ளும் பரவியது. அது அவளுடைய இயல்பான உடம்புச்சூட்டைப் போலிருந்தது. அவள் அருகாமையில் பல்லி, பேய் போன்றவை பற்றிய பயங்கள் மறைந்துவிடுகின்றன. அவன் முகத்தில் ஒட்டியிருந்த நீரை முந்தானையால் துடைத்தாள். அவளுடைய கைரேகைகள் அழுக்கேறி ஆழமான கறுப்புக் கோடுகளாகப் படர்ந்திருந்தன. ஜாக்கெட்டுக்கு வெளிப்புற மார்புப் பகுதி ரத்தமிழந்ததை போல் வெளுத்திருந்தது. கழுத்திலிருந்த பழுத்த மஞ்சள் கயிற்றில் புலிப் பல்லைப் போன்ற தாலியும் பொட்டும் குழல்களும் ஊக்குகளும் கொத்தாகத் தொங்கி ஊஞ்சலாடின. அவை அதிக விலை மதிப்புள்ளவையென்பதால் ரகசியமாகப் பாதுகாக்கிறாள் என்று அவன் மிகவும் சிறுவனாயிருக்கையில் நினைத்துக்கொண்டிருந்தான். அவளுடைய மடியில் படுத்து பழையபடி அவற்றுடன் விளையாடும் விருப்பமெழுந்தது. நேற்றிரவு தூக்கம் வராமல் கெஞ்சியதில் ராட்சசனின் சிறைபட்ட இளவரசியின் கதையை அவள் மீண்டும் சொன்னாள். நீண்ட நாட்களாகிவிட்டதால் கதை தப்பும் தவறுமாக மாறியிருந்தது. மறுபக்கத்திலிருந்த அக்கா தூக்கத்தில் கிளுகிளுத்துச் சிரித்தாள். அவன் ‘உம்’ கொட்டியபடி இரண்டொரு முறை மேலே போட்ட காலைக் கீழே தள்ளினாள் அம்மா. கதை மயக்கத்தில் சுவரோரம் பூதங்களைப் போல் விழுங்கக் காத்திருந்த பானைகள் நினைவிலிருந்து அழிந்தன. இறுதிப் பரீட்சையில் தோற்றால் விரல் முட்டியில் அளவுக்குச்சியால் விழப் போகும் அப்பாவின் அடிகளையும் மறந்தான். அந்த நிம்மதியான உறக்கத்தின் ஆழத்தில் கலைவாணியை கனவு கண்டான்.

அம்மா குனிந்து வெளியில் எரிந்த விறகுக் கட்டைகளை அடுப்புக்குள் தள்ளினாள். அவள் கழுத்தில் ஒன்றிரண்டு சிவந்த மருக்கள் பாலுண்ணிகளைப் போல் ஒட்டியிருந்தன. முந்தானை விலகி ரவிக்கையின் நடுவில் கொக்கிகள் பிய்ந்து பஞ்சைப்போல் மார்பு பிதுங்கித் தெரிந்தது. வயிற்றுச் சதை கோடுகளாக மடிந்திருந்தது. ஒவ்வொரு முறை குழந்தை பெற்ற போதும் வயிற்றில் மடிப்பு விழுந்ததாக அவள் சொன்னதால் சிறுவயதில் அவற்றை அடிக்கடி எண்ணிப் பார்த்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அவளுடைய கை அனிச்சையாக புடவையை மேலும் கீழும் இழுத்து மறைத்தது. அவளுடைய மணையில் அவனும் ஓரமாக ஏறி உட்கார முயன்றான். அது பல காலமாக உட்கார்ந்து வழுவழுப்பாகி பொன்னைப் போல் உருமாறியிருந்தது. அவள் முன்பெல்லாம் செய்தது போல் நகர்ந்து இடம் தராமல் “தள்ளி உட்காருடா” என்றாள். அடுப்பிலிருந்த பாத்திரத்தை இறக்கி காபியை தம்ளரில் நுரை பொங்க ஆற்றிக் கொடுத்தாள். “உன் அப்பாவுக்கு வேலையில இனிமேயாவது கொஞ்சம் ஒத்தாசை பண்ணச் சொன்னாருடா” என்றாள். கோபி “போம்மா, நான் மேல படிக்கப் போறேன் . . .” என்றான். காபியின் தித்திப்புச் சுவை வாய் முழுதும் நிறைந்திருந்தது. குடித்த பின்பும் தம்ளரை பிடித்தபடி உட் கார்ந்திருந்தான். அவள் வேலையாக அசையும்போது மார்பும் வயிறும் அவன் மேல் உரசின. “இன்னும் நகரு” என்று பல்லைக் கடித்து இடுப்பால் அவனைத் தள்ளி இறக்கினாள். “நீயும் கொல்லைக்குப் போறதில்லை, உன் அக்காவும் ஒரு வீட்டு வேலை கத்துக்கலை. நீங்க எப்படி பொழைக்கப் போறிங்கன்னு தெரியலை. . .” என்று முணுமுணுத்தாள். “சீக்கிரமா தண்ணி ஊத்திகிட்டு வாடா” என்று அடுப்பின் பக்கம் திரும்பினாள். அவள் முகம் பழையபடி செம்மையுடன் தீவிரமாகியது.

கோபி ஆடைகளை எடுக்க வேகமாக முன்னறையில் நுழைந்தான். அப்பாவின் பழமையான மரக்கட்டிலுக்கும் துணிப்பெட்டிக்கும் இடையில் கண்ணாடி முன்னால் அக்கா உடுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் முதுகுப்புறம் உள்ளாடையின் கொக்கியைப் போட முயன்றுகொண்டிருந்தன. கீழே வழ வழப்பான தாவணி சுருண்டிருந்தது. அவனைக் கண்ணாடியின் வழியாகப் பார்த்து “ஏன்டா, உம் பாட்டுக்கு உள்ள வர்றதா?” என்றாள். கோபி திரும்பாமல் பெட்டியைத் திறந்து கிளறினான். உள்ளே பாவாடைச் சட்டைகளும் புடவைகளும் தாவணிகளும் ஒன்றுடன் ஒன்றாகக் கலந்திருந்தன. சில துணிகளை தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் பெட்டிக்குள் போட்டான். அக்கா இன்னும் உள்ளாடையை மாட்ட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள். பிறகு கைகள் ஓயச் சலித்து நின்றாள். அவன் சட்டையையும் கால்சட்டையையும் எடுத்துக்கொண்டு பெட்டியை மூடினான். அவள் கட்டளையிடுவதை போல் “டே, இதப் போட்டு விடுடா” என்றாள். கோபி கண்களை அக்காவின் பக்கமாகத் திருப்பினான். அவள் ஜாக்கெட்டின் பின்பக்கத்தை மேலே சுருட்டிப் பிடித்திருந்தாள். புதிய உள்ளாடையின் வெண்மையான பட்டைகள் நடுவில் தளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. “முடியாது போ” என்று அவன் வெளியேற முற்பட்டான். அவள் குரலில் கெஞ்சலை வரவழைத்துக் கொண்டு “கொஞ்சம் போடுறா” என்றாள். கோபி வாசப்படி வரையிலும் போய் திரும்பினான். அவள் கண்ணாடியில் நன்றியுடன் சிரித்து மூலைக்கு நகர்ந்தாள். அவளுடைய அகலமான முதுகு எண்ணெய் தடவப்பட்டது போல் மினுமினுத்தது. தலைமயிரைச் சுருட்டி உச்சியில் கொண்டையாக சுற்றியிருந்தாள். இடுப்பில் பாவாடை நாடா இறுகக் கட்டப்பட்டிருந்தது. ஜாக்கெட்டை மேலும் தூக்கி முதுகை முழுவதுமாகக் காண்பித்தாள். அருகில் நின்று உள்ளாடைப் பட்டைகளை மாட்ட முயன்றான். மறுபுறமுள்ள துளையில் கொக்கி நுழைய மறுத்தது. அவள் “கடைசி ஓட்டையில போடு” என்று மூச்சை இழுத்து வெளியேற்றினாள். அவன் வலுவாக இருபட்டைகளையும் இழுத்து இணைத்தான். எல்லாவிடங்களிலும் உள்ளாடை அழுத்தமாகப் படிந்தது. ஜாக்கெட்டை இறக்கியணிந்த பிறகு நெளிந்து நிமிர்ந்து கண்ணாடியில் அழகு பார்த்தாள். ஜாக்கெட்டுக்குள்ளிருந்து உள்ளாடையின் வெண்ணிறம் மங்கலாகத் தெரிந்தது. அவள் தாவணியை எடுத்துப் போர்த்திக்கொண்டு ஞாபகம் வந்தவளாகத் திரும்பி “டே, உன் டியூசன் வாத்தியார்கிட்ட கதைப்புஸ்தகம் வாங்கியாடா. . .” என்று அவன் தாடையை நீவினாள். அவளுடைய கையை வேகமாகத் தள்ளினான். அக்கா அடிக்கடி டியூசன் வாத்தியாரிடம் கதைப் புத்தகங்களை வாங்கி படிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவள் இறுதிப் பரீட்சையை இரண்டு மூன்று முறை எழுதியும் இன்னும் முடிக்கவில்லை. அங்கேயே நின்று அவளை முறைத்தான். அவள் திரும்பி கண்ணாடிக்குள் இறைஞ்சுவதை போல் பார்த்தாள். பிறகு தலை மயிரை அவிழ்த்து சிடுக்குகளை நீக்கி வாரத் தொடங்கினாள். அவன் முகத்துக் கெதிரில் கருந்திரையை தொங்கவிட்டு மறைத்தது போலிருந்தது. துணிகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டான்.

கோபி அவசரமாகக் குளித்து சமையலறைக்குச் சென்றான். அங்கு அம்மா இல்லாததால் கத்திக் கூப்பிட்டான். கொல்லைப்புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தவள் நிறுத்திவிட்டு வந்தாள். சாப்பிட்டதும் உடனே ஆற்றுக்குப் போக வேண்டும் என்று நினைத்தான். அங்கு எல்லா விடுமுறை நாட்களிலும் போல வகுப்புத் தோழன் வந்து காத்திருப்பான். ஆண் பெண் உடலுறவுக் கதைகளாலும் பெண்களின் நிர்வாணப் படங்களாலும் நிறைந்த புத்தகத்தை அவன் யாரிடமாவது வாங்கி வந்திருப்பான். இருவரும் புதரில் ஒளிந்து பலமுறை படித்துப் பார்த்து இனம் புரியாத இன்பத்தில் ஆழ்வார்கள். பிறகு ஒரே சிகரெட்டைப் பிடித்து புகையை சுருள் சுருளாக விட முயலுவார்கள். ஆற்றின் ஓடைகளில் கிடைக்கும் சிறிய மீன்களைப் பிடித்துச் சுட்டுத் தின்பார்கள். கனவில் கலைவாணியுடன் வெளியூரிலுள்ள பள்ளியில் ஒன்றாக விளையாடியதை நண்பனிடம் பகிர்ந்து கொள்வான். அதனால் அவர்களிருவரும் உண்மையாக நெருங்கிவிட்ட ரகசியத்தை வெளியில் தெரியபடுத்தலாம். அந்தக் கனவைப் பற்றி அவளும் உணர்வாளா என்ற பெரும் சந்தேகமுமிருந்தது. ஒரு நாள் நண்பனின் துணைகொண்டு எங்கேயோயுள்ள கலைவாணியை நேரில் சந்தித்துவிடலாம் என்று கோபி நம்பினான். அவன் வேகமாக சாப்பிட்டு எழுந்தான். பின்னாலிருந்து “டே, ஊரைச் சுத்தாம வேளைக்கு சாப்பிட வாடா” என்ற அம்மாவின் குரல் கேட்டது.

கோபியின் பழக்கமான கால்கள் டியூசன் வாத்தியார் வீட்டுப்பக்கம் சென்றன. அவருடைய வீடு சாலைக்கு மறுபுறம் ஒதுக்கமான பகுதியிலிருந்தது. அங்கு குடிசைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியிருந்தன. ஊரில் முதல் சில பேரில் ஒருவராக நகரத்துக் கல்லூரியில் படித்தும் சாருக்கு இன்னும் தகுந்த வேலை கிடைக்கவில்லை. அவருடைய அப்பா ஆஜானுபாகுவாக தலையில் குடுமி வைத்து ஆதிவாசியை போன்ற தோற்றமுடனிருப்பார். பிள்ளைகளைக் கண்டால் சாருக்குத் தெரியாமல் இரு கைகளையும் பொத்தி நடு விரலை மட்டும் ஆட்டி வேடிக்கைக் காண்பிப்பார். கால்சட்டைக்குள் சட்டையை புகுத்தி அணிந்திருந்த சார் பழைய சைக்கிளில் புறப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் கரைந்து ஒல்லியாகிவிட்டது போலிருந்தார். முகத்தில் கறுத்த மீசை மட்டும் எடுப்பாயிருந்தது. டியூசன் படித்த புதிதில் அந்தக் கத்தை மீசையும் பக்கத்திலிருந்த நீண்ட கோலும் மிகவும் பயமுறுத்தின. அவருடைய மீசை பிரபலமான ஒரு நடிகருடையதைப் போலிருந்ததாக அக்கா ஒருமுறை சொல்லியிருந்தாள். கோபி கையுயர்த்தி சாருக்கு வணக்கம் தெரிவித்தான். அவர் பதிலுக்கு வணங்கி அவன் தோள்மேல் கைபோட்டு “பரீட்சை நல்லா எழுதியிருக்கியா?” என்று விசாரித்தார். “ஆமா சார். . .” என்று கூச்சத்துடன் நெளிந்தான். அவனுடைய கன்னத்தை வருடி “படிச்சுப் பெரிய ஆளாகணும்” என்றார். அவரிடமிருந்து விடுபட்டதும் “அக்காவுக்குப் படிக்க கதைப் புத்தகம் வேணுமாம்” என்றான். அவர் புன்னகைத்து ஓலைக்கூரையில் ஒளித்திருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்தார். தினமும் டியூசன் படித்த கொல்லைப்புறம் வெறிச் சோடியிருந்தது. சில கோழிகள் மட்டும் சுதந்திரமாக மேய்ந்துகொண்டிருந்தன. அதற்குமப்பால் ஊர்க் கால்வாயோரம் கொழுத்த பன்றிகள் திரிந்தன. அவருடைய அப்பாவும் அம்மாவும் காலையில் விவசாயக் கூலி வேலைக்குப் போயிருப்பார்கள். வீட்டுக்குள் ஒரு பகுதி வாத்தியாருக்கென்று தனியாக தட்டியால் தடுக்கப்பட்டிருந்தது. அங்கு அவருடைய வெண்ணிறக் கால் சட்டை சுவரில் நீண்டு தொங்கியது. அவர் கல்லூரியில் படித்த கனமான ஆங்கிலப் புத்தகங்கள் பரணில் வரிசையாக அடுக்கியிருந்தன. நகர நூலகத்திலும் விலைக்கும் வாங்கிய கதைப்புத்தகங்கள் குள்ளமான மேசையிலிருந்தன. அவற்றை பரீட்சைக்குப் படிப்பது போல் ஆர்வமுடன் சார் படிப்பார். அப்போது அடிக்கடி தனக்குள் சிரித்துக்கொள்வார். மாணவர்களுக்கு டியூசன் நடுவில் பயம் தெளிந்து தென்றல் வீசியது போலிருக்கும். ஒரு புத்தகத்தை தேடியெடுத்துக் கொண்டு சார் வெளியே வந்தார். அவன் இரு கைகளையும் நீட்டிப் பெற்றுக்கொண்டான். மீசையடியில் புன்னகைத்தவாறு “மெதுவா படிச்சுட்டுக் கொடுக்கச் சொல்லு” என்றார். அவன் “சரிங்க சார்” என்று தலையாட்டிவிட்டு திரும்பி நடந்தான்.

சாலைக்கு வந்ததும் கோபி யாரு மறியாமல் புத்தகத்தைப் புரட்டினான். உள்ளே கடிதம் எதுவும் இல்லை என்று உறுதியாகியது. எல்லா புத்தகங்களையும் போல் அட்டையில் நடிகையின் கழுத்தளவுப் படம் அச்சிட்டிருந்தது. கதையின் தலைப்பு அடிக்கடி காதில் விழுந்த சினிமா பாடலைப் போன்றிருந்தது. முதல் பக்கத்தில் சார் நாகரீகமான பாணியில் சாய்வாகக் கையெழுத்திட்டிருந்தார். அதனடியில் குண்டு எழுத்துக்களில் தன்னுடைய பெயரையும் வாங்கிய பட்டத்தையும் எழுதியிருந்தார். உள்ளே அங்கங்கே ஆண்களுடன் கவர்ச்சியான பெண் படங்கள் வரையப்பட்டிருந்தன. கதையில் பல வரிகளுக்குக் கீழே பேனாவால் அடிக்கோடுகளை சார் இழுத்திருந்தார். சில இடங்களில் புள்ளி வைத்து பெருக்கல் குறிகளும் போட்டிருந்தன. அவற்றை அவர் தன்னுடைய கருத்துகளாக எண்ணுகிறார் போலும். புத்தகத்தை வெளியில் தெரியாதவாறு இடுப்பில் நுழைத்து சட்டையை மேலே இழுத்துவிட்டான். நண்பன் கண்ணில் பட்டால் உறுதியாக காதல்தான் என்று சொல்லிவிடுவான். அக்கா கேட்டு சார் பாடங்களில் முக்கியமான கேள்விகளை குறித்துத் தந்திருக்கிறார். ஆங்கில அகராதியைக் கொடுத்து உதவியிருக்கிறார். தெருவழியாக செல்லும்போது ஓரிரு முறை வீட்டுக்கு வந்து அவர்களிடம் பேசியுமிருக்கிறார். அவரும் அக்காவும் உள்ளுக்குள் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்ற சந்தேகம் அவனுக்குள் மீண்டும் எழுந்தது. அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் தைரியம் இன்னும் அவர்களுக்கு வரவில்லை. இதுவரை புத்தகங்களுக்குள் கடிதங்கள் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. இருப்பினும் எழுதப்பட்ட கதைகளின் வழியாக இருவரும் மறைமுகமாகத் தொடர்பு கொள்கிறார்கள் என்ற பொறாமை ஏற்பட்டது. அக்காவிடம் புத்தகத்தை தராமல் ஒளித்து வரிவிடாமல் படிக்க வேண்டும் என்று நினைத்தான்.

கோபி சாலையைத் தாண்டி ஆற்றுப்பக்கம் செல்லும் வண்டிப் பாதையில் நடந்தான். அது பண்ணையாருடைய பெரும் தென்னந் தோப்புக்குள் புகுந்தது. சுற்றிலும் தென்னைகள் உயரத்தில் ஓலைகளை வேய்ந்தாற் போல் அணி வகுத்திருந்தன. கீழே வெயில் திட்டுகளாக விழுந்திருந்தது. பாதையோரம் குட்டிச்சுவராயிருந்த பழைய ஒரு கட்டடத்தின் முன்னால் சிலர் கும்பல் கூடியிருந்தார்கள். இடிந்த சுவர்களுக்குள் செடிகொடிகள் பசுமையாக அடர்ந்திருந்தன. கதவும் சன்னல்களும் காணாமல் போய் பொக்கைகளாயிருந்தன. மேலே கூரையில்லாமல் வானம் விரிந்திருந்தது. நரம்புகளைப் போன்ற வெண்ணிற வேர்களால் சுவரை கெட்டியாகப் பிடித்து அரச மரம் வளர்ந்திருந்தது. சில பையன்கள் வசியம் செய்யப்பட்டவர்களைப் போல் வாய் மூடி கூட்டத்தின் முன்னால் நின்றிருந்தார்கள். ஆடு மாடு மேய்ப்பதை நடுவில் நிறுத்திவிட்டுவந்து சிலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். துணி துவைக்கவும் விறகு பொறுக்கவும் வந்த பெண்களும் கலந்திருந்தார்கள். சாலையோரத்திலுள்ள கடையை சாத்திவிட்டு கணவன் மனைவி இருவரும் ஜோடியாக உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் ஊரில் காலத்தை வெறுமனே கழித்துக் கொண்டிருந்தவர்களும் ஆஜராகியிருந்தார்கள். சிலர் பீடி பிடித்துப் புகையெழுப்பிக் கொண்டிருந்தார்கள். வகுப்புத் தோழன் எங்கும் தென்படவில்லை. கோபி ஆர்வத்துடன் கூட்டத்தில் நின்றான்.

அந்தப் பாழடைந்த கட்டடத்தின் எதிரில் ஒருவன் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான். கீழே குவிந்திருந்த செங்கற்களை கவனமாக எடுத்து மறுபுறம் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தான். அவை மண் படிந்து கறுத்தும் நிறையக் கற்கள் சிதைந்துமிருந்தன. சிலவற்றில் பச்சைப் பட்டுத்துணியைப் போன்ற பாசி படர்ந்திருந்தது. சமமான வேகத்தில் ஒரு குவியல் வளர்ந்தும் மற்றொன்று தாழ்ந்தும் கொண்டிருந்தன. அகற்றிய கற்களுக்குக் கீழே முளைத்திருந்த புற்கள் வாடிப் பழுத்திருந்தன. அருகிலிருந்தவரிடம் “இங்க என்ன நடக்குது?” என்றான் கோபி மெதுவாக. அவர் அவனுக்கு ஒன்றுவிட்ட மாமா முறையாக வேண்டும். “ஒன்னுமில்ல . . . அதோ அவன் பாம்பு பிடிக்கறான்” என்றார். “பாவம், ரொம்ப நேரமாத் தேடறான்” என்றார் மற்றொருவர். “எதையோப் பாத்து பாம்புன்னு நினைச்சுட்டான்” என்றார் பின்னாலிருந்தவர். “இங்க நடு ராத்திரியில மாணிக்கத்தைக் கக்கி வெளிச்சத்துல நாகம் இரை எடுக்கறதை கண்ணாலப் பாத்திருக்கேன்.” “அப்படியிருந்தாலும் பாம்பு எங்கியாவது ஓடியிருக்கும்.” “கொஞ்ச நாளைக்கு முன்னால இரையெடுத்த பெரிய மலைப்பாம்பு இதே வழியில நகர முடியாம கிடந்துச்சு.” “எடுத்த குவியலுக்குள்ள பாம்பு போய் திரும்பவும் ஒளிஞ்சிருக்கும்.” “அது கண்டிப்பா இருக்கப் போறதுல்ல.” “பாம்பு ரொம்பப் பெரிசா பிடிக்க முடியாத மாதிரி இருக்கும்.” “எல்லாரும் சேர்ந்து ஏமாறப் போறோம்” என்று குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்தன. தூரத்திலிருந்து ஒருவர் சத்தமாக அவனிடம் “டே, நீ பயந்திடுவே. இங்கிருந்து போகலைன்னா உன் அப்பன்கிட்ட ஊரைச் சுத்தறதை சொல்லிடுவேன்” என்றார். அவரும் அப்பாவும்தான் விவசாயப் பொருட்களை வாங்க அவ்வப்போது நகரத்துக்குப் போவார்கள். அங்கிருக்க அவனுக்கு பயமேற்பட்டாலும் போகத் தோன்றவில்லை.

பாம்பு பிடிப்பவன் யாருடைய பேச்சும் காதில் விழாதவனைப்போல் தேடலில் மூழ்கியிருந்தான். அருகில் பூமி வெடித்தாலும் திரும்பமாட்டான் போலிருந்தது. பாம்புகளுடன் மிகவும் பழகி அவனிடம் பாம்புத் தன்மை படிந்திருந்தது. கரு நாகத்தைப் போல் உடல் கறுத்தும் நீண்டுமிருந்தது. சிறிய கண்கள் பாம்பைப் போல் கூர்மையுடன் பளபளத்தன. தொடர்ந்த மௌனத்தால் உதடுகள் இறுகியிருந்தன. அவற்றை நாக்கு அடிக்கடி வெளியில் நீண்டு தடவியது. அவனுக்குப் பக்கத்தில் ஒரு மஞ்சள் துணிப்பை மட்டும் துணையிருந்தது. கைகள் வேகமாகக் கற்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தன. அதில் எந்த உணர்ச்சிகளுமில்லாமல் ஆழ்ந்திருந்தான். இறுதியில் பாம்பு இல்லையென்றாலும் அவன் கவலைப்படமாட்டான் என்று கோபி எண்ணினான். அது கிடைத்தாலும் கூட அதிக மகிழ்ச்சியடையாமலிருப்பான். அவன் இரண்டையும் ஒன்றாகக் கருதுமளவு பக்குவமுள்ளவன். நிறைய முறை பாம்புகளைத் தேடிய அனுபவம் தான் அதைக் கற்றுத் தந்திருக்கும். தான் குவியலின் முன்பு அமர்ந்து பாம்பைத் தேடுவதைப் போல் கோபி கற்பனை செய்தான். பாம்பு பிடிப்பவன்தான் எல்லோரிலும் மிகவும் உயர்ந்தவன் என்று தோன்றியது. எதிர்காலத்தில் அவனைப் போல் மாற விரும்பினான். வாழ்க்கையில் பல சாகசங்களைப் புரிய வேண்டும்.

ஒவ்வொரு செங்கல்லாக குவியலின் உயரம் குறைந்து கொண்டிருந்தது. கூட்டம் திகைப்பில் பேச்சற்று நின்றிருந்தது. மூச்சு விடும் சத்தம் கேட்குமளவு எங்கும் அமைதி நிலவியது. இன்னும் சில கற்கள் மட்டும் மீதியிருந்தன. அங்கு பாம்பு இருக்க வேண்டும் – இருக்கக்கூடாது என்ற இரண்டையும் ஒரே சமயத்தில் விரும்பினான் கோபி. முடிவு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பில் மனம் பதைத்தது. இனி ஒரு கணமும் பொறுக்க முடியாதென்ற நிலை வந்தது. கடைசி செங்கல்லும் எடுக்கப்பட்டுவிட்டது. அந்த இடத்தில் ஒன்றுமில்லை என்றுதான் முதலில்பட்டது. பிடிப்பவனின் மந்திரத்தால் கட்டுண்டதைப் போல் ஒரு பாம்பு உடலைச் சுருட்டிப் படுத்திருந்தது பிறகு தெரிந்தது. அது கோபத்தில் பாய்ந்து கடிக்கலாம் என்ற பயத்தில் அனைவரும் கொஞ்சம் தள்ளி நின்றார்கள். ஆனால் பாம்பு ஓடித் தப்பிக்கவோ தாக்கவோ முயலாமல் மயக்கமுற்றதைப் போல் கிடந்தது. கற்குவியலிருந்த நடுப்பகுதி நோயுண்டது போல் வெளுத்துத் தனியாகத் தெரிந்தது. அதன் நடுவில் மண் நிறத்தில் பாம்பின் உடல் சுருண்டிருந்தது. அருகிலிருந்த பிடிப்பவன் சிறிதும் பயமில்லாமல் எழுந்து மஞ்சள் பையிலிருந்து உடைந்த பிளேடுத் துண்டை எடுத்தான். அது ஒரு கணம் வெயில்பட்டு பெரும் வாளைப் போல் ஒளிர்கையில் கோபியின் கண்கள் கூசின. பாம்புக்காரன் கையால் பாம்பின் தலையைப் பிடித்து வால் நுனியை காலால் தரையில் அழுத்திக் கொண்டான். தோலின் மேலிருந்து கீழ் வரை பிளேடால் அழுத்தமாகக் கோடிழுத்தான். பிறகு இறுக ஒட்டப்பட்ட காகிதத்தைப் பிரிப்பது போல் பாம்புத் தோலை மெதுவாக உரித்தான். முழுவதுமாக உரித்தெடுத்ததும் நீண்ட தோலை நீவிச் சுருட்டினான். அது மரத்திலிருந்து காய்ந்து விழுந்த இலைச் சருகைப் போன்றிருந்தது. அதை விலை மதிக்க முடியாத பொருளைப்போல் பத்திரமாக பாலிதின் தாளில் சுற்றி மஞ்சள் பைக்குள் வைத்தான். மேல் தோலில்லாமல் பாம்பு சதைக் கோடாகயிருந்தது. அது செத்துவிட்டதைப் போல் அசைவில்லாமல் கிடந்தது.

பின்புறம் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு பாம்புக்காரன் பையுடன் புறப்பட்டான். அவன் முகம் எந்த மாற்றமுமில்லாதிருந்தது. கூட்டம் மெதுவாகக் கலையத் தொடங்கியது. அவர்கள் சுயநினைவு பெற்றவர்களாக பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். பாம்பு பிடிப்பவனுக்கு பாம்பு பிடிப்பதுதான் குலத் தொழில் என்றார்கள். அவன் பாம்பைப் பிடித்து தேவைப்படுபவர்களுக்கு விற்று வாழ்கிறானாம். சில சமயங்களில் விஷத்தை மட்டும் பாட்டிலில் உறிஞ்சிக்கொண்டு பாம்பை உயிருடன் விட்டுவிடுவான். அல்லது பாம்புத் தோலை உறித்தெடுத்து கிடைத்த விலைக்கு விற்பான். அந்தத் தோல் பதப்படுத்தப்பட்டு பையாகவோ இடுப்புப் பட்டையாகவோ தைக்கப்படுமாம். பிறகு பெரும் விலைக்கு கள்ளத்தனமாக வெளிநாட்டுக்குப் போகும் என்று சொன்னார்கள். எல்லோருக்கும் முன்னால் பாம்புக்காரன் வேகமாக போய்க்கொண்டிருந்தான். அந்த நடை ஆட்களை கண்டதும் ஒளிந்தோடும் சாரைப் பாம்பினுடையதைப் போலிருந்தது. அவனுக்கு பாம்புத் தோலை காசாக்கிக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் அவசரமாயிருக்கலாம்.

கோபி அங்கேயே நின்றிருந்தான். அவனைக் கவனிக்காமல் மற்றவர்கள் பேசியபடி முன்னால் போய்க்கொண்டிருந்தார்கள். அப்பாவைக் கண்டதும் தன்னைப்பற்றி யாராவது உடனே சொல்லிவிடுவார்கள் என்று எண்ணினான். ஏற்கெனவே அவர் காரணமில்லாமல் எதற்கெடுத்தாலும் திட்டிக் கொண்டிருந்தார். இப்போது இதுவும் சேர்ந்து கொள்ளும். ஆற்றங்கரையில் பழைய வகுப்பு நண்பன் கதைப் புத்தகங்களுடன் காத்திருப்பான் என்பது நினைவுக்கு வந்தது. அவனிடம் சொல்ல கலைவாணி தோன்றிய கனவுடன் இந்தப் பாம்புக் கதையும் கூடியுள்ளது. நண்பன் எல்லாம் தெரிந் தவனைப் போல் விளக்கமளிப்பான். கோபியின் எதிரில் பாம்பு பழைய துண்டுக்கயிறைப் போலிருந்தது. அதன் தோலுரிக்கப்பட்டதால் உயிரையும் இழந்திருக்கும். பாம்பின் உடலில் ரத்தம் சாயத்தைப் போல் பரவிக்கொண்டிருந்ததது. மேல் தோலற்ற சதை இளம் சிவப்பும் நீலமும் கலந்து பளபளத்தது. அங்கங்கே பழுப்பு மண் ஒட்டியிருந்தது. வால் தனியாக புழுவைப் போல் வலியுடன் துடித்தது. அவன் ஆற்றுப் பக்கம் போகத் தொடங்கியதும் பாம்பு அசைந்தது. பிறகு மெதுவாக தலையை மேலே தூக்கி முகத்தைப் பெரிதாக விரித்தது. அங்கு படமில்லாமல் வெறும் தசை நார்கள் புடைத்தெழுந்தன. நாக்கு வெளியில் நீண்டு நெருப்புத் தழலை போல் நெளிந்தது. அடியாழத்து ஊற்று நீரைப் போல கண்கள் மினுங்கின. பாம்பை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் அவனுக்குத் தோன்றியது. அதைத் தாண்டி ஆற்றுக்குப் போக முடியாதெனப்பட்டது. அவன் திரும்பவும் வீட்டை நோக்கி நடந்தான். பாம்பு பின் தொடரும் என்று நினைத்து அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். அது உயரமாகப் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது.

கோபி பயத்துடன் வீட்டினுள் நுழைந்தான். அப்பாவின் தேய்ந்த கரடுமுரடான தோல் செருப்பு வாசஙூல் கழற்றிவிடப்பட்டிருந்தது. அவர் சமையலறையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அவனுடைய வரவுக்காக காத்திருந்தவள் போல் மூடப்பட்ட சிறிய பாத்திரத்தை அம்மா நீட்டினாள். “இத எதிர் வீட்டு அக்காகிட்ட கொடுத்துட்டு வா, பாவம் பச்சை உடம்புக்காரி. . .” என்றாள். அவனுக்குள் ஏற்பட்ட திகில் கொஞ்சம் குறைந்தது. அந்த அக்கா சில ஆண்டுகளுக்கு முன்னால் புதிதாகக் கல்யாணமாகி வெளியூரிலிருந்து எதிர்வீட்டுக்குக் குடியேறியிருந்தாள். பொழுது போகாமல் அடிக்கடி தாயம் விளையாட அவனுடைய வீட்டுக்கு வருவாள். அவனும் அவளும் சேர்ந்து அம்மாவையும் அக்காவையும் தோற்கடித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறை வென்றதும் அவனைக் கட்டிப்பிடித்து கன்னங்குழிய முத்தம் தந்தாள். அப்போது ஒன்றாகக் கலந்துவிடலாம்போல் அவளுடைய உடல் மென்மையாயிருக்கும். அந்த நாட்கள் கொண்டாட்டமாகக் கழிந்தன. அவள் கர்ப்பமடைந்ததும் தாயம் விளையாடுவதை அடியோடு நிறுத்திவிட்டாள். எதிர்வீட்டு அக்காவை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கப்போகும் மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு கோபி “நான் சாப்பிட்டதும் வெளியே படிக்கப் போவனும்மா . . .” என்று முணுமுணுத்தான். “சேர்ந்துப் படிக்கறதுக்கு பக்கத்துத் தெருவுக்குப் போன உன் அக்கா கூட இன்னும் வரலை, நீயே போடா” என்று சொல்லிவிட்டு அம்மா சமையலறைக்குள் புகுந்தாள். அவன் பாத்திரத்தை திறந்து கொல்லைப்புற முருங்கைக்கீரை சமைக்கப்பட்டு வைத்திருந்ததைக் கண்டான்.

எதிர் வீட்டின் கனத்த தெருக் கதவு ஒருக்களித்து சாத்தியிருந்தது. கோபி வழக்கம் போல் இடைவெளியில் உடம்பைக் குறுக்கி நுழைந்தான். உள்ளே பெரும் அமைதி நிலவியது. எதிர் வீட்டு அக்காவின் கணவருடைய புதிய சைக்கிள் அப்பழுக்கில்லாமல் துடைக்கப்பட்டு வராந்தாவில் நின்றிருந்தது. அதில்தான் அவர் தினமும் பக்கத்து நகரிலுள்ள அலுவலக வேலைக்குப் போவார். இப்போது அவர் நடந்தே வெளியே சென்றிருப்பார். அறையின் இரட்டைக் கதவு ஒருபக்கம் மட்டும் திறந்திருந்தது. கட்டிலின் மேல் கண்களை மூடி உட்கார்ந்திருந்த எதிர்வீட்டு அக்கா அதன் வழியாக ஓவியத்தைப்போல் தெரிந்தாள். அவளுடைய ஜாக்கெட் அவிழ்ந்து இருபுறமும் இறக்கைகளாக விரிந்திருந்தன. நீண்ட முந்தானை கீழே நழுவி தோகையாக விழுந்திருந்தது. மாசுமருவற்ற பூரித்த மார்பகங்கள் உடலிலிருந்து கனிந்த குலைகளாகத் தொங்கின. இரண்டுக்கும் நடுவிலுள்ள இடைவெளி சாதாரணமாக தட்டையாயிருந்தது. அவனுக்குக் கொஞ்சம் முன்பு படமெடுத்தாடிய தோலுரித்தப் பாம்பைப் பார்த்தது போலிருந்தது. அவள் மடியில் வைத்திருந்த குழந்தை மிகவும் பசியுடன் பால் குடித்துக் கொண்டிருந்தது. அதன் கடைவாயில் வெண்மையான பால் ததும்பியது. குழல்களும் குண்டுகளும் கோத்திருந்த தாலிக் கொடியை சிறிய விரல்கள் தடவின. கோபிக்கு தன்னையறியாமல் வாயில் எச்சில் சுரந்து பெருகியது. அவளுடைய மார்பின் முனைகள் திறந்த கருவிழிகளைப் போல் எல்லாவற்றையும் பார்த்தன. தலை வைத்து படுத்துக்கொள்ளலாம் போல் வயிறு இன்னும் மேடாயிருந்தது. அதில் இளங்கொடிகளைப் போல் பச்சை நரம்புகளோடின. அவற்றையெல்லாம் எப்போதோ பார்த்துப் பழகியிருந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அந்த அடையாளங்கள் புதிதாயில்லாமல் சிறு குழந்தையிலோ கனவிலோ கண்டவையாயிருந்தன. அவள் திடீரென கண் திறந்து பார்த்துவிடுவாளோ என்ற பயமெழுந்தது. தொடர்ந்து சுவாரசியமாக குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்தது. அவள் தனக்குள் மகிழ்வுடன் கன்னங்களில் பழைய குழிகள் விழச் சிரித்தாள். அவளை மீண்டும் ஒரு முறை கோபி முழுதாகப் பார்த்தான். அவன் மனம் நிறைந்து வழிந்தது. கையிலிருந்த பாத்திரத்தை அறை வாசப்படி மேல் சத்தமில்லாமல் வைத்தான். பிறகு மெதுவாக தெருக்கதவை இழுத்து மூடிவிட்டு வெளியில் வந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *