ஒலித் தீர்வுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 10,815 
 
 

சிங்கப்பூர் ரயிலில் பயணம் செய்யும்பொழுது தன்னைச் சுற்றி சிறிது இடம் தேவைப்படுகிறது அவளுக்கு. தன்னுடைய செய்தித்தாளை விரித்து வாசிக்க. அடுத்தவரின் ஒலிப்பானில் இருந்து வழியும் நாராசத்தில் இருந்து தப்பிக்க.

மெல்லிசை செவிக்கு விருந்தாகும். அதிக ‘டெசிபல்’ சக்தியில் சக பிரயாணியினுடைய கைப்பேசியின் வழி தொடர்ந்து அலறும் இசைக்கருவியை என்னவென்று சொல்ல?

ஒரு நாள் சோதனைக்கு உட்பட்ட மாதவிக்கு அருகில், வெகு நளினமான இள நங்கை ஒருத்தி. விலை உயர்ந்த கைப்பை. அலுவலகத்திற்குச் செல்ல முழங்காலுக்கும் மேலே தரமான கவுன். குதி உயர்ந்த காலணிகள். தனக்குப் பிடித்த ‘ராக்’ இசையை மாதவிக்கும் தாராளமாகக் கொடுத்தாள் அந்த நங்கை.

“உன் அழகு உனக்கே. உன்னுடைய பணம் உனக்கே. உன்னுடைய குடும்பம் உனக்கே. உன்னுடைய இசை மட்டும் எனக்கெதற்கு?” கேள்வி ஓடியது மாதவியின் மனத்தில்.

அந்த சத்தம் அவளுடைய செவிகளில் விழுந்தது. காதின் சின்ன எலும்புகளை துன்புறுத்தி அதிர்வுகள் உட்காதுக்குப் போனது. அப்பொழுது அவளுக்கு உணர்வே இல்லை. கண நேரம்தான். ஒலி அலைகளை நரம்பு மூளைக்குக் கொண்டு சென்றதோ, வில்லத்தனம் ஆரம்பித்தது. மூளை அந்தச் சத்தத்தை உணர்த்த, அவளுடைய இரத்த நாளங்கள் துடித்தன. அதிர வைக்கும் தலைவலி கொடுத்தன.

தினமும் செல்லும் இரயில் பயணத்தில் தன் புலன்களைச் சுண்டி இழுக்கும் சத்தங்கள் பல வகை.

தாத்தாவுடன் பேசிச் சத்தம் போட்டுச் சிரிக்கும் குழந்தையை ரசித்துப் பார்ப்பாள் மாதவி. அதே சமயம், தன்னுடைய விளையாட்டுச் சாதனத்தில் சத்தம் ஏற்படுத்தி விளையாடும் குழந்தையைப் பார்த்தால் துவேஷிக்காமல் இருக்க மாட்டாள்.

வெளியில் மட்டுமல்ல. வீட்டிற்குள்ளும் அதே கதிதான். ஒலியினால் அவள் அனுதினமும் அலைக்கழிக்கப் படுகிறாள்.

“அம்மா, உங்களுக்குத் தூக்கம் வந்தா நீங்க போய்த் தூங்குங்க. நான் அப்புறம் தூங்கறேன்” என்று உயர்நிலை 2-ல் படிக்கும் மகள் சுருதி சொன்னாலும் அவள் கேட்கமாட்டாள்.

“இல்லம்மா, இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்று சமாதானம் சொல்லி ஏதாவது ஒரு புத்தகம் படித்துக்கொண்டே காத்திருப்பவள் மாதவி.

இரவில் வீட்டிற்குள் யாராவது நடமாடிக் கொண்டிருந்தால், அந்த காலடி ஓசைக்கே மாதவிக்குத் தூக்கம் கெட்டுவிடும். அதனால், வீட்டில் அனைவரும் தூங்கிவிட்டார்களா என்று உறுதிப்படுத்திக்கொண்டுதான் அவள் தூங்கவே போவாள்.

சாளரங்களை இழுத்து மூடிப் படுத்தபின்னும் சில இரவுகளில் சாகச இளைஞர்களின் இரு சக்கர வாகனத்தின் உறுமும் ஒலியினால் எழுப்பப்படுவாள் மாதவி. உறக்கம் தொலைக்கும் சமயங்கள் தூங்கா இரவுகள் ஆயின அவளுக்கு.

தன் செவிகள் எப்பொழுது மெல்லிய ஒலியைக் கூட உணரத் தொடங்கின என்ற அவள் கவலையில் உழல்வது அந்த நேரத்தில் இயற்கையே.

சென்னையில் உள்ள மின்சார இரயிலில் கீரை விற்பவர்கள், கதை பேசுபவர்கள், பாட்டுப் பாடுபவர்கள் என்று பலதரப்பட்ட சத்தங்களுக்கு பழகிய அவளுக்கு சிங்கப்பூர் வந்த புதிதில், இரயில் பயணம் மயான அமைதியாக இருந்தது. வேலைக்கு செல்பவர்கள் அமர்ந்திருந்தால் தூங்குவார்கள், நின்றிருந்தால் கைப்பேசியில் ஏதாவது தட்டிக் கொண்டிருப்பார்கள். தனியாகவே பிரயாணம் செய்வதால், மாதவியும் யாரிடமும் பேசாமல், அந்த அமைதிக்குப் பழகி விட்டாள் போலும்.

சிங்கப்பூரில் எந்தப் போக்குவரத்து வாகனத்தில் சென்றாலும், கண்ணாடிச் சாளரங்கள் ஏற்றப்பட்ட வண்டியாக இருப்பதால், சாலையில் செல்லும் மற்ற வண்டிகளின் இரைச்சல்கூட அவளுடைய காதுகளில் விழாது. 99.5 விழுக்காடு நேரம் யாரும் ‘பொய்ங்க்’ என்று ஊதுகொம்பையும் அமுக்குவதில்லை.

இப்படி மென்மையாக்கப்பட்ட காதுகளுக்கு சமீபத்தில் பெருத்த சோதனை.

இரயிலில் சத்தமாகக் கைத்தொலைபேசியில் பேசும் மக்கள் கூடி வருகின்றனர். அது மட்டுமா?

அன்றொரு நாள், வேலை செய்து களைத்துப் போனப் பாட்டிக்கு ஒரு மாணவியின் புண்ணியத்தில் உட்கார இடம் கிடைத்தது. தூங்கத் தொடங்கிய பாட்டியை அருகில் இருந்த பிரயாணியின் கைப்பேசி அழைப்பு மணி அலறி எழுப்பி விட்டது. பாட்டியின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியைப் பார்த்த மாதவிக்கு வெறுப்பாகிப் போனது. ரோஜா மலரை ஆசையாக எடுக்கும் பொழுது முள் குத்தியதைப் போலத் துடித்தாள்.

ஜப்பானில் இரயிலுக்குள் கைத்தொலைபேசிகள் ஒலிக்காது. கைப்பேசியை ‘மானர் மோடில்’(அமைதிப்படுத்துதல்) போடச் சொல்லி இரயிலுக்குள் அறிவிப்பு வரும். அதே போல் சிங்கப்பூரிலும் அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாள் மாதவி. அந்த நினைப்பில் லயித்ததில் அவளுடைய உதட்டில் புன்சிரிப்பு ஒன்று தவழ்ந்தது.

தொழில்நுட்பச் சாதனைகளில் இளையர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ஒன்றி விடுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. மனித நேய ஈடுபாடா? அல்லது ஒலி தந்த வலியா? எதுவாயினும், ஒலியின் தாக்கம் அவளுக்குள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது.

“அம்மா, எனக்குப் பாட்டு கேட்கும் வகையில் நவீன கைப்பேசி வாங்கித் தர முடியுமா?” என்று சுருதி கேட்கும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறாள் மாதவி.

ஒரு நாள், “அவளுக்கு இசையில் ஆர்வம் உள்ளது. இந்தக் காலத்தில்கூட, ஏன் நீ நவீனமான கைப்பேசி வாங்கித் தரத் தயங்குகிறாய்?” என்று கேட்ட கணவனிடம் “ஒலிப்பானைப் போட்டுப் பாட்டு கேட்டால், அவளுடைய காதுக்கு கெடுதல்” என்று பதிலளித்து நகர்ந்தாள் மாதவி.

தன்னுடைய உணர்வுகளை அவள் வெளிக்காட்டவில்லை.

எல்லா விஷயங்களிலும் மகளுடன் தோழமையுடன் பழகும் மாதவியின் பதில் அவளுடைய குணத்திற்கு ஏற்றதாக இல்லை என்று கணவனுக்குப் புரிந்தது. இருந்தாலும், அதை அப்படியே விட்டு விட்டான்.

மறுநாள் காலை வழக்கம் போலப் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள மேசைக்கடையில் செய்தித்தாளை வாங்க மாதவி நின்றாள். ‘நி ஹவ்’(வணக்கம்) என்று அவள் கூறியதற்கு தன்னுடைய பொக்கை வாயைத் திறந்து சிரித்த தாத்தா ‘தமிழ் முரசு’ செய்தித்தாளை எடுத்துக் கொடுத்தார். மொழி வேறென்றாலும், பல காலமாக உள்ளப் பழக்கத்தில் அவர்களிடையே மெல்லிய நட்பு இழையோடியது.

இரயில் வண்டியில் தமிழ் முரசுவில் தலைப்புச் செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும்பொழுது, “ராரா…டப் டப் …. ரோ ரோ…..” என்று பக்கத்தில் நின்ற பெண்ணின் காதில் ஒலித்து, பின் வெளியே கசிந்த சத்தத்தில் மாதவிக்கு தலை வலி ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் அவளால் நகர்ந்து செல்ல முடியவில்லை. சத்தத்தைத் தாங்க முடியாமல் அவளுடைய கண்களில் நீர் கோர்த்தது. பாலைவனத்தில் பழுதாகிப் போன வண்டிக்குள் இருந்துகொண்டு யாராவது அந்த வழியே உதவிக்கு வருவார்களா என்று காத்திருப்பதைப் போலத் தவித்தாள்.

சென்ற முறை இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு வாலிபனிடம் “அதிக சத்தம் உன் காது கேட்கும் திறனைக் குறைக்கும்!” என்று மாதவி கூறினாள். ஒலிப்பானை காதிலிருந்து எடுத்து அவள் கூறியதைக் கேட்டவன், எந்த ஒரு உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் திரும்பவும் ஒலிப்பானை காதில் மாட்டிக் கொண்டான். அவன் பதிலே பேசவில்லை. அந்த புறக்கணிப்பில் அவளுடைய மனம் குன்றியது. ஆனாலும், அவன் ஒலியின் சத்தத்தைக் குறைத்தது அவளுக்கு அழுகை வராமல் காப்பாற்றியது.

யார் யாருடைய சத்தத்தையோ இனி கேட்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள் மாதவி. தனக்குப் பிடித்த இளையராஜாவோ, ரஹ்மானோ தன்னுடைய காதுகளில் இசைக்கட்டும் என்ற முடிவிற்கு வந்தாள் அவள்.

“என்னுடைய கைப்பேசியில் கொஞ்சம் பாட்டு போட்டுத் தருகிறாயா?” என்று கேட்டாள். அவளுடைய முடிவைச் செயலாற்ற மகளின் உதவி கிடைக்க அவளுக்கு நன்றி கூறினாள்.

அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடனேயே மாதவி, “சுருதி, நாளை மாலை உனக்குப் புதுக் கைப்பேசி வாங்கித் தரேன்” என்றாள். அவளுக்குத் திடீரென என்னவாயிற்று என்று கேள்விக்குறியை மனத்தில் தேக்கிய மகளும் அப்பாவும் அவளை விநோதமாகப் பார்த்தார்கள்.

மறுநாள் மாதவி அலுவலகம் செல்லும்பொழுது, தனக்கு முன்னே கைப்பேசியில் பாட்டு கேட்டுக் கொண்டே, ஆடி ஆடி குறுக்கே நடந்த ஒரு பள்ளி மாணவி, தான் நடக்கும் வழியைத் தடுத்ததால் கோபம் வந்தது. பொறுத்துக்கொண்டாள்.

அப்பொழுது குனிந்துகொண்டிருந்த செய்தித்தாள் விற்கும் தாத்தா நிமிர்ந்ததை சரியாகக் கவனிக்காமல், அந்த மாணவி அவரை இடித்துவிட்டாள். தடுமாறிக் கீழே விழ இருந்தவரைத் தடுத்துப் பிடித்த மாதவியால், பறந்து விழுந்த அவருடைய கண்ணாடியைக் காப்பாற்ற முடியவில்லை.

கண்ணாடி இல்லாமல் அவர் தடுமாறுவதைப் பார்த்து, மாதவி தானாகவே தமிழ் முரசுவைக் கையில் எடுத்துக்கொண்டு காசுகளைக் கொடுத்தாள்.

அன்று தனக்கு உட்கார இடம் கிடைத்ததும், அருகில் இருந்த இருவரும் தூங்கியதால் செவிக்கு ஒலி வன்முறை இல்லை என்பதும் கூட அவளுடைய கவனத்தில் இல்லை. காதில் ஒலிப்பான் ஒலித்ததால், கவனிக்காமல் சென்ற அந்த மாணவியும், கண்ணாடி விற்கும் விலையில் தாத்தா எப்படி இன்னொரு கண்ணாடி வாங்கச் சமாளிக்கப் போகிறார் என்ற எண்ணமும் அவளுக்கு மன உளைச்சல் ஏற்பட வித்தாயின.

அன்று மாலை புது கைப்பேசி வாங்கும் ஆவலுடன் வீட்டில் காத்திருந்த சுருதி தொலைபேசி ஒலித்தவுடன் பாய்ந்து எடுத்தாள். “சுருதி, இன்று மாலை எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது. கடைக்குப் போய்விட்டு நேரம் கழித்துதான் வீட்டிற்கு வருவேன். நாம் நாளை கடைக்குப் போய் கைப்பேசி வாங்கலாம்” என்று மாதவி கூறினாள். சுருதிக்கு இரயில் சத்தம் பின்னணியில் கேட்டது. அம்மாவிற்கு என்ன திடீர் வேலை என்று கேள்விக் கேட்டு அவளைச் சங்கடப்படுத்தவில்லை சுருதி.

மேலும் ஒரு நாள். நவீனக் கைப்பேசிக்காக சுருதி காத்திருக்கத்தான் வேண்டும்.

மறுநாள் காலை மேசைக்கடையில் நின்றாள் மாதவி. மலர்ச்சியுடனும் நன்றியுடனும் மாதவிக்கு வேகமாக ‘தமிழ் முரசு’ செய்தித்தாளை எடுத்துக் கொடுத்தார் தாத்தா. ‘நி ஹவ்’ என்ற அவர் கண்களில் பளபளத்தது புதிய மூக்குக் கண்ணாடி.

அன்று இரயிலில் ‘ரப் பப் பப்’ என்ற பெரும் சத்தம். ஒலியைப் பரப்பிய பெண்ணைப் பார்த்தாள் மாதவி. காற்றுப் புகாதபடி கூட்டம். மாதவியால் அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியவில்லை. கைப்பேசியில் பொத்தானை அமுக்கினாள். காதுகளில் இளையராஜாவின் இராஜாங்கம். அவள் மனத்தின் நிம்மதி இனி குலையப் போவதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *