தெரு முழுக்க அந்த வீட்டு வாசலில் நிரம்பியிருந்தது. கோமதிக்கு பெருமிதம் பிடிபடவில்லை. இருப்புக் கொள்ளாமல் வாசலுக்கும் அறைக்குமாய் அவள் நடந்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில், “என் டாக்டர் மருமகள் ரெடியாயிட்டா! ஒவ்வொருத்தரா வந்து பாருங்கள்!” என்று சொல்லிவிட்டு அறைக்குள் ஓடி, “நிர்மலா! உன்னை பார்க்கணும்னு எல்லோரும் ஆசைபடறாங்க. வெளியே வாம்மா!” என்றான் கனிவுடன்.
அவள் சேதுவைப் பார்க்க, அவன், “என்னம்மா இதெல்லாம்…?” என்றான் கோபமாய்.
“நீ சும்மா இரு. இது உன் பெண்டாட்டி மட்டுமில்லை. என் மருமகளும் கூட டாக்டர்ன்னா சும்மாவா..? நீ வாம்ம்! கழுத்தில் அந்த ஸ்டெதஸை மாட்டிக்கொ!”
தாயின் போக்கு சேதுவுக்கு புரியவில்லை. பெண்களுக்குப் பிடிவாதம் அதிகம். ஒன்றைப் பிடித்து வீட்டால் அதைச் சாதிக்காமல் விடமாட்டார்கள்!
கோமதியும் மருமகள் விஷயத்திலும் கூட அப்படித்தான். டாக்டர்தான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றாள். “நம் வீட்டில் வக்கீல் இருக்கிறார்கள். என்ஜீனியர். ஆடிட்டரும் இருக்கிறார்கள். டாக்டர் தான் இல்லை. வீட்டில் டாக்டர் இருந்தால் அது நமக்கு எத்தனை பெருமை! நம் குடும்பம் முழுக்க இலவசமாகச் சிகிச்சை பண்ணிக்கலாம். வெளியே டாக்டருக்கு கொடுத்துக் கொடுத்து மாளலை!“
“எதுக்கும்மா வேண்டாத ஆசையெல்லாம்! நம் தகுதிக்கு ஏத்தபடிதான் பெண் பார்க்கணும். நானோ சாதாரண ஆபிசர். எனக்குத் தகுந்தமாதிரி சுமாரான படிப்பு, சுமாரான வருமானம் போதாதா? பொண்ணு எப்பயுமே மட்டமாகதானிருக்கணும்!”
“அப்போசரி, குட்டையா பார்த்தாப் போச்சு!”
“ஐயோ… அம்மா! நான் உயரத்தைச் சொல்லலே. வருகிறவன் நம்மைபிட படிப்புலயும், வசதியிலயும் குறைவாக இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும். அப்போதுதான் அவள் நம்மை மதிப்பாள். இல்லேன்னா ஈகோ பிரச்சனை வரும்!”
“அதெல்லாம் எதுவும் வராது. உனக்கு எதுவும் தெரியாது. நீ சும்மாயிரு!” என்று அவனது வாயை அடக்கி, ஊரெல்லாம் தேடி அலைந்து அவள் விருப்பப்படியே டாக்டர் மருமகளைக் கொண்டு வந்து விட்டாள்.
வந்ததிலிருந்தே நிர்மலாவை அவள் வைத்த இடத்தில் வைப்பதில்லை. சதா… மருமகள்! மருமகள்! இப்போதெல்லாம் அவளுக்கு மகளைவிட மருமகள்தான் உசத்தி!
சேதுவும் அதை பெரியதாய் எடுத்துக்கொள்வதில்லை.
நிர்மலாவின் கிளினிக் பக்கத்து டவுனில் ஏற்பாடாகிக் கொண்டிருந்தது கோமதி அவளிடம் தயங்கித் தயங்கி, “ஏம்மா! கிளினிக் டவுனில் போடுகிறாயாமே… இங்கேயே இந்தக் கிராமத்தில் வச்சுக்கக்கூடாதா…?” என்றாள்.
“கிராமத்திலா…அது அத்தனை சௌகர்யப்படாதத்தே! டவுனில் என்றால் ஜனங்கள் அதிகம் வருவார்கள்.“
“அதுக்கில்லே… இங்கேன்னா நம்மூர் ஜனங்களுக்கு வசதி.”
“ஏன் டவுன் ரொம்ப தூரமா என்ன பஸ் பிடிச்சால் அரை மணிநேரம்! அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் ஓடுதே…!”
கோமதிக்கு அதற்குமேல் அவளை வற்புறுத்த முடியவில்லை.
கிளினிக் ஆரம்பித்ததிலிருந்து நிர்மலாவிற்கு ஓய்வில்லை. ஒரே அலைச்சல், சரியான தூக்கமில்லை. கோமதியும், தன் உறவினர் மட்டுமின்றி ஊர் பெண்களையெல்லாம் அழைத்து வந்து காட்டி இலவசமாய் அனுப்பிக் கொண்டிருந்தாள்.
நிர்மலாவிற்கும் மறுக்கமுடியாத நிலமை.
ஒருசமயம் நிர்மலா அலுப்புடன் தூங்கி கொண்டிருந்த போது கோமதி ஓடிவந்து, “மருமகளே! எழுந்திரு, எழுந்திருச்சுவா!” என்று அவசரப்படுத்தினாள்.
“என்னத்தே?”
“பக்கத்து வீட்டுப் பையன் கீழே விழுந்து காலில் அடி! என்னன்னு வந்து பார்!”
அவள் வெறுப்புடன் போய் பார்க்க, தூக்கம் போன வெறுப்பு இன்னும் அதிகமாயிற்று. “அவனுக்கு பெரிய அடி ஒன்றுமில்லை. லேசான சிராய்ப்புதான். அதை டெட்டால் போட்டு கழுவி டிஞ்சர் போட்டுக் கட்டினால் வேலை முடிந்தது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். டாக்டர்தான் வேணும் என்பதில்லை.” நிர்மலா அதைச் சொல்லிக் கடுப்படிக்க, கோமதிக்கு பிறர் முன்னில் அவமானமாயிற்று. அன்று அவர்களுக்குள் முதல் விரிசல் விழுந்தது.
பிறகு வேறொரு நாள் கோமதி கிளினிக்கிற்கு வந்து, “எனக்கு அசதியா இருக்கு. நடந்தால் மூச்சு வாங்குது, என்னன்னு பார்!” என்றாள்.
டெஸ்ட் பண்ணிப் பார்த்த போது அவளுக்கு சுகர் அதிகமிருந்தது பி.பி யிம் கூடுதல்.
“அத்தே! உங்களுக்கு சர்க்கதை அதிகமிருக்கு. ஸ்வீட் சாப்பிடாதீங்க, காய்கறி பழங்கள் சேர்த்துக்குங்க. அரிசி சாதம் குறைக்கணும்!” என்று அவள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எடுததுச் சொன்னாள்.
ஆனால் கோமதிக்கு அதையெல்லாம் கடைபிடிக்க முடியவில்லை. நன்றாகச் சாப்பிட்டு வளர்ந்த தேகம்! ருசிகண்ட நாக்கு! கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரு சமயம் கோமதி தட்டுநிறைய சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நிர்மலாவிற்கு பக்கென்றிருந்தது. உடல் முழுக்க சீக்கை வைத்துக் கொண்டு இப்படி பண்ணுகிறார்களே…’ என்று அதை பிடுங்கிப் போய்க் கொட்டினாள்.
“அத்தே! ம்கூம். நீங்க இவ்ளோவெல்லாம் சாப்பிடக் கூடாது. ரைஸ் ஒரு கப் போதும். சப்பாத்தி சாப்பிடுங்க. கேழ்வரகுக்களி!”
“அதெல்லாம் சாப்பிட்டால் வயிறு மந்திப்பாகுதே!”
“பரவாயில்லை. நிறைய நடங்க. சும்மா உட்கார்ந்திருக்காம குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்ங்க!”
அவள் யதார்த்தமாய்ச் சொல்ல விரிசல் அதிகமாயிற்று.
“நான் நிறைய சாப்பிடறேனாமே – சும்மா உட்கார்ந்திருக்கேனாமே – இவ காசிலியா சாப்பிடறேன்!” என்று ஊர் முழுக்க புலம்ப ஆரம்பித்தாள். “திங்கிற சோற்றைப் பறிக்கிறாள். எல்லாம் டாக்டர் என்கிற திமிர்! அகம்பாவம்! நீ டாக்டரென்றால் அதை உன்னோட வைத்துக கொள்!” என்று புகைந்தாள்.
மூன்றாவது விரிசல் கோமதியின் தங்கையின் மூலம் விழுந்தது.
அவளுக்கு உடம்பு முடியலை என்று வர, நிர்மலா மாத்திரை எழுதிக் கொடுத்தாள். கடையில் மாத்டிதரை மாறி போய்விட, அது தெரியாமல் அவள் சாப்பிட்டு, ஒரே வாந்தி! பேதி! சின்ன மாமியாருக்கு ஆச்சு போச்சென்றாயிற்று.
உடன் கோமதி மலை ஏற ஆரம்பித்தாள்.
“இவள் என் சோற்றில் மண் அள்ளி போட்டது பத்தாதுன்னு என் மேலுள்ள வெறுப்பை… என் தங்கை மேலும் காட்டி, அவளையும் கொல்லப் பார்த்தாள்” என்று ஊர் முழுக்க டமாரமடிக்க-
அதை கேள்விப்படதும் நிர்மலா, “எப்போ என்மேல சந்தேகம் வந்ததோ – நம்பிக்கை இல்லையோ இனி இந்தக் குடும்பத்திலுள்ள யாருக்கும் வைத்தியம் பார்க்க மாட்டேன். நான் எத்தனை நன்றாக வைத்தியம் பார்த்தாலும் என் மேல் பழிதான் வரும். இனி இந்த வீட்டிலும் இருக்க மாட்டேன்!” என்று சொல்லி டவுனில் வீடு பார்க்க-
நடந்த தவறு புரிந்ததும் கோமதி சேதுவிடம் வந்து “உன் பெண்டாட்டியின் திமிரைப் பார்த்தியா… ஏதோ தப்பு நடந்து போச்சு. எங்க மேலதான் தவறுன்னு ஒத்துகிட்டோமில்லே அப்புறம் இன்னும் என்னவாம்…? அவளுக்கு நீ புத்தி சொல்லக்கூடாதா?” என்று பாய்ந்தாள்.
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை.
அம்மா, நிஜமாலுமே நல்லதை நினைத்துத்தான் டாக்டர் மருமகளைத் தேடினாள். எந்தக் காரணத்திற்காக டாக்டர் மருமகள் வேண்டும் என்று ஆசைபட்டாளோ அது இப்போது நிறைவேறாமல் போவதில் அவனுக்கும் சங்கடம் தோன்றிற்று. ஆனால் என்ன செய்ய முடியுமாம்!
பெண்கள் எல்லோரும படித்தாலும் படித்திருக்கா விட்டாலும் ஓதே ரகம்தான்! ஒருவருக்கொருவர் அனுசரணை கிடையாது. இந்த உலகத்தில் மாமியார்களும் மாறப் போவதில்லை – மருமகள்களும் திருந்தப் போவதில்லை! இவர்களுக்கிடையில் மகன் என்பவன் ஊமை, உதாவாக்கரைஇ ஒன்றுக்கும் ஆகாதவன்.
“என்னடா…நான் பாட்டுக்குக் கேட்டுகிட்டேயிருக்கேன். நீ பேசமாட்டேன்றாய்…? நீயும் பெண்டாட்டி பித்தனாயிட்டியா…?”
அந்த வார்த்தை சர்ரென்று உரைக்க சேது, “அம்மா! எனக்கு இங்கு என்ன உரிமை? எனக்கு தான் எதுவும் தெரியாதே! இதில் தலையிட நான் யார், நீயாச்சு -உன் டாக்டர் மருமகளாச்சு – எப்படியோ போங்கள்!”
சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறினான்.
– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)