“அம்மா! எனக்கு இன்னும் ஒரு இட்லி!” சமையலறைக்கு வெளியே இருந்த இடத்தில் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாது கத்தினான்.
ஓயாத பசி ஏன் என்று யோசித்ததில் இன்னும் அதிகமாகப் பசித்தது. அந்த பதினைந்து வயதுப் பையனுக்கு உடலை வளர்க்க வேறு வழி கிடையாது என்பது புரியவில்லை.
ஒரே மகனை அகாலத்தில் பறிகொடுத்த துக்கம் ஆறாது, சற்றுத் தொலைவில் காலை நீட்டியபடி உட்கார்ந்திருந்த பாட்டிக்கு ஆத்திரம் பொங்கியது. “அதான் இந்த வயசிலேயே அப்பனை முழுங்கிட்டியே! போதாதா? இன்னும் இட்லியை வேற முழுங்கணுமா?” என்று பதிலுக்குக் கத்தினாள்.
அவ்வளவுதான். தட்டை ஒரு பெரிய ஓசையுடன் தள்ளிவிட்டு, கையைக்கூடக் கழுவாது வாசலை நோக்கி நடந்தான் பையன்.
அவன் கேட்டபடி இட்லியை எடுத்துக்கொண்டு வந்தவள், “இட்லி கொண்டுவான்னு என்னைக் கேட்டுட்டு, எங்கே போறான்?” என்றாள் முணுமுணுப்பாக.
“சுப்பு போனதிலிருந்தே இவனுக்கு மூளை சரியில்லை!” என்று அனுமானித்தாள் பாட்டி. “எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார் தாத்தா!” என்று என்றோ இறந்துபோன கணவரை நினைத்து பெருமூச்சு விட்டாள்.
‘கட்டுப்பாடு’,’ஒழுக்கம்’ என்று நினைத்து, கையில் பிரம்புடன் அவன் பின்னாலேயே நடந்தவர் அந்த தாத்தா.
“ரெண்டு வயசுக்குழந்தையை ஏம்பா ஓயாம திட்டறீங்க? அதுக்கு என்ன தெரியும்?” என்று கெஞ்சலாகக் கேட்ட மகனை அலட்சியமாகப் பார்த்தார் கிழவர்.
“ஆண்பிள்ளையை அடிச்சு, மிரட்டி வளர்க்கணும். அப்போதான் கெட்டுப்போக மாட்டான். கடைசி காலத்திலே நமக்கு ஆதரவா இருப்பான்,” என்று உபதேசித்தார். “இப்போ நீ இல்லியா?”
தந்தை கையால் தான் வாங்கிய அடிகள் நினைவிலெழ, அதன்பின் மகன் வாயைத் திறக்கவில்லை. தன் சிறு வயதில் தான் அடைந்த ஆத்திரம், ஆனால் அப்பாவை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத கையாலாகாத்தனம், அதுவே தன்னையும் எளிதில் உணர்ச்சிவசப்படுத்துகிறவனாக மாற்றியது – எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன.
அதன்பின் தந்தையைப் பிடிக்காதுபோக, `வயதில் மூத்தவர்களே இப்படித்தான்!’ என்றெழுந்த கசப்பு ஆசிரியர்களையும்கூட வெறுக்கவைத்தது.
அரைகுறையாகப் படிப்பு நின்றுபோனது நிம்மதியாக இருந்தது. `படி, படி’ என்று அப்பா இனி உயிரை வாங்கமாட்டார்.
தனக்கென ஒரு குடும்பம் அமைந்தபின்னர்தான் தோன்றியது சுப்புவுக்கு, அப்பாவை எதிர்ப்பதாக நினைத்து, படிப்பை நிறுத்தியது சரியில்லையோ என்று. எதுவும் மாறவில்லை — அப்பாவிற்குப் பதில் மேலதிகாரி, ஓயாது அவனிடம் குற்றம் கண்டுபிடிக்க. தன் மனப்பொருமலை மனைவியை அடக்கி ஆள்வதன்மூலம் தணித்துக்கொள்ளப் பார்த்தான். ஆனால் நிம்மதி என்னவோ கிடைக்கவில்லை. `இதென்ன வாழ்க்கை!’ என்ற கசப்புதான் மிஞ்சியது.
`இதென்ன வாழ்க்கை!’ என்ற கசப்பு எழ, வேகமாக நடந்த மாதுவுக்கு ரயில் நிலையத்தைப் பார்த்ததும் ஒரு வழி தோன்றியது.
முதலிலேயே தண்டவாளத்தின்மேல் படுத்துக்கொண்டால், யாராவது பார்த்து, எழுப்பி விடுவார்கள் என்று யோசித்து, பிளாட்பாரத்தின் ஓரத்தில் நின்றுகொண்டான்.
ஒரு கை அவனைப் பிடித்து இழுத்தது. “தம்பி! விழுந்துடப்போறே!”
“விடுங்க,” என்று திமிறினான். “நான் சாகணும்”.
அந்த மனிதருக்கு அறுபது வயதிருக்கும். “ஏம்பா? பெயிலாயிட்டியா?” குரலில் கனிவு.
“ஊகும்”.
“பின்னே?”
“அப்பா செத்துப்போயிட்டாரு!”
“அடப்பாவமே! துக்கம் தாங்காமதான் இந்த முடிவுக்கு வந்தியா?” தனக்குள் கேட்டுக்கொள்வதுபோல் பேசியவர், “வா! காண்டீனில் சாப்பிட்டபடியே பேசலாம்,” என்று, அவனை எதுவும் பேசவிடாது அழைத்தார். பிடித்த கை இன்னும் இறுகியிருந்தது.
“காலையில ஏதாச்சும் சாப்பிட்டியா?” அவன் சாப்பிட்ட வேகம் அப்படிக் கேட்கவைத்தது.
“ஒரே ஒரு இட்லி!” சுயபரிதாபத்துடன் வந்தது குரல். “இன்னொண்ணு கேட்டப்போ எங்க பாட்டி `அதான் அப்பனை முழுங்கிட்டியே’! ன்னு..,” குரல் விக்கியது.
“அப்பாவோட அம்மாவா?”
“ம்!”
“பாவம்! அவங்க துக்கத்தை ஒம்மேல ஆத்திரமா காட்டி இருக்காங்க. நீ செத்துப்போனா, ஒங்கம்மாவும் பிள்ளையைப் பறிகொடுத்த வருத்தத்திலே இப்படித்தானே ஆகிடுவாங்க?”
வாயருகே போன கை நின்றது. தன் உணர்ச்சிகளிலேயே ஆழ்ந்துபோன தனக்கு ஏன் அம்மாவைப்பற்றியும் நினைக்கத் தோன்றவில்லை?
அம்மா!
வாயில்லாப்பூச்சி!
வீட்டுக்கு வெளியில் தன்னைப் பிறர் நடத்தியதுபோல் மனைவியிடம் அதிகாரம் செலுத்திய கணவன், மகனை மிஞ்சிய மாமியார்.
தானும் போய்விட்டால், அந்த அப்பாவி அம்மாவின் கதி?
அவனையே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு அவனுடைய மனநிலை புரிந்திருக்க வேண்டும். “சீக்கிரமா சாப்பிடு. அடுத்த ரயில் வரப்போ, தண்டவாளத்திலே குதிக்கத் தெம்பு வேணாம்?” என்றார் கேலியாக.
அவருடைய சிரிப்பில் அவனும் கலந்துகொண்டான்.