ஒரு வீடு, ஒரு கனவு, ஒரு மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 9,878 
 
 

இந்தக் கதையின் நாயகன் அவனா அல்லது நானா அல்லது நீங்களா என்பது அவ்வளவு முக்கியமில்லை. ஏனெனில் இந்தக் கதையை வாசிக்கும் வாசகர்களில் பெரும்பாலோருக்கு ஒரு சில இடங்களிலாவது தங்களைப் பொருத்திப் பார்க்க இடமிருக்கும். மேலும் பிரதியின் ஊடே வாசகன் பிரயாணம் செய்வதற்கும் அதில் அவனே ஒரு முக்கிய ரோல் எடுத்து பிரதியின் நாயகனாகவோ, எதிர் நாயகனாகவோ மாறுவதற்கும் பிரதியின் வெளி இடம் தரவேண்டுமல்லவா. என்ன புரியவில்லையா. புரிகிற கதைக்கு வருவோம்.

இப்போது நீங்கள் ஒரு புதுமனைபுகுவிழா வீட்டிற்குப் போய்விட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருக்கிற அவனைப் பார்க்கிறீர்கள். சன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே முன்னால் முடியிழந்த தலையை அவ்வப்போது தடவிக்கொண்டு பேருந்துக்குப் பின்னால் பறந்து கொண்டிருக்கிற காட்சிகளைத் தணிக்கை அதிகாரி போல வலமும் இடமும் ஆட்டி அனுமதித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள். லேசான அவனுடைய புன்முறுவல் மனவளர்ச்சி குன்றிய குழந்தையினுடையதைப்போலவோ மனநிலை பிறழ்ந்த மனிதனுடையதைப் போலவோ உங்களுக்குத் தெரிகிறது. நீங்கள் சற்றுக் குழம்பித் தான் போகிறீர்கள். நீங்கள் மட்டும் என்ன? அவன் மனைவியே திருமணமான முதல் நாளிரவு அப்படித்தான் சந்தேகப்பட்டாள். ஒருவேளை பைத்தியத்தை மறைத்து திருமணம் முடித்து விட்டார்களோ என்று பதட்டமானாள். ஆனால் உண்மையில் அப்படியில்லை என்று அவன் பேசத் தொடங்கியதும் புரிந்து கொண்டாள். முகலட்சணம் அப்படி. என்ன செய்ய. அவன் சன்னல் வழியே பார்த்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டு வருவதாக நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? உண்மைதான். அவன் இப்போது சென்று வந்த புது வீட்டைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டு வந்தான். சமீப காலமாக வீடுகளைப் பற்றி நிறைய யோசிக்க ஆரம்பித்திருக்கிறான். எத்த்னையோ புதுமனை புகுவிழாக்களுக்குப் போயிருக்கிறான். அதில் கலந்து கொள்கிற ஒவ்வொருவரும் வீட்டைப் பற்றி ஏதாவது ஒரு அபிப்பிராயம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பாராட்டுகள் குறைவாகவும் விமரிசனங்கள் அதிகமாகவும் இருக்கும். உங்களுக்குத் தான் தெரிந்திருக்குமே. ஏன் நீங்களே கூட,

” என்ன ஷெல்பே வைக்கல… இந்த பெட்ரூம்ல.. இந்தபெட்ரூம்ல ஒரு ஷெல்ப் போட்டிருந்தீங்கன்னா இந்த இரண்டு பீரோவுக்கு வேலையே இல்லை… வீடு கட்டும்போது யுடிலிட்டி பர்ப்போசோட இருக்கிற மாதிரி யோசிக்கணும் சார்..”

இப்படிச் சொல்லியிருக்கலாம். மற்றொரு வீட்டுக்குப் போகும்போது, “ என்ன சார் வீடு முழுவதும் ஷெல்பா வைச்சிருக்கீங்க.. வீட்டோட லுக்கே குறைஞ்சிருச்சே.. கொஞ்சம் ஈஸ்தடிகலா இருக்கணும் சார்……”

என்று கூடச் சொல்லியிருப்பீர்கள். அநேகமாக திருத்தம் சொல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம் தான். அவரவர் மனசில் ஒரு வீடு இருக்குமல்லவா அந்த வீட்டோடு தான் மற்ற வீடுகளை ஒப்பிட்டுப் பார்த்து அபிப்பிராயம் சொல்வார்கள் என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.

சிமெண்ட் தரை போட்டிருக்கும் வீட்டின் விழாவிற்குப் போய் மொசைக் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதும் மொசைக் போட்டிருக்கும் வீட்டிற்குச் சென்றால் டைல்ஸ் போட்டிருந்தால் சூப்பராக இருக்கும் என்பதும் டைல்ஸ் போட்டிருந்தால் மார்பிள் போடணும்..சார்…..இந்த வீட்டுக்கெல்லாம்.. அப்பெத்தான் ரிச்சாக இருக்கும்..என்பதும், மார்பிள் போட்டிருக்கும் வீட்டிற்குப் போய், என்னதான் சொல்லுங்க.. கிரானைட் மாதிரி வருமா… நாம என்ன நூறு வீடா கட்டப்போறோம்..திரும்ப நாம நினைக்கிற மாதிரியெல்லாம் செலவழிக்க முடியாது…சார் பிள்ளைங்க..படிப்பு.. வேலை… கலியாணம்னு மாறி..மாறி… செலவுதான்..என்ன நாஞ்சொல்றது…என்பதும் கிரானைட் போட்ட வீட்டில் கலர் சரியில்லை…என்பதும் கொஞ்சம் ஓவராத் தெரியவில்லை.. நீங்களே யோசித்துச் சொல்லுங்கள்.

இப்படித்தான் ஒவ்வொருவர் பேச்சையும் கேட்டு எல்லா அதிநவீன ஆடம்பரங்களோடு வீடு கட்டிய பரமசிவத்துக்கு அதில் ஆறு மாதம் கூட இருக்கக் கொடுத்து வைக்கவில்லை. உங்களுக்குத் தான் தெரியுமே. நம்ம தெருவில் நுழைந்தவுடன் மூன்றாவது காம்பவுண்டில் இருந்தாரே அவர் தான். கடன் மூச்சுமுட்ட புது வீட்டை மூன்று லட்சரூபாய் நஷ்டத்துக்கு விற்று விட்டு மறுபடியும் அதே காம்பவுண்டிற்கு வரவில்லையா.

திருத்தங்கள், யோசனைகள் மட்டுமல்லாது எல்லோரும் கேட்க மறக்காத கேள்வி ஒன்று,

“” என்ன வாஸ்து பார்த்து தானே கட்டினீங்க…”

சிலர் இதுக்கும் மேலே போய் அவர்களே வாஸ்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். எதையாவது குண்டக்கமண்டக்க சொல்லி குடிபுகுந்த அன்றே வீட்டைக்கட்டியவன் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுப் போய்விடுகிற புண்ணியவான்களும் உண்டு.

ஆனால் சன்னல் வழியே பார்த்துக் கொண்டு, யாரிடமோ தலையாட்டிக் கொண்டே வருகிற அவன்..யாரிடமும் எந்த விமரிசனமும் சொல்லமாட்டான். பாராட்டுகளை மட்டும்தான் சொல்வான். சின்னச்சின்ன விஷயங்களைப் பார்த்துக் குறிப்பிட்டு பாராட்டும்போது வீட்டின் சொந்தக்காரர் முகத்தில் தோன்றுமே ஒரு பெருமிதம். ஆகா.. நீங்கள் அதைப்பார்த்திருக்கிறீர்களா. ஏனென்றால் யோசித்து யோசித்து அவர் செய்ததை யாராவது கவனித்துச் சொல்லமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்திருப்பார். அதை அவன் கண்டு சொன்னதும் அவர் மகிழ்ந்துருகிப் போவார். அதே போல வீட்டம்மையாரிடமும் எதையாவது குறிப்பிட்டு பாராட்டி விடுவான் அம்மையாரும் சந்தோஷத்தில் பூரித்துப் போவார்கள்.

ஆனால் ஒன்று தெரியுமா உங்களுக்கு? அவனுக்கும் கூட எந்த வீடும் திருப்தி தரவில்லை. அவனும் ஒரு லட்சிய வீட்டை மனசுக்குள் கட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய மனவளர்ச்சி குறைந்த மாதிரியான முகபாவக்குறிப்புக்கு மாறாக அவனுடைய சிந்தனைகள் அதி தீவிர அறிவுஜீவியின் சிந்தனைகளைப் போலிருந்தன. வீடுகளின் வெளி அமைப்பும் ஏற்ற மாதிரி இருக்கவேண்டும். இந்த வீடுகள் எல்லாம் மேற்கத்திய மற்றும் ஆரியர்களின் வழிமுறையில் திசைகளையும், கடவுள்களையும், சோதிடத்தையும் கலந்து குழப்பியெடுத்த வாந்தி. இதனால் ஒவ்வொருத்தரும் தன் நட்சத்திர ராசிக்கும், லக்கின ராசிக்கும், பெயர் ராசிக்கும், வாஸ்து பார்த்து கட்டிய வீடுகள் எப்படியிருக்கின்றன தெரியுமா. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் வாசல் வைத்து, காற்றையும், வெளிச்சத்தையும் அவன் வீட்டுக்குள் மட்டுமல்ல, அடுத்தவன் வீட்டுக்கும் வரவிடாமல் தடுத்து ஒருத்தன் வீட்டின் குண்டிக்குப் பின்னால் இன்னொருத்தன் வீட்டு மூஞ்சி இருப்பதைப் போலக் கட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறார்கள். சமையலறையை முன்னால் வைப்பதும், வரவேற்பறையைப் பின்னால் வைப்பது, செப்டிக்டேங்கை முன்னால், பின்னால், நடுவில், என்று எந்த வரைமுறையுமில்லாமல் எவனோ சொல்வதைக் கேட்டு வாழ்நாள் முழுவதும் தான் இருக்கவேண்டிய வீட்டைக் கோளாறாகக் கட்டி விடுகிறார்கள். இப்படி அவன் அவனுடைய நெருங்கிய நண்பர்களிடம் பேச ஆரம்பித்தவுடனேயே, அவன் இம்சையைத் தவிர்க்க,

“ சரிடா…பாப்பமே… நீ எப்படி வீடு கட்டறேன்னு…”

என்று சொல்வார்கள். நீங்களும் கூடச் சொல்லியிருப்பீர்களே. நீங்கள் கவனித்திருப்பீர்களா என்று தெரியவில்லை.. உடனே அவன் முகத்தில் ஒரு தீர்க்கதரிசியைப் போல ஒரு ஆழ்ந்த பாவம் குடியேறும். அவன்,

“ கட்டுவேன் ஒரு வீடு கட்டுவேன்.. இதுவரை யாரும்…கட்டியிருக்காத ஒரு வீடு..பாரதியும் காணாத கனவு வீடு…”

என்று சொல்வான். எல்லோரும் நீங்கள் உட்படத்தான் ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வீர்கள், இல்லையா.

இப்படியே பேசிக் கொண்டேயிருந்தவன் வீடு கட்டுவது சம்பந்தமாகத் தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தான். சென்னையில் ஒரு நண்பர் மூலமாகக் கட்டிடக்கலை கல்லூரிப் பேராசிரியரைச் சந்தித்தான். குறைந்த செலவில் நிறைவான ஒரு வீடு கட்டும் வழிமுறைகளைக் கேட்டான். அவர் வீட்டின் தட்பவெப்ப நிலை சற்றும் கூடவோ குறையவோ செய்யாமல் கட்டப்படும் எலிவளை முறையினை விவரித்தார். செங்கலுக்குச் செங்கல் இடைவெளி விட்டு கட்டப்படுவதால் காற்று உள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும்.அது மட்டுமல்ல செங்கற்களின் பயன்பாடும் மிகவும் குறைவதினால் செலவும் குறையும், என்றார். கேரள நண்பர் ஒருவர் வீட்டின் கூரைக்கு முழுவதுமாகச் செண்டரிங் அடித்து காங்கிரீட் போடுவதை விட சதுரம் சதுரமாக காங்கிரீட் துண்டுகளாகப் போட்டு கூரையில் அதை ஒட்டிவிட்டால் செலவும் குறைவு. பலமும் அதிகம் என்று கடிதம் எழுதினார். அவரிடம் அவன் வீடு கட்டும்போது வந்து யோசனைகளைச் சொல்லும்படி வேண்டுகோள் விடுத்தான். தினமணிக்கதிரில் மு.அப்பணசாமி என்ற எழுத்தாளர் எழுதிய குறைந்த செலவில் வீடு கட்டுவது எப்படி என்ற தொடரை வாராவாரம் வெட்டியெடுத்து பத்திரப்படுத்தி வைத்தான். அவருக்குக் கடிதமும் எழுதி வேறு விபரங்கள் இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டான். அப்போது அவர் லாரிபெக்கர் என்ற கட்டிடக்கலை நிபுணரைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். உடனே அவருடைய புத்தகங்களை வாங்கிப்படித்தான். குறிப்புகள் எடுத்துக் கொண்டான். இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

எப்போதாவது நண்பர்களிடம் இந்த ஆலோசனைகளின்படி கட்டுகிற வீடு எப்படி இருக்கும் என்று விவரிப்பான். இல்லாத ஊருக்கு வழி சொல்வதாக எல்லோரும் அவனைத் திட்டுவார்கள். இல்லையென்றால் சிரி சிரியென்று சிரித்துக் கொள்வார்கள். அதற்கு அர்த்தம் வேறு அகராதியில் இருக்கிறது.

வீடு கட்டுவதற்கு மனை வேண்டுமல்லவா? இதென்ன கேள்வி? சின்னப்பிள்ளைத்தனமான கேள்வி என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. தாய் தந்தை வழியாக பிதுரார்ஜிதமாக மாடு, மனை, காடு, மேடு, எதுவும் வந்து சேரும் வாய்ப்புகள் இல்லாததினால் உத்தியோகக் காண்டத்தில் கடன் பட்டாக வேண்டிய நிலைமை அவனுக்கு. உங்களுக்குத் தான் தெரியுமே. நமது அரசு அலுவலகங்களின் நிர்வாக நடைமுறைகள், வீடு கட்ட கடன் வாங்கும்முன்னால், மனை வாங்கும் கடன் வாங்க வேண்டுமே.அப்போது தான் முதன்முதலாக ஒரு ஆச்சரியத்தை அவன் எதிர்கொண்டான். திருமணம் முடிந்த நாளிலிருந்து அவன் சொல்கிற எந்த விஷயத்திற்கும் எதிர் விஷயமும், வாதத்திற்கு எதிர்வாதமும், ஆலோசனைகளுக்கு எதிர் ஆலோசனைகளும் கைவசம் ஸ்டாக்கில் வைத்துள்ள அவனுடைய இல்லாள் அவன் மனம் மகிழும் ஒரு யோசனையைச் சொன்னாள். அதாவது இன்னும் ஆறுமாதகாலத்தில் அவனுக்குப் பதினைந்து வருடகால சேவை நிறைவடைகிறது. அதன்பின் பிராவிடண்ட் நிதியிலிருந்து பணம் எடுத்து முதலில் மனை வாங்கலாம். பின்னர் வீடு கட்டும் கடன் வங்கியில் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னாள். அவன் பிரீதியுடன் அவளே வெட்கப்படும்படி அவளுடைய கைகளைப் பற்றிக் குலுக்கினான்.

நீங்கள் தானே சொன்னீர்கள். அவன் இப்போதெல்லாம் சற்றே கூன் போட்டே நடக்கிறான். உண்மைதான். கனவுகளின் சுமை ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே போனால், பாவம் அவன் என்ன தான் செய்வான். கூட்டம் கூட்டமாகக் கனவுகளை அடைத்து வைத்து மூச்சுத் திணறி விட்டது. அவனுக்கு. எனவே அவன் மூச்சு வாங்குவதற்காக ஒரு சில கனவுகளை வெளியில் சிறகுகளை விரித்துப் பறக்க விட்டான். இப்படித்தான் அவனுடைய லட்சிய வீடு பற்றிய லட்சியத் திட்டங்களை அங்கங்கே உதிர்த்து விட ஆரம்பித்தான்.

வீடு ஒரு இசைக்கருவியைப் போல இருக்க வேண்டும். காற்று சுதந்திரமாக வந்து செல்லும்படி காற்றின் திசைகளறிந்து கட்டப்படவேண்டும். காற்றின் வரவால் வீடு அதிர்வலைகளை எழுப்ப வேண்டும். அவை ஒரு சிதாரின் சுருதி போல வீட்டினுள் நிறைந்திருக்க வேண்டும். ஒளி வீட்டின் அத்தனை மூலைகளையும் தடவிச் செல்ல வேண்டும். அந்தச் சுகமான வருடல்கள் தான், வீட்டின் சதுரமூலைகளோ, முக்கோணமூலைகளோ, அரை வட்ட மூலைகளோ எல்லாம் இருளின் துணுக்குகளைத் தின்று ஆரோக்கியத்தின் சிறகுகளை விரிக்க வைக்கும். பயன்பாடும் அழகுணர்ச்சியும் வீட்டின் ஒவ்வொரு அணுவிலும் பொங்க வேண்டும். எந்த நேரத்திலும், வீட்டில் இருப்பதென்பது ஒரு பாறையின் கீழ் இருப்பதைப் போலவோ, இருண்ட குகைக்குள் இருப்பதைப் போலவோ இருக்கக் கூடாது.

வீடு வெளியில் எப்போதும் பறந்து செல்லத் தயாராக இருக்க வேண்டும். ‘ ம் ’ என்ற ஒலியில் அது பறந்து விட வேண்டும். சின்னஞ்சிறு தோட்டம் பருவத்தின் தோதறிந்து பயிர் செய்யும் காய்கறிகள். அன்றாடம் புத்தம் புதிதாய்ப் பறித்துச் சமையல் செய்ய வேண்டும். அத்துடன் பழமரங்கள். எளிய நமது நாட்டு பழவகை மரங்கள். வீட்டின் சுற்றுச் சுவரையொட்டி உள்புறமாக ஒரு நீர் வாய்க்கால். அந்த வாய்க்கால் நிறையத் தண்ணீர். அந்தத் தண்ணீரில் துள்ளும் மீன்களை வளர்க்க வேண்டும். கோழிகள் அடைய விசாலமான கூண்டு. புறாக்களுக்கென்று மொட்டைமாடியில் ஒன்று. மாடியில் தென்னையோலைகளால் வேயப்பட்ட பாரம்பரியமான ஒரு குடில். அதில் அவனுடைய நண்பர் சிவபாலன் வைத்திருப்பதைப் போல இலவச ஹோமியோ மருத்துவமனை. இப்படி அடுக்கிக் கொண்டே போவான் இல்லையா.

இதுதான் எனக்குத் தெரியுமே என்கிறீர்களா? அவன் சொல்லச் சொல்ல ஆ வென்று வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருக்க இரண்டு நண்பர்கள் இருந்தார்கள் என்றால் அவன் சொல்வதில் துளியும் நம்பிக்கையின்றி அவனை நக்கலடிக்கவும் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். நீங்கள் இதில் எந்த அணி என்று எனக்குத் தெரியாது. இதனால் வெகுசீக்கிரமாகவே ஐடியா அய்யாச்சாமியாகவும், கனவு கந்தசாமியாகவும், எல்லோர் மத்தியிலும் உலாவர ஆரம்பித்தான்.

அவன் இல்லாளே அவனை இடித்துரைக்க ஆரம்பித்தாள். அவன் உளறலை சற்று நிறுத்தச் சொன்னாள். காரியத்தில் கண்ணாயிரமாக இருக்கச் சொன்னாள். கதையை இந்த இடத்தில் தான் திருப்ப வேண்டும். அதை லீனியராகத் திருப்புவதா அல்லது நான்லீனியராகத் திருப்புவதா என்று தெரியவில்லை. சில நண்பர்களுக்கு லீனியர் தான் பிடிக்கிறது. சில நண்பர்களுக்கு நான்லீனியர் தான் பிடிக்கிறது. என்ன செய்வது? உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லுங்கள். அப்படியே செய்து விடலாம். என்ன, எப்படியாவது திருப்பி கதையை முடியுங்கள் சார் என்கிறீர்களா..சரி..சரி..

அவன் மனைகளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். இப்போதே பார்த்து தேர்வு செய்து விட்டால் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று இல்லாள் அறிவுறுத்தினாள். அவனும் அதை சிரமேற்கொண்டு அலைய ஆரம்பித்தான். ஊருக்குச் சற்று அருகில் இருந்தால் மனையின் விலை அவனால் தொடமுடியாத சிகரத்தில் இருந்தது. நகரத்திலிருந்து ஒருமணிநேர பேருந்து பயணத்தூரத்திலுள்ள மனைகளே அவனுடைய வசதிக்குத் தகுதியாக இருந்தன. ஆனால் அங்கே இப்போது வீடு கட்ட முடியாது என்றான் அவன். இல்லை எப்போதுமே வீடு கட்ட முடியாது என்றாள் அவனுடைய இல்லாள்.

இப்படி எங்காவது வீட்டுமனை பார்க்கப் போய் வந்த அன்று வீட்டில் எல்லாமே குழப்பமாகிப் போனது. இல்லாளின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தடுக்கித் தடுக்கி விழுந்து காயம்பட்டான். காயங்களை ஆற்றுவதற்காக அவன் மேலும் மேலும் கனவுகளை வளர்த்தான். அந்தக்கனவுகள் எல்லாம் வீடுகளைப் பற்றியே இருந்தன.

இப்போது கூட அவன் அருகில் காலியாக உள்ள இடத்தில் நீங்கள் அமர்ந்து அவனிடம் பேசிப்பாருங்கள். அவனுடைய லட்சிய வீட்டைப்பற்றி நீங்களே நெகிழ்ந்து போய் விடும்படி பேசக்கூடும். இன்று மாலை ஊருக்கு வெளியேயுள்ள கரிசக்காட்டில் ஒரு வீட்டுமனையைப் பார்க்கப் போவதாக அவனும் இல்லாளும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒவ்வொருமுறை வீட்டுமனை பார்க்கப்போகும் போதும் அவன் கண்களில் ஒரு ஒளி வீசும். லட்சிய வீட்டைப் பற்றி அவன் கண்ட கனவுகள் தங்கமீன்களைப் போல நீந்தி விளையாடும். சூரியஓளி பட்டுத் தெறிக்கும் அதன் ஒளி உங்கள் கண்களைக் கூசச் செய்கிறதல்லவா? கனவுகளின்றி வாழ்க்கையா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *