இரவு மணி ஏழரை.
கேசவன் வெகு நேரமாய் இருட்டில் கிடந்தான்.புறப்பிரக்ஞையாய்வரும், எண்ண அலைகளுக்குள் சிக்காமல், தானும் தன் தனிமையுமாய் இருந்து பழகிவிட்ட அவனுக்கு, அதுமிகவும் பிடிக்கும். வெறும் காட்சி மையமாய், கண்ணை அடைக்கும் இருளைப் புறம், தள்ளி,மறந்து விட்டுத்தன்னுள், பிரவகித்துப் பாயும் ஒளிமயமான,பழையநினைவுத் தடங்களையே பற்றிக் கொண்டு அவன், அப்படியே புல்லரித்துக் கிடப்பான் .
இன்றைய பகல் ஞாயிறு, விடுமுறை தினமாதலால்,அது இன்னும் வசதியாக இருந்தது . இப்போது சூழ்நிலை காரணமாகக் கொழும்பில் வந்து,தங்கி,விட நேர்ந்தாலும்,சொந்த மண்ணில்,யாழ்ப்பாணத்துப் புனித மண்ணில், தான் வாழ்ந்த வாழ்க்கை, ஒரு மறக முடியா த சிரஞ்சீவி வாழ்க்கையாகவே, நிலைகொண்டு, நிலைத்திருப்பதை, அறியும்
போதெல்லாம் கொழும்பு நகரத்து, நாகரீக வாழ்க்கையின், கறைகள் படியாத, ஒரு முழு மனிதனாய், தன்னை அவன் உணர்வதுண்டு அதை உணர்வுபூர்வமாய்,, அனுபவித்து, மகிழவே, இரவில், இப்படியொரு ஆளுமை அவனுக்கு.
அவன் இளம் வயதிலேயே, தந்தையை இழக்க நேர்ந்ததால், தாயையும் இரு தங்கைகை களையும், காப்பாற்றி, வாழவைக்க, வேண்டிய, கடமையின் நிமித்தம், தன் மேற்படிப்புக் கனவுகளை மறந்து விட்டுக் கொழும்பில் கம்பனி ஒன்றில் அக்கவுண்ட், கிளார்க்காக வேலையில் சேர்ந்து, ஒரு வருடத்திற்கு மேலாகிறது. அதிலிருந்து மெல்ல மெல்ல முன்னேறவே, அவன் விரும்பினான். சுதேசி மண்ணின் பெருமைகளை, மறந்து விட்டு வெளிநாட்டுக் கனவுகளைச் சுமந்து, கொண்டு திரியும் சராசரி இளைஞர்களின்றும், மாறுபட்டஓர் இலட்சியத்தமிழ் இளைஞன் அவன்.
இப்படி எவ்வளவு நேரம் தான் இருட்டில் கிடந்தானோ தெரியாது,அம்மா வந்து விளக்கைப் போட்ட பிறகுதான்,கண் திறந்தான். கட்டிலருகே, அவன் முகத்தையே ஏறிட்டுப் பார்த்தபடி அம்மா சந்தோஷமாகச் சிரித்தபடி, நின்றிருந்தாள்.அவள் என்றுமே இவ்வளவு சந்தோஷமாகத் தோன்றியதில்லை.அவள் முகமும், கண்களும், உணர்ந்து பிரமித்துப் போயிருந்தான். அதற்குக் காரணம் பிடிபடாமல், விழிகளை உயர்த்தி அவளை ஏறிட்டுப்பார்த்தவாறே அவன் கேட்டான்
“என்னம்மா……?”
“உனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் வரப்போகுது!”
“என்ன சொல்லுறியள்?”
“ஓம்! நீ கெதியிலை வெளிநாட்டுக்குப் போகப்போறாய், நான் எப்படி உன்னை அனுப்புவதென்று தெரியாமல் எவ்வளவு கவலைப்பட்டிருப்பன். இப்ப ஒரு பிள்ளை இலண்டனிலிருந்து இஞ்சை வந்து நிக்குது. அது சின்ன வயதிலிருந்தே லண்டனில்தானாம் உன்ரை சாதகம் கேட்டுக் கொடுத்தனான். நானும் வாங்கிப்பார்த்து,நல்லபொருத்தமாயிருக்குது ஆக்களையும் விசாரிச்சுப் போட்டன். வயதும் குறைவு. நல்ல வடிவான பிள்ளை படம் இருக்கு! பாக்கிறியே?”
அவன் அதற்கு ஒன்றும் சொல்லத் தோன்றாமல், யோசனையில் ஆழ்ந்தான். வெளிநாடு பற்றிய, வரட்டு வாழ்க்கையின், மோகம், அம்மாவையும் விட்டு வைக்கவில்லை அதற்காக மானம் போனாலென்ன. உயிர் போனாலென்ன சொந்தப் பெருமைகளை விற்று, வெறும் காசுக்காக, வெளிநாட்டு மண்ணிண் சுக போகவாழ்க்கைச் சொர்க்கத்துக்காக, இப்படிப் பொய்யில் உயிர் பிழைத்து வாழ நேர்ந்த கொடுமையை எண்ணி, அவன் மிகவும் மனவருத்தம் கொண்டான்.
இதை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திக் கூறினால், அம்மாவால் தாங்க முடியாது. அவள் அதற்கு எதிர்மாறாகப் பல காரணங்களைக் கூறுவாள். கல்யாண வயதில் இருக்கின்ற தன்தங்கைகளுக்காகவே இதுஎன்பாள் இப்போது வேண்டியதெல்லாம், வெறும் இலட்சங்கள் மட்டுமே .அது வேகுறிக்கோளானபின்,அவள்தான் என்ன செய்வாள்?
அவன் ஒன்றும் கூற, விரும்பாமல். படத்தை வாங்கிப்பார்த்தான். அதில் அந்தப் பெண், சொந்த மண்ணிலிருந்து வேர்விட்டுக் கழன்று, போன, முற்றிலும் மாறுபட்ட, ஓர் அந்நியப் பெண்ணாகவே, நிலையழிந்து, நின்று, கொண்டிருந்தாள். தோலுரித்து விட்ட ஓர் அரை வேக்காட்டு வெள்ளைக்காரி போல், அவள் தோன்றினாள். அதன் பிரதி பலிப்பையே, வெளிச்சம்
போட்டுக் காட்டும், மெரு கூட்டப்பட்ட, கண்ணைக் கூசவைக்கும் அவளின் பகட்டழகு வெறும் வரட்டுக் காட்சி, நிழலாகவே, அவன் கண்களில் ஒட்ட மறுத்தது.
“பார்த்தியே, என்ன வடிவான பிள்ளை! உனக்குச் சரியான சோடி உன்னைக் கையோடு கூட்டிக் கொண்டு கொண்டு போவதோடு ,சீதனமும் பத்துலட்சம், தருவினமாம் உனக்கு விருப்பம் தானே?”
வெறும் காசுக்காக இப்படித் தன்னை விற்கத் துணிந்து விட்ட அவளின், விபரீத ஆசயை,எண்ணி அவன் உள்ளூரத் தார்மீகச் சினம் கொண்டு, மனம் வருந்தினாலும், அதை வெளிக்காட்டாமல் பொய்யாகச் சிரித்துக் கொண்டே அவன் சொன்னான்:
“அம்மா! இப்ப பிளேன் ஏறுவதே பெரிய விடயமாயிருக்கு. இதிலே சொந்தப் பெருமைகளைப் பற்றி யோசிக்க என்ன இருக்கு? அது என் காலடியிலே வந்து நிற்குதென்று,நீங்கள் நம்புகிறியளே. இதுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேணும் லண்டன் என்றால் சும்மாவே? சொர்க்கமே கிடைத்த மாதிரித்தான். எனக்குச் சம்மதம். கெதியிலை நாள்பாருங்கோ!”
அவன் அந்தக் கல்யாணத்திற்குச் சம்மதித்து விருப்பம் தெரிவித்த பிறகு மளமளவென்று காரியங்கள் நடந்தேறின ஒரு நல்ல முகூர்த்த நாளில் அவனுக்கும் ஆஷா என்ற அந்த லண்டன் பெண்ணுக்கும் வெள்ளவத்தையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் கல்யாணம் மிக விமரிசையான ஒரு புனிதச் சடங்காக நடந்தேறியது. அன்றைய, முதலிரவுப் பொன்னாளை மகிழ்ச்சியுடன், கொண்டாடி மகிழ்வதற்காக, ஆஷாவின்,விருப்பத்திற்கு இணங்க அவன் கொள்ளுப்பிட்டியிலுள்ள ஒரு டூரிஸ்ட் ஹோட்டலுக்கு அவளோடு வந்திருந்தான்.
குளிரூட்டப்பட்ட அந்த விசாலமான படுக்கையறை நவீனமயப் படுத்தப்பட்ட பல வசதிகளுடன், சொர்க்கலோகம் போலிருந்தது. அவனுக்கு அது மாறுபட்ட புது அனுபவம் இப்படியொரு இடத்திற்கு, அவன் வந்திருப்பது, இதுவே முதல் தடவை. இன்றும் அவன் அறிவு பூர்வமாய், உணர்ந்து வருந்துகின்ற யதார்த்த வாழ்வின் நிறைந்த சோகங்களினிடையே கண்களை விட்டு நழுவிப் போகின்ற, வெறும்மாயக் கனவாகவே, அதை அவன் உணர்ந்தான் பகல் முழுவதும் போட்டுக் கொண்டிருந்த, மாப்பிள்ளை வேஷத்தைக் கழற்றிப்போட்டு விட்டுச்சாரம் அணிந்து கொண்டு,கட்டிலின் மீது ஒருக்களித்துப் படுத்தவாறு, அவன் ஆஷாவின் வருகைக்காக,வெகு நேரமாய், காத்துக் கொண்டிருந்தான்.
மங்கிய விளக்கொளியில், ஒரு மின்னிப் பளபளக்கும், வானத்துத்துத் தேவதை போல் நைட்டியுடன் அவள் வெளிப்பட்டு வந்தாள். செண்ட் வாசனை அடிக்க,அவனருகே குழைந்து அமர்ந்தவாறு, அவனின் தோள் மீது செல்லமாக முகம் புதைத்து, வெட்கம் கலந்த மெல்லிய குரலிலே அவள் கேட்டாள்:
“எனக்கு இப்ப விஸ்கி வேணுமே. விஸ்கி,சிகரெட் இரண்டுமே குடித்தால் தான்,எனக்குச் சந்தோஷம் வரும். இஞ்சை நிறைய இருக்குமே. போய் வாங்கி வாறியளே, காசு தாறன்.”
அவள் கேட்டதைக் கொடுக்க முடியாமல், அவன் உணர்ச்சி வசப்பட்டுத் தயங்குவது தெரிந்தது திடீரென்று ஏற்பட்ட ஓர் உள்ளார்ந்த மன நெருக்குதலில், அவன் வெகுவாக நிலை குலைந்து கலங்கிப்போயிருந்தான், மோசமான குடிப்பழக்கம் கொண்ட ஆண்களையே, அவன் நிறையப் பார்த்திருகிறான். அதற்கு அடிமையாகிப் போன, ஒரு பெண்ணை, இப்போதுதான், அவன் முதன் முதலாகக்காண நேர்ந்திருக்கிறது. அதுவும் தன் மனைவியாக, அவள் முழுவதும் தமிழின் தோலுரிந்து போன, ஓர் அரை வேக்காட்டு வெள்ளைக்காரியே என உணர்கையில் அந்தத் திருமண உறவில் பந்தப்பட்டுத் தானும், தீக்குளிக்க நேர்ந்து, விட்டதாகவே,அவன்
மிகவும் மன வருத்தத்தோடு நினைவு கூர்ந்தான்.
இத் தீக்குளித்தலில் இவளும் புடம் போடப்பட்டுப் புனிதம் பெற்றால், எவ்வளவு நன்றாக இருக்கும். இது நடக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் அவன் அவளுக்கு மறு பேச்சின்றி, அவளிடமிருந்து காசைப் பெற்றுக் கொண்டு அ வசரமாகக் கட்டிலை விட்டிறங்கிக் கீழே போனான்.
அவள் பொறுமையிழந்து, அவனுக்காக, வெகு நேரம்காத்துக் கொண்டிருந்தாள். அவன் விஸ்கியும் கையுமாக, உணர்விழந்த நிலையில்,ஒரு வெறும் மனிதனாகத் திரும்பி வந்திருந்தான். மகிழ்ச்சி பிடிபட்ட அவளோ,மறு துருவத்தில்,குடிபோதையில் தள்ளாடிச்
சரியும் ஒரு பேதையாய், மட்டுமல்ல, நாதியற்றுத் தெருவுக்கே வந்துவிட்ட பெருமையிழந்த ஒரு சமூகத்தின், முதல் வாரிசு போலவும். அவனின் மார்பு மீது,வெறியோடு கட்டிப்புரளும் அவள் அவ்ளோடு அப்படிச் சகதி குளித்தவாறே, வெறும் மரக்கட்ட போல் மரக்கட்டை போல் அவன் அப்படியே தூங்கியும் விட்டான்.
மறு நாள் பொழுது ,விடிந்து, வெகு நேரமாகியும் ,அவள் ,இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள் ..அவன் நீண்ட நேரமாய் ,பல் துலக்கியபடி ஜன்னலுக்கு வெளியே கீழே குனிந்து ,பார்த்துக் கொண்டிருந்தான் அதில் காலை நேரத்துப் பரபரப்பில், அள்ளுண்டு போகும் ,மனித வெள்ளம் அலை புரண்டு போவதாய் ,உணர்ந்தான்.
காலத் தீட்டும், கலி முற்றிய பாவமும் யாரைத்தான் விட்டு ,வைக்கும். இதில் கழுவாய் சுமந்து சாக,அவனுக்கும் ஒருவிதி.இதில் வாழ்வா சாவா என்பது இனித்தான் தெரிய வரும்.
ஆஷா எழும்பி விட்டாள் பன்னீர் குளியல் போட்டு வந்து ,நிற்கிறாள் குடிபோதை வாசம் இன்னும் போகாமல் அந்த மலர்க்கொத்து…..மலர் முகம்,மலர்ந்த அவளின் விழிகளில் மதுவின் போதையே ,சிவப்பேறிக் கனன்று பற்றியெரியும் ,ஒருதீப்பிழம்பாய் ,அவனின் நெஞ்சுக்கவசத்தைச் சுடப்பார்த்தது .அவன் முகம் திருப்பி வேறு பக்கம் ,பார்த்தவாறே சொன்னான்
“கெதியிலை வெளிக்கிடும் .அம்மா வீட்டை போக வேணும்”.
அதைத் தொடர்ந்து ,அவளின் புறப்பாடு ,மின்னல் வேகத்தில் நிகழ்ந்தது. உயர்ரகப் பட்டுப்பு டவைம் மின்னும் நகையலங்காரத்துடன் ,காட்சி தேவதையாய் வெளிப்பட்டு வந்தாள், ஒரு வாடகைக்கார் பிடித்துக் கொண்டு அவன் அவளோடு வீடு வந்து சேர்ந்தான்.
வெள்ளவத்தையில் ஓர் அழகான பெரிய வீட்டிற்கு முன்னால், பூரண கும்ப மரியாதை வரவேற்புடன், அப்புது மணமக்களை ,வரவேற்பதற்காக ஆராத்தித்தட்டும் கையுமாக அம்மா வாசலில் ,மகிழ்ச்சி பரவசமாய் நின்றிருந்தாள்.அவளருகே புதுப் பணக்காரக்களைப் பொலிவுடன் தங்கைகள் இருவரும் நிற்பது கண்டு ,ஒளிவீசும் இந்தப் பெருமைகளுக்கு முன்னால் ,களங்கப்ப்ட்டு ,வந்து நிற்கும்,சூனிய மாகி விட்ட, தனதுவாழ்வின் வெறுமையை ,மட்டுமே ,நினைவு கூர்ந்தவனாய்த் தலை கவிழ்ந்து நின்றிருந்தான் அவன்.
ஆராத்தி காட்டி முடிந்து, பொட்டு வைப்பதற்காக அவனின் முகத்தை நிமிர்ந்து ,பார்த்த அம்மாதிடுக்கிட்டுப் போனாள்/. .என்ன நடந்து விட்டது அவனுக்கு?என்று புரியாமல் மனம் குழம்பியவாறே பொட்டு வைத்த கையோடு உள்ளே போய் விட்டாள் அவளைத் தொடர்ந்து ஆஷா பின் தொடர அவனும் போனான்.
தங்கை அணிவித்த ,மாலையைக்க் கழற்றி ஒருமூலையில் வீசி யெறிந்து விட்டு, உள்ளே போய் உடை மாற்ற மனமின்றி, அப்படியே சோபாவில் சரிந்து ,கண்களை மூடியவாறு பிரமை பிடித்தவன் போல் உண்விழந்து கிடந்தான் அவன். அவனின் நிலை கண்டுமனம் பதைபதைத்து ,அவனருகே வந்து அமர்ந்து கொண்டு அம்மா கேட்டாள்.
“என்ன தம்பி யோசிக்கிறாய்?”
இதற்கு அவனிடமிருந்து பதில் வர, வெகு நேரம் பிடித்தது. அதற்குள் ஆஷாவே வந்து விட்டாள் உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டு, எடுப்பாக ஜீன்ஸும் ரீசேட்டும் போட்டுக் கொண்டு ஒரு கவர்ச்சி தேவதையாய் அவள் அறையினின்றும் வெளிப்படும் போது ஹால் முழுவதும் வியாபித்து, ,நெடி வீசிய,சிகரெட் புகையினால் அம்மாவுக்கு மூச்சுத் திணறியது அந்தச்சிகரெட் புகை ,எங்கிருந்து ,வருகிறதென்று புரியாமல் ,திரும்பிப் பார்த்த அவள் திடுக்கிட்டுப் போனாள்.
ஆஷாவின் வாயிலிருந்துதான் அந்தப் புகை மண்டலம் .அதை ஒரு விளையாட்டுப் போல்கருதி,மிகவும் நாசுக்காக அவள் சிகரெட் ,பற்ற வைத்துக் கொண்டிருந்தாலும், அம்மாவுக்கு அது ஒரு பயங்கரச் செய்தியாகவே,மனதில் உறைத்தது. அவள் பொறுக்காமல் கேட்டும் விட்டாள்.
“என்ன இது புதுப் பழக்கம்?”
“புதுப் பழக்கமில்லையம்மா.மிகச் சின்ன வயதிலேயே ,இவளை லண்டனுக்கு அனுப்பி விட்டார்களாம். அங்கே மாமர ஒருவரோடு போய் வாழ நேர்ந்ததால் வந்த வினை. அவரைப் பார்த்து ,இவளும் நிறையக் குடிப்பாளாம் .சிகரெட் மட்டுமல்ல, விஸ்கியும் குடிக்கிறாளே!”
“ஐயோ! என்ன கொடுமை இது? எங்களை நல்லாய்தான் ஏமாற்றிப் போட்டினம் பாவிகள் .எல்லாம் அந்தப் புரோக்கரின் வேலை இனி என்ன செய்வது? பேசாமல் கழற்றி விடுவமே!”
அவன் அதை கேட்டு மனம் வருந்தியவனாய்ச் சொன்னான்.
“வாயை மூடுங்கோ! நீங்கள் நினைக்கிற மாதிரி, உடனே கழற்றி விடுவதற்கு இது விளையாட்டுக் கல்யாணமில்லை . அக்கினி சாட்சியாய் இவளை மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்ட பின் அப்படி நினைகிறதே பாவமென்று எனக்குக் கவலையாக இருக்கு.
அவன் தன்னை மறந்து,உணர்ச்சி வசப்பட்டுக் குரல் கம்மிப் பேசிக் கொண்டிருந்த போது, இடையில் ,குறுக்கிட்டு ,ஆவேசமாக அம்மா கேட்டாள்.
“அப்ப நீ என்னதான் செய்யப் போறாய். இவளோடு தான். வாழப் போறியே?”
“எனக்கு வேறு வழி தெரியேலை. இவளை மனப்பூர்வமாய், ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு,நான் செய்யக் கூடிய ஒரே காரியம் இதுதான் ஒரு பேதையாய் என் காலடியில் விழுந்து கிடக்கிற இவளை நான் காப்பாற்ற வேணும்.களங்கமற்ற என் புனிதங்களாலே, இவள் மனம் திருந்தி ஒரு நல்ல பெண்ணாக மாற வேணும்.எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு. இவளை மட்டுமல்ல.தடம் புரண்டு கிடக்கிற என் சமூகமும் இதனால் கண் விழிக்க வேணும். இப்படியொரு மறுமலர்ச்சிக்காகவே எனக்கு இந்த வாழ்வு, கல்யாணமெல்லாம்”.
அம்மாவின் அசட்டுப் பாமரகுணங்களுக்கப்பால், உயரத்தில் சஞ்சரிக்கும்,ஒரு பிரகாசமான ,துருவ நட்சத்திரம், ,போல அவனது இந்த வார்த்தை பிரகடனம் ,கணீரென்று கம்பீரமாக ஒலிப்பதை ,மெய் மறந்து கேட்டவாறே,அவள் மிகவும் உச்சி குளிர்ந்து புல்லரித்துப் போயிருந்தாள். அவளின் ஒளிமங்கிய கண்களுக்கு முன்னால்¸ நாதியற்றுத் தெருவுக்கே வந்து விட்ட தங்களின் சமூகத்தைத் தன் கைப் பேழையில் ஏந்திக் காப்பாற்றும் பெருமைக்குரிய ஒரு கம்பீர புருஷனாய்! அவனை இனம் கண்டு அவளின் முகம்பிரகாசித்து ஒளிர்ந்தது!.இந்த உணர்வின் சிலிர்ப்பில் முற்றிலும் பேச்சு அடங்கிப் போன மெளனம் அவளுள் நிலவ உயிர் கனமற்று வானத்தில் மிதப்பது போல,அந்தப் புல்லரிப்புக் கணம் ,அடங்க வெகு நேரம் பிடித்தது.
– மல்லிகை (ஆகஸ்ட் 2005)