ஒரு மரணமும் சில மனிதர்களும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 10,501 
 

அம்மம்மாவிற்கு நிலை கொள்ளாத மகிழ்ச்சியாக இருந்தது. கண்களூடு கரையப் பார்த்த கண்ணீர் வேறு.

“இந்தாடியம்மா சாப்பிடு…. இதெல்லாம் அப்ப கொம்மா தேடித் தேடிக் கொண்டந்து நட்டது தெரியுமே… பார் இப்ப அது காய்க்கிற நேரம் அனுபவிக்கக் கொடுப்பினை இல்லை…”

நன்கு முற்றிப் பருத்திருந்த கொய்யாக்காய்களை நடுங்கும் விரல்களால் நயனியிடம் கொடுத்தபடி அவள் கைகளைத் தடவி அங்கலாய்த்தாள்.

“ என்ரை குஞ்சு, எப்பிடி வளந்திட்டாய்…? பாத்து எவ்வளவு காலம்…?”

ராசாத்தி ஆவலோடு அக்காவின் மகளைப் பார்த்தாள். நெடுநாளின் பின் வந்திருந்த பெறாமகளைப் பார்த்த சந்தோசத்தைக் காட்டிலும், அவள் கண்களில் கலக்கம் அதிகம் தெரிந்தது. அக்காவின் குடும்பம் வன்னிக்குப் புறப்பட்டதற்கான காரணம் அவளுக்குத் தெரியும். அதற்குப் பிறகும் மகிழ்வதெப்படி…?

குமரனும், வேலனும் தம் ஒன்றுவிட்ட அக்காவைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க, ராசாத்தி ‘உஸ்’ என்று வாயில் விரல் வைத்து அவர்களை அடக்கினாள்.

நயனிக்கு ஏற்கனவே அம்மம்மாவில் பாசம் வேறு. அம்மம்மா, அம்மம்மா என்று பின்னாலேயே திரிந்தாள.

“இதென்ன, அம்மம்மா காலெல்லாம் நிகம் பெரிசா வளந்திட்டுது. இருங்கோ, நான் வெட்டி விடுறன்…” என்று சொல்லி கச்சிதமாய் நகங்களை வெட்டி விட்டாள்.

அம்மம்மா மனங்குளிர்ந்து போய் பேத்தியைப் பார்த்தா.

“இனி இந்த நிமிசமெண்டாலும் சாகலாம்…”

“இதென்ன கதை அம்மம்மா…” அவள் சிணுங்கியபடி முகம் சுழித்தாள்.

“ சித்தப்பா எங்கை சித்தி…?” ஞாயிற்றுக்கிழமையின் நினைவை மனதில் உள்வாங்கியபடி நயனி கேட்டாள்.

“ரவுணுக்குத்தான் போட்டார். இனி வந்திடுவார்…” என்றபடியே ராசாத்தி குமரனைக் கூப்பிட்டாள்.

“டேய், தம்பி, ஒருக்கா அந்தச் சந்திக் கடைக்குப் போட்டு வா அப்பு…”

“ எனக்கப்பிடியொண்டும் விசேசமா வேண்டாம். நீங்கள் சாப்பிட்டுக் குடிக்கிறதே எனக்கும் காணும்…”

குமரனை அனுப்பிய சித்தியின் மனவோட்டத்தை உணர்ந்து நயனி சொன்னாள்.

“சும்மா இரு நயனி, வராதனி வந்திருக்கிறாய். ஒழுங்காச் சாப்பிட்டுக் குடிச்சிருப்பாயோ…?”

அம்மம்மாவின் கைப்பிடிக்குள் அடங்கியபடியே கதைத்துக் கொண்டிருந்த நயனி அம்மம்மாவின் கைகளை விலக்கி விட்டு மெல்ல எழும்பி வந்தாள்.

“சித்தி…”

ராசாத்தி என்ன என்பதுபோல் ஏறிட்டாள்.

நயனி ஒன்றும் சொல்லாமலே சித்தியின் கண்களைப் பார்த்தபடி நின்றாள்.

“என்ன நயனி, என்ன கஷ்டம் உனக்கு…?”

“ஒண்டுமில்லைச் சித்தி… நான் இஞ்சை வந்து நிக்கிறதாலை உங்களுக்குக் கரைச்சல் ஒண்டும்…” அவள் முடிக்கும் முன் சட்டென்று வாயை மூடினாள் ராசாத்தி.

“நீ எங்கட குடும்பத்துப் பிள்ளை, இதுவே குமரனோ, வேலனோவாய் இருந்திருந்தால் எங்களாலை மறுக்க ஏலுமே. ஆனா, நீ கவனம் நயனி. இந்த நேரம் உன்னைப் பத்திரமா வைச்சிருந்து, உன்ரை அப்பா, அம்மாட்டைத் திருப்பி அனுப்புவமோ எண்ட கவலை தான் நயனி….”

“நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப்படாதைங்கோ சித்தி. ஆனா, நான் உங்களுக்கும் கரைச்சல் தரமாட்டன். ரெண்டு, மூண்டு நாளிலை நான் போடுவன் சித்தி….”

“இப்ப வேறை கதைகள் வேண்டாம். அவள் ஆறுதலாக் கொஞ்சம் இருக்கட்டும்…”

அம்மம்மா அடுப்படிக்குள் போய் எலும்மிச்சம்பழம் கரைத்து வந்து அவளுக்கு ஊட்டி விட்டா.

“எனக்கு எங்கடை வீட்டுக் கிணத்தடிலை ஆசை தீர முழுகோணும் போலை கிடக்கு….”

நயனி ஆசையோடு பழைய சனிக்கிழமை முழுக்குகளை மனதில் அசை போட்டாள்.

சின்ன வயதில் இந்த அம்மம்மா சனக்கிழமை தோறும் தலை நிறைய எண்ணெய் அப்பி, ஊற விட்டு அரைத்து வைத்த சீயக்காயும், வெந்தயமும் தேய்த்துக் கதறக் கதற முழுக வார்ப்பது ஞாபகம் வந்தது.

சித்தி சீயாக்காய் அவிப்பதற்காக உள்ளே போக, நயனி அம்மம்மாவின் மடியில் தலை சாய்த்தாள்

“அம்மம்மா….”

“என்ன பிள்ளை”

“ எனக்கு முந்தி நீங்கள் சீயக்காய் தேய்க்கிற மாதிரி இனி எப்ப தேய்ப்பீங்களோ…?

அம்மம்மா நடுங்கும் விரல்களால் அவளது தலைமயிரைக் கோதிவிட்டா.

“ஏன், எனக்கென்ன, நானே இண்டைக்கும் தேய்க்கிறன்….”

“ வேண்டாம், அம்மம்மா, உங்களாலை ஏலா…”

கொஞ்ச நேரம் பேத்தியின் முகத்தைப் பார்த்துத் தடவியபடியிருந்த அம்மம்மா சிறிது நேரத்தின்பின் மெல்லக் கேட்டா, “நீ… ஏன் பிள்ளை என்னை விட்டிட்டுப் போனனி….?

நயனி தொண்டைக்குள் வலித்த வலியை, கஷ்டப்பட்டு விழுங்கியவாறே கண்களை மெதுவாக மூடிக் கொண்டாள்.

“ஏனடி, இப்பிடிச் செய்தனி, இனியாவது விட்டிட்டுப் போகாதை என்ரை செல்லம்….”

அவள் ஒன்றும் சோதிருந்தாள்.

“அம்மாவைப் போய்ப் பாத்தியே அங்கை…”

“ம்”

“என்ன மாதிரியங்கை…”

“சரியான கஷ்டம்தான்…”

“ கொண்ணன் அங்காலை வெளிலை போறதுக்கு போனவனெல்லே … போய்ச் சேந்திட்டானே…”

“இல்லை இன்னும் கொழும்பிலைதான் நிக்கிறார்…”

“நீயும் ஒமெண்டிருந்தா அவன் தீபன், சுவிசுக்கு உன்னை எடுப்பிச்சிருப்பான். நீதான் அதுக்கிடையில்….”

அம்மம்மா…..”

“என்ன செல்லம்…”

“நீங்கள் ஏன் அம்மம்மா, சனமெல்லாம் இடம் பெயர்ந்து சாவகச்சேரிக்குப் போகேக்கை போகேல்லை….”

“இது நான் பிறந்து வளந்த மண். உன்ரை தாத்தாவோடை சேர்ந்து வாழ்ந்த இந்த மண்ணை விட்டு நான் போகன். போறதெண்டாலும் என்ரை சாவுக்குப் பிறகுதான்…”

“அது மாதிரித்தான் அம்மம்மா எனக்கும்… நான் பிறந்த இந்த மண்ணை அவலத்திலை விட்டிட்டு நான் மட்டும் தப்பிப் போக எனக்குப் பிடிக்கேல்லை.”

அம்மம்மா விக்கித்துப் போய் நின்றாள்.

இவளோடு வாய் கொடுக்க முடியாது. சரியான வாயாடி. முன்பெல்லாம் உரத்த குரலில் நியாயத்துக்கு வாதாடுவாள் அவள். இப்போது… அவள் குரல் அடங்கி விட்டிருந்தது. ஆனாலும் உறுதி இருந்தது. அவள் மனதிற்குள் ஓடிய தீவிரம் என்னவென்பதை எளிதில் புரிய முடியாதிருந்தது.

சித்தி அடுக்களை வாயிலிலிருந்து எட்டிப்பார்த்தாள். அவள் பார்வையில் தவிப்பு கலந்திருந்தது. அடிக்கடி நடத்தப்படுகின்ற சுற்றிவளைப்புகள் குறித்து அவள் அஞ்சவேண்டியிருந்தது.

“நயனியக்கா…” என்று குதித்தபடி வந்த குமரனை சித்தி பெரும்பாடு பட்டு அடக்க வேண்டியிருந்தது.

“உடுப்பை மாத்து நயனி, நான் சீயக்காய் அரைச்சு வாறன்…” என்றபடி சீயக்காய் அரைத்த சித்தி கிணற்றடியில் நயனிக்குச் சீயக்காய் தேய்த்தும் விட்டாள். அந்த வேளையில் கிணற்றடியைச் சுற்றியிருந்த வேலிகள் இன்னும் சற்று உயரமாய் இருந்திருக்கக் கூடாதோவென்று மனதினுள் ஏங்கினாள்.

வேலிக்கதியாலாயிருந்த பூவரசு பூக்களை வஞ்சகமில்லாமல் பூத்திருந்தது. அந்தப் பூவரசம் பூவொன்றில் நீல நிற வண்ணத்துப்பூச்சி செட்டை அடித்துப் படபடத்துக் கொண்டிருந்தது.

“நல்ல வடிவான வண்ணத்துப் பூச்சி….” மனதுக்குள் ரசித்தபடியே சுடுநீரும், சீயக்காயும் கலந்து தேய்த்து விட்ட இதத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள் நயனி, கண்களுக்குள் காட்சிகள் விரிந்தன.

குமரன், வேலன், வதனி, உதயா, திவாகர் என்று எல்லாரும் அந்த வீட்டில் சொந்தங்களோடு வசித்திருந்தபோது எவ்வளவு குதூகலமாய் இருந்தது…?

சந்தோஷமாய் சின்னஞ்சிறிசுகளாய் ஆர்ப்பரித்து விளையாடி….

இந்தக் கூடு குலைந்தது எப்படி….?

இந்த அம்மம்மாவோடு சித்தி குடும்பம் மட்டும்தானே இருக்கிறது இப்போது. இங்கே இவர்கள்… அங்கே அம்மா, அப்பா, அத்தை, மாமா …. என்று எல்லோரும் பிரிந்திருக்க …. இன்னும் என்னென்ன கஷ்டம் வருமோ….?

அங்கே கூட கடைசியாய்ப் போனபோது அம்மம்மாவைப் பார்க்கச் சொல்லி அம்மா சொன்னது ஞாபகம்… இந்த அம்மம்மாவும், தாத்தாவும், சின்னனில் எவ்வளவு கதை சொன்னார்கள். இந்த உறவுகளையெல்லாம் பிரிவதென்றால்…

இமைகளை ஒரு நீர்த்திரை உடைத்துக்கொண்டு கொப்புளிக்க, நெற்றியில் அணையாக ஒரு கரத்தைச் சித்தி பிடித்துக் கொண்டிருந்தபோதிலும், கன்னக்கரையோரம் வழிந்த சில சீயாக்காயத் துளிகள் திறந்த இமைகளுக்கிடையில் சிக்கிக்கொள்ள, அவளது கட்டுப்பாட்டையும் மீறித் தலை இருபுறமம் சிலிர்த்தது.

“என்ன நயனி, கண்ணிலை பட்டிட்டுதோ….?” சித்தி கவனமாய்ப் பக்கத்தில் வைத்திருந்த தண்ணீரைக் கிண்ணத்தில் மொண்டு கொடுக்க, கண்களில் அடித்துக் கண்ணீரைக் கழுவினாள் நயனி.

கண்ணீர்… எவ்வளவு காலமாய்க் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர்… ஒரு நிமிடப் பொழுதுள் கட்டுப்பாடிழந்து கொட்டுவதென்றால்…சித்திக்குத் தெரியாமல் முகத்தைக் கழுவுவது சுலபமாயிருந்தது.

நல்லவேளை, கண்ணீருக்கும், தண்ணீருக்கும், சுவையைத் தவிர வேறெவற்றிலும் பேதம் காண முடியாதது அவளுக்குத் திருப்தியாயிருந்தது.

தண்ணீர் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துமென்பது எவ்வளவு உண்மை. இரண்டு வாளி தண்ணீரைத் தலைக்கு ஊற்றிக் கொண்ட பிறகு மனதை இறுக்கிய உணர்ச்சிகள் இளகித் தளர்ந்துவிட ஒரு புத்துணர்ச்சி உடலெங்கும் பரவிட, முந்தைய காலங்களைப் போலவே, அந்த முழுக்கையும், ஒரு ரசனைத் தனத்தோடு, நீண்ட நேரம் செலவிட்டு முடித்து விட்டு வந்தபோது, சித்தி தலை துவட்டுவதற்குத் தயாராக உலர்த்திய துவாயோடு காத்திருந்தாள். சித்திக்கு வாகாகத் தலையைக் கொடுக்கையில் அந்தப் பரிவுக்கு இதமாக, மீண்டும் மனம் கனக்கத் துவங்கிற்று. அம்மம்மா அடுப்புத் தணலை சாம்பிராணித் தட்டில் வாரிக் கொட்டிக் கொண்டு வர, பக்கத்திலேயே சாம்பிராணித் தூள் பையோடு, வேலனும் அவளைச் சூழ்ந்தார்கள்.

இறுகத் தட்டி, ஈரத்தைப் போக்கி விட்டு சித்தி நகர, சாம்பிராணித் தூளைத் தணலில் போட்டு, பேத்தியின் கூந்தலுக்கருகே புகையை ஊடுருவ விட்டா அம்மம்மா.

“நல்லவேளை, இந்த அருமந்த தலைமயிரை நீ வெட்டேல்லை….” அம்மம்மாவின் வாய் மெல்ல முணுமுணுத்தது.

நயனி ஒன்றும் சொல்லாமலே கூந்தலை சீவிக் கொண்டிருந்தாள். வெட்டியிருக்கலாமோ…? வெட்டியிருந்தால் இந்தச் சாம்பிராணிப் புகை போட்டிருக்க முடியாது. இப்படிப் பாசத்தைப் பொழிகின்றார்களே என்று உள்ளுக்குள் உருகி வழியவும் தேவையில்லை.

“என்னடா குமரா…” ஒன்றுமே பேசாமல் தன் மெலிந்து உயர்ந்த தோற்றத்தையும், தலைமயிரையும் பார்த்துக் கொண்டிருந்த தம்பியைப் பார்த்துக் கேட்டாள்.

“நீங்கள், நல்ல வடிவு நயனியக்கா, பேசாமல் சுவிசுக்குப் போயிருக்கலாம்…”

சட்டென அவளிடத்தில் குறும்பு எட்டிப் பார்த்தது.

“அப்பிடியோ என்ரை வடிவு இஞ்சை எடுபடாமத்தான் சுவிசுக்குத் தள்ளப் பாக்கிறியோ…?

“ ஐய்யய்யோ, அப்பிடி இல்லையக்கா. சிம்ரன் மாதிரியக்கா, நீங்கள்…”

“சிம்ரன் மாதிரியோ…? எதிலோ தோற்றுவிட்டது மாதிரி அவளுக்கு ஓர் உணர்ச்சி தோன்றிற்று.

இந்தச் சின்னவன் முந்திய எல்லாவற்றையும் மறந்து சிம்ரனை அடையாளம் காண்கின்ற அளவுக்கு, அவனை சினிமா வியாபித்திருக்கிறதா…?

அப்படியென்றால் இந்த மண்ணிலிருப்பவர்களுக்கு, ஒரு மயக்கத்தைக் காட்டிவிட்டால் போதுமா? மதுவுண்ட மந்திகளாய் கிறங்கிக் கிடப்பவர்களா அவர்கள்? இதிலே பிரிந்து போன பழைய உறவுகளை நினைப்பது எங்ஙனம்…?

“படம் பாப்பியாடா…?.

“ம் …ஆனா அப்பா நெடுகப் பாக்க விடுறதில்லை….”

கொஞ்சம் பரவாயில்லைப் போலிருந்தது. ஆனாலும் நெஞ்சு வலித்தது. ஒரு காலம் இருந்தது. இங்கு ஒரு தமிழ்க் கலாச்சாரம், மணக்க… மணக்க. அவள் யாழ்ப்பாணம் வருகிறபோது எவ்வளவு ஆவலோடு சொந்த மண் என்கிற பிடிப்போடு வந்தாள். எல்லாம் பற்றற்றுக் கழன்ற மாதிரி.

சித்தப்பா வந்து விட்டார். நெற்றி நிறைய திருநீறை அம்மம்மா பூசிவிட்டுக் கும்பிடு பிள்ளை என்றபோதும் அவளுக்கு சித்தப்பாவோடு கதைக்கவேண்டும் என்ற அவசரத்தில் இறை நினைப்பில் மனம் ஒன்றவில்லை. என்றாலும் சோலையடி முருகன் கண்ணுக்குள் நின்றாள்.

“இஞ்சை வந்திட்டும் முருகனைப் காணாமல் போறதெண்டால் அது ஏலாது. ஒருக்கா சோலையடிக்குப் போகோணும்.”

அவள் அம்மம்மாவுக்குக் கேட்க முணுமுணுத்தாள்.

“சோலையடிக்கோ… நீயோ? தயவு செய்து வீட்டாலை வெளிக்கிடாதையம்மா… முருகனுக்குத் தெரியும் உன்னைப் பற்றி. நீ வரேல்லையெண்டு கோவிக்கமாட்டான் முருகன். வீட்டிலையே இருந்து கும்பிடு…”

அம்மம்மாவுக்கு அந்த ஊரைப் பற்றித் தெரியும். ஊருக்குள் அரசல் புரசலாய்க் கதை பரவினாலும், தன் பேத்தியைச் சூழவுள்ள அபாயத்திலிருந்து அவளைக் காப்பாற்றியாக வேண்டுமென்ற வேகத்தில் பேசினா.

“ சரி அம்மம்மா, நான் போகேல்லை…” என்று மனமில்லாமலே உரைத்துவிட்டு சித்தப்பாவை நாடிப் போனாள் நயனி.

ஈரங்காயாமல் விரித்த கூந்தலோடு தன்னை நோக்கி வந்த மகளைப் பார்த்ததும் பத்திரிகைளைக் கீழே போட்டு விட்டு. கண்ணாடியை ஒரு முறை கண்களுக்கு மேலால் உயர்த்திப் பார்த்தபடி “வா நயனி, எப்ப வந்தனி…?” என வரவேற்றார் சித்தப்பா.

“என்ன சித்தப்பா, யாழ்ப்பாணம் இப்பிடி மாறிப் போச்சு…”

சித்தப்பா ஒரு வேதனைச் சிரிப்பை உதிர்த்தார்.

தமிழாசிரியரான சித்தப்பாவின் தர்க்கரீதியான கதைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் சித்தப்பாவோடு பேசிக் கொண்டெயிருக்கலாம் போல் தோன்றுவதுமுண்டு.

“ஒவ்வொரு நாடும், நகரமும்கூட சிலசில குறிப்பிட்ட காலங்களைக் கடந்துதான் நயனி செல்ல வேண்டியிருக்கு. அதிலை யாழ்ப்பாணத்துக்கு இது நல்ல காலமோ? கெட்ட காலமோ? எல்லாம் அவரவர் மனதைப் பொறுத்தது நயனி…”

இப்படிச் சொன்னவர் அவளது மனதைத் துருவ முயலவில்லை. அவருக்கு விளங்கும். இளம் உள்ளங்களைப் புரிகிற சக்தி அவருக்குக் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. அதனால்தானோ அவரால் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுக்காமலும், அதிகம் கண்டிப்புக் காட்டாமலும் வளர்க்க முடிகிறது?

“முந்தி இருந்ததைக் காட்டிலும் மெலிஞ்சு போனாயம்மா…”

“நானோ…” அவள் லேசாய் சிரித்தாள்.

அப்படியே சித்தப்பா மேலும் பேசிக்கொண்டு போனார். அவளுக்கு மனதிலிருக்கிற எல்லாவற்றையுமே கொட்டிவிட வேண்டும் போலிருந்தது. ஆனால், அவள் தன் மனத்திற்கும் கொஞ்சம் அணை போட வேணடியிருந்தது.

அன்று சித்தியின் சாப்பாடு அவளுக்கு மிகவும் சுவையாயிருந்தது. அம்மம்மா தான் சோறு குழைத்துப் புகட்டி விட்டா.

ஆற அமர்ந்து வீட்டுச் சுகத்தைச் சந்தோஷமாய் அனுபவித்துச் சிரித்தாள் அவள். தம்பிகளோடு வாயடித்தாள். இனிப்பு செய்யப் போவதாய் சொல்லி கொஞ்ச நேரம் அடுப்போடு மாரடித்து தேங்காய்ப்பூ இனிப்புச் செய்து வந்து எல்லோருக்கும் கொடுத்தாள். தானும் எச்சில் ஊறச் சாப்பிட்டாள். இடையிடையே தீவிரமாய் ஒரு யோசனை. மறுபடி கலகலப்பாகி விட்டாள்.

இரண்டு நாள் வரை இனிமையாகவே சென்றது. அப்படியும் எல்லோ ரிடமும் ஒரு கலக்கம்.

அடுத்த நாள் எல்லோரும் நிற்கின்ற சமயத்தில் புறப்படுவதற்கான ஆயத்தங்களுடன் அவள் வெளியே வந்தாள்.

“ நான் போகப் போறன்…”

பொதுவாய்ச் சொன்னாள்.

எல்லார் முகத்திலும் அதிர்ச்சி. அந்தக் கலக்கம் விலகியிருந்தாலும் ஒரு கவலை முகத்தில் படர்ந்தது.

“எங்கை போவாய்…”

“போக வேண்டிய இடத்துக்கு…”

“போகப் போறியோ…” அம்மம்மாவின் குரல் வாய்க்குள்ளேயே எழுந்து அடங்கியது.

“சித்தி, நான் போறன்…”

“போறன் எண்டு சொல்லாதை, போட்டு வாறன் எண்டு சொல்லு…”

சித்தியின் குரலை மீறி அவளிடம் ஒரு வறண்ட சிரிப்பு.

“கவனமாய் படியுங்கோ, படம் பாக்காமல்.”

அக்காவின் வார்த்தைக்குப் பதில் சொல்லமாட்டாமல் அவர்கள் நின்றிருக்க…

“போட்டு வாம்மா கவனமா…” சித்தப்பாவின் மென்மையான குரல் அவளை வழியனுப்பியது.

அவள் போய்விட்டாள்.

அம்மம்மா வாசல் படியோடு அப்படியே சாய்ந்து விட்டா.

*************************

“நான் நம்பன் …” அம்மம்மா தான் சிறீச்சிட்ட குரலில் முதலில் கத்தினா.

“அம்மா கொஞ்சம் மெல்லமா… எங்களுக்கும் ரெண்டு இளம்பெடியள் இருக்கிறாங்களா….”

ராசாத்தி வாய்க்குள் விக்கியபடி மெல்லிய குரலில் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் விழுங்கினாள்.

சித்தப்பா தான் ‘உதயனி’ல் படித்ததை விவரமாய்ச் சொன்னார்.

குமரன், பத்திரிகையை மௌனமாக வாசித்து விட்டு, வேலனிடம் கொடுத்தான்.

“அப்பா அது எங்கட நயனியக்காதான்…” வேலன் முணுமுணுத்தான்.

“இப்ப பேசாமலிருக்கிறதுதான் நல்லம். அக்கம்பக்கம் கூட அவள் இஞ்சை வந்து நிண்டது தெரிய வேண்டாம்…”

எவ்வளவு இயல்பாகச் சொல் முனைந்தும் சித்தப்பாவின் உதடுகளில் ஓர் இறுக்கம் விரவிப் பாய்ந்தது.

“இஞ்சை இவ்வளவு பேர் சொந்தமெண்டு இருக்க அவள் ஆஸ்பத்திரிலை அநாதைப் பிணமா…? “அம்மம்மா முகம் கோணியபடி மூலைக்குள் உட்கார்ந்து விட்டாள்.

குமரனும் வேலனும் முகத்தைத் தொங்கப் போட்டபடி வெளிக்கிடாமல் இருந்தார்கள். ராசாத்தி அடுக்பளைக்குள் அடிக்கடி யோசித்தபடியிருந்தாள். நாலு நாளாய் இறுக்கம் தளரவில்லை.

ஐந்தாவது நாள் விடிந்தபோது, பக்கத்து வீட்டில் ஒப்பாரிச்சத்தங்களோடு விடிந்தது. கிணற்றடியில் தண்ணி அள்ளப் போன புவனம் கிறுதி சுற்றி கிணற்றில் விழுந்து இறந்து விட்டாளாம்.

வேலன் போய் விட்டு வந்து சேதி சொன்னான்.

அம்மம்மா விறுவிறென்று எழும்பி பக்கத்து வீட்டுக்குப் போனா. முற்றத்தில் குழுமியிருந்த பெண்களை விலக்கிக் கொண்டு உள்ளே போனாள்.

“ஐயோ என்ரை செல்லம் விட்டிட்டுப் போட்டியோ…. கூடிக் கூடிக் குலவினதெல்லாம் விட்டிட்டுப் போகத் தானே… என்ன பாவம் செய்தமெண்டு இப்பிடித் தவிக்க விட்டிட்டுப் போனனி…”

அம்மம்மா கேவிக் கொண்டிருந்தா.

பக்கத்தில் ராசாத்தி. “ உன்ரை தாய் தேப்பனுக்கு நாங்கள் என்ன பதில் சொல்ல… இப்பிடி விட்டிட்டுப் போட்டியே…”

தூரத்தில் விக்கியழும் சத்தம். இரண்டு பையன்களும் ஓரமாய் நின்று. மெல்ல உதிர்ந்த நீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

சித்தப்பா தொண்டைக்குள் விழுந்த முடிச்சை இறுக விழுங்கிக் கொண்டு, மனதுக்குள் ஒலமிட்டார்.

“ஐயோ, என்ரை மகளே… உனக்காக வெளிப்படையா, அழக்கூட ஏலாமல்… இதென்ன கொடுமை…”

படலையடியில் பறை பலமாய் முழங்கத் தொடங்கிற்று.

அம்மம்மாவுடையதும், ராசாத்தியுடையதும் குரல்கள் உச்சமாய் ஓங்கித் தளும்பின.

ஹோவென்ற இரைச்சல், ஆரவாரம் இங்கே…

இவையெல்லாம் இல்லாமல் …. ஆஸ்பத்திரிச் சவச்சாலையின் தனித்த அமைதியான இருளுக்குள்… அவளது உடல்…!

– சஞ்சீவி, 4.9.1999, மண்ணின் மலர்கள் 2001 (பல்கலைக்கழக மாணவ மாணவியரது சிறுகதைத் தொகுப்பு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *