கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 5,057 
 

“கண்ட எடத்துலே எல்லாம் ஒண்ணுக்கு இருக்க ஒக்காரக்கூடாதுன்னு சொல்றாங்களே… அது சரிதான் சார்…”

ரவிச்சந்திரன் நிமிர்ந்து ஆட்டோ டிரைவரைப் பார்த்தான். பெசலான உருவம். முதுகில் காக்கிச்சட்டை சின்னதாகக் கிழிந்திருக்கிறது. தெருவின் இரைச்சலையும் ஆட்டோ ஒடுகிற சத்தத்தையும் மீறி ஒலிக்கிற குரல். கொஞ்சம் தயங்கினார் போல. கொஞ்சம் தளர்த்தால் போல. பதிலை எதிர்பார்க்கிர விழிகள் செவ்வகக் கண்ணாடியில், பிரதிபலிக்கின்றன. அவையும் சோர்ந்தே இருக்கின்றன.

“என்ன ஆச்சு….? போலீஸ் பிடிச்சுட்டுப் போய் மொபைல் கோர்ட்ட நிறுத்திட்டாங்களா…?”

“இல்லே சார்… இது வேறே விஷயம்… எவனோ பேமானி கழிப்புக் கழிச்சுப் போட்டிருக்கான்… அதும்மேலே போய் ஒண்ணுக்கிருந்துட்டேன்…”

பயந்திருக்கிறான்.

“ராத்திரி பூரா காய்ச்சல். நாலு மாத்திரை முழுங்கியாச்சு இதுவரை. இன்னும் அப்படியேதான் இருக்கு..”

மனதையும் உடலையும் வெகுவாகப் பாதிக்கிற பயம். ரவிச்சந்திரனுக்கு சுவாரசியம் ஏற்படுத்தும் விஷயம்.

சிக்னல். ஆட்டோ, தயங்கிப் புறப்பட்டது.

“இதே ரூட்தான் சார்… நேத்து தைட்லே சைதாப்பேட்டையிலேருந்து வந்துட்டிருந்தேன். சாவுகிராக்கி… திருவல்லிக்கேணிக்குன்னு ஏறிட்டு பொசுக்குனு இங்கே எறங்கிட் டான்.. ஃபுல்லா ஏத்திக்கிட்டு வரான் ஒழியட்டும்னு கிளம்பி வந்துட்டிருந் தேன்… முட்டிக்கிட்டு வரது… பக்கத் துலே கக்கூஸ் ஒண்ணும் தட்டுப் படலே…. இருந்தாலும் உள்ளே நுழையற மாதிரியா வச்சிருக்காங்க. சரி எதுனாச்சும் குட்டிச் சுவரு கண்லே படுதான்னு பாத்தேன்… அதோ….. அங்கே ஓரமா காம்பவுண்ட் செவரு நிக்குதில்லே பேமிலி பிளானிங் படம் எல்லாம் எழுதி…. பக்கத் துலே வண்டியை… நிறுத்திட்டுக் குந்த வைச்சேன் சார்….. த்தா… சைக் கிளாடா ஓட்டறீங்க.. ஒழிக்கணும் சார்.மார்லே சைக்கிளை எல்லாம்…”

வண்டி வேகமாகத் திரும்பியது. கோபம். ஊமைக் கோபம்…

“சின்னப் பொம்மை சார்… பொம்மை மாதிரி… கண்ணு மட்டும் பெரிசா… பிளாஸ்டிக் பொம்மை இல்லே.. துணியைச் சுத்திச் செஞ்சது… கையும் காலும் குச்சி குச் சியா… மடையன் மாதிரி அது மேலே போய் அத்தனை நேரமா மூத்திரம் போயிட்டு….”

ரவிச்சந்திரன் நிமிர்ந்து உட் கார்ந்தான்.

“பாத்ததுமே மயிர்க்கால் எல்லாம் சிலுத்துப்போய், நீர் இறங்காமே நின்னுடுத்து சார்… தினைக்கும் எத்தனை ஆக்சிடெண்ட் பார்த்திருப்பேன்… அப்பல்லாம் வராத பயம்…. சின்னப் புள்ளை மாதிரி பயந்தேன் சார்…. இப்ப உங்ககிட்டே சொல்லும்போது கூட குப்புனு வலிக்குது…நீங்கதான் லாஸ்ட் சவாரி… இனிமே போய் படுக்க வேண்டியதுதான்…. தாங்க முடியலே… சூனியம் வச்சதா இருந்தா என்ன ஆகும்னு நினைக்கவே பயமா இருக்கு சார்…

ரவிச்சந்திரன் கடியாரத்தைப் பார்த்தான். கூட்டத்துக்கு இன்னும் நேரம் இருக்கிறது.

ஒரு மனோவசிய நிபுணனுக்குச் சமுதாயக் கடமைகள் உண்டு. பொழுது போக்குக்காக மனோ வசியம் பயின்றாலும் அவற்றை மறக்க முடியாது. புரபசர் மேத்தா சொல்வார் – “மனோவசியக் கலைஞன் மகத்தானவன்…. சாதாரணமானவன்… சிக்கல்களைத் தீர்க்கிறவன்… எளிமையானவன்…”

“வண்டியை இந்த ஓரமா நிறுத் துங்க…” ரவிச்சந்திரன் சொன்னான்.

“இல்லே சார்…. நான் மவுண்ட் ரோட்லே கொண்டுபோய் விட்டுடறேன்…”

“எனக்கு அஞ்சு மணிக்கு அங்கே இருந்தாப்போதும்… இப்போ நாலரை தான் ஆறது… மெல்லப் போகலாம்… நிறுத்துங்க இப்படி…”

ஆட்டோ நின்றது. டிரைவர் தலையைத் திருப்பிப் பார்த்தான்.

“உங்க பேரு என்ன?”

“சாரங்கன்… ஏன் கேக்கறீங்க சார்?”

“சாரங்கன்…. உங்களுக்கு மனோ சக்தியைப் பத்தித் தெரியுமா?”

“சினிமா டைரக்டரா?”

“மனோசக்தின்னா மனசோட சக்தி… மருந்து மாத்தரை முழுங்காம, ஊசி குத்தி வைக்காம, நம்ம மனசை வச்சே நம்ம உடம்பைக் குணப்படுத்திக்க முடியும்… நாம தான் முயற்சி பண்றதே இல்லே…. மனம் இருக்கே…. அது அற்புதமான விஷயம்… இன்னிக்கு நீங்க எத்தனை பேர உங்க ஆட்டோவிலே ஏத்திட்டுப் போயிருப்பீங்க. இது விஷயமா யார்கிட்டே எல்லாம் பேசினீங்க…”

“யார் கிட்டேயும் சொல்லலை சார்… உங்களைப் பாத்ததும் என்னமோ சொல்லனும்னு தோணிச்சு”

“ஏன் எங்கிட்டே மட்டும் சொன்னீங்க..?”

“தெரியலை சார்….”

“உங்களை அறியாமல் நம்பிக்கை இவன்கிட்டே சொன்னால் ஒரு ஆசுவாசம் கிடைக்கும்னு உங்க மனசுலே தோணியிருக்கு… அது போதும். இன்னும் பத்து நிமிஷத்துலே நீங்க பழையபடி ஆகப் போறீங்க… பயம் எல்லாம் போய், சாதாரணமா…. நான் சொல்றதை செய்யறீங்க?”

“சார் நீங்க மந்திரம் போடறவரா?”

“மனோவசியக்கலைஞன்… வண்டியை எடுங்க…”

சாவி கொடுத்த பொம்மை போல – ஆட்டோவைக் கிளப்பினான்.

“வரும்போது காமிச்சீங்களே…. அந்த காம்பவுண்ட் சுவர் பக்கம் திரும்பப் போங்க… அட போங்க சொல்றேன்…”

வண்டி அடுத்த தெருவில் திரும்பி நிற்கிறது.

“இங்கேதானா பார்த்தது?”

“ஆமா சார்…”

இறங்கினார்கள்.

“இப்போ இருக்கா பாருங்க…”

“காணோம் சார்…”

“இப்போ யூரின் வரதா?”

அவன் வெறுமனே சிரித்தான்.

“பரவாயில்லே…. வராட்டாலும் அங்கே நின்னுட்டு வாங்க… வரும் போது சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா வரப்போறீங்க… பாருங்க நீங்க வேணா…”

ரவிச்சந்திரன் ஆட்டோவில் உட்கார்ந்தான். டிரைவரின் முதுகு தெரிகிறது.

அவன் சிரித்துக் கொண்டே வந்தான்.

“எப்படி இருக்கு இப்போ …?”

“மனசே லேசான மாதிரி சார்…. உடம்பு கூட சுளுக்கு எடுத்துவிட்ட மாதிரி இருக்கு… மந்திரம் போட்டிங்களா சார்…?”

“நான் போடலை… உங்க மனசு தான் போட்டது… சரி வாங்க கிளம்பலாம்…. என்னை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டு இருப்பாங்க… மெல்லப் போங்க…”

அந்தப் பெண் அழகாக இருந்தாள். ஒரு நூறு இருநூறு பேர் பார்க்கப் படுத்துக் கொண்டிருந்தாள். தலை ஒரு நாற்காலியில் தொட்டாற் போல. சற்றுத் தள்ளி, வெள்ளிக் கொலுசு எட்டிப் பார்க்கும் கால்கள் இன்னொரு நாற்காலியில், அதுவும் தொட்டாற்போலதான்.

இரண்டு மரநாற்காலிகளுக்கு நடுவே த்ரிபங்க வளைவுகளோடு அந்த அழகான உடல் பாலமாகக் கிடந்தது.

தூக்கத்தில் இருந்தாள். மனோ வசியத்தால் வரவழைக்கப்பட்ட ஹிப்னாடிஸத் தூக்கம், தூங்க வைத்த ரவிச்சந்திரன் புன்சிரிப்போடு கூட்டத்தைப் பார்த்தான். சரியாக மூன்று நிமிடம் போக வேண்டும்….

போனது.

அந்தப் பெண் தரையில் கிடத்தப்பட்டாள். மெல்ல அசைந்து. ஜவுளி கடை பொம்மை உயிர் பெற்றது போல எழுந்தாள். ஒரே கைதட்டல்…

“தாங்க்யூ யங் லேடி…. நீங்க போய் உட்காருங்கள்…”

ரவிச்சந்திரன் அவள் அமரும் வரை காத்திருந்தான். தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.

“டியர் பிரண்ட்ஸ் … இதான் மனோசக்தியோட வலிமை … இந்தப் பெண்மணியை நாற்காலிக்கு நடுவிலே படுக்க வைக்க மந்திரம் எதுவும் போடலே…. அவரால முடியும்னு நம்ப வச்சேன். அவ்வளவுதான்… இந்த மனசு இருக்கே… வினோதமான விஷயம்… அதுக்கு நீங்க கொடுக்கற. அடுத்தவங்க கொடுக்கற சஜஷன்தான் சாப்பாடு… என்ன சார் உடம்பு சரியில்லையான்னு தொடர்ந்து நாலு பேர் கேட்டா, சாயந்திரம் வீட்டுக்குப் போறதுக் குள்ளே உடம்பு சரியில்லாமப் போயிடும்….. எங்கே எல்லோரும் இப்படி ஆள் காட்டி விரலை உயர்த்துங்க …”.

சொல்லிக் கொண்டே கட்டை விரலை உயர்த்தினான்.

நிறையக் கட்டை விரல்கள் உயாகின்றன…

“பார்த்தீங்களா…. ஆள்காட்டி விரலுக்குப் பதிலா எல்லோரும் கட்டை விரலை உயர்த்தினீங்க…. ஏன்… நான் வாயாலே சொன்னதை விட கையால் ஒரு விஷவல் சஜசன் கொடுத்தேன் பாருங்க கட்டை விரலைக் காட்டி. அதுதான் சட்டுனு மனசுலே பட்டு இருக்கு…”

சங்கடமான. அப்புறம் சத்தமான சிரிப்புகள்.

“இப்ப உங்க மனசும் உடலும் ஓய்வெடுக்கப் போறது… வீட்டுலே போய் இதே மாதிரி நீங்களே செஞ்சுக்கலாம்…. அதான் ஆட்டோ சஜஷன்…”

பள்ளியின் முதல் நாள் மாணவர்கள் போல அவர்கள் சொன்னபடி கேட்கத் தயாராக இருந்தார்கள்.

“ஷ, கண்ணாடி எல்லாம் கழட்டிடுங்க…. மெல்லக் கண்ணை மூடிக்குங்க…”

ஒரு அற்புதத்தை எதிர்பார்க்கிறவர்களாக அவர் கண்களை மூடி இருக்கைகளில் சாய்த்தார்கள்.

“ஒன்று… உங்கள் கண்கள் ஓய்வெடுக்கின்றன. அருமையான. இனிமையான சூழ்நிலை இது… இனிமையான ஓய்வு… ரோஜாப் பூவால் கண் இமையில் வருடினது போல.. சுகமான ஓய்வு…”

எல்லோரும் அவன் சொற்களில் லயித்து அந்த அமைதியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மின் விசிறி சுழலுகிற சத்தம் மட்டும் கேட்கிறது. ரவிச்சந்திரனின் பார்வை அறையை வலம் வருகிறது.

நான்காம் வரிசையில் அந்தப் பெண், திண்ணென்ற மார்புகள் பார்வையைக் குத்தும்படியாக.

“மூன்று… உங்கள் மார்பு இப்போது ஓய்வு எடுக்கிறது…”

அழகான மார்பு…. ஏறி இறங்கி உயிர்த்துடிப்போடு… வேண்டாம் மனதை அலைய விடாதே ரவிச்சந்திரா…

உடல் முழுதும் ஓய்வும் சுகமும் பரவ… நான்கு..

கருப்பு மார்க்கச்சை தெரிகிறது பார்…

“ஐந்து…. உங்கள் வயிறு இப்போது ஓய்வு கொள்கிறது… உடல் முழுக்கப் பரவுகிற ஓய்வு…. நிம்மதி…”

பஞ்சுப் பொதிகள்…

‘ஆறு… இப்போது உங்கள் கால்கள் தளர்கின்றன… ஓய்வு பெறுகின்றன…. அமைதி… ஓய்வு… நிம்மதி…”

பத்துநிமிடம் முன் தூக்கிக் கிடத்திய போது இவற்றை ஏன் கைகள் உணரவில்லை?… வேண்டாம் வெறிக்காதே! அவள் எழுந்திருக்கப் போகிறாள்! பத்து சொன்னதும் எல்லோரும் எழுந்திருக்கப் போகிறார்கள்.

எழுந்தார்கள்…அந்தப் பெண் மேல்த்துணியை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டதை ரவிச்சந்திரன் ஓரக்கண்ணால் கவனித்தான்.

“புத்துணர்ச்சியா இருக்கா… நன்றாக ஓய்வெடுத்தீர்களா…?”

(பெண்ணே ஓய்வெடுத்து முடித்தாயா?)

(பையா, வெறித்து முடித்தாயா என்னை?)

“இதான் சார் மனோசக்தி… மனசை வழிநடத்தறது…”

“ஹிப்னாடிஸம் மூலம் நோய்களைக் குணப்படுத்த முடியும்னு சொல்றாங்களே… அது எப்படி?”

தடுத்தர வயதுக்காரர் ஒருவர் எழுந்து நின்று கேட்டார்:

“வர்றேன்… அங்கேதான் வர்றேன்… இதுபத்தி இங்கேயே கூட்டமாக் கலந்து பேசலாங்கறீங்களா இல்லை… தனித்தனியாவா…?”

பதில் இல்லை .

“சரி என்னோடு பேச விருப்பப்படுகிறவர்கள் தனியாக என்னை சந்திக்கலாம்… நான் அடுத்த அறையில் இருப்பேன்…”

வெளியே போகிறபோது தற்செயலாகத் திரும்புகிறவன் போல அவளைப் பார்த்தான். அந்தக் கண்கள் அவனையே தொடர்ந்து கொண்டிருந்தன. கதவைத் திறந்து கொண்டு முதலில் ஃபெர்ப்யூம் வாசனை உள்ளே நுழைந்தது. அப்புறம் அவள்.

கதவைச் சாத்தினாள். மெல்ல நடந்து வந்து எதிரே உட்கார்ந்தாள்.

“ஆக்சுவலா என் ப்ராப்ளம் இல்ல…”

அவள் தமிழ் வினோதமாக இருந்தது.

“பரவாயில்லே…சொல்லுங்க…என்னால முடிஞ்ச ஆலோசனை சொல்றேன்…”

“என் ஃபிரண்ட் ஒருத்தி…”

“எங்கேயிருக்காங்க?”

“நீங்கள் முடியும் என்றால், அழைத்துப் போகிறேன்” ஆங்கிலத்துக்குத் தாவினாள்.

“கல்யாணமாகி விட்டதா?”

“ஊம்…?”

“உங்கள் தோழிக்கு….”

“ஆம்.”

“அவளுக்கு மணவாழ்க்கையில் பிரச்சினை ?”

“ஆம்.”

“திருப்தி கிடைக்கவில்லை…”

கொஞ்சம் தயங்கினாள்.

“தளர்ச்சி… சீக்கிரம் தளர்ந்து போகிற உடலுக்கு ஹிப்னாடிஸம் பயன்படுமா?”

அவள் கண்கள் தரையில் பதிந்த பார்வையைத் தவிர்க்கின்றன.

“யாருக்கு..?”

“அவர்…மேஜர்….மேஜர் கன்னா… சாரி மேஜர் அகர்வால்..”

“நான் உங்கள் தோழியை சந்திக்கலாமா?”

அவள் கண்கள் மலர்ந்தன. அவன் மார்பில் அபயம் தேடுகிற பார்வை.

“என் வீட்டில் வைத்து சந்திக்கலாம்… உங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால்…”

“உங்கள் ஃபோன் நம்பர் கொடுத்தால், நான் அப்புறம் தொடர்பு கொள்கிறேன்.”

கைப்பையிலிருந்து விசிட்டிங் கார்டைக் கொடுத்தாள்.

“மிசஸ் சிந்துஜா கன்னா… மார்க் கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் …”

அவள் வெளியேறினாள்.

தளர்ச்சி…உடல் தளர்ச்சி…சீக்கிரம் தளர்ந்து போகிற உடலுக்கு ஹிப்னாடிஸம் பயன்படுமா?

படலாம்…

***

“என்னங்க, படுக்கற நேரத்துல கூட மோட்டுவளையைப் பார்த்துக் கிட்டு…”

“நீ படு… நான் ரிலாக்ஸ் பண்ணப் போறேன்…”

“எப்பப் பார்த்தாலும் இதான்…ரிலாக்ஸ்…ரிலாக்ஸ்..சினிமாவுக்குப் போவாங்க ரிலாக்ஸ் பண்ண…பீச் சுக்குப் போவாங்க…நீங்க உங்க அசோசியேஷன் ஆண்டு விழாவுக்குக் கூட்டிட்டுப் போனீங்க….. புரபஸர் மேத்தா…புரபஸர் வெண்டைக் காய்னு கிழங்கட்டைகள் சூட்டும் கோட்டுமா நின்னு ரிலாக்ஸ்ங்குது…போண்டாவா அது. கெரசின் வாடையோட ஒரு காபி.. ரிலாக்ஸ்…சாயந்திரம் குளிச்சுட்டு வரதுக்குள்ளே பத்து தடவை காலிங்பெல்….ஒரே படபடப்பு..கதவைத் திறந்தா உங்க பிரண்ட் ஓடி வந்ததிலே மூச்சு வாங்கிட்டு நிக்கிறேன். ‘ரிலாக்ஸ்’ங் கறாரு…”

“எந்த ப்ரண்ட் வந்தான்…சொல்லவே இல்லையே…”

“மறந்து போச்சு… பெயர் தெரியாது… ரகுவரன் மாதிரி உசரமா.. கண்ணாடி போட்டுக்கிட்டு…ஜாதா பான் மென்னுக்கிட்டு…நல்ல வாசனைங்க அது…”

“ஆனந்தி வந்தானா?”

“பெயர் எல்லாம் கேக்கலீங்க….அவர் புத்தகம் ஏதோ உங்ககிட்டே இருக்காமே…எனக்கு எவன் தெரியும்….அப்புறம், வாங்கன்னு சொன்னேன்…ஏங்க நாளைக்கு ஜாதாபான் வாங்கிட்டு வரீங்களா…போட்டுப் பாக்கணும்னு ஆசையா இருக்கு…”

“அதெல்லாம் வேண்டாம்…உடம்புக்குக் கெடுதல்…நாக்கு புண்ணாயிடும்…”

நெருங்கி வந்தாள். நைட்லாம்ப் உயிர்பெற அறை இருட்டைத் தழுவியது.

‘ரிலாக்ஸ் பண்ணினது போதும்….இப்ப கெட் ரெடி பார் ஆக்க்ஷன். கல்யாணம் முடிஞ்சு இன்னியோட நாலு மாசம் முடியறது…நாளைக்கு அம்மா வீட்டுக்குப் போனா ஒரு மாசம் கழிச்சுத்தான் வருவேன்…ஒரு மாசம் முழுதும் ரிலாக்ஸ் பண்ணுங்க….இப்ப ஒன்…டு…த்ரீ…”

வெட்கத்தோடு அவனை மெல்லத் தழுவினாள்.

அணை திறந்த வெள்ளமாக மனம் படபடக்க, உணர்ச்சிகள் மெல்ல மெல்ல மேலே எழும்பிப் பெருகி, இன்னும் இன்னும் விரைந்து உச்சத்தை அடைய முனைய.. வேண்டாம்….ரிலாக்ஸ்…ரவிச்சந்திரன்…நீ இப்போது ஆபீஸில் உட்கார்த்து லெட்ஜரைப் புரட்டிக் கொண்டிருக்கிறாய்…எட்டு ஆயிரத்து நாற்பத்தி ஏழு புள்ளி நான்கு மூணுக்கு எட்டரை சதவீதம் என்ன…கால்குலேட்டரை எடு- எட்டு பூஜ்யம் தாலு…நில் நில் என்று மனம் பிடித்து நிறுத்த. உணர்வுகள் ஒத்துழைக்க மறுத்து, மின்னல் வேகமாக உச்சமடைந்து…எண்கள் எகிறிப் பறக்க…இது ஆபீஸ் இல்லை…கட்டில்…பக்கத்தில் அணைத்தபடி மனைவி… எதிர்பார்த்துக் கொண்டு… ஒன்….டு…த்ரீ…மிஸ்டர் ரவிச்சந்திரன் ரிலாக்ஸ்..ரிலாக்ஸ்…எல்லாக் கணக்கும் தப்பாதிப் போய்…கொம்மாளம் கொட்டிய உணர்ச்சிகள் பிரமித்துப் பின்வாங்கிய உடலைப் புறம் தள்ளிக் கொண்டு… மேலே…. மேலே….. இன்னும் மேலே… அவ்வளவுதான்.

மிஸ்டர் ரவிச்சந்திரன்…உங்களை ஹிப்னாடிளம் மூலம் ஒரு மரக்கட்டையாக இந்தக் கட்டிலில் கிடத்திக் கொள்ள முடியுமா… படுத்துக் கொண்டே ஜர்தாபான் சாப்பிட்டபடி…எச்சில் கடைவாயில் வடிய…ரிலாக்ஸ்….உங்கள் உடல் கட்டையாக மரத்துப் போய்.. தலை… முகம்… கால்கள்… மரத்துப் போய்… மரத்துப் போய்…

“பரவாயில்லீங்க…. எல்லா ஆம்பளைகளுக்கும் இந்த மாதிரி அப்பப்ப ஆகும்னு புத்தகத்திலே படிச்சிருக்கேன்.. நீங்க தூங்குங்க….ரிலாக்ஸ்”

ரணமாகச் சுடுகிற அனுசரணை.

பத்து…ஒன்பது… எட்டு…நல்ல உறக்கத்தில் அமைதியான உறக்கம்…ஏழு..பூஜ்யம்…பூஜ்யம் மட்டும்….பூஜ்யம் மட்டும்…

தளர்ந்த உடலுக்கு ஹிப்னாடிஸம்…பூஜ்யம்…

***

அவர்கள் ஒருவாபின் ஒருவராக வரத் தொடங்கினார்கள்.

மூட்டுவலி… நீரிழிவு…ஆஸ்த்மா…ஒற்றைத் தலைவலி…மனோ சக்தி மூலம் ஏதாவது செய்ய முடியுமா…உட்காருங்கள்…

இவர்தான் கடைசியா? லேசாய் பழுப்பேறிய வெள்ளைச்சட்டை சங்கின நீல பேண்ட்…கம்பெனி யூனிபார்ம்…. வயதானவர்.

‘எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லே சார்…அடுத்த வருஷம் ரிடையராகப் போறேன்… என் சர்வீசுக்கு மத்த கம்பெனின்னா சூப்பர்வைசரா எப்பவோ புரமோஷன் கொடுத்திருப்பாங்க…இங்கே ரிடையராகற வரைக்கும் இதே உத்யோகம்…இதே உடுப்பு.. நேத்து வந்த பசங்க எல்லாம் துள்ளறான்…நாம பொதி சுமக்கணும்…சலாம் போட்டுக் கிட்டு…”

பேசிக்கொண்டே போனார். இங்கே அலுவலகத்தில் ‘போடா இழவா’ என்று சிறிய பெரிய அதிகாரிகள் மரியாதையாக ஆங்கிலத்தில் அவமதிக்கிறார்கள்…வீட்டில் கரையேற்றி விட்ட பிள்ளைகள் ஒரு காசுக்கு மதிக்க மாட்டேன் என்கிறார்கள்…செத்தால் தெரியும்…

“விஷயத்துக்கு வாங்க பெரியவரே…”

“வேறே ஒண்ணும் இல்லே சார்…எனக்கு இப்பல்லாம் மனசுலே திடீர் திடீர்னு சம்பந்தமா சம்பந்தமில்லாமே ஏதேதோ தோணறது….ரொம்ப அசிங்கமா..என் வயசுக்கு அந்த மாதிரியெல்லாம் வரவே கூடாது…”

“எந்த மாதிரி….”

“முந்தா நாள் பஸ்ஸூலே வேலைக்கு வரேன்…பக்கத்துலே சீனுவாசன்…அலவன்ஸ் தகராறு பத்தி காரசாரமாப் பேசிட்டு வரான்….பூனியன்லே பெரிய ஆளு அவன்….சின்னப் பயதான்…மாமா மாமான் ஓட்டு வருவான்…நான்தான் பொண்ணு பாத்து போன வருஷம் கல்யாணம் பண்ணி வச்சேன்…”

சீனிவாசனுக்கு என்ன ஆச்சு?

“அவனுக்கு ஒண்ணும் ஆகலே…அவன் பேசப் பேச எனக்கு மனசுலே ஏதோ படம் மாதிரி ஓடுது…”

கொஞ்சம் தயங்கினார்.

“அவன்…கூட அவன் பொண்சாதி…படுத்திருக்காங்க….வந்து…அவ அந்தப் பொண்ணு உடம்புலே பொட்டுத் துணி இல்லே…”

கிழவா, உன் வயதுக்கு இப்படிக் கற்பனையில்தான் படுக்க வைக்கலாம்.

“திடீர்னு அவ மூச்சுத் திணறுது….ரெத்த ரெத்தமா வாத்தி எடுக்கறா…மார்லே எல்லாம் ரத்தம்…பாய்லே வழிஞ்சு…மயக்கம் போடறா…”

ஹலுசினேஷன். முற்றினால் மனநிலை கூட பாதிக்கப்படலாம்…

“இதை யாாகிட்டேயாவது… அந்த சீனிவாசன்கிட்டே சொன்னீங்களா?”

“பயித்தியமா என்ன?”

“யார்கிட்டேயும் சொல்லலை… அப்புறம் என்ன கவலை? என்னமோ இப்படி உங்க மனசுலே தோணியிருக்கு….அதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கலாம்…அதெல்லாம் விடுங்க…இப்ப நீங்க திடமா மனசுலே, நினைச்சுக்கனும்…என்ன தெரியுமா?”

“…”

“இது பிரமை….கற்பனை…மனசு இனிமே இப்படி கற்பனை செய்யாது. அது என் வசம் இருக்கும். தறிகெட்டு ஓடாது. தேவாரம் படிப்பேன். திருவாசகம் படிப்பேன். கோயிலுக்குப் போவேன். துளசி தீர்த்தம் சாப்பிடுவேன். மனசு சுத்தமா இருக்கும். பிரமை ஒண்ணும் வராது”.

“இது பிரமை இல்லே சார்…”

“பின்னே என்னவாம்?”

“சினுவாசன் காலையிலே லீவு சொல்லிட்டுப் போக வந்தான்…பொண்டாட்டி ரத்த ரத்தமா வாந்தி எடுத்து ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்கானாம்…”

ரவிச்சந்திரன் அவரை நிமிர்ந்து பார்த்தான்.

“காக்கா உக்காரப் பனம் பழம் விழுந்த மாதிரிதான் இது…”

“அடிக்கடி அப்படி ஆறதே சார்..”

அவர் வரிசையாகச் சொல்லச் சொல்ல நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.

“அத்தனை ஏன் சார்…இங்கே ஆபீஸ்லே வேலை பார்க்கிற எந்தப் பெண்ணையும் பார்த்ததுமே அது வீட்டிலிருக்கா வெளியிலேயான்னு கூட மனசுலே படறது…”

“உங்க பேரு என்ன?”

“தங்கராஜ்.”

“தங்கராஜ்…நீங்க இந்த மாதிரி விஷயங்களைப் பத்தி இனிமே மனசுலே நினைக்காதீங்க…மனசுலே இப்படித் தோணினா, அதை மாத்த வேறே விஷயத்தை…நல்ல விஷயத்தை யோசியுங்க…உங்க வயசுக்கு எத்தனை நல்லது பாத்திருப்பீங்க…. சின்னக் குழந்தை தத்தித் தத்திப் போறதை… சாமி படத்தை …. கொண்டையராஜு படம்… வமி.– கணபதி… மார்கழிக் குளிர்லே குளிச்சுட்டுக் கோயிலுக்குப் போறதை… தோட்டத்திலே… நந்தவனத் திலே பூப்பறிச்சுக் குடலையிலே போடறதை… அப்புறமா முக்கியமா மனசுக்கு ஓய்வு கொடுங்க… ஓய்வு கொடுத்தா. ரிலாக்ஸ் பண்ணினா, மனசுக்குத் தெளிவு வரும்… ரிலாக்ஸ் பண்ணச் சொல்லிக் கொடுத்தேனே… மனசுக்குத் தெளிவு வந்தா சக்தி வரும். சக்தி வந்தா மலையையே புரட்டலாம்… அப்போ பெரிய விஷயங்கள்தான் மனசுலே நிக்கும்…. யாரு மாதவிலக்கா இருக்கா… யாரு துணியில்லாமப் படுத்திருக்கான்னு எல்லாம் மனசு அலையாது…”

அவர் எல்லாவற்றையும் காது கொடுத்து வாங்கிக் கொண்டார். குற்றம் புரிந்த மாணவன், ஆசிரியர் கண்டிப்பது பிடிக்காவிட்டாலும் வாங்கிக் கட்டிக் கொள்வது போலக் கண்கள் தாழ்ந்திருந்தன.

திடீரென்று நிமிர்ந்து பார்த் தார். எச்சில் விழுங்கினார்.

“சார்… வந்து …”

“சொல்லுங்க…”

“இல்லே….ஒண்ணுமில்லே … நீங்க…. வேணாம் விடுங்க…ரோஜாப் பூவை நினைச்சுக்கட்டா?”

“அப்புறம் நினைச்சுக்கலாம்… சொல்லுங்க…”

“நீங்க ஒரு பெண்ணோட சுகம் அனுபவிக்கறீங்க….முகம் தெரியலை…இருட்டு… சிவப்புச் சேலைன்னு படறது…மன்னிச்சுக்கங்க சார்…சாயந்திரம் கட்டாயம் கோயிலுக்குப் போறேன்…”

அவசரமாக வெளியேற அடி யெடுத்து வைத்தவர் ஒரு வினாடி தயங்கினார்.

“உடம்பு சுகங்கண்ட பொண்ணு குளிச்சுட்டுத் தலையாத்திக்கிட்டு நிக்குது…சிவப்புச் சேலையிலே நிக்கற பொண்ணு…”

மந்திரம் மாதிரி முணுமுணுத்தார். போய்விட்டார்.

ரவிச்சந்திரன் ஒரு சின்ன சிரிப்போடு அடுத்தவரை எதிர்நோக்கத் தயாரானான். கடைசி நபரும் புறப்பட்டுப் போன பொழுது எட்டு மணியாகி இருந்தது.

கம்பெனி எம்.டி. வெளியே வந்தார். கூடவே சிந்துஜா கன்னா.

“மிகுந்த நன்றி மிஸ்டர் ரவிச்சந்திரன். உங்கள் புரோகிராம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. வழக்கமாகப் பத்து நிமிஷத்தில் நழுவுகிறவர்கள் கூடக் கடைசி வரை இருந்தகாக உங்கள் வாலண்டியர் சொன்னாள்…”

சிந்துஜாவைப் பார்த்துச் சிரித்தார்.

“இத்தனை அழகாக ஒரு வாலண்டியர் உங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கிறாரா?”

அட்டகாசமாகச் சிரித்தார். ரவிச்சந்திரன் கையில் ஒரு சுவரைக் கொடுத்தார். கூடவே பூப்போட்ட காகிதம் சுற்றிய பார்சல்.

“ஹானரேரியம் செக். இது எங்கள் கம்பெனி காம்ப்ளிமெண்ட்.. பீங்கான் ஜாடி… பெரிய கஸ்டமர்களுக்குக் கொடுப்பது…”

நன்றி தெரிவித்துப் பெற்றுக் கொண்டான்.

“பை தி பை உங்களை எங்கேயாவது ட்ராப் செய்ய வேண்டுமா?”

“தாங்க்யூ சார்….நான் பெசண்ட் நகர்ப் பக்கம் போக வேண்டும்…”

“அப்படியானால் இவரை நான் கொண்டு போய் விடுகிறேன்… நான் போகிற வழிதான்…” சிந்துஜா சொன்னாள். இவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.

“ஓயெஸ் சிந்து…. கன்னாவை ஹிப்னடைஸ் செய்ய இவர் தேவைப் பட மாட்டார் என்று நினைக்கிறேன்… நீயே போதும்…”

“யூ ஆர் நாட்டி சார்…கன்னா ஊரில் இல்லை…”

“ஸோ…லோன்லி வீக் எண்ட்….புவர் கேர்ல்…”

குறும்போடு, பரிதாபப்படுகிறவர்போல முகத்தை வைத்துக் கொண்டு காரில் புறப்பட்டார்.

“ஹேப்பி வீக் எண்ட் சார்…”

போயிருந்தார்.

“நாம் போகலாம் மிஸ்டர்”

கார்க் கதவைத் திறந்து விட்டாள்…

“கதவை சரியாக மூடவில்லை நீங்கள்…அப்புறம் வழியில் திறந்து கொண்டு விடும். தப்பித்துப் போய் விடுவீர்கள்…”

வார்த்தைகளும் சிரிப்பும் கண் சிமிட்டி அழைக்கின்றன. எங்கே?

“என்ன யோசித்துக் கொண்டிருந்தீர்கள்?” காரை ஓட்டியபடி கேட்டாள்.

“ம்… ம்… மயிலை… அழகான பறவை…உங்கள் கார்க் கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறதே இங்கே… ”

“பெண் மயிலா?”

அவன் வெறுமனே சிரித்தான்.

“நீங்கள் எந்த மயிலை நினைத்தாலும் சரி…அது கூடவே வருகிற மாதிரி வசியம் செய்துவிடுவீர்கள்…”

அவள் பார்த்த ஓரப் பார்வையில் வசீகரம் இருந்தது.

“உங்களை நான் வசியம் செய்யவில்லையே…”

“பார்த்ததும் என்னை படுக்க வைத்தீர்களே…அது எதில் சேர்த்தி…..நாற்காலிக்கு தடுவே…தனியாகத் தான்…” குரலும் பார்வையும் இழைந்து ரவிச்சந்திரனைச் சீண்டின.

அவனுடைய மனோசக்தி நிபுணன் பிம்பம் மெல்ல உரித்து வர. யாரோ உடம்பெல்லாம் பெர்ப்யூம் தெளிக்கிறார்கள்… “குஷாலாப் போ சார்…” ஆட்டோ டிரைவர் சாரங்கன் சொல்கிறான்… “சூனியம் வச்ச பொம்மையோ என்னவோ….மனசுக்குப் பிடிச்சிருக்கா…உருட்டி விளையாடு சார்…”

“இதுதான் என் குடிசை…” கார் நின்றது.

அந்தச் சிறிய பங்களா அழகாக இருந்தது. அவளைப் போல.

***

“உள்ளே வாருங்கள்…”

கதவைத் திறந்தாள்.

டிராயிங் ரூம் டேபிளில், லாமினேட் செய்த புகைப்படத்தில் சைலஜா கூட இருந்த வழுக்கைத் தலையன் ராணுவ மீசைக்கு நடுவே சிரிக்க முயற்சி செய்தான்.

“என் கணவர்…”

சோபாவில் உட்கார்ந்தான்.

“ரிமோட் எங்கே போனது…?” டி.வியை ஆன் செய்தாள். செய்திகள். குனிந்து. அவன் பக்கமாக நிறையச் சாய்ந்து டீப்பாய்க்கு அடியிலிருந்து வி.சி.ஆர் ரிமோட்டை எடுத்தாள். வேர்த்திருக்கிறாள். மனதுக்கு இதமாக வேர்த்திருக்கிறாள்.

“என்ன சாப்பிடுகிறீர்கள்?”

“அதற்காகவா இங்கே வந்தீர்கள்?”

வேறு எதற்காக?

சிரித்தபடி ரிமோட்டில் வி.சி. ஆரை-ஆன் செய்ய, ஆங்கிலப் படக் கதாநாயகன், செய்தி வாசித்த நிஜந்தனைக் காணாமல் போக்கி, கதாநாயகியை விட்ட இடத்திலிருந்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.

“பார்த்துக் கொண்டிருங்கள்…ஐந்து நிமிடம்…குளித்துவிட்டு வருகிறேன்..” கன்னத்தில் தட்டி விட்டுப் போனாள்.

ரவி ரிமோட்டைக் குனிந்து எடுத்து இலக்கில்லாமல் இயக்க, கட்டிலுக்குப் போகிற காதலர்கள் உறைந்து போய் நின்றார்கள்.

‘ரவி… இங்கே என்ன பண்ணுகிறாய்? வீட்டுக்குப் போ… எவனோ வழுக்கைத் தலையன் பொண்டாட்டி குளித்துவிட்டு வரக் காத்துக் கொண்டிருக்க உனக்கு என்ன கிறுக்கா…வீட்டுக்குப் போய்ப் படு….இல்லை நான் எழுதின ஊடு மந்திரவாதியும் கேரள மாந்திரீகனும் என்ற புத்தகத்தைப் படி…”

புரபசர் மேத்தா சொல்கிறார். தங்கராஜ் காதில் பூ வைத்துக் கொண்டு வருகிறார்.

‘நீங்க ஒரு பெண்ணோட சுகம் அனுபவிக்கிறீங்க….சிகப்புச் சேலை….குளிக்கப் போயிருக்கா…வந்துடுவா…’

‘வீட்டுக்குப் போ ரவி…என் புத்தகத்தைப் படி…’

‘சிவப்புச் சேலையிலே இருக்கற பொண்ணு சார்…ரோஜாப்பூவை நினைச்சுக்கட்டா? அதுகூட சிவப்பு தான்…’

‘ரவி…ஊடு மந்திரவாதி…’

புரபசர் மேத்தா…உங்க வயசுக்கு இதெல்லாம் எதுக்குக் கவலை? கோயிலுக்குப் போங்க…பாத்து நடந்து போங்க…குட்டிச்சுவர்ப் பக்கம் குத்த வச்சுடாதீங்க….கழிப்பு கழிச்சுப் போட்டிருப்பாங்க…

திடீரென்று மின்சாரம் போனது.

புரபசர் மேத்தா…இயற்கைகூட என் பக்கம்தான்.

‘மின்சாரம் இயற்கை இல்லை சிஷ்யா… அறிவியல் சமாச்சாரம்.’

‘புரபசர் கிழத்தை நம்பாதே தம்பி…எனக்கு என்ன சர்வீஸு, நான் சொல்றேன் கேளு…’

“ரவி… எங்கே இருக்கிறாய்?” குரல் குழைத்து தேட கால்கள் துல்லியமாக அவனை நெருங்கின.

அவள் விரல்கள் மெல்ல அவனைத் தீண்ட அவசரமாகப் பின்வாங்கினான்.

“என்ன பயப்படுகிறாய்?” சிரித்தாள்.

“யார் சொன்னது?”

“யார் சொல்ல வேண்டும்? இன்னும் பத்து நிமிஷம் இருட்டில் கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பாய்… மனது அலைபாயும்…ஆட்டோ சஜஷனில் அதைக் கட்டிப் போடப் பார்ப்பாய்…மரபெஞ்சில் உட்கார்ந்து உடுப்பி ஓட்டலில் இட்லி சாப்பிடுகிறதாகக் கற்பனை செய்து, விளக்கு வந்ததும், அப்புறம் பார்க்கிறேன் என்று எழுந்து நடையில் செருப்புத் தேடி அணிந்து படி இறங்குவாய்…”

“அப்படியெல்லாம் இல்லை…”

“உன்னால் ஒன்றும் முடியாது…தண்ணீர்தானே கேட்டாய்…இருட்டிலேயே தருகிறேன்…குடித்துவிட்டு எழுந்து போ…”

மனதுக்கும் உணர்வுகளுக்கும் சவால் விடுகிற குரல். அனுசரணைகள் ஏற்படுத்தாத கிளர்ச்சியை, சிலிர்ப்பை ஏற்படுத்துகிற சவால்.

ரிலாக்ஸ்…உன்னால் முடியாது…

இல்லை முடியும். நிறைய ரிலாக்ஸ் செய்தாகி விட்டது.

நீ கட்டை போல கிடக்கப் போகிறாய்…

நான் மரம் இல்லை…மிருகம்…யாரோ வாலை முறுக்கிக் கிளப்பி, ஆக்ரோஷமாகச் சிலிர்த்து எழுந்த மிருகம்…பசி மட்டும் தெரிந்த மிருகம்…

அவளை உக்ரமாகத் தழுவினான்.

அவள் ரிமோட் வைத்திருக்கிறாள்…அவனைக் கொண்டு செலுத்துகிறாள்…எங்கோ முட்டி மோதித் தடுமாறி….நடந்து…எங்கேயோ உட்கார்ந்து..அப்புறம் படுத்து…

ஈரம் உலராத அவள் தலைமுடி, ஈரமான இமைகள். இதழ்கள்.

அந்த உடலுக்குள் ஒரு எரிமலையே இருந்ததை அவன் உணரத் தொடங்கியபோது, நேரமும் காலமும் அற்ற வெளியில் அவர்கள் சஞ்சரித்திருந்தார்கள்.

அவன் ஒரு தாமரையைக் கற்பனை செய்தான். நீலமான நீர் சலசலக்கும் பொய்கையில், நடுவே பூத்த தாமரை. இதழ்கள் விரிய விரிய மேலே, மேலே வந்து கண்ணை மறைக்கிறது. தண்ணீர் பாதரசம் போல, கிடைமட்டம் மாறி, மேல் கவிந்த விளிம்போடு, மேலே மேலே உயர்ந்து வந்து நீலம் கண்ணை மெல்லத் தழுவுகிறது… அந்தப் பெண் அவனை இரண்டு கட்டில்களுக்கு நடுவே படுக்க வைக்கிறாள். அவள் கையில் தாமரை. அது ரிமோட் ஆகிறது. அவன் கண்களைத் தொடுகிறாள். புலன்கள் எல்லாம் தொட்ட இடத்தில் குவிய, மேலும் மேலும் தொடுதலுக்காகக் காத்திருக்கிறான் அவன். ரிமோட்டை இயக்குகிறாள். ஃப்ரேம் ஃப்ரேமாகக் காலம் நகர்கிறது…

“பசிக்கிறதா?”

விளக்கு வந்தபோது அவள் கேட்டாள்.

அவன் கண்களை மூடிப் படுத்திருந்தான். புருவத்தை வருடிக் கீழே இறங்கிய அவள் விரல்களில் அக்னி தெறித்தது. இன்னும் எரித்தடங்காத எரிமலை.

அவன் கண்களைத் திறந்தபோது சிகப்புச் சேலையில் ஒரு தேவதையைப் பார்த்தான்.

“மிஸ்டர் சிக்மண்ட் ப்ராய்ட் பசிக்கிறது…சாப்பிட்டு விட்டுத் தான் மீதி எல்லாம்…”

பசிக்கிறது….அகோரப் பசி…இன்னும் இன்னும் வேண்டியிருக்கிறது.

விடிவதற்கு நிறைய நேரம் உண்டு….அவசரமாக விழித்து இருக்குமிடம் பிரக்ஞையில் பட்டபோது வெட்கமாக இருந்தது.

அவள் எங்கே? இப்போது மணி என்ன? கைக்கடியாரத்தைப் பார்த்தான்.

“ஐந்து மணி…”

அவள்தான். பாத்ரூமிலிருந்து வருகிறாள். தலையை விரித்து விட்டிருக்கிறாள். பிரஷ்ஷால் மெல்ல வாரியபடி வருகிறாள்.

“ஏழு மணி ப்ளைட்டில் எம்.டி. டெல்லி போகிறார்…ஏர்போர்ட் போக வேண்டும்…காபி சாப்பிடுகிறாயா?”

“அதற்குள் குளித்தாகி விட்டதா?”

“இல்லை… சும்மா முகம் கழுவிக் கொண்டேன்”. அதே சிகப்புச் சேலையில் இருந்தாள். புடவையை மாற்றிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான்…ஏகமாகக் கசங்கியிருக்கிறது.”

அவனைப் பார்த்துச் செல்லமாகக் கண் அடித்தாள்.

“உன்னை எங்காவது ட்ராப் செய்யட்டுமா?”

“வேண்டாம்… நன்றி…”

“நான்தான் நன்றி சொல்ல வேண்டும்…இனிமேல் அடிக்கடி சொல்ல உத்தேசம்…” மெல்ல அவன் கையை அழுத்தினாள்.

“இந்த நட்பு தொடரட்டும்…”

பல் விளக்காமல், முகம் கழுவாமல், சங்கிய பேண்டும். துவளும் கால்களுமாக…

“தலைவாரிக் கொண்டு போ என் இனிய நண்பனே…”

வெளியே வந்தான். தெருமுனையில் ஆட்டோ பிடித்தான்.

“பெசண்ட் நகர் போப்பா…”

எல்லா டிரைவர்களும் பேசுவதில்லை. இந்த டிரைவரும்தான்.

இன்றைக்கு ஆபீஸ் போக வேண் டாம்…குளித்து விட்டு நிம்மதியாகப் படுத்துக் கொள்ளலாம். படுத்துக் கொண்டு அசை போடலாம்.. என்ன தம்பி… நான் சொன்னது சரியாப் போச்சா? சுகப்பட்டிங்களா? சிகப்புச் சேலையிலே பொண்ணு. நீங்க கொஞ்சம் சும்மா இருங்க தங்கராஜ்…சுகப்பட்ட பொண்ணு குளிச்சிட்டுத் தலையாத்திக்கிட்டு சிகப்புச் சேலையிலே வந்ததா? அவ எங்கே குளிச்சா? முகம் கழுவிட்டு வந்ததாத்தானே சொன்னா இப்போ? குளிச்சாத்தானா? மத்தபடி எல்லாம் சரிதான்…களைப்பா இருக்கு தங்கராஜ்…

‘இப்படி ராக்கூத்து அடிச்சா அப்படித்தான் இருக்கும்’ புரபசர் மேத்தா சொல்கிறார்.

வீடு வந்துவிட்டது.

“சில்லரை இல்லையே சார்.”

“பாக்கியை வச்சுக்குங்க…”

சாயந்திரம் திரும்பப் போகலாமா?

சாவியைக் கதவில் பொருத்தினான். சாயந்திரம் சீக்கிரம் வராதா?

கதவை தள்ளினான்.

என்ன ஆயிற்று? கதவு ஏன் திறக்கவில்லை? இறுகிக் கொண்டதா? சரியாயான சாவிதானே இது! சரியான சாவிதான்.

கதவு உள்ளே பூட்டியிருந்தது.

உள்ளே யார்.

இன்னொரு சாவி மனைவிடம் தான் இருக்கிறது. ஊருக்குப் போகிற போது வெங்கடாசலபதி போட்ட சாவிக் கொத்தில் வைத்துக் கொடுத்தது.

அவன் ஊரிலிருந்து திரும்பியிருக்கிறாள்.

காலையிலார் நேற்று சாயந்திரமா? நேற்று ராத்திரியா?

ராத்திரி எங்கே போயிருந்திங்க? பயமா இருந்துச்சு…தனியாப் படுத்துக் கிட்டு ராத்திரி பூரா முழிச்சிருந்தேன்…

ஒரு ஃப்ரண்டைப் பாக்கப் போனேன். பேசிகிட்டே அங்கேயே தங்கிட்டேன்…நீதான் இல்லையே…..பயம் என்ன பயம் மனசுதான் பயத்தை உண்டாக்கறது..மனசாலதான் அதை மாத்தனும்..

சமாதானம் சொல்ல வேண்டும். அவள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதானம்…

மணியை அடிக்கலாம். உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறாள்?

பாத்தும் பைப்பில் தண்ணீர் கொட்டுகிற சத்தம். குளிக்கிறாள். வந்த களைப்புத் தீரக் குளிக்கிறாள்.

ஒருவேளை… ஒருவேளை…சாயந்திரமே வந்திருப்பாளோ…

சாயந்திரம் முழுக்க நகத்தைக் கடித்துக் கொண்டு வாசலிலேயே பழியாகக் காத்துக் கொண்டு…இன்னும் காணோமே இருட்டிக்கிட்டு வருதே..வாங்க மிஸ்டர் ஆனந்த்…அவர் இன்னும் வரல்லே… உள்ளே வாங்க… நான் இப்பத்தான் காலே குந்து வந்தேன்…. வாங்க…. உள்ளே வாங்க… நான் வர்றது அவருக்குத் தெரியாது…. சர்ப்ரைஸாத்தான் வந்தேன், பிளசண்ட் சர்ப்ரைஸா… நீங்க இப்போ வந்த மாதிரின்னு வச்சுக்குங்களேன்…உங்க புத்தகமா? அவருக்குப் படிக்க கொடுத்தீங்களா?….எங்கே வச்சிருக்கார்னு எனக்குத் தெரியாதே…ஆமா…பெட்ரூம்லே படுத்துக்கிட்டுத்தான் புத்தகம் படிப்பார். பெட்ரூம் அதுக்குத் தான்….தலகாணிக்கு அடியிலே வச்சிருப்பாரு….வாங்க தேடிப் பார்க்கலாம்…அவரா…இத்தனை நேரத்துக்கு அப்புறம் எங்கே வரப்போறார்…புரபசர் மேத்தாவுக்கு வெத்திலை மடிக்கக் கொடுத்துவிட்டு இருப்பார்…அவரும் ஜாதாபான் போடுவாரா…இது மாதிரியா…நல்லா வாசனையா இருக்காப்பல தோணுதே…தினம் எத்தனை போடுவீங்க… இந்த புஸ்தகமா பாருங்க…இதானா…அட்டையிலே பாருங்க….கட்டை மாதிரி ஒரு பொண்ணை நாற்காலிக்கு நடுவிலே படுக்க வச்சுட்டு….நீங்களும் செய்வீங்களா? என்னையா? இங்கேயே படுக்க வைக்க முடியுமா? கட்டை மாதிரி இல்லையா? வேறே எப்படி? எங்கே செய்யுங்க பார்க்கலாம்…

சவிச்சந்திரன் நெற்றியில் வியர்வை துளிர்க்கிறது…

இல்லை. அப்படி எல்லாம் இல்லை. பாழும் மனமே…ஒன்றும் கற்பனை செய்யாதே…எல்லாம் மனது தான் காரணம்…மனம் எனக்கு அடிமை. நினைத்துக் கொள் ரவிச்சந்திரா…அவள் காலையில்தான் வந்திருக்கிறாள்… ரயிலில்…செகண்ட் கிளாஸ். த்ரீ டயர் ஸ்லீப்பர்…ஆட்டோக்காரனோடு சண்டை…கதவைத் திறந்தால் தூசி தும்பட்டை…எல்லாம் பெருக்கி விட்டு. குளித்துக் கொண்டிருக்கிறாள்…இப்போது காலிங் பெல்லை அடித்ததும்…

உடம்பு சுகங்கண்ட பொண்ணு குளிச்சிட்டுத் தலையாத்திக்கிட்டுச் சிவப்புச் சேலையிலே வரப் போகுது…

தங்கராஜ்…படவா…உன் பார்வையே சரியில்லை கிழவா…என் மனைவியைப் பார்க்காதேடா.. கண்ணை நோண்டிடுவேன்…அசிங்கம் பிடிச்சவனே…

அவள் குனிக்கவில்லை…பாத்ரூமில் தண்ணீரைத் திறந்துவிட்டுச் சமையல்கட்டில் பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறாள்…வரப்போகிறாள்…மாக்ஸி உடுத்திக் கொண்டு…பச்சை மாக்ஸி…ரயிலில் வந்த களைப்போடு…முகத்தில் எண்ணெய் வழிய…பச்சை உடுப்பில்…குளிக் காமல்…

மனம் வேகமாகச் செயல்படச் செயல்படக் கண்கள் வாசலைப் பெருக்கின. அது என்ன? ஜர்தாபான் காகிதமா?

அழைப்பு மணியை அழுத்தினான்.

– ஜூன் 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *