ஒரு பொண்ணு… ஒரு பையன்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 7,814 
 
 

ஃபோர்டு ஐகானை அதற்குரிய நான்கு மூலை மஞ்சள் கோட்டு எல்லைக்குள் நிறுத்தாமல், கோணலாக நிறுத்தியதிலிருந்தே மாயாவின் மூடு சரியில்லை என்று தெரிந்துவிட்டது. காலையில் படு பிரகாசமாக ஆபீஸ் போனவளுக்கு இப்போது என்ன வந்தது? யோசித்துக்கொண்டே லிஃப்ட் வரை போன பத்மநாபன், திரும்பி வந்தார். திகம்பர் சென்குப்தாவின் ஹோண்டா சிட்டியைக் கிட்டத்தட்ட முத்தமிட்டுக்கொண்டு இருந்தது ஐகான். அந்தத் தடியன் முதலில் ரிவர்ஸ் எடுத்து, அப்புறம்தான் திருப்பமுடியும். சென்ட்டிமென்ட்டாக அதற்கு அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். நாலு பேரைக் கூட்டி அமர்க்-களம் செய்வான்.

பத்மநாபன் கொஞ்சம் யோசனையோடு, ஐகான் கதவில் கை வைக்க, அது திறந்துகொண்டது. ஸ்டீ-யரிங் கழுத்தில் சாவி! முன் ஸீட்டில் ஹேண்ட் பேக்! சே… என்ன பெண் இவள்! உள்ளே உட்கார்ந்து நிதானமாக ஸ்டார்ட் செய்து, கொஞ்சம் முன்னே போய், வலது பக்கமாக ஒடித்துத் திரும்பி வந்தார். குதிரையை அதன் லாயத்தில் சரியாகக் கட்டி-விட்ட திருப்தியில் காரைப் பூட்டிவிட்டு, லிஃப்ட்டுக்கு நடந்தார்.

கவலையுடன் லிஃப்ட் கதவைச் சாத்தி, நாலாவது மாடி பட்டனை அழுத்தினார். எதிர்பார்த்த மாதிரியே வாசல் கதவு 30 டிகிரி கோணத்தில் திறந்திருந்தது. உள்ளே வெளிச்சம் இல்லை.

ஹால் விளக்கைப் போட்டார். அமைதியோ அமைதி. பிரம்புக் கூடை ஊஞ்சலில், செல் குப்புறக் கிடந்தது. எடுத்துப் பார்த்ததில், உயிரற்று இருந்தது. வேறென்ன… தீபக்கோடு சண்டை போட்டிருப்பாள். அவன் போன் வரக்கூடாது என்று ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருக்கிறாள். காதலிக்கும்போதே இவ்வளவு சண்டை என்றால், ஜனவரிக்குப் பிறகு எப்படியோ? பாவம் தீபக்! கொஞ்சம் சிரிப்பு வந்தாலும், அது சரியா என்ற கேள்வி உள்ளே எழுந்தது.

சிவப்புப் புள்ளியோடு மௌனமாக இருந்த டி.வி-யின் ஸ்விட்சை ஆஃப் செய்தார். இறைந்திருந்த சி.டி-க்களை அடுக்கி வைத்தார். மாயாவுக்கு ஜக்ஜித் சிங்-சித்ரா சிங் கஜல் பிடிக்கும். அவர் தேடிய சி.டி. எளிதாகக் கிடைத்தது. டி.வி.டி&யின் ரிமோட்டை அழுத்த, டி.வி.டி. தன் தவளை நாக்கை நீட்டி, ஜக்ஜித் சிங்கின் கஜலை உள் வாங்கிக்கொண்டது. ‘சிட்டி ந கொயி சந்தேஸ்’ என்று தொடங்கும் பாடல். ‘ஒரு கடிதமோ, எந்தத் தகவலோ இல்லாமல் நீ எங்கே போய்விட்டாய்?’ என்று ஜக்ஜித் சிங் உயிரின் உயிராக மெல்லிய குரலில் உருக ஆரம்பித்தார். காலில் இடறிய மஞ்சள் நிற மூடியை எடுத்து நோட்டம் விட்டதில், டைனிங் டேபிள் மேல் திறந்து கிடந்த டொமேட்டோ கெச்சப் பாட்டில், ‘நீ தேடும் வஸ்து நான்தான்’ என்றது. மூடியைத் திருகி ஃப்ரிஜ்ஜில் வைத்தார். சுருட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பாதி பீட்ஸா இருந்தது. அதைத் தவிர, சாப்பிட எதுவும் இல்லை. பசிக்கு எதையாவது உள்ளே தள்ள வேண்டுமே!

மாயா எழுந்து வருவதாகத் தெரியவில்லை. ரூம் கதவை லேசாகத் தள்ளியதில், ஜில்லென்ற ஏ.ஸி. காற்று தாக்கியது. மரவட்டை மாதிரி உடம்-பைக் குறுக்கிச் சுருண்டு இருந்தாள். சண்டை போட்ட களைப்பில் தூங்கிப் போயிருக்கலாம். கதவைத் திறந்தது தெரியாமல், மெதுவாகச் சாத்தினார். இன்றைய பிரச்னையைச் சமாளிப்பது பெரிய சவாலாகத்தான் இருக்கும் போலிருந்தது. நாலு வயசில் இவளை அவர் கையில் ஒப்படைத்து-விட்டுப் போய்ச் சேர்ந்துவிட்ட தேவ கியை அப்படியே ஞாபகப்படுத்தினாள். அவளும் அப்படித்தான்… பழியாகச் சண்டை போடுவாள். ஆனால், அடுத்த கணமே இரண்டு மடங்கு அன்பைப் பொழிவாள். எல்லா சண்டையிலும் கணவனை ஜெயித்தவள், கடைசியில் கேன்சர் நோயிடம் போராடித் தோற்றுப் போனாள்.

சமையல் அறைக்கு வந்து எதேச்சையாகக் குப்பைக் கூடையை எட்டிப் பார்த்ததில், அதில் சோனு நிகம் இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகள் நாலாகக் கிழிந்து கிடப்பது தெரிந்தது. இன்று மாலைக்கான நிகழ்ச்சி! புரிந்துவிட்டது. ஒரு வாரமாக இந்த நிகழ்ச் சியைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தாள் மாயா. கடைசி நிமிஷத்தில், தீபக் வர முடியாமல் போயிருக்கலாம். உடனே இவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்திருக்கும்.

தீபக் எதிர் பிளாக்கில்தான் இருக்-கிறான். சட்டையைப் போட்டுக்கொண்டு, யோசித்தவாறே படியிறங்கினார் பத்மநாபன்.

கதவைத் திறந்த தீபக் முகத்தில் இருந்த இறுக்கம், பிரச்னையின் தீவிரத்தைச் சொல்லியது. எதுவும் பேசாமல் முன்னால் நடந்து போய், தான் ஒரு கூடை சேரில் உட்கார்ந்துகொண்டு, பத்மநாபனுக்கு எதிர் இருக்கையைக் காட்டினான். அவஸ்தையான அரை நிமிட மௌனத்தை அவனே பிறகு உடைத்தான்.

‘‘அங்கிள்! நீங்க எதுக்கு வந்திருக்-கீங்கன்னு புரியுது. ஆனா, அது முடிஞ்சு போன விஷயம்!’’

‘‘இல்ல தீபக், எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, எதுவோ பெரிசா ஆகியிருக்குன்னு மட்டும் தோணுது. நீயே சொல்லு!’’

‘‘அங்கிள்! என்னோட வேலை என்னன்னு உங்களுக்கே தெரியும். 600 கோடி ரூபாய் இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட் ஃபை-னல் ஸ்டேஜ்ல இருக்கு. ஒரு வாரமா ராத்திரி பகல் தெரியாம உழைச்சிட்டு இருக்கோம். அதைப் புரிஞ்சுக்காம, இந்த நிமிஷமே சோனு நிகம் புரொகிராமுக்கு வந்தாதான் ஆச்சுன்னு அடம்பிடிச்சா எப்படி? ‘உனக்கு என்னைவிட அந்த வெள்ளைக்காரிகளோட டிபன் சாப்பிடறதுதான் முக்கியமா, ஆச்சா போச்சா’ன்னு… ஷி க்ரியேட்டட் எ ஸீன்! நானும் கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்து, வார்த்தை தடிச்சு… எக்கச்சக்கமா ஆயிடுச்சு!’’

‘‘ஐயம் ஸாரி தீபக்! அவ இன்னும் குழந்தையாதான் இருக்கா. ஷி நீட்ஸ்…’’

‘‘நோ அங்கிள்! எனக்குப் பயமாயிருக்கு. மூச்சுத் திணறுது. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹாப்பியா இருக்க முடியும்னு தோணலை. அவளே, ‘நீ வேண்டாம் போடா’ன்னுட்டா. ஸாரி, உங்க பொண்ணு பத்தி உங்க கிட்டேயே புகார் பண்ண வேண்டியதாயிடுச்சு. ஆனா, வேற வழியில்லை. உங்க கிட்ட நானே வந்து என் முடிவைச் சொல்லிட்டு, அம்மாவுக்கு போன் செய்யலாம்னு இருந்தேன். அவங்க இப்ப நியூஜெர்ஸில இருக்காங்க. நாளைக் காலைலதான் ஹ¨ஸ்டன் திரும்பறாங்க. அப்புறம் அங்கிள்… நாளைக்கே நான் இந்த ஃப்ளாட்டைக் காலி செய்யலாம்னு இருக்கேன்..!’’

பத்மநாபன் பதில் பேசாமல் தீபக்கையே உற்றுப் பார்த்தார். அந்த ஆழமான பார்வையும், மௌனமும் அவனைக் கொஞ்சம் சங்கடப்படுத்தியது. அது அவருக்கும் வசதியாக இருந்தது. சற்று நிதானமாகவே பேச ஆரம் பித்தார்.

‘‘தீபக், உன் முடிவு உன்னோடது. அதில் நான் குறுக்கிட விரும்பலை. ஆனா, பிரச்னைகளைச் சமாளிக்கத் தைரியம் இல்லாம நீ ஓடி ஒளியறதைப் பார்த்தா வருத்தமா இருக்கு. நீங்க ரெண்டு பேருமாதான் என்கிட்ட வந்து, லவ் பண் றோம்னீங்க. ‘நான் ஒரு நல்ல பொசிஷனுக்கு வந்த பிறகு, மாயாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் அங்கிள்!’னு நீயேதான் சொன்னே! அப்புறம் உங்க ரெண்டு பேர் விருப்பப்படியும்தான், ஜனவரியில கல்யாணத்துக்கு நாள் குறிச்சுது. இப்ப நீங்க ரெண்டு பேருமே வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க. சரி, இதையும்கூட ஏத்துக்கறேன். ஆனா, ஃப்ளாட்டை காலி செஞ்சுட்டு ஓடிப் போறேன்னு சொல்றியே, அது ஏன்? அப்ப என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?’’

‘‘இல்லை அங்கிள், நான் உங்களை ரொம்பவும் மதிக்கிறேன். நீங்க இல்லைன்னா, நான் லைஃப்ல இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. உங்களுக்கும் மாயாவுக்கும் தர்மசங்கடம் கொடுக்க வேண்டாம்னுதான் ஒதுங் கிக்கப் பார்த்தேன். நீங்கதான் அங்கிள் எனக்கு எப்பவும் குரு!’’

‘‘ஓ.கே. தீபக்! நான் ஒரே ஒரு கேள்விதான் உன்னைக் கேட்க விரும்பறேன். என் கண்ணைப் பார்த்துத் தயக்கமில்லாம எனக்குப் பதில் சொல்லணும். மாயாவை இப்பவும் நீ விரும்புறியா?’’

தீபக் இந்த அதிரடித் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் தடு மாறினான்.

பின்பு, ‘‘யெஸ் அங்கிள்! ஸ்டில் ஐ லைக் ஹர். பட்…’’

அதன் பிறகு பத்மநாபனுக்கு எல்லாம் இலகுவாகப் போயிற்று. பத்தே நிமிடங் களில் அவனை சகஜ நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார். சிறு பையன். அப்பா இல்லாதவன். ஐந்து வயதுச் சிறுவனாக அறிமுகம் ஆகி, இன்றைக்குத் தன் தோளுக்குமேல் வளர்ந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டவனை, எழுந்து போய் அணைத்துக் கொண்டார். முதுகில் தட்டிக் கொடுத் தார்.

‘‘சரி தீபக், நான் வரேன். மாயாவைச் சரி செய்துட்டு, உன்னைக் கூப்பிடறேன். அப்ப வா!’’

மாயாவைச் சமாளிப்பதில், பத்மநாபன் எதிர்பார்த்தது போல் அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை. ‘உன்னோடு மரப்பாச்சி வைத்துக்கொண்டு விளையாடிய தீபக்கை இன்னமும் அப்படியே மனதில் வைத்துக்கொண்டு இருக்காதே. அவன் உன் பொம்மை இல்லை. உனக்குக் கணவனாக வரப் போகிறவன்’ என்று மென்மையாக எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தார். மெதுமெதுவாக அவளை இயல்புக்குக் கொண்டு வந்த பிறகு, தீபக்கையும் வரவழைத்து, இருவரையும் வலுக்கட்டாயமாக ஐஸ்க்ரீம் பார்லருக்கு அனுப்பிவைத்தார்.

அரை மணிக்குப் பின், மாயா ஆர்ப் பாட்டமாக வந்தாள்.

‘‘யூ ஆர் கிரேட்பா! எப்படிப்பா இது சாத்தியம் ஆச்சு! சைக்காலஜி படிச்சிருக்கியா? பேசாம நீ வி.ஆர்.எஸ். வாங்கிக்கிட்டு, கவுன்சிலிங் செய்யலாம். தேங்க்யூப்பா!’’ என இரண்டு கைகளாலும் பத்மநாபனின் கழுத்தை மாலையாகக் கட்டிக்கொண்டு தொங்கினாள். அவர் அவள் தலையை அன்புடன் கலைத்தார்.

‘‘அடி என் அசட்டுப் பெண்ணே! இது ஒண்ணும் பெரிய வித்தை இல்லை. முன்னெல்லாம் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. சித்தப்பா, பெரியப்பா, அத்தைன்னு பெரிய பட்டாளமே இருக் கும். வீட்டுல எந்த ஜோடியாவது முறுக்கிக்கிட்டு இருந்தா, அவங்க கழுகுக் கண்ல பட்டுடும். சரியான நேரத் துல உள்ளே நுழைஞ்சு, சரி பண்ணிடுவாங்க. இப்பத்தான் அதெல்லாம் போச்சே! அட்வைஸையும் ஆலோசனைகளையும் கூடக் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. அதுக்கும் வழி தெரியாம எத்தனையோ விவாகரத்துகள் நடக்குது. அப்புறம்…’’

ஏதோ சொல்ல வந்து, மென்று முழுங்கியதை மாயா கவனித்து-விட்டாள்.

‘‘ஏதோ சொல்ல வந்தீங்க. என்னதுப்பா… சொல்லுங்க?’’

‘‘அது வந்தும்மா… முன்னைக்கும் இப்பைக்கும் ஒரு சின்ன வித்தியாசம். அப்ப கல்யாணத்துக்கு அப்புறம்தான் கவுன்சிலிங் தேவையா இருந்தது. இப்ப அசடுகள் அதிகமாயிட்டதாலே, கல்யா ணத்துக்கு முன்னேயே கவுன்சிலிங் செய்ய வேண்டியிருக்கு. அவ்வளவுதான்..!’’

‘‘போங்கப்பா! நீங்கதான் அசடு! ம்…’’ -சிணுங்கியபடி, பத்மநாபனின் நெஞ்சில் செல்லமாகக் குத்தினாள் மாயா. அந்த நெகிழ்ச்சியின் இறுக்கத்தில், பத்மநாபனின் கண்களில் கண்ணீர் கொப்பளிக்க, அதில் தேவகி புன்னகைத்தாள்!

– 05th செப்டம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *