ஒரு நாள் டைரி..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 5,301 
 

“கொமாரூ…! ”

“அம்மா.! ”

“எந்திரி ராசா…போ. பல்லு விளக்கிட்டு வாப்பா..!”

தினமும் காலை மூனரை மணிக்கு அம்மாவின் பாசக் குரல் கேட்டு எழுந்திருப்பேன்…! காலு சுருக்கி வெச்சு படுத்ததால லைட்டா முட்டியில நோவும்…!

என்னை எழுப்பிட்டு அம்மா கீழ விரிச்சிருந்த சேலய சுருட்டி வெச்சிட்டு இந்த நேரத்திலயே வாச கூட்ட போயிருவாங்க..!

வாசத் திண்ணையில அப்பா இந்த நேரத்திலயும் லொக் கு ..லொக்குனு இருமுவார் ..பாவம் ராத்திரியெல்லாம் இருமுனதுல அவரும் தூங்காம .. நாங்களும் சரியா தூங்காம இருந்த ராத்திரிகள் தான் அதிகம்..!

அப்ப அப்ப .. அப்பா பெரியாஸ்பத்திரிக்கு போவாரு.. கலர் கலரா மாத்திரை வாங்கிட்டு வருவாரு…!

பீடி அதிகமா குடிக்காதய்யா ன்னா கேக்க மாட்டேங்கராரு ன்னு அம்மா பொலம்புவாங்க….!

அப்பா வோட இருமல்ல.. பீடி புகை மட்டுமல்ல… பட்டறை வெல்டிங் பொகையும் அதிகமா இருக்குன்னு எனக்குதான் தெரியும்..!

சரட்டு.. சரட்டு.. குட்டியா தேஞ்சு போன வௌக்குமாத்துல வாச கூட்ர சத்தம் எங்க தெருவில மொதல்ல எங்கம்மாவோடதுதான்..!

செவுத்து மேல வெச்சிருந்த இனிப்பு முருகன் படம் போட்ட பல்பொடிய லெப்டு கையில கொஞ்சம் கொட்டிகிட்டு.. வீட்டுக்கு பக்கவாட்டுல நின்னு தேச்சுருவேன்….! தினமும் காலைல இந்த இனிப்பான நாளத் தர்ரது அந்த முருகன் தான் போல..!

பல்லு தேச்சுட்டு மறக்காம அம்மா ராத்திரி சுலுக்க வராம இருக்க பத்த வெச்ச தேங்க நாருல ஏதாவது நெருப்பு மிச்சமிருக்கானு பாத்து தண்ணிய லைட்டா ஊத்தி அணைச்சிருவேன்..! இந்தப் புகைக்கெல்லாம் சுலுக்க அவ்வளவா கேக்காது…! தேவராஜூ சொன்னான்.. அவங்க வீட்ல கத்தாழ கட்டி உடுவாங்களாம்!

கை கால் முகங்கழுவிட்டு வர்ரதுக்குள்ளயே , “கொமாரு காப்பி தண்ணி குடிக்கிரியாப்பா..” அக்கறையா கேப்பாங்க அம்மா..! அதுக்குள்ள பருப்பு சோறு செய்ய ஆரம்பிச்சிருவாங்க.. ஆறு மணிக்குள்ள வேலைக்கு போவணுமே… அப்பார்ட்மெண்டு வீடுங்கள்ள வேல செய்யராங்க… அதனால அப்பா எந்திரிச்சா அவரு பட்டறைக்கு சாப்டுட்டு போகணுமே..!

“காப்பி வேணாம்மா”ன்னு சொல்லிருவேன்..! கட்டங் காப்பி.. நல்லாத் தான் இருக்கும் … ஆனா சைக்கிள் மெதிச்சிட்டு போகும் போது பாதீல வயித்த கலக்கிரும்.. அப்புறம் பேஜாயிரும் னு பயந்தான்..!

அப்பாவோட சைக்கிள செவுத்துல சாச்சி வெச்சிருப்பாரு.. ஸ்டேண்டு லைட்டா உட்டு போயிருச்சு.. சரியா நிக்காது.. அம்மா கிட்ட போய்ட்டு வரேம்மா னு சொல்லிட்டு.. அத எடுத்துகிட்டு தர தரன்னு செய்ன் சவுண்டு கேக்க ஏறி மிதிக்க ஆரம்பிச்சிருவேன்..! பெல்லு சரியா அடிக்கரதில்ல இப்பெல்லாம்..!

அப்பா தூங்காம தான் பொரண்டு படுப்பாரு.. “கௌம்பிட்டியாடா.. பாத்து போய்ட்டு வா “ன்னு சொல்லிட்டு.. ஒரு பீடிய எடுத்து பத்த வெப்பாரு…!

எங்க காவாக்கரை மேடு ஏறினா மெய்ன் ரோட்டுக்கு போயிரலாம்.. கரை ஏறும் போது பாதி நாள் தண்டில்லயே ஏறிடுவேன்.. சில நாள் டக்குனு எறங்கி தள்ளிட்டு ஓடிருவேன்..!

நல்ல வேளையா எங்க காவாக்கரை ஏரியா பின்னாலதான் பஸ் ஸ்டாண்டு.. எங்க அந்தோணி யண்ணன் பேப்பர் ஏஜெண்டு.. அவருக்கு பேப்பரு அங்கதான் வரும்… பஸ்ஸ்டாண்டுல பெஞ்சில வெச்சே பிரிச்சிருவாங்க..!

பேப்பர் மணமிருக்கே அது தனி வாசன..! வழ வழ ன்னு மணம்மா.. மடிக்கவே மனசு வராது..! பக்கத்து டீக்கடை மணத்த விட எனக்கு பேப்பர் பொஸ்தவம் மணம் ரொம்ப புடிக்கும்..!

நாலு மணிக்கு போனா.. எல்லா பேப்பர் பொஸ்தவமும் தனித்தனியா பிரிச்சு பின்னாடி கேரியல்ல வெச்சு கட்டி.. நாலரைக்குள்ள சைக்கிள எடுத்துகிட்டு லைனுக்கு பொறப்படணும்.. அப்பதான் ஆறரை ஆறே முக்காலுக்கெல்லாம் முடிச்சிரலாம்..! மொத்தம் எழுபத்தஞ்சு வீடு..! தாடன்ட நகர்.. நேரு காலனி… புது நகர்.. அன்பு நகர் .. வழியா .. மாதாகோயில் கிட்ட ரோஸ் காலனி வரைக்கும் என்னோட கண்ட்ரோல் தான் னு சொல்லும்போது கொஞ்சம் பெருமையாத்தான் இருக்கும் …!

ஆனா எனக்கு புரியாத ஒரு விஷயம் அப்படி என்னதான் இருக்கு இந்த பேப்பர் ல.. அதான் டெய்லி டிவிலயும்.. செல்போன்லயும் எல்லா ந்யூசும் வந்துருதேன்னு .. அந்தோணியண்ணன் கிட்ட ஒரு நாள் கேட்டேபுட்டேன்… “டேய் ஏண்டா நம்ம தொழில் ஒழுங்கா ஓடரது உனக்கு புடிக்கலையா”ன்னு கேட்டாரு…”அட ஆமாம்ல….!? ”

போகும்போது ஆரோக்யசாமி அண்ணன் வருவாரு .. சைக்கிள்ல ..! வயசு அறுபத்தி அஞ்சுக்கு மேல இருந்தாலும் அண்ணன் னு சொல்லியே பழகிருச்சு.. நைட் வாச் மேன் வேல… டீ குடிக்க வருவாரு பஸ் ஸ்டாண்டு பக்கம்.. என்ன பாத்து லைட்டா சிரிப்பாரு..! எங்கப்பா நண்பர் தான்.!

நேரு நகர்ல .. கோவிந்தராஜ் அங்கிள் அப்பார்மெண்ட்டு இருக்கு.. ரொம்ப ஸ்ட்ரிக்டு.. கோவக்காரரு.. எல்லா வீட்டு பேப்பரையும் வாச திண்ண மேல விசிறி எறிஞ்சா கோவம் வரும்.. கரெக்டாத்தான் போடுவேன்.. கீழெல்லாம் விழாது.. இருந்தாலும் அவரு கோவப்படுவாரு.. “மேல ஏறி வந்து குடுக்க முடியாதா” ன்னு ஏசுவாரு..!

காசு குடுத்து வாங்கராரு..! கேக்கரது ஞாயந்தான்.. ஆனா நானு நெறைய வீட்டுக்கு போவணுமே என்ன பண்ண.!

ஆனா திடீர்னு ஒரு நாள்ல இருந்து திட்ரதில்ல…. ஆரோக்யசாமி அண்ணன் தான் சொல்லிருப்பாருன்னு நெனைச்சா.. இல்லியாம்.. எங்கம்மா அந்த அப்பார்ட்மெண்ட்ல வேலைக்கு போறாங்களாம்.. என் பையன்தான் சார்.. னு சொல்லிருப்பாங்க போல..! இப்பெல்லாம் அங்கிளே கீழ வந்து வாங்கிட்டு போய்டுவாரு…! அம்மா னா அம்மாதான்..!!

அன்பு நகர் புள்ளயார் கோயில் பகத்துல முக்கு வீடு முடிச்சிட்டு போனா மது சூதனன் வீடு வழியாத்தான் போவணும்.. எங்கூட படிக்கிறான்.. கரெக்டா அவனும் ட்யூஷன் போக சைக்கிள்ல வெளியவருவான்.. என்ன பாத்து ஹாய் னு லைட்டா சிரிப்பான்.. அவங்கம்மா பாக்காத போது… சைக்கிள்னா என்னோடது மாதிரினு நினைக்காதீங்க.. ரேஸ் பைக்கு கணக்கா கருப்பா பச்ச கலர் ஸ்டிக்கரெலலாம் ஒட்டி செம்மையா இருக்கும். !!

மது சூதனன் நலலா படிப்பான்.. ஆனா கணக்குதான் வராது.. எங்கிட்ட அப்ப அப்ப டவுட்டு கேப்பான்.. ஏனோ கணக்கு நெறைய பேருக்கு வர்ரதில்ல.. ஆனா எனக்கென்னமோ ரொம்ப ஈசியாத்தான் இருக்கு… கரெக்டா போட்டுக் குடுப்பேன் ஙே்க்ஸ்ரா அப்டீம்பான்.. அடுத்த வருசம் பத்தாவதுல ஸ்கூல் ஃப்ர்ஸ்ட்டு வாங்கணும்னு அவங்கப்பா சொல்லியிருக்காராம்..! எனக்கு இங்கிலிஸ்தான் பேஜாரு..! ரொம்ப முக்கிப் பாத்துட்டேன்.. சரி அது எதுக்கு நமக்குனு உட்டுட்டேன்…!

சுமதி யோட வீடும் பக்கத்து தெருதான்.. சுமாராத்தான் படிப்பா.. ஆனா அவ வீட்டு வழியா போவும்போது நான் வேகமா போயிருவேன்..பெல்லு கூட அடிக்க மாட்டேன்.. என்னமோ ஒரு மாதிரி வெக்கமா இருக்கும்..அவ பாக்கிற மாதிரியே. ஆனா அவ எட்டு மணிக்குதான் டெய்லி எந்திரிப்பாளாம்! சோம்பேறி..!

புள்ளையார் கோயில் தாண்டின உடனே தெரு திருப்பத்துல நாலஞ்சு நாய்ங்க படுத்து கெடக்கும்.. என்ன பாத்தா ஒன்னும் பண்ணாது .. லைட்டா தலையத் தூக்கி அட நீயான்னு பாத்துட்டு திரும்ப தூங்க போயிருவாங்க.. ஆனா இந்த மணி நாய் மட்டும் ரொம்ப நாளா எனக்கு ஃப்ரெண்டு ஆகவேயில்ல.. பல தடவை தொரத்திட்டு வந்திருக்கு.. ஒரு தடவ ரோட்டுக்கு நடுவில இருந்த சின்ன வாய்க்கால்ல வீலு தடுக்கி சரிஞ்சிட்டேன். நெறய புஸ்தகம் பேப்பரு கீழ வாய்க்கா தண்ணில விழுந்திருச்சு…. நானே அவங்க அவங்க வீட்ல போய் மன்னிச்சுக்கங்கன்னு சொன்னேன்…. ஆனா ஒருத்தர் ரெண்டு பேரு அந்தோணியண்ணன் கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணிட்டாங்க… அவரு என்னையே ஒரு நிமிசம் உத்துப் பாத்துட்டு .. “பாத்துப் போடா.. தொழிலும் முக்கியம்னாரு…! ” எனக்கு புரிஞ்சுது அவர் கஷ்டம்..! பாவம்..!!

எங்கம்மா வேல செய்யர ஒரு வீட்டு அங்கிள் சீனிலாசன்னு பேரு.. எனக்கு சில சமயம் அப்பாக்கு வேட்டி ..எனக்கு சட்ட துணி மணி ..அம்மாவுக்கு பொடவல்லாம் எடுத்து தந்திருக்காரு.. வீட்ல தெவசம் செஞ்சா மறக்காம அம்மாகிட்ட வடை பாயசம்லாம் தந்து விடுவாரு.. நல்லா படிக்கிறானான்னு அப்ப அப்ப கேப்பாராம்.. அடுத்த வருசம் பத்தாவது படிக்க.. ஸ்பெசல்லா பண உதவி தர்ர மாதிரி ஒரு ட்ரஸ்ட்டுல ஏற்பாடு செய்யரேன்னு சொல்லியிருக்காறாம்.. எங்கம்மா கண்ணு விரிய ஒரு நாள் சொன்னாங்க..!! நல்ல மனுசன்..!

மணி நாய் இப்பெல்லாம் என்ன தொரத்தர்து இல்ல.. பாத்துட்டு வால ஆட்டிட்டு பேசாம இருந்திரும்.. அதுக்கும் போரடிச்சு போச்சா இல்ல.. அதுகிட்டயும் அம்மா போய் ஏதாவது சொன்னாங்களான்னு தெரியல..! இருந்தாலும் இருக்கும்…!

கரெக்டா ஏழு மணிக்கு லைனெல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு சைக்கிள ஓட்டிகிட்டு வந்து செவுத்துல சாச்சி வெச்சிட்டு வெளிக்கி போக ஓடிருவேன்.. ரெண்டு மணி நேர சைக்கிள் ஓட்னதுல வயிறு சும்மா கலக்கி விட்ரும்..!

தெருவோர பைப்பு கிட்டயே குளிக்கலாம்.. ஆனா தண்ணியோ சோப்போ யார் மேலயும் தெறிக்காம குளிக்கணும்.. வெறும் ஜட்டியோட குளிக்க கூடாது.. முடியவும் முடியாது..! எல்லாரும் இருப்பாங்களே..!

குளிச்சு வீட்டுக்கு வரும்போது.. அப்பா கூப்பிடுவாரு.. வாசத் திண்ணையிலதான் உக்காந்திருப்பாரு.. போய் நின்னா..என் தாவாங்கட்டைய புடிச்சு சூரிய வெளிச்சத்துல அப்படியும் இப்படியுமா திருப்பிப் பாப்பாரு.. கையில பீடி வாசம் அடிக்கும்.. லைட்டா எனக்கு மீச முளைச்சிருக்கர்த பாப்பாரு.. “அடேய் மகனே பெரியவனாய்ட்டியாடா . !.”ம்பாரு கிண்டலா.. கண்ணு பள பளக்கும்.. ! “போப்பா உனக்கு வேற வேலையில்ல”ன்னு னுட்டு உள்ள வந்திருவேன்..! என்ன பத்தாவது முடிச்ச உடனே தன்னோட பட்டறையிலயே சேத்து உடரேன்னு சொல்லியிருக்காரு அப்பா…! நானும் வேலைக்கு போவப் போறனே..!!

ஏழர மணிக்கெல்லாம் அம்மா செஞ்ச அரிசியும் பருப்பும் தின்னுட்டு பள்ளிக்கூடம் போயிருவேன்..! அப்பாவும் வேலைக்கு போயிருவாரு.. அந்த ஓட்ட சைக்கிள்தான் அவரோட ஒரே சொத்து.. பழைய டைனமோ வெச்சது.. ஆனா லைட்டு வெளிச்சமே இருக்காது..அது அடிக்கடி கடை விழுந்திரும்.. அந்தோணியண்ணன் கிட்டகேட்டேன்.. “செய்னுக்கு எண்ண விடரா. செய்ன டைட் பண்ணு”ம்பாரு.. ஆனா என்னவோ அப்பா எண்ண உடுவாரு..செய்ன மாத்த மாட்டாரு..!

சாயந்திரம் அம்மா ஏழு மணிக்கு வருவாங்க.. வீட்டு வேல யெல்லாம் முடிச்சிட்டு பக்கத்து கார்மெண்ட்ஸ்லயும் வேல முடிச்சு வருவாங்க..! வந்தா திருப்பியும் சமையல் செய்ய உக்காந்திருவாங்க.. அப்பா கூட ஏழெட்டு மணிக்கு திண்ணையில உக்காந்து கிட்டு வழக்கம் போல வாச தட்டிய லைட்டா தொறந்து வச்சுகிட்டு குட்டி டிவில ந்யூஸ் பாட்டெல்லாம் பாப்பாரு..! பத்து மணி வரைக்கும் …!

ஆனா தான் ஒம்போது மணிக்கே தூங்க போயிருவேன்.. காலங்காத்தால திரும்பவும் எந்திரிக்கணுமே…!

இநத சைக்கிள மொதல்ல மாத்தணும்.! அப்பாவாலயே மெதிக்கவே முடியல…பாவம்..! இதுவும் அவரு இருமலுக்கு காரணமாவும் இருக்கலாம்..!

அம்மாகிட்ட சொல்லி சீனிவாச அங்கிள்கிட்ட.. எப்படியாவது பேட்டரி வெச்ச சைக்கிள் கேக்கணும்.. நான் பாத்திருக்கேன்.. தர்மராஜ் அண்ணன் வேல செய்யர கேஸ் கம்பெனியில பேட்டரி வெச்ச வண்டியே இருக்கு.. மெதிக்கவே வேண்டாம்.. சத்தமே இல்லாம போயிரும்..! சுமதி வீட்டத் தாண்டும்போது சீக்கிரம் போயிரலாம்ல..!

ஆமா இதான் கரெக்டு.. அப்பா சொன்ன மாதிரி பட்டறைக்கு வேலைக்கு போயிரலாம்.. பேட்டரி சைக்கிளும் கெடச்சிட்டா ஈசியா பேப்பர் போட..பட்டறைக்குப் போகஉதவும்ல..! பாவம் அப்பாவே எத்தன நாள் வேலைக்கு போய் கஷ்டப்டுவாரு..!

இனிமே பேப்பரோட சேந்து பால் பாக்கெட்டும் போடலாம்னு யோசிக்கிறேன். அதே லைனு.. அதே வீடுகதானே ..! ராஜலச்சுமி ஆண்ட்டிதான் பால் ஏஜெண்டு எங்க ஏரியாவுக்கு…. கேட்டு பாக்கணும்.. கூட வருமானந்தானே…!! ஆனா பால் பாக்கெட்டு தூக்கி விசிற முடியாது..

பையிலதான் போடணும்..!! கொஞ்சம் டைம் ஆவும்…! பரவால்ல…!!

வழக்கம் போல திண்ணையில இருமல் சத்தம் கேக்குது…! அப்பாதான்..! இந்த இருமலுக்கு காரணம் வெல்டிங புகையும்தான்னு எனக்குத் தெரியுமே.?! ஏன்னா எனக்கும் மீசையெல்லாம் மொளைக்க ஆரம்பிச்சிடுச்சே.. நானும் பெரிய மனுசன் ஆவரனே…!!

சரி.சரி தூங்குவோம். காலைல எந்திரிக்கணுமே….!!

***

இப்பத்தான் பாத்திரம்லாம் வௌக்கிட்டு.சுலுக்கைக்கு மட்டை எரிச்சு வெச்சிட்டு உள்ள வந்தேன்.

கொமாரு நல்லா அசந்து தூங்கிட்டான். பாவம் தெனமும் கருக்கல்லயே எந்திரிக்குது புள்ள.ஒரு நாள் கூட மூஞ்சி சிணுங்கினதில்ல!

கொமாரோட காலை எடுத்து மடிமேல வெச்சு மெள்ளமா புடிச்சு விட ஆரம்பிச்சேன்.பல நாள் அவனுக்கே தெரியாம புடிச்சு விட்ருக்கேன். சைக்கிள் ஓட்டுதில்ல பாவம்!

இவனோடத்து பசங்கல்லாம் வயசுக்கு மீறிய செய்கையெல்லாம் செய்யும்போது.. கொமார் மட்டும் குடும்பத்த புரிஞ்சு நடக்கர்து என்ன மாதிரி பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான்..!

இந்த மாசம் வீட்டு வேலக் காசு வந்தா.. மொதல்ல பையனுக்கு நாலு முண்டா பனியன், காலு வெச்ச ஜட்டி வாங்கித்தரணும் . பையனும் வளர்ரானுல்ல! சைக்கிள் மிதிக்க ஆரம்பிச்சதுல இருந்து தொடையல்லாம் பாளம் பாளமா ஆயிட்டு வருது.என் கண்ணே பட்ரும் போல இருக்கு.. இந்தக் காலனி சிறுக்கிக முன்னாடி பையன் வெறும் உடம்போட குளிக்கர்து எனக்கே பயமா இருக்கு.. எல்லாம் தீச புத்திகாரிங்க. ! கண்ணு வெச்சிருவாளுக..!

கொமாருக்கு மீச மொளைக்க ஆரம்பிச்சது அவரு அப்பா பாத்தது எனக்கே வெக்கமாயிருச்சு..!

பாவம் கொமார ஒரு தடவ நாய் தொரத்திருச்சாம்.. கால்ல கல்லு பட்டு கட்ட வெரல் நகத்துல அடி பட்ருச்சு பையனுக்கு.. நான்தான் பவுடர், எண்ண வெச்சு கட்டி உட்டேன்.. அதோடயே பையன் லைனுக்கு போனான் லீவே போடாம.!

கொமாருக்கு வீதியில திரியிர நாயிங்க தொல்ல .எனக்கு வீட்டுக்குள்ள திரியிர நாயிங்க தொல்ல..! எல்லாத்தையும் நேக்கா சரிகட்டிதான் வேலைக்கு போரதா இருக்கு. எல்ல மீறுனாங்கன்னா வீட்ட மாத்திருவேன். வேற என்ன பண்ண முடியும்.!? நல்லவேள மில்லுல சூப்பர்வைசர் நல்ல மனுஷன்.இல்லன்னா பெரிய தொந்திரவாயிருக்கும்!

கொமாரு வேல செய்யர அந்தோணியண்ணன் கூட ஆரம்பத்துல என்ன தப்பாத்தான் பாப்பாரு.இவங்கப்பாகிட்ட சொன்னா கொடல உருவிடுவான் மனுசன் . சின்ன வயசுல ரொம்ப கோவக்கார மனுசன்.. அதப்பாத்துதான நானே அந்தாள் கிட்ட மயங்கினேன்.ஆனா பாவம் இப்பெல்லாம் முடியர்தில்ல . ரொம்ப நெஞ்சு சளி. இருமல்…இந்த பீடி கருமாந்திரத்த குடிக்கதய்யா ன்னா கேக்க மாட்ராரு..!

ஆனா இப்பெல்லாம் அந்தோணியண்ணன் என்ன பாத்தாலே தலயக் குனிஞ்சிருவாரு. வாம்மா போம்மா ன்னு தான் பேசுவாரு.எல்லாம் கொமாரப் பாத்து தான் னு நினைக்கிறேன்! கொமாரோட வேல சுறுசுறுப்பு,கஷ்டப் டர குணம் இதெல்லாம் பயத்துதான் அந்தோணியண்ணன் மனசு மாறியிருப்பாரு.இந்த வயசுலயே எம்புள்ள எனக்கு காவலா இருக்காம் பாத்தீங்களா.?! பின்ன இவன் லைனுக்கு போற எடத்திலெல்லாம் குமாரம்மா ன்னு தான் என்ன எல்லாரும் கூப்படராங்க..! முத்துராஜூ சம்சாரம்கர பேரு போயிருச்சு இப்பல்லாம்..!

வாசல்ல இருமல் சத்தம் கேக்குது..! அவர்தான் ! இப்பெல்லாம் வீட்டுக்குள்ளயே வர்ரதில்ல அவரு..என்ன ரொம்ப ஆசையா பாத்தவர்தான்.சினிமா.ட்ராமா ,பீச்சுனு நாங்க போவாத எடமில்ல.என்ன வெச்சு தாங்குவாரு.பாவம் இப்பல்லாம் உடம்பு முடியல போல! பரவால்ல! உடம்பு தான முக்கியம்!!

கொமாரு ரொம்ப நல்லா படிக்கிறானாம். அவனோட வாத்தியார் சொன்னாரு.அவன் மட்டும் பத்தாவதுல நல்ல மார்க் வாங்கிட்டா , பால்டெக்னீல சேத்தர்லாம்னு சொன்னாரு.அவருக்கு நெறைய பேரத் தெரியும்.நல்லபடியா அவனுக்கு ஒரு வாழ்க்க கெடைச்சா போதும்டா சாமின்னு வேண்டிகிட்டேன்!

சீனிவாசன் சார் கூட பண உதவி வாங்கித் தர்ரேன்னு சொல்லிருக்காரு.. நல்ல மனுசன்!

சரி தூங்குவோம். காலைல எந்திரிக்கணும்..!கண்ணு சொக்குது!

விடியரதுக்குள்ள காவாக்கரையா ஒதுங்கினாத்தான் வசதி. விடிஞ்சிருச்சின்னா ரயிலுக நெறையா வர ஆரம்பிச்சிரும் ..!

கொடியில கெடந்த உள் பாவாடய எடுத்து தரையில விரிச்சு அக்கடான்னு படுத்தேன்…!

***

ஞானம் படுத்துட்டா போல..! தெனத்திக்கு இவ்ளோ நேரம் ஆயிருது அவளுக்கு !

நான் வழக்கம் போல திண்ணைலதான் தூங்கர்து!

இருங்கஇந்த மட்ட நெருப்புல ஒரு பீடி பத்திட்டு வர்ரேன். இந்த நேரத்துல தீப்பெட்டிய கிழிச்சா கூட ஞானம் முழிச்சிக்கிடுவா.இந்த தீப்பெட்டி உரைக்கிற சத்தம் கேட்டாலே” ச்சு.. ச்சு.” னு முணகுவா..! பாவம் எம்மேல அக்கற ஒரு பக்கம்.. பாவம் மனுசன் னு கரிசனம் ஒரு பக்கம்..!

தலை மாட்டுலதான் சைக்கிள வெச்சிருப்பேன்.இத எடுத்துகிட்டுதான் கொமாரு லைனுக்கு போவான்! பாவம் அவனால இத மிதிக்க முடியாது..!

ஆனா இந்த சைக்கிள்ல நான் சுத்தாத எடமில்ல! அதெல்லாம் ஒரு காலம்! ஞானத்த பாக்க இந்த சைக்கிள்ல தான் டெய்லி போவேன். உறம்பரைய சண்ட போட்டுதான ஞானத்த கல்யாணம் பண்ணினேன்!

அப்பெல்லாம் இந்த சைக்கிள்ல கேரியல் கிடயாது.கல்யாணம் ஆன புதுசல ஞானத்த இந்த சைக்கிள் முன்னாடி தண்டில்ல உக்கார வெச்சுகிட்டு லச்சுமி கொட்டாய்..சந்திரன் தேட்டர்னு எல்லா படத்துக்கும் கூட்டிடடு போவேன்.சும்மா மூஞ்சிகிடடயே மல்லிப் பூ வாசத்தோட உக்காந்து வருவா.ஊரே எங்கள பாக்கும் !

ஆனா என்ன பாத்தா பசங்கல்லாம் பயப்படுவானுக. நம்ம தான் உலக பேமசாச்சே…!

போன வாரம் பெரியாஸ்பத்திரி போவும்போது டாக்டரம்மா சொன்னாங்க… நெஞ்சு சளி ரொம்ப கட்டுதுப்பா.நுரைப்பையில கோளாறு.. கேன்சர் வரக் கட வாய்ப்பிருக்குன்னாங்க!

ஏம்மா.. என்ன மாதிரி ஏழ பாழைங்க வயித்துல இரைப்பையில வர்ர அல்சர விட இந்த நுரைப்பை கேன்சர் பெரிய நோயான்னேன்.?

என்னயே ஏற எறங்க பாத்துட்டு வாய் கொஞ்சம் அதிகமோன்னாங்க.அது ஒன்னுதாங்க தாராளமா இருக்கு எங்கிட்டன்னு சொன்னதுக்கு சிரிச்சாங்க.!

ஆமா அபபடியே உட்ராதப்பா அடுத்த வாரம் வா.டெஸ்ட் பண்ணிரலாம்னாங்க..!

எனக்கு வேற பயமா யிருக்கு. ஞானத்துகிடட இன்னும் சொல்லல.சொன்னா அழுவா.! எனக்கு ஏதுனா வர்ரதுக்கு முன்னால கொமாருக்கு ஒரு வேலல வாங்கி குடுத்துட்டா ஞானத்துக்கு உதவியா இருப்பான்.பையன் வேற நல்லா படிக்கிறான்.. ஞானத்துக்கு அவன இன்சினீயராக்கி பாக்கணும்னு ஆச.!

ஆனா எனக்கு.??? கொமாரு ஞானத்த நல்லா பாத்துக்கணும் னு ஆச.!

நாந்தான் அவள நல்லா பாத்துக்கல. இந்த பீடிக்கட்டுலயே என்ன எரிச்சிகிட்டேன்.ஞானத்தையும் அடுப்படி வெறகுக்கட்டையிலயே எரிய உட்டுட்டேன். பாவி நானு.!

இந்த குத்த உணர்ச்சிதான் அவள நானு தொந்திரவு பண்ரதேயில்ல எதுக்குமே…! சில பல ராத்திரி தூக்கம் வராம பொரண்டு பொரண்டு படுப்பா.. என்ன பத்திய நெனப்புதான் வேற என்ன.!

பட்டறையில கேசவன் சூப்பர்வைசர் சொன்னாரு.. இன்சூரன்ஸூ எடுப்பா.உனக்கு ஒன்னுன்னா உன்னோட குடும்பத்துக்குஉதவியா இருக்கும்னு… இப்பெல்லாம் நூறு எரநூறு கட்னாலே.. ஒரு லச்சம்..ரெண்டு லச்சம் கெடைக்குமாமே.? ! ஆனா அதுக்கு உடம்ப கம்ப்ளீட்டா டெஸ்ட் எடுக்கணுமாம்.!டாக்டர்கிட்ட நைசா கேட்டுப் பாப்போம்னு இருக்கேன் .!

காலைல மொத வேலையா அது என்ன டீட்டெய்லு கேசவன் கேக்கணும்..!

சரி.சரி. ஒரு பீடிய முடிச்சிட்டு தூங்க போவோம்…! காலைல பையன் லைனுக்கு போவும்போது வழியனுப்பனுமே…!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *