(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சூரியன் சுட்டெரித்துக் கொளுத்தும் உச்சிப்பொழுது வீட்டு வேலைகளை சற்றே முடித்துவிட்ட ஆசுவதத்தில் இளைப்பாற ஜன்னலருகில் வந்து அமர்ந்து கொண்டேன். தபால்காரனின் மணியோசை எப்போது கேட்கும்? என்ற ஆர்வத்தில் காத்துக்கிடக்கிறேன். தபால்காரனின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பது என்பது, இப்போது நமது சமூகத்தின் கட்டாயக் கடமையயென்றாகிவிட்டது. ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் யாராகிலும் ஒருவர் வெளிநாடு சென்றிருக்க வேண்டுமென்பது, தவிர்க்க முடியாத நிர்பந்தம்.
நான் இயங்கும் சுற்றுச் சூழல், என்னைக் கலவரப்படுத்தி உணர்வுகளால் பழிவாங்கித் தீர்க்கிறது. வாட்டும் தனிமையும், சூனிய வெறுமையும் சகிக்கவியலாச் சங்கடங்களைத் தோற்று விக்கின்றன.
பாதையின் சலசலப்பும், வெளிச்சலனங்களும் உள்வீட்டு வெறுமையை சிறிது தணிக்கிறது. பரந்து விரிந்த நெடுஞ்சாலை யல்ல இது. நெருக்கடியும், பரபரப்பும் நிறைந்த குறுக்குத் தெரு. அடுத்தடுத்த வீட்டுச் சன்னமான பேச்சுக் குரல்களைக் கூட, காற்று சுமந்து வந்து செவியில் நிர்தாட்சண்யமாய் அறைந்து விட்டுப் போகும். தனிமைத் தீ என் உணர்வலைகளைச் சுட்டெரிக்கிறது. இந்தச் சூழலும், வாழ்வும் திருப்திகரமானதாய் இல்லை. வெளியுலகத் தொடர்புகள் அன்னியப்பட்டு, மனம் கூண்டுக் கிளியாய் வெம்மையில் கிறங்கி அல்லாடித் தவிக்கிறது. இன்றைய நிலையில் எல்லாவற்றையும் இந்த சாளரத்தினூடாகத் தான் அவதானிக்கிறேன்.
தனிமையில் மனிதன் பேய்க்குச் சமம் என்ற மேலை தேசத்து அறிஞன் ஒருவனின் வாக்குக்கு அர்த்தம் கொடுப்பதைப் போன்று, அமைந்துவிட்டது என் இருப்பு. நடைபாதை வியாபாரிகள், மோட்டார் சைக்கிள்கள், பள்ளிக்கூடச் சிறார்கள், பாதசாரிகள், என எங்கள் தெரு எப்போதும் களை கட்டும்.
மணமாகி ஆறு மாதத்திற்குள் உழைப்பிற்காக வெளிநாடு போனவர் என் கணவர். இதனால் தனிமைப்பட்டுப் போய் அவர் நினைப்பின் நெருடலில் உருகி வழிகிறேன் நான். ஒற்றைக் குயிலின் ஒரு மழைக்கால சோக நெக்குருகல் தொனியை இங்கெவரும் பெரிதாய் இனங்கண்டு கொள்ளாததைப் போல – இந்தத் துயரம் நான் மட்டும் அனுபவித்து தீருவதற்கு மட்டுமே உரியது என்றெண்ணி மனம் கசிகிறேன்.
வயதாகி நோயில் விழுந்துவிட்ட என் கணவரின் தாயைப் பராமரிப்பது, உணவு சமைப்பது, இல்லத்தை கூட்டிப் பெருக்கி ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளில் ஒருவித அலுப்புத் தட்டுகிறது. வெளியே எங்காவது சுதந்திரமாக சுற்றித் திரிதல் சாத்தியமில்லை.
அபூர்வமாக சில வேளைகளில், முன் வீட்டுக் கவிதாவுடன் கோயில், பூஜை என்று போய்வருவதோடு சரி.
அன்று கவிதா கேட்டாள், “என்னடி திவ்யா! முகமெல்லாம் மோகப் பரு நிறைஞ்சிருக்கு. அவரை நினைத்து உருகி வழிகிறாயா?” என்று.
அவளது கேள்வியில் உண்மை இல்லாமலில்லை. சிரித்து சமாளித்தேன். இந்தத் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள் கூட, என்னைக் கவராதிருப்பதின் காரணம் தீவிரமாய் சுழலும் எனது மனவோட்டங்கள் தான். இளமையில் துணையின் நெருக்கத்தை தவறவிட்டுத் தவிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எத்தனை பெரிய இம்சைகளை எதிர் நோக்க வேண்டி வருகிறது என்பதை அனுபவரீதியாக இப்போது உணர்கிறேன்.
மனித வாழ்வின் மறக்கவியலாமைத் தளம் இளமை. குறுகுறுக்கும் ஆசைளும், தவிப்புகளும் நெஞ்சு தழுவி வியாபித்து இருக்கும் என்பதை நூல்களினூடாக வாசித்து உள்வாங்கியிருக்கிறேன். அனுபவத்தில் அந்த அவஸ்தைகளை இப்போது தான் அணுகிப் பார்க்கிறேன்.
‘கூடிப் பிரிவது துயரம்!’ என்ற பாடல் வரிகூட ஞாபகத்தில் நிலைக்கிறது. உழைப்பிற்காக சொந்த மண்ணையும், உறவுகளையும் அந்நியப்படுத்திப் பார்க்க வேண்டிய சுமையின் நிர்ப்பந்தத்தினை வாழ்வு நம் மீது விதிக்கிறது.
இன்றும் வழக்கம் போல், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பாதையை வேடிக்கை பார்க்கிறேன். முன்னால் தெரிகிறது சிறிய பொட்டல் மைதானம். அங்கு கால்நடைகளின் மேய்ச்சல். மௌன ஊர்வலம். பரந்து விரிந்த தொடுவானம். உயரக் கிளை பரப்பி விண்ணை எட்ட எத்தனிக்கும் நீண்டு பெருத்த மரங்கள், அடுக்கிவைத்தாற் போன்று வரிசையாய் வீடுகள், மெல்லத்தழுவி மரங்களில் சலசலத்துச் செல்லும் காற்று.
எல்லாம் மனதிற்கு இதமளிப்பன. இந்த ஜன்னலோர இருக்கை ஒன்றுதான் எனக்கு கற்பனைக் கிளர்ச்சியூட்டுகிறது. என்றாலும் துணை அருகில் இல்லையே? என்ற ஆதங்கம் மனதை உறுத்துகிறது. தினமும் அவரைப் பற்றி நினைக்கிறேன். பின்னர் மனம் விசனிக்கிறேன்.
என்னைப் போலவே, அவர் விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் நான் அழியாப் பிம்பமாக நிலைத்திருக்கிறேனா? அன்றி என் நினைப்பே மறந்து செய்யும் பணியில் இயந்திரமாகி யிருப்பாரா? தொலைபேசியிலும், வரையும் கடிதங்களிலும் எனது நிலைகுறித்த புரிதலை அவருக்கு உணர்த்தி, விரைவிலேயே வந்துவிடும்படி வேண்டியிருக்கிறேன்.
“திவ்யா! சிறுசிறு சங்கடங்களை எல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது. நிகழ்காலத் துன்பங்கள் எதிர்கால மகிழ்ச்சிக்கு வித்திடும். பொறுமை அவசியம்” என என்னை ஆறுதல்படுத்திக் கடிதம் வரைவார்.
ஜன்னலோர இருப்பின் சுகம் பற்றிச் சொன்னேன் அல்லவா? அதில் ஒரு சங்கடமும் இல்லாமலில்லை . இது எனக்கு சவாலாய் அமைந்துவிட்ட விடயமும் கூட. சிலர் நாறுகிற மீனை பூனை பார்ப்பதைப் போன்று, தெருவில் போகிறவர்கள், என்னை முறைப்பது ஒன்றும் புதிய விடயமில்லை . என்றாலும் விடலைப் பருவத்து இளவட்டங்களின் குறுகுறுத்த விழிகளும், குரூரப் பார்வைகளும் என் முக லாவண்யத்தை சீண்டி என்னை லஜ்ஜையிலாழ்த்தும்.
திடீரென வந்துவிழும் அந்தப் பார்வை வெறிப்புகளை தவிர்ப்பதற்காய் ஜன்னல் கதவுகளில் முகம் மறைப்பேன். ஜன்னல் எனக்கு காட்சி ஊடகம் மட்டுமல்ல. அத்துமீறல்களை நிராகரிக்கும் கவசமும் கூட. வாசலில் மணியடிக்க முற்றத்திற்கு விரைகின்றேன். தபால்காரன் புன்னகைத்தவாறு அஞ்சலை நீட்டுகிறான்.
கடிதம் அவரிடமிருந்து தான். மகிழ்ச்சி உடலெங்கும் பிரவகிக்கிறது. சந்தோஷ மிகுதியால் நன்றியறிதலாக தபால்காரனைப் பார்த்து புன்னகை உதிர்க்கிறேன். இதனால் என்ன குடியா மூழ்கிவிடப் போகிறது? அவன் போகாமல் அசடுவழிய என் முகத்தை வெறித்தவாறு அப்படியே நிற்கிறான்.
“புன்னகை மட்டும் போதாது. வாய்திறந்து பேசினால் முத்தா உதிர்ந்து விடும் கிளியே” என்பது போன்ற பாவனை. இதை சூட்சுமமாக உணர்ந்து கொண்டதின் விளைவு வேகமாக வீட்டுக்கதவை அடைக்கிறேன்.
இந்த ஆண் வர்க்கத்தினரே இப்படித்தான். இளம் பெண்களின் நெருக்கத்தை தருவித்துக் கொள்ள, எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அசட்டுத்தனமாக குழைந்து நிற்பதும், தட்டுத்தடுமாறி பேச முற்படுவதும், ஹீரோ என்ற நினைப்பில் வெளிப்பூச்சு காட்டுவதும், இரும்பில் காந்தம் ஒட்டிக் கொள்ளட்டும் என்ற பிரயத்தனமே.
பெண் மனம் நீறுபூத்த நெருப்பு! என்பதை இவர்கள் எப்போதுதான் உணரப் போகிறார்கள்? தெருவின் தரிசனங்கள் விரிகின்றன. இந்த உடல் சார்ந்த தாபத்தினை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க மனம் கடின ஓர்மம் கொண்டாலும், ஏதோவொரு ஏக்கம், எகிறிக் குதிக்காமலில்லை. தெருக்காட்சிகள் துல்லியமாய மனதுறுத்துகின்றன.
முன் மைதானத்தில் ஒரு பசு தன்பாட்டில் புல்லை மேய்ந்து கொண்டிருக்கிறது. அதன் செயலில் ஆழ்ந்த மௌனம் உள்ளுறைந்து இருக்கிறது. பெரிய எருதொன்று அருகில் நின்று பசுவினைச் சீண்டி இச்சைக்கு அழைக்கிறது. அதன் பிருஷ்டத்தை முகர்ந்து மோகவெறி கொள்கிறது.
கணங்கள் செல்லும் தோறும் இரண்டிற்கும் இடையிலான இடைவெளி குறுகிக் கொண்டு போகிறது. குறி விறைத்த காளை மலை தகர்ந்து விழுந்தாற் போல் முழு பலத்தோடு பசுவின் மேனியில் சரிந்து விழுகிறது.
இக்காட்சியில் லயித்ததில், மேனி மின்சார அதிர்ச்சி கண்டு பதைபதைக்கிறது. இதைக் காணாது என்னால் தவிர்த்திருக்கலாம். அது ஒரு கனவுக்காட்சி போல் கண்ணை உறுத்துகிறது.
மனிதர்களால் கனவு காணாமலிருப்பது சாத்தியமோ? தவிரவும், மனதிற்கு தெரிந்த நியாயம், கண்ணுக்குப் புரியுமா?
கண்களுக்கு எப்போதுமே காட்சிகளே குறி! உஷ்ணமேறிய தேகத்தில் உணர்ச்சிகளின் உதைப்பு, என்னுள் எரிகின்ற தணலை அணைப்பதற்கு பின் பக்க கிணற்றடிக்கு விரைந்து செல்கிறேன். குளிர்ந்த நீரை வாரித் தலைவழியே ஊற்றுகிறேன். என்றுமில்லாத சுகம்! அழுக்காயிருந்த மனம் தெளிந்து சுத்த மாயிற்று.
குளியல் முடித்து ஈரக் கூந்தலை முதுகிலே உலரவிட்டு அமர்ந்தேன். பள்ளிப்பருவ காலத்தில், சக மாணவ மாணவியரைப பட்டப் பெயரிட்டு அழைப்பதில் எனக்கொரு அலாதி மகிழ்ச்சி! இப்போதும் கூட பாதையில் செல்வோரைக் கூர்ந்து நோக்கி, எனக்குள் பட்டப் பெயரிட்டு அழைத்துக் கொள்வேன். அதிலொரு ஆனந்தமும் கிளர்ச்சியுமெனக்கு.
பால்காரனுக்கு தூங்கு மூஞ்சியென்றும், தபால்காரனுக்கு திருட்டு முழியென்றும், என்னால் நாமமிடப்படுவார்கள். இப்பொழுதெல்லாம் இவர்களோடு இன்னுமொருவரும் சேர்ந்து கொள்கிறார். தினமும் காலையிலும், மாலையிலும் அவர் என் இல்லத்தை தாண்டி பாதையில் நடந்து செல்வது வழக்கம்.
அழகாக உடையணிந்து, கையில் ஜேம்ஸ்பொண்ட் சூட்கேஸுடன் செல்லும் அவருக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கலாம். தலையில் அலையலையாகப் படிந்த கேசம், மழுங்க வழித்த, மீசையற்ற பளபளத்த முகம், எடுப்பான நடை, மொத்தத்தில் எவரையும் தோற்றத்தால் கவர்ந்திழுக்கும் வசீகரம் கொண்டவர்.
பாவனையில் ஒரு உத்தியோகக்காரரென்று அனுமானிக்க லாம். பாதையை வேடிக்கை பார்க்கும் தோரணையில்தான் நான் அன்றும் பார்த்தேன். என் வீட்டருகே வரும்போது மட்டும், நடையைத் தளர்த்தி ஆவலோடு என் பார்வை மின்னலை தரிசிக்க விழைவார். இது ஒரு எல்லை மீறிய ரசனை என்று என் அடிமனம் இடித்துரைக்கும்.
அவர் ஜன்னல் நிலாவை தரிசிக்க முயலும் போதெல்லாம், அதைத் தவிர்ப்பதற்கு என் கவசமான ஜன்னல் கதவுகளில் சட்டென முகம் மறைத்துக் கொள்வேன். பொழுது போக்குக்காக தெருவை வேடிக்கை பார்க்கப் போய், இறுதியில் பல சங்கடங் களைத் தோற்றுவிக்குமோ என அஞ்சலானேன்.
எந்த மன்மத விழிவீச்சிக்குள்ளும் எளிதில் சிக்கிக் கொள்ளாத மன உறுதியுடன்தான் நான் இருக்கிறேன். அவருக்கு நான் கேணல் கடாபி என நாமமிட்டேன். கடாபியின் அதே தோற்றம், உருவ அமைப்பு, சாயல் எல்லாம். அசப்பில் லிபிய ஜனாதிபதியின் சகோதரரோ? என யாரும் மயக்கம் கொள்வர்.
அன்றும் வழக்கம் போலவே, விழிகளால் ஜன்னலைத் துளாவிவிட்டு, என் வீட்டைக் கடந்து சென்றார். அடுத்த நிமிடம் அதிர்ச்சியினால் விறைத்து நின்றேன். திடீர் துப்பாக்கி ஓசை செவிப்புலனை அதிரவைத்தது! மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்த முகமூடியணிந்த இருவர். அவர் மீது சரமாரியாக வேட்டு க்களைத் தீர்த்துவிட்டு, மின்னலாய் மறைந்தனர்.
அச்சத்தால் பொறிகலங்கிப் போனேன். மேனி பதறி பதைபதைத்து நடுங்கியது. ஆன்மா பீதியினால் அதிர்ந்து துடித்தது. தெருச்சனம் அங்குகூடி ஒரு பரபரப்பான சூழல் நிலவியது. இறுதியில் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் சந்தர்ப்பமும் கைநழுவிப் போனது. அறுத்துப் போட்ட பறவையினைப் போல் நிலத்தில் கிடந்து துடிதுடித்தார். கடாபி கழுத்திலும் மார்பிலும், குண்டடிபட்டு குருதி கொப்பளிக்க தெருவில் பரிதாபமாக இறந்து கிடந்தார். இந்தக் கோரக் காட்சி, என் நெஞ்சை உலுப்பிக் கலைத்தது.
அடுத்த தெருவில் வாசம் செய்யும் அவர், ஒரு கூட்டுத்தாபன அதிகாரியாம். பஸ்ஸில் ஏறுவதற்காக தினமும் இவ்வழியே செல்பவரென்றும், இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவர், இயக்கமொன்றின் தீவிர ஆதரவாளர் என்றும் தகவல்கள் வெளியாயின. நெஞ்சடைத்து நின்ற எனக்கு எந்தவொரு வேலையிலும் ஈடுபாடு காட்ட இயலவில்லை. நேரில் கண்ட அவலக் காட்சி குருதியணுக்களை கசக்கிப் பிழிந்தது.
“என்ன மனிதர்கள் இவர்கள்? சகமனிதனை ஈவிரக்கமின்றி இப்படி கொன்றொழிக்கிறார்களே? நமது முன்னோர்கள் கட்டிக் காத்த அறமும், நேயமும் இந்த மண்ணை விட்டு நிரந்தரமாகவே அந்நியப்பட்டு போய் விட்டனவா? எனும் கேள்விகள் நெஞ்சுறுத்தின.
‘அம்மாவுக்கு கடும் வருத்தம். உடன் புறப்பட்டு வரவும். அவசரம்.’
கணவருக்கு ஃபெக்ஸ் அனுப்பி விட்டு, தொலைபேசியிலும் கதைத்தேன். அவர் உடன் புறப்பட்டு வருவதாக வாக்குறுதி அளித்தது, தவிக்கும் மனதிற்கு பெரிய ஆறுதலாயிருந்தது.
இப்போது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்க்கும் வேலையை முற்றாகப் புறக்கணித்து விட்டேன். அவர் வருகை ஒன்றுதான் சிதைந்து போன என் இருப்புக்கு தெம்பளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்.
– ஜனவரி 2005 – நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005