அக்கா என்ன செய்றீங்க; பாப்பா என்ன செய்றா;
சத்தம் கேட்டு வேக வேகமாக ராதாமணி ஓடி வந்தாள். வாசலில் கிடந்த ஸ்க்ரீனை விலக்கி வெளியே வந்து அங்கு நின்றிருந்த தன் பக்கத்து வீட்டு பார்வதியை உள்ளே வா என்று சொல்லாமல் ‘உட்காருங்க என்ன விஷயம்’ என்று திண்ணையிலேயே அமர்த்தி விட்டாள்.
உள்ள பாப்பா படிச்சுட்டிருக்கா; நம்ம இங்கேயே உட்கார்ந்து பேசுவோம். அவளுக்கு நாளைக்கு மேத்ஸ் டெஸ்ட். கணக்கெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னைக்கு தான் டியூஷன்-ல மிஸ் அவளுக்கு சொல்லிக் கொடுத்தாங்க வீட்ல போய் ‘நீயா போட்டு பாரு’ண்ணாங்க. அதான் போட்டு பார்த்துட்டு இருக்காள்’ என்றாள்
பார்வதி தன் குடும்பக் கதையை ஆரம்பித்தாள். மாமியார் கொடுமையை சொன்னாள். ‘நாலு விறகு குச்சியை குடுத்துட்டு இன்னைக்கு போயிருச்சுக்கா நான் அதை வச்சு சோறு ஆக்க என்ன பாடுபட்டேன் தெரியுமா, எருவாட்டியும் ஈரம். ஊதி ஊதி என் நெஞ்சே வலிக்குது’ என்றாள். ‘விறகடுப்பு கொஞ்சம் சிரமம் தான் என்று ஆறுதல் சொல்லிய ராதாமணிக்கு இப்படி கதை பேசினால் பாப்பா படிப்பு கேட்டுப்போயிடுமே என்று கவலையாக இருந்தது.பார்வதியை பார்க்க மிகவும் சங்கடமாக இருந்தது.
‘’அய்யோ எப்படி சமாதானப்படுத்தி அனுப்புறது. இவள் தன் மாமியாரைப் பற்றி புலம்பிக்கொண்டே இருப்பாள். உள்ள பாப்பா படித்துக்கொண்டு இருக்கிறாள் இவள் பேச்சு அவள் காதில் விழுந்தது என்றால் அவள் கவனம் இங்கு வந்து விடும். பிறகு கணக்கில் ‘கேர் லெஸ் மிஸ்டேக்’ விடுவாள்.
‘’இன்னைக்கு மிஸ் சொன்னாங்க ‘உங்க பாப்பா நல்லா படிக்கிறாள். ஆனால் கேர் லெஸ் மிஸ்டேக்’ விடுறான்னு சொன்னாங்க. அங்கேயே இரண்டு கொட்டுகொட்டி இருப்பேன். ஆனா அன்னைக்கு மிஸ் சொல்லிட்டாங்க. எங்க முன்னாடி நீங்க விஜயாவைத் தண்டிக்கக்கூடாது. நீங்க வீட்ல போயி தான் உங்க மகள கண்டிக்கணும். எங்க முன்னாடி கண்டிச்சா அது எங்களுக்கு மரியாதை இல்லாமல் போகும்னு சொல்லிட்டாங்க. அதனால இன்னைக்கு அவளுக்கு மண்டையில கொட்டல
நல்லா படிக்கிறா. ஆனால் ஏன் தான் இப்படி கேர் லெஸ் மிஸ்டேக்’ விடுறாளோ என்ன செய்றது. எவ்வளவு கஷ்டப்பட்டு நான் படிக்க வைக்கிறேன்’’ என்று தன் மனதிற்குள் புலம்பிக்கொண்டே பார்வதியின் பேச்சுக்கு தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் பார்வதியின் பேசி ஓய்ந்து விட்டு ‘சரி வரேன்க்கா. பாப்பா படிக்குதாக்கும்; சரி வரேன்’ என்று சொல்லிவிட்டு அவள் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் கொட்டிய நிம்மதியில் கிளம்பிவிட்டாள்.
ராதாமணி உள்ளே வந்தாள். மகளின் மண்டையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தாள். என்னவென்றே புரியாமல் பயந்து போயி அந்த சிறுமி நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் கலங்கி அச்சத்துடன் அண்ணாந்து பார்த்தால் அவள் கவனமாக கணக்கு போட்டுக் கொண்டிருந்தபோது தலையில் நங்கென்று ஒரு குட்டு விழுந்தால் எப்படி அதிர்ச்சியாக இருக்கும்.
பாவம் அந்த சிறுமி அடிக்கடி இப்படி அவள் அம்மாவிடம் இருந்து டம் டம் என்று அடியோ நங்கு நங்கு என்று கொட்டோ விழும். இது சகஜம்.
‘ஒழுங்கா படி நாளைக்கு டெஸ்ட்ல நல்ல மார்க் வாங்கலாம் பிச்சுப்புடுவேன் பிச்சு’ என்று சொல்லியபடி பாத்திரம் ராதாமணி விளக்க போய்விட்டாள்.
‘எதுக்குத்தான் இந்த இங்கிலீஷ் மீடியத்துல படிக்க வச்சாங்களோ. என்ன அடிச்சு கொல்றாங்க. நான் நல்லா தான் படிக்கிறேன். ஆனால் எப்படியோ கணக்குல மட்டும் மிஸ்டேக் விழுது. மிஸ் எல்லாம் என்னைச் செல்லமா வச்சிக்கிறாங்க ஆனா அம்மா தான் அடிச்சு சொல்றாங்க. அம்மா காலையில எந்திருச்சு படின்னு சொல்றதுக்குள்ள நானும் பைக்கட்டை கீழே எடுத்து வச்சு படிக்க உட்கார்ந்துடனும்னு நினைக்கிறேன். ஆனால் நான் கண்னு முழிக்கும்போது அல்லது அம்மா என்னை எழுப்பும் போது எந்திருச்சு பையை எடுத்து வச்சு படின்னு சொல்லித்தான் எழுப்புவாங்க, பாடம் எல்லாம் ஈஸியா தான் இருக்கு. எங்கம்மா அடியை நெனச்சா தான் பயமா இருக்கு’’
‘என்ன படிக்கிறியா கனவு கண்டுக்கிட்டு இருக்கியா’ என்று கேட்டபடி ராதாமணி மகள் அருகே வந்து உட்கார்ந்தாள். விஜயா கணக்கு நோட்டை மஊடி வைத்துவிட்டு சயின்ஸ் பாடம் எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள். அவள் சயின்ஸ் பாதத்தை மெதுவாக படித்ததும் அவள் அம்மா ‘என்ன முணுமுணுக்கிற. வாயை திறந்து படி, வாய்க்குள்ளேயே முணுமுணுக்கிறா. சத்தமா வாயை திறந்து படிச்சா தானே பாடம் மனசுல தங்கும். மிஸ் என்ன சொன்னாங்க. கொஸ்டியன் ஒரு தடவை ஆன்சர் மூணு தடவை வாசிக்கணும்னு சொன்னாங்கள்ல்ல. சத்தமா படி’’ என்று சொல்லியபடி அரிவாள்மனையை எடுத்து கொண்டு வந்து உட்கார்ந்து காய் நறுக்கத் தொடங்கினாள்.
விஜயா சயின்ஸ் பாடத்தை சத்தமாக படித்தாள் ஒவ்வொரு கேள்வியையும் ஒரு முறை வாசித்து அதற்கு உண்டான பதிலை மூன்று முறை வாசித்தாள். ஹார்ட் வர்ட்சுக்கு ஸ்பெல்லிங் படி என்றால் ராதாமணி. அம்மாவுக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரக் கூடாது. வந்தால் அதுக்கும் அடி விழும் ஒழுங்காக படி என்று அதட்டி சொன்னாள். விஜயா சரிம்மா என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு பதிலிலும் இருக்கும் புதிய வார்த்தைகளை ஸ்பெல்லிங் சொல்லி ஐந்து முறை படித்தாள். விஜயாவுக்கு ஸ்கூலில் ஒரு மிஸ்; வீட்டில் ஒரு மிஸ்.
மகள் படுத்து தூங்கியதும் ராதாமணிக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. ‘எதுக்கு பிள்ளையை கொட்டுனேன். அதுபாட்டுக்கு படிச்சுக்கிட்டு தான் இருந்துச்சு தலைஇல கொட்டின இடம் புடிச்சி இருக்குமோ என்று நினைத்தபடி உச்சந்தலையை தடவிப் பார்த்தாள். லேசாக புடைத்த மாதிரி தெரிந்தது வலித்ததால் என்னவோ விஜயா முனங்கிக்கொண்டே திரும்பிப் படுத்தாள். ராதா மணிக்கு பழைய நினைவுகள் வந்தன
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி; விஜயாவ பள்ளிகூடத்துல சேக்குறதுக்கு அந்த வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற ரைட்டர் கிட்ட போய் கேட்டேன். ரைட்டர் னு சொல்லவும் போலீஸ் ஸ்டேஷன்ல ரைட்டர் வேலை பார்க்கிறவருன்னு நினைச்சேன்; எங்க மாமா மகன் அப்படித்தான். அவரை கட்டயுர்ந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா. சொந்தக்கார பாவிக என் பிழைப்புல மண்ணை அள்ளி போட்டுட்டானுங்க. இந்த மனுசனோட ஒடி வந்து இவரும் அற்ப ஆயுசுல போய் நான் ஒத்தப் பிள்ளையை வச்சுக்கிட்டு கண்ணகி படாத கஷ்டமும் துரோபதை படாத துன்பமும் படுறேன். என் பிள்ளையாவது படிச்சு நல்ல வேலைக்கு போய் நல்ல பிழைப்பு பிழைக்கணும்னு பகாத்துல இருக்குற ஓசி பள்ளிக்கூடத்துள படிக்க வைக்க ரைட்டர் வீட்டுக்கு போனேன்,. இவர் ரயில்வே ஸ்டேஷன்ல ரைட்டர் வேலை பார்க்குறவராம், சரி யாரா இருந்தால் நமக்கென்னனு, அவர்கிட்ட போயி பாப்பாவ ஸ்கூல்ல சேர்க்கணும்னு சொன்னேன் அங்க பக்கத்துல ஒரு பெரிய ஸ்கூல் இருக்கு அங்கதான் சேர்க்கணும்னு சொல்லி அவர்கிட்ட போய் கேட்டேன். அவரும் சரின்னு சொல்லி மறுநாள் ஸ்கூலுக்கு வாம்மான்னு சொன்நாறு.
விஜயாவை கூட்டிட்டு மறுநாள் ஓசி பள்ளிகூடத்துக்கு போனேன். ஒரு பாரம் வாங்கிட்டு வந்து ஃபில் அப் பண்ணி கொடுத்தாரு. என் கிட்ட கையெழுத்து வாங்கினார். பாப்பாவ கூட்டிகிட்டு ஹெட் மாஸ்டரம்மாவை பார்க்க போனார். அவுங்களுக்கு எங்க பாப்பாவை பிடிச்சிருச்சு. சரின்னுட்டு இடம் கொடுத்துட்டாங்க. ஏழு றுவா ஃபீஸ் கட்டனும்னு சொன்னாரு. ஏழு ருபாய்க்கு நான் எங்கே போவேன் பீஸ் கட்டணும் னு சொன்னாரு ஏழு ரூபாய்க்கு நான் எங்க போவேன். என் கையில ஒரு ருபாய் தான் இருக்கு. அது ஓசி பள்ளிக்கூடம் தானே எதுக்கு ஃபீஸ்-னு கேட்டேன். அதுக்கு அவரு ஏம்மா இது ஓசி பள்ளிக்கூடமா இது இங்கிலீஷ் பள்ளிக்கூடமா-ன்னாரு, எனக்கு பகீர்னு இருந்துச்சு சரிங்கய்யா ஒரு வாரம் டயம் கேளுங்க கட்டுவோம்ன்னு சொன்னேன் வீட்டுக்கு வந்துட்டோம். எப்படி பீஸ் கட்டுவேன் எனக்கு என்ன தெரியும். இந்த பிள்ளை இங்கிலீஷ் எப்படி படிக்கும். எனக்கு ஒரே கவலையா இருக்கு. நான் அந்த ஒரு வாரமும் அழுதேன் கும்பிடாத சாமில் இல்லை கல்லை கண்ட இடமெல்லாம் சாமின்னு கையெடுத்து கும்பிட்டேன் எம் பிள்ளை நல்லா படிக்கணும் சாமின்னு கும்பிட்டேன்.
என்ன எங்க அம்மா ஏழு வரைக்கும் தான் படிக்க வச்சாங்க. எட்டு படிச்சிருந்தா இன்னைக்கு நான் டீச்சர் ஆகி இருப்பேன். ஆனால் ஏழு படிக்கவும் நான் வயசுக்கு வந்து விட்டேன். எங்க அம்மா தன அண்ணன் மகனுக்கு கட்டி வைக்கனும்னு நிப்பாட்டிடுச்சு, இப்ப பாருங்க எம்புட்டு கஷ்டப்படுறேன் விஜயாவையாவது நல்லா படிக்க வைக்கனும்னு நெனச்சேன் ஆனா இங்கிலீஷ் மீடியம்னு சொல்றாரு அன்னைக்கு அழுதுகிட்டே தூங்கிவிட்டேன். மறுநாள் எப்படியோ நான் வேலை பாக்கிற இடத்தில கொஞ்சம் கொஞ்சமா காசு புரட்டி ரெண்டு மூணு நாலு அஞ்சு ரூபாய் சேத்துட்டேன். இன்னும் ரெண்டு ரூபா வேண்டுமே என்ன செய்ய. ஒண்ணுமே புரியல வழியில் ஒரு நாள் அந்த பள்ளி கூடத்துல பார்த்த ஒரு டீச்சரம்மாவை பார்த்தேன், அவங்க கிட்ட போயி ‘டீச்சர்டீச்சர் நீங்க அந்த இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் தான் வேலை பார்க்கிறிங்க. அந்த என் மகளை சேர்க்க போறேன் ஏழு ரூபாய் பீஸ் சொன்னாங்க. அஞ்சு ரூபாய் சேர்த்துட்டேன் இன்னும் இரண்டு ரூபாய் சேர்க்கணும். வருகிற திங்கட்கிழமை பீஸ் கட்டணும் இன்னும் ஒரு ரெண்டு நாள் டைம் கேட்டா தருவாங்களா,ன்னு கேட்டேன் அதுக்கு அந்த டீச்சர் ‘நான் ரெண்டு ரூபாய் தரேன்; நீங்க திங்கட்கிழமை வந்து பீஸ் கட்டிடுங்கன்னு சொன்னாங்க. எனக்கு ஒரே ஆச்சர்யம்
திங்கட்கிழமை என் மகளை கூட்டிகிட்டு நான் போனப்ப தான் அந்த டீச்சர் பெயர் கேட்கலையே. அவுங்களை இந்த பள்ளிக்கூடத்துல எப்படி கண்டுபிடிப்போம் ஒண்ணுமே புரியல. அங்க போயி அந்த பீஸ் கட்டுற ஆபீஸ் கிட்ட நின்னேன் பெறகு அந்த பள்ளிகூடத்தையே சுத்தி சுத்தி நடந்து வந்தேன். திடீர்னு யாரோ கூப்பிட்ட சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன் அந்த டீச்சர் தான் சிரிச்சுகிட்டு நின்னுக்கிட்டிருந்தாங்க. கிட்ட போனேன் ‘டீச்சர் உங்க பேர் கேட்கலையா உங்கள தேடி நான் சுத்தி சுத்தி நடந்து கிட்டே இருக்கேன்னேன். டீச்சர் சிரிச்சபடி அவங்க கையில இருந்த ஒரு அழகான பர்சை திறந்து பணம் எடுத்துக் கொடுத்தாங்க நான் அவங்ககிட்ட ஒரு நன்றி கூட சொல்லல குடும்பம் விஜயா கையை பிடிச்சு கூட்டிட்டு ஓடிவந்து சட்டுன்னு பணத்தைக் கட்டி ரசீது வாங்கினேன். இன்னொரு இடத்துல போய் கொஞ்சம் இங்கிலிஸ் புஸ்தகம் கொடுத்தாங்க. அந்த ரெண்டு மூணு இங்கிலீஷ் புஸ்தகத்தையும் வாங்கிக் கிட்டு போய்த் திரும்ப அந்த டீச்சரை அவங்க கூப்பிட இடத்துக்கு போய் பார்த்தேன். அவங்ககிட்ட அப்போதே நன்றி சொல்லிட்டு பாப்பாவ காமிச்சுட்டு அவங்க பேரு ஆனந்தி டீச்சர்னு கேட்டுகிட்டு வந்தேன்
அதுல இருந்து ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு நாளும் அந்த ஆனந்தி டீச்சர் தான் எனக்கு தெய்வம். எங்க பாப்பா எந்த கிளாஸ்ல படிச்சாலும் அங்க சாய்ந்திரம் ஹோம் ஒர்க் கணக்கு போடுறது, மறுநாள் டெஸ்ட்டுக்கு உண்டான பாடம் படிக்கிறது என இரண்டையும் படிக்க வச்சிடுவாங்க. மற்ற பாடம் எலாம் வீட்ல போய் எழுதிக்கோ. அன்னன்னைக்கு பாடத்தை அன்னனைக்கு படிச்சுடனும்; பெண்டிங் வைக்கக்கூடாது; அப்புறம் பாடம் சேர்ந்துரும்; கடைசி படிக்க முடியாது; கடைசி நேரத்தில் படிக்கக்கூடாது; இன்னும் நிறைய புத்தி சொல்லுவாங்க அவளுக்கு மட்டுமா எனக்கும் அம்புட்டு புத்தி சொல்லுவாங்க பொறுமையா இருக்கணும் விஜயாம்மா நீங்க கோபப்படக்கூடாது. விஜயா நல்லா படிச்சு வருவா; நீங்க நல்ல நம்பிக்கையோட இருங்க; தைரியமா இருங்க; உங்களுக்கு என்ன கஷ்டம்னாலும் என் கிட்ட கேளுங்க; நாங்க எல்லாரும் உங்களுக்கு உதவி செய்கிறோம்; அப்படின்னு கூட இருக்க டீச்சர் எல்லாம் சேர்த்துக்குவாங்க; இப்ப கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்னாடி நல்லா இருக்கலாம் என்று விஜயா கிட்ட அடிக்கடி சொல்லுவேன். அப்படி சொல்லி சொல்லி தான் அவளை நல்லா படிக்க வெச்சுகிட்டு இருக்கேன் என்று யாரிடமோ சொல்வது போல அவள் தனக்குத்தானே புலம்பியபடி ராதாமணி தூங்கிவிட்டாள்
இன்று விஜயா பள்ளிப்படிப்பு முடித்து நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகி காலேஜுக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டு வந்திருக்கிறாள். இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கணும்னு அவளுக்கு ஆசை; ஆனால் அந்த காலேஜ்ல அவளுக்கு இங்கிலீஷ் லிட்ரேச்சர் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அவள் சயின்ஸ் குரூப் எடுத்ததுனால அவளுக்கு பிஎஸ்சி சயின்ஸ் தான் கிடைக்கும்னு சொல்லிட்டாங்க. விஜயாவுக்கு சயின்ஸ் பிடிக்காது அவளுக்கு லிட்ரேச்சர் படிக்கணும். கவிதை கதை எல்லாம் நல்லா எழுதுவாள். சயின்ஸில் நல்ல மார்க் வாங்கியிருந்தாள் இவ மாட்டின்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்து விட்டான்
அழுதுகிட்டே அம்மா கிட்ட சொன்னாள்
‘இப்ப என்ன செய்யப் போற விஜயா’
நான் சயின்ஸ் படிக்க மாட்டேன் எனக்கு அது பிடிக்கல பிடிக்கல. என் பிரெண்ட்ஸ் எல்லாம் இங்கிலீஷ் லிட்ரேச்சர் தான் படிக்குறாங்க நான் இங்கிலீஷ் தான் படிப்பேன்
ராதாமணி கோயில் கோயிலாகப் போய் கும்பிட்டாள் ஆனந்தி டீச்சரிடம் பொன் போட்டு கேட்டாள் அவர்கள் தனக்கு தெரிந்த ஒரு லெக்சரரைப் போய் பார்க்கச் சொன்னார்கள். அந்தம்மாவும் ‘இங்கிலீஷ் லிட்ரேச்சர் குரூப்பில் இடம் இல்லை’ என்று சொல்லிவிட்டார்கள் வேறு காலேஜ்க்கு போகலாம் என்றால் பக்கத்தில் எந்தக் காலேஜும் கிடையாது. இந்த காலேஜ் தான் வீட்டுக்கு அருகில் நடக்கிறது தூரத்திலிருக்கும் இன்னொரு லேடிஸ் காலேஜுக்கு பஸ் ஏறி போவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியம்.
விஜயாவின் படிப்பை நிறுத்தி விடலாமா என்று ராதாமணி யோசித்தாள் போதும் படித்தது தன் உறவினர் பக்கம் தேடி ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து அவளுக்கு கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என்று நினைத்தாள் தன் பெரியம்மா மகளை வரச்சொல்லி அவள் அண்ணன் மகனுக்கு விஜயாவை திருமணம் செய்து தர விரும்புவதாக சொன்னாள். இருவரும் விஜயாவின் ஜாதாகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரைப் பார்க்க கிளம்பினர், இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விஜயா உண்மையிலேயே பயந்து விட்டாள்.
‘ஐயய்யோ கல்யாணமா. இவ்வளவு காலம் என்னை படி படி படி என்று உயிரை எடுத்து விட்டு இப்பொழுது எவ்வளவு லேசாக கல்யாணம் என்று சொல்கிறார்கள் நான் இவ்வளவு காலம் அடி வாங்கியும் கொட்டு வாங்கியும் கஷ்டப்பட்டு படிச்சு என்ன பலன். நான் விடும் ஒவ்வொரு சுவாசக் காற்றும் படிப்பு படிப்பு என்று நினைத்து நான் படித்ததெல்லாம் வீணாகிவிடுமே. தெய்வமே உனக்கு இரக்கம் இல்லையா. எனக்கு ஒரு இங்கிலீஸ் லிட்ரேச்சர் சீட் வாங்கித் தரக் கூடாதா என்று அவளும் தன் நிலைக்காக அழுதாள். தன அது விதியை நினைத்து நொந்து கொண்டாள்.
அம்மாவும் பெரியம்மாவும் ஜோசியரை பார்க்க கிளம்பியதும் இவள் மீண்டும் அந்தக் காலேஜுக்கு போனாள். போய் ஆனந்தி டீச்சர் சொன்ன லெக்சரரைப் போய் பார்த்தாள். அந்த லெக்சரரிடம் ‘எனக்கு ஏதாவது ஒரு சீட்டு வாங்கி குடுங்க மேடம். எங்க வீட்டில எங்க அம்மா என்ன கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. எனக்கு படிக்கணும்னு ஆசையா இருக்கு’’ என்று கெஞ்சிக் கேட்டாள். அந்தம்மா தமிழ் டிபார்ட்மெண்ட் என்றதால் என்பதால் அவர் உனக்கு லிட்ரேச்சர் படிக்க ஆசையாக இருந்தால் தமிழ் இலக்கியம் படிக்கலாமே என்றார் விஜயாவும் டக்கென்று சரி என்று சொல்லி விட்டாள். அப்போது அவளுக்கு தெரியவில்லை தான் புலி வாயிலிருந்து தப்பி கரடிவாயில் மாட்டிக்கொள்கிறோம்.
வீட்டுக்கு வந்ததும் முகம் கால் கை கழுவி விட்டு காபி போட்டுக் குடித்துவிட்டு நல்ல பிள்ளை போல உட்கார்ந்து விட்டாள். அம்மாவும் பெரியம்மாவும் சோர்ந்து போய் வந்தனர். ‘சரி நான் கிளம்புறேன். நீ ஒன்னு மனசை போட்டு குழப்பிக்காத’’ என்று சொல்லியபடி காப்பி கூட குடிக்காமல் பெரியம்மா கிளம்பிவிட்டார் ராதா மகளைப் பார்த்தாள் ‘என்னம்மா என்ன செய்ற’ என்று கேட்டாள். விஜயா சற்று தெம்புடன் இவர்கள் போன காரியம் ஒன்றும் பலிக்கவில்லை போலும் என்ற நம்பிக்கையுடன் அம்மா காலேஜுக்கு திரும்பப் போனேன் ஆனந்தி டீச்சர் சொன்ன மேடத்தை போய் பார்த்தேன். அவங்க ஏதாவது ஒரு சீட்டு வாங்கி தரேன் வா னு சொன்னாங்க என்ன கோர்ஸ் சீட் வாங்கிக் கொடுத்தாலும் படிப்பியான்னு கேட்டாங்க. நான் சரின்னு சொல்லிட்டேன்.
சிறிது நேரம் ராதாமணி அமைதியாக இருந்தாள்.
என்ன பீஸ் கட்டணும்
150 ரூபாய் விஜயா.
அன்னைக்கு பி எஸ் சிக்கு 400 ரூபாய்னு சொன்ன. இப்ப நீ150னு சொல்றே, .
தெரியலம்மா அந்த மேடம் அவ்வளவு தான் சொன்னாங்க
என்ன கோர்ஸில் சேர போற என்று கோபமாக மகளிடம் கேட்டாள்
தெரியலம்மா. அவங்க எந்த கோர்ஸ்ல இடம் இருக்கோ அதுல சேர்த்து விடுறேன் னு சொன்னாங்க. ₹150 கொண்டு வான்னு சொன்னாங்க
என்று விஜயா பட்டும்படாமல் தன் தாயாரிடம் தெரிவித்தார். எங்கே ஒருவேளை தமிழ் லிட்ரேச்சர் என்று சொன்னால் அம்மா படிக்க விட மாட்டாளோ என்ற ஒரு பயம் அவள் மனதில் இருந்தது
ஆரம்பத்தில் இங்கிலீஷ் மீடியத்தில் சேர்ந்ததற்கு வருத்தப்பட்டதாகச் சொன்ன அம்மா பின்பு போகப் போக தான் இங்கிலீஷ் படிக்கும் போது மட்டுமே தன் அருகில் உட்கார்ந்து அதை சந்தோஷமாக கேட்டுக்கொண்டிருப்பார். தமிழ் படிக்கத் தொடங்கினால் ஏன் இப்படி கத்துற மனசுக்குள்ள படி என்று சத்தம் போடுவார் இப்போது தமிழ் லிட்ரேச்சர் படிக்க போகிறேன் என்று சொன்னால் ஒருவேளை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் விஜயா அதைப் பற்றி மூச்சு விடவில்லை
பொழுது விடிந்தது ராதாமணி 150 ரூபாய் எடுத்து மகள் கையில் கொடுத்தாள். ஒரு பக்கம் பீஸ் கம்மி என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் என்ன கோர்ஸ் படிக்க போகிறாளோ என்ற ஒரு தயக்கமும் இருந்தது. ஆனந்தி மிஸ் வேறு இப்போது இங்கே இல்லை அவர்கள் தன் தம்பி வீட்டுக்கு சென்னைக்குப் போய் விட்டார்கள் இல்லையென்றால் அவுங்களை போய் பார்த்து வந்திருக்கலாம் சரி விதிப்படி நடக்கட்டும் இம்புட்டு கஷ்டப்பட்டும் பலனில்லாம போச்சே. என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே இருந்தாள். விஜயா தமிழ் லிட்ரேச்சர் சேர்ந்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பி வந்தாள்
வீட்டுக்குள் வெறுந்தரையில் படுத்திருந்த ராதாமணி மகள் வந்ததைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து ‘என்ன கோர்ஸ்லமா சேர்ந்த’ என்று கேட்டாள். அந்த மேடம் தமிழ்ல மட்டும் தான் இடம் இருக்குன்னு சொல்லி அதுல சேர்த்துவிட்டாங்கம்மா என்றாள். உன் தலை எழுத்துப்படி நடக்கட்டும் என்று சொல்லிவிட்டு திரும்பவும் தரையில் அமைதியாக படுத்து விட்டாள்
விஜயா உள்ளே போய் சோறு போட்டு சாப்பிட்டாள். அவளுக்கு அம்மா லேசாக விசும்புவது போலவும் அழுவது போலவும் மூக்கை உறிஞ்சுவது போலவும் இருந்தது. என்ன செய்வது தான் தலையெழுத்து என்று விஜயா அதை கண்டும் காணாததுமாக போல் இருந்து விட்டாள்.
தொடர்ந்து ராதாமணி விஜயாவை படிக்கவைக்க விரும்பாமல் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே இருந்தாள். விஜயா தமிழ் படிப்பது அவளுக்கு எட்டிக்காயாக கசந்தது. கொஞ்சம் கூட பிடிக்க வில்லை. விஜயா புஸ்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தால் அவளுக்கு கோபமும் ஆத்திரமுமாக வந்தது. தன்னுடைய 12 வருட உழைப்பு வீணாகி விட்டதே, ஆசையும் இலட்சியமும் பாழாகிவிட்டதே என்று அவளுக்குள் தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து வெறுப்பாக இருந்தது
இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மகள் படித்த குடும்பத்து பிள்ளைகளைப் போல சுத்தமாக உடை உடுத்த வேண்டும்; தினமும் தலைக்கு எண்ணெய் தடவி சீவி விட வேண்டும்; தலையில் பூ வைத்து முகத்துக்கு மஞ்சள் பூசி லட்சணமாக பிள்ளையை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டும்; தானும் பள்ளிக்கூடத்துக்கு போகும்போது நீட்டாகப் போகணும், என்று ஒவ்வொரு நிமிடமும் அந்த இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தை மனதில் வைத்தே தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தாள்.
தினமும் மூன்று வேளை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துக்கு தன் மகளுடன் போவாள். காலையில் கொண்டு போய் பிள்ளையை விட்டு விட்டு வந்து அவசர அவசரமாக சோறாக்கி மத்தியானம் கொண்டுபோய் பிள்ளையை சாப்பிட வைத்து தலை முடியை ஒதுக்கி விட்டு முகத்தை கழுவி லேசாக பவுடர் பூசி பிள்ளையை பிரஷ்ஷாக அனுப்புவாள். மீண்டும் சாயங்காலம் பள்ளிக்கூடம் விடும் போது அங்கு போய் அவள் கிளாஸ் டீச்சறிடமும் மற்றவர்களிடமும் பாப்பா எப்படி படிக்கிறாள் என்று கேட்டு வழிநெடுக மகளைத் திட்டிக் கொண்டே வருவாள் வீட்டுக்குள் வந்ததும் இரண்டு நிமிடம் கூட ஓய்வு கொடுக்காமல் துணி மாத்திட்டு உட்கார்ந்து படி. மிஸ் என்ன சொன்னாங்க, கேட்டேல்ல; ஏன் இப்படி இருக்க, நீ ஒழுங்கா படிக்க மாட்டியா; நீ படிச்சா தானே நாளைக்கு நல்லா இருக்கலாம்; உனக்கு தானே சொல்றேன் என்று அவளை திட்டியபடியே அவளை படிக்க வைப்பாள். அவள் படிக்கும் போது வீட்டிற்குள் எந்த ஆளையும் விட மாட்டாள் குடுகுடுவென்று வாசலுக்கு ஓடிப்போய் வெளி திண்ணையிலேயே உட்கார்ந்து பேச வைத்து அனுப்பிவிடுவாள்; பேச்சை வளர்க்கவும் மாட்டாள் பேச்சு பேச்சாக இருந்தாலும் அவள் நினைவெல்லாம் உள்ளே படிக்கும் மகளுக்கு படிப்பில் கவனம் சிதறிவிடக்கூடாது என்ற எண்ணம் தான் இருக்கும்; முடிந்தவரை சுருக்கமாக பேசி வந்தவர்களை அனுப்பிவிட்டு லேசாக கதவை சாத்து சாத்தி வைத்தபடி உள்ளே வந்து வீட்டு வேலைகளையும் செய்து கொண்டிருப்பாள்
இடையிடையே இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் ஏதேனும் தர்ம காரியங்களுக்கு காசு கேட்பார்கள்; ஏதேனும் போட்டி வைக்க போவதாக சொல்லி காசு கேட்பார்கள் இந்த திடீர் செலவுகள் எல்லாம் சமாளிக்க அவள் மிகவும் சிரமப்பட்டாள் இருந்தாலும் மகள் அந்த மாலை வேளையில் வாசிக்கும் ஓரிரண்டு இங்கிலீஷ் பாடத்துக்காக அவள் இத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு இருந்தாள் ஆனால் இப்போது இனிமேல் அவள் இங்கிலீஷ் படிக்க மாட்டாள் அதை ராதாமணி கேட்க இயலாது இந்த எண்ணம் ராதா மணிக்கு வாழ்க்கையின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது தன் ஆசைக் கனவுகள் எல்லாம் நொறுங்கி விட்டனவே என்று அவள் சலித்துப் போய் விட்டாள். இதையெல்லாம் நினைத்து புழுங்கி புழுங்கி மனம் வெம்பி போய்விட்டாள் அவள் உருக்குலைந்து போய்விட்டாள்
விஜயாவை வீட்டைவிட்டு அனுப்பினால் போதும் என்ற மனநிலைக்கு ராதாமணி வந்துவிட்டாள். எப்படியோ ஒரு மாப்பிள்ளையை பார்த்து அவனிடம் இதம் பதமாய் பேசி விஜயாவை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்து விட்டாள். விஜயா படிப்பை முடித்ததும் அவளுக்கு சிக்கனமாக திருமணம் செய்ய நாள் குறித்துவிட்டாள்
விஜயா தாயிடம் கெஞ்சி கேட்டாள். அம்மா நான் இப்ப ஃபர்ஸ்ட் மார்க் வாங்கி இருக்கேன் என்னை மேடம் எல்லாரும் எம் ஏ படிக்க சொல்றாங்க நான் எம் ஏ முடிச்ச உடனே இந்த காலேஜிலேயே எனக்கு வேலை தருவாங்க. எனக்கு எம் ஏ படிக்க ஸ்காலர்ஷிப் தரேன்னு சொல்றாங்க. நான் பஸ்ட் மார்க் வாங்கி இருக்கேன் நான் இன்னும் ரெண்டு வருஷம் படிக்கிறேன்மா. என்றாள்
போதும் போதும் நீ படிச்சது. போய் சேர வேண்டிய இடத்துக்கு போய் சேரு என்று வெறுப்புடன் ராதாமணி சொல்லிவிட்டாள். மகளை இப்படி கடிந்துகொன்டோமே என்று அவளுக்கு வேதனையாக இருந்தது. தமிழ் மீடியம் பிள்ளைகளுடன் தன மகளை பேச விடாத ராதாமணி இன்று தமிழ் கூட எழுத படிக்க தெரியாத மாப்பிள்ளையை தான் மகளுக்கு நிச்சயம் செய்திருந்தாள்.
இன்னும் எத்தனை வருஷம் படித்தாலும் இவள் இங்கிலீஷ் படிக்க போவதில்லை. இந்த தமிழ் பி ஏ படிக்க நான் இத்தனை வருஷம் உழைத்திருக்க வேண்டாமே என அழுதாள். தன் இங்கிலீஷ் கனவுகள் கரைந்ததை எண்ணி கண்ணீர் விட்டாள்.
தனது தமிழ் அறிவை தாய் மதிக்கவில்லையே. சனியன் பிடித்த ஆங்கிலம் தன தாயை உடனிருந்தே கொல்லும் வியாதி போல் பிடித்து கொண்டதே என்றெண்ணி விஜயா கலங்கினாள்
இவள் தமிழுக்காக அழுதாள். அவள் தாய் இங்கிலிஷுக்காக அழுதாள். அன்று இரவு அந்தக் குடிசைக்குள் இரண்டு உள்ளங்கள் கரைந்து போன உழைப்பையும் கலைந்த போன கனவுகளையும் நினைத்து அழுதன.