ஒருத்திக்கே சொந்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2023
பார்வையிட்டோர்: 9,762 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

ரவி, டாக்டர் கோபாலுடைய ஆபீஸுக்குச் சென்றான். அவரிடம் எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறி அவருடைய உதவியையும் ஒத்துழைப்பையும் நாடினான். 

டாக்டர் கோபால் அனுதாபத்தோடு பத்மினியின் கதையைக் கேட்டார். அவரால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதி கூறினார். 

நர்ஸிங் ஹோமுக்குப் பின்னால் டாக்டர் கோபாலுடைய வீடு இருந்தது. அங்கே ரவியும், டாக்டரும் சென்று டாக்டருடைய தாயாரிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அந்த அம்மையார் உடனே தன்னால் ஆன உதவியைச் செய்ய ஒப்புக் கொண்டார். 

“உங்க ரெண்டு பேருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்குத் தெரியலை. இந்த உதவியை நான் கடைசி வரைக்கும் மறக்க மாட்டேன்,” என்றான் ரவி. 

“சும்மாயிரு ரவி. நன்றியாவது மண்ணாங்கட்டியாவது! ஒரு ஃப்ரண்டுக்காக இந்த உதவியைக் கூடச் செய்ய முடியலைன்னா அப்புறம் நான் உன்னுடைய சிநேகிதன்னு சொல்லிக்கிறதுக்கே தகுதியற்றவன் ஆயிடுவேன்,” என்றார் டாக்டர். 

டாக்டர் கோபாலுடைய தாயார் ஜானகி அம்மாள் குறுக்கிட்டார்: “இதென்ன பெரிய உதவி, ரவி? பாவம், அந்தப் பெண்ணோட கதையைக் கேட்டா, மனிதாபிமானம் உள்ள யாரும் அவளுக்காக அனுதாபப் படாம இருக்க முடியாது. அவளை என் குழந்தை மாதிரிப் பார்த்துக்கறேன்.வாங்க, போய் இப்பவே அவளை இங்கே அழைச்சுக்கிட்டு வரலாம்.”

ரவி அவர் காலைத் தொட்டு வணங்கினான். “ரவி! என்னப்பா இதெல்லாம்? எழுந்திரு!” என்றார் ஜானகி அம்மாள். 

“அம்மா! மனசாரச் சொல்றேன். யூ ஆர் எ கிரேட் லேடி! உங்க பெருந்தன்மை எல்லாருக்கும் வராது.” என்றான் ரவி. 

“சரி, சரி, என்னைப் புகழ்ந்தது போதும். பாவம், அந்தப் பொண்ணு எவ்வளவு நேரமா வெயிட்டிங் ரூமிலே தனியா உட்கார்ந்திருக்கா! வாங்க போகலாம்,” என்றார் ஜானகி அம்மாள். பத்மினியைக் கிருஷ்ணசாமியிடம் அழைத்துச் சென்றனர். 

ரவி பக்கத்திலேயே இருந்தான். ஆனால் பத்மினிக்குத் தெரியவில்லை. 

“பத்மினி, வாம்மா!” என்றார் கிருஷ்ணசாமி. 

“அப்பா, எப்படீப்பா இருக்கீங்க?” 

“எனக்கு ஒண்ணுமில்லேம்மா. இன்னும் கொஞ்ச நாட்கள் இந்த ஆஸ்பத்திரியிலேயே இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு.’ 

”அதுக்கு ரொம்பச் செலவாகுமேப்பா?” 

கிருஷ்ணசாமி ரவியைப் பார்த்துக் கொண்டே, ”அதைப்பத்தி நீ கவலைப் படாதேம்மா. ஒரு தெய்வம் வந்து நம்மைக் காப்பாத்தி இருக்கு,” என்றார். 

எங்கே உணர்ச்சி வசப்பட்டு குட்டை உடைத்துவிடப் போகிறாரோ என்று பயந்து, ரவி தனது உதடுகளின் மேல் ஒரு விரலை வைத்து ‘வேண்டாம்’ என்றபடி ஜாடை காட்டி எச்சரிக்கை செய்தான். 

”தெய்வமா? என்னப்பா சொல்றீங்க?’ என்று கேட்டாள் பத்மினி. 

”நம்ம டாக்டரைத்தான் சொன்னேன், பத்மினி. இந்த நர்ஸிங் ஹோமுக்குச் சொந்தக்காரர் டாக்டர் கோபால். ஏதோ நம்ம மேலே அவருக்குக் கருணை ஏற்பட்டு, எனக்கு அவராகவே வைத்தியம் பார்த்துக்கறேன்னு சொல்லி இருக்கார். அவருடைய அம்மாவும் இங்கேதான் இருக்கார். அவங்க வீட்டிலேயே உன்னை வச்சுக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. நீ தைரியமா அவர்களோட போம்மா. எனக்கு ஒண்ணுமில்லை, பயப்படாதே.” 

 ஜானகி அம்மாள் குரல் கொடுத்தார். “வாம்மா.உங்க அப்பா ரொம்பக் களைச்சுப் போயிருக்கார். அவர் ரெஸ்ட்எடுத்துக்கட்டும். நீ என் கூட வாம்மா.” என்றார். 

பத்மினியின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக அன்பாக, ஜானகி அம்மாள் அவளைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். ரவியும் டாக்டர் கோபாலும் வெளியே வந்தனர். 

”கோபு, ரொம்பத் தாங்க்ஸ்! நான் வர்றேன். ஏதாவது விஷயம் இருந்தா எனக்கு ஃபோன் பண்ணு. நான் உடனேயே வர்றேன்”. 

“ரவி, ஒரு வார்த்தை…”

”என்ன, கோபு?” 

“கிருஷ்ணசாமியோட கண்டிஷன் ரொம்பவும் ஸீரியஸா இருக்கு. அஃப் கோர்ஸ், என்னாலே முடிஞ்சதை நான் பண்றேன். ஆனா, அவருடைய இருதய நோயை ரொம்ப நாள் கவனிக்காம விட்டதனாலே, ரொம்ப முத்திப் போயிருக்கு. உண்மையைச் சொல்லணும்னா, அவரைக் காப்பாத்த முடியும்கிற நம்பிக்கை எனக்கில்லை. இன்னிக்கோ நாளைக்கோங்கிற மாதிரிதான் அவர் இருக்காரு. டாக்டர் என்ற முறையிலே, நான் பொய்யான நம்பிக்கை தர விரும்பலை. உனக்குத் தெரியட்டுமேன்னு தான் இதை முதலிலேயே உன்கிட்டே சொல்லி வைக்கிறேன்.” 

“தாங்க் யூ,கோபு. ஆனா, இந்த விஷயம் பத்மினிக்குத் தெரிய வேண்டாம். குட் நைட் கோபு.” 

”குட் நைட்.” 


ரவி வீடு போய்ச் சேரும் போது. இரவு மணி 10.30. சாந்தா அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். 

“ஓ, சாந்தா! நீ இன்னும் தூங்கலை?” 

“சரிதான் போங்க! காலையிலே புறப்படும்போது நீங்க இன்னிக்கு மகாபலிபுரத்திலோ ஷூட்டிங், சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் முடிஞ்சுடும், ஆறு மணிக்குள்ளே வீட்டுக்கு வந்து சேர்ந்துடறேன்னு சொல்லிட்டுப் போனீங்க. இப்போ மணி என்ன? பத்தரை. என்ன ஆச்சோ.ஏதாச்சோன்னு நான் இவ்வளவு நேரம் பயந்துட்டு இருந்தேன். எனக்கு எப்படித் தூக்கம் வரும்?” என்றாள் சாந்தா. 

”ஓ! அது…வந்து….” ரவி மழுப்பினான். 

”ஆமாம். இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தீங்க? ஷூட்டிங்தான் அஞ்சு மணிக்கே முடிஞ்சு போச்சே? நீங்க இன்னும் மேக்-அப் கூடக் கலைக்கலையே?” என்று சாந்தா கேட்டாள். 

ரவி தீவிரமாக யோசித்தான். ‘முதல்லே அஞ்சு மணி வரைக்குந்தான் ஷூட்டிங்னு சொன்னாங்க. அப்புறம், ஹீரோயின் நாளைக்கு வெளியூர் போகணுமாம். திடீர்னு சொன்னா, அவ சம்பந்தப்பட்ட ஸீன் ஒண்ணு பாக்கி இருந்தது. அதனாலே லைட்டுகள் போட்டு நைட் இஃபெக்ட்லே அந்த சீனை முடிக்கலாமான்னு கேட்டாங்க. பாவம், அவங்க நெருக்கடியைப் பார்த்தா எனக்குக் கஷ்டமா இருந்தது. அந்த ஹீரோயின் ஊருக்குப் போயிட்டா இன்னும் பதினைஞ்சு நாட்களுக்குத் திரும்பி வரமாட்டா. இது முடிகிற படம். இந்த ஸீன் நின்னு போயிட்டா அவுங்க நினைச்ச தேதிக்குப் படத்தை ரிலீஸ் பண்ண முடியாமப் போயிடும். அதனாலேதான் சரின்னு ஸீனை முடிச்சுக் கொடுத்துட்டு வந்தேன்.” ரொம்பச் சாமர்த்தியமாகக் கதை அளந்து விட்டதாக நினைத்துத் திருப்திப்பட்டுக் கொண்டான் ரவி. 

“உங்க ஷூட்டிங் அஞ்சரை மணிக்கே முடிஞ்சு நீங்களும் அங்கேயிருந்து காரிலே கிளம்பிப் போயிட்டதாகக் காசி சொன்னானே?” 

ரவி திக்குமுக்காடிப் போய்விட்டான். 

“காசியா? அவன் எப்போ இங்கே வந்தான்?” என்று கேட்டான். 

“அவன் எட்டு மணிக்கே வந்துட்டான்.” 

“அவன் அத்தை வீட்டுக்குப் போறதா என்கிட்டே சொன்னானே?” 

“அத்தை வீடு பூட்டி இருந்ததாம். அதனாலே கொஞ்ச நேரம் இருந்து பார்த்துட்டு, பஸ்லே வந்துட்டானாம். இப்போ சொல்லுங்க, எங்கே போயிருந்தீங்க?” என்று மடக்கினாள் சாந்தா. 

நிலைமையைச் சமாளிக்க ரவி கோபித்துக் கொண்டது போல் நடித்தான். “என்ன இது, உன் மனசிலே என்னதான் நினைச்சிட்டு இருக்கே? என்னமோ நான் குற்றவாளி மாதிரியும் நீ வக்கீல் மாதிரியும் பெரிசாக் குறுக்கு விசாரணை நடத்தறியே! அப்போ ஷூட்டிங் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, காசி போகலாமான்னு கேட்டான். சரி, போன்னு சொன்னேன். அவன் கிளம்பிப் போன பிறகு ப்ரொட்யூசர் இன்னொரு ஸீனை எடுக்கலாமான்னு கேட்டார். அதுக்கு ஒத்துக்கிட்டேன். அப்போ காசி போயிட்டான். அவனுக்குத் தெரியாது. அவன் அத்தை வீட்டிலே இல்லை, அதனாலே அவன் எனக்கு முன்னாலே இங்கே வந்துட்டான். அவனுக்கு அந்த நைட் ஷூட்டிங்கைப் பத்தித் தெரியாது. இதுதான் நடந்தது,” என்று விறுவிறுவென்று ரவி அளந்து கொண்டே போனான். 

சாந்தாவுக்கு நம்பிக்கை வரவில்லை. “நீங்க காரை ஓட்டிட்டுக் கிளம்பிப் போனதைக் கண்ணாலே பார்த்தேன்னு காசி என்கிட்டே சொன்னானே?’ என்று மீண்டும் குடைந்தாள். 

ரவி பொறுமையை இழந்தான். “நீ நம்பினால் நம்பு. இல்லைன்னா விடு! காலைலேருந்து கொளுத்தற வெய்யிலிலே மனுஷன் மாடு மாதிரி உழைச்சுட்டு ஓய்ஞ்சு போய் ராத்திரி வீட்டுக்கு வந்தா, அவனுக்குச் சோறு போட இங்கே ஒருத்தரையும் காணோம்! ஏற்கெனவே களைச்சுப் போய் வந்திருக்கேன். குளிக்கவும் விடாம். சாப்பிடவும் விடாம, வந்தவுடனே என்னமோ மணிக்கணக்கா நடு ஹால்லே நிக்க வச்சுக் கேள்வி மேலே கேள்வி கேக்கறியே! உனக்குப் பதில் சொல்றதுக்கு இப்ப எனக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. இப்பவே லேட் ஆச்சு. காலையிலே ஏழு மணி கால்ஷீட். நான் அஞ்சு மணிக்கே எழுந்தாகணும். என்னைப் பத்திக் கொஞ்சமாவது அக்கறை உனக்கு இருந்தா. இந்த நேரத்திலே என்னை இப்படி நிக்க வைச்சுக் கேள்வி கேட்பியா?” என்று அவள் மீது எரிந்து விழுந்து, கோபமாக ரவி மாடிக்குச் சென்று விட்டான். 

சாந்தா அங்கேயே நின்றாள். அவள் மனத்தில் எழுந்த சந்தேகம் இன்னும் தீரவில்லை. ‘அவர் சொன்னது உண்மையா இருக்குமோ? ஆனா, அந்தப் பையன் காசி ஏன் பொய் சொல்லப் போறான்? அவர் காரிலே கிளம்பிப் போனதை அவன் கண்ணாலே பார்த்ததாய்ச் சொன்னானே? அப்படீன்னா, இவர் வேறே எங்கேயோதான் போயிருக்கணும். என்னைக்கும் இல்லாமே, இன்னிக்கு மட்டும் ஏன் இப்படிப் புளுகறார்?’ 

சாந்தாவுக்கு மனது ஒரு நிலையில் இல்லை. அவள் எண்ணங்கள் திசை மாறி எங்கேயோ போக ஆரம்பித்தன. ‘என்னை இவருக்காகப் பெண் கேட்ட போதே, எங்க அம்மா, சினிமா நடிகருக்குப் போய்ப் பெண்ணைக் கொடுக்கறதா? வேண்டாம்னு சொன்னா. ஆனா அப்பாதான், இவர் மத்த நடிகர்கள் மாதிரி இல்லை, ரொம்ப நல்லவர் அப்படீன்னார். நானும் இத்தனை நாளா அப்படித்தான் நம்பினேன். இதுவரைக்கும் அவர் என்கிட்டே ஒரு சின்னப் பொய் கூடச் சொன்னதில்லை. இப்போ ஏன் இந்த மாதிரி மாறிட்டார்? இத்தனை நாளா ஒரு பெரிய ஹீரோவோட மனைவியா இருந்திருக்கேன். எனக்குச் சினிமா உலக வழக்கங்களைப் பத்திக் கொஞ்சம் கூடத் தெரியாதா? இவ்வளவு பெரிய நடிகர் கிட்டே எந்தத் தயாரிப்பாளராவது கடைசி நிமிஷத்திலே ஷூட்டிங் எக்ஸ்டண்டு பண்ணலாமான்னு கேட்பாரா? அதுவும் அவர் காரிலே ஏறின பிறகு? எந்த மடையனும் அப்படிக் கேட்க மாட்டான். கேட்டாலும் இவர்தான் உடனேயே ஒத்துக்குவாரா? இல்லை, இவர் மாறிப் போயிட்டார். எந்த நடிகை கூடவோ இவர் சம்பந்தம் வச்சுக்க ஆரம்பிச்சிருக்கார். அப்படித்தான் இருக்கணும். இல்லைன்னா, இவ்வளவு நேரம் எங்கே போயிருப்பார்? அப்படி எதுவும் இல்லைன்னா உண்மையை ஏன் மறைக்கப் பார்க்கிறார்? சே! கடைசியிலே இவரும் மத்த நடிகர்கள் மாதிரியே ஆயிட்டாரே. இவர் எனக்கு இப்படி துரோகம் பண்ணுவார்னு நான் கனவிலே கூட நினைக்கலே.’- இப்படித் தனக்குத் தானே உள்ளத்துக்குள் புகைந்து கொண்டு, சாந்தா அன்று இரவு சாப்பிடவும் இல்லை, இரவு முழுவதும் தூங்கவும் இல்லை. 

சந்தேகப் பேய்கள் அவளைப் பிடித்து வாட்டி எடுத்து விட்டன. ரவிக்கும் சாந்தாவுக்கும் திருமணமாகிய பிறகு, முதன் முறையாக சாந்தா. ரவியோடு சேர்ந்து படுக்காமல், அன்று இரவு குழந்தை இருக்கும் அறைக்குச் சென்று அங்கேயே படுத்துக் கொண்டாள். 

மாடியில் தனது அறையில், ரவியும் உறங்காமல் படுத்திருந்தான். அவன் மனத்தில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள். குழம்பிப் போய் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான். ஏதோ அமைதியாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில், பத்மினியின் வருகை ஒரு புயலையே உண்டாக்கி விட்டது. இந்தச் சிக்கலான பிரசினைக்கு எப்படி முடிவு காண்பதென்று அவனுக்குப் புரியவில்லை. மீண்டும் பத்மினி அவன் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த முதல். நாள் அன்றே.சாந்தாவுக்கு இவ்வளவு சந்தேகம் வந்துவிட்டது. உண்மையை எப்படி அவளுக்குத் தெரியப்படுத்துவது? எப்படி இதைச் சொல்ல ஆரம்பிப்பது? சாந்தா அதை ஏற்றுக் கொள்வாளா? பத்மினிக்குத் தனது வாழ்க்கையில் இடம் தரச் சம்மதிப்பாளா? 

சாந்தா ரொம்ப நல்லவள். பாவம், அவள் ஒரு தவறும் செய்யவில்லை. அவளுக்கு ஓர் அதிர்ச்சியை உண்டாக்கி அவள் மனத்தைப் புண்படுத்த ரவிக்கு விருப்பமே இல்லை. ஆனால் பத்மினி? அவள் மட்டும் அப்படி என்ன குற்றம் புரிந்தாள்? விதி அவளுடைய வாழ்க்கையில் மிகவும் குரூரமான வகையில் விளையாடி விட்டது. அவளை இந்தப் பரிதாப நிலையில் தவிக்க விடுவதுதான் தர்மம் ஆகுமா? இதுவரை அவள் பட்ட துன்பங்கள் போதாதா? அது மட்டுமன்றி, ரவி எப்படி அவளையே நினைத்து நினைத்து ஏங்கினானோ பத்மினியும் அதே மாதிரி தனது நெஞ்சத்தில் கோவில் கட்டி ரவியை அங்கே தெய்வமாகக் குடியேற்றி இருந்தாள். இல்லாவிட்டால், அவள் ஏன் திருமணமே வேண்டாம் என்று இத்தனை ஆண்டுகளாகக் கன்னியாகவே இருந்து விட்டாள்? 

ரவியின் இதயத்தில் எப்போதுமே பத்மினிக்குத்தான் முதல் இடம். அவள் இறந்து போனதாக நினைத்துத்தான் சாந்தாவை மணந்து கொண்டான். இப்போது பத்மினி மீண்டும் கிடைத்து விட்டாள். இதுவரை ஏதோ இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருந்த ரவியின் வாழ்க்கையில் பத்மினியின் மறு பிரவேசம் மீண்டும் அவனுக்குப் புத்துயிர் ஊட்டியது. இதுவரை ஏதோ இருந்து கொண்டிருந்தான். இப்போதுதான் மறுபடியும் வாழ வேண்டும் என்ற உற்சாகம் அவனுக்குள் பிறந்தது. ஆனால் எத்தனை சிக்கல்கள்! 

ஒரு புறம் சாந்தாவுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சியை உண்டாக்க வேண்டிய நிர்ப்பந்தம், மறுபுறம், பத்மினிக்கு அவனுடைய திருமணத்தைப் பற்றித் தெரியப்படுத்த வேண்டிய அவசியம். ஏற்கெனவே நொந்து போன பத்மினியின் இதயம், இந்தப் புதிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியுமா? அவள் அவசரப்பட்டு ஏதாவது விபரீத முடிவுக்கு வந்து விட்டால்? இந்த இக்கட்டான நிலைமையை எப்படிச் சமாளிப்பது? சமாளிப்பது? இப்படியே சிந்தனைக் கடலில் தத்தளித்து, அமைதியின்றி, இரவு முழுவதும் ரவி தூங்காமல் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான். இந்தச் சிக்கல்களுக்கு நடுவே, அவன் நடிப்புத் தொழிலையும் கவனித்தாக வேண்டிய நிலைமை.

– தொடரும்…

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *