ஒருத்திக்கே சொந்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2023
பார்வையிட்டோர்: 9,733 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

ரவிக்கு அன்று மகாபலிபுரத்தில் வெளிப்புறப் படப்பிடிப்பு. அன்றைக்கு டிரைவருக்கு உடம்பு சரியில்லாததால் அவன் வேலைக்கு வரவில்லை. ரவி தானாகவே காரை ஓட்டிச் சென்றான். எப்பவும் அவனுக்குக் காரை ஓட்டுவதென்றால் தனி குஷி. 

மாலை ஐந்தரை மணிக்கு ஷூட்டிங் முடிந்தது. ரவியுடைய மேக்கப்மேன் முன்பே தனது சொந்த ஸ்கூட்டரில் சென்றுவிட்டான். ரவியுடைய ரவியுடைய அஸிஸ்டண்ட் பையன் காசி அவனிடம் வந்து, ‘சார்,இன்னிக்கு சாயங்காலம் எனக்கு ஏதாவது வேலை இருக்குமா?” என்று கேட்டான். 

“இல்லை, நான் நேரா வீட்டுக்குத்தான் போறேன்,ஏன், என்ன விஷயம்?” 

“ஒண்ணுமில்லே சார். இங்கே மகாபலிபுரத்திலே எங்க அத்தை இருக்காங்க. அவங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. இப்ப வேலை ஒண்ணுமில்லேன்னா நான் போய் அவங்களைப் பார்த்துட்டு, நாளைக்குக் காலைலே நீங்க ஷூட்டிங்குக்குப் புறப்படறதுக்குள்ளே வீட்டுக்கு வந்து சேர்ந்துடறேன் சார்”. 

“ஓ.கே. போயிட்டு வா. ஆனா ஞாபகம் வச்சுக்கோ, நாளை கார்த்தாலே ஏழு மணி கால்ஷீட். நீ ஆறு மணிக்கெல்லாம் வீட்டிலே இருக்கணும்.” 

“நான் கரெக்ட்டா வந்துடறேன் சார்”.

ரவி மகாபலிபுரத்திலிருந்து கிளம்பி மெட்ராஸை நோக்கிக் காரை ஓட்டிக் கொண்டு வந்தான். கார் ரேடியோவைத் திருப்பினான். டி.எம். சௌந்தரராஜன் பாடிய ‘நினைத்து நினைத்து நெஞ்சம் உருகுதே – நீங்கிடாத துன்பம் பெருகுதே’ என்ற பழைய பாடல் ஒலித்தது. அது ரவிக்கு மிகவும் பிடித்த பாட்டு. அதைக் கேட்டு ரசித்துக் கொண்டே வேளச்சேரியை நெருங்கும் போது. வயதான ஒரு மனிதரும் ஓர் இளம் பெண்ணும் திடீரென்று ரோட்டின் நடுவே காருக்கு எதிரே வந்துவிட்டார்கள். 

ரவி அவர்கள் மேல் மோதாமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்து காரை அப்படியும் இப்படியும் திருப்ப, அவர்களும் குழப்பத்தில் இந்தப் பக்கமும் அந்த பக்கமும் தடுமாற, மொத்தத்தில் ரவி திடீரென்று ப்ரேக்கைப் போடவும் அந்த வயதான மனிதர் கீழே விழவும் சரியாக இருந்தது. அந்தப் பெண்ணும் வேறொரு பக்கம் விழுந்து விட்டாள். பெரியவர் கையிலிருந்த பெட்டியும் அப்பெண்ணின் கையில் இருந்த ஒரு சிறு துணி மூட்டையும் வெவ்வேறு திசைகளில் பறந்தன. 

ரவி உடனே கார் கதவைத் திறந்து அவசரமாக இறங்கி வந்தான். அந்த மனிதர் மூர்ச்சை ஆகி விட்டிருந்தார். அவர் நெற்றியிலிருந்து லேசாக ரத்தம் கசிந்தது. ரவி அவர் பக்கத்தில் மண்டியிட்டு அவர் தலையைத் தனது முழங்காலுக்கு மேல் ஊன்ற வைத்தான். அப்போதுதான் ரவி அவர் முகத்தைச் சரியாகக் கண்டான். அவனுக்குப் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த மனிதர் வேறு யாரும் இல்லை-கிருஷ்ணசாமி. பத்மினியின் தந்தை கிருஷ்ணசாமி! ஆனால் மிகவும் இளைத்துப் போய், கந்தலையும் கிழிசலையும் கட்டிக் கொண்டு ரொம்பவும் மாறியிருந்தார். முன்பெல்லாம் எப்போதும் ஜரிகை வேட்டியும் பட்டு ஜிப்பாவுமாகக் காட்சியளித்த அவருடைய வாடிய, ஏழ்மையான தோற்றம் ரவிக்குச் சொல்லில் அடங்காத வியப்பைத் தந்தது. 

கொஞ்ச தூரத்தில், ரோட்டின் மறுபக்கத்தில் அந்தப் பெண் விழுந்திருந்தாள். அவளுக்குக் காயம் எதுவும் பட்டதாகத் தெரியவில்லை. அவள் விழுந்த இடத்திலேயே உட்கார்ந்தபடி கைகளால் ஏதோ தேடுவதைப் போல், “அப்பா, அப்பா, எங்கே இருக்கீங்கப்பா?'” என்று தடுமாற்றத்துடன் கேட்டபடி அவள் செய்த பாவனையிலிருந்தே அவளுக்குக் கண் பார்வை இல்லை என்பதை ரவி புரிந்து கொண்டான். 

நல்ல வேளையாக அப்போது அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லை. இல்லையென்றால், இப்படி ஒரு விபத்து நேர்ந்து ரவிகுமார் போன்ற பிரபல சினிமா நடிகர் அதில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஒரு பெரிய கூட்டமே சூழ்ந்து கொண்டு ரொம்பவும் சங்கடமாகப் போயிருக்கும். 

“கொஞ்சம் இருங்கம்மா, இதோ வந்துட்டேன். பயப்படாதீங்க,” என்று அப்பெண்ணுக்குத் தைரியம் ஊட்டும் வகையில் குரல் கொடுத்து, ரவி கிருஷ்ணசாமியைத் தூக்கிச் சென்று காரின் பின் ஸீட்டில் படுக்க வைத்த பிறகு திரும்பி வந்து அந்தப் பெண்ணுக்குக் கை கொடுத்து எழுந்து நிற்க உதவி செய்தான். 

அது வரை அப்பெண்ணின் முகம் வேறு பக்கம் திரும்பியிருந்ததால் ரவி அவளைச் சரியாகப் பார்க்கவில்லை. கீழே குனிந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அவளை மெல்லத் தூக்கி நிற்க வைத்தான். அவள் முகத்தை அப்போதுதான் பார்த்தான். மீண்டும் பெருத்த அதிர்ச்சி! அவள் பத்மினி! 

ரவி அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான். வானின்று இறங்கிய இடி அவன் தலை மீது விழுந்தது போல் ஓர் உணர்வு. பத்மினி உயிரோடு இருக்கிறாளா? ஒரு நிமிஷம் அவனாலேயே நம்ப முடியவில்லை. தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறோமோ என்ற சந்தேகம் அவன் மனத்தில்எழுந்தது. அவளையே உற்றுப் பார்த்தான். சந்தேகமில்லை. அது பத்மினியேதான்! ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் அந்த அழகு முகத்தை அவனால் எப்படி மறக்க முடியும்? அன்று பெண் பார்க்கச் சென்ற போது, சிவப்பு நிற ஜரிகை காஞ்சீபுரம் பட்டுச் சேலையை அணிந்து, தந்தச் சிலை போன்ற அங்கமெல்லாம் தங்க, வைர நகைகளுடன் மின்ன, விண்ணில் தெரிந்த மின்னல் போல காட்சி அளித்த அவள். இன்று சாதாரண நூல் புடவையும், பல இடங்களில் ஒட்டுப் போட்ட ரவிக்கையும் அணிந்திருந்தாலும், அவளுடைய அழகு மட்டும் மங்காமல், அந்த ஏழ்மையான ஆடைகளையும் மீறிக் கலங்கரை விளக்கம் போல் ஒளி விட்டுப் பிரகாசித்தது. 

ரவி அவளைக் கண்டு மௌனமாக மனத்துக்குள் அழுதான், குமுறினான். ‘பத்மினி, உனக்கா இந்த நிலை? என் பத்மினிக்குக் கண் பார்வை போய்விட்டதா? இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் உன்னை இந்தக் கோலத்திலா காண வேண்டும்! பத்மினி, உனக்கு ஏன் இந்த நிலை?’ ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவன் உள்ளத்தில் உதித்து வெளியே வர அவன் நாவின் மீது துடித்தன. வெளியே ஒலிக்க விடாமல் நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பத்மினி மிகவும் பயந்து போயிருந்தாள். 

”யார் நீங்க? அப்பா, அப்பா! அப்பா எங்கே?” என்று கேட்டாள். 

அவளுடைய நிலைமையைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ளும் வரை ரவி தான் யார் என்பதை அப்போது அவளுக்குத் தெரியப்படுத்த விரும்பவில்லை. அவன் யார் என்று தெரிந்தவுடன் அவன் உதவியை ஏற்க அவள் மறுத்தால்? அவள் மனோ நிலை என்ன, அவள் கணவன் எங்கே, எதுவும் தெரியாத நிலையில், ரவிக்கு எல்லாமே புரியாத புதிராக இருந்தது. இறந்து போனதாக நினைத்திருந்த பத்மினியை இப்படி சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் திடீரென நேருக்கு நேராகக் கண்ட அதிர்ச்சியில், அவனே மிகவும் குழம்பிப் போய் இருந்தான். 

“பயப்படாதீங்க. என் பேர் குமார். என் கார்தான் உங்களுக்கு எதிரா வந்தது,” என்று பதில் கூறினான். 

பத்மினி அவன் குரலை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. காரணம்-அவன் குரலை  அவள் கேட்டதே இல்லையே! பெண் பார்க்க வந்த ஒரே நாளன்றுதான் இருவரும் சந்தித்தனர். அன்றைக்கு ரவியின் பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுக்கு பத்மினி ஏதோ பதில் சொன்னாளே தவிர, ரவி எதுவுமே பேசவில்லை. அதன் பிறகு அவர்களுடைய தொடர்பு கடிதங்கள் மூலம்தான் வளர்ந்தது. அவன் குரலை அவள் கேட்கச் சந்தர்ப்பமே ஏற்படவில்லையே. 

”அப்பா எங்கே? அவருக்கு என்ன ஆச்சு?”தடுமாறினாள் அவள். 

“லேசா நெத்தியிலே அடி பட்டிருக்கு. மூர்ச்சை ஆயிட்டாரு.” 

“அய்யோ! இப்ப நான் என்ன பண்ணுவேன்?”

“கவலைப்படாதீங்க. அவரைக் கார் பின் ஸீட்டிலே படுக்க வச்சிருக்கேன். வாங்க, உங்களையும் கார்லே ஏத்திட்டு டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போறேன்.”

பத்மினி சற்றுத் தயங்கினாள். 

“தைரியமா என்னை நம்பி நீங்க வரலாம். வாங்க, முதல்லே உங்க அப்பாவைச் சீக்கிரமா ஒரு டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போகணும்,” என்று ரவி மீண்டும் வற்புறுத்தினான். 

அவன் குரலைக் கேட்டதும் பத்மினியின் மனத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. “ரொம்ப நன்றி,” என்றாள். ரவி அவளைக் கிருஷ்ணசாமியின் பக்கத்தில் உட்கார வைத்தான். பத்மினி அவருடைய தலையை மடியில் எடுத்து வைத்துக் கொண்டாள். கார் நடு ரோடில் நிற்பதைப் பார்த்து அப்போதுதான் தூரத்திலிருந்து சில மனிதர்கள் அதை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள். அவசரம் அவசரமாக ரோடு பக்கத்தில் விழுந்திருந்த பெட்டியையும் துணி மூட்டையையும் எடுத்துக் காரில் தன் பக்கத்தில் முன் ஸீட்டில் போட்டு விட்டு, ரவி காரை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டிச் சென்றான். 

பூந்தமல்லி ஹைரோடில் ரவியினுடைய நெருங்கிய நண்பராகிய டாக்டர் கோபால் என்பவர் ஒரு தனியார் மருத்துவ மனையை நடத்தி வந்தார். ரவி நேரே காரை அங்கே ஓட்டிக் கொண்டு சென்றான். திரையுலகில் ரவிக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் கிடையாது. அவனுடைய ஒரே ஆத்மார்த்தமான. விசுவாசமுள்ள நண்பர்-டாக்டர் கோபால். அவருக்கும் ஏறத்தாழ ரவியினுடைய வயதுதான். வசதி உள்ளவர். திறமையான டாக்டர். அவருக்காக இந்த நர்சிங் ஹோமை அவருடைய தந்தைதான் கட்டிக் கொடுத்திருந்தார். தந்தை காலமாகி விட்டார். டாக்டர் கோபால் திருமணம் ஆகாதவர். வீட்டில் அவருடைய விதவைத் தாய் மட்டும் அவருடன் இருந்தார். 

வெயிட்டிங் ரூமில் பத்மினியை உட்கார வைத்துவிட்டு, கிருஷ்ணசாமியை உள்ளே தூக்கிச் சென்றார்கள். அவருக்குச் சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது. ரவி டாக்டர் கோபாலுடைய ப்ரைவேட் ஆபீஸில் காத்திருந்தான். 

கதவு திறந்தது.டாக்டர் கோபால் உள்ளே வந்தார். 

“என்ன கோபு, அவருக்கு எப்படி இருக்கு?’ என்று ரவி ஆவலுடன் கேட்டான். 

“நெத்தியிலே பட்டது வெறும் சின்னக் காயம்தான். அது ரொம்பச் சாதாரணம்.ஆனா, நான் அவரைச் செக் அப் பண்ணிப் பார்த்ததுலே, அவருக்கு இருதய நோய் ரொம்ப அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்லே இருக்குன்னு தெரியுது. ஆக்ச்சுவலா உன் கார்லே பட்டதனாலே அவருக்கு எந்த விபரீதமும் ஏற்படலே. கீழே விழுந்த அதிர்ச்சியிலே, பயத்திலே அவர் மூர்ச்சை ஆயிருக்காரு. அவருடைய இருதயம் ரொம்ப பலவீனமா இருக்கு. சின்ன அதிர்ச்சியைக் கூடத் தாங்கிக்கிற நிலையிலே அவர் இல்லை. ரொம்ப ஸீரியஸ் கேஸ்,” என்றார் டாக்டர் கோபால். 

“கோபு, என்ன செலவானாலும் பரவாயில்லை. அவரை இங்கேயே அட்மிட் பண்ணி, நீயே அவருக்கு வைத்தியம் பாரு. எவ்வளவு செலவானாலும் அதை நான் ஏத்துக்கறேன்,” என்றான் ரவி. 

டாக்டர் கோபால் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தார். “என்னாலே முடிஞ்சதைச் செய்யறேன். ஏன், இவர் உனக்கு ரொம்ப வேண்டியவரா?’ என்று கேட்டார். 

ரவி ஒரு விதமாகச் விதமாகச் சிரித்தான். “ஒரு வகையிலே அப்படித்தான்னு வச்சுக்கோயேன். கோபு, அவருக்குச் சுய நினைவு திரும்பிட்டதோ?” 

“ஓ யெஸ். இப்பத்தான் கண் விழிச்சுப் பார்த்தாரு. ஒரு ப்ரைவேட் ரூமிலே படுக்க வச்சிருக்கேன். நீ சொன்ன மாதிரி, இங்கே இருக்கிற அறைகளிலேயே பெஸ்ட் ஏ.ஸி. ரூம் அவருக்குக் கொடுத்திருக்கேன்.” 

“தாங்க்ஸ் கோபு, நான் அவர்கிட்டே பேசலாமா?” 

“தாராளமா” கிருஷ்ணசாமியின் அறையைக் காட்டிவிட்டு டாக்டர் கோபால் அவருடைய ஆபீஸுக்குள் சென்று விட்டார். 

ரவி உள்ளே சென்று கட்டில் பக்கத்தில் நின்றான். கிருஷ்ணசாமி கண்களை மூடியபடி படுத்திருந்தார். அண்மையில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்து கண் திறந்து பார்த்தார். ரவியைக் கண்டதும் அவருக்கு வர்ணிக்க முடியாத அதிர்ச்சி. பேச முயன்றார். உதடுகள் துடித்தன. ஆனால், வார்த்தைகள் ஏதும் வரவில்லை. ரவி உடனே அவர் தோள் மீது கை வைத்து அவரை எழுந்திருக்க விடாமல் மீண்டும் படுக்க வைத்தான். 

“எழுந்திருக்காதீங்க. நீங்க ரொம்ப பலவீனமர் இருக்கிறதா டாக்டர் சொல்றாரு. நீங்க கொஞ்சம் கூட அலட்டிக்கக்கூடாது.” 

“நீ…நீ…?”

”ரவியேதான்.” 

”நீ… எப்படி… இங்கே?” 

”என் காருக்கு முன்னாலேதான் நீங்க மூர்ச்சை ஆகி விழுந்துட்டீங்க. நான்தான் உங்களை இங்கே அழைச்சிட்டு வந்தேன்.”

”பத்மினி?” 

”பத்மினிக்கு ஒண்ணும் ஆகலை, பத்திரமா இருக்கா. வெயிட்டிங் ரூமிலே உட்கார்ந்திருக்கா.”

கிருஷ்ணசாமியின் கண்கள் தளும்பின. “அப்போ நான் உன்கிட்டே நடந்துகிட்ட விதத்துக்கு நீ என்னை நடு ரோட்லே சாக விட்டிருந்தாலும் உன்னைக் குறை கூற முடியாது. ஆனாலும் இவ்வளவு சிரமம் எடுத்துட்டு என்னை இங்கே அழைச்சுட்டு வந்திருக்கியே.ரவி, உனக்கு ரொம்பப் பெரிய மனசுப்பா.”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ஆமாம், என்ன நடந்தது? பத்மினிக்கு எப்படிக் கண் பார்வை போச்சு? உங்களுக்கு ஏன் இந்த நிலைமை? இத்தனை நாளா எங்கே இருந்தீங்க?” 

கிருஷ்ணசாமி நீண்ட பெருமூச்சு விட்டார். “அதெல்லாம் ஒரு பெரிய கதை ரவி. பத்மினிகிட்டே பேசினியா?” 

“இல்லை, நான் யாருன்னே அவளுக்கு இன்னும் தெரியாது. நான் அவகிட்டே சொல்லலை. என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க. என்னதான் நடந்தது?”

“அது ரொம்பப் பெரிய கதை ரவி. நின்னுட்டே இருக்கியே. உட்காரு. சொல்றேன்.” 

ரவி ஒரு நாற்காலியைக் கட்டில் பக்கத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். கிருஷ்ணசாமி பலவீனமான குரலில், நடு நடுவே மூச்சு வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார். 

“அப்போ நீ எங்க ஊருக்கு வந்து நான் உன்னை விரட்டி அடிச்சுட்டேன் பாரு? அதுக்கப்புறம் ஆண்டவன் எனக்குச் சோதனை மேல் சோதனையைக் கொடுத்து நன்றாய்த் தண்டிச்சுட்டான்.” 

கிருஷ்ணசாமி தனக்கு நேர்ந்த சோதனைகளையும் கிடைத்த தண்டனையையும் விவரித்தார்: பத்மினியின் கல்யாணம் முடிந்ததும், சேலத்திலே அவளுடைய மாமனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அப்போதே கிருஷ்ணசாமி வியாபாரத்திலே பெரிய நஷ்டம் அடைந்திருந்தார். அதையெல்லாம் சரிக்கட்டலாம் என்று திட்டம் போட்டுப் புதிய வியாபாரம் ஆரம்பித்தார். அதிலே ரொம்ப அகலக் கால் வைத்துவிட்டார். அதைவிடப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. கிராமத்திலே கிருஷ்ணசாமியின் வீடும், ஆறு ஏக்கர் நிலமும்தான் பாக்கி இருந்தது. அந்தச் சமயம் அவர் மனைவிக்கு – பத்மினியின் அம்மாவுக்கு-உடம்பு சரியில்லாமலிருந்தது. நிலைமை ரொம்ப மோசமாகி அவள் இறந்து போய்விட்டாள்.சேலத்துக்குத் தந்தி கொடுத்தார். 

பத்மினி மட்டும் தனியாக வந்தாள். ‘உன் புருஷன், மாமனார், மாமியார் எல்லாரும் எங்கே? ஏன் அவங்க வராம உன்னை மட்டும் தனியா அனுப்பி இருக்காங்க?’ என்று கிருஷ்ணசாமி கேட்டார். 

அப்போதுதான் பத்மினி உண்மையைச் சொனனாள். அவள் புருஷன் பெயருக்குத்தான் ஆணாம். அவர்கள் இரண்டு பேரும் ஒரு நாள் கூடக் கணவன்- மனைவியாக வாழவில்லையாம். பையனின் அப்பாவும்,அம்மாவும் எல்லாம் தெரிந்திருந்தும், கிருஷ்ணசாமியின் முப்பதாயிரம் ரூபாய் வரதட்சிணைக்கு ஆசைப்பட்டு அவர்கள் பத்மினியைத் தங்கள் மகனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். கிருஷ்ணசாமிக்கு பத்மினி ஒரே பெண். அவரிடம் இன்னும் நிறையச் சொத்து இருக்கும்,அதெல்லாம் பத்மினிக்கே வரும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள். 

ஆனால் வியாபாரத்திலே அவர் ரொம்ப நஷ்டம் பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டதும், இனிமேல் இவரிடமிருந்து எதுவும் எதிர்பார்க்க முடியாது என்று தெரிந்து போய்விட்டது. அந்தச் சமயத்திலே பத்மினியின் அம்மா வேறு செத்துப் போய்விட்டதாக அவர் தந்தி கொடுத்து, பத்மினியை வரச் சொல்லியிருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டு, அவர்கள், ‘நீ இனிமே உங்க அப்பா வீட்டிலேயே இருந்துக்கோ, மறுபடியும் இங்கே திரும்பி வராதே,’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். கிருஷ்ணசாமிக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. 

‘இதையெல்லாம் ஏம்மா நீ இத்தனை நாளாய் என்கிட்டே சொல்லலை? முன்னாலேயே சொல்லியிருந்தா உடனே விவாகரத்துச் செய்து உன்னை அங்கேயிருந்து விடுவிச்சு வேறே கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனில்லையா?’ என்று கேட்டார். 

அதற்கு அவள், ‘எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிட்டதுப்பா.என்னை நீங்க ரவிகிட்டேயிருந்து பிரிச்சதுக்கு அப்புறம் நான் எப்படி இருந்தாலும் எனக்கு அதைப் பத்திக் கவலையில்லை. இப்போ அவங்களா என்னைப் போகச் சொன்னாங்க அதனாலே வந்திருக்கேன்,’ என்று ரொம்ப விரக்தியாகச் சொன்னாள். 

கிருஷ்ணசாமிக்கு உலகமே இடிந்து போன மாதிரி இருந்தது.ஊருக்குள்ளே இதெல்லாம் தெரிந்தால் தாங்க முடியாத அவமானமாகப் போய்விடுமே என்று நினைத்து, இந்த விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லவில்லை. பத்மினியைச் சென்னைக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே கோர்ட்டிலே அவளுக்கு விவாகரத்துச் செய்து அந்த அர்த்தமில்லாத கல்யாணத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்து விட்டார். அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி அவருக்கு ரொம்பக் கவலையாக இருந்தது. 

என்ன இருந்தாலும், தமிழ் நாட்டிலே அவர்களைத் தெரிந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அதனால் இங்கே மறுபடியும் பத்மினிக்குக் கல்யாணம் நடத்துவது கஷ்டம் என்று எங்கேயாவது வடக்கே போய்த் தங்கிவிடலாம்; பிறகு ஒரு புதிய வாழ்க்கை தொடங்கலாம் என்று முடிவு செய்தார். பத்மினியைச் சென்னையிலேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் தனியாகக் கிராமத்துக்குப் போய் அங்கே இருந்த வீடு, நிலம் எல்லாவற்றையும் விற்று விட்டார். அங்கே எல்லார்கிட்டேயும் பத்மினி ஒரு கார் விபத்திலே இறந்து விட்டதாக வதந்தியைப் பரப்பி விட்டார். மனசு சரியில்லாததால் ஊரை விட்டே போகிறதாகச் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார். 

அப்புறம் சென்னை வந்து பத்மினியை அழைத்துக் கொண்டு டில்லிக்குப் போனார். வீட்டை விற்றதனால் கிடைத்த பணம் கொஞ்சம் கையிலே இருந்தது. அதை மூலதனமாக வைத்து ஒரு பார்ட்னர் கூடச் சேர்ந்து, ஒரு சிறு வியாபாரம் தொடங்கினார். பத்மினிக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அவள் சம்மதிக்கலை. மறுபடியும் என் கல்யாணத்தைப் பத்திப் பேசினாலோ, இல்லை என்னை வற்புறுத்தினாலோ நான் தற்கொலை பண்ணிக்குவேன்,’ என்று முடிவாகச் சொல்லி விட்டாள். 

அவள் ரவியை மறக்கவே இல்லை. அங்கே ஒரு நர்ஸரி பள்ளிக்கூடத்திலே டீச்சராக வேலை பார்க்க ஆரம்பித்தாள். ஒரு நாள் சாலையைக் கடக்கும் போது ஒரு பஸ் அவள் மேலே மோதி, அந்த விபத்துலே அவளுக்குக் கண் பார்வை போய்விட்டது. 

மகளுக்குப் பார்வை போய்விட்ட துக்கத்தில் கிருஷ்ணசாமி வியாபாரத்தில் கவனம் செலுத்தாமலிருந்த தருணத்தில், அவருடைய பார்ட்னர் மோசடி செய்து விட்டார். ஆக, வியாபாரத்திலேயும் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்து விட்டார். பழக்கமில்லாத ஊர், தெரியாத பாஷை, இனிமேல் டில்லியிலே இருந்துகொண்டு என்ன பண்ணுவது? திரும்பச் சென்னைக்கே பத்மினியையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். கையிலே இருந்த கடைசிக் காசும் டிக்கெட்டுக்குச் சரியாகி விட்டது. 

‘இங்கே எப்படியோ வந்து சேர்ந்தோம். நீ பெரிய சினிமா நட்சத்திரம் ஆயிட்டேங்கற செய்தி அப்பத்தான் எனக்குத் தெரிஞ்சுது. எங்கே பார்த்தாலும் உன் படங்கள், உன்னைப் பத்தி நிறையக் கேள்விப் பட்டேன்,” என்று முடித்தார் கிருஷ்ணசாமி. 

“அப்போதே நீங்கள் என்கிட்டே வந்திருக்கலாமே? நான் உங்களுக்கு உதவி செஞ்சிருக்க மாட்டேனா? நான் என்ன, அவ்வளவு கல் நெஞ்சக்காரனா? நீங்களும் கஷ்டப்பட்டு, பத்மினியையும் இப்படிக் கஷ்டப்பட வச்சுட்டீங்களே? நான் இருக்கும் போது பத்மினிக்கு இந்த நிலைமை ஏன் வரணும்? நீங்க ஏன் என்னைப் பார்க்க வரலை?” என்று ஆவேசமாகக் கேட்டான் ரவி. 

“எந்த முகத்தோட உன்னைப் பார்க்க வருவேன் ரவி? அன்னிக்குத் தாய் தந்தை சொத்து சுகம் எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு பத்மினியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீ ஒத்தைக் கால்லே நின்னப்போ, அடியாட்களைக் காட்டி, அன்னக்காவடின்னு சொல்லி உன்னை அவமானப்படுத்தி விரட்டி அடிச்சேன். இன்னிக்கு நான் அன்னக்காவடி ஆயிட்டேன். நான் எப்படி மறுபடியும் உன்னைப் பார்க்க வருவேன்? அதுவுமில்லாமே, பத்மினி ரொம்ப ரோஷக்காரி, ரொம்பத் தன்மானம் உள்ளவ. நான் உன்னை உதவி கேட்டேன்னு தெரிஞ்சிருந்தா, அவ என்னை மன்னிக்கவே மாட்டா. இதுவரைக்கும் அவளுக்கு உன்னைப் பத்தி எதுவுமே தெரியாது.” 

“நிஜமாகவா?” 

“ஆமாம். நாங்க டில்லிக்குப் போறதுக்கு முன்னாலே நீ எங்கே இருக்கேன்னு எங்களுக்குத் தெரியலை. அப்போ நீ இன்னும் பிரபலம் ஆகலை. நாங்க திரும்பி வர வேளைக்கு நீ பிரபலம் ஆகியிருந்தே. ஆனா பத்மினிக்குக் கண் பார்வை போயிட்டது. அவளாலே படங்கள் பார்க்க முடியாது, பத்திரிகைகள் படிக்க முடியாது. உன்னைப் பத்தி அவளுக்கு எதுவுமே தெரியாது. அப்படியே யாராவது நடிகர் ரவிகுமாரைப் பத்தி அவகிட்டே ஏதாவது பேசினாலும், அது நீதான்னு அவளுக்குத் தெரியாது. நான் வேணும்னே அவளுக்கு இதெல்லாம் சொல்லலை. ஏற்கனவே நொந்து போயிருக்காள். மேலும் அவளை வேதனைப்படுத்த வேண்டாம்னு நினைச்சு நான் இதையெல்லாம் அவகிட்டேயிருந்து மறைச்சு வைச்சுட்டேன். அதுவும் ஒருவகையிலே நல்லதுக்குத்தான். நீங்களும் ரொம்ப இளைச்சுப் போயிட்டீங்க.” 

“எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டேன். எங்கே எந்த வேலை கிடைச்சாலும் செய்தேன். ஆனா போகப் போக என் உடல் நிலை ரொம்ப மோசமாப் போச்சு. இருதய நோய் ஏற்பட்டு, ரொம்ப முத்திப் போச்சு. என்னாலே வேலை செய்ய முடியலை. வேளச்சேரியிலே ஒரு வீட்டிலே ஒரு சின்ன போர்ஷன்லே தங்கி இருந்தோம். ஒரே ரூம்தான். அதுக்கே என்னாலே வாடகை கட்ட முடியலை. வீட்டுச் சொந்தக்காரர் இன்னிக்கு எங்களை வீட்டை விட்டு வெளியேத்திட்டார். எங்கே போறது, என்ன பண்றதுன்னு தெரியாம குழப்பத்தோட நடந்து போயிட்டிருந்தோம். அப்போ தான் உன் கார்லே மோதிக் கீழே விழுந்திட்டேன்.”

ரவி அவருடைய கதையைக் கேட்டு நெஞ்சு உருகினான். 

“சார், இன்றைலேயிருந்து உங்க கஷ்டமெல்லாம் தீர்ந்து போயிட்டுதுன்னு நினைச்சுக்கங்க. இனிமேல் உங்களுக்கும் பத்மினிக்கும் எந்தக் கஷ்டமும் வராமப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு.” 

கிருஷ்ணசாமி வேதனை மிகுந்த பார்வையோடு ரவியை நோக்கினார். ”என்னைப் பத்தி நான் கவலைப்படலை ரவி. என் உடல் நிலை ரொம்ப மோசமா இருக்குன்னு எனக்குத் தெரியும். நான் இன்னும் ரொம்ப நாள் உயிர் பிழைக்க மாட்டேன். என் கவலையெல்லாம் பத்மினியைப் பத்தித்தான். நான் போனதுக்கு அப்புறம், என் பத்மினியோட கதி என்ன? அவளுக்குக் கண் பார்வையும் இல்லே. அவ தன்னந்தனியா எப்படி வாழப் போறாளோ, என்ன பண்ணப் போறாளோ! அவ எதிர்காலத்தை நினைச்சா ரொம்பப் பயமா இருக்கு ரவி. என் குழந்தை எப்படியெல்லாம் தவிக்கப் போறாளோன்னு நினைச்சுப் பார்க்கும்போது, என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்குப்பா!” என்று கூறிவிட்டுக் கிருஷ்ணசாமி துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். 

“மிஸ்டர் கிருஷ்ணசாமி, ப்ளீஸ்.. அனாவசியமா வருத்தப்படாதீங்க. நான் சொல்றதைக் கேளுங்க. பத்மினியைப் பத்தி உங்களுக்கு இனி கவலையே வேண்டாம். எந்த பயமும் வேண்டாம். அவளுக்காக முழுப் பொறுப்பையும் நான் ஏத்துக்கறேன். அவளுக்கு நான் வாழ்வு கொடுக்கறேன். பத்மினியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.”

கிருஷ்ணசாமி தனது காதில் ஒலித்த வார்த்தைகளை நம்ப முடியாதவர் போல் ரவியைப் பார்த்தார். “அது எப்படியப்பா நடக்க முடியும்? உனக்கு ஏற்கெனவேயாணம் ஆகியிருக்கே?” என்று வினவினார். 

”அதைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க. அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். என் மனைவிக்கு அநியாயம் செய்ய மாட்டேன். அதே சமயத்திலே பத்மினியை அனாதையா, நிராதரவா தவிக்க விடவும் மாட்டேன். என் மனைவிகிட்டே எல்லாத்தையும் விளக்கிச் சொல்லி, அவ சம்மதத்தோடவே நான் பத்மினியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். இந்தியாவிலே இருக்கிற பெரிய டாக்டர்களை வரவழைச்சு அவளுக்கு மறுபடியும் கண் பார்வை திரும்பும்படி செய்யறேன். ஒரு வேளை அது நடக்கலைன்னாலும், பத்மினிக்குப் பார்வை இல்லைங்கிறதனாலே அவளை நான் நிராகரிச்சிட மாட்டேன். பத்மினியைச் சந்தோஷமா வாழ வைக்கணும். இனிமே அதுதான் என் லட்சியம். இது உறுதி. யாருக்காகவும் நான் இந்த லட்சியத்தை விட்டுக் கொடுக்கப் போறதில்லை,” என்று ரவி ஆணித்தரமாக ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக உச்சரித்தான். 

 கிருஷ்ணசாமி ரவியின் கரங்களைப் பற்றிக் கொண்டு தனது கண்களில் ஒற்றிக் கொண்டார். 

“ரவி, நீ மனுஷன் இல்லேப்பா -தெய்வம்! தெய்வத்தை உன் ரூபத்திலே இப்போ பார்க்கறேன். பத்மினி பண்ணின புண்ணியம், இன்னிக்கு அந்த ஆண்டவனே உன்னை இங்கே அனுப்பியிருக்கான். இல்லை, இல்லை, ஆண்டவனே உன் வடிவத்திலே வந்து என் முன்னாலே நிக்கிறான்! இப்போ என் நெஞ்சிலேயிருந்து சுமக்க முடியாத பாரம் இறங்கின மாதிரி இருக்கு. இனிமேல் நான் நிம்மதியாய்க் கண் மூடிடறேன்,” என்றார் கிருஷ்ணசாமி கண் கலங்க. 

”அப்படியெல்லாம் பேசாதீங்க. நீங்க ரொம்ப நேரம் பேசிட்டீங்க. ரெஸ்ட் எடுத்துக்குங்க. பத்மினியை இப்போதைக்கு டாக்டர் கோபால் வீட்டிலேதான் தங்க வைக்கிறேன். அவர் என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்ட். அவர் வீட்டிலே அவருடைய அம்மா இருக்காங்க. அவுங்க பத்மினியை ரொம்ப நல்லா கவனிச்சுக்குவாங்க. இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். நான் வேறே ஏற்பாடு பண்ற வரைக்கும். நீங்க ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிற வரைக்கும், அவ அங்கேயே இருக்கட்டும்.ஆ! ஒரு முக்கியமான விஷயம். தற்சமயம் நீங்க பத்மினிகிட்டே என்னைப் பத்தி எதுவுமே சொல்ல வேண்டாம். எனக்குக் கல்யாணம் ஆகியிருக்கிற விஷயம், முக்கியமா அவளுக்கு இப்போ தெரிய வேண்டாம். அவளுக்குத் திடீர்னு பல அதிர்ச்சிகளை ஒரே சமயத்திலே நான் கொடுக்க விரும்பலை. டாக்டர் கோபால்தான் எல்லா உதவியும் செய்கிறாருன்னு சொல்லி வையுங்க. சமயம் வரும் போது மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு எல்லாத்தையும் தெரியப்படுத்திடலாம்” என்று எச்சரிக்கை செய்தான் ரவி. 

“அப்படியே ஆகட்டும்பா.” 

“நான் வர்றேன். எதைப் பத்தியும் கவலைப்படாம நிம்மதியா ரெஸ்ட் எடுத்துக்குங்க. எல்லாம் சரியாப் போயிடும்.” 

– தொடரும்…

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *