ஒருத்திக்கே சொந்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 8,113 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

சூரக்கோட்டைக்குப் போவதற்கு பஸ் பிடிப்பதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோது, ரவியின் பழைய சிநேகிதன், பக்கத்து வீட்டுப் பையன் முரளி அவனைப் பின் தொடர்ந்து அங்கே வந்தான். 

“ரவி!”

“முரளி!”

“ரவி, நடந்ததெல்லாம் எனக்குத் தெரியும். எல்லாத்தையும் கேட்டுட்டுத்தான் இருந்தேன்.வாடா, நீ பஸ்லே போக வேண்டாம். என் மோட்டார் சைக்கிள்ளே நான் உன்னைச் சூரக்கோட்டைக்கு அழைச்சிட்டுப் போறேன்.” 

“தேங்க்ஸ்டா, முரளி!” 

இருவரும் மோட்டார் சைக்கிளில் சூரக்கோட்டைக்கு விரைந்தார்கள். அங்கே சேர்ந்ததும் பத்மினியின் வீட்டுக்கு வெளியே பெரிய கூட்டம் இருப்பதைக் கண்டார்கள். எங்கே பார்த்தாலும் அலங்கார மாவிலைத் தோரணங்கள். மேளதாள வாத்தியங்கள். ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. வாசலில் பத்மினியின் மாமா நின்று கொண்டிருந்தார். ரவியைக் கண்டதும் திடுக்கிட்டார். ஏதோ பேயைக் கண்டது போல் அவர் முகம் வெளுத்து விட்டது. ரவியை உள்ளே போகாமல் வழி மறித்து நின்றார். ரவிக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 

”என்னை உங்களுக்குத் தெரியலையா? நான்தான் ரவி!”

”நன்றாகத் தெரிகிறது. இங்கே இப்போ எதுக்காக வந்தே? மரியாதையாப் போயிடு!” 

ஒரு வருஷத்திற்கு முன்னால் ரவி அங்கே பெண் பார்க்க வந்தபோது. ‘மாப்பிள்ளே! வாங்க, வாங்க!’ என்று உபசரித்தவர்களில் இந்த மாமாவும் ஒருவர். இப்பொழுது எவ்வளவு மாற்றம்! 

”சார், ப்ளீஸ், நான் பத்மினியோட அப்பாவை ஒரு நிமிஷம் பார்த்துப் பேசணும்,” என்று ரவி பணிவோடு கேட்டான். 

“நீ இங்கே யாரையும் பார்க்க வேண்டியதில்லை. பேசாமப் போயிடு! கல்யாணத்திலே கலாட்டா பண்ணலாம்னு வந்திருக்கியா?” என்று ஆத்திரத்தோடு கேட்டார் பத்மினியின் மாமா. 

ரவிக்குத் தலை சுற்றியது. அவன் கண்கள் இருட்டி விட்டன. அவன் முகம் வெளுத்தது. நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. 

“கல்யாணமா! யாருக்கு?” 

அவனுக்கு இந்தக் கேள்வியைக் கேட்பதற்குக் குரலே சரியாக வெளிவரவில்லை. பத்மினியின் மாமா ரவியை முறைத்துப் பார்த்தார். 

“என்னடா ஒண்ணுமே தெரியாத மாதிரி யாருக்குக் கல்யாணம்னு கேக்கறே? ஏன், உன்னை விட்டால் எங்க பத்மினிக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்க மாட்டான்னு நினைச்சியா?” 

ரவிக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. அவனால் ஒன்றும் பேச முடியவில்லை. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவனைப் பார்த்துக் கேலியாகப் பேசி நகைக்க ஆரம்பித்தார்கள். நண்பன் இப்படி அவமானப்படுவதை முரளியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 

“ரவி,வா.இந்த இடத்தை விட்டுப் போயிடலாம் வா!” என்று பலவந்தமாக ரவியை அங்கிருந்து இழுத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிள் மீது உட்கார வைத்து அழைத்துக் கொண்டு போய் விட்டான். 

சற்றுத் தூரம் போனதும் ஒரு மரத்தின் நிழலில் உட்கார வைத்தான். மெட்ராஸை விட்டு நேற்று இரவு ரயிலில் புறப்பட்டு வந்ததிலிருந்து ரவி இதுவரை ஒரு சொட்டுத் தண்ணீர் கூட உட்கொள்ளவில்லை.கொளுத்தும் வெய்யிலில் சூரக்கோட்டைக்குப் பறந்தான். ஆனால் வெய்யிலின் கொடுமை, பசி, தாகம், களைப்பு எதுவுமே அவனுக்கு உறைக்கவில்லை. சித்தப் பிரமை பிடித்தவன் போல் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். 

“முரளி, அவர் சொன்னதைக் கேட்டியா? பத்மினிக்குக் கல்யாணமாம்! டேய், அவளுக்காக அப்பா, அம்மா, வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு வந்துட்டேண்டா! அவ இருந்தா போதும், உலகத்திலே எனக்கு வேறே எதுவுமே தேவையில்லை, அவதான் என் உலகம்னு நினைச்சிட்டு வந்தேண்டா! ஆனா அவ? எவ்வளவு சீக்கிரம் என்னை மறந்துட்டா பார்த்தியா? அப்படின்னா, அவ எனக்கு எழுதின கடிதங்கள்? எல்லாமே பொய்தானா? நான்தான் அவளுடைய தெய்வம், நான் இல்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூடப் பார்க்க முடியாதுன்னு எழுதியிருந்தாளே! எல்லாமே பொய்தானா? நான் ஒரு மடையன்! என்னை முட்டாள் ஆக்கிட்டாளே!” ரவி புலம்பிக் கொண்டே இருந்தான். 

முரளி ஒரு முடிவுக்கு வந்தான். “ரவி, நீ இங்கேயே இரு. மறுபடியும் நீ அங்கே போய் அவமானப் பட வேண்டாம். நான் போய் என்னதான் நடந்ததுன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்றேன். நான் வர வரைக்கும் நீ இங்கேயே இரு.’ முரளி மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றான். 

ரவி இருந்த இடத்திலேயே இடிந்து போன மாதிரி மரத்தடியில் கிடந்தான். சில மணி நேரங்களுக்குள் அவன் கனவுக் கோட்டைகள் எல்லாம் தூள் தூளாகி விட்டதை அவனால் இன்னும் பூரணமாக ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. 

‘பத்மினி …உன் அழியாத காதல் இதுதானா? நான் உனது இதயக் கோவிலில் வீற்றிருக்கும் தெய்வம் என்று சொன்னாயே! அந்தத் தெய்வத்தைத் தூக்கியெறிந்து விட்டு இவ்வளவு எளிதில் ஒரு புதிய தெய்வத்தை அதே இடத்தில் அமர்த்திவிட்டாயே! நீ எனக்கே சொந்தம் என்று நம்பி இருந்தேனே! இவ்வளவு சுலபமாக இன்னொருவனுக்குச் சொந்தமாகச் சம்மதித்து விட்டாயே! பத்மினி…பத்மினி. பத்மினி…’ 

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. முரளி திரும்பி வந்தான். 

“முரளி,என்ன ஆச்சு? ஏதாவது தெரிஞ்சுதா?” 

“ஆமாம்டா. அங்கே ரெண்டு மூணு பேர்கிட்ட பேச்சுக் கொடுத்துச் சில விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் பத்மினியோட வேலைக்காரி நான் உன்னுடைய சிநேகிதன்னு தெரிஞ்சதும் எல்லாத்தையும் விவரமா எங்கிட்டே சொன்னாள்..” முரளி தான் சேகரித்த விவரத்தைத் தொடர்ந்து கொட்டினான்: 

ரவியின் தகப்பனார் ஒரு லட்சம் ரூபாய் வரதட்சிணையாகக் கேட்டது. அதைக் கொடுக்க பத்மினியின் தகப்பனார் சம்மதித்தது இரண்டும் உண்மைதான். பெண் பார்த்துவிட்டு ரவி காலேஜுக்குத் திரும்பிப் போன ஒரு மாதத்துக்குள்ளேயே பத்மினியின் தகப்பனாருக்கு வியாபாரத்திலே பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால் உடனடியாய் அவராலே அந்த ஒரு லட்சம் வரதட்சிணை கொடுக்க முடியாது என்று கிருஷ்ணசாமிக்குத் தெரிந்து போய்விட்டது. ஆனால் அதை ரவியின் தகப்பனார் ராஜகோபாலனிடம் சொன்னால் அவர் இந்தச் சம்பந்தத்தை உடனே நிராகரித்து விடுவார் என்று பயந்து, கிருஷ்ணசாமி அவர்கிட்டே எதுவுமே சொல்லவில்லை. 

ரவிக்கும் பத்மினிக்கும் இடையிலே ஓர் ஆசையை வளர்த்து விட்டுவிட்டால், பிறகு ரவியே, ‘வரதட்சிணை இல்லைன்னாலும் பரவாயில்லை, பத்மினியைத்தான் கட்டிக்குவேன்’ என்று தன் அப்பா கிட்டே அடித்துப் பேசுவான் என்று எதிர்பார்த்து கிருஷ்ணசாமி ஒரு திட்டம் போட்டார். அதன்படி முதலில் பத்மினியை ரவிக்குக் கடிதம் எழுதச் சொல்லித் தூண்டி விட்டவரே அவர்தான்! அவர் எதிர்பார்த்தபடியே ரவிக்கு பத்மினி மேலே அளவு கடந்த காதல் வளர்ந்து விட்டது. 

அந்தத் தைரியத்திலே கிருஷ்ணசாமி இரண்டு மாதங்களுக்கு முன்னாலேதான் ரவியின் அப்பாக்கிட்டே போய், முன்னாலே பேசிய தொகையைக் கொடுக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தை ராஜகோபாலன் ரவியிடம் சொல்வார், ரவி உடனே பத்மினியைத்தான் மணந்து கொள்வேன் என்று பிடிவாதமாய் அடித்துச் சொல்லுவான் என்று கிருஷ்ணசாமி கணக்குப் போட்டிருந்தார். ஆனால் ரவியின் அப்பா அவனை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் அவனிடம் எதுவுமே சொல்லாமல் அவராகவே முடிவு பண்ணி இந்தச் சம்பந்தமே வேண்டாம் என்று கத்தரித்துக் கொள்வார் என்று அவர் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அது மட்டுமல்ல. கிருஷ்ணசாமியை ராஜகோபாலன் ரொம்பக் கேவலமாய் பேசி கன்னா பின்னாவென்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி ரொம்ப அவமானப் படுத்திவிட்டார். 

கிருஷ்ணசாமியும் இந்த ஊரிலே பெரிய மனிதர், அவர் அவமானம் தாங்காமல் ரோஷத்திலே ரவியின் அப்பாக்கிட்டே சவால் விட்டுவிட்டு வந்திருக்கிறார், ‘உன் பையன் இல்லேன்னா எனக்கு வேறே மாப்பிள்ளை கிடைக்க மாட்டானா? இன்னொரு மாப்பிள்ளையைப் பார்த்து ஏற்கனவே நிச்சயம் பண்ணின அதே முகூர்த்தத்திலே என் பொண்ணு கல்யாணத்தை நடத்திக் காட்டறேனா இல்லையா பார்,’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். 

உடனே வேறே ஒரு மாப்பிள்ளையை அவசரமாகப் பார்த்து முடிவு பண்ணினார். பத்மினிக்கு இதிலே கொஞ்சம் கூட இஷ்டமில்லை. அவள் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.ஆனால் அவள் அப்பா பிடிவாதமாய் இருந்தார். ரவிக்கு எப்படியாவது இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தி, தன்னை ரகசியமாய் அழைத்துக் கொண்டு போகச் சொல்லிக் கடிதம் எழுத முயற்சி பண்ணினாள் பத்மினி. ஆனால் அவளை ஒரு கைதி மாதிரிச் சிறைபண்ணிவிட்டார் அவள் அப்பா. அவளை ஓர் அறைக்குள்ளே பூட்டிக் கடுங்காவலில் வைத்துவிட்டார். அந்த அறைக்குள்ளே ஒரு துண்டுக் காகிதம் போகவும் விடவில்லை. அங்கே இருந்து ஒரு துண்டுக் காகிதம் வெளியே வரவும் விடவில்லை. அவள் எழுதிய கடிதங்கள் எதுவும் தபாலிலே போடக்கூடாது என்று வீட்டிலே எல்லாருக்கும் ஆர்டர் போட்டார். எவ்வளவோ முயற்சி செய்தும், அவள் எழுதிய கடிதங்கள் எல்லாம் கிருஷ்ணசாமியிடமே கொடுக்கப்பட்டது. அவர் எல்லாவற்றையுமே கிழித்துப் போட்டு விட்டார். அதே மாதிரி, ரவி கடைசியாய் எழுதின கடிதங்கள்கூட அவள் கைக்குப் போய்ச் சேரவில்லை. அவள் ஒரு ஜெயில் கைதி மாதிரி அங்கே வைக்கப்பட்டிருந்தாள். 

பத்மினி மேலே எந்தத் தப்பும் இல்லை. பாவம், அவள் என்ன பண்ண முடியும்? தினமும் ரவியின் பேரைச் சொல்லிச் சொல்லி அழுதுகொண்டே இருக்கிறாள். வேலைக்காரி சொன்னாள். அவள் ஒருமுறை தற்கொலைகூடப் பண்ணிக்கொள்ள முயற்சி செய்திருக்கிறாள். அதிலிருந்து அவள் ரூமிலே இருபத்து நாலு மணி நேரமும், இரண்டு பெண்கள் அவளுக்குக் காவலாக இருக்கிறார்கள். பாவம் பத்மினி, என்ன தான் பண்ணுவாள்! 

முரளி உருக்கத்துடன் நடந்ததையெல்லாம் சொல்லி முடித்ததும் ரவி ஆவேசத்தோடு எழுந்து நின்றான். 

“ரவி! எங்கே போறே?” தடுத்து நிறுத்திப் பதட்டத்துடன் முரளி கேட்டான். 

”முரளி! கையால் ஆகாதவன் மாதிரி நான் இங்கே உட்கார்ந்திருக்கப் போவதில்லை. நான் இவ்வளவு நேரமாய் பத்மினியே இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டாள்னு நினைச்சேன். அதனாலேதான் பேசாம இருந்தேன். ஆனா அவளுக்கு இஷ்டமில்லேன்னு தெரிஞ்சபிறகு, அவ மனசுலே என்னையே நினைச்சுட்டு இருக்காள்னு தெரிஞ்ச பிறகு, எல்லாருமாச் சேர்ந்து அவளைக் கட்டாயப்படுத்தறாங்கன்னு தெரிஞ்ச பிறகு, நான் அதைப் பார்த்துட்டுக் கோழை மாதிரி சும்மா இருக்க போறதில்லை. நான் போய் எப்படியாவது அவளைத் தப்ப வைச்சு அங்கே இருந்து இழுத்துட்டுப் போயிடறேன். மெட்ராஸ்லே அவளை உடனே கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்கு வயசு இருபத்தொண்ணு ஆச்சு! அவளுக்கும் வயசு பதினெட்டு. சட்டப்படி எங்களை யாரும் தடுக்க முடியாது!” என்று ஆவேசமாகக் கிளம்பினான். 

“ரவி,நில்லு,பைத்தியம் மாதிரி உளறாதே. நீ இங்கே வந்திருக்கிறது அவர்களுக்குத் தெரிஞ்சு போச்சு! பத்மினியோட மாமா போய்ச் சொல்லிட்டார். கிருஷ்ணசாமி உடனே வீட்டைச் சுத்தி பலத்த காவல் போட்டிருக்கார். கையிலே தடிகளோடு வீட்டைச் சுத்தி ஏராளமாய் ஆட்கள் நிக்கறாங்க. உன்னை பத்மினிகிட்டே நெருங்க விட மாட்டாங்க. அங்கே போனா உன் உயிருக்கே ஆபத்து. சொன்னா கேளு, ரவி, ப்ளீஸ். அங்கே போகாதே!” என்று முரளி மன்றாடினான். 

“என்னைத் தடுக்காதே முரளி! இங்கேயே கோழை மாதிரி சும்மா உட்கார்ந்துட்டு அழறதைவிட, பத்மினியை அடையற முயற்சியிலேயாவது என் உயிரை விடறேன். என்னைப் போக விடு”, என்று ரவி அவனுடன் போராடிக் கொண்டிருந்த போதே- 

தோட்டத்துக்குள் ஒரு வில்வண்டி வந்து நின்றது. வண்டியைவிட்டு கிருஷ்ணசுவாமி இறங்கினார். அவருடன் நான்கு ஆட்களும் இருந்தனர். அவர்கள் நால்வரும் கையில் தடிகளோடு அவருக்குப் பின்னால் தயாராக நின்றனர். 

கிருஷ்ணசாமி, ”ரவி! வீணா வம்புக்கு வராதே! மரியாதையாத் திரும்பிப் போயிடு!” என்று எச்சரிக்கை செய்தார். 

”சார்! நான் சொல்றதைத் தயவு செய்து கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க. எங்க அப்பா என்ன சொன்னாரோ, என்ன செய்தாரோ, எனக்கு எதுவுமே தெரியாது. நான் இன்னிக்குத்தான் காலையிலே மெட்ராஸ்லேயிருந்து ரயில்லே வந்து சேர்ந்தேன். இன்னிக்குத்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சுது. எங்க அப்பாகூடச் சண்டை போட்டுக்கொண்டு, என்ன ஆனாலும் பத்மினியைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டு உடனே இங்கே ஓடோடி வந்தேன்..” 

“நிறுத்து.” கிருஷ்ணசாமி அவனை மேலும் பேசவிடாமல் குறுக்கிட்டார். “இத பாரு, நான் என் பொண்ணுக்கு வேறே மாப்பிள்ளை பார்த்தாச்சு. இன்னிக்கே கல்யாணம். முகூர்த்த வேளைக்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. வீணாய்க் கலாட்டா பண்ணாமப் போயிடு,” என்றார். 

“இந்தக் கல்யாணத்திலே பத்மினிக்கு இஷ்டமா?” என்று கேட்டான் ரவி. 

“அவ இஷ்டத்தைப் பத்தி எனக்குக் கவலையில்லை. நான் முடிவு பண்ணியாச்சு. இந்தக் கல்யாணம் நடந்தே தீரும். யாரையும் அதைத் தடுக்க விடமாட்டேன்,” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் கிருஷ்ணசாமி. 

“சார். உங்க பொண்ணு சந்தோஷத்தைப் பத்தி உங்களுக்குக் கொஞ்சம் கூடக் கவலை இல்லையா? அவ என்னைத்தான் மனசார விரும்பறா. நானும் அவளுக்காக வீட்டை விட்டு, அப்பா, அம்மாவையும் உதறித் தள்ளிவிட்டு, எங்க அப்பா சொத்துலே ஒரு சல்லிக் காசு கூட வேண்டாமனு சொல்லிட்டு வந்திருக்கேன்,” என்றான் ரவி. 

“ஓஹோ! அப்படியா? சொத்திலே சல்லிக் காசு கூடக் கிடையாதுன்னு சொல்லிட்டு உன்னை வீட்டை விட்டே விரட்டிட்டாரா உங்க அப்பா? போடா, போடா பைத்தியமே! ஏண்டா மடையா, உனக்கு அஞ்சு லட்ச ரூபாய் சொத்து வரும்னு நினைச்சுத்தானேடா என் பொண்ணை முதலிலே உனக்குத் தறேன்னு ஒத்துக்கிட்டேன் ! வீடு, வாசல், உத்தியோகம், எதுவுமே இல்லாம இப்போ அன்னக்காவடி மாதிரி வந்து என் பொண்ணைக் கேக்க என்ன தைரியம்டா உனக்கு?” என்றார் கிருஷ்ணசாமி பரிகாசமாக. 

“எந்த மூஞ்சியை வச்சுட்டு என் பொண்ணை இப்போ கேக்க வந்திருக்கே? உன்கிட்டே இப்போ என்ன இருக்குன்னு அவளை உனக்குக் கொடுப்பேன்? போடா போ-ஃபூல்!” 

ரவியின் ஆவேசம் எல்லாம் மறைந்து, கொதித்தெழுந்த உள்ளம் பனிக்கட்டி போல் மரத்துப் போய்விட்டது. சிலை போல் ஆகி விட்டான். தன்மான உணர்ச்சி அவன் முதுகெலும்பை நிமிர்த்தியது. அவன் கண்கள் நெருப்பைக் கக்கின. சிவக்கச் சிவக்கக் காய்ச்சி எடுத்த இரும்புபோல் கேட்பவர் காதைச் சுட்டெரிக்கும் வகையில் அவன் குரல் ஒலித்தது. 

“மிஸ்டர் கிருஷ்ணசாமி, வாயை அடக்கிப் பேசுங்க! நான் உயிருக்கு உயிரா நேசிச்ச பத்மினியோட தகப்பனார் நீங்க என்கிற ஒரே காரணத்தினாலே உங்களை நான் இப்போ சும்மா விடறேன். வேறே யாராவது என்னை இப்படி அவமானப்படுத்திப் பேசி இருந்தா. நடக்கறதே வேறையா இருந்திருக்கும்.” 

“என்னடா செய்வே?” 

“என்ன செய்வேனா? அதை இப்பவே செஞ்சி காட்டியிருப்பேன்! ஆனா வேண்டாம்னு விட்டுட்டுப் போறேன். உங்க உருட்டல் மிரட்டலைக் கேட்டோ உங்க பின்னாலே நிக்கிற தடியர்களைப் பார்த்தோ நான் பயந்து இந்த இடத்தை விட்டுப் போறேன்னு நினைக்காதீங்க. நான் உயிருக்குப் பயந்த கோழை இல்லை. மறுபடியும் சொல்றேன், நீங்க பத்மினியோட அப்பாங்கற ஒரே காரணத்தினாலே தான் இன்னும் உங்களுக்கு மரியாதை கொடுத்துப் பேசறேன். இந்த நாளை என் வாழ்க்கை பூராவும் நான் மறக்க மாட்டேன். நீங்களும் மறக்க மாட்டீங்க. முரளி. வா போகலாம்!” 

ரவியின் பார்வை வேல் முனை மாதிரி குத்தியது. அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் கிருஷ்ணசாமி அசந்து போய்த் தனது கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். 

திரும்பிப் பார்க்காமல், ஓர் எரிமலையைத் தனது நெஞ்சத்தில் சுமந்து கொண்டு, ரவி சூரக்கோட்டையை விட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டான். தஞ்சாவூர் போய்ச் சேர்ந்ததும் முரளியிடம் விடை பெற்றுக் கொண்டான். 

அவன் மீண்டும் தகப்பனார் வீட்டு வாசற்படி மிதிக்கவில்லை. ஊரை விட்டே போய்விட்டான். 

– தொடரும்…

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *