ஒருத்திக்கே சொந்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 11,998 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

 இரண்டு மாதங்கள் நகர்ந்தன. 

திடீரென்று ஒரு நாள் ரவிக்குக் காலேஜ் ஹாஸ்டலுக்கு ஒரு கடிதம் வந்தது. அட்டையில் விலாசம் எழுதியிருந்ததைப் பார்த்தான், அறிமுகமில்லாத கையெழுத்தாக இருந்தது. எழுதியது யாராக இருக்கும்? அப்பாவுடைய கையெழுத்துமில்லை, அம்மாவுடைய கையெழுத்துமில்லை, வேறு யார் அவனுக்குக் கடிதம் எழுதப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டே கடிதத்தைப் பிரித்தான். என்ன ஆச்சரியம்! பத்மினிதான் அந்தக் கடிதத்தை எழுதி இருந்தாள். 

‘எனது இதயக் கோவிலில் வீற்றிருக்கும் தெய்வமே, 

இந்தக் கடிதத்தை எழுத எப்படித் துணிவு வந்ததென்று எனக்கே புரியவில்லை.ஒரே ஒரு முறை நீங்கள் என்னைப் பெண் பார்க்க வந்த அன்றுதான், உங்களைப் பார்த்தேன். என்னை உங்களுக்குப் பிடிக்குமோ இல்லையோ. என்ன முடிவு சொல்வீர்களோ என்று பயந்து கொண்டே இருந்தேன். நீங்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்து விட்டீர்கள் என்ற செய்தி கிடைத்ததும் நான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனேன். உண்மையிலேயே உங்களைப் போன்ற கணவரை அடைவதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று என் உள்ளம் துடிக்கிறது. நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது தவறு என்று நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள். 

இப்படிக்கு,
பத்மினி.’ 

இதைப் படித்ததும் ரவிக்கு ஆட வேண்டும், பாட வேண்டும். என்னென்னவோ செய்ய வேண்டும் என்றல்லாம் தோன்றியது. பத்மினி அழகு தேவதை மட்டும் அல்ல, படித்தவள், பட்டிக்காடு மாதிரி இல்லாமல் வரப்போகும் கணவனுக்குத் தானே கடிதம் எழுதும் அளவுக்கு முற்போக்கு சுபாவம் உடையவள்! தன்னைப் போன்ற ஒரு மாடர்ன் இளைஞனுக்கு இவள் அல்லவா ஏற்ற ஜோடி உடனே பதில் எழுதினாள், அதில் அவன் இதயத்தையே கொட்டிவிட்டான். 

அன்புள்ள பத்மினி, 

உன் கடிதம் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. நீ எனக்குக் கடிதம் எழுதியதில் ஒரு தவறும் இல்லை. நான் உனக்கு வரப்போகும் கணவன்தானே? நம் இருவருக்கும் நமது பெற்றோர்களே திருமணம் நிச்சயித்து விட்ட பிறகு, கடிதம் எழுதுவது எப்படித் தவறாகும்?. 

பத்மினி, நான் உன்னைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்று கேட்டாய். உண்மையைச் சொல்லட்டுமா? நானும் உன்னை ஒரே ஒரு முறைதான் கண்டேன். ஆனால் அன்று முதல், உன் உருவம் என் கண்களை விட்டு அகலவே இல்லை. உன் நினைவு என் நெஞ்சத்தில் பதிந்து, மற்ற எல்லாச் சிந்தனைகளையும் விரட்டிவிட்டது. உறங்கும்போதும், விழித்திருக்கும் போதும், ஒவ்வொரு கணமும் உன் நினைவுதான். 

உன்னை மீண்டும் காண்பதற்கு இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டுமே என்று நினைக்கும்போது, நான் அதுவரை எப்படிப் பொறுத்திருப்பேன் என்று எனக்கே புரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய்த் தோன்றுகிறது. ஆனால், அதன்பிறகு, நம்மை யாராலும் பிரிக்க முடியாது. எனக்கு வரப்போகும் மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டேனோ. அந்தக் கற்பனைகளின் மொத்த வடிவம் நீ. 

உண்மையிலேயே உன்னைப் போல ஒரு பெண் உலகத்தில் இருப்பாள் என்று உன்னைக் காணும் வரை நான் நம்பவில்லை. உன்னை மனைவியாக அடைய நான்தான் கொடுத்து வைத்தவன். விரைவில் உன் பதிலை எதிர்பார்க்கிறேன். அடிக்கடி எனக்குக் கடிதம் எழுது. நானும் எழுதுகிறேன். உன் கடிதங்கள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தால்தான் அடுத்த ஆண்டு வரை என்னால் இங்கே புத்தி பேதலித்துப் போகாமல் இருக்க முடியும். 

எப்போதும் உன் நினைவாகவே இருக்கும். 
ரவி. 

அதன் பிறகு ரவிக்கும் பத்மினிக்கும் இடையே பல கடிதங்கள் பறந்தன. கடிதங்கள் மூலமாகவே இருவருக்கும் இடையே ஆழமான காதல் வளர்ந்தது. மனத்தால் அவர்கள் இருவரும் கணவன் மனைவி ஆகிவிட்டார்கள். இனி திருமணம் என்ற சடங்கு ஒன்றுதான் மீதம் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்பட்டது. 


இறுதிப் பரீட்சைக்கு இன்னும் இரண்டே மாதங்கள் இருக்கும் போது ஒரு சோதனை. 

திடீரென்று பத்மினியிடமிருந்து கடிதங்கள் வருவது நின்று விட்டது. ரவி இரண்டு மூன்று கடிதங்கள் எழுதியும் அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. அதனால் கொஞ்சம் கவலையாக இருந்தாலும் – இறுதிப் பரீட்சைக்கு முன்பாகப் படிப்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருந்ததால் – ரவி அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. பரீட்சை நெருங்க நெருங்க. அந்த மும்முரத்தில் அதைப் பற்றிச் சிந்திக்க அவனுக்கு நேரமும் இருக்கவில்லை. எப்படியும் இன்னும் சில நாட்களில் ஊருக்குச் சென்று-அவளைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே எல்லாவற்றையும் நேரிலேயே பேசிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டான். முக்கியமான விஷயம் ஏதேனும் இருந்தால், அம்மா-அப்பா அதைத் தெரியப்படுத்தி இருக்கமாட்டார்களா? ஒன்றும் ஆகியிருக்காது என்ற தைரியத்தில் இருந்து விட்டான். 

பரீட்சைகள் முடிந்தன. வில்லிலிருந்து பாய்ந்த அம்பு போல ரவி நேரே ஊருக்குப் பறந்து சென்றான். பயணம் முழுவதும் மனத்திற்குள், ‘பத்மினி… பத்மினி பத்மினி என்ற ஒரே சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது. 

வீட்டுக்கு விரைந்தான். அங்கே அவனுக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. ”ரவி, இந்தக் கல்யாணம் நடக்காது. இந்தச் சம்பந்தம் வேண்டாம்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன்!” என்றார் தகப்பனார் ராஜகோபாலன். 

ரவியின் தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது. எண்ணற்ற ஆசைக் கனவுகளை மனத்தில் தேக்கிக் கொண்டு ஓடோடி வந்திருந்த ரவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால், சில நிமிடங்கள் அவனால் பேசவே முடியவில்லை. சமாளித்துக் கொண்டு, “அப்பா! என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலையே! என்ன நடந்தது?” என்று கேட்டான். 

“இன்னும் என்னடா நடக்கணும்? அந்தக் கிருஷ்ணசாமி என்னை ஏமாத்த நினைச்சான். முதல்லே, போன வருஷம் சம்பந்தம் பேசினப்போ, ஒரு லட்ச ரூபாய் வரதட்சணையா தரேன்னு ஒப்புக் கொண்டான். அதனாலேதான் நானும் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன், ரெண்டு மாசத்துக்கு முன்னாலே என் கிட்டே திடீர்னு வந்து, என்னமோ வியாபாரத்திலே பெரிய நஷ்டம் ஏற்பட்டுப் போச்சு; இப்போ தன்னாலே அவ்வளவு வரதட்சணை கொடுக்க முடியாது; இப்போ முப்பதாயிரம் ரூபாய் மட்டும் தறேன்; மீதியைக் கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னாலே முடிஞ்சபோது தறேன்னு சொன்னான். கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவனாவது, பணத்தைத் தறதாவது! எனக்கு அவ்வளவு கூடப் புரியாதா? ஒரு லட்சம் தறேன்னு சொல்லிட்டு, முப்பதாயிரம் கொடுத்துட்டு நழுவிக்கலாம்னு பார்த்தான். நான் ஏமாறுவேனா? இந்தச் சம்பந்தமே வேண்டாம்னு சொல்லிட்டேன். என்ன இருந்தாலும் கொடுத்த வார்த்தையைக் காப்பாத்த முடியாத மனுஷனோடே நமக்கு எதுக்குடா சம்பந்தம்?” 

ரவிக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அவன் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.”இதெல்லாம் ஏம்பா எங்கிட்டே முன்னாலேயே சொல்லலே?” என்று நிதானத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டான். 

“இதென்ன பெரிய விஷயம்னு உன்கிட்டே சொல்றது? அதான் கொஞ்ச நாள்ளே நீயே ஊருக்கு வரப் போறியே, வந்த பிறகு நேரிலே சொல்லலாம்னு இருந்தேன். பரீட்சை நேரத்திலே உன்னை இந்தச் சின்ன விஷயத்துக்காகத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினைச்சேன்,” என்றார் ராஜகோபாலன். 

“சின்ன விஷயமா! இது சின்ன விஷயமா! எவ்வளவு சாதாரணமாச் சொல்லிட்டிங்க அப்பா? கல்யாணம் நடக்கப் போகுதுன்னு எவ்வளவோ சந்தோஷமா ஓடோடி வந்தேன். என் ஆசையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டிங்களே!” என்று என்று குமுறினான் ரவி. 

“என்னடா, என்னென்னமோ உளர்றே? இந்தக் கல்யாணம் நின்னு போனா என்னடா? ராஜாத்தி மாதிரி வேறே ஒரு பொண்ணைப் பார்த்திருக்கேன்! அவங்க ரெண்டு லட்சம் வரதட்சிணையாத் தறேன்னு ஒத்துட்டு இருக்காங்க!” 

“அப்பா.நீங்க இப்படிப் பேசறதைக் கேட்கவே எனக்கு அசிங்கமா இருக்கு. பத்மினியோட அப்பா கிட்டே நீங்க வரதட்சணை கேட்டது எனக்கு மட்டும் அப்பவே தெரிஞ்சிருந்தா. அந்த வரதட்சிணைலே ஒரு பைசா கூட வேண்டாம்னு நானே அவங்க கிட்ட சொல்லியிருப்பேன்.” 

“உளறாதேடா!” என்று கத்தினார் ராஜகோபாலன். 

“நான் ஒண்ணும் உளறலேப்பா! என்னைக் கேக்காமே நீங்க எப்படி இந்தக் கல்யாணத்தை நிறுத்தினீங்க? கல்யாணம் பண்ணிக்கப் போறவன் நான்! என்னை ஒரு வார்த்தை கூடக் கேக்காமே நீங்க எப்படி இந்தச் சம்பந்தமே வேண்டாம்னு சொல்லலாம்?” 

“நான் ஏண்டா உன்னைக் கேக்கணும்? நான் உன் தகப்பன்!” 

“இருக்கலாம்! ஆனா உங்க இஷ்டப்படி எல்லாம் ஆடறதுக்கு நான் ஒண்ணும் தலையாட்டிப் பொம்மை இல்லை. ஆரம்பத்திலே கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன். நீங்களும் அம்மாவும் என்னைப் பலவந்தமா இழுத்துட்டுப் போய், பத்மினியைக் காட்டினீங்க. ஒப்புக் கொண்டேன். இப்போ வேறே ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்க. அது நடக்காது. நான் கல்யாணம் பண்ணிக்கொண்டா, பத்மினியைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்!” 

”ஓகோ! அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டியா? இந்தக் கல்யாணம் நடக்காது, அதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்!’ 

“அப்போ உங்க சம்மதம் இல்லாமலேயே நான் பத்மினியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்!” 

“அவ்வளவு தைரியமாடா உனக்கு? என்னையே எதிர்த்துப் பேசற அளவுக்கு உனக்குத் திமிரு வந்திட்டதா? என் வார்த்தையை மீறி நீ அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாயோ, என் சொத்திலே உனக்கு ஒரு சல்லிக் காசு கூடத் தர மாட்டேன். ஆமாம்!” 

“தர வேண்டாம். உங்க சொத்து யாருக்கு வேணும்? எல்லாத்தையும் வேணும்னா தர்மத்துக்கு எழுதிடுங்க.” 

“அவ்வளவு திமிராடா உனக்கு! உன்னை…” 

ரவி அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பவில்லை.”நான் வரேம்பா”.’ வீட்டை விட்டு வெளியேறத் திரும்பினான். 

”வராதேடா! என்னை மதிக்காமே அந்த வாசப்படியைத் தாண்டிப் போனா, மறுபடியும் இந்த வீட்டுக்குள்ளே வராதே!” 

வாசற்படியில் நின்ற ரவி, திரும்பி ஒரு கணம் தந்தையைப் பார்த்தான்.”சரியப்பா வரமாட்டேன்! நான் போறேன்,” என்று வெளியே புறப்பட்டான். 

“ரவி, நில்லுடா!”. அவ்வளவு நேரமும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த கனல் பறக்கும் வார்த்தைகளை நடுக்கத்தோடு பயந்தவாறே மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்டாள், பதறிப் போய் ஓடி வந்து ரவியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.”ரவி, போகாதேடா!” என்று கதறினாள். கணவர் பக்கம் திரும்பினாள்.”என்னங்க, என்ன இது! நீங்களும் அளவுக்கு மீறிப் போறிங்களே! அவனை இருக்கச் சொல்லுங்க,” என்று கெஞ்சினாள். 

“நீ சும்மா இருடீ! நீ உள்ளே போ.” என்று கத்தினார் ராஜகோபாலன். 

“இவ்வளவு நேரமாய்ச் சும்மாதான் இருந்தேன். இனிமே என்னாலே இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அவனை இருக்கச் சொல்லுங்க.” 

“போகட்டும்டீ ! போகட்டும்! வெளியே போய் நாலு நாள் பட்டினி கிடந்தால் தானாகப் புத்தி வந்து திரும்பி வருவான்!” 

ரவிக்கு ரோஷம் பொங்கி எழுந்தது. “நான் ஏன் பட்டினி கிடக்கணும்? அப்படியே கிடந்தாலும் இந்த வீட்டு வாசப்படியை மறுபடியும் மிதிக்கமாட்டேன். என்னை விடும்மா. என்னைப் போக விடு.” 

ஆண்டாளின் கைகளை உதறித் தள்ளிவிட்டு ரவி வீட்டை விட்டு வெளியே கிளம்பினான். அவனுக்குப் பின்னால் ஆண்டாள் ஓடிப் போய் வழி மறித்து நின்றாள். 

“டேய், எங்கேடா போறே? ஏண்டா, ஒரே வாட்டி நீ பார்த்த பொண்ணு, இன்னிக்கு உங்க அப்பா அம்மாவை விட உனக்கு முக்கியமாய்ப் போயிட்டாளாடா?” என்று உருக்கத்தோடு கண்ணீர் வழிந்தோடக் கேட்டாள். 

”இல்லேம்மா! ஆனா. அப்பாவுக்குத்தான் இப்போ எல்லாத்தையும்விடப் பணம் முக்கியமாப் போயிட்டது. என்னைத் தடுக்காதேம்மா!” என்று மீண்டும் திரும்பினான். 

“ரவி, கண்ணா! நான் சொல்றதைக் கேளுடா. போகாதேடா!” ஆண்டாள் அவனைப் பிடித்துக் கொண்டு நகர விடவில்லை. 

“என்னடீ அவன் கிட்டே கெஞ்சறே? வாடீ உள்ளே!” பலவந்தமாக ராஜகோபாலன் ஆண்டாளைத் தரதரவென்று உள்ளே இழுத்துக் கொண்டு போய் விட்டார். 

”ரவி! ரவி!” என்று ஆண்டாள் அலறினாள். “கண்ணா! போகாதேடா! திரும்பி வாடா!” 

ஒரு முறை கூடத் திரும்பிப் பார்க்காமல் ரவி வீட்டை விட்டுப் போய் விட்டான்.

– தொடரும்…

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *