கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 12,654 
 
 

பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண்ணென்றால் ஆயிரம் வெள்ளி வாங்குவோம், குறைப்பதற்கில்லை என்று மிகவும் கறாராகச் சொல்லியிருந்தார் தரகர் நேற்றிரவு. “நல்ல வேளை சார் நீங்க இன்னைக்கே ஃபோன் பண்ணீங்க, நாளைக்கி ராத்திரியாச்சும் சொன்னாதான் என்னால ஏற்பாடு செய்யவே முடியும்.’

ஒத்திகை

வேறு பெண்ணென்றால் பரவாயில்லையா என்றதுமே சம்மதம் சொல்லிவிட்டேன். பத்து நிமிடத்துக்கு மேல் பேரம் பேசியும் எழுநூறு வெள்ளிக்கு மேல் என்னால் குறைக்கவே முடியவில்லை. அதுவும் அம்மணி வசிப்பிடத்திலிருந்து கிறம்புவதிலிருந்து மீண்டும் திரும்புவது வரை சேர்த்து மூன்று மணிநேரத்துக்கு மட்டும். நேரம் கூடினால், கட்டணமும் கூடுமாம். இன்னொரு விஷயம் என்று தயங்கியபடி என்னைக் காட்டிலும் நாலைந்து வயது மூத்த பெண்மணி என்றார். இந்த ஏற்பாடாவது சாத்தியமானதே என்ற பெருநிம்மதியில், “அது பரவாயில்ல,’ என்று கூறி ஒத்துக் கொண்டேன். எனக்கு வேறு வழியிருக்கவில்லை. பலவழிகளில் முயன்றும் ஒருத்தியும் கிடைக்காத நெருக்கடி.

டாக்ஸியிலிருந்து இறங்கியவாறே சுற்று முற்றும் பார்த்த இளஞ்சிவப்பில் நேர்த்தியான நீளுடை அணிந்த பெண்மணியைக் கவனித்து விட்டேன். என் கைப்பேசியை அழைத்ததுமே தெரிந்துவிட்டது நான் ஏற்பாடு செய்திருந்த பெண் தான் அது என்று. அலைபேசியில் அனுப்பப்பட்டிருந்த புகைப்படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் உருவத்தில் பெரிய வித்தியாசம் தெரிந்தது. அருகில் சென்று கைகுலுக்கி, “ஐம் சுந்தர்,’ என்றபோது உயர்தர வாசனை என் மூக்கில் மோதியது. உள்ளங்கை சொரசொரப்பு குறைந்தது; இருபத்தெட்டு வயதிருக்குமென்றது. “ஹாய், ஐம் மெரிடெஸ்,’ என்றபோது உச்சரிப்பும் முக உடல் அசைவுகளிலும் அனுபவம் தெரிந்தது. முகம் என்னைவிட ஏழெட்டு வயது அதிகமென்றது. உடலமைப்போ சமவயதாகக் காட்டியது.

நேற்றைக்கு, “எனக்கு விருந்துண்ணாவே அலர்ஜி. அதுவும் தெரியாத முகமாக இருந்தா…’ என்று பக்கத்து வீட்டு அக்கா கண்டிப்பாகச் சொல்லி விட்டார். எப்படியாவது அவரை ஒத்துக்கொள்ள வைப்பதற்கு அவர்கள் வீட்டு வாசலில் நின்றவாறே செலவழித்த முக்கால் மணி நேரம் வீண்.
அக்காவின் பாட்டி வெளியே வந்து, “என்ன தம்பி, என்ன விஷயம்?’ என்று வினவினார், ஒன்றையுமே கேட்டிராத பாவனையில்.

“சோஷியல் நைட்,’ என்றேன்.

“அப்படின்னா?’ என்று பாட்டி விடாமல் அழுத்திக் கேட்ட போது எனக்கு ஆயாசமாக இருந்தது.

“ஓஸிஎஸ் ஆஃபீஸர்ஸ் ட்ரெய்னிங்ல இருக்கேன்ல. அந்த பயிற்சில இது ஒரு கேதரிங்.’

“கேதரிங்னா?’

“சும்மா, இரவு விருந்து, டான்ஸ் அண்ட் டின்னர். எடிக்கெட்ஸ் சொல்லித் தருவாங்க.’

“ஆங், என்னது?’

“எடிக்கெட்.’

“அப்படின்னா?’

“எப்படி உக்காரணும், நடக்கணும், சாப்டணும், டான்ஸ் ஆடணும், எப்படி கைகுலுக்கணும், எல்லாரோடையும் எப்படிப் பழகணும்னு… ம், இன்னும் என்னன்னவோ சொல்லித் தருவாங்க…’

“இனிமேதான் நடக்கவும், சாப்பிடவும் கத்துக்கணுமா நீங்க?’

“இல்ல பாட்டி. ஒரு விருந்து நடக்கும் போது நாசூக்காக நடந்துக்கணும்ல. அதுக்கு…’ என்றபோது என் பொறுமை நழுவியிருந்தது.

“சரி, ஆனா அதுக்கு நீ உங்கூட்டாளிகளோட போகலாமே?’

“இல்ல, முடியாது. ஒத்துக்க மாட்டாங்க. ஜோடியோட தான் போகணும் இல்லைன்னா பனிஷ்மெண்ட் கெடைக்கும்,’ என்ற கணத்தில் அங்கிருந்து விலக காரணம் தேடியதென் மனம்.

“இதென்ன கூத்த, கூடப் போறது பொம்பளப் பிள்ளையா தான் இருக்கணுமாக்கும்?’

“ஆமா,’ என்றவாறே, “பாட்டி ப்ளீஸ் கொல்லாதீங்க. நானே பயங்கர கடுப்புல இருக்கேன்,’ என்று மனதுக்குள் கத்திக் கொண்டேன், கைப்பேசி நல்ல நேரத்தில் எனக்கிசைவாகச் சிணுங்கியது.”பை பாட்டி,’ என்று விடுவிடுவென்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்தேன்.

“என்ன லா செய்ற?’

“வேறென்ன? பி2வ அயர்ன் செங்சிகிட்டிருந்தேன். அதத் தானே போடணும்,’ என்றான் குமார்.

“ஐய்யய்யோ, மறந்தே போச்சு, ஜோடிய தேத்தறதுலயே ஃபெட்டப் ஆயிட்டேன்.’

“என்னடா? எவளாச்சும் ஒத்துக்கிட்டாளா?’

“இல்லடா.’

“அப்பாடா, இப்பதான் எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. நாமட்டும் தனியா பனிஷ்மெண்ட் வாங்கப் போறேன்னு நெனச்சேன்… தொணக்கி தான் நீயிருக்கு,’ என்றான் நிம்மதிப் பெருமூச்சுடன்.

“அடடா, என்னவொரு நல்ல மனசு.’

“தண்டனை கெடச்சாலும் கூட ஒருத்தர் கூட இருந்தா ஒரு தெம்புதான்… இல்லன்றியா? ரெண்டு வாரம் எக்ஸ்ட்ரா டியூட்டின்னு நெனச்சாவே அலுப்பா இருக்குடா.’

“செக்கிங் இருக்கும்னு நெனக்கிறியா?’

“இல்லாமயும் இருக்கலாம். ஆனா ரிஸ்க் எடுக்க முடியாதே,’ என்றான். சோதனை இருக்குமா இருக்காதா என்று யூகங்களிலும் அதற்கான காரணங்களிலும் இரண்டே நாட்களில் எண்ணற்ற குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் நடந்திருந்தன. யாருக்குமே இருக்காதென்று துணிய முடியவில்லை. தண்டனையிலிருந்து தப்புவதெப்படி என்பதிலேயே மனம் குவிந்து எப்படியாவது ஒரு ஜோடியை ஏற்பாடு செய்வதிலேயே குறியா இருந்தனர்.

“ம். அதிருக்கட்டும். உன் கஸின் ஒத்துக்குவான்னன?’

“இல்ல…. அவ பரீட்சைக்குப் படிக்கிறாளாம்,’ என்றபோது என் குரல் இறங்கி ஒலித்தது.

“ம் நம்மள மாதிரியா? கேர்ள்ஸ் எல்லாம் யூனிவர்ஸிட்டில ஒரு வருஷப் படிப்பையே முடிச்சிடுறாங்க. நாம் இப்படி லோல் படறோம். நாமே விருந்துக்கு எல்லாவித ஏற்பாடுகளையும் செஞ்சிட்டு நாமளே எல்லாம் முடிஞ்சப்புறம் க்ளீனும் பண்ணணும். இதுக்குப் பேரு விருந்து,’ என்று அலுத்தக் கொண்டான்.

“டேய் இதெல்லாமே பயிற்சியின் பகுதிதான்னு உனக்குத் தெரியாதா? அர்த்தமில்லாம இப்படிக் கெழவன் மாதிரி அலுத்துக்கற…’

“இந்த தடவ எப்படியாச்சும் ஜோடிக்கு ஏற்பாடு செஞ்சிரு, இல்லைன்னா செக்கிங் இல்லாமயாச்சும் பார்த்துக்கோ, தேங்கா ஒடைக்கறேன்னு வேண்டியிருக்கேன் பிள்ளையாருக்கு,’ என்றான்.

“அடப்பாவி, பிள்ளையாரோட தொழிலையே மாத்தறியேடா… உன் கூட்டாளி நரேன்னோட தங்கச்சிய கேக்கப் போறேன்ன? ஜேஸி ஒன்ல தான் இருக்கா அவ?’ எனக் கேட்டேன்.

“ஆமா, அவளுக்கு அதே நாள்ல ஏதோ முக்கிய டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் இருக்காம்.’

“ஓ…’

“ஜஸ்ட் மை பேட் லக்டா. அவ கண்டிப்பா வந்திருப்பா. கொஞ்சம் முன்னாடி தான் கூப்பிட்டேன் அடுத்த வாட்டி வரேண்ணான்னு சொன்னா. இந்த சனிக்கெழமைய எப்படிச் சமாளிக்கறதுன்னு தான் தெரியல.’

“நீ என்ன செய்யப் போற?’

“ப்ச். தெரில லா. ஆனா, ஜோனதன் ஹெல்ப் பண்றேன்னிருக்கான்.’ நோ, நாட் இன்ட்ரெஸ்டட், இந்த மாதிரி டயலாக்கெல்லாம் எனக்குப் பிடிக்காது. போன வாட்டி போனமே அதைப்போல டிரெக்கிங் போகும்போது மறக்காம சொல்ல. தட்ஸ் மை ஸ்டைல் என்று ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு மாதிரி குறுமடங்களிட்டிருந்தார்கள் என்று பரிதாபக்க குரலில் சலித்துக் கொண்டான். “சோஷியல் எஸ்கார்ட்டு சரியா வரும்னு ஐடியா சொல்றாங்க. ஆனா, மூணு மணி நேரத்துக்கு எண்ணூறு வெள்ளியாச்சும் ஆகுமாம். அதான் என்ன செய்யன்னு தெரியல,’ என்றான்.

உனக்கு யாராச்சும் ஏஜெண்ட் தெரியுமா? சொல்லுடா. நானும் யோசிக்கறேன்.

ஜோனதனுக்குத் தெரியும். கேட்டுச் சொல்றேன்.

சமீப ஆண்டுகளில் அதிகாரிகளுக்கான இப்பயிற்சியை முடித்திருந்தவர்களுடன் கலந்துரையாடல், அனுபவங்கள் குறித்த பரிமாற்றம், அவற்றை மறு சுழற்சியாகத் தமக்குள்ளே பகிர்தல் என்று நேரம் போய்க் கொண்டிருந்ததில் சனிக்கிழமை நெருங்கிக் கொண்டிருந்த பதற்றம் எல்லோருக்குள் விரவியிருந்தது.

கூட்டம் மெதுமெதுவாகக் கூடியபடியிருந்தது. எல்லோரமே மிடுக்குடையில் சீமான்கள் போலவும் சீமாட்டிகள் போலவும் தான் தோன்றினர். ஜோனதன் இரண்டு வகுப்புத் தோழிகளுடன் வந்திருந்தான். குமாருக்காக என்று அவர்களிடம் சொல்லாமலே கூப்பிட்டிருந்ததாக என்காதருகே கிசுகிசுத்தான். இருவரும், “வொய் டிட் யூ கால் போத் அஃ அஸ்?’ என்று மூன்றாவது முறையாகக் கேட்டுவிட்டு கிக்கிக்கென்று சிரித்தனர்.

“இன்னைக்கி உன் கூட வந்தேன்ல, எனக்கு என்ன வாங்கித் தருவ?’ என்று ஒருத்தி கேட்டதுமே, இன்னொருத்தி, “எனக்கு ஒரு தெகண்ட் ஹேட் ஐபேட்டாச்சும் வாங்கித் தரணும்,’ என்று சந்தர்ப்பத்தை விட்டுவிடாமல் நெருக்கினாள்.

ஒன்றுமே சொல்லாமல் மத்தியமாகச் சிரித்தபடி நின்றிருந்தான் ஜோனதன். மிகச் சாமர்த்தியமாக மறைத்து வைத்த குமார் வந்ததும் தான் விஷயத்தையே உடைத்தான். ஜோனதன். ஏற்கெனவே பரிச்சமதிபருந்த ஒருத்தி போய் குமாருடன் இயல்பாக நின்று கொண்டாள். குரலைத் தாழ்த்திக் கொண்டு, “இல்லன்னா இதுங்கள நம்பமுடியாது. சட்னு கிளம்பிருவாளுங்க, அதான்,’ என்றவாறே தன்னுடைய வேலையைக் கவனிக்கப் போய் விட்டான். அவன் மேடை விரிப்புகள் மற்றும் அலங்காரங்களைச் செய்யும் குழுவிலிருந்தான்.

மெரிடெஸ் என்னிடம், “குளிர்பானம் வேண்டும்,’ என்று கேட்டு வாங்கி உறிஞ்சியபடியே, அவ்வப்போது கூடியும் குறைந்து மிருந்த சளசள பேச்சுக் குரங்களும் கூவல்களும் கூச்சல்களுமாக இருந்த சூழலை நோட்டமிட்டாள். என் பேசவதென்று புரியாமல் பக்கத்தில் நின்றிருந்தேன். ரகசியம் சொல்வது போன்ற நளினத்துடன் என் கண்ணைப் பார்த்து “ஐ நீட் டு லீவ்லா அட்லீஸ்ட் பை டென். ஹோப் யூ நோவ் இட்,’ என்று சொன்னதற்கு, சரியென்று தலையாட்டி வெறுமே முறுவலித்தேன். மதியம் முதலே மழை வரும் போலிருந்தாலும் பெய்யவுமில்லை. புழுக்கம் தான் கூடியபடியிருந்தது. “இவளால் எப்படி அந்த அடர் ஒப்பனை செயற்கையிழை உடையில் இப்படி இயல்பாக இருக்க முடிகிறது!’

உணவின் மணம் கிளம்பியதுமே, எல்லோரும் திரும்பிப் பார்த்து அவரவர்களுக்குள் மூடி வைக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் பற்றிக் கிசுகிசுத்தனர். பீங்கான் தட்டுகளின் ஓசை எழுப்பியது. சமையல் கட்டில் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஐவரும் வேக வேகமாக உடைமாற்றிக் கொண்டு வந்து காத்திருந்த அவரவர் ஜோடியோடு சேர்ந்தனர்.

அமர்க்களங்கள் எல்லாம் முடிந்ததும் கூடத்தைச் சுத்தம் செய்யவென்று பத்துப் பதினைந்து கருப்பு ப்ளாஸ்டிக் பைகள் மடித்த மறைவிலிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்தன. அணைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகளும் ஏற்றப்பட்டதில் கூடம் பளீரென்று பிரகாசித்தது.

சீக்கிரம் வந்து சோதனையை முடிக்கமாட்டார்களா என்று ஒருவித பதைப்புடன் மணிக்கட்டையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த எனக்குச் சட்டைப் பையிலிருந்த கூடுதல் நூறுகளையும் இழக்க வேண்டியிருக்குமோ என்ற பயம் வியர்வையை வரவழைத்தது. நடனமாடச் சொன்னால் நம்மால் சமாளிக்க முடியுமா என்ற பதற்றத்துடன், “டான்ஸ் ஆடுவீங்களா மெரிடெஸ்?’ என்று கேட்டான். “ம் ஆடுவேனே’ என்றதும் லேசான தெம்பு வந்தது.

“இந்த ஹோண்ட் பேக்கை பிடி,’ என்று சொல்லி என் கையில் திணித்து விட்டு, குனிந்து குதிகால் செருப்பை நோண்டினாள். நிமிர்ந்தவள், கைப்பையை வாங்கிக் கொண்டவளாக லேசாகக் குனிந்து என் காதருகில், “இட்ஸ் கெட்டிங் லேட் லா.

பத்தேகாலாச்சி, நூறு வெள்ளிக் கூடக் குடுக்கணும் தெரியும்ல’ என்றபோது எனக்குள் ஆத்திரம் சுறுசுறுத்தது. ஒன்றும் சொல்லாமல் வெறுமனே நிமிர்ந்து பார்த்தேன். அதிகாரிகள் மூவர் வந்தனர். நூறு வெள்ளி மிச்சமிருக்கும் என்பதே சற்று ஆசுவாசத்தைக் கொண்டு வந்தது.

ஜோடி ஜோடியாக நிற்பவர்களை நோட்டமிட்டனர். தனியாக எவனாவது இருக்கிறானா என்று ஆராய்வது தெரிந்தது. ஒருவருமில்லை என்று புரிந்து போனதும், “ஓகே என்ஜாய் த நைட்,’ என்று சொல்லி உற்சாகப்படுத்திவிட்டு கையாட்டி விடைபெற்றுக் கிளம்பிச் சென்று விட்டார்கள். அதற்காகவே காத்திருந்தாற்போல அடுத்த நிமிடமே, “எப்படி லா இந்த மாதிரி உடுப்பெல்லாம் காலமெல்லாம் மாட்டிக்கிட்டுத் திரியறாளுக,’ என்று எவனோ சொன்னதைத் தொடர்ந்து பின்னால் கிளுகிளுவென்று பெண்களின் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து ஆண்களின் அடக்க முடியாமல் இடிச் சிரிப்பொலிகளும் சேர்ந்து கொண்டன. என்னவென்று திரும்பிப் பார்த்தேன். ரிஸ்வான் அருகில் நின்று கொண்டிருந்த அவனுடைய ஒன்றுவிட்ட தம்பி, தான் உடுத்தியிருந்த கவுன், கையுறை என்று ஒவ்வொன்றாகப் பரபரப்பான அவசரத்துடன் கழற்றியெறிந்து கொண்டிருந்தான்.

– நவம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *