சாப்பாடு, தூக்கம் என்பதைத் தவிர, உண்ட வீட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற, நன்றியுணர்வை மறந்துபோன ராமசாமி, புறப்பட்டு விட்டான். வடக்கில் உள்ள சேரியைத் தாண்டிய அவனது பைக், அருநூற்றிமங்கலம் எல்லையை தொட்டு, சிறிது நேரத்தில் இலக்கை அடைந்து விட்டது.
வீட்டுக்கு வெளியே, மகளின் காணாக் கல்யாணத்தின் மூலம் மாப்பிளையான சாக்ரடீசுடன் நின்று கொண்டிருந்த சின்னப்பெருமாள், “வாங்க..வாங்க என்றான். உள்ளே திண்ணையிலுள்ள பெஞ்சில் உட்கார்ந்தவன்,”மாப்பிள்ளை எப்போ வந்தாரு” என்ற குசல விசாரிப்புடன், பேச்சைத் தொடங்கினான். விவரத்தை சொல்ல மாமனுக்கு முன் எத்தனித்த மருமகன், “நேத்துத்தா மாமா வந்தேன், வீட்லெ எல்லாரும் நல்லாருக்காங்களா” என்றவன், “ஏற்கனவே நா சொன்னதை முடிச்சிட்டீங்களா” என்றான்.
“கிட்டத்தட்ட அதை முடிச்சாச்சுப்பா, ஒங்கு மாமா ஞாபகப்படுத்திக்கிட்டே இருந்தாரு.. அதனால் முடிச்சிட்டேம்பா”
“சரி மாமா, அவங்களை நிம்மதியா இருக்கவிடக்கூடாது, கச்சிதமா முடிங்க.. ஒங்களுக்கு ஆகவேண்டியதை நா பண்றேன், வேற ஏதாவது வேணன்னா உங்க மருமகன் பார்த்திக்கிட்டே சொல்லுங்க”
“சரிங்கப்பா, ஒங்களைவிட ஏம்பொண்டாட்டி, அவங்க மூக்கை அறுக்கிறதிலெ குறியா இருக்காப்பா, அதனால் தட்ட முடியாதுல, செய்றேம்பா”
“பரவாயில்லையே, அத்தை வெவரமாத்தான் இருக்காங்க,பார்த்தி சொன்னாப்லெ, அப்ப நம்பலெ, இப்ப நம்புறே மாமா” என்று பேச்சை வளர்த்து கொண்டிருந்தார்கள்.
அப்போது வெளியே பிதுங்க, குனிந்து காபி தம்ளரை பரிமாறிய சாக்ரடீஸ் மாமியார்,, “மருமகனோட ஐடியா எப்புடி, அவங்களோட பேச்சைக் கேட்டு காரியத்தை முடிங்க, அடுத்த பஞ்சாயத்து தேர்தல்ல, உங்களுக்கு என்ன வேணாலும் செய்வாக என்னோட மருமகப்புள்ளெ, முடிச்சுக் கொடுத்திடுங்க கொளுந்தனாரே” என்று சிறு புன்முறுவலோடு அகன்று சென்றாள்.
மறுநாள் கடைத்தெருக்களைக் கொண்ட சனவேலி என்ற கிராமத்தில், ஒரு டீக்கடையில், ராமசாமி டீ கிளாஸூடன் உட்கார்ந்திருந்தான். இப்போது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கள் ரெண்டுபேர் வந்தார்கள்.
“என்ன பிரசண்டு, சொல்லாமக் கொள்ளாம வந்துட்டீங்க”
“அந்தப்பாதை விவகாரம் எந்தளவுலெ இருக்கு”
“போய்க்கிட்டு இருக்கு”
“இதுல நீங்க பேக்கடிக்கிறமாதிரி தெரியிதே” என்றான் குணசேகரன். இதனை உடனடியாக மறுத்த ராமசாமி, “நேத்துக்ககூட சின்னப்பெருமாக்கிட்ட இதைப்பத்தி பேசிட்டுத்தா வந்தேன். அவங்களை ஒண்ணுமில்லாமப் பண்ணனுங்கிறது என்னோட முடிவு, நீங்க சப்போர்ட்டு மட்டும் பண்ணுங்க முடிச்சிடலாம்” என்றான்.
அதே டீக்கடையில் அருகிலிருந்த கவ்வூர் கிராமவாசிகள் சிலர், இந்த சம்பாஷனையைக் கேட்டுவிட்டு, அவர்களுடைய அபிப்ராயங்களைப் பகிரத் தொடங்கினார்கள்.
“ரிட்டைடு ஆனதும்போதும், இந்த ரெண்டு பேரும் ஊர்வாயில மண்ணள்ளிப்போட ஆரம்பிச்சுட்டாங்கெ போல”
“வேற வேலை என்னயிருக்கு, அப்ப வேலை பாக்காம கவர்மெண்டுலெ சம்பளம் வாங்குனாங்கெ, இப்ப ஊர் வம்பை இழுத்து, கிம்பளம் வாங்குவாங்கெல்ல, அதாம்போல மூச்சுவிடாம பேசுறாங்க”
“அப்ப பிரசண்டுங்கிறாங்கெல அவரு எப்புடிங்க, இந்தப்பயலுக மாதிரியா”
“அந்த ஆளு, நாமெல்லாம் பொறக்கிறதுக்கு முன்னால. பிரச்ண்டா ஜெயிச்சு, ஒரு பஞ்சாயத்தைக் கெடுத்தாரு, இப்ப உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்றாரு போல, இதை ஒரு வேலையா இழுத்துப் போட்டுச் செய்றாரு போல”
“அப்ப அவரு இந்த ஊரு இல்லையா..?”
“அவனுக்கிட்டெ கேட்டாளெ அவனுக்கே தெரியாதுடா, ஒரு நேரம் ஆயிரவேலிம்பா, அப்பறம் நாகைக்குடிம்பா. ஆனா அரும்பூருங்கிறதுதா, அவனோட ஆத்தா பொறந்தா இடம், இப்ப பொண்டாட்டி வீட்லெ சும்மா சாப்புட்டு சும்மா கெடக்காண்டா”
“என்னங்க பெரசண்டா இருந்தார்னு சொல்றாங்க, வீடுவாச எதுவுமில்லேனு சொல்றீங்க”
“அவனோட சொந்தக்காரப்பயதா சொன்னான்டா, மாமியா வீட்லெதான் இருக்கானாம். பிறந்த ஊர்லே, இடிஞ்ச வீட்டைக் கட்டிருக்கலாம், காசு பணம் மொடையா இருந்திருந்தா, சேலையிலயாவது ஒரு வீட்டைக் கட்டிருக்கலாம்ல”
“என்ன சொல்றீங்க..?”
“ஆமாடா அவனுக்கு சின்னாத்தா பெரியாத்தாக்க, அஞ்சுபேரோ என்னமோ, அதேமாதிரி, அக்கா தங்கச்சியளும் ரொம்ப பேரு, இப்படி இருக்கும்போது உரிஞ்சுபோட்ட சேலையையாயவது எடுத்துக் கட்டிருக்கலாம்ல”
‘ஏண்டா, அதுவொரு லாயக்கத்த மூதேவிடா, சின்னம்மா மகளுக்கே, அவனாலெ கல்லாணம் பண்ணிப் பாக்க முடியலெ, இதில் வீடு கட்றானாம் வீடு, என்று கலைந்து சென்றார்கள்.
சில நாட்கள் கடந்தது. மீண்டும் சின்னப் பெருமாளைச் சந்தித்தான் ராமசாமி. ‘எப்போதும் வாங்க உட்காருங்க’ என்று பேச்சைத் தொடங்கும் சின்னப் பெருமாள், “என்னாச்சு கோவில் திருவிழாலாம் முடிஞ்சதா, மந்திரி வந்ததா சொன்னாங்க..?”
“ஆம், மந்திரி வந்திருந்தாரு, பக்கத்திலெ யாரையும் விடலெ, புறப்பட்டு போறவரை பக்கத்திலே இருந்தேன்.
“பாதையைப்பத்தி ஏதாவது பேசுனீங்களா..?”
“இந்த விவகாரம் அவருக்கிட்டைப் பின்னாலெ சொல்லிக்கலாம். அன்னைக்கு நா நடிச்ச நடிப்பைப் பாத்து, ஒண்ணுஞ் சொல்லமாட்டாருன்னு நெனைக்கிறேன். அப்படியே ஏதாவது வில்லங்கமாச் சொன்னா, பசங்களை விட்டு பேச சொல்லுவோம். இதுக்கும் ஒத்து வரலேனா எங்க ஊரு பிரச்சினைனு அத்து விட்ருவோம்” என்றான் ராமசாமி.
ராமசாமி விடைபெற்றவுடன் தனிமையில் உட்கார்ந்த சின்னப்பெருமாள், “நம்ப முடியலையே, கொழப்புறானே” என்று தலையைச் சொறிந்து கொண்டான். மகளுக்குச் செய்த இரண்டாம் கல்யாணத்தின் மூலம், பல இடையூறுகளையும், வமானங்களையும் சந்தித்து வரும் அவன், “தனது மருமகனும் இப்படித்தானா..” என யோசிக்கத் தொடங்கினான். எதிரே இருந்த டிவியை ஆன் செய்தான். “தன்னுடைய சந்தோசத்திற்காக, தன்னை நம்புவோரை ஏமாற்றுவது, உறவுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்” என்ற கார்டு, சிவப்பு வண்ணத்தில், பின்னணி இசையோடு ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
நம்பியவனுக்கு கூட துரோகம் செய்யலாங்க, அந்தப்பயமேலே நம்பிக்கை வெச்சது அவனோட தப்புத்தான். ஆனா நல்லது செய்த எனக்கே துரோகம் பண்ணிட்டானே, அந்தப் பாவத்தை எங்கே கொண்டு போயி கழுவப்போறான்.
ராமசாமியைச் சந்தித்த பிறகு ஏற்பட்ட குழப்பம் தீராமல், டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த சின்னப் பெருமாளின் காதுகளில், பக்கத்து வீட்டுக்காரரின் இந்த ஆதங்க இரைச்சல், அவனை நிம்மதியாகத் தூங்கவிடவில்லை.
ஆம், தங்கம்மா வீடு நீர்ப்புறம்போக்குத்தான், வீட்டை இடிக்கலான்னு கோர்ட்டே சொல்லிடுச்சு, அவங்கெ இதைப்பண்ணலெ, ரோட்லெ வீடு கட்டிருக்கான் காருவாரு, அதையும் ஒண்ணுஞ்செய்யலே. எதுவும் கட்டப்பஞ்சாயத்துப் பண்ணி காசு வாங்கிட்டாணுகளா, இப்படியே பலவகையில் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
நான் இந்தக்கதையை யதேச்சையாகப் படித்தேன். எனது பக்கத்து ஊர்க்காரர்கள்அவர்கள். குணசேகரன் என்ற ஒருவர் இருக்கிறார். ஒரு பிரபல அரசியல்வதியை, தனது மச்சான் என்று சொல்வார். தன் அக்கா வின் ஆதரவால் வேலை வாங்கியது மட்டுமல்லாமல், தன் குழந்தைகளுக்கும் போலீஸ் வேலை வாங்கியவர். முடிந்தால் ராமநாதபுரம் மாவட்டம், சனவேலி என்ற கிராமத்தில் விசாரித்துப் பாருங்கள் உண்மை புரியும்.