ராசாத்திக்கு மயக்கம் தெளிந்தபோது அருகில் யாரும் இல்லை. பிரசவம் பார்த்த மருத்துவச்சி ”ஐயே! பொட்டப்புள்ளடா மருது” சொல்லிவிட்டு சென்றது தெரியும். சிவத்தாயி குடிசை மூலையில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தாள். ”அதெல்லாம் பாவம்டா, அவ இவ பேச்செல்லாம் கேட்டுட்டு அந்தச் சிசுவக் கொன்னுடாதடா பாவி! சொல்றதக் கேளு” அவள் முடிப்பதற்குள் அடி, இடி போல விழுந்தது. ”ஏய்! கெழவி வாய மூடு, இத வளத்து சீர், கல்யாணம் காட்சி பண்றதுக்கு எங்கப்பன் எனக்கு சேத்து வச்சிட்டு செத்தான் பாரு” இன்னும் எதேதோ திட்டிக் கொண்டிருந்தான் அவன்.
நெஞ்சுக்குள் பயம் படபடவெனப் படர்ந்தாலும் ராசாத்தி அமைதியாகப் படுத்திருந்தாள். மருது அருகில் வந்து குழந்தையைக் கையில் எடுத்த போது ” பொட்டப்புள்ள, அதுக்குப் பின்னால செலவு செய்யனுமுன்னு இப்பவே கொன்னுடனுங்கிற… செய்யி… ஆனா அடுத்து எனக்கு ஆம்பிள்ளைப் புள்ள பொறந்தா, அத நான் கொன்னுபுடுவேன்…..” மருது அதிர்ந்தான். கோபம் தலைக்கேற.. ”கழுத! என்னா தெனாவட்டு உனக்கு…” விட்ட அறையில் தலை சுற்றியது ராசாத்திக்கு.
”ஐயோ! இதெல்லாம் கேட்கத்தான் இன்னும் இருக்கேனா? புள்ள பெத்தவடா, அடிக்காதடா பாவி” அரற்றினாள் சிவதாயி.
ராசாத்தி வலுவற்ற குரலில், ”ஆமா! உனக்குப் பொறக்கற ஆம்பளப் புள்ள என்ன பெரிய உத்தமனாவா இருக்கப் போவுது? அது வளந்தோன நீ உன் ஆத்தாள அடிக்கிற மாதிரி என்னையும் இழுத்துப் போட்டு அடிக்கும். என்னைய மாதிரி எவளாவது அதுக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிப்பா, அதெல்லாம் வேணாம், பிள்ளையக் கருவுல வளக்கறதுதான்யா கஷ்டம். அதக் கொல்ல யாரு உதவியும் எனக்குத் தேவயில்ல. போ! உன் குலத்த வேர் அறுக்கறதுல நீயா நானான்னு பாத்துருவோம்” அவள் குரலில் அழுத்தம், தெளிவு.
அவள் பேசப் பேச…. சிவதாயி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். இன்னும் ராசாத்திக்கு அடி உதை விழுந்தபடிதான் இருந்தது. ஆனால் மருது முகத்தில் இதுவரை அவள் கண்டிராத சிந்தனை ரேகைகள்! கண்கள் மயங்கச் சரிந்த ராசாத்திக்கு தன் மகளை காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சி.
– செப்டம்பர் 2007
சூப்பர் சாட்டை அடி