ஐயம்மாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2023
பார்வையிட்டோர்: 2,473 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டேய் ஆச இங்க வாடா” என்று கூப்பிடுவாள் ஐயம்மாள். 

ஆசைத்தம்பி ஆகிய என்னை ஆசையாக ஆச என கூப்பிடுவாள். 

‘என்னம்மா’ என்ற குழைந்த, உணர்வு கொண்ட வார்த்தையோடு அவள் வீட்டுக்குப் போவேன். 

ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்த நான் அவளது வீட்டின் எதிரே வாடகைக்காக அவள் சாரியாக கட்டி வைத்திருந்த மூன்று அறைகளில் நடு அறையில் தங்கி இருந்தேன். அவளை யாரும் அம்மா என்று அழைக்கமாட்டார்கள். இரண்டு மகன்கள்கூட தாயாரை ஐயம்மா என்பார்கள். அந்த பகுதியில் அப்படி அழைப்பது வழக்கமாக இருந்தது. அவர்களுக்கு அவளை பிடிக்காது. யாருக்குமே பிடிக்காது எனச் சொல்லலாம். டெரர் உமன். ஜைஜான்டிக் உருவம். தமிழ் படங்களில் வரும் வில்லிகளைப்போல எல்லோரையும் ஆட்டி வைப்பவள். அப்பகுதிக்கு புதிதாக வருபவர்கள் ஐயம்மா வீடு எது என கேட்டாள் எல்லோரும் சட்டென சொல்லும் அளவுக்கு பிரபலமானவள். 

தோட்டத்தில்தான் அவளது கணவர் கிடப்பார். மேடான புஞ்செய் நிலத்தை தோட்டம் என்பார்கள். அங்கே ஒரு சின்ன குடில் இருக்கிறதென மகன்கள் சொல்ல கேள்வி. நாள்தோறும் இருமுறை சாப்பிட வீட்டிற்கு வருவார். அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கும். வளர்ந்த பிள்ளைகள். முப்பது ஐந்து வயதான மூத்த பையன் ஒரு தனியார் கம்பெனியில் பிட்டராக வேலை பார்க்கிறான். இளையவன் கடைகளுக்கு டீத்தூள், காப்பித்தூள், கடலை மிட்டாய் சப்ளை செய்யும் ஏஜென்சிஸ் வாத்திருக்கிறான். அவனே டீவிஎஸ் 50ல் எடுத்துக்கொண்டு போய் சப்ளை செய்வான். முப்பது வயது. ஐயனுக்கு அறுபது அறுபத்தி ஐந்து வயதிருக்கும். மகன்கள் தந்தையை ஐயன் என்றுதான் சொல்வார்கள். வீட்டில் நால்வரும் நான்கு திசைகள். சின்ன பையன் எனக்கு நெருக்கம். அடிக்கடி என் அறைக்கு வந்து ஏதாவது பேசிக்கொண்டிருப்பான். உலகப்பொது அறிவு ஏதுமில்லாதவன். வியாபாரம் பற்றி பேசுவான். சப்ளை செய்யும்போது வழியில் ஏதாவது குறிப்பிடும் சம்பவம் நடந்ததை சொல்வான். அதுவும் சொல்லுவதில் கூட சுவாரசியம் இருக்காது. எனக்கு சலிப்பு தட்டும். நான் அதை காது கொடுத்து கேட்டவில்லை என்பதுகூட தெரியாது கதை போய்க்கொண்டிருக்கும். 

பெரிய பையன் எப்போவாவது என் அறைக்கு வருவான். விபரம் தெரிந்தவன். தாயாரை திட்டித் தீர்ப்பான். ஒருநாள் ‘சாப்டாச்சா’ என கேட்டேன். தாயாரை கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டி ‘சாப்பாடு சமைக்க மாட்டேங்குறா. வெளியே ஹோட்டல்ல பேய் சாப்புடப்போறேன்’ என்றான். 

வீடு எப்போதும் ரத்தகளம் தான். சண்டையென்றால் ஐயம்மாள் சமைக்கமாட்டாள். பசங்க வெளியே போய் ஹோட்டலில் உண்பார்கள். அவரவரின் சம்பார்த்தியத்தை தங்களே வைத்துக்கொள்வார்கள். ஐயன் தானே அரிசியை போட்டு பொங்கி கடையிலிருந்து இரண்டு ஊறுகாய் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு சாப்பாட்டை முடித்து விட்டு வீட்டை விட்டு கிளப்பி தோட்டத்துக்குப் போகும் வழியெல்லாம் மனைவியை திட்டிக்கொண்டு போவார். அவர் மனைவியை கெட்ட வார்த்தைகள் கொண்டு திட்டுவது பக்கத்தில் போவோருக்கு நன்கு கேட்கும். கெட்ட வார்த்தையென்றால் கம்மனாட்டி, முன்டை என்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவார். அவற்றை மனைவிக்கு நேராகவே சொல்லி திட்டி கேட்டிருக்கிறேன். ‘நீசெத்தாதானே நான் முன்டையாவுறதுக்கு’ என எதிர்த்து பேசுவாள் ஐயம்மாள். சில நேரங்களில் வட்டார வழக்கு வார்த்தைகளில் அவர்கள் வேகமாக திட்டிக்கொள்வது சுத்தமாக எனக்குப் புரியாது. 

நீளமான வீட்டைத் தடுத்து ஒரு பகுதியில் மளிகைக்கடை வைத்திருந்தாள். வியாபாரத்தை ஐயம்மாளைத் தவிர யாரும் கவனிக்க மாட்டார்கள். தரமான பொருட்கள். நியாயமான விலை. கொள்ளை லாபம் எல்லாம் கிடையாது. கடன் கிடையாது. கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருந்தால் செம டோஸ் விழும். அவரவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழவேண்டும் என்ற குணம். 

இளைய மகன் மிட்டாய் பிஸ்கெட் என்று எதையாவது எப்போதாவது கடையிலிருந்து திருடிக்கொண்டு வந்து என் அறையில் வைத்து தின்பான். எனக்கு கொடுப்பான். திருட்டுப்பொருள் எனக்கு எதற்கு என மறுத்துவிடுவேன். 

“ஏண்டா ஆச நேத்தக்கி சின்ன பய கடையில பிஸ்கெட்டை திருடிக்கிட்டு வந்து உன் ரூம்ல வச்சி தின்னானாடா?” என்றாள் ஒருநாள். நான் இருதலைக் கொள்ளி எறும்பாகி விட்டேன். 

“என் ரூமுக்கே வரலயே” 

“வந்ததத்தான் பாத்தேனே. திருட்டுப் பயல காப்பாத்த நீ தொணபோறே. திருட்டுப் பயலே” 

“நான் ஒண்ணும் திருடவும் இல்ல. திருட்டுப் பொருள வாங்கி தின்னவும் இல்ல” 

“அப்ப அவன் திருடியாந்து துன்னுருக்கன்னு தெரிஞ்சி போச்சில்ல” 

“அது தாய் புள்ள ரெண்டு பேருக்கும் உள்ள பிரச்சனை. நான் ஏம்மா தலையிடணும்?” 

“அவன் என் புள்ளயே இல்லடா. என்ன நாயேன்னனு திட்டுறான். நீதான்டா எனக்கு புள்ள மாதிரி.” 

“நான் இரவல் மனுஷன். மலையேறி மேஞ்சாலும் குட்டி கோணாருக்குதாம்மா சொந்தம். அவர திட்டாதிங்க. என்ன திட்டுறதுன்னாலும் திட்டுங்க சொல்ல வேண்டியத சொல்லுறேன். அவர உங்க பிள்ளையா பாருங்க. அவரும் உங்கள அம்மாவா மதிப்பாரு.” 

“அந்த நாய் திருந்தாதுடா” 

“நான் அவர் கிட்ட சொல்லுறேன் அம்மா” என்று சமாதானப் படுத்தினேன். 

அவனிடமும் இது குறித்து மறுநாள் இரவு நீண்ட நேரம் புத்திமதி சொன்னேன். புத்திமதி சொல்லும் அளவுக்கு நானும் தகுதியானவன்தான் என்பதை அறிக. அவனும் மண்டையை மண்டையை ஆட்டினான். பின் நாட்களில் அவன் நடவடிக்கை கொஞ்சம் மாறிப்போயிருந்ததை காண முடிந்தது. 

அந்த காலத்தில் தொலைக்காட்சி என்றால் தூர்தர்ஷன்தான். ஞாயிற்றுக் கிழமை மாலை நாலரை மணிக்கு அரத பழசான தமிழ் படம் ஒளிபரப்பாகும். அடுத்த படம் பார்ப்பதற்கு ஒருவாரம் காத்திருக்க வேண்டும். அன்றுதான் எனக்கும் விடுமுறை. ஐயம்மாள் வீட்டிற்கு டிவி பார்க்க போவேன் போகவில்லை என்றாலும் கூப்பிட்டு பார்க்க சொல்வாள். சின்னப்பா, கிட்டப்பா, ஜெமினி, எம்ஜியார், சிவாஜி நடித்த படங்களாக ஒளிபரப்பாகும். வேறு வழியின்றி பார்ப்பேன். அந்நேரத்தில்தான் ஐயனும் உணவுக்கு வருவார். அது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடைப்பட்ட நேரம். இரண்டுமே ஒரே உணவுதான். கடையிலிருந்து இரண்டு மூன்று சாக்லேட்டை எடுத்து வந்து எனக்கு கொடுப்பார். 

“வேண்டாம் ஐயன்” என்பேன். 

“ஏன்? ஐயம்மா திட்டுவான்னு பயப்படுறியா? கடையில எனக்கும் பங்கு இருக்கு தெரியுமுல்ல”என்பார். 

“கடையே உங்களோடதான ஐயன். உங்கள யாரு கேக்குறது. சாக்லேட் தின்ன நான் என்ன சின்ன குழந்தையா?” 

“நீ பொடியன் மாரிதான் இருக்கே. இந்தா புடி” என நீட்டுவார். நான் ஒற்றை மட்டும் எடுத்துக்கொள்வேன். மற்றதை சட்டைப் பையில் திணித்து விடுவார். 

இந்த சம்பவம் தொடர்பாக ஐயம்மாள் நடவடிக்கையில் எந்த மாறுதலும் தெரியாது. எனக்குதானே கொடுத்தார் என்று எண்ணி பேசாமல் இருந்து விடுவாள் என்றே தோன்றும். என் மீது உள்ள பிரியத்தைப்போல மற்ற இரண்டு அறைகளில் உள்ளவர்களிடம் காட்டமாட்டாள். அவர்களை டிவி பார்க்கக்கூட அழைக்க மாட்டாள். அவர்களாக வந்து பார்த்தால்தான் உண்டு. 

அன்று ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக சிகரெட் தேவைப்படும். ஒரு பாக்கெட் வாங்கி வர கேட்டை திறந்துகொண்டு சாலையில் வெளிப்புறமாக கடைக்குப் போனேன். அந்த முல்லை கடையில் நின்றாள். ஒரு புன்சிரிப்பு பூத்ததும் பதிலுக்கு நானும் சிரித்தேன். முல்லையை ஏற்கனவே தெரியும். முதல் பார்வைகளே பேசிக்கொண்டன. அவளும் ஏதோ ஓரு கம்பெனியில் வேலை செய்கிறாள். வரும்போதும் போகும் போதும் பூத்துக்கொண்டிருந்த புன்னகை ஒருநாள் வார்த்தைகளாக வடிவம் பெற்றது. அவள் பெயரை ஐயம்மாளின் மூத்த மகன் மூலம்தான் தெரிந்து கொண்டேன். அன்று மாலை பேருந்து விட்டு இறங்கி வரும்போது நான்கைந்து பேர் அதே சாலையில் நடந்தோம். நான் அவர்களை விட்டு தனிமைப் படுத்திக்கொள்ள மெதுவாக நடந்தேன். அவளும் நடையின் வேகத்தை குறைக்க இருவரும் மற்றவர்களின் பார்வையில் மறைந்து போனோம். 

தயங்கினேன். தடுமாறினேன். வெட்கம் உடைந்தது. 

“உங்க பேரு முல்லைதானே?” என்றேன். 

“அதுகூட இன்னும் தெரியாதா?” என்றாள். 

“இப்பதானே முதலா பேசிக்கிடுறோம்” 

“இப்ப மட்டும் எப்படி தெரிஞ்சிது?” 

தெரிவிப்பதற்குள் ஒரு சனியன் குறுக்கிட்டது. அது ஆபத்தான சனியன். பிடித்தால் விடாது. வேகமாக நடந்து அவளையும் கடந்து போய்விட்டேன். அது காதலேல்லாம் இல்லை. ஒரு எதிர் பாலினத்தின் ஈர்ப்பு. அவ்வளவே. 

அந்த முல்லைதான் கடையில் பூத்திருந்தாள். தோசைக்கு சட்னி அரைப்பதற்கு பொட்டுக்கடலை வாங்க வந்திருப்பாள் போல. செய்தித்தாளை சுருளாக்கி தராசிலிருந்து கடலையை கொட்டி மடித்துக் கொண்டிருக்கும்போது மோனப் பறிமாற்றத்தைக் கண்டுவிட்ட ஐயம்மாள் பொட்டலத்தை முல்லை மூஞ்சில் வீசினாள். அவள் திடுக்கிட்டுப் போனாள். பொட்டுக்கடலை சிதறி கடை வாசல் சாலையெல்லாம் சிதறியது. 

“என்னடி இவன மாப்ள புடிக்கிறியா? அவன பாத்து பல்ல இளிச்கிறே. நாயே. இனி கட பக்கம் வந்தே தொலச்சிடுவேன்” என சப்தமிட முல்லை எதுவும் பேசாது உடைகளின் மடிப்பில் தொத்தி நின்ற பொட்டு கடலைகளை உதரிவிட்டு கடையை விட்டு போனாள். 

“உனக்கு என்னடா வேணும்?” என்றாள் என்னைப் பார்த்து. 

“சிகரெட் ஒரு பாக்கெட்” 

“சிகரட்டு வாங்க வந்தியா அவள பாத்து பல்ல இளிக்க வந்தியா?” 

“நான் எங்கம்மா இளிச்சேன்.” 

“இப்ப சிரிச்சியேடா. இப்ப சிரிப்பே அப்பறம். . .” 

“என்ன பத்தி உங்களுக்குத் தெரியாதா?” 

“நீ யாரு. அவ யாரு. உன் ஜாதி என்ன அவ ஜாதி என்ன? என்னடா ஒங்களுக்குள்ள உறவு?” கடுகடுவென பேச ஆரம்பித்தாள். என்னோட சாதி என்னேன்னு ஐயம்மாளிடம் சொன்னதே இல்லையே. பக்கத்து ரூம் பசங்க மூலமோ மகன்கள் மூலமோ தெரிந்து வைத்துள்ளாள் போல. நான் சாதி பார்ப்பன் இல்லையே. மேலும், சாதியே இருந்தாலும் சிரிப்பதற்கு என்ன தடை. அவளுக்கு எதுவும் புரியாது. புரிய வைக்க முயற்சித்தால் பத்ரகாளியாகி விடுவாள். பேசாமல் நின்றேன். 

“இனி அவள பாத்து சிரிச்சேன்னு தெரிஞ்சிது கொன்னுடுவேன். எங்கையாது பாத்து பேசிகிட்டு இருந்தேன்னு கேள்வி பட்டேன் தொலைச்சிடுவேன். நீங்க பேசினாலும் என்ன பண்ணினாலும் எனக்கு எப்படியும் தெரிஞ்சி போய்டும். புரியுதா?” என்றாள். 

“புரியுது. நன்னாபுரியுது” என சொல்லி சிரித்துக்கொண்டு அறைக்கு வந்தேன். 

என் மீது அவளுக்கு என்ன அக்கறை? வெரி சிப்புள். குடும்பத்தில் அவளை யாருக்கும் பிடிக்காது. உறவுமுறை என்ற உள்ளுணர்வு இருந்தாலும் வெளியே பேச்சுத் துணைக்காக அல்லது நாடகத்தை நடத்தியே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்காக வேஷத்தை மாற்றுவதும் அதில் ஒன்றிப்போவதும் மன இயல்பு. அவளுக்கு மகன் என்கின்ற ஒரு வேஷக்காரன் தேவைப் படுகிறான். அவன் தற்காலிகம் என்றாலும். சரி அது அவளுக்கு. எனக்கு என்ன அவள் மீது பிடிப்பு? திட்டினாலும் கொஞ்சினாலும் ஐயம்மாவை தாயைப்போல பாவிக்கும் மனநிலை எப்படி வந்தது? என்னை யாரும் இதுவரை வாடா, போடா, நாயே என்றெல்லாம் சொன்னதில்லையே! ஐயம்மாளின் வார்த்தைகள் அர்த்தம் நிறைந்த கண்டிப்பாக எப்படி என்னால் உணர முடிந்தது? 

நான் வீட்டை விட்டு போனால் போதுமென்று எதிர்பார்த்து சொந்த அம்மா, அப்பா, அண்ணன் இருந்த நிலையில், யாருக்கும் சொல்லாமல் துணிமணிகளை எடுத்து பேக்கில் அடைத்துக்கொண்டு கிளப்பும்போது அம்மா மட்டுமே இருந்ததால் “நான் வெளியூர் போறேன்” என்றேன். அதிர்ந்து குலைந்தாள். 

“எங்கப்பா போறே? ஒண்ணும் சொல்லாயே திடுதிப்புன்னு சொல்றே” 

“எங்கப் போனா உங்களுக்கு என்ன? போனா சந்தோஷப்படுங்க” 

“நான் பெத்தவடா. கோவத்துல எதாவது சொன்னா அதுக்காவ வீட்ட விட்டு கெளம்பிடுவியா. நல்ல வேல கெடச்சி எல்லார் கிட்டயும் சொல்லிட்டு கெளம்பிப்போனா யார் கேக்கப்போறா. ஊர்ல எல்லாரும் வெளியூர் போய்தான் வேல பாக்குறாங்க இல்லன்னு சொல்லல” 

“இப்ப என்ன செய்யணுங்குறிங்க?” 

“இப்படி தீடீர்ன்னு கௌப்புனா என்ன அர்த்தங்குறேன்?” 

“இப்ப நான் உங்ககிட்ட பர்மிஷன் கேக்கல. போகும்போது சொல்லாம போக்குடாதுன்னு சொல்றேன். அவ்வளவுதான்” 

என் பிடிவாதம் தெரியும். பேச்சை நிறுத்தினாள். பேக்கை கையில் எடுக்கும்போது “சித்த நில்லுப்பா” என உள்ளே போய் மடித்த நிலையில் சில ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து கொடுத்து ‘வச்சிக்க’ என்றாள். 

“வேண்டாம்” 

“புடிப்பா” 

கண்ணீர் வந்தது. எனக்கும்தான். இரு கைகளாலும் வாங்கிக் கொண்டேன். இரு இரு என மீண்டும் வீட்டினுள் போய் விபூதியை எடுத்து வந்து பூசிவிட்டாள். 

அதெல்லாம் நான் பூசிக்கொள்ள மாட்டேன். ஆனால் தடுக்கவில்லை. 

“போனதும் கடுதாசி போடுப்பா” எங்கே போகிறாய் என கேட்டால் அபசகுணம் என கருதி கேட்கவில்லை. 

நான் பார்வையை விட்டு மறையும்வரை வெளியில் நின்று கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் அம்மா இல்லையா! 

ஒரு வேளை எல்லோருக்கும் பாசம் இருந்திருக்குமோ! நான்தான் புரிந்துகொள்ள வில்லையா? 

அம்மாவுக்கு அப்பாவை பிடிக்காது. அவரை குனியக் குனிய குட்டிய அந்த அரக்கத்தனம்தான் நான் மாறிப்போவதற்கும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் மீது தள்ளிப்போகும் வண்ணம் என்னை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருந்தமைக்கான பிள்ளையார் சுழியாகும். அன்னியோன்யம் என்பது வளர்த்துக்கொள்வது இல்லை. அது தானே வளர்வது. அப்பா ஒரு ஊமை. இவ்வளவு பேச்சையும் திட்டையும் வாங்கிக்கொண்டு ஏன் உயிரோடு இருக்கிறார் என எண்ணத்தோன்றும். அண்ணனுக்கு இருக்கும் சகிப்பு தன்மை எனக்கு இல்லை. 

அண்ணன் மீது மட்டும் அம்மாவுக்கு அளவு கடந்த பாசம். பெரும்பாலும் குடும்பங்களில் முதல் குழந்தை மீது கொண்டுள்ள பாசம் பின்னர் பிறக்கும் குழந்தைகள் மீது கோலோச்சுவது இல்லை என்பது தெரிந்ததே. குலக் கொழுந்து, குடும்ப விளக்கு, கொள்ளி வைக்கும் பிள்ளை, வம்ச விருத்திக்கான அச்சாணி இல்லையா தலைச்சன் பிள்ளை. 

திருமணமாகி ஓரிரு ஆண்டுகளில் குழந்தை பிறக்கவில்லை யென்றால் ஊர் ஒரு மாதிரியாகப் பேசும் . முதல் குழந்தைதான் வாயை அடைக்கும். அதன் பிறகு பிறந்தால் என்ன பிறக்காவிட்டால் என்ன! ஊரார் பேசிக்கொள்ள வேறு என்னதான் இருக்கிறது. என்ன படிக்கிறே? ஏன் கல்யாணம் பண்ணிக்கிடல? இன்னும் குழந்தை பிறக்கலையா? பையனுக்கு எப்ப கல்யாணம்? பேரன் பேத்தி ஏதும் இருக்கா? பையன் உன்ன நல்லா பாத்துகிடுறானா? இப்படி வாழ்க்கை முழுவதும் கேள்விகளால் சமூகம் துளைத்தொடுக்கிறது. இதை பெரும் அக்கறை என்று சொல்ல முடியாது. சப்பாஷனைகளை இணைக்கும் சங்கிலிகள். அவர்களுக்கு தெரிந்ததை தானே கேட்கமுடியும். 

கொஞ்சம் அரசியல் தெரிந்தால் ஆயுத வியாபாரி அமெரிக்காவைப் பற்றி, இரான் ஈராக் போரைப் பற்றி, கியூபாவின் யுத்தம் பற்றி பேசுவார்கள். தெரியாதவர்கள் என்ன செய்வார்கள். பாவம் குக்ட் கோஸ்ட்டிகள். சில முற்களைப்போல குத்தி விடுகின்றன. சில தைத்து இணைத்து விடுகின்றன. முதல் வாரிசுக்கு முன்னும் பின்னும் ஒரு பிரமாண்டம் ஒளிந்திருக்கிறது. 

அம்மாவின் அடக்குமுறை கண்மூடித்தனமான அதிகாரத்தை அண்ணன் சகித்த அளவுக்கு என்னால் முடியவில்லை. வெகுண்டெழுந்தேன். நாளடைவில் வீட்டில் நான் சண்டைக்காரனாகி விட்டேன். நான் வீட்டில் இருக்கும் போது கப்சிப்பென இருப்பார்கள்.  எப்போது நான் வெளியில் போவேன் என்றுகூட அவர்களுக்குத் தோன்றும். அறிவுரை கூற பயப்படுவார்கள். கேட்கமாட்டேன் என்ற அச்ச உணர்வு. 

முப்பது வயது வரை அருகில் உள்ள நகரத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து சலித்துப்போய் சண்டைபோட்டு வேலையை விட்டு இரண்டு வருஷம் வீட்டில் வேலையின்றி இருந்த போது ரொப்பவும் பகையானேன். சாப்பிட மட்டும் வீட்டிற்கு போவேன். வெளியே என்னைபோல இருந்த வெட்டி கூட்டத்துடன் அரட்டை ஊர் வம்பு இடையிடையே இலக்கிய செயல்பாடுகள். வீட்டில் நுழைவது சிறைக்கூடம் போல் இருந்தது. ஆரம்பத்தில் காதலித்த பேண் ஒரு பொறியாளரை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையோடு இருந்தாள். புண்ணியவதி என்னிடம் மாட்டாதது நலமே. எல்லாம் சேர்ந்த எதிர்வினைதான் ஐயம்மாளின் மீதுள்ள பிடிப்பு. மனித மனம் ஏதேனும் ஒரு கொம்பை பிடித்து பற்றி படர ஆசைப்படுவது இயல்புதானே. அதை நான் இன்னும் கடக்கவில்லை. 

திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற உறுதியான தீர்மானத்துடன் இருந்தேன். அது கடந்த கால கசப்பில் முளைத்த வைராக்கியம். அதைத் தாண்டிய பெரிய லட்சியம் ஒன்றுமில்லை. 

“என் அக்கா பொண்ணுக்கு கூட நாப்பது வயசாகுது. கல்யாணம் வேண்டாம்னுட்டு காலேஜ்ல வாத்தியாரா இருக்கா. என்ன புள்ளங்களோ. சொன்னா கேக்க மாட்டங்குறாங்க. இந்த வயதுல சொன்னா எடுபடுமா!” என்பாள் ஐயம்மாள். 

“எனக்கும் அப்படித்தான். அறிவுரை சொன்னா ஏத்துக்க மாட்டேன். இந்த விஷயத்துல. மேரேஜ் வேண்டாம்னா வேண்டாம்தான்” முற்றுப்புள்ளி வைத்தேன். 

அந்த பெண்தான் ஐயம்மாளின் சிபாரிசில் அவள் வேலை பார்க்கும் கல்லூரியில் எனக்கு எழுத்தர் வேலை வாங்கிக் கொடுத்தாள். பழைய கம்பெனியை விட இரண்டு மடங்கு ஊதியம். சற்று வசதியாக இருந்தது. 

ஐயம்மாளின் பெரிய பையனுக்கு முப்பத்தி ஐந்து வயதை தாண்டிவிட்டது. டீக்கடைகாரன் மனைவியோடு கொஞ்சுவான். தன்னோடு வேலை பார்க்கும் ஒரு பெண்ணோடு சினிமாவுக்குப் போவான். இளையவன் ஜோக்கர் மாதிரி. பெண்கள் வாடை பிடிக்காது. இவர்களுக்கு எப்போது திருமணம் செய்து வைக்கப்போகிறாள். அல்லது தாங்களே செய்துகொள்ளப் போகிறார்கள். கேள்விகள் பல. அவை திருமணத்திற்குப் பின்னும் தொடரும் கற்பனா சக்தி பெற்றது. உலகம் விசித்திரமானதுதான். நிறங்கள் வேறு. மணங்கள் வேறு. ஆனால் எல்லாம் பூக்கள்தான். 

ஒரு புதன்கிழமை அலுவலகத்திற்கு பரபரப்புடன் நுழைந்த ஐயம்மாளின் அக்காள் மகளான பேராசிரியை “சார் சின்னம்மா தவறிட்டாங்கலாம்” என்றாள். 

தூக்கிப்போட்டது. வாரி இறைத்தது. தலையில் சுழலும் மின்விசிறியின் தகடுகள் மாறிமாறி வெட்டுவதுபோன்ற உணர்வு. 

கோபத்தில் ஐயன் என்றும் உபயோகிக்காத புதிய வார்த்தையாய் ‘தேவுடியா நாயே ஏண்டி இப்புடி கொலைக்கிறே’ என்றாராம். நின்றவள் மூர்ச்சையாகி நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழ தலை அடிபட்டு ரத்தம் வழிய அடங்கிப் போனாளாம். 

விரைந்து வீடு வர, ‘நில்லுங்க சார் இங்க எங்க வாறிங்க. நீங்க வரக்கூடாது’ என என்னை தடுத்து நிறுத்திவிட்டான் பெரிய பையன். நான் ஐயம்மாளை பார்க்கக் கூடாதா? நான் வாடகைக்கு இங்கு வருவதற்கு முன்னரே அவர்கள் தாயை வெறுக்கவும் தாய் அவர்களை விட்டு விலகவும் கற்றுக் கொண்டனர். என் பங்கு அதில் ஏதுமில்லை. யார் மீதும் பாசத்தை பரிமாற முடியாதபோது என் மீது படர விட்டாள். ஏக்கத்தில் இருந்த நான் வாங்கிக்கொண்டேன் . அது தற்காலிகமானது. இடையில் விட்டுப்போவதுதானே வாழ்க்கையில் நிரந்தரமானது. 

நேராக அறைக்கு போய் கதவு ஜன்னல்களை சாத்திவிட்டு படுத்துக் கொண்டு அழுதேன். ஐந்து மணியளவில் ஐயம்மாளை அவர்களது தோட்டத்து மூலைக்குள் அடக்கி வைத்தனர். 

இரவு ஏழு மணி வாக்கில் கிளம்பி ஒரு மாலையை வாங்கிக் கொண்டு போய் புதையிடத்து மேட்டில் வைத்தேன். குடிலின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஐயன் என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிப் பிடித்து அழுதார். ஆறுதல் சொல்லத் தெரியவில்லை. 

ஐயன் போன பிறகு அறைக்கு திரும்ப மனமின்றி சமாதியின் அருகில் புல்லும் பூண்டும் கொஞ்ச ஈரமும் கொண்ட மணல் தரையில் அமர்ந்து விட்டேன். கந்தல் கந்தலாக மேகங்கள் மிதந்து முழு நிலவை அறைகுறையாக மறைத்து நகர்ந்து கொண்டிருந்தன. உணர்வுகள் ஏதுமற்று பாரம் மிக்க இரவு நகர்ந்தது. நேரம் ஆக ஆக வெண்மேகங்கள் உருமாறி கருப்பாயின. நிலவெளி மங்கி இருள் சூழ்ந்தது. பெரியவனாக வளர்ந்த பின்னும் சுடுகாடு, சமாதிப் பக்கம் சென்றால் ஒரு பயம் என்னை இருத்தும். ஆனால் மையிருட்டில் ஐயம்மாவின் பக்கம் நான் இருந்தபோது அச்சமற்றுப் போனேன். மெல்ல தூரல்கள் விழுந்து மண்ணை விட்டு வாசம் கிளம்பி எங்களை சூழ்ந்து கொண்டது. நனைந்துகொண்டே எழுந்து வரப்பில் அமர்ந்து கொண்டேன். மழை வலுத்து என்னையும் சமாதியையும் கரைத்தது. அந்த ஈர இரவின் விழிப்பு தாய்மையில் நிறைந்திருந்தது. சற்று குளிர்ந்த இதயத்தோடு விடிகாலை அறையை அடைந்தேன். 

மறுநாள் அறையை காலி செய்துவிட்டு தூரத்தில் நண்பன் தங்கி இருக்கும் மேன்ஷனுக்கு போய்விட்டேன்.

– எட்டி மரக்காடு சிறுகதை தொகுப்பில் வெளியான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *