கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 4,222 
 

(1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுசீலா வக்கீல் ராஜமய்யரின் மூத்த பெண். அவள் சிறு வயதிலிருந்தே அதிக வசீகரத் தோற்றமுடையவ ளென்பது பிரசித்தம், சற்று மாநிறமாயினும், அவள் இரு விழிகளும் அதிக கருமையாகவும், புருவங்கள் செவ்வனே வளைந்து மிகக் கருப்போடியனவாகவும் இருந்தன. “ஏன்? ஏன்?” என்ற கேள்விகளை அவள் கண்கள் சதா கேட்பவை போன்று தோன்றும். அதற்குச் சாதகமாக அவள் புருவங்கள் வளைந்து சிற்சில சமயம் கண்களுக்கு மேலே பாதி சுழித்துக் கொள்ளும். அப்போது அவளைப் பார்ப்பவர் களுக்கு ஆச்சரியமும் அமைதி இன்மையும் ஏற்படும்.

அவளுக்கு பதினான்கு வயது ஆகும்போது, அவளுடைய பார்வையின் ஒளி கொஞ்சம் குறைவுற்றது. பளீரென்று மின்னல் போன்று தாக்காமல், வசீகரச் சோர்வுற்று அவள் கண்கள் வருத்தமுற்ற கேள்விக் குறியாகத் தோன்றின. பழையபடியே பள்ளிக்கூடத்திற்குச் சென்று வந்தாள். அப்போது அவள் எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள்.

அவள் வீட்டிற்கு எதிர் வீட்டில் மாதவன் இருந்தான். மாதவன் மிராசுதார் கிருஷ்ணய்யரின் ஒரே புதல்வன். அவன் நல்ல சிவப்பு நிறமும் அழகிய தோற்றமும் உள்ளவன். அவன் முகத்தில் சதா ஆனந்தமும் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும். அவனும் சுசீலா படித்துவந்த பள்ளிக் கூடத்திலேயே அப்போது பத்தாவது வகுப்பில் படித்து வந்தான். சுசீலாவை இவன் சிறு வயதிலிருந்து பார்த்திருந்தும் அவளோடு பேசியது கிடையாது. தன் வீட்டு மாடியில் சில வேளையில் இவன் உலாவும்போது சுசீலாவை அவள் வீட்டுத் திண்ணையில் நிற்கப் பார்த்ததுண்டு.

ஒரு நாள் மாதவன் பள்ளி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். பாதி வழியில் வீடு போய்க் கொண்டிருக்கும் சுசீலாவைக் கண்டான். அவள் அருகில் அவன் நெருங்க நெருங்கதான் அவளுக்கு வெகு தூரத்திலிருப்பதாக எண்ணம் ஏற்பட்டது அவனுக்கு, அவள் பின்புறத்திலேயே சற்றுத் தள்ளி வந்து கொண்டிருந்தான். “சுசீலா, நானும் வீட்டிற்குத்தானே போகிறேன். இருவரும் சேர்ந்து போகலாமே?” என்று திடீரென்று கேட்டான். அவள் திடுக்கிட்டுப் பின்புறம் திரும்பிப் பார்த்தாள். அவள் புருவங்கள் சற்று உயர்ந்து, கண்களும் சிறிது பெரிதாகி, “ஏன், எதற்கு?” என்று வியப்போடு கேட்டதுபோல் தோன்றின. மாதவன் தன் மனக் கட்டுப்பாட்டை இழந்தவன் போன்று, “சுசீ நான் உன்னை மறக்க மாட்டேன். நீயும் என்னை மறக்காமல் இருக்கிறாயா?” என்று பொருத்தமில்லாமலே கேட்டான். “என்ன, ஏன்?” என்று அவள் அவனைக் கேட்டதுதான் அவனுக்குத் தெரிந்தது. சிறிது ஆனந்தம் அவன் மனதில் தோன்றி மறைந்தது. மாதவன் “ஏன், எதற்கு?” என்ற கேள்வி கேட்டுப் பழக்கப்படாதவன். ஆயினும் அன்று அவள் வாயினின்றும் வந்த அச் சொல்லினால் “ஏன் அவள் என்னிடம் இப்படி இருக்கிறாள்” என்று எண்ணலானான். வேறு பேச்சில்லாமலே இருவரும் தத்தம் வீடு போய்ச் சேர்ந்தார்கள். வீடு சேர்ந்ததும் மாதவன் வழியில் நடந்தவைகளை மறந்தவன் போல் ஆனான். பந்தடி மேடையிலிருந்து அவன் விளையாடிவிட்டு இரவு வீடு வந்ததும் பழைய மாதவனே போன்றுதான், சாயங்காலம் நடந்த சம்பவம் அர்த்தமற்ற ஒரு நிகழ்ச்சி என்றுதான் இவன் மனதில் பட்டது.

சுசீலாவிற்கு கலியாணம் நிச்சயமாகி அந்த வருஷம் கோடைக்கால விடுமுறைக்குள்ளே நடந்தது. கலியாணம் நடக்கும்போது மாதவன் ஊரிலில்லை. விடுமுறைக்காகத் தன் மாமன் கிராமம் சென்றிருந்தான். அவளுக்குக் கலியாணமான விஷயமும் அவனுக்குத் தெரியாது.

அந்த வருஷம் அவன் பரீக்ஷையில் தேறிவிட்டான். கலாசாலைப் படிப்பிற்காக அவன் மறுவருஷம் பட்டணம் போய்விட்டான். அடிக்கடி மாதவன் ஊருக்கு வருவதும் இல்லை. சுசீலாவைப் பற்றிய எண்ணமே அவனுக்கு இல்லை. அவளை மறந்தவன் போன்றே ஆனான். அந்த வருஷம் கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது சுசீலா புக்ககம் சென்றிருந்தாள். அவன் தன் வீட்டு மாடியில் மேலும் கீழும் உலாவும்போது சிலசில சமயத்தில் ராஜமய்யரின் வீட்டுத் திண்ணையைப் பார்ப்பான். அங்கு சுசீலாவைப் பார்க்க முடியாததும் அவன் மூளையில் படவில்லை. அதுவும் அர்த்தமில்லாமலும் ஏன் என்று தெரியாமலும் பார்ப்பதுதான்.

மற்றும் இரண்டு வருஷங்கள் சாதாரணமாகவே கழிந்தன. மாதவன் படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருந்தது. விடுமுறைக்காக அவன் ஊர் வந்திருந்த அந்தச் சமயம் சுசீலாவும் தன் தகப்பனார் வீட்டிலிருந்தாள். அப்போது அவளுக்கு ஒரு வயதுக் குழந்தை ஒன்று இருந்தது.

ஒரு நாள் மத்தியானம் மாதவன் தன் வீட்டின் மாடியில் நின்றுகொண்டு இருக்கும்போது எதேச்சையாக ராஜமய்யரின் வீட்டுத் திண்ணைப் பக்கம் பார்த்தான். அச்சமயம் சுசீலா தன் அழும் குழந்தைக்கு, தெருவில் போகும் வண்டியை விளையாட்டுக் காட்டிக்கொண்டு இருந்தாள். அவளையே பார்த்துக்கொண்டு மாதவன் கற்சிலை போன்று நின்று இருந்தான். “ஏன்?” என்ற கேள்வி எழுந்துவிட்டால் ஒருவன் மூளையை இழந்தவன் போன்றாகி விடுகிறான். சிறிது நேரம் சென்றவுடன் சுசீலா அவன் நிற்கும் மாடிப் பக்கம் பார்த்தாள். அவனை நான்கு வருஷங்களுக்குப் பிறகு அப்பொழுதுதான் அவள் பார்க்கிறாள். அப்பொழுது அவனிடம் தோன்றிய மாறுதல் அவள் மனதில் படாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் முகத்தில் அவ்வகை மாறுதல் ஏன் என்று மட்டும் அவளுக்குத் தெரியவில்லை.

மாதவனுக்கு அவள் கண்கள் பழையபடியே கேள்விக் குறிகளாகத் தோன்றின. சிறிது நேரம் கழித்து சுசீலா வீட்டினுள் சென்று மறைந்து விட்டாள். மாதவன் தான் பாதி படித்துவிட்டு பிரித்தபடியே விட்டிருந்த புத்தகத்தினிடம் செல்லவில்லை. திடீரென்று ஏன் என்ற கேள்வி அவன் மனத்திடையே எழுந்து விட்டது. சந்தோஷக்களையையும் அவன் முகத்தினின்று இழந்தான். மன நிம்மதியும் அதே கணத்தில் அவனை விட்டு அகன்றது.

அவள் பார்வையின் தத்துவத்தை அவன் அறிந்து கொண்டான் போலும். திடீரென்று ஏற்பட்ட சிந்தனை மாறுதலால் அவன் சந்தோஷத்தையும் மன நிம்மதியை யும் இழந்தான் என்று சொல்லுவது அவ்வளவு சரியல்ல. அவள் பார்வையின் கேள்விக் குறி இவனைத்தாக்கி, அதற்குத் தன் மனத்தில் தனக்குச் சாதகமாக அளித்துக் கொண்ட விடையும், மறுபடியும் மற்றொரு கேள்வியின் ஆரம்பம்தானே?

அது முதல் அவன் ஒடுங்கலுற்றான். தேகமும் மிக மெலிந்து இளைக்கலுற்றது. எல்லாவற்றையும் பற்றி யோசிக்கலானான். அவன் யோசனைகளெல்லாம் ஆரம்பித்த இடமான கசீலா இடத்திலே முடிவடைந்து, முற்றிலும் முடியாமல், திரும்பவும் ஆரம்பிப்பதுபோன்று சலிக்க ஆரம்பித்தன. கலாசாலை திறக்க இன்னும் பத்து நாட்களே இருந்தன. ஆனால் சுசீலாவைப் புக்ககத்திற்குக் கொண்டு போய்விட வேண்டிய நாள் வர பதிமூன்று தினங்கள் இருந்தன.

இரண்டொரு நாளில் மாதவனுக்குச் சுரம் கண்டது. அச்சுரம் வரவர அதிகமாகி மூளையைப் பற்றின கடுஞ் சுரமாக மாறியது. சொந்தப் பிரக்ஞையுடன் இருக்கும் போது “ஏன், ஏன்?” என்று மனதில் கேட்டுக் கேட்டு களைப்படைந்து பிரக்ஞையை இழக்கும் போது, சோர்வுற்று சற்று தூங்குவான்.

அப்போது அவன் தன்னையறியாமல் பிதற்றுவான். ஆனால் அவனையும் சுசீலாவையும் பிடித்த நல்ல காலம் அவன் பிதற்றல் பட்டணத்தையும் அவன் படிப்பையும் பற்றியதாகவே இருந்தது.

அவன் கலாசாலை திறக்கும் தினத்துக்கு முதல் நாள் காலையில் எவ்வகை சிகிச்சையும் பயன்படாது இறந்து போனான். சாதாரணமாக இருப்பின் அவன் அன்று பட்டணம் கிளம்பிப் போக வேண்டியவன். அவன் இறக்கும் போது தன் ஜீவியத்தை வெறுக்கும் கசப்பின் வேகத்தைச் சற்று உறுதியுடன் எதிர்பார்ப்பவன் போன்று “மூட்டை களைக் கட்டு, இன்று பட்டணத்துக்குப் புறப்பட வேண்டும்” என்று சொல்லித்தான் இறந்தான். அவன் இறந்த பிறகு அவன் பெற்றோர் எவ்வளவோ வாய்விட்டு அலறினார்கள். ஆனால் அவர்களுக்கு மன ஆறுதல் ஏற்படாதென்றுதான் தோன்றியது.

சுசீலா அவன் பிரேதம் சுடுகாட்டிற்குக் கொண்டு போகப்பட்டபோது வீட்டுத் திண்ணையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். மாதவனுடைய பெற்றோர் ஒன்றுக் கொன்று சம்பந்தமற்ற வார்த்தைகளால் ஓலமிட்டது அவளுக்கு வியப்பையே கொடுத்தது. அவள் கண்களும் புருவங்களும் எப்போதையும் போல ‘ஏன்’ என்பதுபோலச் சுழித்த ன.

அவள் கண்களின் தோற்றம் தன் ஆட்சியை மீறி, பழக்கத்தின் காரணமாகவே மனத்தில் தோன்றியதைவிட்டு வேறு எதையோ குறிப்பதுபோலத்தான் அப்போதும் இருந்தது. கண்களினின்றும் கன்னம் வழியாக ஓடி, முத்துப்

போன்று கீழே விழுந்து சிதைவுற்றுப் போன இரு சொட்டுக் கண்ணீரும் ‘ஏன்’ என்ற கேள்விக்கும் அகப்படாமலேதான் கீழே சொட்டின.

உள்ளே இருந்து ‘சுசீ’ என்று அவள் தாயார் கூப்பிட்ட போதும் ‘ஏன்’ என்று தெரியாமலேதான் உள்ளே சென்றாள்.

பட்டணத்தில் உயர்தரக் கல்லூரி திறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. மாதவனது மரணத்தைப் பற்றி அறியாத அவன் சிநேகிதர்கள் அவன் ஒரு மாதம் வரையிலும் வராததைப் பற்றி ஆச்சரியம் அடைந்தனர். இவ்வளவு மேன்மையான புத்தியை உடைய மாதவன் ஏன் படிப்பை நிறுத்தி விட்டான் என்று கேட்டு ஒன்றும் புரியாமலும், தெரியாமலும் திகைத்தனர்.

சுசீலாவும் புக்ககம் சென்று கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது. இப்போது ஊரிலிருந்து வந்தது முதல், அவள் கண்கள் என்றுமில்லாத ஒரு மகத்தான சோகம் கலந்த வசீகரத் தோற்றமுடையவையாக ஏன் தோன்றுகின்றன என்று அறிய முடியாமலே, அவளைப் பார்க்குங் கால் ஆனந்தமடைந்து கொண்டு இருந்தான் அவள் கணவன்.

நானோவெனில் எல்லாம் தெரிந்தும் ஒன்றும் தோன்றாமல் என் நண்பன் இறந்ததைக் குறித்து மனம் புகைந்து கொண்டிருக்கிறேன்.

– மணிக்கொடி 1936

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *