ஏங்க,ஏங்க சத்தம் கேட்டு கண்விழித்த பாபுவுக்கு முன் அவன் மனைவி கையில் ஆவி பறக்க காப்பியை கையில் வைத்துக்கொண்டு போய் மூஞ்சிய கழுவிட்டு வந்து பேப்பரை படிச்சுட்டு இந்த காப்பிய குடிங்க, என்று அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு சென்றாள். இவனுக்கு ஒரே ஆச்சர்யம் இவள் நம் மனைவிதானா? இவ்வளவு அமைதியாக என் மனைவி இதுவரை என்னிடம் பேசியதே இல்லையே, ஆச்சர்யத்துடன் முகம் கழுவ சென்றான்.
நாற்காலியில் உட்கார்ந்து காப்பியை ருசித்து குடித்துக்கொண்டிருந்த பாபுவிடம் ஏங்க நீங்கபேப்பர் படிச்சுட்டு மெதுவா குளிச்சு ரெடியாகுங்க, நான் பசங்களை குளிக்க வச்சு ஸ்கூலுக்கு ரெடி பண்ணிடுறேன். டிபன் பாக்ஸ் இப்ப எடுத்து வச்சுட்டு அவங்களை குளிக்க வைக்க போறேன்,என்று சொல்லிவிட்டு சென்றாள். காப்பி குடித்துக்கொண்டிருந்த பாபுவுக்கு இன்று என்ன நாள் என்று பார்த்தான்.என் மனைவி இப்படியெல்லாம் பதவிசாக என்னிடம் பேசியதே இல்லையே. யோசித்தவன், மெல்ல காப்பியை ருசித்து, அருகில இருந்த செய்திதாளை விரித்து படிக்க ஆரம்பித்தான்.
சிக்னல் போட்டதை கவனிக்காமல் வெள்ளைக்கோட்டை தாண்டி நிறுத்தியவன் பயத்துடன் போலீசை பார்க்க,அவர் சிரிப்புடன் கொஞ்சம் பின்னாடி போயிக்குங்க சார், என்று சொன்னார்.பாபுவுக்கு ஒரே ஆச்சர்யம், இவர் நம்ம போலீஸ்தானா?இந்நேரம் காட்டு கத்தல் கத்தி எல்லோரையும் நம்மை நோக்கி வேடிக்கை பார்க்க வைத்திருப்பாரே.
அதே ஆச்சர்யத்துடன் வண்டியை ஆபீஸ் நோக்கி செலுத்தினான்.
“வணக்கம் சார்” செக்யூரிட்டியின் வணக்கத்துக்கு பதில் வணக்கம் செலுத்திய்வாறே என்ன ஆச்சு இன்னைக்கு எல்லாரும், ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே என்று நினைத்துக்கொண்டு தன் டேபிளை ஆடைந்தவன் ஆண்டவா இன்னைக்கு எல்லாமே நல்லபடியா நடந்து கிட்டு இருக்கு, இப்படியே நடக்க நீதான் அருள் புரியணும் மனமுருகி வேண்டிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தான்.
ஒரு மணி நேரம் கழிந்து அலுவலக உதவியாளர் அவனிடம் வந்து சார் மேனேஜ்ர் உங்களை கூப்பிடறாரு என்றவுடன் கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டது. இருந்தாலும் மெல்ல எழுந்து மானேஜர் அறையை தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான். வாங்க வாங்க புன் சிரிப்புடன் எழுந்து மேனேஜர் இவனை வரவேற்று “ வாழ்த்துக்கள் பாபு” உங்களுக்கு ஒரு சந்தோசமான சமாச்சாரம் சொல்றேன் அமொரிக்காவுல இருக்கற நம்ப கம்பெனி பிராஞ்சுக்கு மூணு மாசம் டெபுடேசன்ல உங்களை போக சொல்லியிருக்கிறாங்க, கூட உங்க குடும்பத்தையும் கூட்டிட்டு போறதுக்கு கம்பெனி அனுமதி கொடுத்து இருக்கு, அவன் கையை பிடித்து குலுக்கு குலுக்கு என்று குலுக்கினார்.
இவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை, சார்,சண்களில் கண்ணீர் திரண்டது. நான் ஒரு சாதாரண கிளார்க், என்னை எப்படி கம்பெனி இந்த வேலைக்கு அனுப்பறாங்க, அதுவும் என்னைவிட பல சீனியர்சும், நல்ல அறிவாளிகளும் இருக்கும் போது, சொல்லும்போதே அவன் கண்ணீர் கட கட வென கண்களில் இருந்து உருண்டது.
அமைதி, அமைதி, யார் யாருக்கு கிடைக்கணும்னு இருக்கோ அவங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். இது பத்தி நீங்க அலட்டிக்கவேண்டும். இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு, நீங்க கிளம்பறதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பியுங்க. விடை பெற்று வெளியே வந்தவனிடம் அங்குள்ள அனைவரும் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார்கள்.
அவனுக்கு மனசு பர பரத்தது, மனைவியிடம் இந்த செய்தியை சொல்ல வேண்டும். இப்பொழுதே சொல்லலாமா என்று நினைத்தவன் வேண்டாம் சர்ப்பரைசாக குழைந்தகள் அனைவரையும் கூட்டி வைத்து சொல்ல வேண்டும்.நினைத்துக்கொண்டவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தான்.இன்று உண்மையிலேயே நல்ல நாள் எனக்கு. வீட்டில் ஆரம்பித்து இதுவரை என்னை மகிழ்ச்சிகடலில் திளைக்க வைத்து கொண்டே இருக்கிறது.
மாலையில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து போன், கொஞ்சம் வர முடியுமா என்று, சென்றவனை அக்கவுண்ட்ஸ் மேனேஜர் எதிரில் உட்கார வைத்து சார் வீடு கட்ட லோன் கேட்டு இருக்கீங்க? எல்லாம் சரியாயிருக்கு, ஆனா நீங்க பத்து இலட்சம் கேட்டிருகீங்க உங்க சர்வீஸ், இனி செய்ய போற சர்வீஸ் இதெல்லாம் கால்குலேட் பண்ணா எட்டு இலட்சம் கிடைக்கும், என்ன சொல்றீங்க? கேட்டவருக்கு என்ன பதில் சொல்வது என்று திகைத்தான்.உண்மையில் இவன் எதிர் பார்த்தது ஏழு இலட்சம்தான், இப்பொழுது எட்டாகவே தருவதாக சொன்னவுடன், போதும் சார், இதைய பாஸ் பண்ணிக்கொடுங்க சார் என்று அடக்கத்துடன் சொன்னான்.
ஓ.கே, மிஸ்டர் பாபு, அடுத்து என்ன செய்யணும்னு நம்ம கிளார்க் சீனு உங்க கிட்ட சொல்வாரு, நீங்க குடும்பத்தோட அமொரிக்க போறதா கேள்விப்பட்டேன், அதுவும் கம்பெனி செலவுல, ரொம்ப சந்தோசம்,வாழ்த்துக்கள், போயிட்டு வந்து மத்த வேலையெல்லாம் செஞ்சு கொடுத்துடுங்க முடித்துக்கொண்டார். நன்றியுடன் விடை பெற்று வெளியே வந்தான்.
மாலை வெளியே வந்தவனின் மனம் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது. உடனே வீட்டுக்கு செல்ல மனம் வரவில்லை. மெல்ல லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சென்றவன் நரசிம்மர் முன் மனமுருகி நின்றான். எதுவும் வேண்ட தோன்றவில்லை. ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவன், வீட்டுக்கு திண்பண்டங்களும்,சில பொருட்களும் வாங்க கடைவீதிக்குள் வண்டியை நுழைத்தான்.
வீட்டிற்குள் நுழைந்தவன் தன் மனைவியையும், குழந்தைகளையும் ஒரு சேர அழைத்தான். படித்துக்கொண்டிருந்த குழந்தைகளுடன் அவன் மனைவி வர அவர்களை நிற்கவைத்து வாங்கி வந்திருந்த பொருட்களை மனைவி கையிலும், குழந்தைகள் கையிலும் கொடுத்தான்.மனைவி வியப்புடன் ஏதுங்க, இவ்வளவு சாமாங்களை வாங்கிட்டு வந்திருக்கிறீங்க, என்றவளை இங்க வா என்று அவள் தோளைப்பற்றி முன் நிறுத்தி இன்னும் பதினைந்து நாள் கழிச்சு நாம எல்லாம் அமொரிக்க போகப்போறோம்.மனைவி விரித்த கண்களை மூடாமல் நிசமாகவா
சொல்றீங்க..என்றவளை ஆமாம்,என்று அவள் தோளைப்பற்றி சொன்னான்.
குழந்தைகளும் “ஹோ ஹோ’என்று கத்திக்கொண்டு அவன் மீது ஏறி அவனை உலுக்கின.
உலுக்கி உலுக்கி,அவன் கண்டு கொள்ளாததால்,தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தண்ணீர் தெளித்தன, தண்ணீர் பட்டவுடன் முகத்தை துடைத்து பார்த்தவனை சுற்றி அவன் குழந்தைகள் நின்று கொண்டு “ஸ்கூலுக்கு நேரமாச்சு குளிச்சு விடு” என்று சொன்னார்கள். விழித்து பார்த்தவன் “விழித்தபடியே இது வரை கண்டது கனவா?”
துக்கத்துடன் எழுந்து குழந்தைகளுடன் குளியலறைக்கு சென்றான்.