எல்லே இளம் கிளியே…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 4,498 
 
 

மணி எட்டு ஆகிவிட்டது. அவசர அவசரமாக பள்ளி செல்ல தயாரானாள் சுந்தரி. அவள் கணவன் சுப்பிரமணியன் அப்போது தான் குளிக்கச் சென்றான். காலையில் இட்லி சாப்பிட்டு கையில் தயிர் சாதம் எடுத்துக் கொண்டாள். கணவனுக்கும் டிபன் எடுத்து வைத்தாள்.

குளித்து உடை மாற்றி ஆபீஸ் செல்ல தயாராகி சாப்பிட அமர்ந்தான். கருப்பு நிற பேண்டும் அதற்குப் பொருத்தமாக சிவப்பு கருப்பு கலந்த சிறிய கட்டங்கள் போட்ட முழுக்கை சட்டை அவன் அழகை மேம்படுத்திக் காட்டியது.ஆறு அடி உயரமும் ,கூர்மையான பார்வையும், நீண்ட மூக்குமாக மஞ்சள் நிறத்தில் தெலுங்கு பட ஹீரோ போன்றிருந்தான்.

சுந்தரிக்கு அவன் அழகை ரசிக்க நேரம் இல்லை. எப்போதும் காலை எட்டு மணிக்கே அவள் வேலை செய்யும் பள்ளிக்கு நடையைக் கட்டி விடுவாள். பத்து நிமிட நடையில் பள்ளிக்குப் போய் சேர்ந்து விடலாம். இன்று சற்று தாமதமாகி விட்டது.

பள்ளிக்கு கிளம்பும் போது அவள் அம்மாவிடமிருந்து போன் வந்தது.

சுந்தரிக்கும் சுப்பிரமணியனுக்கும் கல்யாணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன.

வரும் தீபாவளி தலைதீபாவளி, அதனால் சுந்தரிக்கும், சுப்பிரமணியனுக்கும் திருச்சியிலேயே துணிமணிகள் வாங்கி வைக்கவா? அல்லது அவர்கள் சென்னையில் வாங்க விருப்பப் படுகிறார்களா? என்று அம்மா கேட்டாள்.

திருச்சியிலேயே வாங்கி விடுங்கள் அம்மா, என்று சுந்தரி கூறினாள்.

சுப்பிரமணியும், “தீபாவளிக்கு ஒருவாரம் தான் விடுமுறை எடுக்க இயலும். முதலில் திண்டுக்கல் சென்று தன் தாய் தகப்பனைப் பார்த்து விட்டு பிறகு திருச்சி செல்லலாம்” என்று தீர்மானமாக கூறினான்.

“நேரமாகிவிட்டது. தயவுசெய்து இன்று என்னை பள்ளிக்கூடத்தில் இறக்கி விட்டு நீங்கள் ஆபீஸுக்குப் போங்களேன்” என்றாள் கெஞ்சும் விழிகளுடன். அவனும் சம்மதிக்கவே பைக்கில் பின்னால் ஏறி அமர்ந்தாள்.

பக்கத்து வீட்டு சீமாவும் அதே நேரத்தில் கல்லூரிக்கு ஸ்கூட்டியில் கிளம்பினாள். அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் சுப்பிரமணிக்கு திண்டுக்கல்லில் அவன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இருக்கும் மாயாவின் நினைவு தான் வரும். இவன் கல்லூரிக்குச் செல்லும் நேரம் பார்த்து சரியாக அவள் வீட்டு கேட் அருகில் ஓடி வந்து நிற்பாள். தன்னைப் பார்ப்பதற்காகத் தான் அவள் தினமும் அங்கு வந்து நிற்கிறாள் என்பது இவனுக்கும் தெரியும். மாயாவின் நினைவு வந்ததும் தன்னறியாமலே அவனுக்குச் சிரிப்பு வந்தது. தெருவைப் பாருத்து ஓட்டுங்கள் என்று சுந்தரி கூறினாள்.

பெரிய அகலமான தெருவாக இருந்தாலும் பள்ளி செல்லும் நேரமாக இருந்ததால் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருந்தது. அதனால் மிக நிதானமாகவே வண்டியை ஓட்டினான்.

பள்ளிக்கூடத்தில் அருகில் ஓர் வாகை மரம் இருந்தது. அதன் கீழ் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். சுப்பிரமணியன் பார்க்கும் போது வெகு அழகாக தன் முத்துப் பற்களைக் காட்டி சிரித்தாள். சுப்பிரமணியனும் முகம் மலர்ந்து தன்னைப் பார்த்து சிரித்தவளைப் பார்த்து பதிலுக்குச் சிரித்தான். கருநீல வர்ண பார்டருடன் கூடிய பச்சை வர்ண புடவை அவளின் சந்தன நிறத்துக்கு ரொம்பவும் பாந்தமாக இருந்தது. “மயில் போல மிகவும் ஒயிலாக நிற்கிறாளே. இவள் யாரென்று தெரியவில்லையே. நம்மைப் பார்த்து எதற்காக சிரிக்கிறாள்?” என்று அவளைக் கடக்கும் ஒரு நொடிக்குள் ஏகப்பட்ட சிந்தனை.

சுந்தரியை பள்ளிக்கூடம் வாசலில் இறக்கி விட்டதும் குழந்தைகள் கூட்டத்துடன் உள்ளே சென்று விட்டாள். சுப்பிரமணியனும் ஆபீஸ் போய் வேலையில் மூழ்கிவிட்டான். மாலை வீடு திரும்ப ஏழு மணியாகிவிட்டது.

வழக்கமாக அவன் வீடு திரும்பும் போது சுந்தரி வாசலில் காத்திருப்பாள். பள்ளிக்குச் செல்லும் போது புடவையிலும் வீட்டில் இருக்கும் போது சுடிதாரிலும் இருப்பாள். சிரித்தபடி வாசலில் நிற்கும் சுந்தரியை இன்று காணவில்லை. ஏதோ கொஞ்சம் நெருடலாக இருந்தது. வீட்டினுள் நுழைந்ததும் சுந்தரியின் முகம் சற்று கோபமாக இருப்பது போல் தோன்றியது. ஒருவேளை பிரமையோ? இதுநாள் வரை அவள் கோபப்பட்டுப் பார்த்ததில்லையே.

கைகால் முகம் கழுவி வீட்டில் அணியும் பர்முடஸும் பனியனும் அணிந்து சோபாவில் வந்து அமர்ந்தான். மணக்க மணக்க காபியைக் கொண்டு வந்து அவன் கையில் கொடுக்காமல் டீபாயில் ணங்கென்று வைத்தாள் சுந்தரி.

ஆஹா, கோபமே தான், எதற்காக என்று கேட்பதற்குள் அவளே ஆரம்பித்தாள்.

“விமலா டீச்சரைப் பார்த்து எதற்காக சிரித்தீர்கள்?” என்று.

“விமலாவாவது கமலாவாவது, எனக்கு யாரையும் தெரியாதே” என்றான் மிகவும் அப்பாவியாக.

“பொய் மட்டும் சொல்லாதீர்கள். உங்களுக்கு கல்யாணமாகி விட்டதல்லவா? ஒரு பக்குவம் வேண்டாம்?” பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்.

முதன்முதலாக அவள் கோபத்தைப் பார்க்கும் போது அவனுக்கு சிரிப்பாக வந்தது. “ஏம்மா, எனக்கு கல்யாணமாகி கிளி போல பெண்டாட்டி என் முன் நிற்கிறாய். நான் ஏனம்மா இன்னொரு பெண்ணைப் பார்த்துச் சிரிக்கிறேன்?” என்றான்.

“ஓஹோ! நான் கிளியா? அப்போ விமலா டீச்சர் என்ன மயிலா?”

என்றவுடன் டக்கெனப் புரிந்தது சுப்பிரமணிக்கு. அன்று காலை மயில் போல ஒயிலாக நின்றிருந்த பெண்ணைப் பார்த்து அவன் சிரித்தது. எமகாதகி! எப்படி கல்யாணம் முடிந்த மூன்றே மாதங்களில் தன்னை முழுமையாகப் புரிந்து வைத்திருக்கிறாள்?

“ஓ, அவள் தான் விமலாவா? என்னைப் பார்த்துச் சிரித்தாள் அதனால் ஒரு மரியாதைக்காக நானும் சிரித்தேன்” என்றான்.

“ஓ, அப்படி ஒரு நினைப்பு உங்களுக்கு இருக்கிறதா? பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்தல்லவோ விமலா டீச்சர் சிரித்தார்கள?. உங்களுக்கு வியவஸ்தை ஒன்றும் கிடையாதா? அவங்க எப்படி முழிச்சிட்டாங்க தெரியுமா உங்களுக்கு? என்ன டீச்சர் உங்க கணவர் இப்படி சிரிக்கிறார்? என்றதுமே எனக்கு மானம் போய்விட்டது” பேசிக் கொண்டே போனாள் சுந்தரி.

சுப்பிரமணி விழுந்து விழுந்து சிரித்தான். “ஓ, உன்னைப் பார்த்து தான் சிரித்தாளா? அது தானேப் பார்த்தேன். என்னடா நமக்கு இவளைத் தெரியவே தெரியாதே. ஆனால் ரொம்பத் தெரிந்தவள் போல சிரிக்கிறாளே , இவள் யாராக இருக்கும் என்று யோசித்தேன்” அடக்க மாட்டாமல் சிரித்தான் சுப்பிரமணி.

அவன் அடாது சிரித்தாலும் விடாது அர்ச்சனை சுப்பிரமணிக்கு கிடைத்தது. கிளி கீக்கீ , கீக்கீயென்று கத்திக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “எல்லே இளம் கிளியே…

  1. எல்லா பெண்களும் இப்படி தான் என்று நினைக்க தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *