என் வீடு எங்கே?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 7,064 
 
 

ழேய்..யார்ராது? குழறிக்கொண்டே எங்கோ பார்த்துக்கொண்டு மிரட்டினான் அன்னாசி.யாரும் அவனுக்கு பதில் கொடுக்காததால் தூ..என்று காற்றை பார்த்து துப்பினான். அவனின் இடுப்பில் இருந்து அவிழ்ந்த வேட்டியை எடுத்து மடிக்க குனிந்தவன் தடுமாற்றம் வந்ததால் பேசாமல் நிமிர்ந்து நின்று மறுபடியும் ழேய்…யார்ராது?தன் குரலை உயர்த்த முயற்சித்தான்.அவனின் மூளையில் முகுலத்தில் போய் உட்கார்ந்து கொண்ட உற்சாக பானத்தின் சுவை இப்பொழுது அவிழ்ந்து கொண்டே வந்த அவனது வேட்டியை எடுத்து கட்ட முடியாத நிலையை உருவாக்கி விட்டது. இப்பொழுது தான் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நினைவு படுத்த முயற்சித்தவன்,முடியாமல் தலை குனிந்து நின்று கொண்டான். பின் திடீரென்று நிமிர்ந்தவன் காலை எடுத்து ஒரு அடி வைக்க முயற்சித்தான்.ஹூம்..கால்கள் பின்னோக்கியே இழுத்தது.தன் கையை எடுத்து காற்றில் வீசினான். அது அவனையே சுற்றி சுற்றி வருவதாக அவனுக்கு பட்டது.இப்பொழுது அவனது கை எவ்வளவு சுற்றி வீசினாலும் அவனின் இடுப்புக்கருகேயே வருவது அவனுக்கு வேடிக்கையாக இருந்த்தது. தன் கைகளையே அந்த பக்கமும் இந்த பக்கமும் பார்த்து கெக்கலிட்டு சிரித்தான்.

சர்ரென்று அவனை விட்டு தள்ளி சென்ற இரு சக்கர வாகன ஓட்டியை பார்த்து ஒரு வசவு வார்த்தையை வீசினான். அது அவனுக்கு காதுக்கு கேட்டிருக்குமா என்று தெரியவில்லை, அதற்குள் அது காத தூரம் போய் விட்டது. வீடு எங்கிருக்கிறது என்று அவனுக்கு நினைவு வருவதாக தெரியவில்லை.அப்படியே உட்காரப்போனான்.கொஞ்சம் அறிவு விழித்தது. யாராவது வண்டியை கொண்டு மோதி விட்டால் என்ன செய்வது? ழேய்..யார்ராது? மீண்டும் ஒரு முறை உறுமிக்கொண்டவன் தனது காலை அகலமாக வைத்து ஒரு அடி எடுத்து வைத்தான். இது கொஞ்சம் முன்னேற்றம் தந்தது. தடுமாற்றம் குறைவாக இருந்ததால், இப்பொழுது அடுத்த அடி எடுத்து வைக்க முயற்சி செய்தான்.

இப்பொழுது அவனுக்கு தன் நண்பனை பற்றி ஞாபகம் தோன்றியது.டேய் குஞ்சப்பா..எங்கடா போன? என் கூட தான வந்த? இப்ப எங்க போய் தொலைஞ்ச? துரோகி, காறி துப்பினான். என்னைய விட்டுட்டு எங்கேயோ போய் தொலைஞ்சுட்டான். அவன் தானே கூட்டி போனான், ஒண்ணாத்தானே உட்கார்ந்து தண்ணியடிச்சோம். அப்புறம் எங்க போனான்? மீண்டும் ஒரு வசவு வார்த்தையை வீசினான்.நான் இப்ப எப்படி வீட்டுக்கு போவேன்? ஓ… அழ ஆரம்பித்தான்.எதிரில் எல்லாமே பொட்டலாய் தெரிந்தது.

த்தா..த்தா ஒரு சிறு பெண் கோழி ஒன்றை விரட்டிக்கொண்டே இவனை கடந்து போனாள்.இவன் வேட்டி அவிழ்ந்து தடுமாறி நிற்பதை அந்த பெண் கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை, அவளது கவனம் முழுவது அந்த கோழியை பிடிப்பதிலேதான் இருந்தது. க்.க்..கோழியை போல சத்தம் எழுப்பிக்கொண்டே குனிந்து ஓடியவள் ஒரு கட்டத்தில் கோழியை பிடித்து விட்டாள். உன்னைய..கொண்டையில் ஒரு தட்டு தட்டிவிட்டி தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு அவனை தாண்டி சென்றாள்.

இவனுக்கு அந்த பெண்ணிடம் வீட்டுக்கு வழி கேட்க வேண்டும் என்று தோன்றியது. ழேய்…காற்றில் இவன் கூவியது பிசிறி காணாமல் போனது. அந்த பெண் அவனை தாண்டி சென்று கொண்டே இருந்தாள். அதற்குள் ஒரு சட்டை அணியாத நான்கைந்து சிறுவர்கள் கூட்டம் கூ..கூ..சிக்..புக்..என்று கூவிக்கொண்டே அவனை சுற்றி சுற்றி வந்தது. அவனுக்கு கோபம் வந்தது.ழேய்..ழேய்..என்று கூவிக்கொண்டே வீட்டுக்கு வழி கேட்கலாம் என்று அவர்களை பிடிக்க முயற்சி செய்தான். அவனது தடுமாற்றம் அவர்களை பிடிக்க முடியாமல் தள்ளாட செய்தது.அந்த பையன்களும் அவனை விட்டு அடுத்த இடத்துக்கு அவர்களது இரயில் வண்டியை ஓட்டி சென்று விட்டனர்.

இவனால் இனி நிற்க முடியாது என்பது தெரிந்து விட்டது. அப்படியே உட்கார்ந்து விடலாம் என்று உட்காரபோனவனை ஒரு நாய் அவன் காலருகே வந்து முகர்ந்து பார்த்தது. கொஞ்சம் அசைந்ததால்,சிறு நீர் கழிக்க வேறு இடம் தேடி சென்றது. இவன் நாயை வசவு வார்த்தைகளால் திட்டினான். அவன் உடனடியாக வீட்டுக்கு செல்ல வேண்டும். இந்த துரோகி அவனை இப்படி நட்டாத்தில் விட்டு விட்டான். கூடவே வந்து இவன் காசில் வாங்கி குடித்து விட்டு அவனை விட்டு விட்டு அவன் மட்டும் எங்கோ போய் விட்டான்.

அழுகை அழுகையாக வந்தது அன்னாசிக்கு,இது என்ன அவஸ்தை, நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் நம்மை இப்படி பாடாய் படுத்தி விட்டதே.அவனை தாண்டி யாரோ முழு கால்சராய் போட்டுக்கொண்டு, சட்டையை வேறு டக் செய்து கொண்டு ஒரு ஆண் இவனை கடந்து சென்றான். ஹலோ ஹலோ..வாய் உளறியது, ரெஸ்ப்க்ட் சார்.. ரெஸ்பக்ட் சார்…அவனின் தெளிவற்ற குரலை கேட்ட அந்த டிப் டாப் ஆசாமி இவனை அசூயையுடன் பார்க்க, சாரி தப்பா நினைச்சுக்காதீங்க சார் ! எங்க வீட்டுக்கு வழி சொல்லுங்க சார்? இவனின் கேள்வி அந்த நபருக்கு கோபத்தை வரவழைத்தது. ஏய்யா பூல் இப்படி தண்ணிய போட்டுட்டு போற வர்றவங்களை எல்லாம் இப்படித்தான் வம்பு பண்ணுவையா? அவன் குரலில் காரம். விட்டால் அடித்து விடுவான் போலிருந்தது. அப்புறம் என்ன நினைத்தானோ குடிகாரனிடம் எதுக்கு பேச்சு என்று நினைத்து விரு விரு வென அந்த இடத்தை காலி செய்தான்.

யாராவது கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பில் இருந்து அவிழ்ந்து கொண்டிருக்கும் வேட்டியையாவது எடுத்து கொடுத்தாலோ, அல்லது கட்டி விட்டாலோ நன்றாய் இருக்கும் என்று தோன்றியது. யாராரோ அவனை கடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. பார்வை வேறு போதையில் மங்கலாகி விட்டதால் ஒருவரையும் அடையாளம் தெரியாமல் விழித்தான். திடீரென அவனுக்கு மனைவியின் நினைவு வந்து விட்டது. சரியான ராட்சசி, சில நேரங்களில் அவனை அடித்து விடுவாள். அப்பொழுதெல்லாம் இவன் போதையில் இருப்பான். அல்லது அவள் அடிக்கும்போது மற்றவர்கள் தவறாக நினைக்க கூடாது என்று போதையில் இருப்பது மாதிரி நடிப்பான்.

அவளை கெட்ட வார்த்தைகளால் திட்ட வேண்டும் என்று முடிவு செய்தவன் அவள் எதிரில் நிற்பதாக கற்பனை செய்து கொண்டு, கண்டபடி வசவுகளை பேச ஆரம்பித்தான். மனதுக்குள் எங்காவது வந்து விடுவாளோ என்ற பயமும் வந்தது. அவளுக்கு கூட தெரியாமல் இந்த பாழாய் போன நண்பன் கூப்பிட்டான் என்று, போன உடனே வந்துடலாம் என்று போனான். இப்படி போதையில் கைவிட்டு விட்டு ஓடிவிடுவான் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

நான்கைந்து பெண்கள் கையில் தூக்கு போசியுடன் அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் கல கலவென பேசிக்கொண்டு வந்தவர்கள் இவனை பார்த்து சிரித்து எதோ சொல்லிக்கொண்டு ஒரு பெண்ணிடம் கை காட்டி சொல்லி சிரித்து அவனை கடந்து சென்றனர். அந்த பெண் அவனது பின்புறமாக வந்து நின்று பிடறியில் ஒரு தட்டு தட்டி மட்ட மதியானத்துல தண்ணிய போட்டுட்டு வீட்டு வாசல்ல நின்னுட்டு என்ன டான்ஸ் ஆடிகிட்டு இருக்கியா?

பொம்பளை வேலைக்கு போயிட்டு வர்றா, நீ போய் கண்டபடி குடிச்சுகிட்டு வாசல்ல நின்னு முதுகை காமிச்சுகிட்டு ரோட்டுல போற வர்றவங்க கூட வம்பு பண்ணிகிட்டிருக்கியா?

அப்ப நாம வீட்டு முன்னாடிதான் நிக்கறமா? அப்படீன்னா வாசல் எங்கே? மெல்ல திரும்பி அவள் முகத்தை பயந்து பயந்து பார்க்க அவன் குடிசை வாசல் அம்போவென அவனுக்காக திறந்து கிடந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *