என் கதை சினிமாவாகப் போகிறது

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 3,955 
 
 

புதிய கதை ஒன்று எழுதி முடித்திருந்தேன்.கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் சமூகத்தில் இன்று கரைந்து கொண்டிருக்கும் பாசத்தை பற்றி தந்தைக்கும் தனயனுக்கும் நடக்கும் உணர்வு போராட்டங்களை விவரித்திருந்தது.

கதை வெளியாகி, எழுத்தாளர்களும் விமர்சகர்களுமான திருவாளர்கள் முகம்மது இப்ராகிமின் ‘ஆச்சர்யமும்’, அர்.வி ரங்கராஜனின் ‘கண்டிப்பும்’, வசந்த் ஸ்ரீனிவாசனின் ‘நைஸும்’, வேல் முருகனின் ‘அருமையும்’, திருமதிகள் மங்கை மனோவின் ‘சூப்பர் சகோவும்’, தேவபானியின் ‘அருமையும்’, திவ்யா பாலாஜியின் ‘அருமை ஆச்சர்யங்களும்’ விமர்சனங்களாக வந்து விட்டதால் மகிழ்ச்சியாக இருந்தது.

மதியம் சாப்பிட்டு விட்டு அக்கடாவென கட்டிலில் என் உடலான இந்த கட்டையை சாய்த்த வேளை, மேசையின் மேல் இருந்த செல் போன் கிண் கிணித்தது.

எழுந்து போய் எடுக்க சோம்பேறித்தனமாகத்தான் இருந்தது. சே படுக்கும்போதே பக்கத்தில் வைத்து படுத்திருக்கலாம், மனைவியை கூப்பிட்டு எடுத்து தர சொல்லலாம், அவ்வளவுதான் அதற்கு நூறு தோப்புக்கரணம் போட்டு விடலாம். நானே எழுந்து செல்போனை எடுத்து கட்டிலுக்கு வந்தேன்.

நம்பராகத்தான் இருந்தது, யாரோ புதியவர்கள், ஹலோ ! குரல் கொடுத்தேன்.

ஹலோ ஏகாம்பரம்தானே ! எரிச்சலாக வந்தது. என்னை நீங்கள்தானா? என்று மதிய தூக்கத்தில் இருப்பவனிடம் கேட்டால் என்ன சொல்வது?

ஆமா, எரிச்சலை கட்டுப்படுத்தி உங்களுக்கு என்ன வேணும்? குரலில் கொஞ்சம் கடுமையை காண்பித்தேன்.

உங்க கதையை படிச்சேன், ஓ கதை படித்து போன் செய்கிறார்கள், கொஞ்சம் உற்சாகமானேன். சொல்லுங்க, ஊக்கினேன்.

இப்பத்தான் உங்க கரைந்து போன பாசம் கதையை படிச்சு முடிச்சேன். நான் ஒரு சினிமா தயாரிப்பாளர், உங்க கதையை ஏன் படமா எடுக்க கூடாதுன்னு யோசனை வந்துச்சு, அதான் உங்க அபிப்பராயம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு கூப்பிட்டேன்.

அவ்வளவுதான் என் தூக்கம் காணாமல் போயிருந்தது, குரலில் உற்சாகம் தெரியக்கூடாது என்று கட்டுப்படுத்தி கொண்டவன், அதை சினிமாவா எடுக்கற அளவுக்கு பெரிசா இருக்கற மாதிரி எனக்கு தோணலையே. (இப்படி சொல்வதால் அவர் என்னை நாலு வார்த்தை சேர்த்து பாராட்டலாம்) என் நினைப்பில் மண்ணை அள்ளி போடுவது போலத்தான் அவர் பதில் இருந்தது. (நிறைய சினிமா எடுத்து நஷ்டமாயிருப்பாரோ ! ) நீங்க சொல்றது சரிதான், இருந்தாலும் ஒரு சில காட்சிகளை மாத்தி வச்சா நல்ல கதைய போகஸ் பண்ணிடலாம்.

பாவி…பாவி அப்படி சொல்லக்கூடாது உங்க கதை உண்மையிலேயே நல்லா இருந்துச்சு, இப்படித்தான் பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் சொன்னதையே ஆமோதித்து இந்த கதையில் ஒன்றுமில்லை என்று ஒப்பு கொள்ள வைத்து விட்டானே.

நான் அவன் சொன்னதை மறுத்தால் முதலில் நான் சொன்னது வெறும் பந்தாவுக்காகத்தான் என்று தெரிந்து விடும். ஆம் என்று சொல்லி விட்டால் என் கதை அப்படி ஒன்றும் பெரிய கதை இல்லை என்று ஒப்புக்கொண்டதாகி விடும். மனதுக்குள் கோபம் வந்தாலும் அடக்கி சிரிப்பு ஒன்றை சிரித்து வைத்தேன்.

சரி விஷயத்துக்கு வரலாம், நல்ல வேளை அடுத்த காரியத்துக்கு அவரே போய் விட்டார். “உங்க கதைய் நான் சினிமாவுக்கு எடுத்துக்கலாமுன்னு இருக்கேன். இரண்டு நாள்ல உங்களுக்கு போன் பண்ணுறேன், நீங்க நான் சொல்ற இடத்துக்கு வந்து பேச முடியுமா?

இந்த கேள்வி என்னை உச்சிக்கு கொண்டு சென்றது, கண்டிப்பா வர்றேன், ஆனா எனக்கு வேலை நாளா இல்லாம இருந்தா செளகர்யமா இருக்கும். இதை விட எனக்கு வேலைதான் முக்கியம் என்பது போல் உணர்த்தினேன் ( எப்ப கூப்பிட்டாலும் வர தயாராய் இருக்கிறேன்) இதை சொல்ல முடியுமா? அவர்கள் என்னை பற்றி என்ன நினைத்து கொள்வார்கள்?

கடந்து போயிருந்த இரண்டு நாட்களும் நான் எப்படி இருந்திருப்பேன் என்று உங்களுக்கு சொல்ல தேவையில்லை. முகம் தெரியாத நண்பர்களுக்கு கூட போன் செய்து தேவையில்லாமல் இன்னும் இரண்டு நாட்களில் என் கதையை திரைக்கதையாக்க ஒரு தயாரிப்பாளருடன் டிஸ்கஸ் செய்ய போவதாக சொல்லியிருந்தேன் என்றால் தெரிந்த முகங்களை விட்டு வைத்திருப்பேனா என்பதை வாசகர்கள் அனுமானத்துக்கே விட்டு விடுகிறேன்.

நல்ல பெரிய ஸ்டார் ஓட்டலுக்கு கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன், அவர்கள் சாதாரண பத்துக்கு பத்து அறையில் இரண்டு நண்பர்களுடன் என் கதையை பற்றி விவாதித்தனர். (நான் எத்தனை சினிமாவிலும், கதையிலும் கதை டிஸ்கசன் என்றால் பெரிய ஹோட்டல் அறை, பெரிய மெத்தை விரிப்பு, அதில் மற்ற அயிட்டங்கள்) எதுவுமேயில்லாமல் மிக எளிமையாக ஒரு டீ இரண்டு பிஸ்கட்டு களுடன் எங்கள் கலந்தாலோசனை முடிந்து விட்டது.

கதையை மாற்ற மட்டுமே என்னிடம் அனுமதி கேட்டார்கள், தலையாட்டுவதை தவிர என்ன செய்ய முடியும்.

என் கதை சினிமா கதையாக போகிறதல்லவா?

ஒரு வாரம் கழித்து உங்கள் கதையை மாற்றி உள்ளதாகவும் அதை மெயிலில் அனுப்பி உள்ளதாகவும் சொன்னார்கள்.

ஆவலுடன் அவசரமாய் ஈ மெயிலை திறந்து பார்த்தேன். கதை நான் எழுதியிருந்ததா என்பதே எனக்கு புரியவில்லை. படித்து படித்து பார்த்தும் என் மூளைக்கு புரிய மறுத்தது.

ஹலோ..செல்போனில் அழைப்பு அந்த எண்ணிலிருந்து வர சார் கதைய படிச்சிட்டீங்களா?

படிச்சேன், நான் நாற்பது வயசு மகனோட குடும்ப சுமைகளினால வயதான தந்தைய பாத்துக்க ஆசை இருந்தும் அது முடியாம அவன் தவிக்கற மாதிரி எழுதியிருந்தேன். நீங்க கல்யாணமே ஆகாத பையனா காண்பிக்கிறீங்களே, மெல்ல சொன்னேன்.

நாற்பது வயசு ஆளுக்கும், தொன்னூறு வயசு ஆளுக்கு நடக்கற போராட்டத்தை இரண்டரை மணி நேரம் பாத்து கிட்டிருந்தான்னா அவனுக்கு போரடிச்சிடும். கதைய இளமையாகவும் காட்ட முடியாது, இப்படி இருந்தாத்தான் கதாநாயகியை இளமையா காட்ட முடியும், இரண்டு மூணு டூயட் சாங்ஸ் வைக்க முடியும்.

அதுவும் சரிதான், பணம் போட்டு படம் எடுப்பவர்கள் நாலும் யோசிக்க வேண்டுமே. என்னுடைய கதாநாயகி மாதிரி முப்பத்து ஐந்து வயதாகி இரண்டு குழந்தைக்கு அம்மாவாகியிருந்தால் அவளால் கதாநாயகனுடன் டூயட் பாட முடியுமா? இல்லை நடுத்தர அம்மாவாக அங்கும் இங்கும் ரேசன் கடையிலிருந்து மாவு அரைக்கிற இடம் வரைக்கும் சென்று வருவதை சினிமாவில் காட்டமுடியுமா?

அப்புறம்..வயசானவரை இளமையில் கதாநாயகனை வளர்க்க மனைவி இல்லாமல் ரொம்ப சிரம பட்டதா எழுதி இருந்தேன்…. ஆனா..மெல்ல இழுத்தேன்.

ஆமா சார் நாயகனும், நாயகியும் இளமையா இருக்கறப்ப அப்பாவை ரொம்ப வயசானவராவும், கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் காட்டினா இரசிப்பாங்களா? அவரையும் நல்ல பணக்கார அப்பாவா காட்டி, பெரிய பங்களாவுல வேலைக்காரங்க நடுவுல இருக்கறமாதிரி இருந்தாத்தான் இந்த கதைக்கு நல்லா இருக்கும். அம்மா கேரக்டரை கூட நாங்க இதுல சேர்த்து இருக்கறோம். அவங்களுக்கு இரண்டு சகோதரர்கள், அவங்களுக்கு இந்த சொத்துல கண்ணு, அப்படீன்னு இன்னொரு கண்னோட்டத்துல கதைய கொண்டு போயிருந்தோமே, படிச்சீங்களா?

ம்…ம்.. ஆமாங்க…படிச்சேன்..

உங்களுக்கு ஓ.கே தானே !

ஓ.கே தாங்க, அப்புறம் இழுத்தேன்……

புரியுது கதைக்கு உண்டானதை எதிர்பார்க்கறது நியாயம்தான். நாங்க எல்லாம் பேசி முடிச்சு, இதை ஆரமபிக்கும் போது உங்களுக்கு அட்வான்ஸ் வரும். அதுக்கு பின்னாடி மொத்தமா செட்டில் பண்ணிடுவோம். என்ன சரிதானே.

சரி என்று சொல்லி தலையாட்டியதை அவர்கள் போனுக்கு அந்தப்புறம் இருந்ததால் காண முடிந்திருக்காது.

ஆறு மாதங்களுக்கு மேல் ஓடியிருந்தது. அதற்கு பிறகு அந்த எண்ணிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இரண்டு மூன்று முறை போன் செய்தும் பதிலில்லை, இல்லை எடுக்க விருப்பமில்லை என்ற பதில்தான் கிடைத்தது.

திடீரென்று ஒரு அழைப்பு, எடுத்தேன். சார் நீங்க ஏகாம்பரம்தானே. ஆமாம் என்றேன் அசுவாரசியமாக.. நீங்க ஒரு கதைய இந்த கம்பெனிக்கு கொடுத்திருந்தீங்களா?

ஆஹா.. மனதுக்குள் ஒரு சந்தோசம், ஆமாம் கரைந்து போன பாசம் அப்படீன்னு ஒரு கதை.

அந்த கதைய படிச்சு பார்த்தேன், அப்பட்டமான என்னோட கதையோட காப்பி, அவங்க கிட்டே போயி கேட்டேன், அவங்கதான் உங்க நம்பரை கொடுத்தாங்க. ஏன் சார் இந்த மாதிரி பண்ணறீங்க? நான் கோர்ட்டுல இதுக்காக கேஸ் போடலாமுன்னு இருக்கேன்.

ஐயோ, கோர்ட்டா, மனதின் முன்னால் கருப்பு கோட்டு போட்ட ஆட்கள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.

சார் சார் அவசரப்படாதீங்க, முதல்ல அவங்க என் கதைய எடுக்கறதுக்கு முன்னாடி என் கிட்டே சொல்லிட்டு அட்வான்ஸ் கொடுக்கறேன்னு சொன்னாங்க, ஒரு பைசா வரலை, சினிமா எடுக்கறாங்களான்னே எனக்கு தெரியலை. நீங்க சொல்லித்தான் எடுக்கறாங்கன்னு தெரியுது. இரண்டாவது அவங்க கதைய வாங்கி படிச்சு பார்த்தீங்களா, உங்க மெயில் ஐ.டி, இல்லையின்னா வாட்ஸ் அப் எண்ணை கொடுங்க, நான் அவங்களுக்கு எழுதி கொடுத்த கதைய உங்களுக்கு அனுப்பறேன் படிச்சு பாருங்க. அப்புறம் சொல்லுங்க, நான் உங்க கதைய காப்பி அடிச்சிருக்க றனான்னு, அவங்க என் கதையவே அப்படியே மாத்தி எழுதிட்டாங்க சார்.

மறுபடி இந்த எண்ணிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அந்த எண்ணுக்கு நான் எழுதியிருந்த கதையையும் அனுப்பி இருந்தேன். அதற்கும் எந்த பதிலும் தரவில்லை.

மீண்டும் ஆறு மாத மெளனம். ஒரு நாள் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் போட்ட படத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அட இதை எங்கோ படித்திருக்கிறோமே என்ற ஞாபகம் மட்டுமே எனக்கு வந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “என் கதை சினிமாவாகப் போகிறது

  1. Sir, years back I had sent my short story to a Story Competition conducted by a famous Tamil Weekly magazine upon my friend’s suggestion.It did not get any prize. But, I was shocked to see a movie after two or three years whose central theme was mine. Since the location/region of the scenes was changed with attendant cultural/linguistic modifications , I had difficulties to claim rights. My only consolation is that the film received ,state, nationaland international acclaim.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *