சேரியில் கடைசி வீடு எங்களுடையதாகும். அதற்கும் கடைசியாய் எப்பொழுதாவது இன்னொரு வீடு இருந்திருக்குமோ என்னமோ! அதன் கூரையெல்லாம் சரிந்து விழுந்து கிடக்க, வெறும் மூன்று அல்லது நான்கு அடி உயரத்திற்கு மண்சுவர் மட்டும் எஞ்சி இருந்தது. நானும், மற்ற வீட்டுப் பிள்ளைகளும் சேர்ந்து, அந்தக் குட்டிச்சுவர் மேல் நின்று ரொம்ப தூரத்திற்குப் பார்வையை வீசி, வேலைக்குப் போய் இருந்த எங்கள் அம்மா அப்பாவைத் தேடுவோம். ‘சீக்கிரம் வீட்டுக்குத் திரும்புங்கள் என்று கூவி அவர்களுக்குச் செய்தி அனுப்புவோம். எங்கள் அழைப்பு அவர்களின் காதுகளில் விழுந்ததோ, இல்லையோ, எங்கள் முகங்கள் கூட அவர்களுக்குத் தெரிந்ததோ, இல்லையோ, எதுவுமே எங்களுக்குத் தெரியாது. இந்தக் குட்டிச் சுவரிலிருந்து ஐந்நூறு அல்லது அறுநூறு அடி தூரத்திலிருந்து ஐயரின் நில எல்லை ஆரம்பமாகியது. அந்த நிலத்தில் ஐயரின் அழகான வீடும், மிகப் பெரிய பம்ப்செட் ஒன்றும், கிணறும் இருந்தன. அக்கினாற்றிலிருந்துதான் ஐயரின் நிலபுலன்களுக்கெல்லாம் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. எங்கள் சேரி ஆள்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைத்தாலே பெரிய விஷயம். சற்றே தூரத்திலிருந்த பூந்தோட்டத்துக்குப் பக்கத்தில் இருந்த கிணற்றிலிருந்துதான் எங்கள் சேரி ஆட்கள் தண்ணீர் எடுத்து வந்தார்கள்.
வழக்கம் போல எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த குட்டிச் சுவரின் மேல் நானும், மற்ற பிள்ளைகளும் நின்று அப்பா, அம்மாவைத் தேடிக் கூவிக் கொண்டிருந்தபோது ஒரு காட்சி தெரிந்தது. ஐயரின் நிலத்தில் இரண்டு பேர் தம் கழுத்தில் நுகத்தடியைச் சுமக்க, ஒருவன் கலப்பையை அழுத்தி உழுது கொண்டு இருந்தான். நுகத்தடியைச் சுமந்த இருவரும் எருதுகள் போலச் சென்று கொண்டிருக்க, மூன்றாவது ஆள் பின்னால் இருந்து உழுத அக்காட்சி, ஏதோ மாயாஜாலக் காட்சியைப் போல இருந்தது. ஆனால், நுகத்தடியைச் சுமந்த இருவரில் ஒருவர் எனது தந்தை என்று தெரிந்தபோது, என் மனத்தில் இனம்புரியாத வேதனை பரவியது.
நாங்கள் இருந்த பக்கமாய் வந்த சில பெண்கள், ‘பாலம், தேவண்ணனுக்கு வந்த கஷ்டத்தப் பாரு’ என்று சொன்ன வார்த்தைகள் என் காதில் விழுந்ததும், என் மனவேதனை இரண்டு மடங்காகியது. எருது போல கலப்பையை இழுத்து விட்டு சாயங்காலமாய் வீட்டுக்கு வந்த அப்பாவின் தோள்களுக்கு ஒத்தடம் கொடுத்தாள் அம்மா.
மூன்று இடங்களில் துண்டுத் துண்டாக அப்பாவுக்கு நிலங்கள் இருந்தன. வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த நிலம், குத்தகையின் பேரில் பயிர் வைக்கப்பட்ட நிலம். அதன் சொந்தக்காரர் ‘மாகடி’யைச் சேர்ந்த பிராமணர் ஒருவர். அவரை நாங்கள் ‘சாமி’ என்றுதான் அழைத்து வந்தோம். அந்த நிலத்தை ‘மாந்தோப்பு நிலம்’ என்று சொல்லி வந்தோம். அந்த நிலத்தில் மிகவும் வயதான ஒரு மாமரமிருந்தது. வீட்டுக்குப் பின்னால் இருந்த பெரிய புளியமரத்தைத் தாண்டிக் கொண்டுதான் அந்த நிலத்திற்குச் செல்ல வேண்டும். புளிய மரத்தடியில் அகன்ற ஒரு பாறை இருந்தது. நிலத்திற்குப் போகும் போதும் வரும்போதும், அந்தப் புளியமரத்தை நெருங்கியதுமே நெஞ்சில் பயம் கவிந்து விடும். ‘புளியமரத்தில் பேய் இருக்கிறது என்றும், அது வழிப்போக்கர்களையெல்லாம் கைத்தட்டி அழைக்கிறது’ என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள். புளியமரத்தின் திசையில் இருந்து அவ்வப்போது ‘டப்டப்’ என்று சத்தம் வந்து கொண்டிருந்ததால், ஜனங்களிடம் அந்தப் பேயைப் பற்றிய பயம் அதிகமாக இருந்தது. ஒருமுறை நிலத்திலிருந்து சாயங்கால வேளையில் தனியாகத் திரும்பிக் கொண்டிருந்தபோது, புளியமரத்தின் திசையில் இருந்து யாரோ கைதட்டி அழைக்கும் சத்தத்தைக் கேட்டுப் பயந்து போய், ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று ஓடோடி வந்து வீட்டையடைந்தேன்.
***
மாந்தோப்பு நிலத்துக்குச் சொந்தக்காரர் மிகவும் தாராளமானவர். அப்பா, அம்மா, நான் மூவரும் ஊரில் இருந்த அவர் வீட்டுக்குச் சென்று வாசலில் நின்றதும், வீட்டில் மிச்சம் மீதியிருக்கிற சித்திரான்னம், பூரி முதலியவற்றைக் கொடுப்பார்கள். இவ்வகைச் சிற்றுண்டிகளை என்றும் தின்று பார்க்காதவன் நான். அவற்றின் ருசியே ருசி. அவற்றைத் தின்று எங்களிடம் நன்றியுணர்வு சுரந்தது. இது மட்டுமின்றி, பழசும்.
சற்றே கிழிசலும் கொண்ட தன் பிள்ளையின் சட்டைகளையெல்லாம் எனக்குத் தருவதுண்டு. ஐயரின் மகன் என்னை விடப் பெரியவனாதலால், அச்சட்டைகள் எனக்கு மிகவும் ‘தொள தொள’ என்று இருந்தன. ஆனாலும், எப்படியோ ஒருவகையில் அவற்றை மடித்து அணிந்து கொண்டிருந்தேன் நான் இந்தச் சட்டைகளைப் போட்டுக் கொண்டதும், சேரியில் இருந்த மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் வித்தியாசமானவனாகத் தெரிந்தேன் நான்.
பூரி, சித்திரான்னத்தோடு தொடர்புடைய இன்னொரு சம்பவமும் என் மனசில் ஞாபகமிருக்கிறது. மிகவும் சிறிய ஓர் இடத்தில் பூ, மற்றும் காய்கறிகளைப் பயிரிட்டு வந்தார் என் அப்பா இந்த இடத்தை ‘சஞ்சீவி ஐயரின் தோட்டம்’ என்று சொல்வதுண்டு. இத்தோட்டம் சேரிக்கு இன்னொரு திசையிலிருந்தது. இங்கு வளர்ந்த பூக்களைப் பறித்துக் கொண்டு சென்று ‘மாகடி’ச் சந்தையில் விற்று இரண்டணா சம்பாதித்தேன் நான். ஒருநாள், தோட்டத்தில் இருந்து வெளியே வந்து ஏரிக்கரை மேல் நின்று கொண்டிருந்தேன். ஏரியின் சுற்றுப்புறத்தில் சிற்சிலர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். யாரோ எங்கோ கூப்பிடுகிற சத்தம் கேட்டமாதிரி இருந்தது. உடனே ஆண்களும், பெண்களும். சிறுவர்களும் பம்ப்செட் பக்கத்தில் இருந்த ஐயரின் வீட்டுக்குப் போட்டது போட்டபடி அம்புப் பாய்ச்சலில் சென்றார்கள். எனக்குச் சற்றே பயமாக இருந்தது. எனினும் மெல்ல நடந்து ஐயரின் வீட்டையடைந்தேன். அந்த வீட்டிலிருந்து சற்றே தூரத்தில் ‘தலித்’துகள் வரிசையாக நின்றிருந்தார்கள். ஐயரின் மனைவி, வீட்டில் எஞ்சிய பூரி, சித்திரான்னம் முதலியவற்றை எல்லோருக்கும் கொடுத்தார். கடைசியாக நான் சென்றதால், எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் நிராசையாக இருந்தது. ஆனால் எல்லோரை விடவும் முதலில் வந்திருந்த என் அப்பாவும், அம்மாவும் பலகாரங்களை வாங்கிக் கொண்டு வருவதைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷம் கொண்டேன்.
***
எங்கள் நிலத்தின் மூலையில் ஒற்றையடிப் பாதை ஒன்றுண்டு. காட்டிலிருந்து விறகு பொறுக்கிச் சுமந்து வரும் ‘லம்பாணிப் பெண்கள் அந்த வழியாகச் செல்வதுண்டு. கறுத்திருந்த எங்களோடு ஒப்பிடும்போது. அவர்களைக் கந்தர்வ உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கள் சேரியைச் சேர்ந்த சில துடுக்கான இளைஞர்கள் அவர்களைக் கிண்டல் செய்வதுண்டு. அந்தப் பெண்கள் இவர்களைத் திட்டுவார்கள். ‘புட்டனரசன்’ என்னும் பெயர் கொண்ட ஒருவன், தான் ஒருமுறை அப்பெண்களை மிகவும் நெருங்கிச் சென்று கிண்டல் செய்ததாகவும், தலைச் சுமையைக் கீழே தள்ளிவிட்டு, நழுவிய சேலையால் உடலை மறைத்துக் கொண்டதாகவும், எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு வந்ததாகவும் சொல்லிக் கொண்டான். இதை நேருக்கு தேர் பார்த்தவர்கள் இல்லை. ஆனால் காதால் கேட்டவர்கள் எல்லாரும் நம்பினார்கள். இதனால் மற்ற இளைஞர்கள் மத்தியில் அவன் மீது லேசான பொறாமை உருவாகியது.
எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்தவர்களும் எங்களைப் போலவே ஏழைகள், கணவன் மெலிந்தும், குள்ளமாகவும் இருந்தான். சதாகாலமும் பிடி புகைத்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி மிகவும் பருத்திருந்தாள். தினந்தோறும் அவனை அடித்தாள் ஒருபோதும் அவளை அவன் திருப்பி அடித்ததில்லை . எதிர்ப் பேச்சு பேசியதுமில்லை. இவனுடைய உயிருக்குயிரான நண்பன் ஒருவன் ‘மேகளக்கட்டை என்னும் ஊரில் இருந்தான் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள். இருவரும் சேர்ந்து ஊருக்குள் சென்று ஸ்டுடியோவில் ஒன்றாக நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்கிற அளவுக்கு இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். அந்த ஃபோட்டோவை வீட்டில் தொங்க விட்டிருந்தார்கள். மிகவும் ஆச்சரியத்தோடும், பரவசத்தோடும் அந்தப் படத்தையே அனைவரும் பார்த்தார்கள். ஆனால், திடுமென அவர்கள் இடையே சண்டை மூண்டு நட்பு குலைந்தது. இருவரும் தத்தம் வீட்டில் இருந்த படத்தை. கண்ணாடியை உடைத்து எடுத்து, தனித்தனி ஆளாகத் தெரியும் வண்ணம் இரண்டாகக் கிழித்து, மீண்டும் கண்ணாடியைப் போட்டுத் தொங்க விட்டுக் கொண்டார்கள். படச்சட்டம் என்னமோ பெரிதாக இருந்தாலும், அன்றிலிருந்து பாதி அளவுக்கு மட்டுமே படம் இருந்தது. உடைந்து போன நட்பின் அடையாளமாக இருந்தது அது.
அப்போது எங்கெங்கும் பஞ்சம். சோற்றுக்காக ஜனங்கள் அங்காந்து கிடந்தார்கள். மழை வேண்டி அங்கங்கே பூசைகள் செய்தார்கள். பூசை செய்யும்போது ‘தலித்’துகளையெல்லாம் ஒரு மூலையில் உட்கார வைத்திருந்தார்கள். மேல் ஜாதிக்காரர்களின் சாப்பாட்டுப் பந்தி முடிந்த பிறகுதான் அவர்களின் பக்கம் கவனம் திரும்பியது. வெறும் சோறு மட்டுமே கிடைத்தாலே போதும் என்ற எண்ணமே நிறைந்திருந்ததால், இந்த வித்தியாசங்களைப் பற்றியெல்லாம் அவ்வளவாக கவலைப்படவில்லை. அப்போதுதான் சிவலிங்கம்மா’, புட்டம்மா’ ஆகிய இரண்டு தங்கைகளும் பிறந்தார்கள். ஏற்கெனவே கடன்காரனாக இருத்த அப்பாவுக்கு மேலும் கடன்சுமை ஏறியது. எங்களை வளர்ப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. எங்கெங்கேயோ தொலைவான இடங்களுக்கெல்லாம் வேலை தேடிச் சென்று, மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்கிற ரீதியில் வீட்டுக்கு வந்தார். அப்போதெல்லாம் பயத்தின் காரணமாக விட்டில் நாங்கள் படுப்பதில்லை . பல சமயங்களில் ‘மாகட்டமா’வின் விட்டில்தான் படுத்துக் கொள்வோம். தூரத்து உறவில் அவள் எங்கள் அம்மாவுக்கு அக்கா முறை வேண்டும். அதனால் நாங்களும் ‘பெரியம்மா’ என்று அழைத்தோம். அவளுடைய மகன் வைக்கோல் போரை காவல் காக்கச் சென்று கொண்டிருந்தான். என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றான். போரிலிருந்து வைக்கோலைப் பிடுங்கி, அதையே விரித்துப் போட்டுப் படுத்து, அதையே போர்த்திக் கொண்டு தூங்குவது ஒருவகையில் ஆனந்தமாக இருந்தது. பல சமயங்களில் போர்க்குள்ளேயே சந்து உருவாக்கிக் கொண்டு, அதற்குள் சென்று படுத்து உறங்குவோம்.
ஒருமுறை அம்மா ரொட்டி சுட்டுக் கொண்டு இருந்தாள் நாங்கள் மூன்று பிள்ளைகளும் அடுப்பின் முன்னால் உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். அடுப்புக்கு மேல் சற்றே உயரத்தில் எரவாணம் இருந்தது. அதில் பெட்டி வைத்திருந்தோம். அந்தப் பெட்டியின் மேல் இரண்டு நாகப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு, சட்டென்று ரொட்டியின் மேலேயே விழுந்து விட்டன பிழைத்ததே பெரிசு என்று நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டோம். தெரு ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு தேடியும் கூட அப்பாம்புகள் அகப்படவே இல்லை . அன்றிலிருந்து பகலில் கூட வீட்டுக்குள் இருக்கப் பயமாக இருந்தது.
சில நாட்களுக்குப் பிறகு அப்பா வீடு திரும்பியபோது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், பக்கத்து வீட்டில் இருந்த எங்கள் பெரியப்பாவும், எங்கள் பாட்டியும் கண்ணீர் விட்டு அழுதார்கள். எங்கள் அம்மாவும் அழுதாள். அப்பா ஊமையாக உட்கார்ந்திருந்தார். அந்தச் குழலே விசித்திரமாக இருந்தது. ஏதோ ஓர் ஊரில் அப்பா கூலி வேலை செய்து கொண்டிருந்தபோது, இரண்டு குழுக்களுக்கிடையே அடிதடியாகி விட்டது. போலீஸார் வந்து தலையிட்டு அடக்கிச் சிலரைக் கைது செய்திருக்கிறார்கள். மோதல் நடந்த தருணத்தில் எங்கள் அப்பா அங்கே இருந்ததால், அவரை முக்கிய சாட்சியாக்கி விட்டார்கள். அப்பாவே இதைச் சொன்னதும், கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் அச்சத்தின் காரணமாகத் துயரம் கொண்டார்கள் ‘நாங்க யாருமே ஸ்டேஷன் வாசல மிதிச்சது கெடையாது. உங்கப்பா போகப் போறானே…’ என்று பெரியப்பா சொன்னபோது. எனக்கும் அழுகை முட்டியது.
***
என் பெரியப்பாவின் இரண்டு பிள்ளைகள் – என் சகோதரிகள் – பள்ளிக்கூடத்திற்குப் போகவில்லை. அவர்கள் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து நான் எங்கள் வீட்டு ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்த்து வரச் சென்றேன் அவற்றில் ஓர் ஆட்டை எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் என்னோடு மிகவும் பிரியமாய் இருந்தது. கருவுற்றிருந்த அந்த ஆட்டை, ஒருமுறை ஒரு பள்ளத்தின் பக்கம் மேய்த்துக் கொண்டு இருந்தேன். ஆச்சரியப்படும் விதத்தில் அது அங்கேயே குட்டி போட்டு விட்டது. மிகச் சிறிய ஆட்டுக்குட்டி வெளியே வந்து விழுந்தது. ‘தக்காபுக்கா’ என்றது. உடனே தொலைவில் இருந்தவர்களைக் கூப்பிட்டேன் நான். ஆட்டின் மடியில் குட்டி பால் குடிக்கும் வண்ணம் செய்தோம். குட்டிக்கு எதுவும் நேர்ந்துவிடாத வகையில், என் வலதுகை விரலை தாய் ஆட்டின் வாயில் வைத்து அமைதிப்படுத்தினேன். தாய் ஆட்டுக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை . என் விரலைக் கடித்து விட்டது. விரலில் ரத்தம் ஒழுகத் தொடங்கியது. ஏதேதோ மருந்துத் தழை வைத்துக் கட்டி அதனைக் குணப்படுத்திக் கொண்டேன். இன்று கூட அந்த விரலின் வடு மாறாமல் அப்படியே இருக்கிறது.
என் மீது என் தந்தைக்குப் பிரியம் அதிகம். சிற்சில சமயங்களில் வெளியே போகும்போது என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம். பல சாதிகளிலும் அப்பாவுக்கு நன்பர்கள் உண்டு. உயர் ஜாதிக்காரர்களின் குடியிருப்புக்குச் சென்று அந்த நண்பர்களின் வீட்டுக்கு முன்னால் நிற்பதுண்டு. அவர்கள் எப்போதாவது என்னைப் பக்கத்தில் இருந்த பெரிய கல் ஒன்றின் மீது உட்கார வைத்து, சாப்பிட ஏதாவது கொடுப்பதுண்டு சில சமயங்களில் அப்பாவே என்னை ஊர் நடுவில் இருக்கிற ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்வார். ஓட்டல்காரர் மற்றவர்களிலிருந்து தள்ளி எங்களை உட்கார வைப்பார். அந்த ஓட்டல்காரர் கொடுத்த இட்லிகளைத் தின்பது மிகவும் ஆனந்தமாக இருந்தது. அந்த இட்லிகளின் வடிவம், மிருதுவான தன்மை ருசியில் மூழ்கியிருந்த எங்களுக்கு, வேறு எந்த விதமான எண்ணங்களும் அவசியமற்றவையாய்த் தோன்றின.
சிற்சில சமயங்களில் தன் நண்பர்களோடு சாராயம் குடிக்கச் செல்வார் அப்பா. ரொம்ப தூரத்தில் இருந்த அந்தச் சாராயக் கடைக்குச் செல்லும் குழுவுக்கு, என் அப்பாவின் இன்னொரு சகோதரரே தலைவராக இருந்தார். தந்தை தனது தோள் மேல் என்னைத் தூக்கிக் கொண்டு செல்வார். என்னைப் போலவே தத்தம் தந்தைமார்களின் தோள்களின் மேல் உட்கார்ந்து பல சிறுவர்களும் வந்தார்கள். குடிபோதையில் பெரியவர்களுக்குப் பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசம் பொங்கும். அப்போது எங்களுக்கும் கொஞ்சம் சாராயமும், ருசியான மற்றப் பண்டங்களும் கிடைக்கும். இப்படியே ரொம்ப நேரம் கழித்த பிறகு இரவில் வீட்டுக்குத் திரும்புவோம்.
‘ஹாலூரு’ என்கிற இடத்தில் இருந்த ஒரு நிலத்தில் அப்பாவுக்குச் சேர வேண்டிய பங்கு கொஞ்சம் இருந்தது. பரம்பரைச் சொத்தாகக் கிடைத்தது இது. அம்மாவும், அப்பாவும் ரொம்ப தூரத்திற்கு நடந்து சென்று அந்த நிலத்தில் வேலை செய்து வந்தார்கள். என்னை ஏதாவது ஒரு மரம் அல்லது புதருக்கு அருகில் உட்கார வைத்து விட்டு, அவர்கள் வேலை செய்து வந்தார்கள், மதிய வேளையில் சாப்பாட்டுக்கு வந்து சென்றால், அப்புறம் பொழுது சாயும் வரைக்கும் வேலை செய்தார்கள். ஒருமுறை என் அம்மா, “எம் புள்ளய நல்லா படிக்க வைக்கணும். யாராவது சொந்தக்காரங்க கடுதாசி போட்டா, அதப் படிக்கற அளவுக்காவது அவனுக்குப் படிப்பு இருக்கணும்” என்று யாரோ ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
ஒருநாள் என் பெரியப்பாவும். மற்றவர்களும் என்னை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று படாதபாடு பட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை . கூச்சலிட்டு அழுது புரண்ட என்னை, எப்படியோ குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டார்கள். ‘குய்யோ முறையோ என்று அழுதேன் நான். வீடு. அப்பா, அம்மா, ஆடு, மாடுகளின் ஞாபகம் வந்தபோதெல்லாம் அழுகை பொங்கியது. வகுப்புக்குள் என்னைப் போலவே கவலை படிந்த பல மாணவர்கள் இருந்தார்கள். ஆசிரியர் வந்து பிரம்பால் ஓர் அடி கொடுத்ததுமே ஒருமுறை ஓங்கி அழுது அப்புறம் ஓய்ந்து விட்டேன்
அந்த ஆசிரியரின் பெயர் ‘நாகப்பாச்சாரி’, வேட்டி உடுத்திக் கொண்டு கரிய நிறத்தில் கோட் அணிந்திருப்பார். வெளுத்த நிறம். நல்ல உயரம். ரொம்பவும் கறாரான ஆள். சில தாள்களுக்கப்புறம் பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் வந்தார். நாங்கள் எல்லாரும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தோம். வந்தவர் பள்ளிக்கூடத்திலேயே ரொம்ப நேரம் தங்கி, பிள்ளைகளைப் படிக்க வைத்தும், எழுத வைத்தும் எப்படி எப்படியோ சோதித்தார். அவருடைய உதடுகள் மற்றவர்கள் உதடுகளைப் போல அல்லாமல், சற்றே பிளந்திருந்தன. இதை முக்கியமாய்க் கவனித்துக் கொண்டேன் நான். அவ்வப்போது சமயம் கிடைக்கும்போதெல்லாம், என் நண்பர்களுக்கு இன்ஸ்பெக்டர் உதடுகளைப் போல என் உதடுகளை ஆக்கிக் காட்டி விளையாடினேன்.
அவர்களுக்கு அந்த இன்ஸ்பெக்டர் ஞாபகம் வந்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். விளையாட்டு வேளை வந்தபோதெல்லாம் மற்ற மானவர்கள் எனக்கு மிட்டாய் வாங்கித் தந்து, இன்ஸ்பெக்டர் போல உதடுகளைச் செய்து காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதன் மூலம் எல்லா மாணவர்களுக்கும் நான் நெருக்கமானேன்.
***
ஒருநாள் மாலை வகுப்பில் அலுப்பாயிருந்த ஆசிரியர், மாணவர்களைப் பாட்டுப் பாடுமாறு சொன்னார். யாரோ ஒருவன் சட்டென “சார்… சார்… இவன் இன்ஸ்பெக்டர் உதடு எப்படி இருக்குதுன்னு செஞ்சி காட்டுவான்” என்று சொல்லி விட்டான். “ஆசிரியரும் உற்சாகமுற்று செஞ்சிக் காட்டுடா, பார்ப்போம்” என்றார். நானும் அப்படியே செய்தேன். ஆசிரியரும், சகமாணவர்களும் கொடுத்த உற்சாகத்தில், இன்ஸ்பெக்டரின் முகபாவனை, நடை. பேச்சு எல்லாவற்றையும் செய்து காட்டினேன். ஆசிரியரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை . அவர் கண்களில் நீர் தளும்பியது. அன்றிலிருந்து கடைசி பீரியடில் ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, “ஏதாவது செஞ்சி காட்டுடா” என்று சொல்வார். எனக்கோ இன்ஸ்பெக்டரின் நடை, பேச்சைத் தவிர வேறு எதுவும் தெரியாது, ஆசிரியர் சொல்கிற பேச்சைக் கேட்காவிடில் அடி விழுமோ என்ற பயம் வேறு. இதனால், சும்மா கண்களை உருட்டுவது, பைத்தியம் போல முகத்தைக் கோணலாக்கிக் கொள்வது, பல் இளிப்பது என ஏதேதோ செய்து காட்டினேன். சில நாட்களுக்குள்ளேயே வகுப்பில் முக்கியமான மாணவனானேன்
நாகப்பாச்சாரி நல்ல ஆசிரியர். அவ்வப்போது மாணவர்களையெல்லாம் வரிசையாய் நிறுத்தி ஊருக்குள் ஊர்வலமாய் வரச் சொல்வார். ஊர்வலத்தின் முன்னால் அவர் இருப்பார். கடைசியில் நாங்கள் இருப்போம். அவர், “கட்டாயக் கல்வி’ என்று கோஷமிட்டதுமே. நாங்கள் அனைவரும், ”அமுலில் இருக்கிறது” என்று சொல்வோம்.
அவர். ‘ஆறு வயதுப் பிள்ளைகளை’ என்றதும், ‘பள்ளியில் சேருங்கள்’ என்று கூவுவோம். ஊர்க்காரர்களுக்கு எல்லாம் இது கண்கொள்ளாக் காட்சி. இந்த ஊர்வலம் ‘தலித்’துகளின் சேரிக்கும் சென்றது. ஊர்வலம் முடிந்த பிறகு, ஆசிரியர் எல்லாருக்கும் பெப்பர்மின்ட் கொடுத்தார்.
ஒருநாள் மாலையில் நான் திண்ணையில் நின்று கொண்டிருந்தேன். நூற்றுக் கணக்கானவர்கள் எங்கள் வீட்டுப் பக்கமாக ஊர்வலமாக வருவது தெரிந்தது. ஊர்வலத்தின் முன்னால் குதிரை ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன்மேல் எங்கள் பெரியப்பா உட்கார்ந்திருந்தார். ‘மாகடி’ நகராட்சித் தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தார். இதை முன்னிட்டு வெற்றி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. குதிரையில் இருந்து இறங்கிய பெரியப்பா எங்கள் பாட்டியின் காலில் விழுந்து வணங்கினார். ஊர்வலம் மீண்டும் தொடர்ந்தது. ‘தலித்’ துகளிலேயே படிப்பறிவும், தைரியமும் கொண்டவர் எங்கள் பெரியப்பா. கலப்பை சின்னத்தில் நின்ற அவர், ஒரு காசு செலவில்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார். மிகவும் ஆர்வத்தோடு உழைத்து அவர் நல்ல பெயரைச் சம்பாதித்தார்.
இந்தப் பெரியப்பா மிகவும் கறாரான ஆளும் கூட. அவருடைய மனைவி இறந்து பல ஆண்டுகள் கழிந்திருந்தன. மறுமணம் செய்து கொள்ளவே இல்லை பாரதம் படிப்பதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். மிகவும் சோகமான வகையில் அவர் வாழ்வு முடிந்து போனது. ஊரில் வழக்கமாய்க் கடன் கொடுக்கிற ஒரு பெண்மணியிடம் அவசரமாய்க் கடன் வாங்கிய அவரால் அதை அடைக்க முடியாமல் போனது. அவளோ திருப்பிக் கேட்டு அவசரப்படுத்தினாள். இந்த அவமானம் தாங்காமல் ஒரு கிணற்றுக்குச் சென்று, அதற்குப் பூ. சந்தனம் எல்லாம் வைத்து வணங்கி விட்டு, அப்புறம் அதில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
கன்னடம்: சித்தலிங்கையா – தமிழில்: பாவண்ணன் – ஏப்ரல் 1995