என்னைப் பார் காய்ச்சல் வரும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 4,104 
 

பாகம் 5 | பாகம் 6

ஹர்ஷிதாவின் வீட்டை வந்தடைந்தார் யோகா. ஹர்ஷிதாவின் அம்மா அவரை வரவேற்றார். உள்ளே வந்தவர் விருந்தாளியாக இல்லாமல் வந்ததும் வீட்டினுள் நுகர்ந்து பார்க்க ஆரம்பித்தார். பிறகு ஹர்ஷிதாவின் அறைக்குச் சென்று பூஜையறைக்கு அவளை அழைத்தார். ஹர்ஷிதா வழக்கம்போல மறுத்தாள். மேலும் அவள் அனைவரும் என்ன செய்கிறீர்கள்? என்று தன் குடும்பத்தாரிடம் வினவினாள். யோகா அக்கா தன் தோழியிடம் ஒரு எழுமிச்சை, கற்பூரம், குங்குமம், மஞ்சள் மற்றும் ஒரு குவளையில் நீரெடுத்து வரச்சொன்னார். மேலும் அவர் வரும்பொழுதே கையில் எடுத்துவந்த ஒரு குங்குமத்தையும் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட மஞ்சள், குங்குமம் மற்றும் கற்பூரத்தை அந்த நீருடன் கலந்தவாறு வாயினுள் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். பின்னர் அந்தக் கரைசலை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளித்தார்.

அதன்பின் யோகா அக்கா ஹர்ஷிதாவை பூஜையரைக்குள் அழைத்ததும் அவள் உள்ளே சென்றாள். இது உன்னுடைய வீடல்ல என்று கனத்த குரலில் மிரட்டினார். ஹர்ஷிதா அப்படியா என்பது போலத் தன் தாயை நோக்கினாள். பிறகு ஒரு கையில் திருநீறை எடுத்துச் சட்டென ஹர்ஷிதாவின் நெற்றியில் அடித்தார். “உன் எரிச்சலுக்கு இங்கே காயக்கூடாது, தப்புடீ தப்பு” என்று மீண்டும் எச்சரித்தார். பிறகு ஒரு எழுமிச்சையில் திருநீறை வைத்து இதை விழுங்கிவிடு என்று கூற ஹர்ஷிதா மறுத்தாள். பிறகு வற்புறுத்தி அவளை விழுங்கவைத்தார்.

அதன்பின்னர் ஒரு எழுமிச்சையை ஹர்ஷிதாவின் கையில் கொடுத்து வீட்டு வாசலுக்கு வரச்சொல்லி கிழக்கு நோக்கி நிற்குமாறு கூறினார். அவளும் நின்றாள், பிறகு வேண்டாம் நீ மேற்கு பார்த்து நில்லென்று கூறினார். உடனே மேற்கில் திரும்பினாள். மேற்கு என்பது சரியாக ஹர்ஷிதாவின் வீட்டிலிருந்து மாயா அக்காவின் கோட்டையான முச்சந்தியை நோக்கிய திசை. பின்னர் யோகா அக்கா உன் கையில் உள்ள எழுமிச்சையை கீழே போட்டு ஒரே மிதியில் நசுக்கிப் பின் அந்த திசையைப் பார்க்காமல் வீட்டினுள் செல் என்றார். அவளும் அப்படியே செய்துவிட்டு வீட்டினுள் சென்றாள்.‌ பிறகு அன்றிரவு முழுவதும் பேயடித்தார் போல் 2 நாட்களுக்கும் சேர்த்து முறையாக தூங்கினாள் தங்கை ஹர்ஷிதா.

காலையில் புதிதாக பிறந்தார் போல் விழித்து, நேற்று செல்லும் பொது யோகா அக்கா என்ன கூறினார் என்று தன் அம்மாவிடம் கேட்டாள் ஹர்ஷிதா. ஒரு எரிந்த கன்னியின் ஆன்மா உன்னைத் தழுவியதாகவும், அது எதற்கும் அடங்காத ஆன்மா என்றும் கூறினார். மேலும் அதை உன் வீட்டிற்குள் வராதவாறு பார்த்துக்கொள் என்றும் கூறிவிட்டுச் சென்றார். இவ்வாறாகக் கதையைக் கேட்டு முடித்த எனக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை.

ஹர்ஷிதாவின் குடும்பம் மாயா அக்காவின் தற்கொலை பற்றியும் அதன்பின் தெருவில் நடந்த பிரளயம் பற்றியும் ஏதும் அறியாமல் இருந்துள்ளனர். நான் சென்னைக்கு இடம்பெயர்ந்து வந்தபிறகு, மாயா அக்காவின் நிகழ்வு தெரியாத பலரின் குடும்பங்களில் இதைப்போன்று அக்காவின் திருவிளையாடல்கள் நடந்தேறியிருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. ஆனால் மாயா அக்காவின் ஆன்மா இன்றும் தெருவில் இருக்குமா? என்று நடுவில் எனக்கேற்பட்ட குழப்பத்தை ஹர்ஷிதாவின் வாயிலாக “நான் நன்றாக உள்ளேன்” என்று எனக்கு புரியவைத்தது மாயா அக்காவின் ஆன்மா. அவரது ஆன்மா விரைவில் முக்தியடைந்து அந்த இறைவனடி செல்ல அனைவரும் பிரார்த்திப்போம்.

–முற்றும்–

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *