எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 12,561 
 
 

அன்று ஒரு புதிய முடிவோடுதான் படுக்கையிலிருந்து அவர் எழுந்தார். அவரது மனைவி ஊருக்குச் சென்றிருந்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று தனது திட்டத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார்.

முதலில் பல் துலக்கச் சென்றார். ஃப்ளோரைடு நுரை கொப்பளிக்கும் பற்பசையைப் பயன்படுத்தக்கூடாது என்று முடிவு செய்து சமையல் உப்பைக் கொஞ்சம் பொடி செய்து பல் துலக்கினார். இதுதான் பல்லுக்கும் ஈறுக்கும் நல்லதாம்.

எத்தைத் தின்றால் பித்தம் தீரும்அடுத்ததாக தண்ணீர் குடிக்கச் சென்றார். காலையில் எழுந்ததும் 4 முதல் 6 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதாம். அப்போது ஒரு சந்தேகம். அமெரிக்க அறிவியலாளர் ஒருவர் அதிகமாகத் தண்ணீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது என்று நிரூபித்து அதற்காக விருது வாங்கியிருந்தார். அதே நாட்டில் மற்றொரு அறிவியலாளர் அதிகமாக தண்ணீர் குடிப்பது இதயத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று ஒரு சில பரிசோதனைகள் மூலம் நிரூபித்து அவரும் அதற்காக விருது வாங்கியிருந்தார்.

இதில் யார் சொல்வதை நம்புவது? அவருக்குக் குழப்பமாக இருந்தது. என்ன செய்வது? இருந்தாலும் வெறும் வயிற்றில் ஓரிரு டம்ளர் தண்ணீர் அருந்துவது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் என்பதை உணர்ந்திருந்ததால் தண்ணீர் குவளை அருகே சென்றார். அப்போது மீண்டும் ஒரு குழப்பம். குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டுமே? மாநகராட்சி குடிநீரை 95 சதவீத மக்கள் கூட குடிக்க பயன்படுத்துவதில்லை என்பது கண்கூடு.

அதனால்தானே குடிநீர் கேன்கள் வியாபாரம் சக்கைப் போடு போடுகிறது. அவர் வீட்டிலும் கேன் வாட்டர்தான். கேன்களிலும் பெரும்பாலானவை குடிக்கத் தகுதியானது அல்ல என்று பத்திரிகைகளில் படித்திருக்கிறார். அதில் பதிக்கப்பட்டிருக்கும் ஐஎஸ்ஐ முத்திரை போலியானது என்று பரவலாக குற்றச்சாட்டு. சரி கேன் வாட்டரை நன்கு காய்ச்சி குடிக்கலாமே என்ற முடிவுடன் அடுப்படிக்குச் சென்றார். அப்போது ஒரு அசரீரி.. காய்ச்சிக்

குடிக்கும் நீரில் நுண்ணுயிர், கிருமிகள் வேண்டுமானால் சாகலாமே தவிர, அத்தகைய குடிநீரில் சத்து என்ற ஒன்று அறவே இருக்காது. தூய்மையான ஆறுகளில் ஒடும் நீரில் இயற்கையான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என்றது. அது சரி.. இங்கே கூவத்தை விட்டால் வேறு நதி (நாதி) ஏது? குழப்பத்தோடு தண்ணீரைக் குடிக்கவும் மனமின்றி வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

தேநீர் கடை நோக்கிச் சென்றார். அந்த தேநீர் கடை உரிமையாளர் நன்கு பழக்கமானவர். அவரே ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

“” சார்.. 2 பாக்கெட் ஒரிஜினல் டீத் தூளுடன் ஒரு பாக்கெட் டூப்ளிகேட் (கலப்பட) தூள் கலந்தாத்தான் சார் எங்களுக்கு கட்டுப்படியாகும்”

அவர் சொன்னது நினைவுக்கு வரவே நடையை மாற்றினார்.

சுத்தமான நீர், தேநீர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. சுத்தமான காற்றையாவது சுவாசிக்கலாமே? நடைபயிற்சி அதற்கு உதவியாக இருக்குமே என்று முடிவு செய்து நடைபோட்டார். அப்போது அவர் மனைவியிடமிருந்து செல்லிடப்பேசியில் அழைப்பு. “”என்ன கமலா பஸ்ûஸப் பிடிச்சிட்டியா?”

“”ஆமாங்க. பஸ்ஸிலதான் உட்கார்ந்திருக்கேன். நீங்க எங்கே?”

“”வாக்கிங் போலான்னு வெளியே வந்துட்டேன்”

“”என்ன வாக்கிங்கா? இந்த மார்கழி மாச பனியிலே உங்க உடம்புக்கு ஒத்துக்குமா? இதே மார்கழி மாதம் போன வருஷம் வாக்கிங் போய் வீஸிங் பிரச்னையால 15 நாள் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு அவஸ்தைப்பட்டது மறந்து போச்சா? பேசாம வீட்டுக்குப் போங்க”

மனைவி சொன்னதிலும் உண்மை இருந்தது. அவருக்குப் பனிக்காற்று அலர்ஜி. விரக்தியோடு வீட்டுக்குத் திரும்பினார்.

குளித்துவிட்டு பெருமாள் கோயிலுக்குச் சென்றார். நெடுநெடுவென நின்றபடியே அருள்பாலித்த பெருமாளைத் தரிசித்து முடித்ததும் அர்ச்சகர் துளசி தீர்த்தம் வழங்கினார்.

வறண்டு கிடந்த நாவுக்கு அது அமிர்தமாக இருந்தது. இரண்டு மூன்று முறை தீர்த்தம் கேட்டுப் பருகினார்.

மேலும் ஒரு முறை கேட்டபோது, “”சாமி.. தீர்த்தம்னா ஓரு முறைதான் வாங்கிக்கணும். மேலும் மேலும் வாங்கிப் பருகினா அதுக்குப் பேரு தீர்த்தம் இல்ல. வேற எதுவோ?”

அர்ச்சகர் அவர் தலையில் குட்டியதுபோல் இருந்தது. தலைகுனிந்தபடியே வெளியே வந்தார். அருகே இருந்த இட்லி கடையைப் பார்த்ததும்,”அட இட்லி சாப்பிடலாமே, தொந்தரவு இல்லாத கலப்படம் இல்லாத உணவாச்சே’ என்ற உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தார். மீண்டும் செல்லிடப்பேசியிடமிருந்து செல்லமாக ஓர் அழைப்பு.

“”என்னங்க இன்னைக்கு ஏகாதசி. டிஃபன் எதுவும் சாப்பிட்டுடாதீங்க. விரதத்தை மறந்துடாதீங்க” சட்டென்று அவரது கால்கள் பின்வாங்கின.

“பெருமாளே’ என்றபடியே வீட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது வெற்றிலைப் பாக்கு கடையில் வாழைப்பழங்கள் தொங்கியதைப் பார்த்தார். பழம் சாப்பிட்டால் விரதத்துக்கு ஏதும் பங்கம் நேராதே என்று சொல்லிக் கொண்டு கடையை நெருங்கியபோது அது மஞ்சள் நிறத்திலான பச்சை வாழைப்பழம் என்பது தெரிந்தது. பச்சை வாழை சீதளத் தன்மை வாய்ந்தது. அது எனக்குச் சரிப்பட்டு வராது. மேலும் பச்சை வாழையை ஏதோ ரசாயனம் போட்டு மஞ்சள்.. பொன்னிறத்துக்கு மாற்றுகிறார்கள். இத்தகைய பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்று ஏதோ ஒரு வார இதழில் அபாய அறிவிப்பு கட்டுரை ஒன்றைப் படித்திருந்தது அவருக்கு நினைப்பு வர வாழைப்பழ எண்ணத்தை மறந்தார்.

சற்று தள்ளி.. தள்ளுவண்டியில் ஆப்பிள் விற்றுக் கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர். அந்த ஆப்பிள் பளபளவென நன்றாகத்தான் இருந்தது. கையில் எடுத்தார். ஆப்பிள்கள் பளபளப்பாகவும் கெடாமலும் இருப்பதற்காக அதன் மீது ஒருவகை மெழுகு பூசுகிறார்கள் என்பதையும் ஒரு வார இதழில் படித்திருந்தது நினைவுக்கு வரவே, “ஆப்பிள் பெண்ணே நீ யாரோ’ என்பது போல வெறுப்புடன் அங்கிருந்து நடையைக் கட்டினார். எங்கும் எதிலும் கலப்படம். ஒரே ரசாயன உலகமாப் போச்சே என்ற வெறுப்புடன் வீட்டுக்குத் திரும்பினார்.

குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தார். அதில் திராட்சை, கொய்யாப் பழங்கள் என சிலவகைப் பழங்கள் இருந்தன. ஒரு திராட்சைக் கொத்தைக் கையில் எடுத்தார். அதில் சாம்பல் நிறத்தில் ஏதோ படிந்திருந்தது. அது ரசாயன பூச்சிக்கொல்லியின் அடையாளம் என்பதை உணர்ந்தார். “என்ன பண்றது? பசி உயிரை வாங்கறது. வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்களே… இந்தப் பழங்களை சுத்தமான நீரில் நன்கு கழுவிவிட்டு சாப்பிடுவதில் குற்றம் ஒன்றும் நேராது’ என்ற முடிவுடன் அந்தப் பழங்களை எடுத்துச் செல்லும்போது மீண்டும் மூளையின் ஏதோ ஒரு மூலையில் இருந்து ஒரு விசயம் நினைவுக்கு வந்தது.

பழங்களை கண்ட கண்ட நேரத்திலும் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் வாழைப் பழம் சாப்பிடக்கூடாது. சாப்பாட்டுடனோ.. சாப்பிட்ட பின்போ பழங்களைச் சாப்பிடக்கூடாது. சில பழங்களை இரவில் சாப்பிடக்கூடாது.. சில பழங்களை…

இன்னும் என்னென்னவோ அவரது நினைவுக்கு வந்து அவரைப் பாடாய்ப்படுத்தின. இந்த குழப்பங்களுக்கு விடை காண வீட்டு வராந்தாவுக்கு வந்தார். அங்கே பழைய பேப்பர்காரனுக்குப் போடுவதற்காக வைத்திருந்த பழைய பேப்பர்கள், வார இதழ்கள் குவியலில் இருந்து அந்த பழங்களைப் பற்றி அபாய எச்சரிக்கை விடுத்திருந்த வார இதழைத் தேட ஆரம்பித்தார்.

– மார்ச் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *