கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2024
பார்வையிட்டோர்: 764 
 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எவ்வளவு குரூரமாக நடந்து கொண்டுவிட்டேன்! காய்ச்சலுடன் படுத்த படுக்கையாகக் கிடந்தவரை எழுந்து வெளியே போகும்படிச் செய்து விட்டேனே! அவ்வளவு இங்கிதத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டவர். வேண்டுமென்றா என் கையைத் தொட்டிருப்பார்? ஜூர வேகத்தில் கை நடுங்கி என் கைமேல்பட்டிருக்க வேண்டும்; இது ஏன் எனக்குத் தெரியாமல் போயிற்று? என் பெண் புத்தியைக் காட்டி விட்டேனே!

நான் ஒன்றுமே சிரமப்பட வேண்டாமென்றுதான் அவர் இவரிடம் சொன்னார். நானாகத்தான் அவர் படும் கஷ்டத்தைப் பார்க்கச் சகியாமல் கஞ்சி வைத்துத் தருகிறேன் என்றேன்!

அவராக என்னுடன் பேசத்தான் செய்தாரா? நான் தானே அவ்வளவு சுத்தமான மனகடையவருடன் பேசினால் பாதகமில்லை என்று பேசினேன்? அது என் அகத்துக்காரருக்குத் தெரியக்கூடாது, என் மனசு அவருக்கு அர்த்தமாகாது. சந்தேகந்தான் கொள்ளுவார் என்று நான் அதை ரகசியமாக வைத்திருந்ததை அவர் எவ்வளவு சூக்ஷ்மமாக அறிந்து நடந்து கொண்டார்!

இவ்வளவு உடம்பிலும் ஏன் தம் மனைவியை வரவழைக்காமல் இருக்கிறார்? கடிதம் எழுதித்தான் அவன் வரவில்லையா? அவள் ஊருக்குப் போய் நாலு மாசகாலம் ஆயிற்றென்று சொல்லுகிறாளே வீடு கூட்டுகிறவள்? அவள் வந்திருந்தால் இந்த ரஸாபாஸம் நடந்திருக்காதே. நான் ஏதுக்கு அப்பொழுது கஞ்சிவைத்துக் கொடுக்கப்போகிறேன்? இந்தப் பேச்சுவார்த்தைதான் இருக்கப்போகிறதா?

இனிமேல் நான் எப்படி அவர் கண்ணில் படுகிறது? என்னைப்பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்திருப்பார் அவர்? வெறுப்புத் தாங்காமல் தான் உடனே எழுந்துபோய்விட்டார்! என்னிடம் வைத்திருந்த மரியாதையெல்லாம் ஒரு நிமிஷத்தில் பறந்துபோகும்படி செய்துவிட்டேன்.

நான் படித்தவள் என்று நினைத்துத்தானே அவர் என்னிடம் அவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்? தம் புஸ்தகங்கள் எல்லாம் கொடுத்தனுப் பினார்; என் அகத்துக்காரருக்குச் சந்தேகம் ஏற்படாமல், பத்திரிக்கைகள் அனுப்பினார். எவ்வளவு நாஸுக்காக என் அபிப்பிராயங்களை அறிந்து கொண்டார்! எவ்வளவு ஜாடையாக, பேசாமல், ஆனால் பேச்சுக்கு மேல் அதிகமான அர்த்தத்துடன், தூரத்திலிருந்து என்னுடன் பழகினார்!

சீ, என் பேதைப் புத்தியை எப்படித் திறந்து காட்டிவிட்டேன்! மானம் போகிறது! எள்ளளவாவது அவருடைய மனத்தில் கெட்ட எண்ணம் இருந்திருந்தால், அவர் நடந்து கொள்ளும் மாதிரியே வேறு தினுசாக அல்லவா இருக்கும்? பெண்ணாக இருந்தும் அதை அந்த நிமிஷம் நான் ஏன் மறந்துவிட்டேன்?

அப்படித்தான் இருந்தால் என்ன? அவ்வளவு பலஹீனமான ஸ்திதியில் அவருக்கு என்ன மனோபீதி ஏற்பட்டதோ? ஜுரவேகத்தில் என்ன கலக்கமோ? பாவம்! திக்கற்று அநாதைபோல் கிடந்தவர். நான் அவர் மனத்தை அறிந்து கொள்வேன், தப்பர்த்தம் செய்து கொள்ள மாட்டேன் என்று எண்ணி ஆறுதலுக்காக வெறும் நட்பின் உணர்ச்சிப் பெருக்கால் என் கையைத் தொட்டாரோ, என்னவோ? அதற்காக நான். அவர் கையை உதறித் தள்ளிவிட்டு வந்தததால், என் மனத்திலிருந்த சங்கடத்தை நன்றாக வெளியிட்டுவிட்டேன்!

ஆமாம்! அதை ஒளிப்பதில் என்ன உபயோகம்? ஒவ்வொரு சமயம் என் மனசு தங்கூரமற்று வாழ்க்கைப் புயலில் திண்டாடின பொழுது க்ஷணகாலம் அவரைப்பற்றி நினைத்ததுண்டு; அதனால்தான் குற்றவாளி போலக் கையை அப்படி உதறிவிட்டு வந்தேன். என் மனசு நிஷ்களங்க மாக இருந்திருந்தால், நான் ஏன் சகோதரி போல உடனே அவரிடத்தில் நடந்து கொண்டிருக்கக் கூடாது; அவர் அவ்வளவு யோசனையுடனும் இங்கிதத்துடனும் என்னுடன் பழகினபொழுது?

ஐயோ! என் மனத்தில் இருந்த சிறு ரகசியத்தை அவர் நன்றாக அறியும்படி செய்துவிட்டேனே? இனிமேல் அவர் முகத்தில் விழிக்க முடியாது!

அவர் கையை உதறித் தள்ளிவிட்டேன்; அவர் போய்விட்டார். இனிமேல் என் கண்ணில் படமாட்டார்; இது எனக்குத் தெரியும். அவரை என் மனத்திலிருந்து எப்படி உதறித் தள்ளுவேன்! அவர் என் மனக்கண்முன் வராதபடி என்ன செய்வேன்!

எனக்கு இது தண்டனையா? உயிருள்ளளவும்!

என் ஹிருதயத்தின்மேல் கைவைத்துக் கேட்டுக் கொள்ளுகிறேன்: இனிமேல் என்ன பயம்? அவர் வரமாட்டார்/ மனதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தான் எதற்காகக் கையை அப்படி உதறித் தள்ளிவிட்டு வந்தேன்? எங்கே பதிலுக்கு என்னையறியாமல் அவரைத் தொட்டுவிடுவேனோ என்ற பயத்தாலா? எதற்காக அப்பேர்ப்பட்ட பயம்?

‘ஒரு பேதைப் பெண்ணை இப்படி மனசு தடுமாறவிடுவதற்காகவா நீங்கள் அந்த மரியாதையும் இங்கிதமும் காட்டினீர்கள்? ஆனால் அவர் என்ன செய்வார், பாவம்! அவருடைய மௌனமான போற்றுதலுக்கு ஆமாம். அவர் என்னைப் போற்றத்தான் செய்தார்! -அவர் பதில் எதிர் பார்த்ததாகவே தெரியவில்லை? அவர் மனசைத்தான் அவர் வெளி யிட்டாரா? அவருடைய மௌன சமிக்ஞை என்னை அறியாமல் இல்லை! இல்லை. அவர் ஒன்றும் சமிக்ஞை செய்யவில்லை. அப்படிச் சொல்வது அபாண்டம். நான் தான்; நான் தான்! ஒரு பெண் அவர் எழுத்தைப் போற்ற வேண்டுமென்று ஏங்குகிறார் என்று நினைத்து நான் தான் அவரைக் கெடுத்தது! அவர் பாட்டிற்குப் பாவம்! அவர் எழுத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தாரே; அவர் பார்வையைப் பின்பக்கம் நான் தானே சத்தம் செய்து இழுத்தேன்?

இந்தத் தவிப்பு எனக்கு நன்றாக வேண்டும்.

2

சேச்சே! என்ன புத்திமோசம் போய்விட்டேன்! அவள் ஹிருதயத்தின் அருகில் வரும் சமயத்தில் அவள் கையைப் பிடித்துத் தூர வெருட்டி விட்டேனே!

அவள் ஏன் என்னை அப்படிச் சோதனை செய்தான்? நெருப்புடன் ஏன் விளையாடினாள்? இவ்வளவு கற்றறிந்தவள் மானிடன் ஹிருத யத்தை மட்டுமா கற்றறியாமல் இருப்பான்? என்னை ஏன் அப்படி அண்டிக் கெடுத்தாள்?

இல்லை. இல்லை. அவள் ஒன்றும் செய்யவில்லை. அநுதாபமும் தயையும் பெருந்தன்மையும் காட்டினது அவள் பேரில் பிசகா? அவள் தன்னைப் பெண் என்று காட்டிக் கொண்டது தவறா?

அவள் கஞ்சிகொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டதே என் மனசு கெட்டுவிட்டதற்கு அடையாளம். இப்பொழுது மணியின் வீட்டில் வந்து படுத்துக்கொண்டிருக்கிறேனே; முன்பே நான் இந்த மாதிரி செய்திருந்தால் அவள் என் கையை உதறித் தள்ளியிருக்க வேண்டாமே! என்ன மடத்தனம்! அவனை மனத்தில் மட்டும் இருத்தி ஆராதிப்பதை விட்டுக் கையால் தொட முயன்றது என்ன அக்கிரமம்!

அவள் வெகுளிபோல என்னுடன் பேசி, எனக்குத் தன் கையாலேயே கஞ்சி கொடுக்கவத்தாளே, என்னை நம்பி-அதற்குப் பதிலா இது?

நான் இனிமேல் அவளை எப்படிப் பார்ப்பேன்? ஆனால் அவளை இனிமேல் பார்க்க வேண்டிய தேவைதான் என்ன? குற்றத்தைச் சொல்லிக் காட்டும் அவளுடைய முகம் என் மனத்தைவிட்டு அகலாது!

உடம்பும் மனசும் பலஹீனமாக இருந்த ஒரு நிமிஷத்தில் ஆழ்ந்து உள்ளே கிடந்த என் இச்சைக்கு இடம் கொடுத்துவிட்டேனே! ‘கிட்டே இருக்கிறாள். தொடு!’ என்ற துஷ்டக் குரலுக்குச் செவி சாய்த்து விட்டேனே!

அவன் என்னைப்பற்றி என்ன நினைப்பாள்? கேவலம் மிருக இச்சை கொண்ட பாமரன் என்றல்லவா வெறுப்பாள் என் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பார்த்து அவன் மனத்தில் பதிந்திருத்த என் உருவம் சின்ன பின்னமாகியிருக்கும் அந்த க்ஷணத்தில்! அவள் மனத்தில் ஒரு மூலையில் கொஞ்சம் இடம் கிடைத்தால் போதுமென்று தானே ஆசைப்பட்டேன்!

நான் அவளைத் தொடுவதை அவன் அநுமதிப்பாள் என்று எப்படித் துணிந்தேன்? எனக்கே இப்பொழுது பிரமிப்பாக இருக்கிறது! இத்துடன் கம்பீரமாக அவள் என்னிடமிருந்து விலகியது அவளுடைய அறிவால் தான்) பெருந்தன்மையால்தான்! அல்பனான என்னை இந்தமட்டில் அவள் மன்னித்துவிட்டது அவள் தூய்மைதான்.

‘கமலம்! உன்னை நெருங்க வேண்டுமென்ற எண்ணமே எனக்குக் கிடையாது; உறுதியாகச் சொல்லுகிறேன். உன்னைத் தூரத்தில் என் ஹிருதய சிம்மாசனத்தில் உட்காரவைத்து என் கண்ணாலும் கருத்தாலும் துதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். தவறி, பதறி, கிட்டே வந்துவிட்டேன்!

‘நீ என்னை உதறித் தள்ளியது சரி. நீ வேறொன்றும் செய்திருக்க முடியாது. கஞ்சி வார்த்த கையைக் கடிக்க முயன்றேன்! ஹிருதயத்தில் அடி விழுந்தது’.

அவள் மனத்தில் எனக்கு என்றாவது மன்னிப்பு உண்டா? என் துஷ்டக் கைதான் அவள் கண்முன்னே தோன்றிக்கொண்டே இருக்கும்.

நான் பலாத்காரமாக அவள் ஹிருதயத்தைப் பறிக்க முயன்றேன். கமலம் கஞ்சி கொடுத்து என்னைச் சோதித்தாள். தான் தோல்வி அடைந்தேன். அவன் இனிமேல் என் அருகில் வரமாட்டாள்!

ஒருவேளை, அவள் ஹிருதயத்தின் கதவைக் கொஞ்சம் திறந்து வைத்திருந்தாலும் இப்பொழுது மூடிக்கொண்டு விடுவாள், நிச்சயம்!

அவள் பார்வை இனிமேல் என் முகத்தில் பதியாது. அவள் மூச்சு இனிமேல் அதன்மேல் பரவாது. அவள் கை என் துதியைத் தூரத் தள்ளும்.

அவள் ஏன் கஞ்சி கொடுப்பதுபோல வத்து என அருகில் நின்று என்னைச் சோதித்தாள்? எனக்கு ஏன் கஞ்சி கொடுக்க வந்தாள்? நான் யார், அவள் யார்? வாழ்க்கைப் பாதையில் மூன்று மாதங்களுக்கு முன்புதானே நான் அவளைச் சந்தித்தேன்? மற்ற மனிதர்களிடையே இருந்து என்னை ஏன் பொறுக்கிப் பொருட்படுத்தி அவள் என்னுடன் பேச முயல வேண்டும் – சமூகக் கட்டுப்பாட்டிற்கே விரோதமாக – புருஷன் கூட அறியாமல்? – நான் என்ன நினைப்பேன் என்ற தயக்கங்கூட இல்லாமல்?

நான் ஒன்றும் வித்தியாசமாக எண்ணமாட்டேன், நடந்து கொள்ள மாட்டேன், பேசமாட்டேன் என்ற தைரியத்தால்தான் அவள் என்னுடன் முகங்கொடுத்துப் பேசியிருக்க முடியும். அவள் நம்பிக்கையைக் கெடுத்துவிட்டேன். ஆண்களின் பெருந்தன்மையில் அவள் வைத்த மரியாதையைக் குலைத்துவிட்டேன். இனிமேல் புருஷர்களையே நம்பமாட்டாள் அவள்! என் எழுத்துக்கு யோக்கியதை கொடுக்க மாட்டாள்.

எழுத்தா? இனிமேல் எனக்கு எங்கே எழுத்து வரப்போகிறது? இந்த மூன்று மாதங்களில் எவ்வளவு எழுதிக் குவித்தேன்! அந்த ஒண்டிக்குடி வீட்டில் அவள் ஒருபுறம் ஜீவன தேவதைப்போல் நடமாட தான் மற்றொருபுறம் உட்கார்ந்து கொண்டு அவள் பிரச்சன்னத்தைப் புத்தகமாக்கலாம் என்று இருந்தேன். எல்லாம் போயிற்று! தேவதை கோபத்துடன் மறைத்துவிட்டாள். அவள் சாபம் மட்டும் ஆயுள் பூராவும் என்னை விடாது!

3

இவ்வளவு மாஸமா, வீடு மாத்தமாட்டேன்னு வயத்தெரிச்சலைக் கொட்டிண்டீளே இப்போ என்ன வந்தது இவ்வளவு கொட்டிண்டு போற அவசரம் – நான் கூட ஊர்லெ இல்லாதபோ?

அந்த வீட்டில் இனிமேல் இருக்க முடியாதென்று ஆய்விட்டது. ‘நான் சொல்றபோது காதுவே ஏறித்தோ? ஓங்களுக்கு ஒடம்புக்கு வந்து பட்டப்பறந்தான் தெரிஞ்சுது. நான் ஆறு மாஸமா அது கண்வே பட்றது. வேறே எங்கேயாவது போவோம். போவோம் என்றுதான் முட்டிண்டேன். ஒரு நாள் ராத்திரி என் மார்மேலே ஏறி உக்காந்துண்டு போறயா. இல்லையான்னுது ?’

‘வேறே ஆத்துக்குத்தான் வந்துவிட்டோமே? இனிமேல் என்ன? ‘ஒங்களுக்குத் தோணினபோதுதான் வந்தேன்; அது எப்பவும் வாடிக்கைதானே!-ஆமாம்

‘என்ன ஆமாம்?’

‘ஏன் அப்படி எரிச்சல் வரது? அத்தாத்துலேயே இருந்துண்டு அந்த மின்னா மினுக்கியெப் பாத்துண்டே இருக்க முடியலேன்னா?’

‘என்ன உளறுகியாய்?

‘நான் ஒண்ணும் ஒறல்லே; வாசக்கூட்றவதான் கதை கதையாச் சொல்றாளே!’

‘என்ன சொல்லுகிறாள்?’

‘என்மேலே சீறி விழவேண்டாம்: எனக்காக வீடும் மாத்த வேண்டாம். வேணும்னா அங்கேயே போயி-‘

‘சரி, சரி போ’

‘என்னைக் கண்டாலே ஒங்களுக்கு ஆகல்லே. நான் போறேன்’.

– கலைமகள், ஜனவரி 1939

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *